அறிவுக் கதைகள்/குழந்தை வளர்ப்பு
என் கடையில் பலபேர் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில், ஒருநாள் அப்துல் கரீம் என்பவர் வேலைக்கு வரவில்லை. அவரைத் தேடி அவர் வீட்டுக்கே நான் சென்றேன்.
அப்போது அவர், தன் மகனை ஒரு பிரம்பால் “இனி மேல் பீடி குடிப்பாயா? பீடி குடிக்காதே, பீடியைத் தொடாதே” என்று சொல்லிச்சொல்லி அடித்துக கொண்டிருக்கும் போதே. அவரது இடதுகையால் பீடியை அடிக்கு ஒருதரம் இழுத்து, வாயில் புகையை விட்டுக் கொண்டே அடித்துக் கொண்டிருந்தார்.
நான் அவர் அடிப்பதைத் தடுத்து, ‘பிள்ளையை அடிக்கவேண்டாம்’ என்று கூறினேன். அதற்கு அவர் ‘நீங்கள் பேசாமல் இருங்கள் முதலாளி. இப்படியே விட்டால் அவன் கெட்டுப்போய் விடுவான்’ என்று கூறினார்.
தனது இடதுகையில் பீடியை வைத்து இழுத்துச் சுவைத்துக் கொண்டே வலது கையால் பீடி குடிக்காதே என்று அடித்தால் பிள்ளை எப்படி உருப்படும்?
இப்படித்தான் பல பெற்றோர்கள் தம், பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சிறுவயதிலேயே குழந்தைகள் பொய் பேசவும், திருடவும், பிறரை வஞ்சிக்கவும், குடிக்கவும் பள்ளியிலா கற்றுக்கொள்கிறார்கள். ஆகவே பிள்ளைகளைத் திருத்துவதற்குமுன் பெற்றோர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும்.
ஏனெனில் பெற்றோர்களின் கண்டிப்பு, காரமான பேச்சு இவைகள் எதுவும் பிள்ளைகள் மனதில் படாது. நடைமுறைக்கும் வராது. இவற்றைவிட அவர்களின் பழக்க வழக்கங்கள்தான் பசுமரத்தாணிபோல் பதிந்து திறகும். ஆகவே, பொடிபோடும் பழக்கத்தைக் கூடப் பிள்ளைகள் அறியாமல் செய்வது நல்லது.
வீட்டு நிலைமை இப்படி இருந்தால், நாட்டுநிலைமை என்ன ஆகும்? எங்கே போகும்?