அறிவுக் கதைகள்/குருவும் சீடர்களும்

விக்கிமூலம் இலிருந்து
85. குருவும் சீடர்களும்

தன் சீடர்களை முட்டாள்கள் என்று கருதிவந்த குரு, தன் சீடர்களிடம் எதையும் விவரமாகச் சொல்லிச் செய்ய வைப்பார். அவர்களும் குரு சொன்ன பின்புதான் எந்தவேலையையும் செய்வர். ஆகவே அவர்களுக்கு சிந்தனையறிவே வளரவில்லை.

ஒருசமயம் குரு அருகில் உள்ள ஒரு ஊருக்குக் குதிரையில் ஏறிப் புறப்பட்டார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஐந்து மைல் தூரம் சென்றதும் தன் பட்டாக்கத்தியைக் காணாத குரு சீடர்களை அழைத்து. ‘வெள்ளிப் பிடியில் தங்கமுலாம் பூசிய என் பட்டாக்கத்தி எங்கே? என்று கேட்டார். அவர்கள் மிகவும் பயபக்தியுடன் “குருவே, அது அப்பொழுதே கீழே விழுந்துவிட்டது. ஆனால் நீங்கள் எதுவும் சொல்லவில்லையாதலால் நாங்கள் எடுத்துவரவில்லை” என்று சொன்னார்கள். அதைக் கேட்டு மிகவும் வருந்திய குரு, ‘இனிமேல் எது கீழே விழுந்தாலும் எடுத்து வரவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மறுமுறை பயணம் போகும்போது, நடுவழியில் சீடர்கள் “பயணத்தை நிறுத்துங்கள். குரு சொன்னதுபோல் செய்ததில் குதிரைச் சாணம் கொண்டு வந்த சாக்குகளில் நிரம்பிவிட்டது. இனி வேறு வழியில்லை” என்று குருவிடம் முறையிட்டனர். உடனே குரு “அட முட்டாள்களே! எதை எடுப்பது; எதை விடுவது என்பது தெரியாதா” என்று கூறி எடுக்கிற பொருள்களுக்கு ஒரு பட்டியலும், விடுகிற பொருள்களுக்கு ஒரு பட்டியலும், குரு எடுத்துச் சொல்ல, சீடர்கள் அதைக் கவனமாக எழுதிக் கொண்டனர்.

வேறொரு சமயம், குருவானவர் குதிரையில் ஏறிச் சவாரி செய்துகொண்டு மலைப்பக்கம் போனார். அப்போதுகுதிரை கல் தடுக்கி விழுந்தது. கீழே விழுந்த குரு, அருகில் உள்ளப் பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு கொண்டே போனார். அவரைப் பிடிக்க ஒடிய சீடனை மற்றொருவன் தடுத்து, “அடேய்! அவரைத் தொடாதே. நமக்கு கொடுத்தப் பட்டியலில் குருவின் பெயர் இல்லையே! பெயர் இல்லாதபோது அவரை எடுக்கலாமா?” என்று விவாதம் பண்ணிக் கொண்டிருந்தான்.

குதிரையிலிருந்து விழுந்த குருவும் அடிபட்டு இரத்தம் கசியப் புலம்பிக்கொண்டே பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்தார்.