உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகாயமும் பூமியுமாய்/ஆகாயமும் பூமியுமாய்…

விக்கிமூலம் இலிருந்து

ஆகாயமும்
பூமியுமாய்…

அழகும், ஆபத்தும் அருகருகே இருக்கும் என்பதை அறிவுறுத்துவது போல், அந்தச் சாலையின் ஒரு பக்கம் புதர்களும், பொந்துகளுமாய் மண்டிக் கிடக்க, இன்னொரு பக்கம் மாடிக் கட்டிடங்கள் கூடிப் பேசுவது போல் நெருக்கமாய் நின்றன. அழகுதான் ஆபத்து என்பது போல் எத்தனையோ உயிர்களை விபத்துக்களால் விழுங்கிய அந்தச்சாலை, விசாலத்தோடும், கண்ணைப் பறிக்கும் கறுப்பு நிற வண்ணத்தோடும், மத்தியில் கூம்பு வடிவத்திலான மஞ்சள் வெள்ளை கோடுகள் போட்ட சிமெண்ட் பாளங்களோடும் நிலவொளியில் மின்னியது. இரவு கன்னிமை கழிந்து, பகலென்னும் சேயைப் பிரசவிக்கக் கூவுவதைக் காட்டுவது போல், புதர் பகுதியில் ஆந்தைகள் அலறின.

எதிர்ப்புறத்தில் அமைந்த சிங்காரப் பகுதியில் இதையே எடுத்துக்காட்டுவது போல, இரவுக் காவலர் ஒருவர் பூண்போட்ட கைக்கம்பால் தரையைத் தட்டியபடி விசிலால் ஊதிக் கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த விளக்கு அலறுகிற ஆந்தையின் கண்ணைப் போல மின்னியது. ஒரு பகுதியில் நிலவொளியைப் புதர்கள் விழுங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு பகுதியில் கார்ப்பரேஷன் வெளிச்சத்தை 'கரப்ஷன் விழுங்கிக் .ெ கா ண் டி ரு ந் த து ஒ ன் றி ல் க ள் ள ச் சாரா ய ம் காய்ச்சியதற்கான தடயங்கள். இன்னொன்றில் தெரு முனையில் வீசியெறியப்பட்ட விஸ்கி வகையறா பாட்டில்கள்.

சிங்காரப் பகுதியிலிருந்து உடலாலும், கூனிக்குறுகிய உருவம் ஒன்று முக்காடு போட்டபடி, சாலையைப் பார்த்து நகர்ந்து கொண்டிருந்தது. நான்கடிக்கு ஒரு தடவை நின்று நின்று, திரும்பிப் பார்த்தபடி, விருப்பத்திற்கு விரோதமாக, ஏதோ ஒரு அசுர சக்தியால் தள்ளப்பட்டது போல் நடந்து கொண்டிருந்தது. தொலைவில் கேட்ட விசில் சத்தம், தனக்காக இருக்குமோ என்று சந்தேகப்பட்டது போல், மரங்களுக்கு மறைவில் நின்று கொண்டது. கையில் ஒரு பை. மெய்யில் பை போன்ற பழுப்படைந்த ஆடை விளக்கு எரிந்தாலும், எரியாவிட்டாலும் தன் கண்களுக்கு அது ஒன்றுதான் என்பதுபோல், பல்பு போன கம்பத்திற்கு அருகே வரும்போதும் சரி. அந்த உருவம் தட்டுத் தடுமாறியபடியே திட்டில் ஏறுவது போல் காலை உயரமாய்த் தூக்கி வைத்தபடியே நகர்ந்து கொண்டிருக்க-

எதிர்ப்புறத்துப் புதர் பகுதியிலிருந்து காலில்தான், கண்ணிருப்பது போல் தலை முடியை முக்காடு போல் சுருட்டி வைத்துக் கொண்டு இன்னொரு உருவம் நடந்து கொண்டிருந்தது. கருவேல மரக்கிளைகளை விலக்கியபடி, பொத்துகளுக்குள் சிக்கிய கால்களை லாவகமாக எடுத்தபடி, கூக்குரலிட்ட ஆந்தைகளை சட்டை செய்யாதபடி, கண்ணுக்கு நேராய்ப் பாய்ந்த வெளவால்களைத் தலையை ஆட்டியே துரத்தியபடி, தலைவிரி கோலமாய்த் தான் நடந்தது.

இரண்டு உருவங்களும் சாலையின் இரு புறத்திலும் நின்றபோது, ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு, சற்று பின்வாங்கப் போயின. புதர் பகுதியில் இருந்து தோன்றிய உருவம், எதிர்ப்புறத்து உருவத்தை அதட்டப் போனது. பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை, அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பின் சிமெண்ட் பெஞ்சின் முனையில் உட்கார்ந்து கொண்டது. எதிர்த்திசை உருவம், சிறிது தயங்கியது. சிறிது பின் வாங்கி, பின்னர் மெள்ள மெள்ள முன் வாங்கியது. சாலையின் நடுப்பகுதிக்கு வந்து, கொட்டும் பனியில் எந்தப்பக்கம் போகலாம் என்பதுபோல், அங்குமிங்குமாய்ப் பார்த்தது. நட்டநடு இரவில் கொட்டும் பனியில் அதுவும் அந்த பஸ் ஸ்டாப் பின் பக்கமாக வந்து, சிமெண்ட் பெஞ்சின் இன்னொரு முனையில் உட்கார்ந்து கொண்டது. அதட்டப் போன புதர் உருவம், அப்படித் செய்யத் தனக்கு அதிகாரமில்லை என்று நினைத்தபடி மெள்ள வினவியது.

"யாரது?"

பதிலில்லை.

"அட... யாருன்னேன். அட ஒன்னத்தான். பதில் சொன்னா. குறைஞ்சா. பூடுவே. நீ யாரு...?"

கேட்கப்பட்ட உருவம், கேட்ட உருவத்தை ஏறிட்டுப் பார்த்தது. சிறிது ஆறுதல் பட்டது. பின்னர் லேசான குரலில் கனத்த வார்த்தைகள் வைத்தது.

"இதே கேள்வியைத் தான். நானும் இத்தனை நாளாய் நேக்கு நானே கேட்டுண்டு வந்தேன். அப்போ ஆத்துக்காரர். ஜடமுன்னார். மாமியார் அசடுன்னனார். அப்புறம், பிறந்தாத்துல... நாத்தனார் வாழா வெட்டின்னாள். அண்ணா சனியன்னான். அவனோட பசங்க கூனி அத்தேன்னான். இவாள். அத்தனை பேரும் நான் கேட்காமலே என்னையார்னு சொன்னாள். இவாள் சொன்னதுல, நான் எதுல சேத்தின்னு நேக்குப் புரியல்லே ஒரு வேளை அத்தனையிலும், சேத்தியாய் இருக்கலாம். நான் யாருன்னு நேக்கே தெரியல. அதனாலதான் பகவான்கிட்டே கேக்கலாமுன்னு நம்பி அந்த வீட்டை விட்டுப் புறப்பட்டுட்டேன்.”

புதர் உருவம் சிறிது நேரம் பேச்சற்று, பேசிய உருவத்தைப் பார்த்தது. பிறகு, மெல்ல மெல்ல, எதிர்முனைக்கு நகர்ந்து அந்த உருவத்திற்கு அருகே போய் உட்கார்ந்து கொண்டே பேசியது.

"இது இன்னாடா பேஜாரு. இந்த எல்லம்மாதான் படாத பாடு படறதா நெனச்சேன். என் கதைதான் ஒன் கதையா. ஐயரம்மாவுக்குக் கூட இந்த நெலமயா? நான் என்னோட ஜாதி லதான் வயசான வங்கள... முண்ட மூதேவின்னு திட்டித் துரத்துவாங்கோன்னு நெனச்சேன். கட்சில..... ஒன் இதுலகூட. அட மாரி. அடுத்த ஜென்மத்துல பிறந்தா ஒன் குடில பொறக்கணும். அப்போ தான் வயசான காலத்துல நல்லா கீலா முன்னு நெனச்சேனே."

'லோகத்துல எப்படியோ... நம்மோட தேசத்துல. வயசாணவாள், தம்பிடிக்குப் பிரயோசனம் இல்லேன்ன தெரிஞ்சுண்டா அவாள தள்ளி வைக்கிறதுல ஜாதி வித்தியாசம் கிடையாது. நீ, பிராமண குடில ஜென்மம் எடுக்கணும்னு நினைச்சது மாதிரி, நேக்கும் ஒரு ஆசை.. அடுத்த ஜென்மத்துல சேரில பிறக்கணுமுன்னு நெனச்சேன். உதைச்சாலும், சேரில அவமானப்படுத்தணும்னு நோக்கம் இருக்காது. உதைப்பான். ஆனா ராத்திரியில 'அம்மா சாப்புடுமான்னு கெஞ்சுவான். ஆனா என்னோட இதுலே ஒரு தடவ அசடுன்னு பட்டம் வாங்கிட்டா. அப்புறம் அந்தப் பேர் வாங்கினவாளுக்கு எவ்வளவு ஆயுள் கெட்டியோ. அந்த அளவு அந்தப் பட்டமும் கெட்டியாய் நிக்கும்."

"நீ வேற. மகாமாயிகிட்டே சேத்துக்கோன்னு கேளு. இல்லன்னா. இனிமேல் கஷ்டப்படாம பொறக்கணும்னு கேளு. ஆனால் சேரில. பொறக்கணும்னு மட்டும் கேட்காத கேட்கப்படாது."

"இப்பக் கூடத் தெளிவா சொல்றேன். ஒன் உடம்பில் நானும், என் உடம்புல நீயும் பாயணுமுன்னு பகவான் இப்போது சொன்ன கூட சரி, நேக்கு சந்தோஷமாய் இருக்கும்".

"ஆமாம். தெரியாமத்தான் கேக்கேன்? எத்தனை பிராமணத்திங்க என்னை மாதிரி வேண்டாம். ஒன்ன மாதிரி இப்டி தெருவுல நிக்கறாங்க? இந்த எல்லாம்மாவுக்குப் பதில் சொல்லு பாக்கலாம்."

"இங்கே தான். தப்பு செய்யுறே. எல்லம்மா. பிராமண ஜாதி பொண்ணுங்க தெருவுக்கு வராம இருப்பது ஒரு துக்கமான விஷயம். ஒங்கள்ல வயசான கிழம் கூட எல்லாத்தையும் உதறிப் போட்டுட்டு, எப்படியோ பிழைப்பு பண்ண முடியும். ஆனால் எங்க இதுல என்னை மாதிரி வயசான பெரியவாளும், வயசுலேயே ஆம்படையானப் பறிகொடுத்துடுற விதவைங்களும் வாழாவெட்டி பொண்ணுங்களும், வீட்டுக்குள்ள கிட்டத்தட்ட சிறை வாசம் தான் செய்யனும். லோகத்துல அவாளுக்கு ஒரு வேலையும் தெரியாது. அதனாலே வெளியேற பயம். அதனால் எத்தனையோ ஆத்துல. இவாளுக்கெல்லாம் சாட்சாத் சிறைவாசந்தான். இவங்களோட நிலைமைக்கும், ஜெயில் வாசத்துக்கும் வித்தியாசம் இருக்குறதா நேக்கு தோணல. ஜெயிலுலயாவது நூறு பேரோட பழகலாம். விதவிதமான குற்றவாளிகளை மாறி மாறிப் பார்க்கலாம். ஆனா இவங்களோட சிறைவாசம் ஒரு சின்ன ரூம் அவாள் பாக்கறதும் ஆயுள் முழுவதும் ஒரே விதமான குற்றவாளிங்கதான். நான் ஒனக்கும் சேர்த்தியா பேசறேன். அடுத்த ஜென்மம் வேண்டாமுன்னு பகவான்கிட்டே கேளு. அப்படியே ஜென்மம் வந்தாலும் என்னோட வம்சத்துல வேண்டாமுன்னு கேளு”

"நீ சொல்றதும் எனக்கு ஒருவகையில. சரிதான் போலத் தெரியுது. ஒங்க இதுல சிறைவாசமுன்னா-எங்க இதுல இந்த மாதிரி பொம்மனாட்டிங்க நெலமை... வேற மாதிரின்னாலும், விஷயம் ஒண்ணுதான். அதாவது கல். மண்ணை உடைக்கிற கடுங்காவல் தண்டனை. அப்புறம் அந்தத் தண்டனையில் இருந்து தப்பிக்கறதுக்காக... கண்கணாத இடத்துக்கும் போற நிலைமை. ஜெயிலுல இருந்து தப்பறவன். போலீஸ்காரங்க கிட்ட மாட்டிக்காம இருக்கறதுக்காக. எப்படி அலைவானோ, அப்படிப்பட்ட நெலமை. அவங்க குற்றம் செய்துட்டு, அப்படி அலையுற நெலமை. இவங்க பிறத்தியார் குற்றத்தால விளையுற நெலமை. சரியா சொன்னே... நீ ஜெயிலுல இருந்து தப்பிச்சுக் கடுங்காவல் தண்டனை கிடைக்குமான்னு பாக்கே. நானு கடுங்காவல் தண்டணையில இருந்து தப்பிச்சு. ஜெயிலு கிடைக்குமான்னு பாக்கேன்."

'என்ன பண்ண முடியும்? நம்மோட உடம்ப மாத்திக்கலாம். ஆனால் உழப்பை மாத்திக்க முடியாதே. அவாள் ஒன்ன அங்கே சேக்க மாட்டா. இவாள் என்னை இங்க. சேக்க மாட்டா. நேக்கு கடுங்காவல் தண்டனையில ஆச இருந்தும் அனுபவமில்ல. எப்படியோ போட்டும். ஒன்னோட இது. திறந்த வெளி ஜெயிலு. என்னோட இது திறக்காத ஜெயிலு. மொத்தத்துல ஜெயிலு ஜெயிலுதான். சரி ஒன்னோட ராமாயணத்தைச் சொல்லு. நான் அப்புறம் என்னோட பாரதத்தை ஒப்புக்கிறேன்."

தோலுரித்த கருணைக் கிழங்கு போல் தோன்றி தன் வயது மூதாட்டியின் முகத்தையே எல்லம்மா பார்த்தாள். மேலும் சிறிது நெருக்கியடித்து அவள் பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். சிறிது யோசித்தாள். பிறகு மடமடவென்று புலம்பினாள்.

"நல்ல வேளையா. கேட்டே. சாகுறதுக்கு முன்னாடி யாரண்டாயாவது சொல்லிட்டுச் சாகணும்னு நெனச்சேன். மாரிமகமாயி. வாழத் துவங்குறப்போ இருந்த ஆசையை. முடிக்காட்டியும். இப்போ சாகத்துவங்கறப்போ தோனுற ஆசையை முடிக்க ஒன் மூலம் வந்துட்டா”

எல்லம்மா தொடர்ந்தாள்.

'இருபது வயசுல கல்யாணம். மொதல்ல ஒரு பொண்ணு. பிள்ளையாண்டான் பொறக்கணுங்கற ஜோரில். "அதுவும்" நானுமா, பெத்ததுல, அடுத்தடுத்து மூணு பொம்மனாட்டிங்க... அஞ்சாவது பிள்ளை... பொண்ணுல, ரெண்ட, மகமாயி வாரிக்கிட்டா... மூணாவதா. ஒரு கஸ்மாலம். டெல்லிக்கோ... சிங்கப்பூருக்கோ சொல்லாம கொள்ளாம பூட்டான். கட்சி பொண்ணும். கட்சி பிள் ளயும் தங்குனப் போ... ஆம்புடையான் தங்கல. நாப்பது வயசில. துள்ளத் துள்ளத் துடிக்கச் செத்துட்டுது. நானு கூலிவேல பாத்து, பிள்ளைங்கள காப்பாத்துனேன். இப்போ மவனுக்கு பல்லாவரத்துல வாட்ச்மேன் வேல. இத்த வேலய நான் தான் வேலபாக்குற ஒரு வீட்டு ஐயா கிட்ட சொல்லி வாங்கிக் குடுத்தேன். பொண்ண காலுல கையிலே பூட்டி கல்லாணம் பண்ணுனேன். அப்புறம். இப்போதான் ராமாயணம் துவங்குது.”

எல்லம்மா பெருமூச்சு விட்டதில் அவள் பஸ் ஸ்டாப் சினேகிதியின் புடவை ஆடியது; வார்த்தைகளைப் பிரசவித்துக் கொண்டே இருந்தது

"ஆறு வீட்ல வேல பார்த்தேன். காலங்காத்தால. பாத்திரம் தேய்க்கணும். வீட்டக் கூட்டணும். மாசம் வீட்டுக்குப் பதினாலு ரூபா. சாப்பாடு செளரியம், எந்த வீட்லயாவது கெடச்சுது. இதனால மாசம் நூறு ரூபா குதிரிச்சுது. பிள்ளாண்டான். அதை எடுத்துக் குடிச்சான். அடடே. நம்மம பணமே மவனுக்கு எமனாவபடாதுன்னு ஒருநாள். அவனைத் திட்டம் பண்ணுனேன். அன்னிக்குப் பாத்து ஆம்புடையான் அனுப்புனான்னு கைய சொரிஞ்சிகினு மவள் வந்தாள். அவள் கையில நூறு ரூபா வச்சேன். பிள்ளாண்டான், "இன்னா மே, ஒனக்கு பொண்ணுதான் ஒஸ்தியா. நான் கேட்டால் திட்டுறே. அவள் கேட்டா கொட்டுறேன்னு" சொல்லிட்டு, "என் வீட்ல இருக்காதம்"ேமன்னு கயித்தப் பிடிச்சு வெளியே தள்ளினான். ஒன்னோட வாரேம்மான்னு மகளண்ட சொன்னேன். அவள் யோசிப்பது போல் தாடையை தூக்கினாள். சரி. கொண்டான் கொடுத்தாங்கிட்ட வாணா முன்னு..... வேற இடத்தில தனியா குடிசை போட்டேன். பத்து வருஷமா பணஞ்சேத்தேன். பிள்ளயாண்டானும் பொண்ணும் அவ்வப்போ வந்து. பணம் வாங்கிக்கினு போவாங்க. நல்லது கெட்டதுக்கு நானும் போவேன். பேத்திங்க.. காலுல, கொலுசு போட்டேன். பேரங்க. கையில மோதிரம் போட்டேன். ஆனால்.”

"ஆனா. ஒரு மாசமா உடம்புக்கு முடியல. அப்போ பாத்துக் கையில இருந்த முந்நூறு ரூபாய வண்டில போய் இஸ்திரி போடுற பாபு. "கடனா தா, அடுத்த வாரம் தரேன்னான். குடுத்தேன். ஒடிட்டான். உடம்பு சொல்றத கேட்கல்லே. கையில பணமில்ல. வேல பாக்குற வீட்டுக்காரங்க ஒடம்ப குணப்படுத்திட்டு வான்னு கூட சொல்லலே. ஏதோ எனக்கு சலுகை பண்றது மாதிரி "வேற ஆள நீயே சொல்லு. நாங்க அமர்த்திக்கிறோ'முன்னு சொன்னாங்க... எனக்கும் முடியல... பிள்ளவூட்டுக்குப் போனேன். கையில பணமில்லன்னு தெரிஞ்சுகிட்டான். அதென்னமோ நம்மோட கையில... பணம் இருக்கறதையும் இல்லாததையும்.... நம்ம சொல்லாமலே ஜனங்க தெரிஞ்சுக்கிறாங்க. சரி எதுல விட்டேன்?"

"மகன் வீட்டுக்குப் போனேன்னே.”

"போனேனா. அவனும் அவனு சம்சாரமுமாய் "ஒனக்கு யாரு ஒஸ்தியோ அங்க போன்னு கத்தினாங்க.." சொம்மா சொல்லப்படாது. பிள்ள அடிக்கவர்ல. அடிக்க வந்த சம்சாரத்த தடுக்கல. அவ்வளவுதான். சரின்னு 'ஒஸ்தி' வீட்டுக்கு வந்தேன். அதான் பொண்ணோட வீட்டுக்கு. 'ஆத்தா ஆத்தான்னு மகள் காலைப் பிடிச்சா. மருமகன் கையைப் பிடிச்சான். இப்படி பிடிச்சப்போ ரெண்டு பேருமா.. என்னோட இடுப்புல. காசுப்பை இல்லாததைப் பாத்துட்டாங்க போல. ரெண்டு நாளு பேசல. மூணாவது நாளு மூஞ்சு காட்டுனாங்க. அப்போ பாத்து உடம்புக்கு ரொம்ப முடியல. வெளில படுத்தேன். ஒஸ்தி பொண்ணு வந்து ஒண்க்கு தலையணை வேற கேக்காமே"ன்னு சொல்லிக்கினு அதை எடுத்தாள். நான் எழுந்தப்போ. மருமகன் பாயைச் சுருட்டினான். சுருட்டுனவன் கைய பாத்தேன். அதுல நான் போட்ட மோதிரம்! மகளோட மொகத்தப் பாத்தேன். என்னமாதிரியே மொகம்! இன்னா பண்றது? அப்டியே பொறப்பட்டேன். அவங்க வான்னும் கூப்புடல. போன்னும் பேசல. நானு பாட்டுக்கு நடந்தேன். இப்போ இங்க நிக்கறேன். இனுமே எங்க நிக்கப் போறேனோ. சரி. என் ராமாயணம் போதும். ஒன்னோட பாரதத்தைச் சொல்றியா?"

“ஒன்னோட கதை... ராமாயணம்தான். உத்ர காண்டத்துல. சீதே நின்னதுக்கும் நீ இப்போ நிக்கறதுக்கம் வித்யாசமில்ல. காரணம் வேறுதா இருந்தாலும், அவாள் செய்த காரியம் ஒண்ணுதான். ஒன் கஷ்டத்துல. என் கஷ்டம் பெரிசாத்தோணல. விட்டுத் தள்ளு."

"அப்டி சொல்லப்படாது. நம்மளால.... சந்தோஷத்தான். பங்கு பூட முடியாட்டியும்.... கஷ்டத்தையாவது பங்கு பூடலாம். அம்மா!"

"என் பெயர் விசாலம். சும்மா பெயர் சொல்லிக் கூப்பிடு."

"அது அப்பால. இப்போ ஒன்னோட கதையைப் பிட்டுப்பிட்டு வை" .

விசாலம் மாமி, பஸ் ஸ்டாண்ட் துணோடு துரும்பு போல ஒட்டிக்கொண்டாள். பாதிக் கண்ணை மூடிக்கொண்டாள். இடது காலைத் தூக்கி, பெஞ்சில் வைத்துக் கொண்டு அதன் மேல் மொவாயைச் சாய்த்துக் கொண்டே அரற்றினாள்.

“கழுத கூட, குட்டியாய் ஜனிக்கும் போது, அழகாய்த் தோணும். ஆனால் நான் அப்டில்ல. இப்போ எப்டி இருக்கேன்னோ... அப்டித்தான் அப்போவும் பாக்குறவளுக்கு பட்டேன். அதாவது இதே கூனு. இதே கும்புன மொகம். இதே ஓணான் உடம்பு. இன்னும் சொல்லப்போனால். இதவிட கோரம். ஏன்னா இப்போ முன் பல்லு ரெண்டு விழுந்துட்டு. அப்போ இது ரொம்ப நீண்டு கொஞ்சம் அகோரமாய்த் தோணிச்சுது. அப்படியும் எனக்கு பகவான் மாங்கல்ய பாக்கியம் கொடுக்கத்தான் கொடுத்தான். கிராமத்துல. தோப்பனார் சீர்வரிசையோட தான் என்னைக் குடுத்தார். ஆத்துக்காரர் நான் பிடிக்கலன்னார். எப்போ தெரியுமா? ரெண்டு பசங்க பிறந்த பிறகு! அப்போதான். அவருக்கும் ஒருத்தி கிடைச்சாள். பூஜையை முடிச்ச கையோடேயே எனக்கும் பூஜை கொடுப்பார். சகிச்சிக்கிட்டு இருந்தேன்.

ஆம்புடையான் கிட்டே அடிப்படுறதை அவமானமா நினைக்கல. ஆனா உடம்பால அவரோட அடிதடிய தாங்கிக்க முடியல. கிராமத்துல. தோப்பனார்கிட்ட வந்தேன். சின்ன வீடு. கூடப்பிறந்தவாள் ரெண்டு பேரு. அண்ணாவும் மன்னியும் சந்தோஷமாயிருக்கட்டு முன்னு. ஒரு கட்டை வண்டிக்குக் கீழேயே காலத்தக் கழிச்சேன். அப்புறம் தோப்பனார் காலமாகிவிட்டார். அம்மா... எப்போவோ சிவலோகம் சேர்ந்துட்டாள். மன்னி கரிச்சுக் கொட்டினாள், கரிச்சா வந்து, எல்லாம் கரியாச்சுன்னா. ஆம்புடையான்கிட்ட ஒழுங்கா குடித்தனம் பண்ணினால் தானே நோக்கு. கடுகு விலை தெரியும். இல்லன்னா இவ்வளவு தாளிப்பியா'ன்னு பொறிவாள். பயத்துல பல்லைக் கடிச்சேன். அவளுக்கு மடின்னா எனக்கு நிம்மதி. சமையல் அறைக்கு வரமாட்டாள் பாரு..."

"இதுக்குள்ள தம்பி பெரிசாயிட்டான். இங்கேதான் வேல. அவனுக்கு இங்கே வந்து சமையல் செஞ்சுப் போட்டேன். அப்புறமா கல்யாணம் நடந்தது. அவன் ஆத்துக்காரி. ரொம்ப ரொம்ப நல்லவள். என்னை நல்லா வச்சிருந்தாள். நிறையும் தெரியல. குறையும் தெரியல. வருஷம் ஆகிக்கிட்டுப் போனது கூட தெரியாம. வருஷம் நாள் எங்கிறதுல்லாம். நம்மோட செளகரியத்துக்காக வச்சிருக்கிறதுதானே. செளகரியம் இல்லாதவாளுக்கு அதெல்லாம் எதுக்கு? தம்பி செத்த வருஷம் தான் ஞாபகம் வருது. சரி கதைக்கு வரேன்."

விசாலம் மாமி கண்களை மூடியபடியே ஆடாது அசையாது கிடந்தாள். எல்லம்மா ஒரு உலுப்பு உலுக்கிய பிறகே கண் திறக்காமல் வாய் திறந்தாள்.

"தம்பி மகனுக்கு போன வருஷம் கல்யாணம் நடந்துது. அவன் ஆத்துக்காரி வெளில எல்லார்க்கும் நல்லவள். ஆனால் வீட்டுல அவளோட ஆட்டம் மகாமோசம் அவளுக்கு மாமியார் பிடிக்கல. அவளை நோகடிக்க என்னைத் திட்டுவாள். இரண்டு பேருக்கு தண்டச் சாப்பாடுன்னு குதிப்பாள். ஒங்களுக்கு புத்தி இருக்கான்னு என்னைக் கேட்டுக்கொண்டே, மாமியாரை ஒரக்கண்ணால் பார்ப்பாள். சரி. மாமியாரை அவள் நேரடியாய்த் திட்டாமல் இருக்கறதுக்கு. நாம இருக்கோம். நாமும் போயிட்டா. பாவம், தம்பி ஆத்துக்காரி தவிப்பான்னு பொறுத்துண்டேன். ஆனால், ஒருநாள், அந்தப் பொண்ணு 'இந்த வீட்ல ரெண்டு பேருக்குச் தண்டச்சோறு போட முடியாது. ரெண்டுல ஒருத்தர ஒங்க கிராமத்துல. பெரிப்பாகிட்ட அனுப்புங்க. இப்பவே ரெண்டுல ஒண்ணு தெரியணும்னு குதிச்சாள். தம்பி மகன் என்னை நேருக்கு நேரா பாத்தான். வாய் சொல்லத் தயங்கிவதைக் கண்ணு சொல்லிட்டு. சரி. இவாள் என்னோட ஒரப்படியாள நன்னா வெச்சிகட்டுமுன்னு, இன்னைக்கு ராத்திரியோடு ராத்திரியாய் புறப்பட்டேன், நே க்கு எல்லாமே வெறுமையா. இருக்கு. தனியாய் வாழ்ந்து பழக்கமில்ல."

எல்லம்மா, விசாலத்தையே உற்றுப் பார்த்தாள். பிறகு தன்னை அறியாமலே அவள் கையைப் பிடித்து ஆற்றுப் படுத்தியும், ஆறுதல் தேடியும் பேசினாள்.

"அடி ஆத்தே. இந்தச் சின்னஞ் சிறு உடம்புக்குள்ள எம்மாம் பெரிய கதை நடந்திருக்கு ... எப்படியோ நீ வாழாமல்கெட்டே நான் வாழ்ந்து கெட்டேன். நாம வாழ்ந்தது வாழ்வுல்ல. சும்மா பொளப்பு. போவட்டும், ஒன்னால என்ன மாதிரி இருக்க முடியாது. இது சேறு கண்ட இடத்ல மிதிச்சு, தண்ணி கண்ட இடத்ல கழுவுன கட்டை நீ அப்படியில்ல. வா. நானு ஒன்னை ஒன் தம்பி மவன் கிட்டக் கூட்டிக்கினு போய், அவரை நாக்கைப் பிடுங்கிக்கிறாப்போல ரெண்டு கேள்வி கேக்குறேன் கண்டிப்பா சேத்துக்குவான். உம் புறப்படு."

"நானும் இதையே வேற விதமா நெனச்சேன். நான் சமையல்ல நளபாகம் தெரிஞ்சவள். எப்படியோ பிழைச்சுக்குவேன். அதோட, நான் புறப்பட்ட வீடு உறவுன்னாலும் அவாள் ஒரளவு அந்நியாள்தான். ஆனால் ஒன் நிலம அப்படி இல்ல. ஆயிரந்தான் நடந்தாலும், அவள் ஒன் மகள். ஒன்னோட ரத்தம். எழுந்திரு எல்லம்மா. ஒன்னக் கூட்டிடுண்டு போய், ஒன் மகன் கிட்டே விடுறேன். நன்னா நாலு கேள்வி கேக்கறேன். தட்டமாட்டாள். ஏனா பிராமண ஜனங்கள, சேரி ஜனங்க நன்னாப் புரிஞ்சுகிட்ட காலம் இது. புறப்படுவோமா?"

"வாணாம்மா. உடைஞ்ச கல்லு ஒட்டாது. நான் கொஞ்சம் வைராக்கியக்காரி.”

"நானும் அப்படித்தான். என் பையங்க ரெண்டு பேரும் பெரியாளாகி இப்போ திருச்சில வேல பாக்கறதாய்க் கேள்வி. நான் இங்க இருக்கறத அவாள் தெரிஞ்சுண்டு இருப்பாள். இருந்தாலும் அம்மாவாச்சேன்னு எட்டிப் பாக்கல. போனா, வளத்த கடமைக்கு இல்லாட்டாலும், பெற்ற கடமைக்கு உதவுவாள். ஆனாலும், நேக்கு இஷ்டமில்ல. அம்மான்னு ஒருத்தி இருக்கான்னு நினைக்காத பிள்ளைங்ககிட்ட என்ன வேண்டியிருக்கு"

"ஒன் பிள்ளைங்கள ஒன்னால மறக்க முடியுதா?”

"இந்த பாரு எல்லம்மா இந்த மாதிரி எல்லாம் என்னைச் சோதிக்காதே."

"நான் இன்னா சொல்லிட்டேன். என் இப்படிப் பதறுறே. என் மகன் உதச்சான். மகள் துரத்தாமல் துரத்தினாள். அப்டியும் அவங்க மேலே இருக்கிற பாசம் எனிக்கிப் போக மாட்டேங்கு. பாழாப் போன மனக கேக்க மாட்டேங்குது. ஒனக்கும் அப்படியான்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன்.”

"என் தம்பி மருமகள் அந்நியம். என்னோட சமையல் அனுபவமும், அவளோட வயசும் ஒண்னு கண்டபடி என்னை க் கரிச்கக் கொட்டறவ ளானாலும் கூட சின்னஞ்சிறுசு விட்டுட்டுப் புறப்பட்டுட்டோமேன்னு நேக்கு மனசு கேக்க மாட்டேங்குது. பெத்த பையன்கள எப்படி மறக்க முடியும்? ஆனால் ஒன்னோட மனசும் என்னோட மனசும் யாருக்குப் புரியும்? எதையும் ஆதாயம் இருந்தால்தான் புரிஞ்சுக்கறதுன்னு கங்கணம் கட்டிக்கிட்ட கலியுகமாச்சே இது."

இரு மூதாட்டிகளும் சிறிது நேரம் பேசவில்லை. இருவரும் தத்தம் பிள்ளைகளிடம் சஞ்சரித்தார்கள். புறப்பட்ட இடங்களைத் திரும்பிப் பார்த்தபடியே நெடிய மெளத்தில் சிக்கினார்கள். பிறகு அந்த மெளனப் புதை மண்ணில் இருந்து விடுவட்டவர்களாய், தலைகளைத் திருப்பி, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். விசாலம் ஆகாயத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டாள். திடீரென்று மெய் சிலிர்க்க எழுந்து நின்று, எல்லம்மாளின் கரங்களைப் பிடித்துக் கொண்டே தாங்க முடியாத வேகத்தில் பேசினாள்.

"இப்ப எனக்கு ஒரு எண்ணம் தோணுது. சிரிக்காமல் கேளு. பகவான் கிட்ட எனக்கு முத்தி கொடுப்பா. பிறவியை அறுப்பான்னு கேட்டுப் பிராத்தனை செய்தவள் நான். ஆனால் அதுக்கு இப்போத்தான் தகுதி வந்திருக்காப்பல தோணுது. இந்த rணத்துல பிள்ளைங்க தோணல. உறவு தோணல. இந்த லோகத்துல இருக்கிற அத்தனை மக்களும் நான் பெத்த பிள்ளைங்களாய் எனக்குத் தோணுது. இப்படி நினைக்க நினைக்க எவ்வளவு சந்தோஷமாய் இருக்குது தெரியுமா?"

எல்லம்மாக் கிழவி சிறிது நேரம் பேசவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்தாள். பிறகு விசாலத்தைப் பார்த்துவிட்டுத் துள்ளிக் குதித்தாள். துக்கத்தில் உதித்த ஆனந்தத்தோடு அவளும் கத்தினாள்.

"நமக்குள்ள எவ்வளவு ஒற்றுமை பாரு.. சத்தியமா அட்சிச் சொல்றேன். இதே எண்ணந்தான் எனக்கும் வருது. வாழ்க்கையில எவ்வளவோ நல்லதும் கெட்டதும் அனுபவிச்சோம். இப்போ மிஞ்சி நிக்கறது வெறும் நெனப்புத்தான். குடும்பத்துக்குள்ளேயே. விடுற இந்த நெனப்ப ஏன் பூலோகத்துல விடப்படாதுன்னு நெனச்சேன். மனசுல ஏதோ ஒண்ணு தட்டுப்படுவது போலத் தெரிஞ்சுது. ஆனால் புரியல. ஒன் பேச்சு புரிய வைச்சுட்டு. இந்த ரோட்டுல. அந்தக் காட்ல, போற அத்தனை பேரும் நான் பெற்ற மவனுவ மவளுவன்னு இப்போ நெனச்சுப் பாக்கேன். எல்லாருமே உறவுன்னு நெனக் கப்போ உபத்திரவமா இருந்த உறவு இது ல கரைஞ்சிடுது. விசாலம்மா... நெசமாக்காட்டியும் சொல்றேன். எனக்கு எவ்வளவு சந்தோஷமாக் கீது தெரியுமா?"

“ஏதோ நம்மோட கர்ம வினையிலும் ஒரு நல்லது நடக்கு. நீ சொன்னப்பல வாழ்வே இறுதியில் ஒரு நெனப்புத்தான். பகவான் கிட்டப் போறதுக்கு. ஈஸ்வரா இனி மேலும் எங்க மேலே கர்ம வினையை ஏவாதேடா"

'நீ சொல்றதுல்ல கடைச பிடிக்கலம்மா. கர் ம வினைன்னு சொல்லி நாம தாயாய் இருந்து செய்ய முடியா விட்டாலும், நினைக்கக் கூடியதை மறந்து டப்படாது. பாரு. எல்லோரும் என் பிள்ளைங்கன்னு நெனக்கப்போ. எனக்குக் கர்ம வினை தோனலை. மனுஷனோட கஸ்மால வினைதான் தோணுது. நம்ம பிள்ளைங்க கூடி வாழ்ற முறையில ஏதோ ஒரு கோளாறு இருக்காப்பலத் தோணுது. இத இடிச்சு நொறுக்கனும் போல, அதாவது நரிக்கிட்ட இருந்து பிள்ளைக்குப் போராடற ஒரு தாய் மாதிரி எனக்குக் கோபம் வருது."

"நீ கம்யூனிஸ்ட் மாதிரிப் பேசறேடி"

"அப்படின்னா என்னம்மா?”

"அம்மான்னு சொல்லாதே. நான் டீ பொடுற மாதிரி நீயும் மேன்னு போடு. ஏதோ ஒண்னு கர்ம வினையோ, மனுஷ வினையோ... நாம ரெண்டு பேரும் செல்லாக் காசுங்க. நாம காரியம் செய்ய முடியாது. அதனால தமக்குக் காரணமும் தேவை இல்லை. நாம இந்த ஜனங்களோட தாயின்னு இப்ப ஒரு எண்ணம் வருது பாரு. அத மனசுல அப்படியே பிடிச்சுக்கலாம். மனசுக்குள்ளேயே சொல்லிக்கலாம்."

இரு மூதாட்டிகளும் ஆகாயமும் பூமியுமாய். ஆனவர்கள் போல, மெளனத்தில் மூழ்கினார்கள்.

கல்கி—1979