ஆகாயமும் பூமியுமாய்/ஒன்றிப்பு
ஒன்றிப்பு
என் மனம் முழுவதும், காக்கா மயமானது. கால் முழுவதும் நடைமயமானது. கேட்க வேண்டிய காதுகளே 'கா. கா...' என்று உரத்துப் பேசின. கண்கள் கூட அப்படித்தான். முன்னால், தன்பாட்டுக்குப்போன ஒரு பூக்காரப் பெண்ணின் கொண்டைகூட, ஒரு காக்கா போலவே தோன்றியது. அந்தச் சமயம் பார்த்து என்னை உரசிக்கொண்டு போன ஒரு தள்ளுவண்டியின் கழிசல் கம்பிகள் கூட காகத்தின் நகக்கால்களாய் தோற்ற மாற்றம் காட்டின. ஆங்காங்கே ஆகாயத்தில் வட்டமடித்தும், கடைகண்ணிகளின் முன்னால் லாவகமாய் குதித்துக் குதித்து நகரும் காகங்கள், நான், பல்லாண்டுகளுக்கு முன்பு, காகக்கும்பலால் கொத்திக் குதறப் படும் மனிதர்களை சித்தரிக்கும் ஒரு ஆங்கில திரைப்பட நினைவை அங்கேயே நடக்கப்போகும் நிகழ்ச்சிகளாய் உருவகப்படுத்தின.
நான் காதுகளுக்கு மானசீகமாய் தாளிட்டு, நடந்தேன். மனம் போன போக்கில் கால்கள் போகாமல், அவை தானாக உடம்பை இழுத்துக் கொண்டு போயின. மூலச் சென்னையின் கிழக்கெல்லையான அடையாறு முனையில் மாட்டுத் திமிங்கலம் போன்ற பாலத்தில் ஏறி, மறுபக்கம் இறங்கினேன். எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ, அவ்வளவு தூரம் திரும்பி நடக்க வேண்டும் என்று வழக்கம்ாய் எச்சரிக்கும் மூளைகூட காக்கை வசமானது. இதுவும், தன் பங்கிற்கு, அகத்தில் குத்திக் கொண்டிருந்தது. இப்படிக் குறிப்பிடுவதால், நான், காக்கா போபியா’வில் சிக்குண்ட மனநோயாளி என்று அர்த்தமல்ல. தண்ணிருக்குள் கூட தடம் பதிக்கும் வல்லமை கொண்டவன் நான் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள். மனம் என்பது, நெருப்புபோல், எதையாவது பற்றி நிற்க்கக்கூடியதே அன்றி, தனித்து நிற்பதல்ல என்பதை உணர்ந்தவன். அனாவசியங்களில் பதியும் மனதை, ஆரோக்கியங்களில் திருப்பி விடுகிறவன். ஒரு விவகாரத்தை, அடி முதல் நுனிவரை அலசிப்பார்க்கிறவன். அதனால்தான் இந்த காக்கா விவகாரத்தை நினைத்தபடியே நடக்கிறேன். இது புதை மண்ணாகி விடக் கூடாது என்பதற்காக திறந்தவெளியில் நடந்து மனதை திறந்து பார்க்கிறேன்.
நான் சுயமாய் கட்டிய வீடு, பெங்களூரில் இருந்து பதினைந்தாண்டுகளுக்கு முன்பு, இதே இந்த சென்னை வீட்டின் தளத்தில் நானே நட்ட தென்னங்கன்று. இன்று, வளர்வது தெரியாமலேயே வளர்ந்து, இப்போது இரண்டாவது மொட்டை மாடித்தளத்தின் எல்லைப்புரச் சுவரில் உராய்ந்தபடியே அதற்கும் மேலோங்கி நிற்கிறது. ஆனாலும் என் வீட்டில் - என் தென்னையில் கூடு கட்டியிருக்கும், இரண்டு காகங்கள், என்னை குறிவைத்து அடிக்கின்றன. கால்களை மடித்தோ அல்லது நீட்டியோ தலையில் குட்டுகின்றன. மோதிர குட்டல்ல. நகக்குட்டு. அதே சமயம், இதே மொட்டை மாடிக்கு அவள்” துணிமணிகளை காயப் போடவும் அந்தக் காலத்து மகாராணி போல் மொட்டைமாடித் தேரில் நின்று அக்கம்பக்கம் பார்ப்பதற்காகவும் பொழுதுக்கு இருபது தடவையாவது வருகிறாள். இவளை இந்த காகங்கள் ஏறிட்டுப் பார்ப்பதில்லை. நான், அருட்பெருஞ்ஜோதி கேசட்டுகளை போடும் டேப்ரிகார்டரில், நான் இல்லாத சமயத்தில் ‘காதலா காதலா வகையறாப் பாடல்களை போட்டு ரசிக்கும் என் மகனையோ, பாடப்புத்தகத்தைப் படிப்பதாக பேர் பண்ணிக்கொண்டு, மொட்டை மாடியை சுற்றிச்சுற்றி வரும் என் மகளையோ, இந்த இரண்டு காகங்களும் சிநேகிதமாய்த்தான் பார்க்கின்றன. இவர்களையாவது தெரிந்த முகங்கள் என்று, அவை நட்பு பாராட்டுவதாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், முன் பின் முகமறியாத என் மைத்துனன் ஊரில் இருந்து வந்திருக்கிறான். வயிறு முன்னோக்கியும், கால்கள் பின்னோக்கியும் போனவன். கழுகை நவீனமாக வரைந்து அதற்கு 'முத்து' என்று பெயரிடலாம். அந்தமுத்து இந்த மாடிக்கு பல தடவை வருகிறான்; போகிறான். அவனையும் இந்த காகங்கள் கண்டு கொள்வதில்லை. குறைந்த பட்சம், ஒரு கத்துக்கத்தி எச்சரிக்கைக்கூட விடுப்பதில்லை. அப்படியானால் இந்த காக்காக்களுக்கு இளைத்துப் போன கோழிக்குஞ்சு நான் மட்டுந்தானா..?
காக்காக்களுக்கு மட்டுமல்ல. இந்த காக்கா மூலமாய் குடும்பத்திற்கும் இளைத்துப் போய்விட்டேன். நீங்க கறுப்பா இருக்கிகளா.... போதாக்குறைக்கு இரண்டு கைகளையும் வளைத்து இடுப்புல கொசுவத்த சொருகுகிறமாதிரி சொருகுகிறீகளா அதனால, உங்கள, குஞ்சுகள பிடித்துத் தின்ன வந்த ராட்சச பறவையா நம்ம வீட்டு காகங்க நினைக்குதுங்க” என்று அவள் கைதட்டிச் சிரிக்கிறாள். அது என்ன நம்ம வீட்டுக் காகங்கள்? என் மகன் என்னடாவேன்றால், அவன் தொலைக்காட்சியில் ஆட்டம் போடுவதற்கு ஆடையலங்காரம் செய்ய பணம் கொடுக்காததை மனதில் வைத்துக் கொண்டு, 'காக்கா இருக்கிறத பகிர்ந்து கொள்ளும் பறவை. அதுக்கு கஞ்சர்களை பிடிக்காது’ என்கிறான். நல்ல வேளை. இர் போட்டுப் பேசினானே. இவன் கிடக்கட்டும். என் மைத்துனன் ஊருக்குப் போனதும் என்னோட ஆபீஸர் அத்தானை காக்காய்ங்க காலால அடிச்சு வாயால கொத்துதுக' என்று எதுகை மோனையாய் பிரச்சாரம் செய்யப்போகிறான். இந்த விளையாட்டுப் பேச்சு, என் மகளுக்காக நான் மேற்கொண்டிருக்கும் மாப்பிள்ளை வேட்டைக்கு குந்தகமாயிடும். காக்கா அடிப்பது சனிஸ்வரன் அடிப்பது மாதிரியாம். எந்தவீட்டில் பெண் எடுத்தாலும் எடுக்கலாம். ஏழரைநாட்டுச் சனி பிடித்த வீட்டில் எடுக்கக் கூடாது என்று மாப்பிள்ளை வீட்டார் அடம் பிடிக்கப் போகிறார்கள்.
இப்படிப்பட்ட, இக்கட்டான சிக்கலில் இந்த காகங்கள் என்னை ஏன் சிக்க வைக்கின்றன? இவ்வளவுக்கும் நான் மென்மையானவன். கலகலப்பாக பேசுகிறவனே தவிர, காரியவாதி அல்ல. இப்பேர்ப்பட்ட என்னை, இவை ஏன் அப்படித் தாக்குகின்றன? என் மனைவியை, ஒரு குட்டு குட்டிவிட்டு, என்னை ஒன்பது தடவை குட்டியிருந்தாலும், அந்த மகிழ்ச்சியில் இந்த துக்கத்தை கரைத்திருப்பேன். ஆனால் என்னை மட்டுமே தனிப்படுத்தி குட்டுகின்றன. குடைகின்றன.
இன்றைக்கோ, இந்தத் தாக்குதல் உச்சத்திற்கு போய்விட்டது. கடந்த இரண்டு நாட்களாக வெளியூரில் திரிந்து விட்டு, நேற்றிரவு, பன்னிரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்பினேன். இந்த மாடியறையில் பேண்ட் சட்டையோடு தூங்கிப்போனேன். ஆனாலும் காலையில் ஆறு மணிக் கெல்லாம் எழுந்து, அறையில் இருந்து வெளிப்பட்டேன். இந்த காக்கைகளின் நினைவே இல்லாமல், முதல் மாடியிலுள்ள குடும்பத்தாருடன் காபி சாட்சியாய் சங்கமிக்க மொட்டை மாடித் தளத்தில் ஐந்தாறு எட்டுக்கள் போட்டிருப்பேன். அப்போது-
திடீரென்று தலைக்கு மேல் கால் முளைத்த கரிக்கட்டை ஒன்று எங்கிருந்தோ ஏவுகணையாய் பாய்வதுபோல் தோன்றுகிறது. நான் தற்காப்பாக, கரங்களை தலைக்கு கவசமாக்குவதற்கு முன்பாகவே, உச்சந்தலை பிய்த்தெடுக்கப்பட்டது போன்ற வலி. இரண்டு நகக்கால்கள், தலையை உழுது, ரத்தக்கோடுகளால் வரப்பு கட்டியது போன்ற பிராண வலி. வலது கையை தூக்கி தலைக்குள் விரல் விட்டு துழாவி, வெளியே எடுத்தால் ஆள்காட்டி விரலில் சிவப்புக் கசிவு. நான் கோபங்கோபமாய் நிமிர்ந்து பார்த்தேன். எதிர் வீட்டு மண்தளத்தில் முளைத்து, இந்த மாடிக்குள் எட்டிப் பார்க்கும் மாமரக்கிளையின் ஒரு கொப்பில், அப்பா காக்காவோ, அம்மா காக்காவோ ஆடியும் ஆட்டுவித்தும் என்னை ஒரம் கட்டி பார்க்கிறது. இன்னொன்றோ, என் வீட்டுத் தென்னைமர உச்சியில், அம்பாய் வளைந்த ஒரு ஒலையை இரண்டாய் வகிடெடுக்கும் மஞ்சள் மட்டையில் கால்களை இடுக்கிபடியே இந்த குட்டுப் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்கிற பாணியில் பார்க்கிறது. நான் அதிர்ச்சியுற்று நிற்கிறேன். அந்தத் தென்னையை நெருங்காமல், மாடிப்படிகளிடம் போக முடியாது,
வெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால், நான் ஒரே ஒட்டமாய் ஓடி, மாடிச் சுவர் முகப்பிற்கு மகுடம் போலான கம்பிச்சுருள் விளக்கில் கைபதித்து, கீழே ஒரே தாவாய்த் தாவினேன். அதற்குள் இன்னொரு அடி. நெத்தியடி என்பார்களே. நிசமாவே அதுதான்.
நடந்ததையும் - இப்படி நடக்கப்போவதையும் காக்காமயமான என் சிந்தனையில் திணித்தபடியே, நான் நடந்து கொண்டே போனேன். பழைய மாம்மல்லபுரச் சாலைக்கு வந்து விட்டேன். அந்தச் சாலையின் ஒரு பக்கம் வெட்டிப்போட்ட பள்ளங்களும், கொட்டிப்போட்ட மேடுகளும், பொதுப் பணித்துறையின் கூடாரங்களுமாய் ஒரு பாலைவனம் ஏற்பட்டிருந்தது.
மறுபக்கமோ, பச்சை முக்காடு போட்ட அசோக மரங்களும் இருபக்கமும் கிளைகளை வில்லாய் வளைத்துப் பிடித்த வாகை மரங்களும், நாகலிங்க பூக்களை உதிர்க்கும் மரங்களுமாய் சாலை பசுஞ்சோலையாய் திகழ்ந்தது: இவற்றின் நிழல் குடையில் நடந்து ஒரு வளைவிற்கு வந்தேன். அதன் ஒரத்தில் ஒரு வேப்ப மரம். சாலை ம்றியல் செய்யப்போவது போன்ற தாவரக் குண்டன். இதன் உச்சியில் கவுணாய் வளைந்த இரட்டைக் கிளையின் மூலக் குகையில் ஒரு கூடு. ஏழை வீட்டு குச்சி வீடு மாதிரி. இதன் ஒரு கிளையின் உச்சியில் ஒரு காகம் பரமசாதுவாய் கால் கவ்வி கிடந்தது. எப்படியோ என்னை பார்த்து விட்டது. நானும் அதைப் பார்த்து விட்டேன். அது எப்படி எழுந்ததோ.. எம்பிப் பறந்ததோ. தெரியாது. என் தலையில் இரும்புக் கம்பியான அதன் கால்கள் தடம் பதித்தன. அடித்தது வவிக்கும் முன்பே, அந்தக் காகம் எப்படிப் பறந்தது என்பதும் தெரியவில்லை. ஏறிட்டுப் பார்த்தால் ஒரு டெலிபோன் கம்பத்தில் குந்தியபடியே மீண்டும் என்னை குறி பார்க்கிறது.
என் ஆச்சரியம், அதிர்ச்சியானது. வீட்டுக் காகங்களாவது என்னை தாக்குவதில் ஒரு நியாயம் இருக்கலாம். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த காக்கா தாக்குவது அசல் அநியாயம். அதோ ஒருத்தர் கைகளை வீசிப்போட்டு நடக்கிறார். எதிர்ப்படும் சைக்கிளுக்கு எந்தப் பக்கம் வழிவிடுவது என்று புரியாமல், பழுத்துப்போன ஒரு மூதாட்டி அசல் பெண்குவின் பறவை போல் காலாட்டி கையாட்டி தள்ளாடித் தள்ளாடி நடக்கிறாள். ஒரு வாலிபன், அந்த வேப்பமரத் துணில் முதுகைச் சாய்த்து, இருபக்கக் கிளைகளிலும் கை விரித்து சிலுவையில் அறையப்பட்டவன் போல், யாருக்கோ, எவளுக்கோ வழிமேல் விழிபோட்டுக் சாய்ந்து கிடக்கிறான். கட்டிடத் தொழிலாளர்கள் சரம்சரமாய் போகிறார்கள். வீட்டுக்கார வேலைப்பெண்கள், ஐந்தாறு காக்கா குஞ்சுகளை உள்வாங்கும் தூக்குப் பைகளோடு போகிறார்கள். வருகிறார்கள்.
அந்த வேம்பின் அடிவாரத்தில் நிறுத்தப்பட்ட ஒரு டிரக்கு வண்டியில் காக்கி டவுசர் போட்ட ஒரு நடுத்தர வயது ஆசாமி, ஒருச்சாய்த்து படுத்திருக்கிறார். இந்த காகத்திற்கு இவர்கள் எதிரியாகத் தெரியவில்லை. நான் மட்டுந்தான் இதற்கு எதிரியாம். ஒருவேளை, இது, என் வீட்டுக் காகமாக இருக்குமோ. அங்குள்ள ஆண் காக்கா, இந்த காகத்தை சின்ன வீடாய் அல்லது கூடாய் வைத்திருக்குமோ. அல்லது என் வீட்டுக் காகங்கள், இந்த சுற்று வட்டார காக்கைச் சமூகத்திடம் நான் பொல்லாதவன் என்று பொய்ப் பிரச்சாரம் செய்திருக்குமோ-
என் பித்துக்குளித்தனத்தை நம்ப வேண்டும். குறைந்தது அரைமணி நேரமாவது, அந்த வளைவு பகுதியில் அங்குமிங்குமாய் போக்கு காட்டி நின்றேன். எந்த வழிப்போக்கரையாவது அந்தக் காகம், என்னைக் குட்டியது மாதிரி ஒரு குட்டுக் குட்டியிருந்தால், நான் மகிழ்ந்து போயிருப்பேன். அரைமணி கடந்து முக்கால் மணி யானாலும், நான் நினைத்தது நடக்க வில்லை. ஒருவேளை இந்தக் காகம், என்னை ஆள் மாறாட்டமாக அடித்திருக்கும் என்றும் நினைத்தேன். அந்த நினைப்பை நிரூபிப்பதற்காக, அந்த வேப்ப மரத்திற்கு முன்னாலும் பின்னாலும் நடந்து நடந்து, வட்டமிட்டேன். வட்டமிட்டு வட்டமிட்டு நடந்தேன். போகும்போது எதுவும் நேரவில்லையென்று திருப்தியோடு திரும்பும் போது, த்லையில் இரண்டு நகக்கால்கள் இறங்குகின்றன. ஊசியை உச்சத்தலையில் பாய்ச்சியது போன்ற வலி.
என்றாலும், நான் மாறி மாறி நடக்கிறேன். அந்தக் காகமும் மாறிமாறி தாவித்தாவி அடிக்கிறது. எனக்கும் அதற்கும் ஒரு வைராக்கியப்போட்டி நடக்கிறது. இதில் எனக்கு, ஒருகால் வெட்டு. ஒரு நகக்கீறல். ஒரு இறக்கை அடி. இறுதியில் இந்த மூன்றும் சேர்ந்த மூர்க்கத்தனமான தாக்குதல் கூட்டம் வேடிக்கையாய் திரளப்போன சமயம். போதாக்குறைக்கு டிரக் வண்டியில் படுத்துக் கிடந்த டவுசர்க்காரர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார். அவர் சிரித்த சிரிப்பில் நான் பறவை விரோதி மட்டுமல்ல. ஒரு சமூக விரோதி என்பதுமாதிரியான தோரணை.
நான் தோல்வியை ஒப்புக் கொண்டு, சிறுமைப்பட்டு, என்னை நானே தாழ்ந்து நோக்கி, வேறு வழியில் திரும்பி நடந்தேன். எந்தக்காக்கையும் அடித்தால் அடிக்கட்டும் என்பது போல், தலையை நிராயுதபாணியாக வைத்தபடியே, கையொடுங்கி காலொடுங்கி நடக்கிறேன். காகங்களின் புறத் தாக்குதலை விட, அகத் தாக்குதலே அதிகமாய் வலித்தது. நானும் மனிதனே. எந்த உயிரையும் இம்சிக்காத சராசரிக்கும் மேலான மனிதன். ஒருத்தர், வயிற்றை, பிறஉயிர்களுக்கு சுடுகாடாய் ஆக்கக் கூடாது என்ற உயிர்த்திரள் பேணும் தாவர சங்கம நேயத்தால் வள்ளலார் பக்கம் வந்தவன். அவர் விரித்த கடையின் சேவகன். உயிர் உணவான அசைவ உணவை விட்டவன். இப்படிப்பட்ட நானா இந்த காகங்களுக்கு வில்லன்?
நான், வழிமாறி நடந்தாலும், அந்தப் பக்கமும் கடைகண்ணிகள். கண்ணாடி குவளைகளுக்குள் நீருற்றுப் போல் எழும் பல்வேறு பழரச பாய்ச்சல் கடை. கண்ணாடி மாடங்களில் கண்சிமிட்டும் மிட்டாய் கடை... தள்ளுவண்டியில் மினுங்கும் வித விமான பழங்கள். தெருவோர புத்தகக் கடை. கானாப் பாடல்களை ஒலிக்க வைக்கும் கேசட் கடை. திருமண மண்டபம் அதன் இருபக்கமும் பூக்கடைகள். மண் பிள்ளையாருக்கு ஜிகினா ஆபரணங்களை ஒட்டும் பெண்ணுக்கு மத்தியில் மண்டிக் கிடக்கும் பிள்ளையார் சிலைகள். இவற்றிற்கு ஊடாக நடக்கிறேன். ஒரு பலசரக்குக் கடையில், பொரிகடலைப் பொட்டலம் தென்படுகிறது. உடனே, என் மனதில் ஒரு பொறி. இந்த கடலைகளை வீசி, என் வீட்டுக் காகங்களை கவர வேண்டும். நான் அவற்றின் நண்பன் என்பதற்கு, இந்த உணவுப் பொட்டலம் சாட்சியாக வேண்டும். அந்தக் காகங்கள் என்னுடன் நட்பு பாராட்டுவதை பார்த்ததும் கைதட்டிச் சிரித்த அவள் மூக்கின் மேல் விரலை வைக்க வேண்டும்.
நான் புத்துயிர் பெற்றவனாய் நடக்கிறேன். சிறுமை பெருமையாகிறது. அசம்பாவிதப் பயம் பெருமித கம்பீரமாகிறது. கா. கா. காக்கா அண்ணாவே நீங்கள்’ என்று கலைஞரின் பராசக்திப் பாடலை முணு முணுத்தப்படியே, வீட்டுப்படிகளில் ஏறி முதல் மாடிக்கு முதுகு காட்டி, மொட்டை மாடிக்குத் தாவுகிறேன். நின்ற இடத்திலேயே நின்று சுற்று முற்றும் பார்க்கிறேன். வீட்டுக் காகங்கள், என்னை அடையாளம் கண்டதுபோல், காததிர கத்தியபடியே பறந்தோடி வருகின்றன. பகைப் பார்வையாய் பார்க்கின்றன. நானோ, அவற்றின் அறியாமைக்காக சிரித்தபடியே, கடலைப் பொட்டலத்தைப் பிரித்து உள்ளே இருந்ததை குவியல் குவியலாய் தரையில் போடுகிறேன். காகங்கள் நிதானப்படுகின்றன. நான் நிற்கும் வரை கடலைகளை நெருங்காது என்ற அனுமானத்திலும், காக்காபிமானத்தில் வெற்றி பெற்ற பெருமிதத்திலும், எனது அறையை நோக்கி நடந்தபோது-
திடீரென்று, தலை, சுழல்கிறது. முடிக்கற்றையால் கபாலம் இழுபட்டு மூளை பிசிங்கியதுபோன்ற பிரமை நிமிர்ந்து பார்க்கிறேன். முன்பெல்லாம் ஒரு கள்கம் தாக்கும் இன்னொன்று வேடிக்கைப் பார்க்கும் இப்போதோ, அந்த இரண்டும் ஒருசேர்ந்து, மீண்டும் தாக்கப்போவதுபோல், என் தலையைச்சுற்றிப் பறக்கின்றன. தலையில் ஒரு குட்டு. பிடறியில் ஒரு கீறல். நான் தலையை நிமிர்த்தினேன். உடனடியாய் அதை குனித்துக் கொண்டேன். இல்லை என்றால், என் கண்கள் இரண்டும், அந்த காகங்களின் கால் இடுக்கிற்குள், சின்னஞ்சிறு முட்டைகளாக சிக்கியிருக்கும். ஒருவேளை இந்த காகங்கள் அவற்றை கொத்திக்கூட தின்றிருக்கலாம். நான் நிரந்தர குருடாகியிருக்கலாம். இன்றைக்கு கண்கள் தப்பிற்று. நாளைக்கு எப்படியோ. ஒருநாள் போல் ஒரு நாள் இருக்காது.
என் நினைப்பும் நடப்பும், என்னை உக்கிரப் படுத்துகின்றன. வக்கிரப்படுத்துகின்றன. என் நட்பு அதே பரிணாமத்தில் பகையாகிறது. சிரிப்பு, சினமாகிறது. பார்வைக் குளிர்ச்சியில் நெருப்பேறுகிறது. சுற்றுமுற்றும் பார்க்கிறேன். ஐந்தடி நீளமுள்ள ஒல்லிக் கம்பிகள் வரிசைப் படுத்தப்பட்டு கீழே கிடக்கின்றன. இந்த மாடியை கட்டியபின், மிச்ச மீதமான கம்பிகள். இவற்றில் ஒன்றை எடுத்து, அந்தக் காகங்கள் வட்டமடிக்கும் திசையை நோக்கி ஓங்கினேன். ஓங்கி ஓங்கி அங்குமிங்குமாய் ஆடவிட்டேன். மேல்நோக்கியும், சாய்வாகவும், பக்க வாட்டிலும் சிலம்பு போல் சுற்றினேன். கோரதாண்டவமாய் அங்குமிங்குமாய் சுழன்றேன். ஒரு காகம், கம்பி முனையின் ஒரு சென்டி மீட்டர் இடைவெளியில் தப்பித்துக் கொண்டது. இப்போது அந்தக் காகங்களுக்கு பயம் பிடித்து விட்டது. அங்குமிங்குமாய் ஆகாயத்தில் சிதறிப் பறந்தன. குய்யோ முறையோ என்று கூச்சலிட்டன. கூட்டிற்கு மேலாய் பறப்பதும், அதை துறப்பதுமாய் வானில் சஞ்சரித்தன. அப்படியும், என் கோபம் தீரவில்லை. ஈட்டி பிடித்த வீரன்போல், அந்தக் கம்பியை தூக்கிப் பிடித்தபடி, அந்தத் தென்னை உராயும் விளிம்புச் சுவரைநோக்கி ஒடினேன். உள் மூச்சை வெளி மூச்சாக்காமலேயே, அந்தக் கம்பியை மேலே தூக்கி, அந்தக் கூடு இருக்கும் தென்னையின் உச்சியில் மாறி மாறி குத்தினேன். கள்ளாளி காகங்கள்தான். தென்னையில் அடிமுதல் நுனிவரை ஒன்றாய் குனிந்து, சில்லாடைகளால் சுற்றப்பட்ட இரண்டு ஒலைகளின் உட்குவியலில் கூட்டை வைத்திருக்க வேண்டும். கூடு தெரியவில்லை. அந்த உச்சியில் எங்கேயும் இல்லாததால் அது அங்கேதான் இருக்கும் என்ற அனுமானத்தில் கம்பியை நீட்டி, எக்கி எக்கி தென்னை உச்சியின் பக்கவாட்டுப் பகுதியில் இடித்தேன். குடைந்தேன்.... குத்தினேன்.
தென்னை ஒலைகளின் முதுகெலும்பான மட்டைகள் ஒடிந்து கம்பிக்கு வழிவிட்டன. சில்லாடைகள் சிதைந்தன. நீண்ட நெடிய மஞ்சள் துண்டாய் குறும்பல்களை சுமந்த அந்த தென்னையின் கற்பப் பைகளில் பல, துண்டுபட்டு துவண்டு விழுந்தன. வயது வராத தேங்காய்களுக்கு காவலாளிபோல் கொக்காய் வளைந்த சில்லாட்டைகள் சிதறிவிழுந்தன. ஆகமொத்தத்தில், நான் இடித்த இடியில், தென்னை மரமே குலுங்கியது. ஒலைகள் ஒன்றோடு ஒன்று உரசி உரசி, சத்தமிட்டன. வீசிய வீச்சில் ஒரு சில ஒலைகள் இரண்டாய் மடிந்தன. குத்திய குத்தில் லேசான முனங்கல்கள். காக்காய் குழந்தைகளோ என்னமோ... எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். இந்த ரவுடிக் காகங்களை இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்தாக வேண்டும்.
இதற்குள், இந்த காகத்தம்பதியின் அவலக் குரல்கேட்டு, அத்தனைக் காகங்களும், அந்த இடத்திற்கு மேலாய் குவிந்தன. ஆகாயமே கறுப்பு மயமானது. கா. கா...' என்று ஒவ்வொரு காவையும் தனிப்படுத்தி ஒலி யாக்கும் காகங்கள், இப்போது, அந்த தனித்துவத்தை காவு கொடுத்து, காக்காவாய்க் கத்தின. இறக்கைகளால் மாரடித்தன. அலகுவாய்களால் ஒப்பாரி இட்டன. சரணம் சரணம் என்பதுபோல் சாய்ந்து பறந்தன. கூலிக்கு மாரடிக்கும் சில காகங்கள், தத்தம் கூடுகளுக்கு திரும்பிப் பறந்து, அங்கே குஞ்சுகளுக்கு ஆபத்தில்லை என்று உணர்ந்து, மீண்டும் திரும்பி வருவதுபோல் ஆகாயத்தில் காக்கா போக்குவரத்து. சின்னச்சின்ன கறுப்பு போர் விமானங்கள், பறப்பதுபோன்ற சூழல். சில காகங்கள், என் தலைக்கு குறிவைத்து பயமுறுத்தின. அந்தக் கம்பி நீண்டதும், பயந்து பறந்தன. நானும் விடவில்லை. காகங்களுக்கு இடையே ஒரு சுற்றும், தென்னையின் ஒலை முடி தலைக்குள் ஒரு சுற்றுமாய் மாறி மாறி, கம்பியோடு சுற்றினேன். அந்தக் கம்பி கரத்தின் தொடர்ச்சிப் போலவும், கரம் அந்தக் கம்பியின் அடிவாரம் போலவும் ஆகிப்போன வேளை. என் தலையை சுற்றிய காக்காக்களின் இருள் வட்டம் சிதைந்து கொண்டிருந்த நேரம். அந்தத் தென்னைமரம், தலையிழந்து, முண்டமாய் நிற்கப்போகிற கட்டம்.
ஒரு கரம், கம்பிபிடித்த என் கரத்தை பிடித்திழுக்கிறது. நான் உதறிய உதறலில் அந்த கரத்திற்குரிய உருவம் கீழே விழுந்து, என் கால்களை கட்டிப்பிடித்து அந்தப் பிடியின் ஆதாரத்தாலேயே எழுந்து, குதிகாலில் நின்று, என் கையை பின்புறமாக வளைக்கிறது. பழக்கப்பட்ட கரம்தான். பஞ்சைப்போல் மென்மையான கரம், இப்போது இரும்புக் கரமாய் உடும்புப்பிடியாய் உருமாறாமலேயே குணமாறி பிடிக்கிறது. அவள்'தான். கத்துகிறாள்.
'உங்களுக்கு என்ன பைத்தியமா? கூட்டுக்குள்ள இருக்குற குஞ்சுகளுக்கு ஆபத்து வந்துடுமோ என்கிற பயத்துலதான், காக்கா உங்கள பயமுறுத்துது. இது பிள்ளை விளையாட்டு. குஞ்சுக பெருசாயிட்டா அப்புறம் அதுங்க யாரோ. நீங்க யாரோ. இப்படி அராஜகம் செய்தால், உங்களுக்கும் இந்த காக்காவுக்கும் என்ன வித்தியாசம்? அக்கம் பக்கம் ஆட்கள் எட்டிப் பார்க்கிறாங்க... எல்லாரையும் விட்டுட்டு, உங்கள மட்டும் இந்தக் காக்காயிங்க அடிக்குதுன்னா. உங்கக்கிட்டயும் எதாவது கோளாறு இருக்கலாம். இத நினைச்சுப் பாருங்க கார்க்கில் போர் வீரன்னு நினைப்பா? பாவம். வாயில்லாப் பிராணிங்க. இதுங்களா உங்களுக்கு எதிரி? நல்ல கூத்து.
"அவள்', இன்னும் ஆத்திரம் அடங்காமல் என்னை வெறித்துப் பார்க்கிறாள். முப்பதாண்டு கால பெரிய புராண தாம்பத்திய வாழ்க்கையை, திருக்குறளாய் சொல்லி விட்டாள். அதாவது அவளுக்கும் நான் கோளாறு பிடித்தவன். ஒருவேளை ஜீவகாருண்யத்தில் அப்படிப் பேசியிருப்பாளோ? என்ன கோளாறு என்னிடத்தில்? நான் நல்லவன் அல்லவோ?
நான், அவளை யும் அந்தக் காக்கைக் கணக்கில் சேர்த்துவிட்டு, கம்பியை கீழே எறிய வேண்டும் என்ற சுரணை கூட இல்லாமல் என் அறைக்குள், திரும்பினேன். ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்தேன். பேசாம இந்த காகம் நம்ம தென்னையில கூடு கட்டியிருக்கலாம் என்று பெண்டாட்டியை தினமும் அடிக்கும் எதிர்வீட்டுக்காரன் அதே பெண்டாட்டியிடம் அங்கலாய்ப்பது திறந்திருக்கும் ஜன்னல் வழியாக என் காதுகளில் ஏறுகிறது. அவள் சொன்னது மாதிரி கூட்டம் வேறு கூடியிருக்கிறது. அனைவரும் தெரிந்தவர்கள். அவர்களுக்கு என்னுள் உள்ள ஒரு கசடனை அடையாளப் படுத்திவிட்டேனோ, அப்படி என்ன நான் கசடன்? கசடனேதான்.
திடீரென்று ஞானோ தயமோ... எதோ ஒன்று சிந்தனையில் உதயமாகிறது. மனம் சிறு வயதுக்கு திரும்புகிறது. அப்போது எனக்கு எட்டுவயது இருக்கலாம். கிராமங்களில் சிறுவர்களோடு சிறுவனாய் திரிகிறேன். சிறுவர்களில் ஒரு பிரிவினர் பொன்வண்டுகளை தீப்பெட்டிக்குள் அடைத்து அவற்றிற்கு கொடுக்காப்புள்ளி இலைகளை வெட்டிப்போட்டு வளர்க்கப் பார்ப்பார்கள். காடுகளில் கிடைக்கும் பூனிக்குருவிகளையோ வால் குருவிகளையோ குஞ்சுநிலையில் பிடித்து, மூங்கில் கூடைகட்டி, அவற்றை ஆசையோடு வளர்ப்பார்கள். இன்னொரு பிரிவினர், ஒணாண்களை சுருக்குக் கயிறுகளால் பிடித்து, தரையோடு தரையாய் இழுத்து அலைக்கழிப்பார்கள். காடு கழனிகளில், எ லி வேட்டைக்குப் போவார்கள். மரங்களை உலுக்கி, கீழே விழும் அணில்களை, நாயிடம் விடுவார்கள். இந்த வகையில், நான் இரண்டாவது வகைச் சிறுவன்.
ஒரு தடவை, ஊர்க் கிணற்றை ஒட்டியிருந்த தென்னையில் ஏறி, காக்காய் முட்டைகளை எடுக்கப் போகிறேன். முட்டைகள் முற்றி குஞ்சுகளாகி, நான் உலுக்கிய உலுக்கலில் முப்பதடிக்குக் கீழே விழுந்து சிதைகின்றன. நான் அச்சச்சோ போட்டபடியே கீழே இறங்கப் போகிறேன். உடனே, இரண்டு காகங்கள் குற்றுயிரும், குலை உயிருமாய் கிடக்கும் குஞ்சுகளுக்கு இடையே தவித்தபோது, ஊர்க்காகங்கள் அத்தனையும் ஒன்று திரண்டு, என்னை கொத்துகின்றன. தலையில் அடிக்கின்றன. மாறி மாறி தாக்குகின்றன. எனக்கும் கோபம் வருகிறது. ஒரு கையை மரத்தில் சுற்றியபடியே, இன்னொரு கையால் கிட்டே வரும் காகங்களை அடிக்கப் போகிறேன். கைகளை மாற்றி மாற்றி அவைகளை நோக்கி வீசுகிறேன். விரல்களே ஆயுதங்களாய் கூர்மைப்படுகின்றன. ஒரு காலைச்சுற்றி வைத்துக் கொண்டு மறுகாலை தூக்கி அங்குமிங்குமாய் ஆட்டுகிறேன். இந்த வீச்சில் கீழே கூட விழுந்திருப்பேன். அதுவரை, இவனுக்கு வேணும் என்று சத்தமிட்ட தாய்க்குலம், தோண்டிக் கயிறுகளை வீசிiசி, அந்தக் காகங்களை துரத்தி, என்னை காப்பாற்றுகிறார்கள்.
நான், இப்போது என்னையே பரிசீலனை செய்கிறேன். என்னுள்ளே, எனக்குத் தெரியாமலேயே ஒரு குண்டனோ, முரடனோ, மூர்க்கனோ, பிறநலம் பேணாத க ச ட னோ , இரு க் கிறான். அவ ைன எ ன் னாலும் அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் இந்த காகங்கள் எப்படியோ அடையாளம் கண்டிருக்கலாம். உயர் கல்வியாலும், பரந்து விரிந்த அனுபவத்தாலும், பண்பட்டது போன்ற பழக்க வழக்கத்தாலும், வயது முதிர்ச்சியாலும், திரை போடப்பட்ட என்னுள் ஒளிந்திருக்கும் அந்தப் பொல்லாத கசடன், சிறிது நேரத்திற்கு முன்பு வெளிப் பட்டது போல், எப்போது வேண்டுமானாலும், வெளிப் படலாமோ. அப்படி வெளிப்பட்டு நல்லானாய் நடிக்கும் என்னை சுற்றுமுற்றும் பொல்லானாய் காட்டலாமோ. இவனை எப்படி வெளியேற்றுவது?
நானும், மனமும் ஒன்றாகி, அந்த ஒன்று, ஒரணு உயிராய், பல்மிருகமாய், மக்கள் வெள்ளமாய், பூவாய், பூச்சாய், புழுவாய், மரமாய், கொடியாய், மலையாய், அனந்தங்கோடி பேரண்டங்களாய் பரந்து விரிந்த பிரபஞ்ச சங்கமத்திடம் ஒன்றுவது, ஒரு தீர்வாக இருக்கலாமோ?
ஒம் சக்தி—தீபாவளி மலர், 1999
ஆகாயமும் பூமியுமாய்… என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு முன்னைய தொகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இது ஒரு ஆன்மீகத் தேடல் முயற்சி. அதே சமயம், இந்தத் தொகுப்பு ஒரு முற்போக்கான முயற்சியா என்று என்னை வழிப்படுத்த வேண்டியது, முப்பதாண்டு காலமாக, இலக்கியத்தில் என்னை நிலை நிறுத்தி வரும் வாசகத் தோழர்களின் பொறுப்பாகும்.
என்னுடைய அறுபதுகளின் கல்லூரிக் காலத்தில், கவிஞர் கண்ணதாசனின் பத்திரிகையில் இப்படி எழுதிய கவிதையின் உரை விளக்கமே இந்தத் தொகுப்பு..
பிள்ளையினை முத்தமிட
இறப்பாம் தந்தையவன்
என்பிள்ளை என்றுரைக்க
கடவுள் இது கண்டு
கால உருக்கொண்டு
இடத்தே கிடந்தபிள்ளை
இறப்பும் அத்தீர்ப்பால்
இப்படி வந்துவிடும்
மீதமின்றி எடுப்பதில்லை
மீதி என்ற பேச்சில்லை
சமமாய் வருவதில்லை
சமத்துவத்தை மறப்பதில்லை
தன்னை நினைப்போர்க்கு
தன்னை நினைப்பூட்டும்.
- சு. சமுத்திரம்