அறிவுக் கதைகள்/வேலை வாங்கும் முதலாளி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

50. வேலை வாங்கும் முதலாளி

தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி.

ஒரு சமயம், அவர் தன் வேலையாள் ஒருவனை அழைத்து, ‘நான் சொல்வதை மட்டும் நீ செய்தால் போதும். மற்றதைச் செய்யாதே’ என்று கண்டிப்பாய்ச் சொல்லி அனுப்பினார்.

அன்று மாலை குழாயிலிருந்து குடிநீர் கொண்டுவரக் குடத்தை கொடுத்து அனுப்பினார். “குடத்தை நன்றாக விளக்கி, உள்ளேயும் கை போட்டு நன்றாகக் கழுவணும். பிறகு குழாய்க்கு நேராகக் குடத்தை வைக்கணும் நீர் நிரம்பியதும் குடத்தை எடுத்து வரணும்” என்றெல்லாம் சொல்லி அனுப்பினார்.

அப்படியே அவன் குடத்துடன் சென்றான். குடத்தை விளக்கினான், கழுவினான். குழாய் அடியிலே குடத்தை வைத்துவிட்டு, நின்று கொண்டிருந்தான்.

வெகுநேரமாகியும் குடிநீர் கொண்டுவரச் சென்றவனைக் காணவில்லையே என்று எண்ணி, முதலாளி, வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.

“டேய், அங்கே இன்னும் என்ன செய்கிறாய்? தண்ணிர் வரவில்லையா?” என்று கேட்டார்.

“இல்லை எசமான். தண்ணிர் நன்றாகத்தான் வருகிறது. குழாய்க்கு நேராகத்தான் குடத்தை வைத்திருக்கிறேன். இன்னும் நிரம்பவில்லை” என்றான்.

“ஏண்டா அப்படி? என்று குழாய்க்குச் சென்று பார்த்தபோது, அவன் குடத்தை தலைகீழாக கவிழ்த்து வைத்து இருந்தான். அதை முதலாளி நிமிர்த்து வைத்ததும் குடம் நிறைந்தது.

“தாங்கள் இதைச் சொல்லவில்லையே எசமான்” என்றான் வேலையாள்.

வேலையாள் முட்டாள் என்று நடத்துவதால் முதலாளிகளுக்கும் புத்திக் குறைவு நேர்கிறது போலும்.