அறிவுக் கதைகள்/இரு குரங்கின் கைச்சாறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

77. இரு குரங்கின் கைச்சாறு

பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான்.

‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது.

இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான்.

அப்போது அங்கே வந்த பெரியவர், ‘தம்பீ! என்ன இது?’ என்று காரணம் கேட்டார் இவன் தான் ஒலையில் படித்த செய்தியைச் சொன்னான்.

அவனது அறியாமையைக் கண்டு இரங்கிய பெரியவர் சொன்னார்—"தம்பி, இரு குரங்கின் கைச்சாறு என்பது மறைமொழி. அது குரங்கின் சாறு அல்ல; முசு என்றால் குரங்கு. இரு குரங்கின் கைச்சாறு என்றால் முசுமுசுக்கைச் சாறு என்பது பொருள்.”

“இனி நீ வைத்தியம் செய்வதனால் அறிந்த அனுபவம் உள்ள பெரியோரை அணுகிக் கேட்டு, அவர் கைப்பாக முறையைத் தெரிந்து தொழில் செய்ய வேண்டும். நூலைப் படித்துத் தானே தெரிந்து, கொண்டதாக நினைப்பதும் தவறு, பெரியோரை அணுகிக கேட்க வெட்கப்படுவதும் தவறு. நன்கு தெரிந்து தெளிந்து தொழில் செய்யவேண்டும் என அறிவுரை வழங்கிச் சென்றார்.