ஆறு செல்வங்கள்/பொருட் செல்வம்
4. பொருட் செல்வம்
செல்வம் பலவகை. அவை கல்வி, கேள்வி, அறிவு, அருள், பொருள் முதலியன. அவற்றிலுள்ள பொருளும் பலவகை. அவை பொன், மணி, முத்து, பவளம், பணம் முதலியன. அவற்றிலுள்ள பணமும் பலவகை. அவை செம்பு, ஈயம், வெள்ளி, பவுன், நோட் முதலியன. இவையே பொருட் செல்வம் எனப்பெறும்.
வாழ்வுக்குப் பொருள் தேவை. பொருளற்ற வாழ்வு வாழ்வாகாது. "அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகமும் பொருளில்லாதவர்க்கு இவ்வுலகமும் இல்லை' என்பது வள்ளுவர் வாக்கு. எவராலும் பொருட்படுத்த முடியாத ஒருவர் எல்லோராலும் பொருட்படுத்தப் பெறவேண்டுமானால், அவர் பொருளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் அவரது கருத்து.
பொருளைத் தேடுவதும், தனக்காக என்றில்லாமல், பிறருக்காகவும் என்று தேடவேண்டும். அதையும் நல்லவழியில் தேடி, நல்ல வழியில் செலவிட்டு, நல்ல முறையில் வாழ்ந்தாக வேண்டும். பிறர்க்குப் பயன்படும் மக்கள் உள்ளூரில் பழுத்த கனிமரத்தை ஒப்பாவார். அல்லாதவர் பழுத்தும் பயன்படா எட்டி மரமேயாவர். ஆம், எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?"பொருளற்ற மக்கள் பொருள் பெற்ற மக்களிடம் சென்று இரப்பது இழிவு இல்லை என்று வருகிற அவர்களிடம் 'இல்லை’ என்று கூறுவது அதைவிட இழிவு' என்பது தமிழகத்தின் பண்பு.
ஒரு இடுகாட்டில் ஒரே நேரத்தில் இரு பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. அதைக் கண்ட ஒரு பெரியவர், "இவர் ஈத்துவக்கும் இன்பம் இன்னது என அறிந்து சுவைத்த செல்வர். இவர் அவ்வின்பம் எப்படி இருக்கும் என்பதையே அறியாது வைத்து இறந்த வறுமையாளர்' என்றார். பாவம் பணம் இழந்த பிணம்! -
தமிழ்ச்சொற்கள் அனைத்தும் பொருளமைதியுடையன. 'சுறுசுறுப்பு' என்பதும் "படபடப்பு' என்பதும் ஒன்றல்ல. அருஞ் செயல்களைப் பொழுதை வீணாக்காமல் அமைதி யாகச் செய்து முடிப்பவனே சுறுசுறுப்பாளன். அதிகமாய்த் துடித்து எதையும் செய்ய இயலாமல் துன்பப்படுகிறவன் . படபடப்புக்காரன். "சிக்கனம்' என்பதும் "கருமித்தனம்' என்பதும் இது போன்றதே. தேவைக்குமேல் செலவு செய்வது 'வீண் செலவு தேவையின் அளவு செலவு செய்வது "சிக்கனம். தேவைக்கும் செலவு செய்யாதது "கருமித்தனம்' இவற்றில் பொருட் செல்வம் பெறத் தேவையானது "சிக்கனம் ஒன்றே. - -
மாதம் 100 ரூபா வருமானம் உள்ளவர்கள் வீட்டு வாடகை ரூபா 10. அரிசி ருபா 15, பலசரக்கு ரூபா 15, காய்கறி ரூபா 8, பால் ரூபா 3. பலகாரம் ரூபா 3, எண்ணெய் ரூபா 5, விறகு ரூபா 5 வரட்டி ரூபா 2, விளக்கு ரூபா 2, துணி” துவைக்க ரூ. 3. சவரம் ரூபா 2, துணிக்காக ரூபா 3, இதர செலவுக்காக ருபா 7, மீதம் ரூபா 5 எனத் திட்டமிட்டுச் செவுவு செய்யவேண்டும் திட்டமில்லாத குடித்தனமும் குறிக்கோளில்லாத வாழ்க்கையும் ஒருபோதும் சீரடையாது. சிலர் இத்திட்டத்தையே தங்கள் இருப்பிடத்துக்கு ஏற்ற வாறும் குடும்பத்திற்கு ஏற்றவாறும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். திட்டமிட்டு வாழ்கை நடத்துகிறவர்கள் மீதப்படுத்த முடியாமற் போனாலும், கடன்காரர்களாக வாழமாட்டார்கள் என்பது உறுதியாகும்.
ஒருவனுக்குப் பொருள் வந்துசேருவது திடீரென வந்து விடாது. சிறுகச் சிறுக வந்து, பின் பெருஞ்செல்வமாகக் காட்சியளிக்கும். போகும்போது சிறுகச் சிறுகப் போகாது; ஒரேயடியாய்த் திடீரெனத் தொலைந்து போய்விடும்-ஒரு நாடகக் கொட்டகைக்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து, பெருங் கூட்டமாகக் காட்சியளித்துப் பின் ஒரேயடியாய்க் கலைத்து ஒழிந்து போய் விடுவதைப்போல.
பொருட் செல்வம் பெற விரும்புகிறவர்களுக்குச் "சிக்கனமும்', 'சேமிப்பும்' மட்டும் போதாது. அவர்கள் சேமித்த செல்வத்தைப் பாதுகாத்தும் ஆகவேண்டும். சேமிப்பு ஒரு கலை. சிக்கனம் அதன் துணைக்கலை. பாதுகாப்பதோ பெருங்கலை. 4.
பல ஆண்டுகள் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்கத் தெரியாமல் இழந்துவிட்டவர் பலர். இவர்களிற் பெரும் பான்மையோர் நீண்டகாலம் உழைத்து, ஒய்வுபெற்று, உதவிநிதி பெற்றோர். உலகம் இன்னது என அறியாமல் உத்தியோகத்திலேயே உழன்று வாழ்ந்து வந்தவர்கள். உலகம் இன்னது என நன்கறிந்த வஞ்சக மக்களின் சொற் களில் ஏமாந்துவிடுவது இயல்பேயாகும். உதவி நிதி பெற்றோர் தாம் வாங்கிய தொகை அனைத்தையும் அன்றே ஒரு பெரிய வங்கியிற் போட்டு வைத்துப் பின் அத் தொகையை 5 பங்குகளாகப் பிரித்து 2 பங்கிற்கு விடும், ஒரு பங்குக்கு நிலமும், 1 பங்குக்கு ஆலைப் பங்குகளும் நல்லவைகளாகப் பார்த்து வாங்கி வைப்பதுடன், மீதியுள்ள ஒரு பங்குப் பணத்தில் அரைப் பங்கு ரொக்கமாகவும்: அரைப் பங்கு தங்கமாகவும் வைத்திருந்து பாதுகாப்பதே சிறந்த கலையாகும். வாங்கிய தொகை 25 ஆயிரமாக இருந்தால், இது 10, 5, 5, 2, 2} எனப் பிரியும்.
வியாபாரியாகவோ, தொழில் துறையினராகவோ இருந் தால், அவர் தம்மிடம் உள்ள தொகையை 10 பங்குகளாகப் பிரித்து, 5 பங்கை தொழிலிலும், இரண்டுபங்கை வீடுகளிலும், ஒரு பங்கை நிலத்திலும், ஒரு பங்கைப் பாங்குகளிலும், அரைப் பங்கைத் தங்கத்திலும் போட்டு, அரைப்பங்கை ரொக்க மாகவும் வைத்திருக்க வேண்டும். அவருடைய மூலதனம் 100 ஆயிரமாக இருந்தால் அது 50,20, 10,10, 5, 5, எனப் பிரியும். கம்பெனியின் பங்குள்ள எல்லாவற்றையும் ஒரு துறையிலேயே வாங்கிவிடாமல், பாங்க், நூல், சர்க்கரை, துணி, தோட்டம், இயந்திரம் ஆகிய பலதுறைப் பங்கு களாகவும் பார்த்து வாங்கி வைப்பது நலமாகும். இம்முறை யானது வஞ்சக மக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்லாமல்; ஒரு திடமான கொள்கையில்லாத மக்களால் ஆட்சி செய்யப் பெறுகிற அரசாங்கத்தின் போக்கு களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள உதவும். ஒரு துறை தாழ்த்தி விட்டாலும், மற்றொரு துறை உயர்த்திவிடும். எந்த முறையிற் பார்த்தாலும் இதைவிடச் சிறந்த பாதுகாப்புக் கலை இப்போது இல்லை.
திடீரென வருமானம் குறைந்துவிட்டால் அல்லது தடைப்பட்டுவிட்டால் எவரும் வருத்தப்பட வேண்டிய தில்லை. வருந்தியும் பயன் இல்லை. அவர்கள் உடனே செய்யவேண்டியது செலவினத்தைக் குறைத்துக் கொள்வது தான். ஒரு குளத்திற்குத் தண்ணீர் வரும் வழி அடைப்பட்டுப் போனால், அக்குளத்தின் வடிகாலை உடனே மூடவேண்டியது தான் சிறந்த வழி. வரவே சிறுத்துச் செலவே பெருத்தால் அதுவே அழிக்கும் அவனை.
ஒருவன், வருகிற வருமானத்திலும் தனக்கு செலவிலும், சேமிப்பிலும் பாதுகாப்பிலும் செலுத்துகிற கருத்தைவிட, தான் சார்ந்திருக்கிற ஒரு பொது அமைப்பிற்கு வருகிற வருமானத்திலும் செலவிலும், சேமிப்பிலும் பாதுகாப்பிலும் அதிகமாகக் கருத்தைச் செலவிட்டாக வேண்டும். இன்றேல் பழி தாங்கமுடியாத அளவிற்கு வந்துவிடும். அத்தகைய மக்கள் பொது வாழ்வில் தோன்றுவதைவிடத் தோன்றா திருப்பதே நல்லது.
ஒரு தனி மனிதன் தவறான வழியில் பொருள் சேர்க்க எண்ணிவிடக் கூடாது. ஏனெனில், அழ அழக்கொண்ட அது அழ அழப் போய்விடும். அவ்வாறே ஒரு அமைப்பு பொது மக்களைத் துன்புறுத்திப் பொருள் சேர்க்க எண்ணிவிடக் கூடாது. ஏனெனில் ஏழை அழுத கண்ணிர் கூரிய வாளாக மாறிவிடும். பின் இது எவ்வளவு பெரிய அமைப்பாக இருந்தாலும் அழிந்தொழிந்து போய்விடும்.
பொது வாழ்வில் ஈடுபடுகிறவர்களுக்கு உயர்ந்த மனப் பான்மையும், உறுதியான கொள்கையும் தேவை, சொந்த உழைப்பினால் வரும் வருமானத்தில் உண்டு வாழும் மக்களே பொது வாழ்விற்குத் தேவை. பொது வாழ்விலேயே வயிறு கழுவி வாழும் மக்களைக்கொண்ட நாடு ஒருபொழுதும் வாழாது. ஆகவே ஒருவனுக்கு தன் வாழ்விற்காகவும், பொது வாழ்விற்காகவும் பொருட் செல்வம் கட்டாயம் தேவை. தனிப்பட்டவர்க்குத் தேவைப்படுவது போலவே, ஒரு நாட்டிற்கும் பொருளாதாரம் தேவை.பொருளாதாரக் கொள்கைகளைப் பித்தலாட்டக் கொள்கைகள் எனச் சிலர் கூறுவதுண்டு. அது தவறு. அவ்வாறு குறை கூறப்படுவதற்குரிய காரணங்கள் இரண்டு. ஒன்று பொது மக்களுக்கு இன்னதென்றே விளங்காதது. மற்றொன்று பொருளாதாரப் பேரறிஞர்களிடமிருந்தே மாறு பட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருப்பது.
பழங்காலத்து மக்களுக்குப் பணம் தேவையில்லா திருந்தது. அவர்கள் தம்மிடம் உள்ள பொருள்களைக் கொடுத்துத் தேவைப்படும் பொருள்களை வாங்கிவந்தனர். இதற்குப் பண்டமாற்று முறை எனப் பெயர். காலப்போக்கில் நம்மிடம் உள்ள பொருள்களைத் தேவைப் படாத பொருள் களுக்கும் விற்கவேண்டி வந்ததால், பொருள்களின் அளவு கருவியாக எல்லோருக்கும் தேவைப்படும் ஒரு பொருள் நிற்க வேண்டி வந்தது. முதலில் நின்றது. நெல்; அடுத்து நின்றவை ஆடு மாடுகள்; பின் இரும்பு செம்பு முதலியவை; இறுதியாகப் பொருட் செல்வத்தின் அளவு கருவியாக நின்றவை பொன்னும் வெள்ளியும். இப்போது அதுவும் மாறிக் கலப்பட உலோகமும் காகிதமுமே அளவு கருவியாக நிற்கின்றன.
ஈயப்பணமும், காகிதப் பணமும் வெளிமதிப்பு உள்ளவையே. அவற்றின் உள்மதிப்பு மிகக்குறைவு. அவை தன் மதிப்பினால் செல்லுபடியாவதில்லை. அரசாங்க முத்திரையினரில் செல்லுபடியாகிக் கொண்டிருக்கின்றன! இப்போது தன் மதிப்பினால் செல்லுபடியாகிக் கொண் டிருக்கும் ஒரே நாணயம் ஒற்றைக் காசுதான். அதன் உள்மதிப்பும் வெளிமதிப்பும் ஒன்றே. முன் வெள்ளியிலும் தங்கத்திலும் அச்சிடப்பெற்ற நாணயங்களின் உள் மதிப்பும் வெளி மதிப்பும் ஒன்றாகவே இருந்தன. காகிதப் பணம் அப்படியல்ல. அது பெருகப் பெருக அதன் மதிப்புக் குறையும். மதிப்புக் குறையக் குறைய ஒரு பொருளுக்கு அதிகக் காகிதப் பணம் கொடுக்கவேண்டி வரும். அதைக் காண்பவர் பொருள்களின் விலை ஏறி விட்டதாகக் கூறுவர். இது தவறான கருத்து.
உண்மை என்னவெனில் 1931 முதல் இன்றுவரை கடந்த 80 ஆண்டுகளாக எந்தப் பொருளும் விலை ஏறவில்லை என்பதே. அன்றைக்கும் பவுனுக்கு 3 மூட்டை நெல். இன்றைக்கும் பவுனுக்கு 3 முட்டை நெல். பவுன் 15 ரூபாயாக இருந்தபோது நெல் மூட்டை 5 ரூபாயாக இருந்தது. பின் பவுன் 30 ரூபாய் ஆனபோது நெல் ரூபா 10. பவுன் 45 ரூபா ஆனதும் நெல் ரூபாய் 15. பவுன் 60 ரூபாய் ஆனதும் நெல் ரூபாய் 20இப்போது பவுன் 90ஆனதும் நெல்ரூபா 30 பவுனுக்கு மூன்று மூட்டை நெல் அன்றும் விற்றது. இன்றும் விற்கிறது; இனியும் விற்கும்.
ஒர் ஏக்கர் நிலம் உள்ள உழவன் தன் நிலத்தில் 80 மூட்டை நெல் விளைவித்து 15 மூட்டையைத் தன் செல விற்கு வைத்துக்கொண்டு, மீதி 15 மூட்டை நெல்லை விற்று எல்லாப் பொருள்களையும் அன்றும் வாங்கினான், இன்றும் வாங்குகிறான். எது விலை ஏறியது? நெல்லையோ தங்கத்தையோ இணைத்துப் பார்க்கும்போது எப்பொரு ளும் விலை ஏறியதாகத் தெரியாது. காகிதப் பணத்துடன் இணைக்கும் போதுதான் எல்லாப் பொருளும் விலை ஏறிய தாகத் தோன்றும். இது பொய்த் தோற்றம்.உண்மை என்னவெனில் காகிதப் பணத்தின் மதிப்பு குறைந்து விட்டது என்பதே. அன்று நமது நாட்டில் 150 கோடி ரூபாய்க்குத் தங்கம் இருக்க, 300 கோடி ரூபாய்க்குக் காகிதப் பணம் இருந்து வந்தது. இன்று அதே தங்கத் திற்கு 2100 கோடி காகிதப் பணம் இருந்து வருகிறது. காகிதப் பணம் 1க்கு 8 ஆகப் பெருகிவிட்டதால் ஒரு காசுப் பொருளுக்கு 7 காசும், 1 அனாவுக்கு 7 அனாவும், 1 ரூபாய்க்கு 7 குபாய் காகிதமும் கொடுக்கவேண்டியிருக் கிறது.
ஒரு நாட்டின் காகிதப் பணம் வெளிநாட்டில் செல்லாது. பிறநாடுகளிலிருந்து சாமான்களை வாங்கினால் தங்கமாகவே கொடுக்க வேண்டும். தங்கம் குறைவாக உள்ள நாடுகள் தம் நாட்டில் விளைந்த அல்லது செய்த பொருள்களைக் கொடுத்து வரும் இது ஏறத்தாழப் பண்டமாற்று முறை போன்றதேயாகும். இறக்குமதியைக் கட்டுப்படுத்தி ஏற்று மதியை விரிவுபடுத்தும் நாடுதான் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் என்றாலும் அது உள்நாட்டுத் தேவை யையும் நிரப்பி ஆகவேண்டும்.
பொருளாதார அறிவு மேலைநாடுகளிலிருந்து வந்த ஒன்று. அதற்குமுன் நமது நாட்டில் பொருட் செல்வத்தின் மீது பற்றற்ற தன்மையும், அது அவனவன் தலைவிதிப்படி வந்து சேரும் என்ற கொள்கையுமே இருந்துவந்தது ஒரு தனி மனிதனோ, ஒரு நாடோ தனது அறிவு ஆற்றல், ஊக்கம் உழைப்பு ஆகியவைகளால் வேண்டிய அளவு பொருட் செல்வத்தைப் பெறமுடியும் என்பதே பொருளாதாரக் கலையின் முடிவாகும்
செல்வங்களில் உயர்ந்தது பொருட் செல்வம். பணம் பத்தும் செய்யும் பணம் பாதாளம் வரை பாயும், பணம் உள்ளான் படைக்கு அஞ்சான், பணம் உடையவர் பலவும் உடையவர், செல்வரை எல்லோரும் செய்வார் சிறப்பு. ஆகவே பொருளை நல்ல வழியில் தேடு! நல்ல வழியில் செலவிடு! அதிலும் சிக்கனத்தைக் கையாள் சேமித்து வை! அதையும் பாதுகாத்து வை! இவை அனைத்தையும் எண்ணியே பொருள்தனைப் போற்றி வாழ்’ என்றார் ஒளவையார்.
பணத்திலே ஆசையொன்றிலேன்' என்பது இராமலிங்க அடிகளின் வாக்கு. ஏன்? பணத்திலே ஆசை வந்துவிட்டால் பிற செல்வரைவிடத் தமது செல்வம் குறைவாகத் தோன்றி உள்ளத்தை வருத்திவிடுமாம். பொருட்செல்வம் உண்மை யான செல்வம் ஆவது எப்போது? தம்மின் எளியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிது’ என எண்ணி மகிழ்ச்சியடையும்போது.
வாழட்டும் பொருட் செல்வர்:
வளரட்டும் பெருஞ் செல்வம்!