ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்/அமைப்பு ஆய்வு முறை

விக்கிமூலம் இலிருந்து
அமைப்பு முறை ஆய்வு

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற வரிசையில் இப்பொழுது காணப்படும் திருக்குறளின் அமைப்பு முறையில் மாறுதல்செய்ய இடமிருக்கின்றது. இம்மூன்று பால்களையும் தன்னகத்துக் கொண்டிருப்பது காரணமாகத் திருக்குறள் பெற்றிருப்பதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கும் 'முப்பால்' என்னும் பெயரையே ஆட்டங் காணும்படிச் செய்யத் தெம்பிருக்கிறது.

காதில் விழுகிறது; சிறு சலசலப்பு அன்று; பெருங் கூக்குரல்கள்-அறை கூவல்கள் காதைத் துளைக்கின்றன. "பழைய சங்கப் புலவர்களே முப்பால்" என்று திருவள்ளுவ மாலையில் குறிப்பிட்டிருக்கின்றனரே. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் வரிசையில் உறுதிப்பொருள்களை உரைப்பதுதானே தொன்று தொட்ட முறை' என்றெல்லாம் பலர் போர் முழக்கம் இடுவது புரிகிறது.

பழைய சங்கப் புலவர்கள் சிலர் திருக்குறளுக்கு மதிப் புரை (விமர்சனம்) வழங்கியுள்ளனர். அவர்கள் எழுதிய பாக்களின் தொகுப்பாக, 'திருவள்ளுவ மாலை' என்னும் பெயரில் ஒரு நூல் உலவுவது பலர்க்கும் தெரிந்திருக்கலாம், அந்த நூலை நன்கு துருவிப் பார்க்கவேண்டும். 'அறம்' பொருளின்பம் முப்பால், 'அறம் பொருளின்பம் முப்பால்’ என இளமையிலிருந்து பார்த்துப் பார்த்துப் படித்துப் படித்துப் பழகிப்போன பழங்கண்களால் திருக்குறளையும் திருவள்ளுவ மாலையையும் பார்க்கக்கூடாது. ஆராய்ச்சி அறிவுக்கண் கொண்டு பார்க்கவேண்டும்-படிக்கவேண்டும். அப்பொழுது புரியும் திருக்குறளின் அமைப்பு முறை.

திருக்குறளுக்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ள பழைய புலவர்களே 'சனி சரன்’ கோயில் சாமிகளைப்போலக் காட்சியளிக்கின்றனர். அக்கோயிலில், ஒன்று கிழக்கே பார்க்கும்; இன்னொன்று மேற்கே பார்க்கும்; மற்றொன்று தெற்கே பார்க்கும்; வேறொன்று வடக்கே பார்க்கும். இவ்வாறே அப்புலவர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அவை வருமாறு

(1) திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவினது. (திருவள்ளுவமாலை-9-கல்லாடர், 10-சீத்தலைச்சாத்தனார், 11-மருத்துவன் தாமோதரனார், 12-நாகன் தேவனார், 15-கோதமனார், 17-முகையலூர்ச் சிறு கருந்தும்பி யார், 18-ஆசிரியர் நல்லந்துவனார், 19-கீரந்தையார். 30 பாரதம் பாடிய பெருந்தேவனார், 31 உருத்திரசன்மகண்ணர், 39-உறையூர் முது கூற்றனார், 46-அக்காரக்கனி நச்சுமனார்; 49-தேனிக்குடிக்கீரனார், 53-ஆலங்குடி வங்கனார்).

(2) திருக்குறள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பிரிவினது. (7-நக்கீரனார், 8-மாமூலனார், 20-சிறு மேதாவியார், 33-நரிவெரூஉத்தலையார், 40-இழிகட் பெருங்கண்ணனார்.)

(3) திருவள்ளுவர் மூன்றிலேயே நான்கையும் அடக்கி யிருக்கிறார். (22-தொடித்தலைவிழுத்தண்டினார், 44-களத்தூர்க்கிழார்).

(4) திருவள்ளுவர் வேதக்கருத்தைத் தமிழில் எழுதினார். (4-உக்கிரப் பெருவழுதியார், 28-காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், 37-மதுரைப் பெரு மருதனார், 42-செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்.)

(5) திருவள்ளுவர் திருக்குறளைத் தாமாகவே, சொந்த அறிவு அனுபவங்களின் துணைகொண்டே செய்தார். (7.நக்கீரனார்.)

(6) திருக்குறளில் முதலிலுள்ள பாயிரம் என்னும் பகுதிதான் வீட்டுப்பால் (20.சிறு மேதாவியார்.)

(7) நான்கையும் இன்பம் (காமம்), பொருள், அறம், வீடு என்னும் முறையில் வரிசைப்படுத்தியமைத்தல். (33-நரிவெரூஉத்தலையார்.)

(8) பொருட்பால் ஏழு பிரிவுகளையுடையது. (22-தொடித்தலை விழுத்தண்டினார், 26-போக்கியார்.) ஆனால், உரையாசிரியர்களுள் மணக்குடவர் ஆறு பிரிவாகவும், பரிமேலழகர் மூன்று பிரிவாகவும் பிரித்துக்கொண்டுள்ளனர். பிரிவு இயல்களின் பெயர்களும் ஒருவர்க்கொருவர் வேறுபடுகின்றன.

(9) காமத்துப்பால் மூன்று பிரிவுகளையுடையது, (22-தொடித்தலை விழுத்தண்டினார், 27-மோசிகீரனார்.) ஆனால், உரையாசிரியர்கள் இருவரும் இரண்டாகப் பிரித்துள்ளனர். பிரிவுகளின் பெயர்களும் வெவ்வேறானவை.

இவ்வாறு இன்னும் மாறுபட்ட பல்வேறு வகைக் கருத்துகளைப் பழைய புலவர்கள் வெளியிட்டுள்ளனர். இதனால் தெரிவது என்ன? திருவள்ளுவரால் எழுதிப் போட்டுவிடப் பட்டுப்போன திருக்குறள் ஒரு நேரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறது. அதன் அமைப்பு முறையில் பலரும் தத்தம் கைவண்ணங்காட்டியிருக்கின்றனர். என்பது வரையும் நன்கு புரிகின்றதன்றோ?

பால்களின் அமைப்பில் மட்டுந்தானா வேறுபாடு? பாலின் உட்பிரிவாகிய இயல்களின் அமைப்பில் மட்டுந்தானா வேறுபாடு? இயலின் உட்பிரிவாகிய அதிகாரத்திலும் வேறுபாடு காணக்கிடக்கின்றது. (அதிகாரம் என்பது, பத்துக் குறள்கள் கொண்ட ஒரு தலைப்பு). 'புதல்வரைப் பெறுதல்’ என்று சிலரும் அதனையே 'மக்கட்பேறு’ என்று சிலரும் கூறுகின்றனர். அதிகாரத்தின் வேறுபாட்டோடு, குறள்களின் வரிசையமைப்பிலும் பெரிய வேறுபாடு காணக்கிடக்கின்றது. மணக்குடவர், பரிதி, காலிங்கர், பரிமேலழகர் முதலியோர் உரைகளை எடுத்துப்பாருங்கள். ஒவ்வோர் அதிகாரத்திலும் குறள்களை எப்படி முன் பின்னாக ஒவ்வொருவரும் மாற்றியமைத்திருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அப்படியென்றால், திருவள்ளுவர் அமைத்த முறைதான் எது? ஏன் இத்தகைய மாறுதல்கள் ஏற்பட்டன? எப்படி ஏற்பட்டன? எவரால் ஏற்பட்டன? எப்போது ஏற்பட்டன? இதற்கு முடிவுகட்டித் தக்க விடையிறுப்பவர் எவர்? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

எனவேதான், "இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இந்நான்கும்" என நரிவெரூஉத் தலையார் கூறியாங்கு, யானும் ஈண்டு இன்பத்துப் பாலாகிய காமத்துப்பாலை முதலில் தொடங்கிக் கொள்கிறேன். அவ்வாறு தொடங்குவதிலோர் அழகு இருப்பது மட்டுமன்று: பொருத்தமும் இருக்கிறது.

இன்பத்திலே காதல் வாழ்வும், பொருளிலே அரசியலும், அறத்திலே அறநெறியும், வீட்டிலே கடவுள் நெறியும் பேசப்படுகின்றன. உளநூல் (Psychological) நியதிப்படி இது தான் இயற்கையான அமைப்பு முறையாகும். இந்த வரிசையில்தான் - இந்தப் படிகளில்தான் மனித உள்ளம் செல்லும் இயல்பினது. மேலும், சமூக வாழ்வியல் (Socialogical) நியதியின்படி நோக்கினும் இந்த வரிசையே சாலப்பொருந்துகிறது. இந்த வரிசையிலேயே மக்கள் சமூகத்தின் வாழ்வு தொடர்கிறது. உளநூல் வல்லுநர், மக்கள் மனத்தின் இயற்கைப் பண்புகளை, தற்காப்பு ஊக்கம், இனக்காப்பு ஊக்கம், சமூக ஊக்கம் என மூவகையாகப் பிரித்துள்ளனர். உணவு உணர்ச்சி முதலியன தற்காப்பு ஊக்கத்தில் அடங்கும். காதல் உணரிச்சி, குழந்தைப் பற்று என்னும் இரண்டும் இனக்காப்பு ஊக்கமாகும். கூட்டுணர்ச்சி, முதன்மையுணர்ச்சி முதலியன சமூக ஊக்கமாம். இந்த வரிசை முறையினையும் ஊன்றி நோக்குக. மேலும் இக்கருத்துகளை, தமிழ்த் திருவடிகளார் அப்பர் பெருமானார் அருளிய,


பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளிலாது கெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டிச் சரத்துளானே”


கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவைகல் லாரினும்
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே”

என்னும் தேவாரப் பாக்களோடு ஒத்திட்டு மகிழ்க.

எனவேதான் ஈண்டு இன்பத்துப் பால் தொடங்கப் பெறுகிறது. வள்ளுவர் வீடு, அறம், பொருள், இன்பம் என வைத்திருந்தாலும், இன்பத்தினும் பொருளும், அதனினும் அறமும், அதனினும் வீடும் சிறப்பு மிகவுடையனவாதலால், சிறப்பு கருதி அவ்வரிசை தரப்பட்டிருக்கலாம். இருப்பினும், நூல்களைப் பிறருக்கு விளக்குங்கால் தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும் எளிமையிலிருந்து அருமைக்கும், இன்பமான சூழ்நிலையிலிருந்து கடுமைக்கும் ஆசிரியர் அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்னும் உளநூல் விதிப்படி, ஈண்டு இன்பத்துப் பாலிலிருந்து தொடங்குவதால் நேரும் பெருந்தவறு ஒன்றும் இல்லை.

என்ன சொல்லியும் ஒத்துக் கொள்ளாது, பழைய காலணா, அரையணாவே வேண்டும் ‘நயா பைசா’வைத் தொடவே மாட்டோம் - வாங்கவே மாட்டோம் என்று வாதாடுகிற அளியர்க்கு நாம் என் செய்வது! காலந்தான் அவர்களைத் திருத்த வேண்டும். இங்கும் அப்படியே! பரிமேலழகர் 'தாசர்கள்’ நிலையும் இதுவே தான்!