உள்ளடக்கத்துக்குச் செல்

அவள் ஒரு மோகனம்/ஒன்று...இரண்டு...

விக்கிமூலம் இலிருந்து

12. ஒன்று...இரண்டு...


வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டாலும்கூட, எதிர்நீச்சல் போடத் தெரிந்தால் தப்பி விடுவதும், தப்பிப் பிழைத்து விடுவதும் அப்படியொன்றும் கம்பச் சித்திரம் அல்லதான்!

இப்போது-

ரேவதி மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் காணப்பட்டாள். எந்தச் சோதனையையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி கொள்ளும் நெஞ்சுரத்தை மீட்டுக் கொண்டவளாக, அவள் தனக்குத்தானே புன்னகை செய்து கொண்டாள். நிர்மலமான நயனங்களில் புதிய ஒளி பளிச்சிட்டது. ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த அந்த ஒவியத்தை ஒவியப் பாவையாக நின்று பார்த்தாள்.

“ஆண்டவன் உன்னை நேசிக்கிறான்!”

"மெய்தான்; ஆண்டவன் என்னை நேசிக்கவே செய்வான்; நிரபராதியான என்னை நேசிக்காமல் எப்படி இருப்பான் ஆண்டவன்? மிஸ்டர் ஞானசீலன்தான் குற்றவாளி. என்னோட வயிற்றிலே வளர்ந்த குழந்தை வயிற்றிலேயே செத்து மடிஞ்சதுக்குக் காரணமாக அமைஞ்சிட்ட அவரே தான் குற்றவாளி; அவர் பாவி!

அவரோட பாவத்துக்கு என்றைக்காகிலும் ஒரு நாள் என்கிட்டே பாவ மன்னிப்புக் கேட்டால்தான் அவர்

உண்மையிலேயே மனிதனாகத் தலைநிமிர்ந்து நிற்க முடியும்; அப்பத்தான், நானும் சமாதானம் அடைஞ்சு, தலையை நிமிர்த்தி நடக்க முடியும்!

இப்படி மட்டும் நடந்துவிட்டால், பிரச்சினையிலே செம்பாதி தீர்ந்த மாதிரிதான்!

முதல் இரவிலே அவர் என் கையிலே செஞ்சு தந்த சத்தியத்தின்படி, அவரோட நெஞ்சிலே என்றைக்குமே நான் ஒருத்திதான் குடியிருப்பேன்னு அவர் அன்றைக்குச் சொன்னது இன்றைக்கும் சத்தியமான சொல்லாக இருந்தால், அவர்கிட்டவே என்னை இரண்டாந் தடவையாகவும் ஒப்படைச்சிடுறதிலே, என்வரையிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவே ஏற்படாது!...”

ரேவதி நிம்மதியான நெடுமூச்சை நெட்டித் தள்ளினாள். மஞ்சள் நீராடிய மன உணர்வுகள் புல்லரித்தன!

இப்போதும்கூட, அவளது உயர்வு மனப்பான்மை அவளது மனப்போக்கிலேயே நெறிமுறையுடன் கொடி கட்டிப் பறக்கத் தவறவில்லை.

இசைப்பாடல் காற்றிலே மிதக்கிறது.

வானொலியில் தியாகய்யரின் "வந்தனமு ரகுந்தனா" கீர்த்தனை சகானா ராகத்தில் மணம் கூட்டுகிறது...!ரேவதிக்கு ராகம் புரிகிறது.

சுமை இறங்க வேண்டாமோ?

ரேவதிக்குத் தேவை; மாறுதல்-ஆறுதல்.

‘ராயல் சாலஞ்ச்’ துணை வருகிறது.

அவள் நகை சிந்தினாள்; சரணாகதியான நகைப்பாக இருக்கக்கூடும் அது. அடங்காத ஆசையை அடக்கமாட்டாமல், நெடிதுயர்ந்த முக்காலியை நெருங்கினாள். பவ்யமான பாவனை. பாவனையில், அவள் விரும்பாத பணிவு, அவளது விருப்பம் இல்லாமலே மிகுந்திருந்தது.

இப்போது அவள் எதையும் நினைக்கவோ அல்லது எதையும் மறைக்கவோ தயாராக இல்லை. அவள் ஒரு வினாடியாகிலும், தன்னை மறந்திருக்க எண்ணினாள். நேர்மையாக நினைத்தால், நினைத்தது நியாயமாக கை கூடுமாமே?

ஆத்திரத்துக்கும் அவசரத்துக்கும் சவால் விட்டபடி, மதுவில் ஒருவாய் பருகினாள். கனி இதழ்களில் நெருப்புக் கணி வெடிக்க, இதழ்கள் ரத்தச் சிகப்பு ஆயின.

தட்டினால், திறக்கப்படுவது கதவு.

"ஆய் குழலி...மை டியர் மோஸ்ட் குழலி! போன காரியம் பழம்தானேம்மா?’’

"செங்காயும் செம்பழமுமான ஒரு நிலைமைங்க, டாக்டர். அண்ணன் பம்பாயிலேயிருந்து இன்னம் திரும்பக் காணோமே.”

"மிஸ்டர் ஞானசீலனைப் பற்றித்தானே சொல்றே?”

"பின்னே என்னாங்க?’’

"பம்பாய் போய் ஏழு நாளாச்சுன்னு சொன்னாயே?’’

"ஆமாங்க, சொன்னேன். அங்கே தொழில் முறை யிலே என்ன சிக்கலோ, என்ன சங்கடமோ?’’

"மற்றப்படி அவருக்கு சொந்த வேலை ஒன்றும் இருக்காதே.’’

"நீங்கள் நினைச்சுக் குழம்புறது கணக்கிலே, அண்ணன் அங்கே தன்னோட திருமணம் எதையும் என்கிட்டே சொல்லாமல் செஞ்சிடமாட்டார்! ஒரு விஷயம். நிச்சயம்; அவர் எந்த நேரத்திலேயும் இங்கே சென்னைக்குத் திரும்பிடலாமுங்க!”

"மகிழ்ச்சி."

"அண்ணன் பேரிலே இவ்வளவு தொலைவுக்கு அக்கறை காட்டுறீங்களே, எங்கள் அண்ணாவை உங்க

உங்களுக்கு ஏற்கெனவே பழக்கம் உண்டுங்களா, அம்மா?” மெல்லக் கேட்டாள், குழலி.

"பழக்கம் இல்லாமல் என்ன?" மனப்பழக்கம், ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியது. பூவிரல்களில் பூச்சிதறலாக ஈரம் சொட்டவே, திடுக்கிட்டாள் ரேவதி.

"அ...ம்...மா!"

"அம்மா!...மிஸ்டர் ஞானசீலனை பத்தே பத்து விநாடி தனிமையிலே சந்திச்சுப் பேசிட்டா, நான் என் சொந்த மனப்போக்குப் பிரகாரம் ஒரு முடிவுக்கு வர உதவியாக இருக்கும்; அதுக்காகத் தான் அவசரப்படுகிறேன், குழலி!”

"அம்மா..."

"என்ன குழவி?’’

"அழறீங்களா?”

"அழறேனா? இல்லையம்மா!" என்றாள் ரேவதி. அவள் சொற்கள் தடுமாறின. ஆனால், ஆடிப்புனலாக ஒடிய சுடுநீர்க் கண்ணீர் மாத்திரம் தடுமாறவில்லை.

குழலியின் விழிகளும் தளும்பத் தொடங்கின. "அம்மா! நான் உங்க உப்பைத் தின்னத் தொடங்கிட்டேன். சின்னுரண்டு பொண்ணுதான். நான். ஆனாலும், நீங்கள் என்னை நம்பவேணும். அண்ணன்கிட்டே ஆயிரம் குற்றம் குறை இருக்கலாம். ஆனால், எல்லாத்தையும் தாண்டி, இன்னமும் ஒரு மனிதனாக இருக்காருங்க, எங்கள் ஞானசீலன் அண்ணன்! அவர் மறு கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்தா, அவரோட அன்பான நெஞ்சிலே நிரந்தரமாகக் கொலு இருக்கிற உங்களை விட்டுட்டு, வேறு ஒருத்தியை ஏறெடுத்தும் பார்க்கவே மாட்டாருங்கம்மா! உங்களோட இன்பக் கனவுப் பிரகாரமே, உங்களை என் அண்ணனோடு மறுபடியும் நல்லபடியாய்ச் சேர்த்து வச்சுப்பிட வேண்டியது என்

கண்ணியமான கடமையாக்கும். நான் உங்கள் குழலிப் பொண்ணுங்க; என்னை நல்ல மனசோட நம்புங்க, அம்மா!" விம்மினாள் குழலி .

ரேவதி, தன்னைச் சீர்செய்து சமாளித்துக் கொண்டு, இதழ்க் கடையில் புன்முறுவலைக் கடைவிரிக்க முயற்சி செய்கிறாள். "குழலி, எங்களோட வாழ்க்கையின் கதை காரணமெல்லாம் உனக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்குது. ரொம்ப மகிழ்ச்சிதான். இதுவுங்கூட, நான் எதிர் பார்த்திராத 'சஸ்பென்ஸ்’ ஒண்ணும் கிடையாதுதான்! சரிசரி, இப்ப நீ சீக்கிரமாகக் கீழே போய்விடு. தேவைப்பட்டால், கூப்பிட்டுக் கிடுவேன்!...”

ஆனை தூள் பறந்தது.

குழலி கொடி மின்னல் ஆனாள்.

ரேவதி, 'படீ'ரென்று கதவுகளை ஆத்திரமாக அடைத்தாள்.

தொலைக்காட்சியில் இரவு நேரச் செய்திகள் வாசிக்கப்பட்டன.

ஆனால்-

வாசிக்கப்பட்ட உலகத்தின் செய்திகளைக் கேட்கத் தான் அங்கே நாதி இல்லை!

ரேவதி-டாக்டர் ரேவதி அழுது கொண்டுதான் இருக்கிறாள்-இன்னமும். அவளது உள்மனம் வாசித்துக் கொண்டிருந்த செய்திகளைக் கேட்கத் தான் அவளுக்குப் பொழுது சரியாகிவிட்டது.

அந்தரங்க அறை, அது.

ரேவதிக்குச் சொந்தபந்தம் கொண்ட கூடமும் அது தான்.

அங்கே, ஒளி வெள்ளம் பொங்கி வழிகிறது.

ஆனாலும், ரேவதி இருட்டிலே தவித்தாள்; தடு மாறினாள்! "எனக்குச் சம்பந்தப்பட்ட என் பிரச்சினைக் கதை என்னிடம் வேலைக்கு இருக்கிற குழலிக் குட்டிக்கும் ஏனோ, எப்படியோ தெரிஞ்சி போயிடுச்சுதே? வாழ்க்கை யிலே எல்லா நிலைகளிலும் நானே உசத்தியாக நின்னு முன்னுரிமை பெற்று விளங்கவேணும் என்கிற இலட்சியத்துக்காகப் போராடி, மானம், மரியாதைக்காக அல்லும் பகலும் பாடுபட்டுக்கிட்டிருந்த எனக்குக் கடைசியிலே கிடைச்சிருக்கிற வெகு ம தி இப்படிப்பட்ட அவமானம் தானா?

கருமாரித்தாயே? என்னைச் சோதிச்சது போதாதா? எனக்கு உண்டான ஒரு நல்ல பாதையை இனியாச்சும் திறந்து விடமாட்டியா?...கல்லான உன்னாலே எப்படிப் பேச முடியும்? எனக்கு நானே விதியாகிப் போன பின்னே, என்னோட வழிதானே இனிமேல் எனக்குச் சதம்?"

விம்மல் தொடர்ந்தது. போதை தெளிந்த போதத் தோடு நிதானமாக இதயத்தைத் தேடிப்பிடித்துப் பலம் கொண்ட மட்டும் பிசைந்து கொண்டாள்.

"எல்லா வலியும் நாலைந்து வினாடிகளில் தீர்ந்து போய்விடும்!’’-பாய்ந்தாள், தடுமாறி வீழ்ந்தாள்; எழுந்தாள்: மண்ணைக் கவ்வ நேர்ந்த தோல்வி வெறியில் மறுபடி எதிரே பாய்ந்தாள்.

கைத்துப்பாக்கி நையாண்டித்தனமாகச் சிரிக்கிறது!

எப்படியோ அதை அழுத்திப் பிடித்து கைப்பிடிக்குள் அடக்கிக் கொண்டாள், ரேவதி. திரும்பவும் நப்பாசை. திரும்பிப் பார்க்கவே, மேசையிடம் கையேந்தினாள். பிச்சை கிடைத்திருக்க வேண்டும்.

அந்தத் திருமணப் புகைப்படமும் அந்தத் திருமணத்தாலியும் இப்போது அவளைக் கண்டு கைகொட்டிச் சிரித்தன போலும்!

அவளுக்கு மட்டும் பதிலுக்குப் பதில் சிரிக்கத் தெரியாதா? அவள் ரேவதி-டாக்டர் ரேவதி ஆயிற்றே!

"மிஸ்டர் ஞானசீலன்! கடைசியாகச் சொல்லி வைக்கிறேன். நம்ம ரெண்டு பேரிலே, நான்தான் நிரபராதி!... எதார்த்தமும் அதுவேதான்! ... சுத்தமான உங்கள் நெஞ்சிலே நான் ஒருத்திதான் நிரந்தரமா கொலு இருப்பேன்னு அன்னிக்கு ராத்திரி என் கையிலே நீங்கள் செஞ்சு தந்த சத்தியத்தை உங்க வாழ்க்கையின் கடைசி நாள் மட்டுக்கும் நீங்கள் நிறைவேற்றினால்தான், சத்தியமாக என்னோட ஆத்மா சாந்தி அடையுமுங்க, அத்தான்: ஆமாங்க, மிஸ்டர் ஞானசீலன்!”

அவளுக்கு இனி அழவேண்டிய அவசியம் கிடையாது தான்!

கைத்துப்பாக்கியைக் கைப்பிடியில் வசம்பார்த்து, சரி பார்த்து இடுக்கிக் கொண்டே, தன் நெஞ்சுக்கு நேராகக் குறி வைத்துத் திரும்பியவளாக, அரைக்கணம் கண்களை மூடிக்கொண்டாள். அவள் உதடுகள் எண்ணத் தொடங்கின.

ஒன்று...

இரண்டு...