உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்க்டிக் பெருங்கடல்/ஆர்க்டிக் பற்றி அரிய செய்திகள்

விக்கிமூலம் இலிருந்து
7. ஆர்க்டிக் பற்றி அரிய செய்திகள்

ஆர்க்டிக் பகுதியில் அண்மைக் காலத்தில் நடந்த ஆராய்ச்சியினால் பல அரிய செய்திகள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு:

கனிவளம்

உறைந்த ஆர்க்டிக் பகுதியில் 200 ஆண்டுகள் வரை கிடைக்கக்கூடிய நிலக்கரி புதைந்துள்ளது. பெட்ரோலியமும் அதிக அளவுக்குத் தேங்கியுள்ளது. இங்குச் செம்பு, அலுமினியம், காரீயம், துத்தநாகம், டங்ஸ்ட ன், யுரேனியம், தங்கம் ஆகியவை பனிக்கட்டிக்குக் கீழ்ப் புதைந்துள்ளன.

பெரிங் நீர்வழி அணை (Bering Strait Dam)

திரு. பயோட் போரிசவ் அனுபவம் வாய்ந்த சோவியத்துப் பொறி இயல் அறிஞர். இவர் முன் மொழிந்துள்ள பயனுள்ள திட்டம் பெரிங் நீர்வழி அணையாகும். ஆசியா, அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களுக்கிடையே பெரிங் நீர் வழிக்குக் குறுக்கே இந்த அணை கட்டப்படுமானால், ஆர்க்டிக் பகுதி வெப்பமடையும். அரக்க ஆற்றல் வாய்ந்த குழாய்கள் ஆர்க்டிக் கடலிலுள்ள நீரை இறைத்துப் பசிபிக் கடலுக்கு அனுப்பும். இதனால், ஆர்க்டிக் பகுதி வளமிக்க பகுதியாக வாய்ப்புண்டு. இத்திட்டம் பற்றிக் கருத்து வேறுபாடுகளும் உண்டு.

அணுகு வழிகளும் ஆராய்ச்சியும்

பல நூற்றாண்டுகளாக விழும் பனி அழுத்தப் பட்டு 2 மைல் தடிமனுள்ள பனிக்கட்டி மலைகள் அண்டார்க்டிக்கில் உண்டாகியுள்ளன. எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய அணு உலையும் அமைக்கப் பட்டுள்ளது. இது உலகின் முதல் அணு உலை. மின்னாற்றல் அளிக்க இஃது அமைக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டியின் மேற்பரப்பில் லெனின் என்னும் பனி உடைக்கும் கப்பலும் சென்றுள்ளது. அட்லாண்டிக் பக்கத்தில் இருந்து தாழ்ந்து அமைந்துள்ள அணுகு வழிகளும், பசிபிக் பகுதியிலிருந்து ஆழமற்ற பாதைகளும் இதற்குண்டு. 1900க்குப்பின் வட முனை, ஆண்டுக்கு அரையடி வீதம் கிரின்லாந்து நோக்கி நகர்ந்து செல்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மைய ஆர்க்டிக் வடி நிலத்தைச் சோவியத்து முறையாக ஆராய்ந்துள்ளது. இதனால் ஆர்க்டிக் கடலில் கப்பல் செலுத்துவதை மேலும் விரிவாக்க முடிகிறது. 1962 - இல் கப்பல் செல்லுதல் ஒரு மாதம் வரை நடைபெற்றது. சோவியத்து மக்கள் உள்ள வட கடல்வழி பல பகுதிகளுக்கு வாழ்வளித்துள்ளது. சோவியத்துத் துந்திராவில் கடல் துறைமுகங்களும், தொழில் நகரங்களும் ஏற்பட்டுள்ளன.

மைய ஆர்க்டிக் பகுதியை ஆராய்வதால், அதனை வளப்படுத்தப் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இங்கு நடந்த ஆராய்ச்சியின்படி, மிக வெப்பமான நாட்களில் பனிக்கட்டி மேற்பரப்பின் காற்று வெப்ப நிலை 2°C-க்கு மேல் உயர்வதில்லை. ஆனால், ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் வெப்பநிலை 10°C ஆக உள்ளது.

கல்ய நீரோட்டம்

இந்நீரோட்டம் ஆர்க்டிக் கடலில் ஒரு சுற்று சுற்றியபின், தன் வெப்பத்தில் பெரும் பகுதியை இழந்து அட்லாண்டிக் கடலுக்குத் திரும்புகிறது. இது எதிர் நீரோட்டத்தை உருவாக்குவதால், வெப்ப நீரோட்டங்கள் உள்ளே வருவது தடுக்கப்படுகின் றன. 14,000 கன கிலோ மீட்டர் நீர் ஆர்க்டிக் கடலில் ஓடுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதே அளவு நீர் அட்லாண்டிக் கடலுக்கும் திரும்புகிறது

வானிலையின் அடுக்களை

வடஅரைத் திரளையின் பனிப்பொதிகை ஆர்க்டிகா ஆகும். இது வானிலையின் அடுக்களையாகும். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மாரி , இலையுதிர் காலம், கோடை, இளவேனிற்காலம் ஆகிய காலங்களில் இது குளிர் அலைகளை அனுப்புகிறது. முனைப் பகுதியை மாற்றாமல், எவ்வகை அடிப்படை மாற்றத்தையும் புவித் தட்ப வெப்ப நிலையில் ஏற்படுத்த முடியாது.

பள்ளத்தாக்கு

ஆர்க்டிக் கடலில் கிரீஸ்லாந்திலிருந்து சைபீரியாவரை உள்ள பிளவுப் பள்ளத்தாக்கு 4000-5000 அடியுள்ள வெட்டுப் பகுதியாகும். இதன் கீழ்ப் பகுதி 2-3 மைல் அகலமுள்ளது. இதன் மேல் தளங்கள் அதன் பக்கவாட்டில் செல்கின்றன. இப்பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலுமுள்ள மலைத்தொடர்கள் 150 மைல் அகலமுள்ள மண்டலத்தைத் தோற்றுவிக்கின்றன.

மலைத் தொடர்கள்

ஆர்க்டிக் கடலில் பெரிய மலைத்தொடர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு இங்குக் குறிப்பிடத்தக்கவை. ஒன்று இலாமன சோவ் மலைத்தொடர். மற்றொன்று மெண்டலியவ் மலைத்தொடர். முன்னது நோவாசி-பிர்ஸ்க் தீவுகளிலிருந்து வடமுனை வரை செல்லுகிறது. பின்னது ரேங்கல் தீவுகளுக்கும் கிராண்ட்லாந்துக்கும் இடையிலுள்ளது.

காந்தப் புலம்

ஆர்க்டிக் கடலின் வடக்கே எடுக்கப்பட்ட ஒலிப்பு அளவீடுகளின் படியும், வானூர்தி மூலம் நடைபெற்ற காந்த அளவுப் படியும், அதன் மலைத் தொடருக்கு இணையாக வரிக்குதிரை கோலமுள்ள காந்தம் அதில் உள்ளது என்பது தெரியவந்துள் ளது. அண்மைக் காலத்தில் அட்லாண்டிக், பசிபிக் ஆகிய கடல்களின் தரையில் காணப்படும் கோலத்தை இக்காந்தம் ஒத்திருக்கிறது.