உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடும் தீபம்/தூவானம் விடவில்லை!

விக்கிமூலம் இலிருந்து

பொறி எட்டு:

தூவானம்
விடவில்லை!


‘சரக்’என்ற பேரிரைச்சலுடன், சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு முன்னால் வந்து நின்றது டாக்ஸி. மயங்கிக் கிடந்த ராஜநாயகத்தை அடியோடு மறந்து விட்ட அருணாசலம், தலை தெறிக்க ஓடினான். இரண்டு மூன்று வண்டிகள், அடுத்தடுத்து புறப்படத் தயாராயிருந்தன. இவற்றில் எந்த வண்டியில் அல்லியைத் தேடுவது? பதைபதைத்த அவனுடைய உள்ளம், விநாடி நேரம்தான் இந்தக் கேள்வியைச் சுற்றி வந்தது. எதிரே நின்று கொண்டிருந்த ரயிலை நோக்கி விரைந்தான். ஆற்றாமையும், ஆவலும் விழிகளில் அலை மோதிக் கொண்டு வந்தன. அல்லியைக் காணவில்லை. அவன் ரெயிலில் பிரயாணம் செய்த போது, ‘டிக்கட் இல்லாப் பிரயாணி’ என்ற கெட்ட பட்டத்தை அவ னுக்கு வரவொட்டாமல், காப்பாற்றிய அந்த அல்லியைக் காணவில்லை. அவனை மனிதனாக்கிய அல்லியைக் காணவேயில்லை. மூன்று ரெயில்களிலும், கவனமாகத் தேடினான். ஆட்டு மந்தை போல அலை மோதிக் கொண்டு வந்த மனிதக் கூட்டத்துக்குள் புகுந்து சென்று, ஆராய்ச்சி நடத்தி முடித்து, மிகவும் சோர்ந்து விட்டான் அருணாசலம்.

மயக்கம் தெளிந்த ராஜநாயகம் மேல்மூச்சு வாங்கியபடி காரிலிருந்தார். உடலும், உள்ளமும் வேர்த்து விட்டதால் அரைக் கண் பார்வையோடு, அருணாசலத்தின் வருகையையே கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய அருமை மகள் ஒரு நாள் கையையும், வாயையும் கட்டி விட்டுப் போனாளே? அப்போது கூட, அவர் இவ்வளவு அதிகமான துயரத்தை அனுபவித்ததில்லை. நேற்று வந்தவள். அசல் கட்டுப்பட்டியாக—அநாகரீகத்தின் வாரிசாக வந்த அந்த அல்லி, அவருடைய உள்ளத்தில் பாசத்தை இழையோடச் செய்ததோடு, உயிரைக் கூட அவளிடம் ஒப்படைக்கும் நிலைக்குக் கொண்டு வந்திருந்தாள். அருணாசலத்தின் தோற்றத்தைக் கண்டதும், அவருக்கு நிலை கொள்ளவில்லை. சக்தியனைத்தையும் ஒருங்கு திரட்டிக் கொண்டு எழுந்தார். “என்னப்பா, என் அல்லியைக் கண்டாயா?” என்று துயரத்துடன் கேட்டார். அவர் குரலில் ஆவல் படர்ந்திருந்தது. அவருடைய கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல், கதவைத் திறந்து கொண்டு காருக்குள் உட்கார்ந்தான் அருணாசலம். இவர்களிருவருக்கும் இங்கே வேலையில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, காரைக் கிளப்பினான் டிரைவர். சிறிது தூரம் சென்றதும், “எங்கே ஸார்?” என்று கேட்டான். இதைக் கேட்டதும் வெறி பிடித்தவனைப் போல, டிரைவரை நிமிர்ந்து பார்த்தான் அருணாசலம். “எங்கே போவது? அந்தச் சொறி நாயை சுட்டுக் கொன்றால்தான் எனக்கு ஆறும். போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு” என்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டான்

அருணாசலத்தின் பேச்சு, ராஜநாயகத்துக்குப் புரியவில்லை. சொறி நாய் என்று யாரைச் சொல்கிறான்? அல்லி காணாமற் போனதை இவன் தவறாக நினைத்துக் கொண்டு, அவளையே அவ்வாறு சொல்லுகிறானோ என்று நினைத்தார். “நீ யாரை சொறி நாய் என்று சொல்கிறாய், அருணாசலம்?” என்று கேட்டார்.

“யாரையா? இது என்ன கேள்வி? கபடமாக அல்லியைக் கடத்திச் சென்று விட்ட அந்தக் காலிப்பயலைச் சொல்கிறேன்!”

“யார் அவன்?”

“என்னுடன் விளையாடுகிறீர்களா?”

“யாரோ ஒருவனைக் குறிப்பிட்டுச் சொல்கிறாயே, அதற்காகக் கேட்டேன்.”

“இதோ பாருங்கள் வாத்தியாரே, என்னுடைய மன நிலை உங்களுக்குத் தெரியாது. தயவு செய்து, மேலும் என்னைக் கஷ்டப்படுத்தாதீர்கள்,” என்று சற்று கோபத்துடனே சொன்னான் அருணாசலம்.

ராஜநாயகத்தின் வீட்டுக்கு முன்னால் வந்து நின்ற அல்லியை காரை தூரத்திலிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தான் இன்னாசி. அவனுடைய கண்களும், மனமும் அந்தக் காரில்தான் நிலைத்திருந்தன. ராஜநாயகமும், அருணாசலமும் மட்டுமே கீழே இறங்கியதைக் கண்டதும், அவனுக்குத் திக்கென்றாகிவிட்டது. அப்படியானால், அல்லி எங்கே? கடந்த ஒரு மணி நேரமாக, அவன் அங்கேயேதான் நின்று கொண்டிருக்கிறான்.

அல்லி வீட்டில் இல்லை என்பதை அங்கு வந்தவுடனேயே புரிந்து கொண்டான். எங்காவது, வெளியே சென்றிருப்பாள் என்றுதான் நினைத்து, அங்கேயே நின்று கொண்டிருந்தான். ‘ஆனால், அல்லியில்லாமல், இவர்களிருவர் மட்டும் ஏன் வருகிறார்கள்? ஏன் அவர்கள் முகத்தில் களையே இல்லை?’

சிங்கப்பூரானிடம் சண்டையிட்டு, ஆஸ்பத்திரியில் கிடந்த போது, அவன் நினைத்ததே வேறு. சே!… ஒரு அடங்காப் பிடாரிப் பெண் பிள்ளைக்காகவா, நம் குலப் பெருமையையும் அழித்து, இப்படிச் சாகும் நிலைக்கு வந்திருக்கிறோம்? இந்த அல்லி போனால், இன்னொரு செந்தாமரை கிடைக்கிறாள்; முண்டம்’ என்று, சிங்கப்பூரானின் கத்தி ஏற்படுத்திய வடுக்கள் அவனை எண்ணத் தூண்டின. ஆனால், அவன் பிழைத்து வெளியே வந்ததுமா, அந்தச் சினிமாவைப் பார்க்க வேண்டும்? காலில் சதங்கையைக் கட்டிக் கொண்டு, ‘சலக் சலக்’கென்று நடந்து வந்து, திடீரென புள்ளி மானைப் போல ஒரு பெண் துள்ளித் துள்ளி ஆடினாளே?

அந்த நிமிஷமே, அவனுடைய இதயம் அல்லியின் மீது துள்ளிச் சென்று விட்டது. அவன் என்ன செய்வான்? நீண்ட அந்த இரு விழி மலர்களிலும், அவள் என்னதான் காந்த சக்தியை வைத்திருக்கின்றாளோ? முத்துப் பல் வரிசை தெரிய, மோகனமாக ஒரு புன் முறுவல் செய்தாளே, அதை அவன் வேறு எந்தப் பெண்ணிடமும் பார்த்ததில்லை. ஐந்தாம் தினத்துக் கூனல் பிறை; அங்கே இரண்டு வில்களைப் போன்ற கரிய புருவங்கள்; செம்பவழ உதடுகள்; ரோஜாக் கன்னங்கள்… …!

அன்றே அல்லியைக் காண முனைந்தான்.இன்னாசி. சென்னைக்கு வந்து, அழகி படத் தயாரிப்புக் கம்பெனியைத் தேடிப் பிடித்து, அல்லி தங்கியிருக்கும் ராஜநாயகத்தின் முகவரியையும் தெரிந்து கொண்டான். சிங்கப்பூர் சாத்தையனும் இந்த வழியைத்தான் கடைப் பிடித்தானென்றாலும், இன்னாசி கொஞ்சம் மூளையை உபயோகித்தான். ராஜநாயகத்தின் வீட்டுக்கு முன்னால், சில நாட்களாக நடை பயின்றான். அங்கு வந்த ஒன்றிரண்டு அலங்கார வல்லிகள் மூலம் அருணாசலத்துக்கும், அல்லிக்கும் திருமணம் நடக்கப் போகும் விவரத்தைத் தெரிந்து கொண் டான். பிறகு, அல்லியை முரட்டுத்தனமாக அழைத்துச் செல்ல முடியாதென்பதைப் புரிந்து கொண்டு, மூளையை உபயோகித்தே இனி மேல், வெற்றியடைய வேண்டும் என்று முடிவு செய்தான்.

அதன் விளைவாக உருவான அந்தப் ப்யங்கரக் கடிதத்தை மீண்டுமொரு முறை படித்தான். ‘சுகுணா, நல்ல பெயர் தான்’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டான். ‘ஒரு வேளை, உண்மையிலேயே அருணாசலத்துக்கு சுகுணா என்று ஒரு முறைப் பெண் இருந்து வைத்தால், என்ன செய்வது?--ஏன் இருக்கட்டுமே?’

சுகுணா என்ற பொய்ப் பெயரிட்டு எழுதிய புரட்டுக் கடிதத்தை தபாலில் சேர்த்த பிறகுதான், அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது. எப்படியும், அருணாசலத்தின் முகத்தில் அல்லி காறித் துப்பி, அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் போதும். அதன் விளைவு என்ன என்பதைத் தெரிந்து போகத்தான், இப்போது ராஜநாயகத்தின் வீட்டுக்கு முன்னால் அவன் பழியாய்க் கிடந்தான். அப்போது நடந்தவற்றை நினைத்த இன்னாசிக்கு, மயக்கம் வரும் போலிருந்தது.

உச்சி வெயிலில், கரையில் பிடுங்கிப் போடப்பட்ட அல்லிக் கொடியைப் போல, துவண்டு கிடந்தாள் அருணாசலத்தின் அன்புக்குரியவள். இமைகளிரண்டும் இறுக மூடியிருந்தன. இதழ்கள் இலேசாக விரிந்திருந்தன. அதிவேகமாகச் சுழன்று கொண்டிருந்த மின்சார விசிறி அளித்த காற்றினால், இரண்டு மூன்று கற்றைத் தலை முடி, அவள் முகத்தில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. அறை மூடப்பட்டு, அல்லி மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தாள். அடிக்கொரு முறை, காற்றில் அலைக்கழியும் ஜன்னல் திரைச் சீலை மட்டுமே படபடவென்று அடித்துக் கொண்டது. தவிர, அங்கே வேறு எந்த அரவமும் கேட்கவில்லை. நேரம் வளர்ந்து கொண்டேயிருந்தது. அல்லி படுத்திருந்த கட்டிலுக்கு அருகாமையில் கிடந்த ஒரு முக்காலியின் மீது, ஒரு தட்டில் கனிகளும், ஒரு கண்ணாடிக் கோப்பையில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தன.

இருந்தாற் போலிருந்து, இலேசாக அசைந்து கொடுத்தாள். மூச்சு இலேசாக இழையிட்டது. வலது கை வலுவிழந்ததைப் போல கட்டிலிலிருந்து இடம் பெயர்ந்து, கீழே தொங்கிய வேகத்தில், முக்காலியில் பட்டு விட்டது. கண்ணாடிக் கோப்பையும், பழத் தட்டும் கீழே விழுந்து, அமைதியைக் கலைத்துக் கொண்டு ஓசை எழுப்பின. திடுக்கிட்டுப் போய், வெடுக்கென விழித்தாள் அல்லி. படுத்திருந்தபடியே, சுற்றிலும் விழிகளை உருட்டி நோக்கினாள். இடம் புதிதாயிருக்கவே, ‘சட்’டென்று எழுந்து அமர்ந்தாள். கவிழ்ந்து கிடந்த பழத் தட்டையும், கோப்பையையும் ஒரு முறை பார்த்து விட்டு எழுந்து நின்றாள். சில மணி நேரங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள், அவளுடைய நினைவில் பளிச்சிட்டன. சினிமாக் கம்பெனிக் கார் வந்ததும், தான் அதில் ஏறிச் சென்றதும், பாதி வழியில் சிறிய தெரு ஒன்றுக்குள் திரும்பி, ஓர் இடத்தில் போய் நின்றதும், அப்போது காருக்குள் ஏறி அமர்ந்தவனைக் கண்டு, அவள் கூச்சலிட்டுக் கொண்டு மயங்கி விழுந்ததும், நன்றாக நினைவுக்கு வந்தது. அதன் பிறகு, என்ன நடந்தது என்பதுதான் அவளுக்குத் தெரியாது.

பாரதி கற்பனை செய்த புதுமைப் பெண்ணைப் பற்றி, அடிக்கடி ராஜநாயகம் சொல்லியிருக்கிறார் முறங் கொண்டு, புலியைத் துரத்தியடித்த வீரத் தமிழ்ப் பெண்மணி யொருத்தியின் கதையைக் கூறி, அவளாகத்தான் இருக்கும் பாரதியின் கற்பனைப் பெண்ணும் என்று சொல்வார். பாரதியின் புதுமைப் பெண் பாட்டுக்கு அல்லிக்கு அபிநயமே கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த இக்கட்டான நிலையில் அந்த அமரகவி நினைவுக்கு வந்தான். ‘அம்மா! என் கனவை வீணடித்து விடாதே. உன்னேயேதான் என் கற்பனைக் காரிகையாக வைத்துக் கவிதை புனைந்தேன். இப்போது, நீ மனம் தளர்ந்தாயோ, என் லட்சியமே பொடிப் பொடியாகி விடும். இதோ பார். வீரச் சின்னமான என் மீசையை. அடுத்தாற் போல, நீ செய்யப் போகும் வீரச் செயல்தான் மீசைக்கு மதிப்பை அளிக்கும்’ என்று கூறுகிறான் அக்கவிஞரேறு.

அடுத்தாற் போல, வயல் வெளியில் நெல்மணியிலிருந்து சருகைப் பிரிப்பதற்காக, முறத்தை வீசிக் கொண்டிருந்த அந்தத் தமிழ்ப் பெண் தோன்றினாள். “அதோ, தலை தெறிக்க ஓடுகிறது பார் ஒரு புலி. அதை நான்தான் துரத்தியடித்தேன். துணை யாரும் இல்லாமல், நான் மட்டும் எப்படிப் புலியை எதிர்க்க முடிந்தது என்று ஆச்சரியப் படுகிறாயா? ஆயுதம் எதுவுமில்லாமல் நான், அந்தப் புலியை எப்படி ஒடச் செய்தேனென்று நகைக்கிறாயா? எல்லாம் என் மன் வலிமையால்தான்! மனத்தில் உறுதி வேண்டும். அது போதும், எதற்கும் பயப்படாதே. நீ ஒரு தமிழ்ப் பெண். இன்று என்னைக் காவியங்கள் போற்றுகின்றன. எனக்குச் சிலை செய்து வைக்கப் போவதாகக் கூடப் பேச்சு அடிபடுகிறது. ஆகவே, என் பரம்பரையில் வந்த நீ என் பெயரைக் கெடுத்து விடாதே. பின் வாங்காதே, பயப்படாதே, உறுதி கொள்,” என்று அந்த வீரத் தமிழ் மகள் ஆவேசத்தோடு, அல்லிக்குத் தைரியமூட்டுவது போன்று, அவளுக்குப் பிரமை ஏற்பட்டது.

படுக்கையிலிருந்தபடியே, கண் திறந்து மிரள மிரள விழித்தது போலல்லாமல், இப்போது அல்லியின் மனம் ஒரு நிலைக்கு வந்தது. வெகு நிதானமாக, ஜன்னலருகில் நடந்து சென்றாள். வெளியே இருந்து வந்த காற்றின் வேகத்தில், பட்டாம் பூச்சி இறகைப் போல அடித்துக் கொண்ட திரைச் சீலையை நீக்கி, வெளியே பார்த்தாள். சற்று தூரத்தில், பெரிய ரஸ்தாவில் எறும்புக் கூட்டம் போல, கார்கள் ஊர்ந்து செல்வது தெரிந்தது. கடுகுக்குக் கையும், காலும் முளைத்தது போல மனிதர்கள் தெரிந்தார்கள். அவள் இருப்பது அநேகமாக ஆறாவது மாடியாக இருக்கலாம். சென்னை நகரை, அவள் அவ்வளவாகச் சுற்றிப் பார்க்கவில்லையாகையால் தான், தற்போது இருப்பது சென்னையில்தானா என்று கூட, அவளுக்குச் சந்தேகமாகி விட்டது, சீமையாகத் தானிருக்கட்டுமே என்று எண்ணி, மனசைத் தேற்றிக் கொண்டாள். பிறகு திரும்பி நடந்து, கதவருகில் சென்றாள். அவள் எதிர் பார்த்ததைப் போல, கதவு வெளிப் பக்கமாகவே பூட்டப்பட்டிருந்தது. ‘பாரதி, தன் புதுமைப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட சோதனையெல்லாம் வருமென்றா நினைத்திருப்பார்?’ என்று தனக்குள்ளாகவே எண்ணி, வேதனைப் பட்டுக் கொண்டு, சோர்ந்து போய், கட்டிலில் உட்கார்ந்ததாள்.

ராஜநாயகத்தின் வீட்டுக்கு முன்னால், ஒரு போலீஸ் வண்டி வந்து நின்ற்தைக் கண்டதும், இன்னாசிக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏதோ ஆபத்து என்று முடிவு செய்து விட்டான். அதற்கு மேல், அங்கு நின்று கொண்டிருக்க முடியவில்லை. தன் கடிதம் ஏதாவது கோளாறு செய்து விட்டதோ என்று இடையில், அவனுக்கு ஒரு சந்தேகம். என்னதான் என்று பார்த்து விடுவோமே என்று ராஜநாயகத்தின் வீட்டை நெருங்கினான்.போலீஸ்காரர்களைக் கண்டதும், ராஜநாயகம் ஓடோடி வந்தார். எல்லோருமாக வாசலிலேயே நின்று பேசிக் கொண்டிருந்தது, இன்னாசிக்கு மிகவும் வசதியாகி விட்டது. நடந்தவைகளை, அங்கிருந்தோரின் பேச்சுக்களிலிருந்து புரிந்து கொள்ளவும் முடிந்தது. சினிமாக் கொட்டகையில் சிங்கப்பூர் சாத்தையாவைச் சந்தித்த விவரத்தையும், அதன் பிற்கு நடந்த சம்பவங்களையும் விவரித்து விட்டு, ஒரு வேளை, அவன்தான், அல்லியைக் கடத்திச் சென்றிருப்பானே என்ற சந்தேகத்தை எழுப்பினான் அருணாசலம். இதைக் கேட்டதும், இன்னாசிக்கு முகம் குப்பென்று சிவந்து விட்டது. ‘அந்த நாயுடைய வேலைதான இது?’ என்று தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

மணி ஆறரை. மாடிப் படிகளில் யாரோ ஏறி வரும் ஓசை கேட்டது.

அல்லி மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். ஊராரின் தீ நாக்குப் பொசுக்கிய காயங்கள் கொடுத்த வேதனையால், மனசை திடப்படுத்திக் கொண்டு, ஊரை விட்டே வெளியேறினாள். ஊர் எல்லையைக் கடக்கும் தறுவாயில், சிங்கப்பூரானும், இன்னாசியும், அவளுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, வெவ்வேறு திசைகளில் இழுத்த போதும், கடையிசில் அவர்கள் சண்டைச் சேவல்களைப் போல, கத்தியைப் பிடித்துக் கொண்டு கொக்கரித்த போதும், எப்படி இதயத்தைத் திடப்படுத்திக் கொண்டாளோ, அதை விடப் பல மடங்கு தைரியமடைந்தாள். அவள் நினைவில், பாரதி தோன்றினார். புலியை விரட்டிய தமிழச்சி தெரிந்தாள்.

வெளிப்பக்கமாக இருந்த பூட்டு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அல்லிக்கு விழிகளிரண்டும் அடித்துக் கொண்டன. அது பயமல்ல; யாராயிருக்கும் என்று அறியத் துடிக்கும் மன ஆவலின் எதிரொலி.

சிங்கப்பூர்ச் சாத்தையன், தன் தங்கப் பல் தெரியச் சிரித்தபடி நின்றிருந்தான். “உன் நாட்டியம் ரொம்ப நன்றாக இருந்தது, அல்லி!” என்று சிரித்தபடி சொன்னான்.

வெடுக்கென்று அவனை ஏறிட்டு நோக்கிய அல்லியின் விழிகளில், கனல் தெறித்தது “இப்போது என் முன்னால் நீ ஆடிக் கொண்டிருக்கிறாயே, இந்த மாதிரி கேவலமான நாட்டியமல்ல அது!…”

சாத்தையன் நிலைமையை உத்தேசித்து, தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டான்.

“அல்லி, நீ என்னைப் புரிந்து கொள்ளவேயில்லை. அந்த இன்னாசியுடன் சேர்த்து, என்னையும் எடை போட்டு விட்டாய். அவன் வெறி பிடித்து, உன்னைச் சுற்றிக் கொண்டு வந்தான். நிஜமாகவே சொல்கிறேன்; உன்னைக் கல்யாணம் செய்து கொள்வதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன். இப்போதும் அப்படியேதான் நினைக்கிறேன்.”

“உன் எண்ணத்தில் ஒரு வண்டி சமுத்திர மணலை வாரிக் கொட்டி சமாதி வைத்து விடு. ஏனென்றால், அடுத்த வாரம் எனக்கும், வேறொருவருக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது.”

“யார் அவன் உன்னைக் கட்டிக் கொள்ளப் போகிறவன்? கண்ட துண்டமாக வெட்டிப் போடுவேன் கழுதைப் பயலை…!”

“உன் வீரமெல்லாம் எனக்குத் தெரியும். வயற்காட்டுக் கரம்பையில், கத்திக் காயம் பட்டு வாயைப் பிளந்து விழுந்ததை நானல்லவா, பார்த்தவள்!”

“அல்லி, நீ ரொம்பப் பேசி விட்டாய். என்னைப் பற்றி நீ தெரிந்தது ரொம்பக் குறைவு. இனி மேல், போகப் போகத் தெரியும் என் மகிமை!”

“தூ…!”

இதைக் கண்டதும், ஆவேசம் கொண்டவனப் போல, ‘அல்லீ’ என்று கதறிக் கொண்டே, அல்லியின் மீது பாய்ந்தான் சிங்கப்பூரான். அதே நேரத்தில் பலமான இரும்புக் கம்பி ஒன்று அவன் தலையில் வந்து விழுந்தது. ‘அம்மா’ என்று அலறிக் கொண்டு, கீழே சாய்ந்தான்.

‘வீல்’ என்று கதறியபடி, எழுந்து நின்றாள் அல்லி. அவளுடைய உடல் நடுங்கியது. எல்லாம் இமைக்கும், நேரம்தான். அடுத்து அங்கே தோன்றிய இளைஞனைக் கண்டதும், இன்னும் மிரண்டு விட்டாள் அல்லி. இற்றுப் போன மரத்தைப் போல, கால்கள் நிலையில்லாமல் ஆடின. இதயம். உருகிக் கரைந்து விட்டது போல ஓர் உணர்வு; தலை சுழன்றது. கண்களிரண்டும் பட படவென்று துடித்து, மேலே மேலே செருகிக் கொண்டு சென்றன. மயங்கிய நிலையில் கீழே இறங்கிப் போன அல்லியின் கண்கள், கீழே விழுந்து கிடந்த சாத்தையனை நோக்கின. அவனது தலையிலிருந்து, ரத்தம் குபுகுபுவென்று கொட்டிக் கொண்டிருந்தது. சாத்தையன் மயங்கிக் கிடந்தான். அல்லியையும், அவனையும் மாறி, மாறிப் பார்த்தபடி, செய்வதறியாது திகைத்தபடி நின்று கொண்டிருந்தான் இன்னாசி.