உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடும் தீபம்/இதயம் எனும் எழில் விளக்கு

விக்கிமூலம் இலிருந்து


பொறி ஐந்து:

இதயம் எனும்
எழில் விளக்கு


உலகத்தின் கண்களிலே அல்லி கண் மலர்ந்தாள். அருகில் நின்று கொண்டிருந்த டாக்டரின் கண்கள், அவளை இமை மூடாமல் பார்த்தது பார்த்தபடி இருந்தன.

“அம்மா அல்லி, நீ என் வயிற்றிலே பாலை வார்த்தாயம்மா?” என்று தம்மை மறந்து கூறினார் ராஜநாயகம். பிறக்காமல் பிறந்த பாசத்துக்கும் ‘கண்’ இருக்கத்தானே செய்கிறது?

துவண்டு கீழே விழ இருந்த அல்லியைத் துணைக்கரம் கொடுத்துக் காத்தான் அருணாசலம். ஆனால், அந்த அரவணைப்பும், அன்புத் தாங்கலும், அவள் வாழ்வு முழுமைக்குமே உரித்தானதாய் இருக்கக் கூடியவைதானா? ‘பெண் பேதையாக இருக்கும் வரை அவளுடன் வாழ், விழித்துக் கொண்டு விட்டால், விட்டு விட்டுப் போய் விடு!’ என்று யாரோ சொல்லிச் சென்ற வாக்கை மெய்ப்பிப்பது போலத்தான் ஆண்கள் இருப்பார்களோ? அருணாசலமும் அந்த வர்க்கத்தைச் சார்ந்தவன்தானோ?

அல்லியைக் காரில் வைத்துக் கொண்டு, ராஜநாயகத்திடம் வந்தான் அருணாசலம். அவன் மட்டும் வரவில்லை; கூட, சிங்கப்பூரான் என்று அழைக்கப்படுகின்ற சாத்தையாவும் வந்தான். மயக்கம் அடைந்து விழுந்தாள் அல்லி. மயக்கம் அடையாத நிலையில், மயங்கி மருண்டு தவித்து நின்றது அருணாசலத்தின் மனம். ராஜநாயகம் அல்லியின் நிலைக்காகப் பதறி, டாக்டர் உதவியை நாடினார். அல்லிக்கு மயக்கம் தெளிந்து விட்டது என்றாலும், பூரணமாகத் தெளியவில்லை. சாத்தையா, செந்தாமரை, வெண்டியப்பன் என்று சம்பந்தமில்லாமல், அவளது செவ்விதழ்கள் முணமுணத்தன.

தியேட்டரில் அருணாசலம் கண்டதெல்லாம் கனவோ என்னும் குழப்ப நிலை அவனுள்ளே இருந்தது.

‘யாரோ நாட்டுப்புற மங்கை ஒருத்தி, அல்லியைப் பெயரிட்டு அழைத்துக் கொண்டே வந்து, அணைத்தது; அவளை ஒர் ஆண் மகன் அடக்கி அல்லியைக் குறிப்பிட்டு, ரசமில்லாத வகையில் பேசியது; சிங்கப்பூரானைக் கண்டதும், அல்லி பேயைப் பார்ப்பது போல் பார்த்து மயங்கி விழுந்தது—இத்தனைக்குமாக ஏதோ ஒரு பிணைப்பு இருக்கிறது. இப்பொழுது, அவனுடைய வேதனை அல்லியின் நிலை பற்றியல்ல; சாத்தையா சொன்ன சேதியைப் பற்றியது. -

சாத்தையா அருணாசலத்துடன் சும்மா காரில் வரவில்லை. வந்த பின்னும், அருணாசலத்தைச் சும்மா இருக்க விடவில்லை. காற்றடிக்கும் திசையில், நெருப்பை ஊதி விட அவனுக்குத் தெரியும். அடிபட்டு ஓடி ஒளிந்து விடும் சர்ப்பம், மிகவும் ஆபத்தை உண்டாக்கக் கூடியது. அது வன்மம் வைத்து, தன்னை அடித்தவர்களை காத வழி சென்றாலும், சமயம் பார்த்திருந்து கடித்தே தீரும். சாத்தையாவும் அம்மாதிரியானவன்தான் என்பதைப் பேதைப் பெண் அல்லி உணரவில்லை.

சாத்தையா சாமர்த்தியசாலி. இல்லாது போனால், இந்த வயதுக்குள் சிங்கப்பூர் சென்று செல்வந்தனாகத் திரும்பி வர முடியுமா? ஆனால், அவனுடைய சாமர்த்தியம் நல்ல வழியில் பயன்படவில்லை.

எப்பொழுதுமே பெற்றோருக்கு அடங்காமல், ஊர் சுற்றும் பழக்கம் ஏற்பட்டது. குணத்தில் இருவருக்கும் ஏறத்தாழ ஒற்றுமை இருந்ததால், மற்ற விஷயங்களிலும் ஒன்றிப் பழகினார்கள். கையிலிருந்த காசு கரைந்தது. மேற்கொண்டு வாழ வழியில்லாது போகவே, வழக்கம் போல பெற்றோரை நாடி வந்து விட்டான் அருணாசலம். அப்புறம் கடல் தாண்டி ஓடுவதில்லை என்று உறுதியும் செய்து கொண்டான். அங்கிருந்து வர அவன் பட்ட பாடு, அவனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்தது.

மல்லிகை அழகான மலர். அசாதாரணமான மணத்தை உடையதுதான். அன்னை பராசக்தியான ஜெகன் மாதாவின் முடி மீது இருக்கும் போது, பக்திப் பரவச உணர்ச்சியில் மணத்தை விட்டு மலரைப் பிரிக்க முடியாதது போல, அம்பிகையின் நினைவை விட்டு நம்மைப் பிரிக்க முடியாத நிலையடைய விரும்புகிறோம். அதே மல்லிகை, கீழ் மகளான ஒரு பெண்ணின் தலையில் இருக்கும் போது, சாத்தையாவைப் போன்றவர்களின் உணர்ச்சி எப்படிப் பாதிக்கப்படும்? இருவருமே பெண் இனத்தைச் சார்ந்தவர்கள். இருவர் முடி மீதும் இருப்பது ஒரே ஜாதிப் பூ. மனிதனும், அவன் மனமும்தான் வித்தியாசம். காலமும், சூழ்நிலையும் மாற்றியமைக்கும் வல்லமை வாய்ந்தது. மல்லிகைப் பூவின் உபயோகத்தில், சாத்தையா இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவன். கெட்டிக்காரத்தனம் இருந்தது. ஆனால், பிரயோகிக்கும் வழிதான் தவறானதாக அமைந்து வந்தது.

‘என் அக்கா மகள்தான் அல்லி!’ என்று எல்லோரிடமும் கூசாமல் சொல்லி வந்த அருணாசலம், சாத்தையாவிடம் அந்தப் பொய்யைச் சொல்லவில்லை. அவனுக்கு அல்லியைத் தெரியலாம் என்று, அவனது உள்ளுணர்வு கூறியது. ஆகவே, “நான் இவளைத்தான் கட்டிக்கப் போறேன், சாத்தையா!” என்று மட்டுமே பதில் கூறினான் அருணாசலம்.

“சரிதான், உங்க அப்பாவும், அம்மாவும் சம்மதிச்சிட்டாங்களா?”

“என்னைப் பற்றித்தான் தெரியுமே சாத்தையா! முன்னாளைய அருணாசலமேதான் நான்; கிராமத்திலே கட்டிப் போட்டாப் போல் இருக்கப் பிடிக்கலை. இப்படித்தான் நினைத்த இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கேன் . நான் அல்லியை ரெயிலிலே பார்த்தேன். இரண்டு பேருக்குள்ளும் ஒரு பிடிப்பு ஏற்பட்டுப் போச்சு. அப்பாவுக்கு விஷயத்தை எழுதினேன். நான் எப்படியாவது உருப்பிட்டு இருந்தாப் போதும்; என்கிறது அவர்கள் நினைப்பு. சம்மதம் தெரிவித்து விட்டாங்க!”

“அல்லியைப் பாத்தா, சம்மதிச்சிருக்கவே மாட்டாங்க!” என்றான் சாத்தையா,

“ஏன்!”

அருணாசலத்தின் கண்கள் ஆச்சரியமாக விரிந்தன.

“அவுங்க உலக அனுபவம் உள்ளவங்க; அல்லியைப் பத்தி, உன்னை விடத் தெரிஞ்சுக்குவாங்க!”

அருணாசலத்தின் மனத்தில் இடி இடித்தது.

“என்ன சொல்கிறாய், சாத்தையா?” என்று கேட்டான் அவன்.

“நான் சொல்றது. இருக்கட்டும். அல்லி, தன்னைப் பத்தி என்ன சொன்னாள்?”

அவள் ரெயிலில் தன்னிடம் சொன்னதைக் கூறினான் அருணாசலம். இதைக் கேட்டு விட்டு, மறுபடியும் அட்டகாசமாகச் சிரிப்பைக் கொட்டினான் சாத்தையா.

“அல்லி சொல்றதை நீ நம்புறியா?”

“ஏன், அல்லியைப் பற்றி உனக்குத் தெரியுமா?” என்று அருணாசலம் கேட்ட குரலில், ஆர்வம் குமிழியிட்டது.

“உன்னை விட எனக்குத் தெரியும் அருணாசலம்!”

“ஓஹோ…?”

“அருணாசலம் சொல்றேன், கேளு; அல்லிக்கு என் ஊர்தான். பெத்தவங்களை முழுங்கி ஏப்பம் விட்டது என்னமோ நெசம். அவுங்க ஒருத்தர் பின் ஒருத்தராகத் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களே, தெரியுமா?” என்று கேட்டு விட்டு நிறுத்தினான் சாத்தையா.

“தற்கொலையா பண்ணிக் கொண்டார்கள்?”

“ஆமாம்: பின்னே மகளுடைய நடத்தைக்காக, ஆயிரங்காலம் ஆயிசோடு இருக்கவா வரம் கேட்பாங்க?”—அவனுடைய இந்தக் கூற்று, அருணாசலத்தின் நெற்றிப் பொட்டில் கோடரியால் தாக்கியது போல் இருந்தது.

சற்று நேரம் அவனைச் சிந்திக்க விட்டு, மேற்கொண்டு தொடர்ந்து பேசினான் சாத்தையா.

“பெத்தவங்க இல்லாது போனா, சொந்தக்காரங்க கூடவா ஊரிலே இல்லாது போயிடுவாங்க? நல்ல மாடானா, உள்ளூரிலே விலை போகாதா, அருணாசலம்? நீ கொஞ்சம் யோசிச்சுப் பாரு. யாருக்கும் அடங்காமே அல்லி ஓடி வந்தான்னா, அங்கேதான் இருக்கப்பா ரகசியம்!”

தான் அல்லி கூட பழகத் தொடங்கிக் கொஞ்ச நாட்களே ஆகியிருந்தனவென்றாலும், அவளைப் பற்றி மேலான ஓர் அபிப்பிராயம் அருணாசலத்தின் உள்ளத்தில் எழுந்திருந்தது. ஆகவே, அவன் விட்டுக் கொடுக்காமல் சட்டென்று “உலகம் நாலும் சொல்லும் சாத்தையா. எல்லாவற்றையும் கேட்டு நடந்தால், அப்பனும் மகனும் கழுதை தூக்கின கதைதான். அல்லி அப்படிப்பட்டவளாகத் தோன்றவில்லை,” என்றான்.

இப்பொழுது பெரிதாகக் கொக்கரித்த சாத்தையா, “என் மேலே பொறாமையோ, கோபமோ படாமல் இருந்தியானா சொல்றேன்: அல்லி என்னுடைய உடைமையாகி வெகு நாளாச்சு, அருணாசலம்” என்று அலட்சியமாகத் தெரிவித்தான்.

“நிஜமாகவா?…”

“ஆமாம்; முன்னாலேயே மாங்குடியிலே அவள் பேரு கெட்டுப் போச்சு. அப்பனும், அம்மாவும் போனப்புறம், நான்தான் ஆதரிச்சேன். இந்த அல்லி சும்மா கெடக்காம, தன்னைப் பகிரங்கமாக கட்டிக்கணும்ன்னு ஆரம்பிச்சுது! என் அந்தஸ்தென்ன, ஆள் பலம் என்ன, குடும்ப கௌரவம் என்ன? இது நடக்குமா? எங்களுக்குள்ளே தகராறு ஆரம்பமாச்சுது; ஒரு நாள் பார்த்தா, கம்பி நீட்டிட்டா மகராசி. அப்புறம் நடந்ததெல்லாம்தான் உனக்குத் தெரியுமே?” என்று முடித்தான் சாத்தையா.

பொய்யானாலும், சொல் வன்மையினால் மெய்யாகி விடும் என்பது உண்மை. தெளிவில்லாத உளைச்சலோடு கலங்கிப் போயிருந்த அருணாசலத்தின் மனக்குளத்தில், மதம் கொண்ட யானை போல் இறங்கி, சேற்றையும், மண்ணையும் கிளப்பி விட்டு விட்டான் சாத்தையா. அருணாசலத்தின் உள்ளத்தில் அல்லியைப் பற்றிய வெறுப்பின் விதை ஊன்றி விட்டது. அது முளையிலேயே கருகி விடுமா? அதைக் கருக்கும் சக்தி யாருக்கு உண்டு? இல்லை, வளர்ந்து கிளைத்தெழுமா? அப்படியானால், அல்லியின் கதி என்னவாகும்? சிறு காற்று தன்னுடைய இன்ப மன விளக்கை அணைத்து விடாமல் இருக்க வேண்டுமே என்று எண்ணி, அருணாசலம் என்கின்ற ஆதரவைத் தேடி வந்தாள் அல்லி. அங்கே அதை அணைக்க ஒரு சூறாவளியே தயாராகும் என்பதை, அந்த அறியாப் பெண் உணரவில்லையே?

சாத்தையா சொல்வது ஏன் உண்மையாக இருக்கக் கூடாது? என்னைப் பற்றி அவள் எல்லாம் கேட்டறிந்து கொண்டாள்; ஆனால் அவளைப் பற்றி ஏதாவது கூறினாளா? நான் தூண்டித் துளைத்துக் கேட்கவில்லைதான்; இல்லாது போனாலும், அவள் மாசற்றவளானால், தானாகவே சொல்லியிருக்கலாமே? பழங்கதையைக் கிளறி, தன் அவல வாழ்வை அம்பலப்படுத்த வேண்டாம் என்ற எண்ணமாக இருக்கலாம். ‘மாங்குடியில் வந்து கேள்!’ என்று கூறினானே சாத்தையா? அன்றைக்கு சினிமாத் தியேட்டருக்கு முன்னால், செந்தாமரையின் அண்ணன் கூறின வார்த்தைகளிலிருந்தே, மாங்குடிக்காரர்களின் மனம் புரிகிறதே?…

‘இந்த சாத்தையாவிடம் அல்லிக்கு எவ்வித பயமும் இல்லாது போனால், அவள் அவனைக் கண்டவுடன் ஏன் மயங்கி விழ வேண்டும்? சம்பந்தமில்லாமல் ஏன் புலம்ப வேண்டும்? ஆம்; அல்லியின் வாழ்க்கையில் ஏதோ மர்மம் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அவள் மறைத்து என்னை ஏமாற்றப் பார்க்கிறாள்!’

இந்த எண்ணம் எழுந்தவுடன், வெறி கொண்ட வேங்கையானான் அருணாசலம்.

ராஜநாயகத்தின் அழைப்பின் பேரில் அருணாசலம் அவர் எதிரில் போய் நின்ற போது, அவனுடைய சுருண்ட கேசம் கலைந்து கிடந்தது; முகம் வெளிறியிருந்தது. கண்கள் கனலைப் போல் சிவந்து கிடந்தன. ராஜநாயகத்துக்கு, அவனுடைய நிலையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

“அருணாசலம் கவலைப்படாதேப்பா. அல்லிக்கு ஒன்றுமில்லை,” என்றார் அவர், தைரியம் சொல்லும் பாவனையில். அவர்களிடையே இருக்கும் பரஸ்பர அன்பை எண்ணிய போது, அவர் மனம் உருகத்தான் செய்தது.

“கல்யாணத்துக்கு நாள் ரொம்ப கிட்ட நெருங்கி வந்து விட்டதே. அல்லிக்கு அதுக்குள்ளே சௌக்கியமாகுமா என்கிற கவலை உனக்கு இருக்கத்தான் இருக்கும் அருணாசலம். கல்லெறி படலாம்; கண் எறியிலிருந்து தப்பிக்க முடியாதப்பா. அல்லியைப் பற்றி ரொம்ப பேருக்குப் பொறாமை. அதுவும் அவள் படத்திலே நடிச்சதிலிருந்து கேட்கவே வேண்டாம்.” என்று சொல்லிக் கொண்டே வந்த போது, அருணாசலம் குறுக்கிட்டான்;

“போதும் வாத்தியாரையா, அல்லிக்கும் எனக்கும் கல்யாணம் வேண்டாம்… …!”

ஒரு க்ஷண காலம் உலகத்தில் உள்ள உயிர்களெல்லாவற்றினுடைய மூச்சுக்களும் நின்று விட்டன போன்ற பேரமைதி அங்கே ஏற்பட்டது. நடப்பது கனவல்ல என்றறியவும், சிறிது அவகாசம் வேண்டியிருந்தது. அறிந்து கொண்டதும், உள்ளத்தில் ஆத்திரக் கடல் குமுறியது. எரிமலையின் கற்களென வெடித்துச் சிதறின வார்த்தைகள்; “என்னப்பா, குழந்தை விளையாட்டா விளையாடறே?” என்றார் ராஜநாயகம். ‘தந்தை மனம்’ வெடித்தது.

“இத்தனை நாளும் குழந்தைத்தனமாய் இருந்தேன். இனிமே அப்படி இருக்கவே மாட்டேன்,” என்று அதே சூட்டுடன் கூறினான் அருணாசலம்.

“உன்னுடைய இந்த தில்லுமுல்லுச் சமாச்சாரம் எனக்குத் தெரியாதா அருணாசலம்? மலருக்கு மலர் தாவும் வண்டு போலத்தான் நீ. இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான், முன்னமேயே நான் இந்த சம்பந்தத்தைத் தடுத்தேன். அப்பொழுது நீ பிடிவாதம் பிடித்தாய். இப்பொழுது அதே உன் வாய்தான் ‘மாட்டேன்’ என்கிறது! அல்லியின் மனசு, இந்தப் பேரிடியைத் தாங்குமா? அவள் உன்னுடைய பயங்கரமான முடிவைக் கேட்கச் சகிப்பாளா? அல்லிப் பூ வாடி விடுமே, அருணாசலம்?”

ராஜநாயகத்தின் விழிகள் கலங்கி வந்தன.

“அவளுக்கும் எனக்கும் இனிமே ஒரு தொடர்புமில்லை!” என்று தீர்மானத்துடன் கூறி, நிறுத்தினான் அருணாசலம் :

“எப்பொழுதிலிருந்து இந்த முடிவுக்கு வந்தாய்”

“கொஞ்ச நேரம்தான் ஆயிற்று” என்று கடுகடுத்த குரலில், அருணாசலம் சொன்னான்.

“காரணம்...?”

“இப்போது என்னை ஒன்றும் கேட்கக் கூடாது, வாத்தியாரையா. அப்புறம் நம் சினேகம் முறிஞ்சு போகும்!”

“இப்போ மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறதாக எண்ணமோ? வாத்தியாரையா என்று கூப்பிட்ட வாயைக் கழுவி விடு அருணாசலம். அல்லியை வேண்டாம் என்று சொன்ன பின், உனக்கும், எனக்கும் என்ன இருக்கிறது?”

“வாத்தியாரையா!”

“அருணாசலம், திகைப்பாயிருக்கிறதோ?”

“ஆமாம், அல்லி இடையில் வந்தவள். நம் பழக்கம் வெகு நாளையது”

“முதலில் பெண் கணவனைத்தான் அடைகிறாள் . இடையிலே வந்ததுதான் குழந்தை என்று அதை உதாசீனம் செய்கிறாளா? அந்தக் குழந்தைக்காக வேண்டித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாளே?

கணவனையும், அன்பென்னும் கயிற்றில் பிணைத்துப் போட முயலுகிறாள். சமயம் வருங்கால்—கணவன் மீறிப் போகுங்கால்—வாழ்வை வகுத்துக் கொடுத்த கணவனை, குழந்தையின் நலனுக்காக வேண்டி, அவள் உதறி விடவும் சித்தமாகிறாள்.”

“எனக்கு உபமான, உபமேயங்கள் எல்லாம் மூளையிலே ஏறவும் இல்லை; பிடிக்கவும் இல்லை!” என்றான் அருணாசலம்.

“உனக்கு மூளை என்று ஏதாவது இருந்தாலல்லவா ஏறும்?”

ராஜநாயகத்தின் இந்தப் பேச்சைக் கேட்டுச் சிலிர்த்தெழுந்தான் அருணாசலம்.

“அதிகம் பேச வேண்டாம், ஐயா. அல்லி மாசுபட்டவள்” என்று அருணாசலம் கனல் தெறிக்கச் சொன்ன போது, அவன் உடல உணர்ச்சி வசப்பட்டு நடுங்கியது.

அந்தப் பேரிடியை எதிர்பார்த்திருந்தவர் போன்று, அலட்சியமாகச் சிரித்தார் ராஜநாயகம்.

“இந்த மந்திரத்தை உனக்குச் சொன்னவன் அந்த அயோக்கியன் சாத்தையாதானே?” என்றார் ராஜநாயகம். வந்தது முதற்கொண்டு, சாத்தையாவையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.நடன ஆசிரியர் அல்லவா? பாட்டையும், தாளத்தையும், பாவத்தையும், முத்திரையையும் ஒருமிக்கக் கவனித்துப் பழக்கப்பட்டவராயிற்றே? சாத்தையாவைக் கண்டவுடன், அவருடைய அனுபவ மனம் எடை போட்டு விட்டது; ‘சாத்தையன் ஓர் அயோக்கியன்!’ அருணாசலமும், அவனும் கூடிக் கூடிப் பேசியது, அதற்குப் பின் அருணாசலத்திடம் ஏற்பட்ட முக மாறுதல், அவனுடைய போக்கு, எல்லாவற்றையும் ராஜநாயகம் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அவன் மனத்தை இத்துணை விரைவில் மாற்றும் அத்தனை சக்தி, சாத்தையாவுக்கு இருக்கும் என்று அவர் எண்ணவில்லை.

பூனையின் கண்கள் மூடி விடலாம்; அதற்காக உலகம் தன் பேரில், இருள் திரையை விரித்துக் கொண்டு விடுமா, என்ன?

இந்தச் சமயத்தில், வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களைக் கண்டதும், சாத்தையா இடியால் தாக்குண்டவன் போல் நின்றான். ஆம்; அவர்கள் செந்தாமரையும், அவளுடைய ஆசை அத்தானான கண்ணப்பனும்தான்.

கண்ணப்பனுக்கு, அல்லியைப் பற்றிச் செந்தாமரை சேதி சொன்னாள். அல்லி திரைப்பட நடிகை என்றவுடனேயே, கண்ணப்பனுக்கு அந்த விஷயத்தில்அக்கறை உண்டாகி விட்டது. சினிமா நட்சத்திரங்களின் பாதையில் தலையிடுவது எப்பொழுதுமே அவனுக்கு மிகவும் பிடித்தமான செயல். இந்த விஷயத்தில், தான் பிரவேசிப்பதன் மூலம், தன் காதலி. செந்தாமரையின் பெருமதிப்பைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதும், அவன் குதூகலத்துக்குக் காரணமாக அமைந்தது. வெண்டியப்பனுக்குத் தெரியாமல், அவர்களிருவரும் புறப்பட்டு வந்தார்கள். அல்லி நாட்டியமாடியிருந்த படக் கம்பெனியில் போய், அவளுடைய விலாசத்தை விசாரித்துக் கொண்டு வந்திருந்தார்கள். அல்லியை வாசலில் கண்டவுடனேயே, செந்தாமரையின் மனத்தில் நீறு பூத்திருந்த பழைய நட்புக் கனல், காற்றடிக்கப்பட்டு விலகிப் பிரகாசிக்க ஆரம்பித்திருந்தது. அவளுடன் தொடர்ந்த ஒர் ஆவலுடன் சாத்தையாவும் பேசி, நட்புக் கொண்டாடிக் கொண்டு காரில் சென்ற போது, செந்தாமரையின் மூளை தீவிரமாக வேலை செய்யத் துவங்கி விட்டது. ‘பாம்பு கொத்தப் படம் விரித்து விட்டது. விஷம் உடலில் பரவுமுன், நாம் போய்த் தடுக்க வேண்டும். தாமதம் செய்யக் கூடாது. அல்லி தன்னிடம் கொண்டிருந்த மாசற்ற அன்பிற்கு, இதுதான் கைம்மாறு’ என்று முடிவு கட்டினாள் செந்தாமரை. படிப்பு வாசனை அதிகம் இல்லாத பாமரப் பெண்ணானாலும், பகுத்தறிவு அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது.

அல்லியின் பெயரைச் சொன்னவுடனேயே, அவர்களை ராஜநாயகம் மரியாதை கொடுத்து வரவேற்றார்,

சாத்தையாவைக் கண்டவுடன், செந்தாமரை படமெடுத்தாடும் நாகமென மாறிச் சீறினாள். அவள் முகம் சிவந்தது; உடல் துடித்தது. “பாவி, இங்கேயும் ஏன் வந்தே? மாங்குடியில் உன் அட்டகாசங்களையும், அக்கிரமச் செயல்களையும் வச்சுக் கொண்டது போதாதா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலே உண்டு, தெரியுமா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தாங்காத போது, கையாலாகாதவன் புளுகு ஒரு பொழுது கூட நிலைக்காது தெரியுமா?” என்றாள் அவள்.

வாத்தியார் ராஜநாயகம் கதைச் சுருக்கத்தை, செந்தாமரையிடம் தெரிவித்தார்.

“அருணாசலம்! இவங்க பேச்சை எல்லாம் நீ கேக்காதே. அல்லிக்கு பரிஞ்சி பேச வருகிறவ, அல்லியைப் போல ஓடுகாலியாகத்தானே இருப்பா!” என்று சாத்தையா பேசி முடியுமுன், முஷ்டியைக் காட்டிக் கொண்டு பாய்ந்து வந்தான் கண்ணப்பன்.

“செந்தாமரையைப் பத்தி மேலே ஒரு பேச்சுப் பேசினே, உடம்பிலே உள்ள எலும்பை எல்லாம் எண்ணிக் கொடுப்பேன் கையிலே!” என்று கர்ஜனை செய்தான்.

“அத்தான் நீங்க சும்மா இருங்க!” என்று அவனைக் கையமர்த்திய செந்தாமரை, “தன்னைப் போலத் தானே மத்தவங்களையும் எண்ணுவான் சாத்தையா. ஊரை விட்டு ஓடி, சிங்கப்பூரிலே போய் வாழ்ந்த இந்த சாத்தையாவைப் பத்தி, மாங்குடியிலே போய் கேட்டுப் பார்த்தா யோக்கியதை தெரியும். இந்தச் செந்தாமரையோ, அல்லியோ இவனுக்குப் பயப்பட மாட்டாங்க!” என்று மீண்டும் சீறிய செந்தாமரை, உணர்ச்சி வசத்தால் தடுமாறினாள்.

அருணாசலம் சாத்தையாவைப் பார்த்த போது, அவன் தலை குனிந்திருந்தது. தன் அக்கிரமச் செயல்கள் முழுவதும் அம்பலமாகிப் போய் விடுமோ; அருணாசலம் தன் பேச்சை நம்பாது போய் விடுவானோ என்று திக்குமுக்காடினான்; ‘இந்தச் செந்தாமரை எங்கிருந்து இப்பொழுது வந்து முளைத்தாள்?’ என்று கலங்கிப் போய்த் தலை குனிந்து நின்றிருந்தான் சாத்தையா.

“தெய்வமே! என் மகள் அல்லிக்கு வாழ்வு கொடுத்து எங்களைக் காப்பாற்று!” என்ற ராஜநாயகத்தின் பிரார்த்தனை, உலகமெங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆண்டவன் பால் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது…

“யார் சொல்வதை நம்புவது? யார் சொல்வதை நம்பாமல் விடுவது? உண்மை எது? உண்மைக் கலப்பற்ற பொய் எது? தெய்வமே! நீதான் எனக்கு நல்ல வழியைக் காட்ட வேணும்!”

அருணாசலத்தின் இதய தீபம் சூறாவளிக்கு நடுவே அகப்பட்டு ஆடிக் கொண்டேயிருந்தது.