ஆர்க்டிக் பெருங்கடல்/பனிவெளிப் பாசறை

விக்கிமூலம் இலிருந்து
4. பனி வெளிப் பாசறை

இடம்

உலகின் ஒரு கோடியான வட முனையிலிருந்து 800 மைல் தொலைவில் கிரீன்லாந்து என்னுமிடம் உள்ளது. ஆர்க்டிக் பகுதியில் உள்ளதால் கிரீன்லாந்து பனிக்கட்டி நிரம்பியது. இங்கு அமெரிக்கா ஒரு பாசறையை அமைத்துள்ளது. இதற்கு ‘கேம்ப் சென்ச்சுரி’ என்று பெயர்.

நோக்கம்

துருவ ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பல திட்டங்களை அமெரிக்கா வகுத்துள்ளது. இத் திட்டங்களை நிறைவேற்ற இப்பாசறை அமைக்கப்பட்டுள்ளது.

காலம்

பனிக்கட்டியின் இயக்கத்தினால் பாசறை கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைய வல்லது. ஆகவே, பாசறையில் தங்கும் காலம் 10 ஆண்டு ஆகும். இக்காலத்திற்கு மேலும் தங்கலாம். ஆனால், நீண்ட காலம் தங்குவதற்கில்லை.

அமைத்தல்

ஆழமான அகழிகளால் ஆனதே பாசறை. எந்திரத்துணையுடன் ஆழமான அகழிகள் வெட்டப்பட்டன. வளைந்த தகடுகள் அகழிகளின் மீது போடப்பட்டன. தகடுகள் போதுமான அளவு உயரத்திற்கு இளகலான பனிக்கட்டியால் மூடப் பட்டன. பனிக்கட்டி இறுகியதும், தகடுகள் அகற்றப்பட்டன. வளைந்த கூரைகளுடன் அமைந்த குகைகள் உண்டாயின.

இக் குகைகளில் முன்னரே ஆயத்தம் செய்து வைக்கப்பட்ட கட்டடங்கள் பொருத்தப்பட்டன. இக் கட்டடங்களில் மின்னாற்றல் நிலையங்கள், தங்குமிடங்கள், உணவு அருந்தும் இடம், சமையலறை, ஆய்வுக்களங்கள், பண்டசாலை முதலியவை அமைக்கப்பட்டுள்ளன. பாசறையில் 200 பேர் தங்கலாம். வெப்பம், ஒளி, ஆற்றல் அளிப்பதற் காகப் பாசறையில் அணு ஆற்றலால் இயங்கும் எந்திரம் ஒன்றுள்ளது.

அழியா அரண்

பாசறை ஓர் அழியா அரண் ஆகும். ஆர்க்டிக் வானிலையும் அதைத் தாக்குதற்கு ஆற்றலற்றது. பாசறையின் முகப்பில் பனி பெய்த வண்ணம் இருக்கும். அதை அடிக்கடி அகற்றிக் கொண்டிருக்க வேண்டும். பாசறையின் உள்ளே பனி விழுவதற்கு வழி இல்லை.

பாசறையின் உள்ளே ஒரே அமைதி நிலவும். இந்த அமைதியை அங்கு ஒரு மணிக்கு 100 மைல் விரைவில் அடிக்கும் புயற்காற்றுகள் கூடக் குலைக்க முடியாது.

குளிர்காலத்தில் பாசறையின் உட்புறத்தின் வெப்பநிலை வெளிப்புறத்தின் வெப்பநிலையை விட 10–20° அதிகம் இருக்கும். கோடை இங்குக் குறுகிய காலமே நிலவும். பனிக்கட்டியின் மேற்பரப்பு வெப்பநிலை 0° அளவுக்கு மேல் போகாது. பனிக்கட்டி உருகுதலினால் பாசறைக்கட்டடங்கள் பழுதுறாமல் இருக்க, அவை குளிர் பெற்ற வண்ணம் இருக்கும். குளிர் ஊட்டும் வேலையை அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் செய்யும். அவை குளிர்ந்த காற்றைப் பாசறையில் லிருந்து வெளியேற்றும்.

200 அடி ஆழத்திற்கு உண்டாக்கப்பட்ட துளை ஒன்றிலிருந்து ஆற்றல் தரும் எந்திரத்திற்கு வேண்டிய நீரும், பாசறையின் வீட்டுத் தேவை களுக்கு வேண்டிய நீரும் கிடைக்கும்.

பாசறையில் அமைக்கப்பட்ட 30 கட்டடங் களும் பெட்டி போன்றவை. மனிதன் வசதியுடன் வாழ்வதற்கு ஏற்றவை. மின்சாரக் கருவிகள் உள்ளே நிலையாக வெப்பத்தை அளித்த வண்ணம் உள்ளன. ஒளிர் கருவிகள் ஒளியைத் தந்த வண்ணம் உள்ளன. பாசறையின் உயிர்நாடி அணு அற்றல் எந்திரமே.

பயன்கள்

ஆர்க்டிக் பகுதியில் பாசறை அமைத்து அமெரிக்கா திட்டமிட்ட ஆராய்ச்சி நடத்துகிறது. இதனால் சிறந்த பயன்கள் உண்டாகும்.

இங்கு அமைத்த பாசறையை முன் மாதிரியாகக் கொண்டு துருவப் பகுதிகளின் மற்ற இடங்களிலும் பாசறைகளை அமைக்கலாம். இதன் அடிப்படையில், அமெரிக்கப் போர்ப்படையினர் பல திட்டங்களை மேற்கொண்டு நடத்திய வண்ணம் உள்ளனர். கடுங்குளிர் நிலவும் துருவப் பகுதிகளில் வாழ்வது என்பது இயலாத செயல். இதற்குப் பாசறை அமைப்பு தீர்வாக உள்ளது.

பாசறை அமைப்பதே ஒரு சிக்கலான செயல்; ஆராய்ச்சிக்குரியது. இத்திட்டத்தின் சிறு பகுதியே போர்ச் சிறப்புக் கொண்டது. பெரும் பகுதி விஞ்ஞான ஆராய்ச்சிச் சிறப்புடையது. போர்ச் சிறப்பைப் பொறுத்த வரை, போர் வீரர்கள் எவ்வாறு வாழ இயலும், எப்படிப் போர் செய்ய இயலும் என்பது ஆராயப்படுகிறது.

விஞ்ஞானச் சிறப்பைப் பொறுத்த வரை பல வாய்ப்புக்கள் உள்ளன. விஞ்ஞான வளர்ச்சிக்கும், சிறப்பாக, அண்டார்க்டிக் பகுதிகள் பற்றிய அறிவு விரிவடையவும் ஆர்க்டிக் ஆராய்ச்சி உதவும். அதன் பாழ் நிலப் பகுதிகளை மக்கள் குடியேறும் பகுதிகளாக மாற்றலாம். அவற்றிலுள்ள கனிவளங்களையும் கச்சாப் பொருள்களையும் பெருமளவுக்குப் பயன்படுத்தலாம்.

கிரீன்லாந்து உட்பகுதியிலிருந்து பெருமள வுக்குப் பனிக்கட்டி அதன் தீவின் கரை முடிவுப் பகுதிகளுக்கு மெதுவாக நகர்ந்து செல்கிறது. இப் பனிக்கட்டி இயக்கம் அளக்கப்பட்டிருக்கிறது; ஆராயப்பட்டிருக்கிறது. பனிக்கட்டியின் ஆழங்கள் சராசரி 7,000 அடி. சில இடங்களில் ஆழம் 10,000 அடிக்கு மேலும் உள்ளது. இந்த ஆழங்களைப்பற்றி ஆராய்வதால் பனிக்கட்டியின் இயல்புகளையும் அதிலுள்ள நிலப் பகுதியையும் கண்டறியலாம்.

ஆழமான பனிக்கட்டியின் மீது போக்கு வரவு நடத்த இயலுமா என்று ஆராயப்படுகிறது. சக்கரமுள்ள வண்டிகளைப் பயன்படுத்த இயலுமா என்று ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.

பனிக்கட்டியால் செய்யப்பட்ட வளைவுகள், உத்திரங்கள் முதலியவற்றின் வலிமை ஆராயப் படுகின்றது. வானிலை நிலையங்கள் பல, காற்றுகள், வானிலை, கதிரவன் வீச்சு, காற்று மேல் வெளி நிலைமைகள் முதலியவை பற்றி ஆராய்ந்த வண்ணம் உள்ளன.

நிலவுலகிலுள்ள எந்தச் சூழ்நிலையையும் மனிதன் தாக்குப் பிடிக்க இயலும். இந்தச் சூழ் நிலையைத் தாக்குப் பிடிக்க அவன் பழகினால், எதிர் காலத்தில் மற்றக் கோள்களின் சூழ் நிலையையும் தாக்குப் பிடிப்பதற்குரிய ஆற்றலும் பழக்கத்தால் வரும். பழக்கத்தால், பயிற்சியால் கடுமையான வான்வெளி நிலைமைகளை மனிதன் தாக்குப் பிடித்து, வான்வெளியில் வலம் வந்ததை நாம் நன்கு அறிவோம். வான்வெளி ஆராய்ச்சிக்கு உறுதுணையாக ஆர்க்டிக் ஆராய்ச்சியும் அமையும்.