ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்/கடவுள் வாழ்த்து

விக்கிமூலம் இலிருந்து

கடவுள் வாழ்த்து


எண்குணத்தான்


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

(ப-ரை) எண்-மதிக்கத்தக்க, குணத்தான் - குணத்தை உடைய கடவுளுடைய, தாளை - திருவடியை, வணங்கா - வணங்காத, தலை - தலைகள், கோள் இல் - (காணுதல், கேட்டல் முதலிய உணர்வுகளைக்) கொள்ளுதல் இல்லாத, பொறியின் - (குருட்டுக்கண், செவிட்டுக்காது முதலிய) உறுப்புகளைப் போல, குணம் இல - பயன் உடையன அல்ல. ஏ - தேற்றம்.

(தெ-ரை) காணும் வன்மை இல்லாவிட்டால் கண்ணுக்கு இழிவு; கேட்கும் வன்மை இல்லாவிட்டால் காதுக்கு இழிவு; நடக்கும் வன்மை இல்லாவிட்டால் காலுக்கு இழிவு; இவற்றைப் போலவே, கடவுளை வணங்குந் தன்மை இல்லாவிட்டால் தலைக்கு இழிவு என்று திருவள்ளுவர் கூறியிருக்கும் உவமை நயம் நுணுகியுணர்ந்து மகிழ்தற் குரியதாகும். .

எண்ணுதல் என்னும் சொல்லுக்கு மதித்தல் என ஒரு பொருள் உண்டு. எனவே, எண்குணத்தான் என்பதற்கு மதிக்கத்தக்க குணத்தை உடையவன் என்று பொருள் கூறப்பட்டது. குமரகுருபர அடிகளாரும், மதுரைக் கலம்பகம் என்னும் நூலில், மதிக்கத்தக்க மதுரை என்னும் பொருளில் 'எண்தரு மதுரை' எனக் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்குதற்குரியதாகும். எண் குணத்தான் என்பதற்கு எட்டு வகையான குணங்களை உடையவன் என்றும் பொருள்

கூறலாம். (மண உரை) அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல ஒரு குணமும் உடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.

(பரி- உரை) தத்தமக்கேற்ற புலன்களைக் கொள்கையில்லாத பொறிகள் போலப் பயன்படுதல் உடையவல்ல, எண்வகைப்பட்ட குணங்களையுடையானது தாள்களை வணங்காத் தலைகள். எண் குணங்களாவன : - தன் வயத்தனாதல், தூயஉடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்தில் கூறப்பட்டது. அணிமாலை முதலாக உடையன எனவும், கடையிலா அறிவை முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.

(ஆராய்ச்சியுரை) எண் குணத்தான் என்பதற்கு, எட்டுக் குணங்களையுடையவன் என்றே பரிலேழகர் முதலியோர் பொருள் கூறியுள்ளனர். அது ஒரு நல்ல பொருள் தான். ஆனால், பரிமேலழகர் சைவ ஆகமத்தில் கூறப்பட்டுள்ள எட்டுக் குணங்களைக் குறிப்பிட்டுள்ளார். வேறு சிலர், வட நூலில் உள்ள அணிமா முதலிய எட்டைக் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர், சமண நூலில் உள்ள கடையிலாவறிவு முதலிய எட்டைக் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ஏன் இவ்வளவு தொல்லை? இவற்றையா எண் குணம் என்று திருவள்ளுவர் இயம்பியிருப்பார்? கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது ஏன்? இறைவனின் எட்டுக் குணங்கள் இன்னின்னவை என்று திருவள்ளுவரே தெரிவித்துள்ளாரே. 'கோளில் பொறியின்' என்னும் இக்குறள் ஒன்பதாவது குறளாகும். இதற்குமுன் எட்டுக் குறள் களிலும், இறைவனை எட்டுக் குணங்கள் உடைய வனாகக் கூறியுள்ளார் வள்ளுவர், முறையே அவை வருமாறு:-

ஒன்று - உலகின் முதற் பொருளாயிருப்பவன்; இரண்டு வாலறிவன்; மூன்று-மலர்மிசை யேகினான்; நான்குவேண்டுதல் வேண்டாமை யிலான்; ஐந்து - இறைவன் (இறைவன் என்றால் எங்கும் எல்லோர்க்கும் தலைவனாய்த் தங்கியிருப்பவன் என்பது பொருள்): ஆறு - பொறிவாயில் ஐந்தவித்தான்; எழு-தனக்குவமையில்லாதான்; எட்டு - அறவாழி அந்தணன் என்பனவாம். இங்ஙனம் முதல் எட்டுக் குறள்களிலும் எட்டு இயல்புகளைச் சொல்லிக்கொண்டு வந்து, பின்பு ஒன்பதாவது குறளில் எண்குணத்தான் என்றால், முன்கூறிய எட்டுக் குணங்களை உடையவன் என்று பொருள் கூறுவதில் என்ன பிழை? பத்தாவது குறளில் புதிதாக ஒரு குணமும் சொல்லவில்லை. முற்கூறிய இறைவன் என்பதையே குறிப்பிட்டுள்ளார். எனவே, வலிந்து பிற கொள்கைகளைக் கொண்டுவந்து திணிப்பதைக் காட்டிலும், ஆசிரியரின் கூற்றையே கொள்வது நல்ல குறிக்கோ ளல்லவா? இவ்வெட்டினையும் எச்சமயத்தார் தான் இல்லையென்று மறுக்கமுடியும்?

"தலையே நீ வணங்காய்" (திரு அங்கமாலை 1)
"தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை"
(பொது)

என்னும் நாவுக்கரசரின் நன்மொழிகள் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன.

பிறவிக் கடல் நீந்தல்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

(மண- உரை) பிறவியாகிய பெரிய கடலை நீந்தி யேறுவர் இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதார் அதனுள் அழுந்துவர். (பரி - உரை) இறைவன் அடியென்னும் புணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்; அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம்.

நமது உரை: இறைவனடி சேராதார்--இறைவனின் திருவடிகளை வணங்காதவர்கள், பிறவிப் பெருங்கடல்--பிறவியாகிய பெரிய கடலை, நீந்துவர்-- நீந்திக்கொண்டேயிருப்பார்கள்; நீந்தார்--ஆனால் நீந்திக் கரையேற மாட்டார்கள்.

ஆய்வுரை: மணக்குடவர், பரிமேலழகர், பரிதியார், காலிங்கர் முதலான உரையாசிரியர்கள் பலரும் 'சேர்ந்தார்' என்னும் சொல் எச்சமாய் (குறைவாய்) உள்ளது எனக் கொண்டு அச்சொல்லை வருவித்துப் பொருள் கூறியுள்ளனர். இது தேவையில்லை. மேலே நமது உரையில் கூறியுள்ளதே பொருத்தமானது. இதற்குக் கம்பனது சுந்தரகாண்டச் சூடாமணிப் படலப்பாடல் ஒன்று துணை செய்கிறது: அது,

"நீந்தா இன்னலின் நீந்தாமே
தேய்ந்தா றாத பெருஞ்செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தோர்யார்" (43)

என்பது, நீந்த முடியாத துன்பக் கடலை நீ நீந்திக் கொண்டே யிராதபடி உன்னை இராமனிடம் சேர்க்க வேண்டும் என அனுமன் சீதைபால் கூறினான் - என்பது இதன் கருத்து. சீதை இராமனைப் பிரிந்து இராவணனிடம் அகப்பட்டுக் கொண்டு வருந்துவது, நீந்த முடியாத துன்பக் கடலை நீந்திக்கொண்டிருப்பதாகும். ஆனால், இராமனை அடையாவிடின், நீந்திக்கொண்டே தான் இருக்கவேண்டுமே தவிர, நீந்திக் கரையேற முடியாது - என்பது இதன் விளக்கம். இது போலவே, இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்திக்கொண்டே இருக்கவேண்டுமே தவிர, நீந்திக் கரையேற முடியாது - என இக்குறளுக்குப் பொருள் காணவேண்டும்.

வேண்டாத சொல்லை வருவிப்பதும், இருக்கும் சொல்லை நீக்குவதும் ஆகிய ஒரு பழக்கம் பரிமேலழகரிடம் உண்டு.

"உடையார் முன் இல்லார்போல்"

என்னும் குறளிலும் ஒரு சொல்லை வருவித்து எழுதியுள்ளமை தேவையில்லை என இந்நூலுள் முன் ஓரிடத்தில் விளக்கப்பட்டுள்ளது. மற்றும்,

"அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை"
[1228)

என்னும் குறளில் 'குழல் போலும்' என்பதில் உள்ள 'போலும்' என்பதை அசை எனத் தள்ளிவிட்டார். இக் கருத்துகளையெல்லாம் அறிஞர்கள் ஆய்க.

இறைவனடிகளை வணங்காதவர்கள் வீடுபேறு எய்த இயலாது என்பது இந்தக் குறளின் கருத்தாகும்.