ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஐக்கிய வெளித்தத்துவம்

விக்கிமூலம் இலிருந்து



ஐக்கிய வெளித்தத்துவம்

UNIFIED FIELD THEORY

உலகத்தின் தோற்றத்தை நிர்ணயம் செய்யும் பொறுப்பை அகண்ட வெளித்தத்துவ வித்தகர்கள், பெரும்பாலும் தத்துவ ஞானிகளிடமே விட்டு விட்டார்கள் என்றாலும், தற்காலத் தத்துவ நிபுணர்களில் ஆராய்ச்சி அனுபவம் பெற்ற குறிப்பிட்ட சிலரால் கூட பெளதிக உண்மைத் தத்துவத்தின் புதிரை, உட்பொருளை, மர்மத்தை, அதன் மாயத் தோற்றங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. அதாவது இன்றைய அறிவியல் தத்துவ ஞானத்தை (Philosophy) நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.

மாமேதை ஐன்ஸ்டைனின் அறிவியல் உண்மைகள் தத்துவ ஞானம் என்ற அறிவுமுகட்டின் சிகரத்தை தொட்டுக் கொண்டிருக்கின்றன.

உலகத்தின் மனித உணர்வுக்கும், சமூக உணர்வுக்கும், சமுதாய உணர்வுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி என்றும் நிலையானதாய், நிரந்தரமானதாய் இருப்பதை லோகாயுதவாதிகள் ஒப்புக்கொள்வதில்லை. அவர்களுள் ஒருவராக ஐன்ஸ்டைனும் சில நேரங்களிலே காணப்பட்டார். ஆனால், இவ்வாறு கூறப்பட்டவர்கள் கருத்து எவ்வளவு தவறானது என்பதை ஐன்ஸ்டைனே மறுக்கிறார் பாருங்கள்.

உலக மாயை உணரும் அனுபவம் ஒன்றுதான் வினோதமான, அழகு வாய்ந்த சிறப்பான உணர்ச்சியாகும். உண்மையான அறிவியலின் கருவூலம் அந்த உணர்ச்சிதான். உடலுறுப்புகளை சிலிர்க்க வைக்கும் இந்த உணர்ச்சி இல்லாத மனிதன் உயிரற்றவன். மனித அறிவுக்கு அப்பாற்பட்டதொரு சக்தியே இந்த உலகத்தின் அழகு வடிவமாகவும், அறிவுச் சிகரமாகவும் வியாபித்திருக்கிறது. இந்த உணர்வு, இந்த அனுபவம், மனிதனுக்கு உருவாகுமானால், அதுவே அவனுடைய உண்மையான மதக்கொள்கையின் மையமாகும்.

வேறொரு சந்தர்ப்பத்தில் ஐன்ஸ்டைன் குறிப்பிடும் போது, “உலகத்தில் மிகப்பெரிய மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சக்தியொன்று இருப்பதை உணரும் அனுபவம்தான். அறிவியலின் ஆராய்ச்சியின் பெரும்பலமான உயர்ந்த ஒர் ஊன்றுகோல்” ஒழுங்கும், ஒருமைப்பாடும் நிறைந்திருக்கும் இந்த உலகத்தின் மர்மங்களை ஆராயும் பெரும்பாலான விஞ்ஞானிகள், ‘கடவுள்’ என்ற சொல்லைப் புறக்கணிக்க எண்ணுகின்றார்கள்.

ஆனால், நாத்திகர் என்று கூறப்படும் ஐன்ஸ்டைன் இதுபோன்ற விருப்பு-வெறுப்பு உணர்ச்சிகளுக்கு அடிமையானவர் அல்லர்.

சாதாரணமாக, பெளதிக உண்மைகளை ஆராய முற்படும் எந்த ஒரு விஞ்ஞானியும் தெய்வ நம்பிக்கை அற்றவராகத்தான் இருப்பார் என்ற எண்ணம், சிந்தனை எக்காலத்திலும் மலிந்து காணப்படுகின்றது. ஆனால், இந்தக் கொள்கைக்கு ஐன்ஸ்டைன் ஒரு விதிவிலக்காக விளங்குகிறார்.

அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் இதுபற்றி கூறுகையில், “என்னுடைய சமையம் அதாவது மதம், நமது அற்ப ஆற்றலைப் பெற்றிருக்கும் புலன்களால் புரிந்து கொள்ளக்கூடிய சாதாரண விளக்கங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்தும் மகத்தான், எல்லையற்ற சக்தியைப் பாராட்டும் அவையடக்கத்தில்தான் அடங்கியுள்ளது.

அறிந்து கொள்ள முடியாத இந்த உலகத்தின் மிகப் பெரிய மனித சக்திக்கு ஓர் காரணத்தை நம்பும் ஆழ்ந்த உணர்ச்சிதான் கடவுளைப் பற்றிய எனது கொள்கையை, எண்ணத்தை உருவாக்குகின்றது” என்கிறார்.

விஞ்ஞானத்தின் ஆய்வைப் பொறுத்தவரையில் பெளதிக் உண்மை என்ற தத்துவத்தின் (Physical Reality) அருகில் செல்வதற்கு இரண்டு வாயிற்கதவுகள் தற்சமயம் இருக்கின்றன.

ஒன்று இப்போது புதிதாக அமெரிக்காவிலே உள்ள சிலிபோர்னியாவில், “பலோமர்” மலை உச்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய வான்நோக்கும் கருவியேயாகும்.

இந்த வானை உற்றுக்கவனித்து நோக்கம் கருவி மூலம் அதாவது வானதா்சினியின் விஞ்ஞானிகள் தலைமுறை வரையில் வானசாஸ்திர விஞ்ஞானிகள் கனவு கூடக் கண்டிராத அளவில், பரந்தவெளியின் மிகத்தொலைவான தூரத்தை ஊடுருவிப் பார்க்க முடிகின்றது.

இதுவரையில், அந்த வான்நோக்கிக் கருவி மூலமாக 50 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள வெளிமண்டல உலகத்தையும், அதனுட் பொருட்களையும்தான் பார்க்க முடிந்தது. ஆனால், இப்போது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய வான்நோக்கும் கருவி வாயிலாக, 100 கோடி ஒளியாண்டு தூரம் வரையில் உலகத்தின் வெளி சமுத்திரத்தின் சீரான அமைப்பையும் அங்கு சுற்றித் திரியும் எண்ணற்ற தொலைதுார உலகத்துத் தீவுகளையும் ஊடுருவிப் பார்க்க முடியும். அவ்வளவு தொலைதூரத்தில் உள்ள உலகத் தீவுகளிலிருந்து ஒளி நமது பூமியை அடைய 100 கோடி ஆண்டுகளாகின்றன.

இந்த புதிய காட்சிகளைக் கொண்டு உலகப் பொருட்களின் சராசரி அடர்த்தியில் மாறுதலை உருவாக்கக்கூடிய கணக்கீடுகள் வெளியாகக்கூடும். அப்போது, உலகக் கோளத்தின் தற்கால வளைவு நிர்ணயமும், அந்த பொருளடக்கத்திற்கு ஏற்ப மாறுபடக்கூடும். அதனால், உலகத் தத்துவக் கணக்கீடுகள் மேலும் நன்றாக, தெளிவாகக் கணக்கிடக்கூடும்.

பெளதிக உண்மைத் தத்துவத்தை, நெருங்குவதற்கு மற்றொரு வாயில் கதவுதான் ஐன்ஸ்டைனுடைய ஐக்கிய வெளித்தத்துவமாகும். (Unified Field Theory) என்ற தத்துவமாகும்.

ஐன்ஸ்டைனுடைய இந்த தத்துவம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகவே, அவரது அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் மணி மகுடமாகவே விளங்குகின்றது என்று கூறலாம்.

மனிதனுடைய வெளிப்புற எல்லைகளை இன்றும் விவரித்துக் கொண்டிருப்பது ஐன்ஸ்டைன் கண்டுபிடித்த (Relativity) ஒப்புமைத் தத்துவமேயாகும்.

மனிதனுடைய உட்புற எல்லைகளைப் பகுதித் தத்துவம் (Quantum Theory) உருவாக்கி இருக்கின்றது.

பரந்தவெளி, காலம், ஆகர்ஷணம், மற்றும் உணர்ந்து அறிய முடியாத வகையில் மிகப்பெரிய அளவில் பரிணமித்து வெகு தூரங்கள் வரையில் செயல்படும் உலகவெளியின் உண்மைத் தத்துவங்கள். இவையெல்லாம், ஒப்புமைத் தத்துவத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அணு, பொருள்-சக்தி இந்த மூன்றின் அடிப்படைத் துகள்கள், இன்னும் உணர்ந்து அறியமுடியாத வகையில் மிகச்சிறிய அளவில் பரிணமித்து மிகக் குறைந்த எல்லைக்குள் செயல்படும் உண்மைத் தத்துவங்கள்; இவையெல்லாம் பகுதித் தத்துவத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒப்புமைத் தத்துவம், பகுதித்தத்துவம் என்ற இரு விஞ்ஞான அமைப்புகளும், முற்றிலும் மாறுபட்ட, ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற, சித்தாந்த அடிப்படைகளில் உருவானவையாகும். தனித்தனியே அவற்றை ஆராய்ந்தால், அவையிரண்டும் ஒரே அறிவியல் மொழியைப் பேசவில்லை.

ஐன்ஸ்டைனுடைய ஐக்கிய வெளித் தத்துவத்தின் நோக்கம் இந்த இரு விஞ்ஞானத் தத்துவ முறைகளையும் இணைத்து விடுகின்றது. இயற்கையின் ஒழுங்கிலும், ஒருமைப்பாட்டிலும் நம்பிக்கையுள்ள ஐன்ஸ்டைன், இந்த இரண்டு விஞ்ஞான முறைகள் விளக்கும் அணு நிகழ்ச்சிகளையும், வெளிமண்டல நிகழ்ச்சிகளையும் இணைத்து ஒரே அடிப்படையில் அமையும் பெளதிக விதிகளை ஐக்கிய வெளித் தத்துவத்தின் மூலம் வெளியிடுகிறார்.

இந்த ஐக்கிய வெளித் தத்துவம், இயற்கையின் எந்தெந்த எதிர்பாராத புதிய கொள்கைகளை வெளிப்படுத்தப் போகின்றது. உலகத்தின் பழைய பிரச்னைகள் எவ்வளவுக்கு விடையளிக்கப் போகின்றது என்னும் செய்திகளை இப்போது முன்கூட்டி அறிவித்து விட முடியாது. ஆனால், இப்போதைக்கு அந்தத் தத்துவம் எதைச் சாதித்து விட்டது என்பதைக் கூறிவிடலாம்.

ஆகர்ஷண விதிகளையும், மின்காந்த விதிகளையும் ஐக்கிய வெளித் தத்துவம் மகத்தான ஒரே அடிப்படை உலகத்தின் விதிக்குள் இணைந்துவிட்டது. ஒப்புமைத் தத்துவம் ஆகர்ஷண விசை என்பதை எவ்வாறு கால வெளித் தொடர் நிகழ்ச்சியின் ஒரு ஜியோமெண்டரி கணக்குத் தன்மையாக்கிவிட்டதோ, அவ்வாறே ஐக்கிய வெளித்தத்துவம் உலகத்தின் பெரிய சக்தியாகிய மின்காந்த விசையையும், காலவெளித்தொடர் நிகழ்ச்சியின் ஒருதன்மையாக்கி விட்டது.

“ஆகர்ஷணம், மின்காந்தம் என்ற தனித்தனியான அமைப்புகள் இந்த பரந்த வெளியில் உள்ளன என்ற கொள்கை சித்தாந்த வகையில் ஒரு பொழுதும் ஒப்புக் கொள்ள முடியாதது” என்று ஐன்ஸ்டைன் ஒரு நேரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவர் எவ்வளவு முயற்சி செய்தும், மின் காந்த விதிகளைப் பொது ஒப்புமைத் தத்துவத்தின் கீழ் அவரால் கொண்டுவர முடியவில்லை.

ஐன்ஸ்டைன் அவரது ஆய்வுக் கால வயதில் முப்பத்து மூன்று ஆண்டுகள் இடைவிடாது கணித விதிகளின்படி விவாதங்கள் புரிந்து, இறுதியில் அவர்தம் லட்சியத்தை ஒருவாறு தமது புதிய ஐக்கிய வெளித் தத்துவத்தின் மூலம் வெற்றி கண்டு விட்டார்.

மின்காந்தவிசையும், ஆகர்ஷனை விசையும் கவனித்து நோக்கும்போது இரண்டும் ஒன்று தானா என்று சிலர் கேட்கலாம்... ஸ்தூலமாகப் பார்க்கும் போது அவை இரண்டும் ஒன்றே என்று கூறுவது சரியாகாது.

எடுத்துக்காட்டாக, பனிக்கட்டி, நீர், நீராவி இந்த மூன்றையும் ஸ்தூலமாக ஒரே பொருள் என்று கூறுவது தவறு. அதே நேரத்தில் அந்த மூன்று பொருட்களும் வெவ்வேறு பெளதிக நிலைகளில் வேறுவேறாகக் காணப்படும் ஒரே பொருள் என்று கூறுவதுதான் உண்மையானதாகும். 

ஐக்கிய வெளித்தத்துவமும், மின்காந்த விசை, ஆகர்ஷண விசை இவையிரண்டும் உலக உண்மையின் அடித்தனத்தில் ஒன்றாக இணைந்து நிற்கும் வெவ்வேறு நிலைகளே என்று கூறுகின்றது.

ஐக்கிய வெளித் தத்துவத்தின் யூகங்கள் அனைத்தும் வருங்காலப் பரிசோதனைகளுக்கு ஈடு கொடுத்து நிலைத்துவிடுமானால், அதாவது, அதன் கணித விதி சூத்திரங்களிலிருந்து பகுதித் தத்துவத்தின் சாம்யங்களை அடைந்து விடக் கூடுமானால், பொருளின் இயைபு, அடிப்படைத் துகள்களின் அமைப்பு, கதிர்வீசலின்! இயக்கம், மற்றுமுள்ள அணு உலகத்தின் புதிர்களுக்கு எல்லாம் தகுந்த விடைகளைப் புதிய அறிவைக் கொண்டு உறுதியாய் ஊடுருவிப் பார்த்து விடலாம். ஆனால், இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் ஐக்கிய வெளித் தத்துவத்தின் உப விளைவுகளே (By Products).

இந்த தத்துவத்தின் மாபெரும் வெற்றி இதன் பெயரின் முதல் வார்த்தையில் அடங்கியுள்ளது.

இன்றைய வரையில், அறிவியல் மூலம் பெளதிக உலகத்தைப் பற்றி மனிதன் கண்டுணர்ந்த கொள்கைகள் எல்லாம் ஒரே அடிப்படைக் கொள்கையில் ஐக்கியப்படுத்தி விடுவதுதான் ஐக்கிய வெளித் தத்துவத்தின் லட்சியமாகும்.

நூற்றாண்டுக் கணக்கில் நடந்து வரும் கண்டுபிடித்தல், தத்துவம், ஆராய்ச்சி, காரண விவரங்கள் போன்ற பல்வேறு விஞ்ஞான விளைவுகள் கால வட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்து ஒரே தன்மையில் இயங்கி வருகின்றன.

முதன் முதலில் விஞ்ஞானம், உலகிலுள்ள எல்லாப் பொருட்களையும் 92 அடிப்படை மூலகங்களில் அடக் கியது, பிறகு இந்த அடிப்படை மூலகங்கள் ஒரு சில அடிப்படைத் துகள்களில் அடங்கி விட்டன. உலகில் காணப்படும் சக்திகள் இவ்வாறே ஒரே மின்காந்த விசையின் பல்வேறு நிலைகள் என்ற கொள்கை நிறுவப்பட்டது.

ஒளி,
வெப்பம்
எக்ஸ்ரே
ரேடியோ கதிர்கள்

காமா கதிர்கள், இவை எல்லாம் வெவ்வேறு அலை நீளங்களையும், அதிர்வுகளையும் கொண்ட ஒரே மின்காந்த சக்தியே என்ற கொள்கை இப்போது விஞ்ஞான உலகில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இறுதியாக அந்த பரந்த உலகம் முழுவதும் பரந்த வெளி, காலம், பொருள், சக்தி, ஆகர்ஷணம் என்ற இந்த கொள்கைகளின் ஆற்றலில் அடங்கி விட்டது.

ஐன்ஸ்டைனுடைய சிறப்பு ஒப்புமைத் தத்துவத்தின் மூலம் பொருளும், சக்தியும் ஒன்றே என்று நிருபிக்கப்பட்டு விட்டது. இப்போது ஐக்கிய வெளித் தத்துவம் இவை அனைத்தையும் ஒரே கொள்கையின் அடிப்படையில் கொண்டு வந்து விடும் சிறப்பு நிலையை அடைந்துள்ளது.

அமைதியான ஒரு நீர்நிலை, ஒரே நீர்நிலை. இதில் துள்ளி விளையாடும் மீனினங்களின் செயல்பாடுகளால் இந்த நீர்நிலையின் மேற்பரப்பில் வேறுபட்ட எண்ணற்ற சிறு அலைகள் உருவாகின்றன.

உலகமும் இதேபோல் அமைதியான ஒரு காலவெளித் தொடர் நிகழ்ச்சி. துள்ளியோடும் மின் துகள்களும், அசாதரண வேகத்தில் சுழன்று செல்லும் விண்மீன்களும், நகர்ந்து செல்லும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு, இக்கால தொடர்நிகழ்ச்சியில் பல்வேறு விதமான பெளதிக வேறுபாடுகளை உருவாக்கி விடுகின்றன.

எனவே, உலக நீர்நிலையின் மேற்பரப்பில் காணப்படும் இத்தனை வேறுபாடுகளும் உலக அடிப்படை அமைதியில் ஒன்று கலந்து விடுகின்றன.

ஆகர்ஷண விசை-மின்காந்த விசை, பொருள்-சக்தி, மின்சக்தி-மின்சார பிரதேசம், பரந்தவெளி-காலம், இந்த இரட்டைகளின் வேற்றுமைகள் எல்லாம் ஐக்கிய வெளித்தத்துவம் வெளியிடும் சம்பந்தங்களில் மங்கி, ஒளிகுன்றி ஒன்றாகிக் காலவெளித் தொடர் நிகழ்ச்சி என்ற ஒரே சம்பவத்தில் இரண்டறக் கலந்து விடு கின்றன. காலவெளித் தொடர் நிகழ்ச்சி என்பதுதான் இந்த உலகமாகும்.

அமைதியான நீர்நிலையில் மீன் முதலான பிராணிகளால் மேற்பரப்பில் உண்டாக்கப்படும் வெவ்வேறு வகையான அலை உருவங்களே அந்த நீர்நிலை என்று எவரும் கூறுவதில்லை. நீர்நிலை அமைதியானதே - ஆனால், அதன் மேற்பரப்பில் ஏற்படும் வெவ்வேறு அலை உருவங்களே. அந்த நீர்நிலைக்குள்ளிருக்கும் பிராணிகளால் தற்காலிகமாக ஏற்படும் பல்வேறு நிலைகள்.

காலம், பரந்தவெளி, பொருள், சக்தி, மின்காந்தம், ஆகர்ஷணம் ஆகியவை உலகப்பொருள்களின் வெவ்வேறு வகை இயக்கங்களால் ஏற்படும் பல்வேறு தற்காலிக நிலைகளே. இவற்றைத் தனித்தனியே உணர்வதால் மாத்திரம் உலக இயக்கத்தின் உண்மையை உணர்ந்து விட முடியாது.

எனவே, உலகத்தைப் பற்றிய மனிதனின் புலன் உணர்வுகளும், மன உணர்வுகளும் ஒன்று சேர்ந்து இரண்டறக்கலந்து விடும் போதுதான் அவையனைத்தும் உலகத்தின் ஒருமைப்பாட்டில் நிலைத்து விடுகின்றன.

பெளதிக தத்துவங்களின் இந்த ஐக்கியத்தைளே ஐன்ஸ்டைன், விஞ்ஞானத்தின் மாபெரும் லட்சியம் என்று குறிப்பிட்டார்.

ஐக்கிய வெளித்தத்துவம் இந்த லட்சியத்தை தொட்டுவிடுகிறது. புலன்களாலும், மனத்தாலும், உணர்ந்துத் அறிந்து, பரிசோதனைகளின் மூலம் காணக்கிடக்கும் எண்ணற்ற உண்மைகளை எல்லாம் மிகக்குறைந்த எண்ணிக்கையுள்ள கொள்கைகளின் மூலம் தீர்க்கரீதியில் விரித்து, விளக்கிப் பார்ப்பதுதான் இந்த விஞ்ஞானத்தின் மாபெரும் லட்சியமாகும்.

உலகத்தில் நமது புலன்களும், மனமும் உணரக்கூடிய பல்வேறு தனித்தனி நிலைகளைப் பற்றிய கொள்கைகளின் ஐக்கியமான கூட்டுருவத்தைப் பார்க்கும் லட்சியம் விஞ்ஞானத்திற்கு மட்டும் ஏற்பட்டதல்ல; மனிதன் தோன்றிய நாள் முதல் அவனுடைய அறிவின் மகத்தான் லட்சியமும் அதுவே. அந்த லட்சியத்தை நோக்கியே மனிதனுடைய அறிவுப் பரிணாமம் சென்று கொண்டிருக்கின்றது. தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும் ஒன்றுகூடி தங்களுடைய வெவ்வேறு உணர்வுகளால், சிந்தனைகளால், மனித சமுதாய வளர்ச்சிக்குரிய எண்ணங்களால் உந்தப்பட்டு, மாறிக்கொண்டே இருக்கும் நிலையற்ற மாய உலக நிலைகள் எல்லாவற்றுக்கும் காரணமாக நிற்கும் நிலையான, நிரந்தரமான, தத்துவ ஞானக் கண்டுபிடிப்புகளை அறிந்துகொண்டு வரும் வழிகளைத் தேடிச்சென்று கொண் டிருந்தவர்களிலே ஒருவராக வாழ்ந்தவர்தான் மாமேதை ஐன்ஸ்டைன் என்றால் மிகையாகா.

அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விஞ்ஞானக் கருத்துக்களையும், அதன் ஆராய்ச்சிகளையும் மட்டுமே சிந்தித்த சிந்தனைச் சிற்பியல்ல. மக்களது வாழ்வியலையும் அவர் தெளிவாகச் சிந்தித்தவர்.

எளிமையான வாழ்வே எல்லோருக்கும் ஏற்றது, தகுந்தது என்று அவர் எண்ணியவர் மட்டுமல்ல, மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையினையே தனக்குரிய பாடமாக ஏற்றுக்கொண்டு, காந்தியடிகளைப் போலவே, எளிமையாகவும், சாந்தமாகவும், கருணையாளராகவும், பழக இனிமையாளராகவும், விடாமுயற்சி உடையவராகவும், வாழ்ந்து காட்டிய மனித குல மாமேதையாக விளங்கியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்,

அறிவியல் உலகின் பொதுச் சொத்து, அது நாட்டின் எல்லைகளைக் கடந்தது; அனைவரும் அந்த அற்புதங்களை அனுபவிக்கும் உரிமையுடையவர்கள் என்ற எண்ணம் கோண்டவராகவே வாழ்ந்து காட்டியவர் ஐன்ஸ்டைன்.

அணு சக்திகளை அவனியின் நன்மைகளுக்கே பயன்படுத்த வேண்டுமே தவிர, தன் நலத்துக்காக, அதைப் பயன்படுத்துபவன் மனித இனத்திலே சேர்க்கப்படாத ஒரு மிருகத்துக்குச் சமமானவன் என்று வெளிப்படையாக அறிவித்து, அழிவு சக்திகளுக்கும், நாச வேலைகளுக்கும் அணுச் சக்திகளைப் பயன்படுத்தும் மனிதனையும், நாட்டையும் கண்டித்தவர் ஐன்ஸ்டைன்.

அறிவியல் இந்த உலகத்தின் அதிசயங்களைத் தோற்றுவிக்கும் அதியற்புதத் துறை, இத்துறையின் விநோதங்களை, ஆராய்ச்சிகளை, மக்கள் சமுதாயத்துக்கே பயன்படுத்த வேண்டும் என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

கல்லூரிக் கல்விக்கு விலை மதிப்பே கிடையாது. ஆனால், அங்கே போய் அந்த புனித இடத்தை அரட்டை அரங்கமாக மாற்றக் கூடாது; அறிவை வளர்ப்பது மாத்திரமே கல்வியின் நோக்கமாக இருக்கக் கூடாது! எதையும் ஆய்ந்து பார்த்து வாழக் கற்றுக் கொள்ளும் பண்பாடுகளையும் பெற வேண்டும் என்றவர் ஐன்ஸ்டைன்.

அறிவை வளர்க்கும் புத்தகங்களை மாணவர்கள்தான் படிக்க வேண்டும் என்பதல்ல; ஒவ்வொரு மனிதனும் புத்தகங்களைக் கற்பதன் மூலம் அவனவன் அறிவை வளர்த்துக் கொண்டு வாழ வேண்டும் என்று கல்விக்கு வரம்பு நிர்ணயித்தவர் ஐன்ஸ்டைன்.

அணுகுண்டு கண்டு பிடித்தவன் தான் நான் என்றாலும், அதற்காக போர்முனைகளை ஆதரிப்பவன் அல்லன் நான். சமாதானமே உலகத்தின் விலை மதிக்க முடியாத தத்துவம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பார்த்து, சமாதானத்துக்கான அமைதி தொண்டுகளைப் புரிபவன் தான், செயற்கரிய செயல் செய்யும் சான்றோனாக முடியும் என்று போருக்கு எதிரியாக, அமைதிக்கு காவலாக விளங்கும் மனம் கொண்டவராக விளங்கினார் ஐன்ஸ்டைன்.

ஒவ்வொரு மனிதனும் தனிமையிலே இனிமை காண வேண்டும். அதைத்தான் வடலூர் வள்ளல் பெருமானும் “தனித்திரு” என்றார். அதே கொள்கையினையே ஐன்ஸ்டைன் தனது வாழ்நாள் முழுதும் கையாண்டார்.

தனித்து சிந்தனை செய்பவன் எவனோ, அவனே தனித்திறன் பெற்றதனாகத் திகழ முடியும் என்பதை ஐன்ஸ்டைன் தனது வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டிய சிந்தனை மகானாக விளங்கினார்.