அறிவுக் கதைகள்/நீதிபதியின் மகன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

57. நீதிபதியின் மகன்

சென்னை உயர்நீதி மன்றத்தில் பல ஆண்டு பண யாற்றிய நீதிபதி ஒருவர்க்கு, ஒரே மகன்தான் துணை. அவனை நல்லமுறையில் வளர்த்துப் பெரிய ஆளாக்க எண்ணினார்.

தானே சமையல் செய்து, மிக எளிமையாகக் குடும்பம் நடத்தி, வேலைக்கும் சென்று வந்தால், மகனுடைய படிப்பில் தனிக்கவனம் செலுத்த அவரால் முடியவில்லை. அவனோ ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லாமல் கூடாநட்புக் கொண்டு, நெறிதவறிய செயல்களில் ஈடுபட்டு, உல்லாசமாக வாழ்ந்துவந்தான். இதை அறிந்த நீதிபதி, மிகவும் அதிர்ச்சியடைந்து, தன்னைத்தானே வெறுத்து மனம் சலித்தார்.

பையன் வாலிபன் ஆனான். அவனுடைய தேவைகளுக்கு நிறையப் பணம் வேண்டியிருந்தது. ஆகவே, அவரை அதட்டியும், மிரட்டியும் பணம் பறித்து வந்தான். இதையெல்லாம் எண்ணி நாள் முழுவதும் துன்பப்பட்டார் நீதிபதி. மனம் வருந்தித் தன் உறவினர் சிலரை விட்டு மகனுக்குப் புத்தி புகட்டச் செய்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.

ஒருநாள் இரவு மகன் தந்தையை அணுகிப் பணம் கேட்டபோது, அவர் அவனைத் தன் அருகில் அன்போடு அழைத்து, மிகநெருக்கமாக அமர்ந்து, “தம்பி! என் தந்தை ஒரு புரோகிதர். பரம்பரைச் சொத்து எதுவும் கிடையாது. சாப்பாட்டிற்கே கஷ்டம். புரோகிதம் பண்ணி வந்தால்தான் சாப்பாடு. தெரு விளக்கு வெளிச்சத்தில் தான் நான் படித்தேன். புத்தகங்களை இரவல் வாங்கித் தான் படித்தேன். என் செலவுக்குக் காலணாக்கூட கிடைக் காது. நான் இப்படிக் கஷ்டப்பட்டு வளர்ந்திருக்க, நீ இப்படி, நோட்டு நோட்டாகச் செலவழிக்கிறாயே! இது நியாயமா?” என்று கேட்டார்.

அதற்கு அவன் உடனே எழுந்து, “நீ புரோகிதருடைய மகனாகப் பிறந்தாய்; அதனால் கஷ்டப்பட்டாய்! நான் நீதிபதியின் மகனாகப் பிறந்திருக்கிறேன். நினைவு இருக்கட்டும்.” என்று கூறிவிட்டு வெளியேறினான். என்ன செய்வார் நிதிபதி?