ஆர்க்டிக் பெருங்கடல்/ஆர்க்டிக் பகுதி

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
2. ஆர்க்டிக் பகுதி

இருப்பிடம்

அண்டார்க்டிக் கண்டத்தைவிடக் குளிர் சற்று மட்டாக உள்ள பகுதி ஆர்க்டிக் பகுதி ஆகும். இது வட முனையைச் சுற்றி அமைந் துள்ளது; ஆர்க்டிக் கடலால் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பு 59 இலட்சம் சதுர மைல்கள்.

இதன் நிலப்பகுதி மட்டும் 40 இலட்சம் சதுர மைல் பரப்புடையது. ஓரளவுக்கு மக்கள் வாழும் பகுதியாக உள்ளது.

ஒளிகள்

கண்ணையும் கருத்தையும் கவரும் பல வண்ண ஒளிகளான வட முனை ஒளிகள் இங்கு உண்டாகின்றன. வான்வெளிக் கப்பல்களில் செல்வோர் இக்கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களிக்கலாம்.

தட்ப வெப்பநிலை

அண்டார்டிக் கண்டத்தைக் காட்டிலும் இங்குப் பனிக்கட்டி குறைவு என்று சொல்ல வேண்டும். இதன் குளிர்ந்த பகுதிகள் தென் கிழக்குச் சைபீரியாவிலும், கனடாவில் அலாஸ்காவின் சில மாவட்டங்களிலும் உள்ளன. தென் கிழக்குச் சைபீரியாவில் வெர்க்கோயான்ஸ்க் என்னுமிடத் தில் பதிவான குறைந்த வெப்பநிலை –90° F. 

இங்குக் கோடை, மாரிக் காலங்களும் உண்டு. கோடைகள் குறுகியவை; மக்கள் வாழும் உலகின் மற்றப் பகுதிகள் போலவே கதகதப்பானவை. கோடையில் எங்கும் ஒரு நாள் முழுதும் கதிரவன் மறையாது. மாரிகள் நீண்டவை; குளிர் நிறைந்தவை. இருட்டும் குளிரும் நிறைந்த பகுதிகளில் கனடா, உருசியா, நார்வே, ஸ்வீடன் முதலிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றார்கள்.

இங்குப் பனி அதிகம் பெய்கிறது. கோடையில் மாரிக்காலப் பனியும், பனிக்கட்டியும் உருகி ஆர்க்டிக்கின் துந்திரப் பகுதியை (பனிவெளிப் பகுதியை) சதுப்புச் சமவெளியாக மாற்றுகின்றது.

பனியாறுகள்

ங்கு நாம் எதிர்பார்க்கும் அளவுக்குப் பனி அதிகம் இல்லை. வட முனையின் சுற்றுப்புறத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை –50° F. கனடா, சைபீரியா, கிரீன்லாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் இதைவிடக் குளிராக இருக்கும்.

உயர்ந்த மலைகள் கடலுக்கு அருகிலுள்ள இடத்தைத் தவிர, ஆர்க்டிக் கடற்கரையின் மற்ற இடங்களில் கோடையில் பனி இல்லாமலே இருக்கிறது. வட முனையில் நடுக்கோடையில் அரிதாகப் பனி பெய்யும். ஆனால், மழை உண்டு.

ஆர்க்டிக் தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அலாஸ்கா, கனடா, ஸ்காண்டிநேவியா ஆகிய பகுதிகளிலுள்ள பனியாறுகள் பின் வாங்கிய வண்ணம் உள்ளன.

பனியாறுகளிலிருந்து உண்டாகும் பனிப்பாறைகள் அண்டார்க்டிக் பகுதியில் தட்டையாக இருக்கும். ஆர்க்டிக் பகுதியில் உள்ளவை சிதைந்தும் உச்சி உள்ளவையாயும் இருக்கும். உருசியர்களின் மதிப்பீட்டின்படி, கடந்த 25 ஆண்டுகளில் மிதக்கும் பனிக்கட்டி ஆர்க்டிக்கின் 1½ இலட்சம் சதுர மைல் பரப்பிலிருந்து நீங்கியுள்ளது.

புயல்கள்

அண்டார்க்டிக் பகுதியில் புயல் காற்றுகள் அதிகம். ஆனால், ஆர்க்டிக்கில் கடல் உயர்ந்த மலைகளைச் சந்திக்கும் இடத்தில் மட்டும் புயல் காற்றுகள் சாதாரணமாக இருக்கும். ஆகவே, ஆர்க்டிக் பகுதியை, உலகிலேயே புயல்கள் மிகக் குறைவாக அடிக்கும் இடம் என்று கூறலாம்.

இயற்கை வளம்

இயற்கை வளங்கள் நிறைய உண்டு. நிலக் கரி, எண்ணெய், செம்பு, பொன், வெள்ளி, பிளாட்டினம் முதலியவை போதிய அளவுக்கு உள்ளன. ஆர்க்டிக்கடலைச் சூழ்ந்துள்ள நாடுகளில் கனி வளங்கள் அதிகமுள்ளன.

அலாஸ்காவில் பொன், நிலக்கரி, எண்ணெய், பிளாட்டினம் ஆகியவை கிடைக்கின்றன. கனடா வின் வட பகுதியில் நிலக்கரி, பொன், யுரேனியம் கிடைக்கின்றன. சைபீரியாவில் தாதுக்கள் அல்லது கனிப் பொருள்கள் நிறைய உள்ளன.

கிரீன்லாந்திலிருந்து அலுமினியம் செய் வதற்கு வேண்டிய எல்லாக் கிரியோலைட்டும் கிடைக்கிறது. ஸ்பிட்சன்பர்க்கிலிருந்து பெருமள வுக்கு நிலக்கரி கிடைக்கிறது. தொலை வடக்குப் பகுதியில் பொன், செம்பு, இரும்பு, எண்ணெய், ரேடியம், யுரேனியம் ஆகியவை கிடைக்கின்றன.

ஆர்க்டிக்கின் பெரும் பகுதி ஆராயப்படாத பகுதியாகும்; வளராத பகுதியாகும். இருப்பினும், அது ஒரு பெரிய கனிப் பொருள் களஞ்சியமாக விளங்குகிறது.

உயிர்கள்

நிலப்பகுதியில் அரிய மரங்கள் மிகுதியாக உள்ளன. மரங்கள் இல்லாத பகுதியில் கால்நடைகளுக்கு வேண்டிய தானியங்கள் விளையும். புல், பூண்டு முதலியவையும் உண்டு. சோவியத்து நாட்டுக்குச் சொந்தமான பகுதிகளில் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. மற்றும் லைக்கன்கள், பாசிகள் முதலியனவும் காணப்படுகின்றன.

சைபீரியாவின் லீனா ஆற்றுப் பள்ளத்தாக்கு மிகக் குளிர்ந்த இடமாகும். இங்கு மாரிக் காலங் கள் மிகக் குளிராக இருக்கும். இங்கு வெப்பநிலை —90° F அளவுக்குக் குறையும். கோடையில் பனியும் பனிக்கட்டியும் உருகுவதால், வெப்பநிலை 70° F அளவுக்கு மேல் இருக்கும்.

குறுகிய கோடைகளில் நிலப் பகுதியின் பனிக்கட்டி பெருமளவுக்கு உருகும். அதன் சில பகுதிகளில் காய்கறிகள், பெரிகள், பூக்கள் முதலியவை பயிரிடப்படுகின்றன. கோடையில் பார்க்கக் கடற்கரை ஆளற்றதாயும் மரம் இல்லாததாயும் காணப்படும். மாரிக்காலம் பனிக்கட்டி உருகித் துந்திர வெளியைச் சதுப்புச் சமவெளி யாக்கும். இவ்வெளியில் புல், லைக்கன், பாசி, காட்டுப் பூக்கள், தாழ்ந்த புதர்கள் முதலியவை காணப்படும். புதர்களின் மேல் வண்ணத்துப் பூச்சி முதலியவை மொய்க்கும்.

கடல் நாய்கள், துருவக் கரடிகள், மீன்கள் முதலியவை ஆர்க்டிக் பகுதியில் வாழ்பவர்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. திமிங்கிலங்களும், கஸ்தூரி எருதும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றன. கலைமான்கள் நிறைய உள்ளன. கீரிகள், கஸ்தூரி எலிகள், நரிகள், முயல்கள் முதலியவை கண்ணி வைத்துப் பிடிக்கப்படுகின்றன. நிலப் பறவைகளும் கடற் பறவைகளும் அதிகமுள்ளன.

பொதுவாக, ஆர்க்டிக் விலங்குகளின் வகை கள் அதிகமில்லை. ஆழ்கடல் மீன்களின் வகைகள் - அதிகமுள்ளன. வட கடல்களில் நண்டு நத்தை, ஜெல்லி மீன், புழுக்கள் முதலியவை உள்ளன. அக் கடல்களில் சால்மன், காட் முதலிய மீன்களும் நிறைய உள்ளன.

தொலை வடக்குப் பகுதியில் தேனீக்கள், ஈக்கள், அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள் முதலியவை குறைந்த அளவுக்குக் காணப்படுகின்றன; காரணம் போதிய பயிர்கள் இல்லா மையே ஆகும்.

இங்கு இடம் பெயரும் கடற் பறவைகளும் உள்ளன. பல வகைத் திமிங்கிலங்களும், கடல் நாய்களும் காணப்படுகின்றன. வேல்போன் திமிங்கிலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

துருவக் கரடி, கலைமான், நரி, ஓநாய், எருது முதலியவை நிலப் பகுதியில் வாழும் விலங்குகள்.

ஆர்க்டிக் விலங்குகள் பூச்சிகளையோ, புல் பூண்டுகளையோ தின்பன அல்ல. கடல் அல்லது நிலப் பகுதியில் வாழ்வதால் மீன்களையும், ஊனையுமே அவை தின்கின்றன.

அவைகளில் பல மாரிக்காலத்தில் பனி வெள்ளை நிறத்தைப் பெறும். அவ்வாறு நிற மாற்றம் பெறுபவை பறவைகள், முயல்கள் முதலியவை ஆகும். இவை கோடையில் மாநிறத்துடன் காட்சி அளிக்கும். நரியின் நிறம் கோடையில் மாக்கல் நீலமாகவும், மாரிக்காலத்தில் வெண்ணிறமாகவும் இருக்கும். துருவக்கரடி ஆண்டு முழுதும் வெண்ணிறத்துடனே காட்சி அளிக்கும்.

மக்கள்

ஆர்க்டிக் பகுதியில் முக்கியமாக எஸ்கிமோக்கள் வாழ்கின்றனர். 1915 ஆம் ஆண்டிற்குப் பின் ஆர்க்டிக் ஆராய்ச்சியில் உருசியா முதலிடத்தைப் பெற்றது. அதன் வட பகுதியை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

மர்மான்ஸ்க் ஒரு பெரிய நகரமும் துறை முகமும் ஆகும். இது ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே உள்ளது. இரண்டாம் உலகப் போரில் இது அதிகமாகப் பயன்பட்டது. இதன் மக்கள் தொகை ஒரு இலட்சம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆர்க்டிக் கண்டத்திலுள்ள தென் பகுதியின் பொருள் வளத்தைப் பெருக்க நார்வே அதிகம் செலவிட்டுள்ளது.

துருவப் பகுதியின் வழியாக நடக்கும் விமானத்தாக்குதலுக்கு அமெரிக்காவிற்கு முதல் அரணாக இருப்பது ஆர்க்டிக் பகுதி ஆகும். இதை உணர்ந்து இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் தங்கள் ஆர்க்டிக்கின் வட பகுதிகளில் அதிகமாகக் கவனம் செலுத்தியுள்ளன.

ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே, கண்டத்தின் உச்சியில் ரேடார் நிலையம் ஒன்றை இரு நாடுகளும் சேர்ந்து கட்டியுள்ளன. புதிய விமானத் தளங்களும் வானிலை, வானொலி நிலையங்களும் இங்குக் கட்டப்பட்டுள்ளன. இரு நாடுகளிலிருந்தும் வரும் விஞ்ஞானிகள் இந்நிலையங்களில் ஆராய்ச்சி செய்கின்றனர்.

வழிகள்

யுரேஷியாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் குறுக்கு வழிகள் ஆர்க்டிக் கண்டத்தின் வழியாக அமைகின்றன. உலகப் படத்தைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு நன்கு விளங்கும். எதிர் காலத்தில் வாணிப விமான வழிகள் இக் கண்டத்தின் வழியாக நடைபெறலாம் என்று நாம் நம்பலாம்.

நாடுகள்

ஆர்க்டிக் நிலப் பகுதியில் அதிக அளவுக்கு உரிமை உடையவை சோவியத்து நாடும் கனடாவும் ஆகும். அமெரிக்கா, டென்மார்க்கு, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் ஆர்க்டிக்கில் நிலப் பகுதிகள் உள்ளன.

முக்கிய மையங்கள்

ஆர்க்டிக் வட்டத்தில் சில முக்கிய மையங்கள் உள்ளன. அவை பின் வருமாறு;

மர்மான்ஸ்க்: பசிபிக் கடலுக்குச் செல்லும். வடகடல் வழியின் முடியுமிடமாக இது உள்ளது ஆர்க்டிக் நகரங்களிலேயே பெரியது. 

ஐகார்க்கா : இது எனிசே ஆற்றங் கரையில் உள்ளது. மரம் ஏற்றும் இடம்.

வெர்க்கோயான்ஸ்க் : இது மிகக் குளிர்ந்த இடம். சைபீரியாவில் உள்ளது.

ஹாமர் பெஸ்ட் : நார்வேயில் உள்ளது ; உலகின் மிக வடக்கே உள்ள நகரம் ; ஆர்க்டிக் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு தளம்.

நர்விக் : ஒரு துறைமுகம். லாப்லாந்து ரயில் வழி முடியுமிடம்.

ட்ராம்சோ, கிருனா, கலிவர் ஆகிய மையங்களில் இரும்பு மிகுதியாகக் கிடைக்கின்றது. அலாஸ்காவில் யூமியத் ஒரு எண்ணெய் மையமாகும்.