அவள் ஒரு மோகனம்/பெண்மையின் தாகம்

விக்கிமூலம் இலிருந்து

14. பெண்மையின் தாகம்


இன்றுதான் ரேவதியை நேருக்குநேர் பார்க்கிறான், ஞானசீலன்.

அவர்கள் பிரிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

ரேவதியை வேடிக்கை பார்ப்பது போலவும் பார்த்தான், அவன்.

"நீங்கள் திடுதிப்னு தீவிரமான யோசனையிலே மூழ்கிப் போனதினாலேதான், நானும் வெறுமனே இருந்தேன்!” என்றான்.

“யோசனைக்கு என்ன குறைச்சல்? காரியம் கைகூட வேணுமே?" ரேவதி விரக்தியுடன் பேசினாள்.

"நீங்கள் ஒரு காரியத்தை நினைச்சு, அது கை கூடாமல் தப்பிப் போயிட முடியுங்களா?’’

"உங்கள் நல்ல வாக்கு நல்ல தனமாகப் பலிச்சால் சரிதானுங்க!”

"அது கிடக்கட்டும். பேட்டிக்கு நான்தான் தாம தமா வந்துவிட்டேன்.”

"நீங்கள் வர்றதுக்கு ஒரு மாத்திரைப் பொழுது தாமதிச்சிருந்தால்கூட, இந்நேரம் நான் 'லேட் ரேவதி’ யாகத்தான் ஆகியிருப்பேன்!"

"என்ன சொல்றீங்க, நீங்க?"

"அது கெடக்கட்டும். இப்போ நான் என்ன செய்யனும்?’’

"நீங்கள் ஏற்பாடு செஞ்சிருக்கிற 'மணமகன் தேவை?' என்கிற அதிநவீன சுயம்வரத்துக்கான போட்டியிலே பங்கு கொள்ள வந்து, உங்களோட பேட்டிக்காகக் காத்திருக்கிற ஒரு வேட்பாளன், நான். எனக்கு நேரம் ஆகுது. சீக்கிரமாக பேட்டியை முடித்து, என்னை அனுப்பி வையுங்கள், டாக்டர் ரேவதி.”

கட்டுப்படுத்திக் கொண்ட ஒழுங்கோடும், நிதானத்தோடும் அமைதியாகப் பேசினார், ஞானசீலன்.

தீயிலே வீழ்த்தப்பட்ட ரோஜாப்பூவாக வாடித் துடித்தாள், ரேவதி. உந்திக் கமலத்தின் பொங்கிப் புரண்ட சுடுநீர் வெள்ளம் கண்களிலே வடிகால் கட்டிப் பாய்ந் தோடிற்று. மேனி நடுங்கியது. நெஞ்சை ஆற்றாமை யோடு பிசைந்து கொண்டாள். "நீங்கள் ஏன் இப்படி என்னை சோதிக்கிறீங்க?" என்று கேட்டு விம்மினாள்.

அப்போது சிரித்தது ஞானசீலன்தானா? "நான் உங்களை சோதிக்கிறேனா? அடக்கடவுளே! உங்களுக்கே உங்கள் விஷயம் மறந்து போச்சா, என்ன? மிஸ் ரேவதி, இப்ப என்னைச் சோதிக்க வேண்டியது நீங்கள்தான்! ஊம், தொடங்குங்கம்மா!" என்று மீண்டும் கேட்டுக் கொண்டார்.

"உங்களைச் சோதிக்க நான் யார்?’’

"நீங்கள் மிஸ் ரேவதி-மிஸ் டாக்டர் ரேவதி!’

ஞானசீலன் மீண்டும் சிரித்தார், ஏளனமாகவே சிரித்தார்.

ரேவதி ஆண்மையின் கம்பீரமான செருக்கோடு, குணிந்திருந்த தலையை நிமிர்த்தி உயர்த்துகிறாள். நேர் கொண்ட பார்வையால் ஞானசீலனைப் பார்வையிட்டாள். அளந்தாள். சோதித்தாள்...'இவரை...மிஸ்டர் ஞானசீலனை மறுபடியும் பார்க்கிறதுக்கு பத்து ஆண்டுகள் இடைவெளி தேவைப்பட்டிருக்குதே! என் கோபாவேசம் முழுவதும் தனிஞ்ச காலத்திலே, அவர் கண்காணாமல் எங்கேயோ போயிட்டார். இடையிலே ஒருவாட்டி அவரைத் திரும்பச் சந்திக்கிற பொன் வாய்ப்பை என் தாய் எனக்குக் கொடுக்க மனசு இரங்கியிருந்தால், என்னோட மன்னிப்புக் கடிதத்தை அவர் கையிலே கொடுத் திருக்க மாட்டேனா? இதழ்கள் விலகின. என்னவோ சொல்லத் துடித்தாள்.

"மிஸ் ரேவதி, நான் கதை கேட்க வரவில்லை!"

"மிஸ்டர் ஞானசீலன், நானும் கதை சொல்ல விரும்பவில்லை!"

"ரேவதி!" என்று ஆவேசமான ஆத்திரத்தில் கூவினார், ஞானசீலன்,

"நீங்கள் போடுற கூச்சலைக் கேட்டுப் பயப்படுறத்துக்கு நான் ஒண்ணும் கொக்கு இல்லே! நான் யார், தெரியுமா? நான் வெறும் ரேவதி இல்லை! நான் மிஸஸ் ரேவதி ஞானசீலன்! ஆமாம்; புரிஞ்சுக்கங்க!" ஆத்திர ஆவேசத்தில் உணர்ச்சிகள் கொப்புளிக்க விடை கூறினாள், ரேவதி.

"உங்களை இனித்தான் நான் புரிஞ்சுக்கிடப் போறேனா? சும்மா ஏன் நாடகம் போடுங்க?”

"நாடகம் போடுறது நீங்கள்தான்! உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்து, சிதம்பரம், சமூகவேசி மாதங்கினி, ராத்திரி ரவுடி முத்தையன் முதலான பேர்களையும் தொட்டுப்பாருங்க, ஞானசீலன்! நாடகம் போட்டதும், நடிப்பதும் நீங்களேதான் என்கிற உண்மையை நீங்கள் புரிஞ்சுக்கிடுவீங்க!”

"இப்பவும் நீங்கள் என்னைக் குற்றவாளி ஆக்குறிங்க, டாக்டர் ரேவதி."



உண்மை அதுதானே மிஸ்டர் ஞானசீலன்? அதிருக்கட்டும். ஒரு திருத்தம். நான் இப்போ டாக்டர் ரேவதி. இல்லை; இப்ப நீங்க என்னைத் தேடி வந்திருக்கிறது. என்கிட்டே வைத்தியம் பண்ணிக்க இல்லையே?-பின்னே, இப்ப எப்படி நான் டாக்டர் ரேவதியாக இருக்க வாய்க்கும்? திருப்பியும் சொல்றேனுங்க. நான் ரேவதி. ஞானசீலன்!... ரேவதி ஞானசீலன், நான்!”

ஞானசீலன் நல்ல பாம்பின் சீற்றத்தோடு அட்டகாசமாகவும், நிர்த்தாட்சண்யமாகவும் சிரித்த வாறு ஆணவமாக எழுந்து நடந்தார்.

காலில் இடறிய கைத்துப்பாக்கியை எற்றிவிட்டார். மேஜையில் கைகளை ஊன்றினார். கரணம் போடவா?

சாய்ந்தபடி, மேஜையிலே தென்பட்ட அந்தத் திருமணப்படம், மங்கலத்தாலி, பழுப்பேறிய கடிதங்கள், டைரி, புதியசேலை, இரவிக்கை ஆகியவற்றை மேலோட்டமாகப் பார்த்ததுடன் நிறுத்திக்கொண்டு, தொடர்ந்த சிரிப்பை நிறுத்தாமல் தொடரலானார்; மிஸ் ரேவதி, நீங்கள் பகல் கனவு காணுறிங்க.’’ -

ரேவதி நல்லதொரு வீணை செய்து மடியில் கிடத்திய வண்ணம், வண்ணம் நிரம்பின நரம்புகளில் ஆனந்த பைரவி ராகத்தை சங்கீத ரசனையுடன் மீட்டிப் பரவசத் தோடு ஆனந்தமாக அனுபவித்து மெய்ம்மறந்திருக் கையில், ஞானசீலனின் நையாண்டிப் பேச்சு காதுகளில் விழவே, தவித்துப்போய்க் கண்களை உருட்டி விழித்தாள். ‘அட பரிதாபமே! நான் காண்றது. ராத்திரிக் கனவுங்க!” என்று சலனம் துளியுமின்றிச் சொன்னாள்.

இதைக் கேட்டதும், ஞானசீலன் பற்றறுத்துப் புன்னகை செய்தார். ஜோக் அடிக்கிறதை நீங்கள் இன்னம்கூட மறக்கல்லையா?” என்று கேள்வி கேட்டார். இத்தனை காலமும் ஜோக் அடிக்கிறதை அறவே மறந்துதான் போயிருந்தேன்; ஆனால், இப்ப உங்களைக் .

கனவிலே கண்டமாதிரியே நேரிலேயும் கண்டதும், என்னையும் அறியாமலும், என்னையும் மீறிக்கிட்டும் மனம் கும்மாளம் போடவே, பழைய ஞாபகத்திலே என்னவோ சொன்னேன். அது மெய்யாகவே நல்ல ஜோக்காகவும் அமைஞ்சிபோச்சு!’ சோகமாக விடை சொன்னாள், ரேவதி.

‘அட பாவமே!’’

அட புண்ணியமே!’’

ரேவதி...!’

நான் வெறும் ரேவதி கிடையாது. நான் ரேவதி. ஞானசீலனாக்கும்!” மின்னித் தெறித்த தன்னம்பிக்கையின் பெருமிதத்தோடு சொல்லிவிட்டுக் கண்களை அவளுக்கே கைவந்த உயர்வான மனப்பாங்கோடு உயர்த்தி ஞானசீலனை ஊடுருவிப் பார்த்தாள், ரேவதி.

கொலை வெறி கொண்டவனைப்போல சிரித்தார். ஞானசீலன். ரேவதி என்று கூப்பிட்டார். ரேவதி, இந்தப் பிறவியில் நீங்கள் ரேவதி ஞானசீலனாக ஒரு நாளும் ஆகமுடியூாது; ஆகவே முடியாது!’ என்று தீர்ப்புக் கூறினார்.

ரேவதி உருக்குலைந்தாள். நெஞ்செலும்பில் தூண்டில்முள் செருகிக்கொண்ட மாதிரி, அவள் துடித்தாள்; இரத்தமும் துடித்தது. அந்தத் துடிப்பில் அவளுடையதும் அவளுக்கே உரித்தானதுமான அந்த உயர்வு மனப்பான்மைத் தன்மையும் துடிதுடித்ததோ, என்னவோ? நான்...நான் பாரத சமுதாயத்தைச் சேர்ந்த சராசரிப் பெண் ரேவதி!...என்னோட பெண்மை பூரணத்வம் அடைஞ்சிட வேண்டாமா? எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கணும்னா, நான் ஞானசீலனோட உடன்பாடு. செஞ்சுதான் தீரவேணும்!--இது என் சொந்த விஷயம்; இது என் பந்தப்பிரச்னை!..ஓ... ஞானசீலன் திரும்பி விட்டார் அல்லவா?...பேஷ்!

ஞானசீலன் சிரித்துக்கொண்டேயிருந்தார்.

நீங்களேதான் சிரிக்கிறீர்களா?”

பின்னே, விதிக்கா இத்தனை அர்த்தத்தோட சிரிக்கத் தெரியும் மிஸ் ரேவதி!’

‘விதி சிரிச்சு நான் முன்னே பின்னே பார்த்திருந்தால் தானே-கேட்டிருந்தால்தானே-எனக்கு அந்தத் துப்புப் புரியும்?...’

இப்பப் புரிஞ்சுக்கங்க. நானேதான் விதி!”

ஞானசீலனின் புது விதிச் சிரிப்பு திக்கெட்டும் முழங்கியது!...

  • அத்தான்...!’ வீரிட்டாள், ரேவதி.

மறுகணம் அவள் ஞானசீலனின் கால்களிலே நெடுஞ்சாண் கிடையாகச் சரண் அடைந்தாள்.

தாலி கட்டின கணவனுக்கே தன் உயிரையும் உடலையும் ஆத்ம நிவேதனம் செய்துவிட்டவளைப்போல, ஞான சீலனின் காலடியில் விழுந்து கிடந்தாள், அவள்.

ஞானசீலன் பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டவராக அங்கேயிருந்து அப்பால் நகர்ந்தார். வெற்றியைத் தேடிய பயங்கரச் சிரிப்பு பயங்கரமாகவே தொடர்ந்தது.

எங்கிருந்தோ புதிய பாட்டு ஒன்று மிதந்து வந்து தவழ்ந்தது. என்ன பாட்டு அது? என்ன ராகம் அது?

ரேவதி மெல்ல மெல்லத் தலையை உயர்த்தினாள்.

ஒரு குழந்தையைப்போல, ஞானசீலனைப் பாசத்தின் வெறியோடு ஊடுருவினாள். அவள் கண்களின் மாயத் தாகம் இன்னமும் குறையக் காணோம்.

‘அத்தான்! பெரிய மனசு பண்ணி, என்னை உங்கள் ரேவதி ஞானசீலனாக ஏற்று, உங்களோட பழைய ரேவதிக்குட்டியாக என்னை மறுபடியும் ஏற்றுக்கிட்டு,

என் மானத்தையும் மரியாதையையும் காப்பாத்துங்க, அத்தான்!” என்று கெஞ்சி அலறிக் கதறினாள், அவள்!

ஞானசீலனிடம் ஆத்திரத்தி அடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது.

மிஸ் ரேவதி!...”

“அத்தான், நான் ரேவதி ஞானசீலன்!...நான் ரேவதி ஞானசீலன், அத்தான்!”

சோகம், காட்டுத்தீயாகிவிடுமோ!

‘உங்களுடைய அத்தான் ஞானசீலன்...மிஸ்டர் ஞானசீலன் செத்துப்போய் ஆண்டு பத்து ஒடிப் போயிடுச்சு, மிஸ் ரேவதி!...”

‘ஐயையோ... அப்படிச் சொல்லாதீங்க! உங்கள் வாயிலே இன்னொரு தக்கம் அபசகுனமாட்டம் அப்படியெல்லாம் சொல்லிப்பிடாதீங்க! உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்குங்க!’ என்று ஒலமிட்டுக் கதறிய ரேவதி, கழுத்தில் எதையோ தேடினாள்; காணாமல் திடுக்கிட்டாள்.