உள்ளடக்கத்துக்குச் செல்

அ. மருதகாசி-பாடல்கள்/சமூகம்

விக்கிமூலம் இலிருந்து

சமூகம்

(தொகையறா)

சத்தியம் பொய்யாகும்! தருமம் தலைசாயும்!
அறநெறிகள் அலைமோதும்! அதர்மம் அரசாளும்!
பருவ நிலை மாறும்! பசுமைக்குப் பஞ்சம் வரும்!
வறுமை சதிராடும்! மண்ணுலகே நரகாகும்!

(பாட்டு)

அது முத்திய கலியின் அடையாளம்!
அதன் முடிவே கல்கி அவதாரம்!
எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்!
என்னும் நிலைமை வரும்-அது
பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும்
பெரிதும் கலந்து விடும்!(அது)
அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி
அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி
விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும்
வியாபாரிகள் எனும் பெயரடைவார்!(அது)
மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம்
மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே
மனங்காட்டும் புனிதக்கலை-மாறி
நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம்
வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக
வெளிக்காட்டும் புதியகலை!(அது)
புல்லரும் பொய்யரும் கள்வரும் கயவரும்
புயவலி கொண்டாட-பெரும்
செல்வமிகுந்தவர் வல்லமையுற்றவர்
ஜெயம் ஜெயமென்றாட-மிக
நல்லவர் ஏழைகள் ஞானிகள் மானிகள்
உள்ளம் பதைத்தாட-கொடும்
நாலாம் யுகமது முடிவுறும் நாள்வர
கோள்களும் கூத்தாட-மனிதப் பேய்களும் கூத்தாட!
"வெடி படு மண்டத் திடிபல தாளம் போடும்-வெட்ட
வெளியிலிரத்தக் களியோடு பூதம் பாடும்"-சட்டச்
சட சட வென்று எரிமலை வெடித்தே சாடும்-கட்டக்
கட கட கட வென பூமி பிளந்தேயாடும்!
புயலுமெழுந்திடும்! மழையும் பொழிந்திடும்!
அலைகடல் பொங்கும் உலகையழிக்கும்
ப்ரளயம்-மஹாப்ரளயம்-மஹாப்ரளயம்.

தசாவதாரம்-1975

இசை : ராஜேஸ்வரராவ்
பாடியவர் : A. L. மகாராஜன்
பாலுந் தேனும் பெருகி ஓடுது
பரந்த சீமையிலே நாம்
பொறந்த சீமையிலே! ஆனா
பாடு படுறவன் வயிறு காயுது
பாதி நாளையிலே-வருஷத்தில்
பாதி நாளையிலே!
ஒ....என்னடா தம்பி நேராப்போடா
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா
தம்பிப் பயலே-இது
மாறுவதெப்போ? தீருவதெப்போ?
நம்ம கவலே!
வானம் பொழியுது! பூமி விளையுது!
தம்பிப் பயலே-நாம்
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே-ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே-இது
தகாதுயின்னு எடுத்துச் சொல்லியும் புரியலே-அதாலே

(மனுஷனை)

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு-தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு-அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே-எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டுலே-அதாலே

(மனுஷனை)

ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப்பயலே-எதுக்கும்
ஆமாம்சாமி போட்டுவிடாதே தம்பிப்பயலே!
பூனையைப் புலியாய் எண்ணிவிடாதே தம்பிப்பயலே ஒன்னைப்
புரிஞ்சுக்காம நடக்காதேடா தம்பிப்பயலே!-டேய்

(மனுஷனை)

தாய்க்குப்பின் தாரம்-1956

இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்
இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு!
இல்லையென்ற குறையும் இங்கே
இனிமேலும் ஏன் நமக்கு?
கன்னித்தாய் காவேரி எந்நாளும் துணையிருக்க!
கைகளிலே உழைப்பதற்கு பலமிருக்க திறமிருக்க!
பொன்விளையும் பூமியெனும் கண்ணான நிலமிருக்க!
புகழுடனே உலகையாண்ட இனம் என்ற பெயரிருக்க! (இ)
எண்ணத்தால் இமயம் போலே உயர்ந்து விட்ட மனமிருக்க!
லட்சியமே உயிராகக் கொண்டாடும் குணமிருக்க!
முன்னேற்றப் பாதையிலே அறிவோடு நாம் நடக்க!
கண்ணோட்டம் கொண்டவர்கள் வழிகாட்டக் காத்திருக்க! (இ)
வந்தாரை வரவேற்று வாழவைத்த தென்னாடு!
வள்ளுவனார் பொது மறையை வழங்கிய நம்நாடு!
இந்நாடு பிறர்கையை எதிர்பார்த்து வாழுவதா?
எந்நாளும் துயர்மேகம் நம்மீது சூழுவதா?

தங்கரத்தினம்-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P சுசிலா
ஒயிங்கு தவறாமெ!
ஊரெ எத்தி வாயாமெ
பொயிதெ வீணாக்காமெ
புவ்வாவ தேடிக்கணும்!
ஆனாக்க அந்த மடம்
ஆவாட்டி சந்தெமடம்!
அதுவும் கூட இல்லாகாட்டி
ப்ளாட்டுபாரம் சொந்த இடம்!(ஆனா)
மச்சுலே இருந்தாத்தான்
மவுசுயிண்ணு எண்ணாதே!
குச்சுலே குடியிருந்தா
கொறச்சலுண்ணு கொள்ளாதே!
மச்சு குச்சு எல்லாமெ
மனசுலே தானிருக்கு!
மனசு நெறஞ்சிருந்தா
மத்ததும் நெறஞ்சிருக்கும்!(ஆனா)
கெடைச்சா கஞ்சித்தண்ணி!
கெடைக்காட்டி கொயாத்தண்ணி!
இருக்கவே இருக்கையிலே
இன்னாத்துக்குக் கவலை கண்ணி!
மரத்தெப் படெச்சவன் தான்
மனுசாளைப் படைச்சிருக்கான்!
வாறதெ ஏத்துக்கதான்
மனசெ கொடுத்திருக்கான் !
தெட்டிக்கினு போறதுக்கு
திருடன் வருவான்னு
துட்டுள்ள சீமாங்க
தூங்காமெ முயிப்பாங்க!
துட்டும் கையிலே இல்லே!
தூக்கத்துக்கும் பஞ்சமில்லே!
பொட்டியும் தேவையில்லே!
பூட்டுக்கும் வேலையில்லே!

ஆயிரம் ரூபாய்-1964

இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா
காட்டு மல்லி பூத்திருக்க
காவல் காரன் பாத்திருக்க
ஆட்டம் போட்டு மயிலைக் காளை
தோட்டம் மேயப் பாக்குதடா!
மாட்டுக்கார வேலா! ஓம்
மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா!(காட்டு)
கோட்டைச் சுவர் போல வேலி இருக்கு!
குத்தும் கருவேல முள்ளுமிருக்கு!
தோட்டக்காரன் கையில் கம்பு மிருக்கு!
சுத்திச் சுழட்டவே தெம்புமிருக்கு!
மாட்டுக்கார வேலா! ஓம்
மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா!(காட்டு)
போகாத பாதையிலே போகக் கூடாது-சும்மா
புத்தி கெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது!
மாடாகவே மனுஷன் மாறக் கூடாது!
மற்றவங்க பொருளுமேலே
ஆசை வைக்க கூடாது!
மாட்டுக்கார வேலா! ஒம்
மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா!(காட்டு)

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
பட்டு : கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்!
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும் !
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்!
உண்மையிதை உணர்ந்து நன்மைபெறப் படித்து
உலகில் பெரும் புகழ் சேர்த்திடடா!
குமரன் : பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று
பலரும் போற்றப் புகழ் பெறுவேன்!
பட்டு : சபாஷ்!
அக்கம் பக்கமே பாராது!
ஆட்டம் போடவும் கூடாது!
அழுவதும் தவறு! அஞ்சுவதும் தவறு!
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு!
குமரன் : அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்!
இந்த நாட்டின் வீரனாவேன்!
பட்டு : சபாஷ்!
தன்னந்தனிமையில் நீயிருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண்கலங்குவாயா? துணிந்து நிற்பாயா?
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ!
குமரன் : புயலைக் கண்டு நடுங்கமாட்டேன்!
முயன்று நானே வெற்றி கொள்வேன்!
பட்டு : சபாஷ்!

கைதி கண்ணாயிரம்-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா தொகையறா
ஆண் : மந்தரையின் போதனையால் மனம் மாறிகைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்!
வஞ்சகச் சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
பஞ்ச பாண்டவரை பகைத்தழிந்தார்!
சிந்தனையில் இதையெல்லாம் சிறிதேனும் கொள்ளாமல்
மனிதரெல்லாம் மந்தமதியால் அறிவு மயங்கி
மனம் போன படி நடக்கலாமா?

(பாட்டு)

கோரஸ் : ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே!
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே!(ஒற்)
உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாடமே
அணையாத தீபமாய்ச் சுடர் என்றும் வீசுமே
ஆண் : நெஞ்சில்-உண்டான அன்பையே
துண்டாடி வம்பையே
உறவாகத் தந்திடும்
சிலர் சொல்லை நம்பியே
இருவரும் : வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!
கோரஸ் : ஒற்றுமையாய் !!
இருவரும்: துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே!
வன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே!
ஆண் : இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே!
இருவரும்: வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!
கோரஸ்: ஒற்றுமையாய்...!
இனத்தாலே, ஒன்று நாம்!
மொழியாலும் ஒன்றுதான்!
இணையில்லா தாயகம்
நமக்கெல்லாம் வீடுதான்!
ஒரு தாயின் சேய்கள் நாம்!
இது என்றும் உண்மையே!
அறிவோடு நாமிதை
மறவாமல் எண்ணியே
ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே!

பாகப்பிரிவினை-1959

இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் & L. R. ஈஸ்வரி குழுவினர்
கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மையில்லாதது!
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்!
அடையாளம் காட்டும்! பொய்யே சொல்லாதது!
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
கண்முன்னே தோன்றுவது சாத்தியமே!
காத்திருந்து கள்வருக்குக் கை விலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்குத் தோணாத சத்தியமே!
போடும் பொய்த் திரையைக் கிழித்து விடும் காலம்!
புரியும் அப்போது மெய்யான கோலம்!(கண்)
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க:
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க!
பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை!
உண்மை எப்போதும் தூங்குவது மில்லை!(கண்)
பொன் பொருளைக் கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டுக்
கண்மூடி போகிறவர் போகட்டுமே!
என் மனதை நானறிவேன்!
என் உறவை நான் மறவேன்!
எது ஆன போதிலும் ஆகட்டுமே!
நன்றி மறவாத நல்ல மனம் போதும்!
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்.(கண்)


நினைத்ததை முடிப்பவன்-1975


இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்
மதியாதார் வாசல் மதித்தொருக்கால் சென்று
மிதியாமை கோடி பெறும் என்ற
மதி சொன்ன ஔவை மொழி தன்னைப் போற்றி
வாழ்வதே பெருமை தரும்!
மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம்
என்றெண்ணும் குணம் வேணும்-இதை
மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்
மாறாத அவமானம்!(மண்)
கண்ணான கணவன் தன்மானம் தன்னைக்
காப்பாற்றும் பெண் தெய்வம்-மனம்
புண்ணாகிச் சிந்தும் கண்ணீரைக் காணப்
பொறுக்காதடா தெய்வம்!
எண்ணாத இன்பம் எது வந்த போதும்
எதிர் கொள்ளத் தயங்காதே!
எளியோருக்காக நீ செய்த த்யாகம்
இதை லோகம் மறவாதே!(மண்)
அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்
பணங் காசிலே இல்லை-மெய்
அன்பே எந்நாளும் அழியாத இன்பம்
அதற்கீடு வேறில்லை!

சதாரம்-1956

இசை : G. ராமநாதன்
பாடியவர் : திருச்சி லோகநாதன்
ஆண் : காலணா மிஞ்சாதையா!
காலணா மிஞ்சாதையா!
பெண் : ஆலையில் பாடு படும்
ஏழைகள் வாழ்வினிலே(காலணா)
ஆண் : ஜாலியாய் வாழ்ந்திடலாம்
ஜாலியாய் வாழ்ந்திடலாம்
நினைத்தால் உலகையெல்லாம்
பணத்தால் வாங்கிடலாம்!
பெண் : பாட்டாளியே வறுமைக்
கூட்டாளியே-எண்ணிப்
பாரய்யா உன்நிலையை இந்நாளிலே!
ஆண் : நோட்டாக வந்த
கூட்டாளியே-மனக்
கோட்டையெல்லாம் உன்னால் ஈடேறும்!
பெண் : ஒண்ட நிழல் சொந்தமில்லே!
ஓய்வுமட்டும் சிறிதுமில்லே!
ஆண் : கண்டபடி களிப்புறவே
காலந்தான் போதவில்லே!
கோரஸ் : ஆலையில் பாடுபடும்
ஏழைகள் வாழ்வினிலே!(காலணா)
ஆண் : பணநாதனே உந்தன்
அருட் பார்வையால் -இந்தப்
பார்மீது உழைக்காமல் பொருளீட்டுவோம்!
பெண் : பசியாறவே ஏழ்மைப்
பகைதீரவே - பகல்
இரவென்றும் பாராமல் பணியாற்றுவோம்!
பெண் : காலம் மாறிடுமா!
கவலை தீர்ந்திடுமா?
ஆலையில் பாடுபடும்
ஏழைகள் வாழ்வினிலே(காலணா)


அவன் அமரன்-1958

இசை : இப்ராஹிம்
மண்ணிலே பொன் கிடைக்கும்!
மரத்திலே கனி கிடைக்கும்!
எண்ணத்திலே தாழ்ந்துவிட்ட மனிதர்களால்-இந்த
உலகத்திலே பிறருக்கென்ன சுகங் கிடைக்கும்!
சின்னஞ்சிறு சிப்பிகூட முத்து தரும்!-கொட்டும்
தேனீக்கள் சுவை மிகுந்த தேனைத்தரும்!
செங்கரும்பு உருவிழந்தும் சாறு தரும்!-தான்
செத்த பின்னும் யானை கூடத் தந்தம் தரும்!
எண்ணத்திலே தாழ்ந்து விட்ட மனிதர்களால்-இந்த
உலகத்திலே பிறருக்கென்ன சுகங் கிடைக்கும்!
மனிதராகப் பிறந்ததினால் மனிதரில்லை-பெரும்
மாளிகையில் வசிப்பதனால் உயர்வுமில்லை!
குணத்தால் சிறந்தவரே உயர்ந்தவராம்-அந்தக்
கொள்கையுள்ள நல்லவரே மனிதர்களாம்!

நல்லவன் வாழ்வான்-1961


இசை : T. R. பாப்பா
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே!-வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!
(அறி)
உடலுக்கு உயிர் போலே!
உலகுக்கு ஒளிபோலே!
பயிருக்கு மழை போலே!
பைந்தமிழ் மொழியாலே!
(அறி)
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே!
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே!
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே!
(அறி)
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது!
மனம்மொழி மெய்இனிக்க வார்த்திட்ட தேனது!
வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது!-எம்
மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக்கண்டது!

அறிவாளி-1963

இசை : S.V. வெங்கட்ராமன்
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

(தொகையறா)

அறிவிருக்கும் அன்பிருக்கும் பண்பிருக்கும் சிலரிடம்!
அழகிருக்கும் பணமிருக்கும் பகட்டிருக்கும் பலரிடம்!

பாட்டு

இது தெரியும்!
அது தெரியாது!
ஏழடுக்கு மாளிகையில் இருக்கிற பேர்வழிக
எத்தனையோ தப்புத்தண்டா பண்ணுவாங்க!
ஏழை எளியவங்க இல்லாத காரணத்தால்
ஏதோ சிறு தவறு பண்ணுவாங்க!


ஜாலி மைனர்கள் விசிறி மடிப்பிலே
கிழிசல் ஒரு கோடி இருக்கும்!-தொழி
லாளி துவைச்சு உடுத்தும் உடையிலே
தையல் பல ஓடி இருக்கும்!


கனதனவானின் நெஞ்சில் எந்நாளும்
கபடம் பொறாமை எனும் அழுக்கிருக்கும்!
கள்ளம் அறியாத பாட்டாளி மேனியில்
உள்ளபடி வேர்வை அழுக்கிருக்கும்!
(இது)

அல்லி பெற்ற பிள்ளை-1959

இசை : K. V. மகாதேவன்
இது தான் உலகமடா!-மனிதா
இது தான் உலகமடா!-பொருள்
இருந்தால் வந்து கூடும்-அதை
இழந்தால் விலகி ஒடும்!


உதைத்தவன் காலை முத்தமிடும்!
உத்தமர் வாழ்வைக் கொத்தி விடும்!
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
வளர்த்தே அறிவை மாய்த்து விடும்!
பொருள்-இருந்தால் வந்து கூடும்!
அதை இழந்தால் விலகி ஓடும்!(இது)


உழைப்பவன் கையில் ஓடு தரும்!
உணவுக்குப் பதிலாய் நஞ்சைத் தரும்!
பழியே புரியும் கொடியோன் புசிக்க
பாலும் பழமும் தினம் தேடித் தரும்!
பொருள்-இருந்தால் வந்து கூடும்!
அதை இழந்தால் விலகி ஓடும்!(இது)
மெய்யைப் பொய்யாய் மாற்றி விடும்!
வீணே சிறையில் பூட்டி விடும்!
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னைப்
புகழ்ந்தே பாடல் புனைந்து விடும்!
பொருள்-இருந்தால் வந்து கூடும்!
அதை-இழந்தால் விலகி ஒடும்!

பாசவலை-1956

இசை : எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர் : C. S. ஜெயராமன்
(பல்லவி)
எல்லாம் திரை மறைவே--உலகில்
எல்லாம் திரை மறைவே


கல்வி இருந்தென்ன கற்பனை இருந்தென்ன
கண்டு ரசிக்க கண்களில்லாதவர்க்கு
(எல்லாம்)


கற்றுக் கொடுக்காத கவி வாணரின் புலமை
கஞ்சத் தனமுடையோன் காக்கும் பணப் பெருமை
கவைக்குதவாப்படிப்பு உணர்ச்சியில்லா நடிப்பு
கதிரவன் ஜோதி முன்னே குடத்தில் இட்ட விளக்கு
(எல்லாம்)


ஆடம்பரம் இல்லா அறிவாளி நாவன்மை
அவனியை உருவாக்கும் தொழிலாளி கைவன்மை
நாடிக்கடல் கலந்த நதிநீரின் நல்ல தன்மை
நன்றியில்லா தவர்க்கு செய்த செய்த நன்மை
(எல்லாம்)


பிறந்த நாள்-1982


இசை: K. V. மகாதேவன்
சொன்னாலும் கேக்காத உலகமுங்க!
சொல்லாமப் போனாலும் புரியாதுங்க!-இதில்
முன்னாலும் போகாமெ பின்னாலும் போகாமெ
முழிக்கிற கும்பல் ஏராளங்க!


சோம்பேறி ஆகுதுங்க!-சிலது
தூங்காமத் தூங்குதுங்க!-புதுத்
தொழிலைத் துவக்கிப் பலர்
துயரத்தைத் தீர்க்காமெ
துட்டுகளைப் பெட்டியிலே பூட்டுதுங்க!(சொ)


பாடுபடும் ஏழைகளும்!-பணம்
உள்ளவரும் சேர்ந்திடுங்க!-புதுப்
பாதையை வகுத்திடுங்க!
பங்கு போட்டுச் சாப்பிடுங்க!
பாரபட்சமில்லாமெ வாழ்ந்திடுங்க!-என்று(சொ)

ஆடவந்த தெய்வம்-1960


இசை: K. V. மகாதேவன்
நம்ம சரக்கு ரொம்ப நல்ல சரக்கு!
நாணயமும் நம்பகமும் உள்ள சரக்கு!
ஸ்டாரு படம் போட்டிருக்கு பின்னாடி-இது
சிறந்த பெல்ஜியம் கண்ணாடி!-நீ
சிரிச்சா சிரிக்கும் அழுதா அழுவும்
சிந்திச்சுப் பாரு இதன் முன்னாடி!


அறிஞர் கலைஞர்கள் அருமைக் கவிஞர்கள்
அறிவை உலகில் தரும் பேனா!-நல்ல
இருதயமில்லாத மனிதருக்கு இது
ஈட்டிமுனையாகும் சொல்லப் போனா!


கெட்டதைப் பாக்காதே கேக்காதே பேசாதே!
கேடுகெட்டுப் போகாதே மனக்குரங்கே!-அது
கட்டுப்பாடு, கண்ணியம் கடமையைக் கொல்லுமின்னு
வெட்ட வெளிச்சமாச் சொல்லுது இங்கே!


இதோ பாரு தஞ்சாவூரு தலையாட்டி பொம்மை!
இழுத்தபக்கம் சாயுறது இதனுடைய தன்மை!
இதைப் போலச் சிலமனிதர் இருக்கிறதும் உண்மை!
எண்ணிப் பார்த்தா அதுகளெல்லாம் நடமாடும் பொம்மை


தேடிவந்த செல்வம்-1958

இசை: லிங்கப்பா
எளியோர்க்கு சுகவாழ்வு ஏது?-துன்ப
இருள் நீக்க ஆள்வோர் எண்ணாத போது!(எளி)


திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி
தெருவோடு போகும் நிலைமாறிடாது!
சீமான்கள் உள்ளம் மாறாத போது!(எளி)


எதுவந்தபோதும் விதிஎன்று எண்ணும்
மதிகொண்ட மாந்தர் மனம் மாறிடாது
நிதியோடு இன்பநிலை நேர்ந்திடாது !(எளி)


கனவு-1954

இசை: S. தட்சிணாமூர்த்தி

  (தொகையறா)

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்!
உயர் பதவி காணுகின்றார்!
உண்மையே பேசிடும் உத்தமர்கள் ஓயாத
துயராலே வாடுகின்றார்!

பாட்டு

புவி மீதினில் நீதி புகைந்ததே!
பொய், பாபமும், சூதும் மலிந்ததே!
பணப்பேயதன் முன்னே சட்டமெல்லாம்
பணிந்தாடுதே இன்று பாரினிலே!
கனல் மீதினில் புழுவாய் ஏழைகளே!
கண்கலங்கியே வாடித் திண்டாடுறார்!
அநியாயமிதே! அழியாததேன்?
இதை அழித்திடுவாரே இல்லையா?
பொதுமேடையில் ஏறிப் பேசுகிறார்-தாம்
பொதுநலத் தொண்டன் என்கிறார்
அதிகாரமும் கையில் வந்தவுடன்
அநியாயமும் செய்கின்றார் கண்மூடியாய்!
மனத்தூய்மையுடன் எல்லோருமே
வாழ்ந்தால் அன்றி நிலையும் மாறுமோ?
பாபமும் சூதும் மலிந்ததே!
பாபம் மலிந்ததே! மலிந்ததே!

ராஜாம்பாள்-1951’'


இசை: ஞானமணி


உருளும் பணம் முன்னே!
உலகம் அதன் பின்னே!
தெரிந்து நட கண்ணே!
திறமையுடனே!


உல்லாசமும் சல்லாபமும்
சொல்லாமலே தன்னால் வரும்!
எல்லோரும் நம்மைக் கொண்டாடவே
இல்லாத பெயர் எல்லாம் தரும்!
உள்ளதைக் கோட்டை விட ஆளிருக்கும்போது!
சில்லறைப் பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது?
கண்ணாலே ஜாடை காட்டு!
உன் கையைக் கொஞ்சம் நீட்டு!
உன் எண்ணம் போல இன்ப வாழ்வு வந்து சேரும்!
தள்ளாடும் கிழத் தாத்தாவுக்கும்
துள்ளாட்டம் போட ஆசை வரும்!
ஒய்யாரிகளின் நேசம் தரும்!
மெய்யான சுகவாசம் பெறும்!
கள்ளரை நல்லவரைப் போல அதுகாட்டும்!
கண்ணியம் உள்ளவரைக் கூட அது வாட்டும்!
என்னாளும் அதைத் தேடு!
உன் சொந்தமாக்கிப் போடு!
உன் எண்ணம்போல இன்பவாழ்வு வந்து சேருமே!


பொன்னு விளையும் பூமி-1959

இசை: ரெட்டி
ஆசையைக் கொன்றுவிடு!-இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு!
பாசத்தை நீக்கிவிடு!-துன்பம் இல்லாப்
பாதையைக் காட்டிவிடு!


அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம்!
அன்பையும் பார்க்காது!-அதன்
வஞ்சக நெஞ்சம் தெய்வீகக் காதலை
வாழவும் வைக்காது!


ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம்!
காதுக்குக் கேட்காது! காதலின்கீதம்
நாதமில்லாத வீணையும் ஆகி
வாழ்வது ஏன் இங்கு? வாழ்ந்தது போதும்!
வாழ்ந்தது போதும்! வாழ்ந்தது போதும்!

ஆடவந்த தெய்வம்-1960

இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
விந்தையிலும் பெரிய விந்தையடி!-இது
சிந்திக்க முடியாத எங்குமே காணாத
(விந்தை)


செந்தமிழ்ப் பண்பாட்டின் சிகரத்திலே
சிறப்புடன் வாழும் இந்தக் குடும்ப நிலை!
(விந்தை)


பந்தபாசம் என்றால் படியென்ன விலையென்று
தந்தையைப் பிள்ளை கேட்கும் காலமன்றோ!-இதில்
அன்புடன் பெற்றவரின் அறுபதாம் ஆண்டுவிழா
கொண்டாடும் குடும்பம் இதைப்போல உண்டோ?
(விந்தை)


வந்தமருமகளை நிந்தனை செய்வதையே
வாடிக்கையாய்க் கொண்ட உலகினிலே
மலர்ந்த முகங்காட்டி மருமகளைப் போற்றி
மகளென்று பிறர் எண்ணும் வகையினிலே
பாராட்டி சீராட்டிப் பழகிடும் மாமியும்
பேறுகள் பதினாறும் பெற்ற இந்தக் குடும்பம்!
(விந்தை)

படிக்காத மேதை -1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. லீலா

:பெண்கள்: ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே-நம்மால்

ஆகாததில்லையென்று பாடுவோமே-நாம்
அழியாத புகழ் தன்னைத் தேடுவோமே-கற்பை
அணியாக நாம் என்றும் சூடுவோமே-என்றும்
(ஆனந்தமாய்)


கண்ணகியின் மரபில் வந்த
கன்னியர்கள் என்பதை நாம்
எண்ணி எண்ணி இன்பம் கொள்வோமே!-பெண் குலத்தின்
பெருமை தன்னை எடுத்துச் சொல்வோமே!
கற்பெனும் தீயால்-பெரும்
அற்புதம் செய்தாள்-அந்தப்
பொற்கொடிபோல் வாழ்ந்திடுவோமே!-என்றும்
(ஆனந்தமாய்)


ஆஹா...
அனுசூயை எனும் ஒரு பெண்ணாள்-அணையாத
கற்பென்னும் சுடர் வீசும் கண்ணாள்!
சிவனோடு ப்ரம்மாவை திருமாலை முன்னாள்
சிசுக்களாக்கி அமுதம் அளித்த பெருமை சொல்வோமே-என்றும்
(ஆனந்தமாய்)
நாதனுயிர் காத்திடவே
ஆதவனை மறைத்துவிட்ட
மாதரசை மனதில் கொள்வோமே-நளாயினி
மகிமைதனை எடுத்துச் சொல்வோமே!
கற்பெனும் தீயால்-பெரும்
அற்புதம் செய்தாள்-அந்தப்
பொற்கொடிபோல் வாழ்ந்திடுவோமே!-என்றும்
(ஆனந்தமாய்)

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: P. சுசீலா & ஈஸ்வரி குழுவினர்
வாழ்வு உயரவேண்டும்!-நாட்டின்
வளமும் பெருகவேண்டும்!
ஏழை எளியவர்க்கே!-உதவும்
எண்ணம் பரவ வேண்டும்!


பேத மகல வேண்டும்-மத
பித்தம் நீங்க வேண்டும்-பொல்லா
சூதும் வாதும் தொலைந்தே-தூய
ஜோதி துலங்க வேண்டும்!


மாதர் தம்மை யடிமை-செய்யும்
வழக்கம் ஒழிய வேண்டும்!
நீதி நிலவவேண்டும்!-எங்கும்
நேர்மை உலவ வேண்டும்!-இன்ப
(வாழ்வு)


ராஜாம்பாள்-1951

இசை: ஞானமணி
பொல்லாத உலகத்திலே நல்லதுக்குக் காலமில்லே!
போலியெல்லாம் போடுதண்ணே கொண்டாட்டம்-இந்தப்
போக்கு மாற செலுத்த வேணும் கண்ணோட்டம்!
கள்ளர்களும் கயவர்களும்
கண்ணியவான் போர்வையிலே
கொள்ளையிட்டுப் பணத்தைச் சேத்துக் குவிப்பதா?
நல்ல மனம் உள்ளவங்க
சில்லறைகள் பார்வையிலே
நாணய மில்லாதவராய்த் தவிப்பதா?
(பொல்லாத)


வெள்ளைசள்ளையிருந்தாத்தான் மதிப்பதா?-அது
இல்லையின்னா காலில் போட்டு மிதிப்பதா?-இனி
இந்தநிலை மாறிடவே இன்ப நிலை நேர்ந்திடவே
ஒன்றுபட்டு உறுதியோடு உழைக்கணும்!
(பொல்லாத)


உள்ளபடி வயிறெரியும்.
உதடு மட்டும் பழம் சொரியும்
தில்லு முல்லு திருகு தாளக் கூட்டமே
பல்லைக் காட்டிக்கிட்டு
பாடிகார்டா சுத்திக் கிட்டு
குல்லாப் போட்டு செய்யுது ஆர்ப்பாட்டமே
(பொல்லாத)
மொள்ளே மாறிக் கும்பல் குணம் மாறணும்-அதன்
மூளையிலே சொறணை கொஞ்சம் ஏறணும்-அது
நல்லபடி நடந்திடணும்!
நம்ம நிலை உயர்ந்திடணும்
நல்லவங்க அதுக்கு நாளும் உழைக்கணும்!
(பொல்லாத)


நான் சொல்லும் ரகசியம்-1959

இசை : G. ராமநாதன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்!
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்!
(திரு)
திருவிழா ஊருக் கெல்லாம் சிங்காரம்-நம்
திருநாட்டின் பெருமைக்கு இதுவேதான் ஆதாரம்!
(திரு)
"இல்லறமே நல்லறமாய் வாழுங்க"-என்ற
வள்ளுவரை வாசுகியைப் பாருங்க!
தெள்ளமுதாம் நீதிமொழி தன்னையே-நமக்கு
அள்ளித் தந்த பாட்டி இந்த ஔவையே!
(திரு)
சதிபதிகள் இணைந்தது சம்சாரமே!-அதில்
தனிமை வந்தால் இன்பநிலை மாறுமே!-எனும்
தத்துவத்தைச் சொன்ன வேதநாயகன்!-சொல்லின்
நித்தியத்தை உணரவேணும் யாருமே!
(திரு)

மனமுள்ள மறுதாரம்-1958

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
 ஜிங்காலே ஜிங்காலே ஜிங்காலே
 ஜிங்காலே ஜிங்காலே ஜிங்காலே
(ஜிங்)
ஆண் } அத்திப்பயத்தை பாக்கப் பாக்க அயவுதான்!  ::::::::::::ரொம்பஅயவுதான்!
பெண்} புட்டுப் பாத்தா உள்ளே அல்லாம் புயுவுதான்!
அல்லாம் புயுவுதான்!
ஆண்  : சுத்த மிண்ணு சொல்லுறது
 சுத்திக்கிற துணியிலில்லே!
 தோலு நெறத்திலில்லே!
 காசு பணத்திலில்லே!
பெண்: மெத்தப் படிச்சவன் பேச்சிலில்லே!
 மேனாமினுக்கிப் பூச்சிலில்லே!
 மத்தவனை மதிக்கத் தெரிஞ்ச
 மனசுலதான் இருக்கு சாமி!
(ஜிங்)
ஆண்  : நாலு பேரு மத்தியிலே நாகரீக சாயப்பூச்சு!
 நல்லவங்க மாதிரியா நாணயமான பேச்சு!
பெண் : களவாணி கூட்டத்துக்கு ஏஞ்சாமி வாய்வீச்சு!
 காலம் இப்போ சத்தியமா ரொம்ப ரொம்ப கெட்டுப்போச்சு!
(ஜிங்)

டில்லி மாப்பிள்ளை-1968

இசை: K. V. மகாதேவன்
இருந்தும் இல்லாதவரே- எல்லாம்
இருந்தும் இல்லாதவரே-அவர்கள்
இருப்பது உண்மையில் பெருந்தவறே-உலகில் (இருந்)
செல்வம் இருந்தென்ன? சிறப்புகள் இருந்தென்ன?
கள்ளமில்லா உள்ளம் இல்லாதவர் எல்லாம் (இருந்)
மணக்கும் ஜாதி மல்லி மலரைத் தள்ளி-கண்ணைப்
பறிக்கும் காகிதப்பூ வாங்குவோர்-வெளி
அழகில் ஆசை கொண்டு ஏங்குவோர்
மலர் விட்டு மலர் தாவி மது வுண்ணும் வண்டாகி
மனநிலை தடுமாறி வாழ்ந்திடுவோர் எல்லாம் (இருந்)

கொங்கு நாட்டு தங்கம்-1961

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
சமாதானமே தேவை ...
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
அமைதியாக நாம் வாழ்ந்திடவே
அன்பும் அறமும் வளர்ந்திடவே
சமரசப் பாதை தோன்றிடவே
சாந்தியும் இன்பமும் சூழ்ந்திடவே
(சமாதான)


போட்டிப் பொறாமைகள் இல்லாத-ஒரு
புதிய சமுதாயம் உருவாக-புத்தர்
காட்டிய வழியில் நாம் போக-அவர்
கண்ட கனவுகள் நனவாக
(சமாதான)


கட்சி பேதங்கள் எதற்காக?-பல
கலகமும் பகையும் எதற்காக?
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்!
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்!
(சமாதான)

மருத நாட்டு வீரன்-1961

இசை : S. V. வெங்கட்ராமன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்
பாட்டு
வணக்கம் வணக்கம் ஐயா, அம்மா உங்க அபயம்!
அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்தச் சமயம்!
(வண)
வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு!
வாட்டுகின்ற பசிப்பிணி துயரிருக்கு!
வாழுவது உங்க கையில் தானிருக்கு!
(வண)
பற்றிப் படர வந்த பசுங்கொடியைப்
பந்தலே தள்ளுவதும் சரியா?
பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைகளைப்
பெரிதாய்க் கொள்ளுவதும் முறையா?
(வண)
(கெஜல்)
அண்ட நிழல் தேடிவரும் நொண்டிகளை ஆலமரம்
அடித்தே விரட்டுவதும் உண்டோ?
வந்தவரை வாழ வைக்கும் வசதி படைத்தவங்க
தண்டனைகள் தருவதும் நன்றோ?
பாட்டு
கண்ணிருக்கு உங்களுக்குக் கருத்திருக்கு!
கையேந்தும் எங்கநிலை தெரிஞ்சிருக்கு!
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு!
(வண)

மாடப்புறா-1962

இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா
எங்குமே சுத்துவோம் இஷ்டம் போலே!
எங்களில் கட்சியால் சண்டை இல்லே!
ஏய்ப்பவரில்லே-ஏழையுமில்லே-ஏனென்றால் பணமில்லே!
(எங்)


தங்கவோ ஓரிடம் சொந்தமும் இல்லே !
சட்டமும் திட்டமும் எங்க கூட்டத்துக்கில்லே!
ஜாதியுமில்லே! பேதமுமில்லே! ஏனென்றால் படிப்பில்லே!
(எங்)


கூப்பனோ ரேஷனோ வாங்குவதில்லே!
காப்பியும் டிபனும் நாங்க கண்டதுமில்லே!
காய்ச்சலுமில்லே! டாக்டருமில்லே!
ஏனென்றால் அது இல்லே! எங்களுக்கு அது இல்லே!
(எங்)


ஏட்டிலே எங்க பேர் காட்டவுமில்லே!
ஓட்டுகள் போடவும் இன்னும் உரிமையு மில்லே!
கேட்டதுமில்லே! தந்ததுமில்லே!
ஏனென்றால் பலனில்லே!
(எங்)

ஜமீன்தார்-1952

இசை : G. ராமநாதன்
பாடியவர் : ஜிக்கி
கெஜல்
அறிவிருந்தும் ஆராய்ந்து பாராமலே!
அன்பிருந்தும் அதன் குரலைக் கேளாமலே!
அணைகடந்த காட்டாற்று வெள்ளம் போலே!- மனதிலே!
ஆவேசம் கொண்டதாலே!


பாட்டு
கோபம் உண்டானதே! ஒன்றாய்க் கலந்தே
குலாவிய குடும்பம் ரெண்டானதே!-முன்
(கோபம்)


கெஜல்
தன்னலம் கண்களை மறைத்ததாலே
தன் தவறைத் தான் உணரா நிலையினாலே!
தனக்கு ஒருநீதி! பிறர்க்கு ஒருநீதி என்று
தர்மநெறி முறைதவறி நினைத்ததாலே!


பாட்டு
அமுதையும் நஞ்சாக வெறுத்திடுதே!
அன்பெனும் வலையை அறுத்திடுதே!
அமைதி இல்லாமல் அலைந்திடுதே!
இவையாவும் முருகா உன் லீலையா?
(கோபம்)

வாழவைத்த தெய்வம்-1959

இசை : K. V. மகாதேவன்
சுயநலம் பெரிதா?
பொது நலம் பெரிதா?-இந்த
சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறித் தவிக்கும் மனிதா-இந்த
சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா!
(சுயநலம்)


துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா?
அன்பு இல்லாத
இதயம் இதயமா?
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா-இந்த
சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா
(சுயநலம்)
நாம் தேடாமலே வந்த
செல்வம் என்றால்
அதைத் தெரு மீது
வீணே எறிவதா?
தென்றல் புயலாவதா?-உள்ளம்
தீயாவதா? இந்த
சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா
(சுயநலம்)

யார் பையன்-1957

இசை : S, தட்சிணாமூர்த்தி
ஜரிகைப் பட்டு சலசலக்க
சாந்துப் பொட்டு பளபளக்க
புருஷன் மனசு கிறுகிறுக்க
புதுக் குடித்தனம் நடத்தப் போற
கல்யாணப் பொண்ணே!
கல்யாணப் பொண்ணே!
கவனம் வையடி!


வரவுக் கேத்த செலவு பண்ணும்
வழி மொறையைத் தெரிஞ்சுக்கோ!
மாமன் மாமி நாத்தி மனம்
கோணாமலே நடந்துக்க
புருஷன் குணம் போற போக்கு
நடத்தைகளைப் புரிஞ்சுக்க!
புத்தியோடு நடந்து நல்ல
பேரும் புகழும் தேடிக்க!
(கல்)
அரச்சு மஞ்சளைக் கொழச்சு முகத்தின்
அழகு வளரப் பூசிக்க!
சிரிச்ச முகம் சீதேவியா
இனிக்க இனிக்கப் பேசிக்க!
அசட்டையாக இல்லாமலே
அலுவல்களைப் பார்த்துக்க!
அடக்க ஒடுக்கம் அன்பையும் உன்
அருந் துணையா சேத்துக்க!
(கல் )
கண்ணகி போல் பேரெடுக்க
கற்பு நெறியைக் காத்துக்க! ஆனா
கணவன் வேறு மாதவியைத்
தேடிக்காமெ பாத்துக்க!
பொண்ணு புள்ள ரெண்டு ஒண்ணை
சிக்கனமாப் பெத்துக்க!
புட்டிப் பாலு தய வில்லாமெ
கச்சிதமா வளர்த்துக்க!
(கல்)

சமயசஞ்சீவி - 1957

இசை : G. ராமநாதன்
வெள்ளிப் பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகுதூரம்-இது
உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும்
ஒரு பாடம்!
(வெள்ளி)


பிள்ளை யெனும் பந்த பாசத்தைத் தள்ளிப்
பிரிந்தோடும்-தன்
உள்ளத்தை இரும்புப் பெட்டகமாக்கித்
தாள் போடும்!
இல்லாதவர் எவரான போதிலும்
எள்ளி நகையாடும்-இணை
இல்லாத அன்னை அன்புக்குக் கூட
சொல்லாமல் தடை போடும்
(வெள்ளி)


வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல்
செல்வம் வரும் போகும்-இதை
எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்குத்
துன்பம் வரவாகும்!
கள்ள மில்லாத அன்புச் செல்வமே
என்றும் நிலையாகும்!
கஷ்டம் தீரும் கவலைகள் மாறும்
இன்பம் உருவாகும்!
(வெள்ளி)

சபாஷ் மாப்பிளே - 1961

இசை : K. V. மகாதேவன்
நான் சொல்லும் ரகசியம்
கண் காணும் அதிசயம்
நன்றாக எண்ணிப் பாருங்க
இதை அவசியம்-அவசியம்-அவசியம்
(நான்)


உணவுக்கு ஒரு கும்பல்
போராடும் வேளையில்
பதவிக்கு ஒரு கும்பல்
போராட்டம் நடத்துது!
ஒய்வில்லா வேலையால்
உசுரை விடும் ஏழையின்
உழைப்பாலே ஒரு கும்பல்
உல்லாசம் தேடுது!
(நான்)


கல்யாணம் செய்யவே
சிங்காரப் பந்தலும்
கச்சேரி சதுராட்டம்
ஊர்வலமும் வேணுமா?-இவை
இல்லாமல் எவரேனும்
கல்யாணம் பண்ணினால்
இன்பசுகம் பிள்ளை குட்டி
இல்லாமல் போகுமா!
(நான்)
தங்க நகை வைர நகை
சரஞ்சரமாய்த் தொங்கினால்
மங்காத அழகு வரும்
என்று எண்ணும் பெண்களே!
பங்கம் வரும் திருடர்களும்
பார்த்து விட்டால் இவைகளைப்
பறித்திடுவார் அப்பொழுது
கலங்காதோ கண்களே!

நான் சொல்லும் ரகசியம்-1959

இசை : G. ராமநாதன்
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்
பார்க்காத புதுமைகளெல்லாம்
கண்ணாரப் பாரடி பொம்மி!
கேட்காத சங்கதி யெல்லாம்
காதாரக் கேளடி பொம்மி!


ஆம்பளெ வந்து ஆடிப்பாடினா
அவனுக்கு பைசா கெடைக்காது!
அழகுப் பொம்பளெ ஆடிப்பாடினா
அதுக்குக் கெடைக்குது பணம் காசு!
அரும்பு மீசையில் கையைப் போடுது
அங்கே பாரு! ஒரு கேசு!
குறும்பாப் பாத்துப் பல்லை இளிக்குது
கூறு கெட்ட ஒரு முண்டாசு!
(பார்க்காத)


தெருவுக்குத் தெருவு சந்திக்கு சந்தி
டிங்கி அடிக்கிற ஒரு கூட்டம்!
இருக்கிற இருப்பெ பொழப்பையும் மறந்து
இங்கு செய்யுமாம் ஆர்ப்பாட்டம்
வரவுக்கு மிஞ்சி செலவுகள் பண்ணி
மஜா தேடுற ஒரு கூட்டம்
இரவு ராணிகள் வலையில் விழுந்து
ஏங்கி நிக்குமாம் குரங்காட்டம்!
(பார்க்காத)
பரபரப்பாக இருக்கிற சமயம்
பாக்கட் அடிப்பான் கில்லாடி!
இருக்கிற காசைப் பறி கொடுத்தவனோ
ஏங்கித் தவிப்பான் தள்ளாடி!
சுறு சுறுப்பாக இருக்கற இடத்தில்
தூங்கியே வழிவான் சோம்பேறி!
சொன்னதை எல்லாம் மனசுலேவச்சு
நடந்துக்க வேணும் அம்மாடி!
(பார்க்காத)

நான் சொல்லும் ரகசியம்-1959

இசை : G. ராமநாதன்
பாடியவர் : P. சுசிலா
சாமி சாமி என்று ஊரை ஏய்க்கின்ற-ஆ
சாமி ரொம்ப இந்த நாட்டிலே!-ஒரு
சாண் வயித்துக்காக ஆண்டவன் பேரையும்
சந்திக்கிழுக்கிறாங்க பாட்டிலே-ஏ சாமியோ!-நடு
சந்திக்கிழுக்கிறாங்க பாட்டிலே!
(சாமி)


தாடிசடைமுடி தண்டு கமண்டலம்
கொண்டவனெல்லோரும் சாமி!-நல்லாப்
பாடுபட விரும்பாத திருவோட்டுப்
பரதேசிப் பயல்களும் சாமி!
கூடுபொய் வீடுபொய் குடும்பம் பொய் எனப்பாடும்
கேடுகெட்டவன் ஒரு சாமி!
தன்குட்டு மறைய வேடம் கட்டிக் கடவுள் பெயர்
குரைக்கும் நாயும் ஒரு சாமி!-இப்படி
(சாமி)


கட்டின பெண்டாட்டிதனை விட்டுவிட்டு ஓடிவந்த
கையாலாகாதவனும் சாமி!
கடனைவாங்கித் திருப்பித்தரமுடியாத காரணத்தால்
காஷாயம் உடுத்தவனும் சாமி!
சுட்ட திருநீறு பூசித் துந்தனாவை மீட்டி வரும்
துடுக்கனும் கூட ஒரு சாமி!
விட்டெறிந்த எச்சிலையை வீதியில் பொறுக்கித்தின்னும்
கிறுக்கனும் கூட ஒரு சாமி! இப்படி
(சாமி)
ஆருக்குந் தெரியாமல் பஞ்சமா பாதகம்
அஞ்சாமல் தினம் செய்து
ஊருக்கு நீதியை உபதேசம் செய்யும் -
உலுத்தப் பயலும் ஒரு சாமி!
ஆருக்கும் குடியல்லோம் அஞ்சோம் நமனை என்று
ஆர்ப்பாட்டம் செய்து
நேருக்குநேர் வெறும் நிழலைக் கண்டு நடுங்கும்
நீசப் பயலும் ஒரு சாமி!


கஞ்சாக் குடிப்பவனும் சாமி!-கடவுளைக்
கண்டதாய்க் கதைப்பவனும் சாமி!
காமியெல்லாங் கூட இங்கே சாமி!-பணம்சேர்க்கக்
கயிறு திரிப்பவனும் சாமி!
எத்தனெல்லாம் சித்தன்!
ஏமாறுபவன் பக்தன்!
ரோஹியெல்லாம் யோகி!
பைராகி பெரும் தியாகி!

ராஜராஜன்-1957

இசை : K. V. மகாதேவன் -
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்
(தொகையறா)
பாடுபட்டுத் தேடிப் பணம் குவித்து
மாடிமனை நிலபுலன்கள் வாங்கி வைத்து
வாழ்வதனால் சுகபோகம் வந்திடுமோ?
மாறாத மன நிறைவு தந்திடுமோ?
(பாட்டு)
இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே!-பணம்
இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே!
இதையுணர்ந்து அதை அறிந்து
சுகிக்க வேணும் என்றுமே!
(இருப்பவர்கள்)
(தொகையறா) .
தேவைக்கு மேல் பொருளைச் சேர்த்து வைத்துக் காப்பவரே!
ஆவிபோனபின் அதனால் என்ன பலன் சொல்வீரே!
(பாட்டு)
காலனும் வரும் முன்னே கண்ணிரண்டும் மூடுமுன்னே
வாலிபம் வாழ்வில் தோன்றி வான வில்லாய் மறையு முன்னே
வண்டாக ஆடிப்பாடி உலகிலே
(இருப்பவர்கள்)
(தொகையறா)
என் அங்க நிறத்திற்குத் தங்கமும் ஈடாமோ?
பொங்கும் விழிப்பார்வைக்குப் புதுவைரம் இணையாமோ?
குங்கும இதழுக்குச் செம்பவழம் நிகராமோ?
கோடானுகோடி பொருள் ஒரு கொஞ்சு மொழி சுவைதருமோ?
(பாட்டு)
செங்கரும்புச் சாறெடுத்து தேனுடனே அதைச் சேர்த்து
சிங்கார ரசமளிப்போம் தேடியாரும் வரும் போது!
திகட்டாத இனிமை தந்து வாழ்விலே!
(இருப்பவர்கள்)

நாலு வேலி நிலம்-1959

இசை : K.V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
புதிய வாழ்வு பெறுவோம்!-மதியினால்
விதியை வெல்ல முயல்வோம்!
கெதியை நொந்திடாமல்-காலக்
கெதியை நொந்திடாமல்
கடமையைச் செய்வோம்!
(புதிய)
உழவைப் போற்றி வளர்ப்போம்!-சகல
உயிர்க்கும் உணவு அளிப்போம்!
பஞ்சப் பிணியைத் தொலைப்போம்!-சமதர்மப்
பாதை தன்னை வகுப்போம்!
(புதிய)
எழுத்தறிவில்லார் என்பவரே-இங்கே
எவருமில்லாமல் செய்திடுவோம்!
பகுத்தறிவாளர் பாசறையாய்ப்
பாரில் நம் நாட்டை ஆக்கிடுவோம்!
(புதிய)
இந்த நாட்டின் எதிர்காலம்
இளைஞர்கள் கையில் இருப்பதாலே-அவர்களை
வளர்க்கும் மாதர் அறிவே வளர்ந்திடும்
மார்க்கம் காணச் செய்வோம்!
(புதிய)

அமரகவி-1952

இசை : G. ராமநாதன்
பாடியவர்: M.K. தியாகராஜபாகவதர்
கண்ணைப் போல தன்னைக் காக்கும்
அன்னை தந்தையே-உணர்ந்து
சொன்ன சொல்லைப் போற்ற வேணும்:
தூய சிந்தையே-இதுவே அறிவுடமை!
ஒரு கன்னியின் கடமை! -
முன்னும் பின்னும் எண்ணிப் பார்த்து
நடந்திட வேண்டும்!
கண்ணை, காதை வாயை அடக்கும்
தன்மையும் வேண்டும்!
பொன்னில், பொருளில் ஆசையின்றி
இருந்திட வேண்டும்!
போது மென்ற மனதுடனே!
மகிழ்ந்திட வேண்டும்
இதுவே அறிவுடமை!
ஒரு கன்னியின் கடமை!
அடங்கி ஒடுங்கி அன்பு காட்டும்
பண்பில்லாது-பூணும்
அணி மணியால் வந்து சேரும்
அழகு நில்லாது!
தொடர்ந்து துன்பம் வந்த போது
துணிவுயில்லாது-தங்கள்
குடும்பப் பெயரைக் குலைக்கும் முறையில்
நடக்கக் கூடாது!
இதுவே அறிவுடமை!
ஒரு கன்னியின் கடமை!


புன்னகையைப் பொன்னகையாய்ப்
போற்றிட வேண்டும்-நல்ல
புத்தி சாலி என்னும் பெயரை
ஏற்றிட வேண்டும்
கண்ணகி போல் கற்பு நெறி
காத்திட வேண்டும்!
பணக்காரப் பெண்கள் கூட்டுறவை
விலக்கிட வேண்டும்!
இதுவே அறிவுடமை
ஒரு கன்னியின் கடமை


நான் சொல்லும் ரகசியம்-1959

இசை: G. ராமநாதன்
வாழ்க நமது நாடு!
வளரும் அன்பினோடு!
சூழ்க என்றும் நல்லறங்கள்
என்று சொல்லிப் பாடு!
வானம் பெய்து நாட்டிலே
வளம் நிறைந்து வீட்டிலே
மாசில்லாத இன்பம் பொங்கி
மக்கள் வாழ்க்கை ஏட்டிலே
தேர்ந்த கல்வி ஞானம்
செல்வம் சேர வேணும்!
தேசமெங்கும் தேனும் பாலும்
பெருகி ஓட வேணும்
(வாழ்க)


சண்டையின்றி யாவரும்
ஒன்று பட்டு வாழுவோம்!
அண்டை நாட்டு மக்கள் தம்மை
அன்பினாலே வெல்லுவோம்!
நெஞ்சில் நேர்மை ஈரம்
அஞ்சிடாத வீரம்!
சொந்தங் கொண்டு வள்ளலாக
வாழவேணும் யாரும்!
(வாழ்க)
நீதியுள்ள ஆட்சியே
நிலவுகின்ற மாட்சியே
யாருங்காண நமது நாடு
ஆக வேணும் சாட்சியே!
ஏழை என்ற சொல்லே
இந்த நாட்டில் இல்லை
என்று யாரும் சொல்ல நாமும்
செய்ய வேணும் சேவையே!
(வாழ்க)

சாரங்கதரா-1958

இசை: G. ராமநாதன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
(தொகையறா)
விளக்கினைப் பழம் என்று கருதியே ஏமாந்து
விட்டிலும் விழுவதேனோ? ஆண்களின்
வெளி வேஷப் பேச்சிலே மயங்கியே பெண்கள்
எனைப் போல் நலிவதேனோ?
(பாட்டு)
சிந்திக்கும் தன்மையற்றதாலா? அல்லது முன்
ஜென்மத்தில் செய்த வினையாலா? இன்பம் தனை
துன்பம் தொடரும் என்பதாலா? உலகமே
சூதின் வடிவம் என்பதாலா
(சிந்)
(தொகையறா)
சதி செய்யும் சுய நலக் கும்பலாய் ஆண்களும்
தரணியிலிருப்ப தேனோ?
தங்கள் மனம் போலவே தாய்க்குலம் தன்னையே
வீணாக வதைப்ப தேனோ?
(பாட்டு)
நம்பிடும் பெண்கள் உள்ளதாலா?-உலகிலே
நயவஞ்சகம் மலிந்ததாலா?
தெம்பில்லாப் பேதை என்பதாலா?-சிலரிங்கே
தெய்வமே இல்லை என்பதாலா?
(சிந்)

சமய சஞ்சீவி-1957

இசை: G. ராமநாதன்
அழகான பொண்னு நான்!
அதுக் கேத்த கண்ணுதான்
எங்கிட்ட இருப்ப தெல்லாம்
தன்மானம் ஒண்ணு தான்!
(அழகான)
ஈடில்லா காட்டு ரோஜா
இதெ நீங்க பாருங்க!
எவரேனும் பறிக்க வந்தா
குணமே தான் மாறுங்க!
முள்ளே தான் குத்துங்க!
ஓ.......அங்கொண்ணு சிரிக்கிது!
ஆந்தை போல் முழிக்கிது!
ஆட்டத்தை ரசிக்க வில்லை!
ஆளைத்தான் ரசிக்குது!
(அழகான)
இங்கொண்ணு என்னைப் பாத்து
கண் ஜாடை பண்ணுது!
ஏமாளிப் பொண்ணுயின்னு
ஏதேதோ எண்ணுது!
ஏதேதோ எண்ணுது!
ஓ ... பெண்சாதியெத் தவிக்க விட்டு
பேயாட்டம் ஆடுது!
பித்தாகி என்னச் சுத்திக்
கைத் தாளம் போடுது!...
(அழகான)

அலிபாபாவும் 40 திருடர்களும்-1955

இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. பானுமதி