அறிவுக் கதைகள்/கண்டதும் கேட்டதும்

விக்கிமூலம் இலிருந்து
வார்ப்புரு:Xx—larger

மேலை நாட்டிலே எழுத்தாளன் ஒருவன்—அவன் நூல்கள் மிக வேகமாகப் பரவின. எல்லோரும் படிக்க விரும்பினர். அவனுக்குப் புகழ் மேலும் மேலும் ஓங்கியது.

இத்தனைக்கும் அவன் ஒரு படிப்பாளியும் அல்லன்: பட்டதாரியும் அல்லன்; எழுத்தாளனுமல்லன்; பேச்சாளலுமல்லன்; ஒரு குதிரை வண்டி ஒட்டுபவன்.

பத்திரிகை நிருபர்கள் அவனிடம் நெருங்கி— ‘உனக்குத்தான் படிக்கத்தெரியாதே? நீ படித்ததில்லையே? எப்படி நூலாசிரியன் ஆனாய்? இவ்வளவு பெருமை, புகழ்ச்சி எங்கும் பரவி வருகிறது. பெரிய பட்டதாரிகளும் எழுத்தாளர்களும் உன்னைக் காணப் பொறாமைப் படுகிறார்களே! நீ எழுதிய முதல் நூல் எது?—என்று கேட்டார்கள்.

அதற்கு அவன்—

நான் எழுதிய முதல் நூலின் பெயர்— ‘கண்டதும் கேட்டதும்’—என்று சொன்னான்.

பத்திரிகை நிருபர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

இதிலிருந்து தெரிவது என்ன?

அவன் வெற்றி யடைந்த வழி :

அவன் ஒரு வண்டியோட்டி. பலரும் வண்டியில் பயணம் செய்வார்கள். எல்லோரும் பேசிய (அவரவர் குடும்ப) சங்கதிகளை எல்லாம் கேட்டு, அதையே ஒரு நூலாக எழுதியிருக்கிறான்.

வண்டியில் பயணம் செய்யும் போது—பெரும்பான்மையோர் வண்டியோட்டி—அவன் ஒரு மனிதன் வண்டிக்குள் இருப்பதாகவே நினைப்பதில்லை. தாங்கள் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு, எந்த நிகழ்ச்சிகளையும்—இரகசியங்களையும் பேசி விடுகிறார்கள். ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள பலரது வாழ்க்கை—நடைமுறை—சிக்கல்—அல்லது— துயரம் எல்லாம் எப்படி எப்படி வாழ்கிறார்களோ—அவையெல்லாம் கேட்டுள்ளதனால்—அப்படியே நூலாக எழுதவே—எல்லோருடைய உள்ளத்திலும் நன்கு தைத்தது.

“தங்கள் வாழ்க்கையோடு அது மிகவும் ஒட்டியிருக்கிறது. தெரியாத செய்திகள் பல தெரிய வைக்கப்படுகின்றன. புரியாத செய்திகள் புரிய வைக்கப்படுகின்றன.”

ஆகவே, அவன் எழுதிய முதல் நூல் பல லட்சக்கணக் கான (படிகள் பிரதிகள்) விற்பனை யாயின.

அவன் பெரிய எழுத்தாளன் ஆனான்.

அடுத்த பதிப்புகள் பல லட்சக்கணக்கில் விற்பனை யாகாமல் என்ன செய்யும்?

நல்ல எழுத்தாளனாக, நூலாசிரியனாக விளங்க ஒருவன் படிப்பாளியாக பட்டதாரியாக வேண்டுமென்பதில்லை; அனுபவம் ஒன்றே போதும் எனத் தெரிகிறது.