ஆறுமுகமான பொருள்/2அருணகிரியார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. அருணகிரியார் கண்ட அழகன்

சமீபத்தில் கோவையில் ஒரு பட்டி மண்டபம் நடந்தது. பட்டி மண்டபத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட பொருள் நிரம்பவும் ரஸமான ஒன்று. கம்பன் கண்ட ராமனில் சிறப்பாயிருப்பது அவனது அழகா, அறிவா, ஆற்றலா? என்று. அழகே என்று வாது செய்தவர் மூவர்; அறிவே என்று மூவரும், ஆற்றலே என்று மூவரும் வாதிட்டனர். எல்லோருமே கம்பனை நன்றாக அலசி ஆராய்ந்து படித்தவர்கள். ஆதலால் திறமையோடு அவரவர் கட்சியை எடுத்துக் கூறி தங்கள் தங்கள் கட்சிக்குப் பலம் தேடினர். அத்தனைக்கும் இடம் கொடுத்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். இந்தப் பட்டிமண்டபத்துக்கு தலைமை வகித்தவன் நான். விவாதங்களை எல்லாம் கேட்டபின் தீர்ப்புக் கூற வேண்டிய பொறுப்பு என்னுடையது. மிகச் சிரமத்தோடேதான் நான் தீர்ப்புக் கூறினேன்.

கம்பன் ராமனை ‘அறிவின் உம்பரான்’ என்று கூறுவது உண்மைதான் என்றாலும், அவனிடத்து அறிவுடைமை சிறப்பாய் அமைந்திருந்தது என்று கம்பன் கருதவில்லை. கருதியிருந்தால், ‘நாயக நீயே பற்றி நல்கலை போலும்?' என்று மாயமானை வேண்டி சீதை கண்ணீர் உகுத்ததும் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு. தம்பியின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது மான் பின்னே ராமன் ஓடினான் என்று கூறி இருப்பானா? மேலும் வாலி மீது அம்பெய்து வீழ்த்தியபின், அவன் கேட்ட கேள்விகளுக்கு, அவன் பேசும் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் சொல்ல இயலாமல் ராமன் திணறுவதை கம்பன் சொல்லாமல்ச் சொல்லி மகிழ்கிறானே. மறைந்து நின்று என்னை நீ எவ்வியது என்னை, என்ற அடிப்படைக் கேள்விக்கு நேரான பதில் சொல்ல அவனால் முடியவில்லையே, இலக்குவன் அன்றோ இடைபுகுந்து நொண்டிச் சமாதானம் கூற வேண்டியிருக்கிறது. இந்த நிலைமையில் கம்பன் கண்ட ராமனிடத்து அறிவு சிறந்திருந்தது என்று கூற வகை இல்லையே என்று முதலில் அறிவை ஒதுக்கினேன்.

பின்னர் ராமன் எவ்வளவு அழகனோ, அவ்வளவு ஆற்றல் நிறைந்தவனே. தாடகை, கரன், கும்பகர்ணன், இராவணன் முதலியவர்களை போரில் வீழ்த்திய ஆற்றல் என்ன சோடையான ஆற்றலா? இல்லை, சீதையை மணம் முடிக்க அரனது வில்லையே அநாயசமாக எடுத்து இழுத்து முறித்தானே! ஏழு மராமரத்தையும் ஒரே அம்பில் துளைத்தானே! அது எல்லாம் அவன்றன் ஆற்றலைத் தானே விளக்குகிறது. என்றாலும் இந்த ஆற்றல் எல்லாம் புகழுடையதாக அமைய சீதையின் கற்பு அல்லவா துணை நின்றிருக்கிறது. கற்பெனும் கனலால் அல்லவா இராவணன் வெந்திருக்கிறான்; சீதையென்னும் அமிழ்தால் செய்த நஞ்சல்லவா இராவணனைக் கொன்றிருக்கிறது. ஆதலால் கம்பன் கண்ட ராமனிடம் ஆற்றல்தான் சிறந்திருந்தது என்று கூறவும் வகை இல்லையே.

ஆனால், ராமனது அழகை நினைத்தால், கம்பன் அப்படியே விம்மிப் பெருமிதம் கொண்டுவிடுகிறானே. ஓவியத்தெழுத ஒண்ணா உருவத்தனான ராமனை, ஆடவர் பெண்மையை அவாவும் தோள்கள் உடையவன் என்றன்றோ கூறுகின்றான். ராமனது புயவலியைக் கூற முற்படுகிறபோதும் அலை உருவக்கடல் உருவத்து ஆண்தகை என்றல்லவா குறிப்பிடுகிறான். ஏன்? உருவெளித் தோற்றத்தில் வல்வில் ஏந்திய ராமனைக் காணும் சூர்ப்பனகை கூட அவனது செந்தாமரைக் கண்ணிலும், செங்கனி வாயிலும், சந்தார் தடந்தோளிலும், அஞ்சனக் குன்றமன்ன அவன் வடிவிலும் தானே ஈடுபடுகிறாள். நிரம்பச் சொல்வானேன்


மையோ, மரகதமோ, மறிகடலே
மழைமுகிலோ
ஐயோ! இவன் வடிவு என்பதோர்
அழியா அழகு உடையான்

என்றுதானே கம்பன் அப்படியே ராமனது அழகைக் கண்டு பரவசம் அடைகிறான். ஆதலால் கம்பன் கண்ட ராமனில் சிறப்பாயிருப்பது அவனது அழகே என்று கூறி முடித்தேன். கூட்டத்திற்கு வந்திருந்த அறிஞர் அத்தனை பேருமே ஆமோதித்தனர் அந்தத் தீர்ப்பை. இது கம்பனது வெற்றியல்ல. ராமனது வெற்றியல்ல, அழகின் வெற்றிதான் இது. இந்நில உலகிலே அழகு தருகின்ற வெற்றியை, அறிவோ, ஆற்றலோ தருவதில்லை என்பதற்கு இதை விடச் சிறந்த ஆதாரம் வேண்டுவதில்லை அல்லவா?

இந்த அழகின் வெற்றியை இன்னும் அனுபவிக்க வேண்டுமானால் நாம் தேடிச் செல்ல வேண்டுவது, முருகனாம் குமரனையே. முருகை உடையவன் முருகன். முருகன் என்றால் மணம், இளமை, கடவுட் தன்மை, அழகு எல்லாம் சேர்ந்தது என்று அறிவோமே. அழகு உள்ளவனிடத்தே மணம், இளமை, இறைமை எல்லாம் கலந்தே நிற்கும், அதிலும் அழியா அழகு பெற்றவனாக, என்றும் இளையவனாக ஒருவன் அமைந்துவிட்டால் அதைவிட பெறற்கு அரிய பேறு ஒன்று உண்டா? அத்தகைய பேறு உடையவனாக அல்லவா ஒரு கடவுளை உருவாக்கி இருக்கிறான் தமிழன். கலைஞனான மனிதனின் அழகுணர்ச்சிதான் என்ன என்ன காரியங்களை சாதித்திருக்கிறது? உருவமே இல்லாத கடவுளுக்கு உருவத்தை கற்பித்திருக்கிறது. அக்கற்பனைக் கடவுளை முருகனாக, குமரனாகக் கண்டு தலைவணங்கியிருக்கிறது. அத்தகைய அழகுணர்ச்சி நிறைந்த கலைஞன் பரம்பரையில் வந்தவர் தானே அருணகிரியார். அவர் குமரனின் அழகில் மயங்கி அதையே வியந்து வியந்து பாடியதில் வியப்பில்லையே.

இறைவன் படைத்த இயற்கைதான் எவ்வளவு அழகுடையது. விரிந்து பரந்திருக்கும் வானம், அகன்று ஆழ்ந்து கிடக்கும் கடல், அக்கடல் உள்ளிருந்த எழும் இளஞ்சூரியன், அச்சூரியனிடமிருந்து ஒளி பெற்று அதை உலகுக்குத் திரும்பவும் வழங்கும் குளிர்நிலா, அந்நிலாவோடு தோழமை பூண்டு மின்னி மினுக்கும் விண்மீன்கள் எல்லாம் அழகைத்தானே வாரி வழங்குகின்றன. பூமியில் உள்ள மலை, மலையிலிருந்து விழும் அருவி, அருவி ஓடிப் பெருகும் ஆறு, ஆற்றங்கரையில் நின்று நிழல் தரும் மரங்கள், அம்மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்கள், கனிகள், பரந்த வயல்களிலே பச்சைக் கம்பளம் விரித்தால் போல் இலங்கும் நெற்கதிர்கள், புல்பூண்டுகள், ஊர்வன, பறப்பன. நடப்பன எல்லாமே இயற்கை அன்னையில் அழகு வடிவந்தானே. இவைதானே மனிதனால் கை புனைந்து இயற்றாத கவின்பெறு வனப்பு. இந்த வனப்பில் தானே கலைஞர்கள் எல்லாம் உள்ளம் பறிகொடுத்து நிற்கின்றனர். அப்படி உள்ளம் பறிகொடுத்த ஒரு கவிஞன் தான், முற்றிய ஆழியிலே அலைவந்து மோதி எறிகையிலே கற்றைக் கதிர் எழும் காட்சியைக் கண்டிருக்கிறான். உலகம் உவப்ப, பலர் புகழ் ஞாயிறு கடற்கண் எழும் காட்சியிலே அழகைக் கண்டிருக்கிறான் இளமையைக் கண்டிருக்கிறான்; இறைமையைக் கண்டிருக்கிறான். விரிந்திருக்கும் நீல வானம் நீலநிறத் தோகையை விரித்தாடும் மயிலாகக் காட்சி அளித்திருக்கிறது. அந்த வானில் தோன்றும் செஞ்சுடர்த் தேவனாம் இளஞாயிறையே வேலேந்திய குமரனாகவும் கண்டிருக்கிறான். இப்படித்தான் முருகன், குமரன், வேலன், அழகன் தமிழ்க் கலைஞன் உள்ளத்தில் உருப்பெற்றிருக்கிறான். இன்னும் மேட்டு நிலங்களிலே திணைக்கதிர் விம்மி விளைந்து அங்கொரு காட்டுமயில் வந்து நின்றால், அங்கேயும் கலைஞன் உள்ளத்தில் காதலை விளைவித்திருக்கிறான் குகன். இப்படித்தான், நீண்ட காலத்திற்கு முன்னாலேயே, உலகம் தோன்றி, அதில் மனிதன் தோன்றி, அந்த மனிதன் தமிழ் பேசக்கற்றுக் கொண்ட அந்தக் காலத்திலேயே, அவன் கண்ட முதற் கடவுள், இப்படித்தான் முருகனாக, இளைஞனாக, அழகனாக இருக்கிறான். அருணகிரியார் வணங்கியிருக்கிறார். குமரகுருபரர் துதித்திருக்கிறார். எத்தனையோ கலைஞர்கள், கவிஞர்கள் இந்த அற்புத மோகன வடிவுடைய குமரனது அழகினைப் பாராட்டிப் பாடி இருந்தாலும், அந்த அழகிலே மயங்கித் தன்வயமிழந்து நின்றவர் அருணகிரியார் தான். அழகுணர்ச்சி அவருக்கு கருவிலே வாய்த்த திருவாக அமைந்திருக்கிறது. இல்லாவிட்டால் அந்த இளவயதிலேயே வாதினை அடர்ந்த வேல் விழியார் தங்கள் காதலுக்கு ஏங்கி நின்றிருப்பாரா அந்தக் காதல் கடலிலே முங்கி முழுகி அமிழ்ந்தே போயிருப்பாரா? அன்று பெண்ணிடத்தே கண்ட அழகையே பின்னர் இறைவனிடத்துக் கண்டிருக்கிறார். ஆதலால் அவனை அழகான மேனி தாங்கிய வேளாக அயிலும் மயிலும், அறமும் நிறமும், அழகும் உடைய பெருமாளாக, புதுமயில் மீது யாவரும் தொழவரும் அழகனாகப் பார்த்திருக்கிறார். கனகமயிலினில் அழகு பொழிய கருணை மருவி வர வேணும் என்று வேண்டியிருக்கிறார். நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான் என்று நம்பி இருக்கிறார். 'மயிலையும், அவன் திருக்கை அயிலையும், அவன் கடைக்கன் இயலையும் நினைந்திருக்க வாருங்கள்’ என்று உலகோரையெல்லாம் கூவி அழைத்திருக்கிறார். இப்படி அழகு துண்டிய ஆர்வந்தான். அவர் கவிதை எழுதுவதற்கு அவற்றைப் பாடிப் பரவி இறைவனை வழுத்துவதற்கு துணை நின்றிருக்கிறது.

இப்படி முருகனது அழகிலே உள்ளம் பறிகொடுத்தவர், அந்த அழகனை அலங்காரம் செய்து பார்க்கவும் முனைந்திருக்கிறார். அழகெல்லாம் ஒருங்கே கண்டால் யாவர்தான் ஆற்றவல்லார்? யாரே அழகுக்கு அழகு செய்வார்? என்பதை அறிந்தவர்தான் என்றாலும் ஆசை யாரைவிட்டது. எத்தனையோ திருப்புகழ் பாடி அவன் புகழ் பரப்பிய அருணகிரி, தான் பெற்ற பெறற்கரிய அனுபவங்களையெல்லாம் அனுபூதியாகப் பாடி உலகோர்க்கு விளக்கிய அவர் முருகனை அலங்கரித்து மகிழ்வதிலேதான் உள்ள நிறைவு பெற்றிருக்கிறார். அந்த அலங்காரங்களைப் பாடி அரிய பாமாலை ஒன்றையே சாத்தியிருக்கிறார். ஆம் அவர் அறிவார். அலங்கரிப்பதற்கு பொன்மாலையோ அல்லது பூமாலையோ வேண்டும் என்பதை. ஆனால் பொன் மாலைக்கு மணம் கிடையாதே, பூமாலை வாடிவிடுமே என்று உணர்ந்தே பாமாலை கொண்டு அழகனின் பதம் பணிய விரைந்திருக்கிறார்.

அழகன் ஆன குமரனை நினைத்தவர், அந்த அழகனைப் பெற்றெடுத்த அன்னையை, அழகே உருவான அப்பன் சொக்கனை எல்லாம் நினைத்திருக்கிறார். ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரனாக ஆற்றைப் பணியை, இதழியைத் தும்பையை, அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரனாக முருகனைத் தொழந்துவங்கியவாறே அவன்தன் துணைவி அந்தக் கள்ளக் குறமகள் வள்ளியையும் நினைந்து நினைந்து துதித்திருக்கிறார். தேனென்று பாகென்று உவமிக்கொணா தெய்வ வள்ளி என்று போற்றுவார் ஒருதரம். நெற்றாப் பசுங்கதிர் செவ்வேனல் காக்கிற நீலவள்ளி என்று வர்ணிப்பார் மறுதரம், மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் என்று குறிப்பதோடு மட்டும் திருப்தி அடையாது, வேடிச்சி கொங்கை விரும்பும் குமரன் என்றும் கூறி மகிழ்வர். இந்த மயில் வாகனனைக் கண்டு தொழ, அவர் மலைமீது ஏறி இருக்கிறார். கடற்கரைக்குச் சென்றிருக்கிறார். காடு, வயல், சோலை எல்லாம் கடுகி நடந்திருக்கின்றார். அழகு குடி கொண்ட அங்கெல்லாம் இருக்கும் அழகனை நாமும் காண நம்மையுமே உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் அழைத்துச் சென்ற இடங்கள் அத்தனைக்கும் நானும் உங்களை இழுத்தடிக்க விரும்பவில்லை. அவன் பாடிய அலங்காரத்திலேயே சிறப்பான இடம் பெறுபவை மூன்றுதானே. அந்த மூன்றிடங்களுக்கு மட்டுமே இன்று போகலாம் நாம்.

முருகன் செய்த அருஞ்செயல் அத்தனையிலும், பெரும்புகழ் உடையது சூரன் உடல் அற வேலை விட்ட காரியம்தானே. சூரசம்ஹாரத்தைத் தானே பெரிய திருவிழாவாக நாம் கொண்டாடுகிறோம். நம் உள்ளத்தில் உள்ள அகங்காரம், மமகாரம் எல்லாவற்றையும் தடியவும் அலங்காரக் கந்தனாம் அழகனால்தானே முடியும்? ஆதலால் அச் சூர்முதல் தடிந்த தலமாம், அத்திருச்சீர்அலைவாய்க்கே செல்லலாம் நாமும் அருணகிரியாருடன். ஏதோ கடற்கரைப்பட்டினம் என்றாலும், நீர் நிலைகளும் அதனால் வளம் பெறும் வயல்களும் நிறைந்த இடம்தானே அது. அங்குள்ள வயல்களில் தண்ணீர் மட்டுமா பாய்கிறது. தண்ணீருடன் சேல் மீன்களும் சேர்ந்துதான் பாய்கிறது. பாய்ந்து பெருகிய அத்தடங்களில் துள்ளியும் விளையாடுகிறது. அதனால் வயலில் உள்ள பயிர்கள் மட்டுமல்ல வயற்கரையில் உள்ள பொழில்களுமே அழிகின்றன. இது தவிர கடம்ப மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்த மலரின் மணம் நிறம் எல்லாம். மங்கையர்களுக்கு மாமயிலோனையே நினைப்பூட்டுகின்றன. அதனால் அத்தனை காலம் கட்டிக் காத்த அவர் தம் நிறை, கன்னிமை எல்லாமே அழிகிறது. அந்த ஊரிலே சூரன் அழிந்திருக்கிறான். அந்தச் சூரனை அழித்த வேலோ ஒரு தடவை கடலையும், மற்றொரு தடவை மலையையுமே அழித்திருக்கிறது. இவ்வளவுதானா அழிக்கப்படவேண்டிய பொருள். இன்னும் ஒரு பொருள் நம் எல்லோரிடத்தும் இருக்கிறதே. நாமெல்லாம் பிறந்த அன்றே நம் தலையில் இப்படித்தான் இவன் வாழ்வு முடிய வேண்டும் என்று எழுதியிருக்கிறானே அந்தப் பிரமன். அப்படி அவன் கையாலே எழுதிய எழுத்து, அழியா எழுத்தாக நின்றல்லவா நம் வாழ்வில் எத்தனையோ அலங்கோலங்களைச் செய்கிறது. அந்த எழுத்தையும் அழிக்கத்தானே வேண்டும். அந்த எழுத்தை அழிக்கும் ஆற்றல் பெற்றவன் அந்த இறைவனாம் முருகன் தானே என்றெல்லாம் எண்ணியிருக்கிறார் அருணகிரி. அன்று பிரமன் கிறீச் கிறீச் என்று கையால் எழுதிய எழுத்தைக் குமரன், செந்தூர் வேலவன் தன் காலாலேயே அழித்து விடுகிறான். ஒரே ஒரு துடைப்பினாலேயே பிரமன் விதித்தவிதியே அழிகிறது. அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலனது காலால் என்கிறார் அருணகிரி.


சேல்பட்டு அழிந்தது செந்தூர்
வயல் பொழில்; தேங்கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடி


யார்மனம்; மாமயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும்
சூரனும் வெற்பும்; அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு என்தலை
மேல் அயன் கையெழுத்தே

என்பது பாட்டு, அழகனான குமரனது காலுக்கு வீரக்கழல் ஒன்று அணிவித்து அலங்காரம் அல்லவா பண்ணுகிறார் அவர்.

தமிழ் நாட்டின் தெற்குக் கோடியில், சூரசம்ஹாரம் நடந்த செந்தூரில் இருந்து நாம், சூரசம்ஹாரம் முடிந்த உடன், முருகனே அமைதி அடைய நாடிச் சென்ற அத் திருத்தணிகைக்கே செல்லலாம். அருணகிரியார் இங்கு சென்றது அவரது வாழ்வின் கடைசி காலத்தில் தான். அப்படி அத்தனை நாள் தன்னை அழைக்காத காரணம் என்ன? அப்படி அழைக்காதிருக்க நான் இந்தப் பிரமனுக்குச் செய்த குற்றம் என்ன? என்றல்லவா கேட்டிருக்கிறார். நம்மை எல்லாம் அப்படி அவன் அழைக்காமல் இல்லையே. அழைக்கிறானே. நாமும் விரைவிலேயே செல்லலாம், அருணகிரியார் பாடிய அலங்காரப் பாட்டைப் பாடிக்கொண்டே செல்லலாம்.


கோடாத தேவனுக்கு யான் செய்த
குற்றம் என்? குன்று எறிந்த
தாடாளனே தென்தணிகைக்
குமர நின் தண்டையந்தாள்
சூடாத சென்னியும் நாடாத
கண்ணும், தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே
தெரிந்து படைத்தனனே

பாட்டிற்கு விளக்கம் தேவையில்லை அல்லவா? தணிகை சென்றால் அருள்ஞான சக்தி தரனாம். தணிகைக்குமரனை, வள்ளியை, தெய்வயானையை எல்லாம் கண்டு தொழலாம். என்றாலும் அலங்காரம் நிறைந்த அழகனைக் காண வேண்டுமென்றால் கால் கடுக்கவே நடக்க வேணும். இன்னும் உயர்ந்ததொரு பெரிய மலையிலேயே ஏற வேணும். அதுவும் பாண்டிய, சோழ, தொண்டை நாடுகளை எல்லாம் கடந்து அந்தக் கொங்கு நாட்டிற்கே செல்ல வேணும். திருச்செங்கோடு என்னும் தலத்திற்கே விரைந்து அங்கு பின்னிப் பிணைந்து கிடக்கும் பெருங்கோட்டிலேயே ஏற வேணும். அம்மலையிலே இருப்பவர் அர்த்தநாரி என்பர் அறிந்தவர்கள். அவர்தான் அங்கு பிரதான தெய்வம் என்றாலும் அவர் தென் பக்கமாகக் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு, வட பகுதியைத் தன் மகனாம் குமரனுக்கு ஒதுக்கிக் கொடுத்து விடுகிறார். இந்தச் செங்கோட்டு மலையில் நிற்பவனே செங்கோடன். அலங்காரம் பாட முனைந்த அருணகிரி அதனை மறந்து அந்தச் செங்கோடனின் அழகிலே மெய்மறந்து விடுகிறார். அந்த அழகனின் அழகை அள்ளிப் பருக இருப்பது இரண்டு கண்கள்தானே. இவை போதும் ஒரு நாலாயிரங் கண்களாவது படைத்திருக்க வேண்டுமே. அந்தப் பாவி பிரமன் இப்படிப் படைக்காது போய் விட்டானே அங்கலாய்க்கிறார்.

மாலோன், மருகனை மனறாடி
மைந்தனை, வானவர்க்கு
மேலான தேவனை, மெய்ஞ்ஞான
தெய்வத்தை மேதினியில்
சேலார் வயல் பொழில்
செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரங்கண் படைத்திலனே
அந்த நான்முகனே

என்பது பாட்டு. நாம் இந்த அருணகிரியைப் போல அத்தனை ஆசை உடையவர்கள் இல்லை. இரண்டு கண்களாலேயே அள்ளிப் பருகி ஆனந்தம் அடையலாம்.

அருணகிரியாருக்கு ஏனோ, தன்னைப் படைத்த பிரமன் பேரிலே இத்தனை கோபம். செந்தூர் சென்றால் அங்கு அவன் எழுதிய தலை எழுத்து அழியும் என்கிறார். தன்னைத் தணிகைக்கு அழைக்காத குறைக்கு அந்தப் பிரமன் பேரிலேயே பழியைப் போடுகிறார். திரும்பவும், கண்டு தொழ நாலாயிரம் கண்கள் படைக்காமல் போய்விட்டானே பாவிப்பயல் என்று திட்டவே செய்கிறார். அந்தப் பிரமன் என்னதான் பண்ணுவான்! அவனோ முன்னமேயே குட்டுப்பட்டவன். இனியாவது இப்படிக் கவிஞர்களிடத்தும் கலைஞர்களிடத்தும் குட்டுப்படாமல் தப்பித்துக் கொள்ள வேண்டும். அவன் தலைவிதி எப்படி இருக்கிறதோ யார் கண்டார்கள்!