ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்/பொருட்பால்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பொருட்பால்
அரசியல் - இறைமாட்சி
வேந்தர்க்கு ஒளி
"கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி."

(பதவுரை) கொடை = கொடுக்குங் குணமும், அளி = அருளும், செங்கோல் = செங்கோல் ஆட்சியும், குடி, ஓம்பல் குடிமக்களைக் காக்கும் பொறுப்பும், உடையானாம் = நிலையாக உடையவன் தான். வேந்தர்க்கு ஒளி = அரசர்க்கெல்லாம் விளக்கு. (அளி = அருள் - கருணை - இரக்கம்; ஓம்பல் = பாதுகாத்தல்; ஒளி = ஒளி விடும் சுடர் விளக்கு).

(மணக்குடவர் உரை) கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும், குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க் கெல்லாம் விளக்காம். (கொடுத்தல் - தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்.)

(பரிமேலழகர் உரை) வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், யாவர்க்குந் தலையளி செய்தலும், முறை செய்தலும், தளர்ந்த குடிகளைப் பேணலுமாகிய இந்நான்கு செயலையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம்.

(விளக்கவுரை) கொடை, அளி, செங்கோல், குடி ஓம்பல் என்னும் நான்கும் உடையவன், சுடர்களுக்கெல்லாம் சுடரளிக்கும் ஞாயிறே (சூரியனே) போல, வேந்தர்களுக்குள்ளே ஒளி வீசும் விளக்காவான், ஒளி என்றால் புகழ் என்ற பொருளும் உண்டு. விநாடிக்கு 1.86,000 கல் வேகத்தில் பரவும் ஒளியை (வெளிச்சம் போலவே ஒருவரது புகழும் விரைந்து உலக முழுவதும் பரவி அவரை விளக்குவதால், அப்புகழுக்கு ஒளியென்னும் பெயர் தரப்பட்டது. போலும், எனவே, இந்நான்கும் உடையவனது புகழ் உலக நாடுகள் அனைத்திலும் பரவும் என்பதும் போதருகிறது. வேந்தர்க்கு ஒளி என்பது அதுதானோ?

பழைய உரையாசிரியர்கள், இக்குறளில், "உடையானாம்" என்பதன் பின்னுள்ள 'ஆம்' என்பதை 'ஒளி' என்பதன் பின் நிறுத்தி, "உடையான் வேந்தர்க்கு ஒளி ஆம" என மாற்றிப் பொருள் கண்டுள்ளனர். இம் முறையை நான் விரும்பவில்லை. "உடையானாம் வேந்தர்க்கு ஒளி" எனக் குறளில் உள்ளதுபோலவே கொள்வதுதான் தகுதி "உடையானாம்" என்பதிலுள்ள "ஆம்" என்பது. உடையவன் தான் - உடையவனே என்ற உறுதிப்பொருளை - தேற்றப் பொருளை - வலியுறுத்தற் பொருளை அழுத்தம் திருத்தமாக அறிவித்து நிற்கிறது . அதாவது "நான்கும் உடையவனே வேந்தர்க்கு ஒளி" எனப் பொருள் காணவேண்டும். இந்த அரும் பெருஞ் சொல்லாட்சியுள் அடங்கியுள்ள அந்நுண் பொருள் அழகினை "உடையானாம் வேந்தர்க்கொளி - உடையானாம் வேர்தர்க்கொளி" என்று சொல்லிச் சொல்லிப்பார்த்தால் உணர்ந்து துய்க்கலாம்.

இன்னும், இக்குறளில் உள்ள 'கொடை' என்னும் சொல் பழைய உரையாசிரியர்களை ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது. என்னென்று காண்போம். அரசனுக்குக் 'கொடை' வேண்டுமென இக்குறளிலும் ஈகைவேண்டுமென அடுத்து வரப்போகும் குறளிலும் வள்ளுவர் கூறியுள்ளார். பார்த்தார்கள் உரையாசிரியர்கள் ஒரு குறளிலே 'கொடை'; மற்றொன்றிலே 'ஈகை;' ஆனால் இரண்டும் ஒன்று தானே! இதற்கு எவ்வாறு பொருள் காண்பது என்று நினைத்திருக்கிறார்கள். மணக்குடவரோ, கொடை என்பதற்கு - 'தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்' என்று பொருள் கூறி, ஈகை என் பதற்கு ஈகை என்றே பொருள் எழுதி நழுவி விட்டார். பரிமேலழகரோ, கொடை என்பதற்கு 'வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல்' என்று பொருள் சு.றி, ஈகை என்பதற்கு 'ஈகை -- கொடை, (இந்த) ஈகை படைக்குரித்து' என்று எழுதி ஒருவாறு தள்ளிவிட்டுத் தப்பித்துக்கொள்ள முயன்றிருக்கிறார். இவ்வுரைகள் பொருத்தமாய்ப் புலப்படுகின்றனவா? இங்கே நான் சொல்லும் பொருள் என்ன?

ஈ, தா, கொடு என மூன்று சொற்கள் நெருக்கமான பொருள் உடையனவாய்த் தமிழில் இருப்பதை நாம் அறிவோம். அவற்றுள் ஒவ்வொன்றிற்கும் வேற்றுமையும் உண்டு. ஈதல் (ஈகை) என்பது, ஒருவன் தன்னிலும் தகுதியில் தாழ்ந்தவருக்கு உதவுதலாம். "வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை" என வள்ளுவரே, "ஈகை" என்னும் தலைப்பின் முதல் குறளில் கூறியுள்ளார், தருதல் (தா) என்பது தன்னோடு தகுதியில் ஒத்தவருக்கு உதவுவது . கொடுத்தல் (கொடை) என்பது, தன்னிலும் தகுதியில் மிக்கவருக்கு உதவுவது. இக்கருத்துகளை

"ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே"
"'தா வென் கிளவி ஒப்போன் கூற்றே"
"கொடு வெண் கிளவி உயர்ந்தோன் கூற்றே"

என்னும் தொல்காப்பிய (சொல்லதிகாரம் - எச்சவியல்49, 50, 51) நூற்பாக்களாலும்,

"ஈ தா கொடு வெனும் மூன்றும் முறையே
இழிந்தோன் ஒப்போன் மிக்கோல் இரப்புரை"

என்னும் நன்னூல் (சொல்லதிகாரம்-பொதுவியல் - 56) நூற்பாவாலும் நன்கு உணரலாம். எனவே, இக்குறளில் 'கொடை' என்றது, அரசன் தன்னிலும் உயர்ந்தோர்க்கு உதவுவதையேயாகும். அடுத்த குறளில் 'ஈகை' என்றது. அரசன் தன்னிலும் தாழ்ந்தவருக்கு உதவுவதையேயாகும். ஆனால் இச்சொற்கள் எல்லா இடங்களிலும் இதே பொருளில் வரும் என்று சொல்ல முடியாது . ஒன்றுக்கொன்று வேற்றுமையுடைய உண்மை, வாய்மை, மெய்ம்மை என்பவை கலந்து பயன்படுத்தப் படுவதைப் போலவே, இவையும் கலந்து பயன்படுத்தப்படும். ஆனால், அரசனுக்குக் கொடை, ஈகை இரண்டும் வேண்டும் என்று சொல்லியிருக்கிற இந்த இடத்தில் இவ்வாறு பொருள் கோடலே அமைதி.

அரசன் தன்னிலும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தல் (கொடை) என்றால், புலவர்க்கும் கலைஞர்க்கும் பரிசு வழங்கல். புலவரையும், கலைஞரையும் தம்மிலும் மிக்கோராக அரசர்கள் கருதினர் என்பதை. புறநானூறு போன்ற சங்க இலக்கியம் கற்றவர் நன்கறிவர்.

இக்குறளில் ' அளி' என்பது. எல்லாரிடத்தும் அருள் செலுத்துதல் - இரக்க உணர்ச்சி கொள்ளல். செங்கோல் என்பது, ஒருதலைச் சார்பு இன்றி நேர்மையாய் ஆளுதல். குடி ஓம்பல் என்பது, குடிமக்களுக்கு எந்தக் குறையும் வராதபடி நன்கு காத்தல்.

எனவே, கல்வி கலைகளை வளர்த்து, அருள் உள்ளந் தாங்கி, நேர்மையுடன் குடிகளை நன்கு காப்பவனது புகழ் உலக நாடுகள் எங்கும் பரவி ஒளி வீசுந்தானே !

இக்குறளை மணக்குடவர் 7-ஆம் குறளாகவும், பரிமேலழகர் 10-ஆம் குறளாகவும் இன்னும் பிறர் பிறவிதமாகவும் அமைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் நானோ, முதல் குறளில் 'அரசருள் ஏறு' என்று இருப்பதால், அது போலவே 'வேந்தர்க்கு ஒளி' என்றிருக்கும் இக்குறளை இரண்டாவதாகத் தொடர்ந்து கொண்டேன். மற்ற குறள்களின் தொடர் வரிசை யமைப்பையும் கூர்ந்து நோக்கி உண்மையுணர்க.

வேந்தர்க்கு இயல்பு
"அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு"

(பதவுரை) அஞ்சாமை -- (அஞ்சக்கூடாதவற்றுக்கு) அஞ்சாதிருத்தலும், ஈகை - ஏழை எளியார்க்கு உதவலும், அறிவு = சிறந்த கூரிய அறிவும், ஊக்கம் = தளராத மன எழுச்சியும், இந்நான்கும் = ஆகிய இந்த நான்கு பண்புகளும், எஞ்சாமை = குறையாதிருப்பது அதாவது நிறைந்து நிலைத்திருப்பது, வேந்தர்க்கு இயல்பு = ஓர் அரசனுக்கு இருக்க வேண்டிய தன்மை (இலட்சணம்) ஆகும். (எஞ்சுதல் - குறைதல்; எஞ்சாமை = குறையாமை)

(மணக்குடவர் உரை) அஞ்சாமையும், ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையு மென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக் கியல்பு.

(பரிமேலழகர் உரை) அரசனுக்கியல்பாவது, திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமுமென்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். இவற்றுள் அறிவு ஆறங்கத்திற்கு முரித்து ; ஈகை படைக்குரித்து; ஏனைய வினைக்குரிய.

(விளக்கவுரை) அஞ்சுபவர்கள் அரச பதவியில் நீடிக்க முடியுமா? "கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா?" அஞ்சி அஞ்சி எந்தக் காரியத்தை இயற்ற முடியும்? அதனால் "அஞ்சாமை" வேண்டும் என்றார். பின்னர் ஈகை, ஈகை படைக்கு உரித்து, என்றார் பரிமேலழகர். எந்த அகராதியில் இவ்வாறு சொல்லியிருக்கிறதோ? நான் முன் குறள் உரையில் ஆராய்ந்துள்ளபடி, ஈகை என்பது, அரசன் தன் கீழ் உள்ளார்க்கும் எளிய இரவலர்களுக்கும் ஏற்ற உதவிகளைச் செய்தலாம். இதற்குத் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களிலிருந்து ஆதாரமும் அங்குக் காட்டியிருக்கிறேன். அடுத்தது அறிவு, ஒருவன் ஒழுங்காகக் காரியம் பார்க்கவில்லையென்றால் - நடந்து கொள்ளவில்லையென்றால், "உனக்கு அறிவு இருக்கிறதா?" என்று கேட்பது உலகியல். அரசனுக்கு இது மிக மிக வேண்டுமே! இறுதியாக ஊக்கம், ஆக்கத்திற்குக் காரணமான ஊக்கத்தைப் பற்றிப் பேசவும் வேண்டுமோ?

இந்நான்கும் அரசற்குச் சில நாள் சிலவேளை இருந்தால் போதாது; எஞ்ஞான்றும் எஞ்சாது நின்று நிறைந்து நிலைத்திருக்க வேண்டும்; அதுதான் அரசற்குத் தகுதி!

அறத்துப்பால்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
துறந்தார் முதலோர்க்குத் துணை
"துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை"

(பதவுரை) இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தான் என்று சொல்லப்படுபவன். துறந்தார்க்கும் - (பற்றுக்களைத் துறந்த பெரியாருக்கும். துவ்வாதவர்க்கும்--(ஏழமையால் எவ்வித இன்பத்தையும்) அனுபவிக்கமுடியாத ஏழை எளியவருக்கும், இறந்தார்க்கும் - (ஆதரவின்றித் தம் பார்வையில்) இறந்து கிடப்போருக்கும் (அஃதாவது அனாதைப் பிணங்களுக்கும்.) துணை - (தக்க) துணையாவான், (தெளிவுரை) 'து' என்றால் அனுபவித்தல், துவ்வாதவர் என்றால் அனுபவிக்காதவர் - அஃதாவது, இன்பம் அனுபவிக்க முடியாத ஏழை எளியவர்கள். இல்வாழ்வான் துறவிகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உணவு, உடை முதலியன உதவ வேண்டும்; ஆதரவற்ற (அனாதைப்) பிணங்களை அப்புறப் படுத்தி இறுதிக்கடன் இயற்றவேண்டும் என்பது கருத்து. ஆதரவில்லாப் பிணங்களை அப்புறப்படுத்துவது அறங்களுள் ஒன்றாக அக்காலத்தில் கருதப்பட்டது.

(மண - உரை) வருணத்தினையும் காமத்தினையும் துறந்தார்க்கும் துறவாது நல்குரவாளராய் உண்ணப்பெறாதார்க்கும். பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் துணையாவான்.

(பரி- உரை) களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும், நல்கூர்ந்தார்க்கும், ஒருவரும் இன்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் துணை

(ஆராய்ச்சி உரை) உரையாசிரியர்கள் பலரும், முன் குறளில் சொல்லப்பட்டுள்ள மூவருள் துறந்தாரையும் ஒருவராகச் சேர்த்துவிட்டார்கள் ஆதலின், இக்குறளில் உள்ள 'துறந்தார்க்கும்' என்ற சொல்லைக் கண்டு திகைத்து, வேறு என்னென்ன பொருள்களையோ விளம்பி இடர்ப்படுகின்றனர். மணக்குடவர், முன் குறளில் உள்ள மூவருள் ஒருவராகிய துறவி, வருணத்தினையும் நாமத்தினையும் (சாதி சமயங்களையும்) துறவாதவர் என்றும் இக் குறளில் உள்ள துறவி, வருணத்தினையும் நாமத்தினையும் துறந்தவர் என்றும் வேற்றுமைகாட்டிச் சரிசெய்யப் பார்க்கின்றார். துறவிகளுக்குள்ளேயே, வருண நாமங்களைத் துறந்தவர் என்றும் துறவாதவர் என்றும் இருவகை உண்டா ? இல்லையே! வருண நாமங்களைத் துறவாதவர்களை எப்படித் துறவிகள் என்னும் பெயரால் அழைக்க முடியும்? வருண நாமங்களையே துறவாதவர்கள் வேறு எவற்றைத் தாம் துறக்க உடன்படுவார்கள்? நிற்க-

பரிமேலழகரும், முன் குறளிலேயே துறந்தாரைக் கூறி விட்டாராதலின், இக்குறளில் உள்ள துறந்தார் என்பதற்கும் துறவி எனப் பொருள் கூற உடன்பட்டிலர், ஆனால் இவரும் வேறு விதமாகச் சரிசெய்யப் பாடுபட்டு உள்ளார். அஃதாவது :- துறந்தார் என்றால், இவ்வளவு நாள் காப்பாற்றி வந்தவர்களால் கைவிடப்பட்டவர்கள் (துறக்கப்பட்டவர்கள்) என்று கூறியுள்ளார். இங்ஙனம் துரத்தப்பட்டு இன்பம் அனுபவிக்க முடியாமல் தவிப்பவர்களைத் 'துவ்வாதவர்' என்பதற்குள் அடக்கி விடலாமே! மற்றும் துறந்தார் என்னும் செய்வினையை, துறக்கப்பட்டார் எனச் செய்யப்பாட்டு வினையாக வலிந்து கொண்டு இடர்ப்படவும் வேண்டியதில்லையே! எனவே ஈண்டு துறந்தார் என்பதற்குப் பற்றுக்களைத் துறந்த பெரியோர்கள் என்று பொருள் கொள்வதே சாலப் பொருந்தும். அச்சொல்லுக்குரிய இயற்கைப் பொருளும் அதுவே, தமக்கென ஒரு வருவாயும் தேடாமல், பிறர் நலத்திற்கே பாடுபடும் துறவிகளுக்கு உணவு, உடை முதலியனவற்றை இல்லறத்தான்தானே கொடுக்க வேண்டும். இன்னும், கண், கால், முதலிய உறுப்புக் குறைந்தவராகித் தொழில் செய்ய முடியாமல் பிச்சை எடுப்போரைத், துவ்வாதவர் என்பதனுள் அடக்க வேண்டும்.

ஐம்புலத்து ஆறு
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றால்
ஜேகம்புலத்தா றோம்பல் தலை.

(பதவுரை) ஆங்கு-~- அவ்வில் வாழ்க்கையில், தென் புலத்தார் --- (இறந்துபோய்த்) தென் திசையில் இருப்பவராகக் கருதப்படும் முன்னோரும், தெய்வம் - கடவுளும், விருந்து - (இதற்கு முன் வராத புதிய விருந்தினரும். ஒக்கல் - சுற்றத்தார்களும், தான் - தானும் (அதாவது இல்வாழ்வானும்), என்ற - என்று சொல்லப்படுகின்ற ஐம்புலத்து - ஐந்து வகையார் இடத்திலும் செய்யவேண்டிய, ஆறு - அற நெறியை, ஓம்பல் - தவறாமல் செய்தல் தலை - தலை சிறந்ததாகும்.

(விரிவுரை) தென்புலம் - தென்திசை, இறந்து போனவர்களின் உயிர் தெற்கே செல்வதாக அக்காலத்து மக்கள் எண்ணிவந்தனர். அதற்கேற்பவே வள்ளுவரும் அறிவித்துள்ளார். எனவே, இறந்து போனவர்களை ஓம்புதல் என்றால் என்ன? தாய்தந்தையரோ. புலவர்களோ, துறவிகளோ, வள்ளல்களோ இறந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் உயிர் தென்புலத்தில் இருந்தால்தான் நமக்கென்ன? இல்லாவிட்டால் தான் நமக்கென்ன? இது பற்றிய கவலை வேண்டியதில்லை. அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்ததற்கு அறிகுறியாக - அவர்கள் இவ்வுலகிற்குத் தொண்டாற்றியதற்கு அடையாளமாகஅவர்களைப் போலவே ஏனையோரும் நல்லவழியில் நடக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நெறியாக - அவர்களால் நன்மை பெற்ற நாம், அவர்கட்கு நன்றி செலுத்தும் வாயிலாக - அவர்கட்கு நினைவு நாள் கொண்டாட வேண்டும். இப்போதும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுகின்றோம் அல்லவா? இறந்துபோன தாய்தந்தையரை ஆண்டுதோறும் எண்ணி நன்றி பாராட்டுபவராக நடந்து கொள்கின்றோம் அல்லவா? இவைபோல்வனவற்றையே தென்புலத்தாரை ஓம்பல் எனத் தெரிவித்துள்ளார் திருவள்ளுவர்.

தெய்வத்தை ஓம்புதல் என்றால். ஓய்வும் உறுதியும் பெறுவதற்காகக் கடவுளை வழிபடுதல். விருந்து என்பதற்கு நேர் பொருள் புதுமை. "விருந்து புதுமை" என்பது திவாகரம் (8 : 123). வெள்ளை கறக்கிறது என்றால், வெள்ளையான பசு கறக்கிறது என்று பொருள் கொள்வதைப்போல, விருந்து வந்தது என்றால் - புதிதான மனிதர் வந்தார் என்று பொருள் கொள்ளல் வேண்டும். இதற்குத்தான் ஆகுபெயர் என்று பெயர், ஆகுபெயர் என்றால் ஒன்றைக் குறிக்கும் ஒரு பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு ஆகிவருவது. புதுமையைக் குறிக்கும் விருந்து என்னும் பெயர், புதிதாய் வருகின்ற மனிதர்க்கு ஆகிவருவதால் இஃது ஆகுபெயராகும். எனவே, முன்பின் வந்துகொண்டிருக்கும் தொடர்புடைய உறவினர்கள் விருந்தினர் ஆகமாட்டார் என்பதும் திடீரெனப் புதிதாக வருபவரே விருந்தினர் ஆவர் என்பதும் வெட்ட வெளிச்சம், திருக்குறள் விருந்தோம்பல் என்னும் பகுதியிலுள்ள "வருவிருந்து வைகலும் ஓம்புவான்", "செல் விருந்தோம்பி வரும் விருந்து பார்த்திருப்பான்" என்னும் குறட்பகுதிகளாலும் இதனைக் குறிப்பாய் உணரலாம். மேலும் இக்குறளிலேயே ஒக்கல் (சுற்றம்) என ஓன்று தனியாகக் கூறியுள்ளமையே, உறவினர் விருந்தினர் ஆகார் என்பதற்கு மறுக்க முடியாத அகச்சான்றாகும். சரி நல்லது; புதிதாக வருபவரே விருந்தினர் என்பீராயின், அவர்களை முன் குறளில் உள்ள துறந்தார், துவ்வாதவர் என்பவர்க்குள் அடக்கிவிடக்கூடாதா? என்று வினவலாம். அடக்க முடியாது; ஏன்?

ஓர் ஊரில் விழா நடக்கின்றது. மாநாடு நடக்கின்றது. இன்ன பிற சிறப்புகள் நடைபெறுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அவ்வூர்க்குப் புதிய மக்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வருவார்கள். அப்புதியோர்க்கு, ஊரினர் தங்க இடம் அளிக்கலாம்; குளிக்கவும், குடிக்கவும் தண்ணீர் வசதி செய்து தரலாம்; இயலுமேல், வந்தவர்க்கும் உடன்பாடாகில் உணவும் அளிக்கலாம். செய்யப்பட வேண்டிய தொன்றுதானே இஃது! இன்றும் நாட்டில் நடைபெறுகின்றதே இத்தகைய நிகழ்ச்சி! அன்றியும், புதிதாக வந்த இடத்தில் குறிப்பிட்ட சிலரைத் தவிர ஏனையோர் என்ன செய்ய முடியும்? ஊரார் உதவி இருந்தே தீர வேண்டும். இத்தகைய புதியோரைத் துறந்தார் என்று சொல்ல முடியுமா? அல்லது, துவ்வாதவர் என்றுதான் மொழிய முடியுமா? முடியவே முடியாதே? உண்மையான விருந்தினர் என்பவர் இப்புதியோரே? இன்னும் சிலர் (பிரயாணம்) வழி நடந்து செல்கின்றார்கள். அவர்கள், வெய்யில் கடுமையாகக் காயும் நேரத்திலோ, இரவிலோ, மழைபெய்யும் நேரத்திலோ வழியில் உள்ள ஓர் ஊரில் தங்கிவிடுவார்கள். அவர்களும் அவ்வூரார்க்கு விருந்தினரேயாவர். ஏன்? இப்புதியோர், ஊராரின் உதவியின்றித் தம் கைப்பணத்தைக் கொண்டு தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ள முடியாதா என்று சிலர் ஐயுறலாம். இங்கொரு செய்தியை நினைவுபடுத்தினால் இவ்வையத்திற்கு இடமிருக்காது, அஃதென்ன?

புகைவண்டி, ‘மோட்டார்’, வான ஊர்தி முதலியவற்றின் மூலமாக வழி கடப்பது இந்தக் காலம்; பெரும்பாலும், கட்டை வண்டி, கால்நடையின் மூலமாக வழி கடந்தது அந்தக்காலம். தம்மூரில், தம் வீட்டில் காலை உணவு உண்டு, பின் தொலைவில் உள்ள வெளியூர்கட்குச் சென்று வேலையை முடித்துக் கொண்டு தம் வீடு திரும்பி வந்து அடுத்த வேளை உணவு உண்ணுவது இந்தக்காலம்; கட்டு சோறு கட்டிக்கொண்டு நாட் கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் வெளியூர் சென்று மீண்டது அந்தக்காலம்; கண்ட இடங்களில், கண்ட நேரங்களில், கண்ட உணவுச்சாலைகட்குள் புகுந்து காசை இறைத்து வயிற்றை நிரப்புவதற்கு வாய்ப்பு மிகமிகக் கிடைக்கப் பெற்றிருப்பது இந்தக் காலம்: கட்டுசோற்று மூட்டை கரைந்த பின்பு, ஊர்க்குள் புகுந்து ஊராரின் உதவி பெற்றது அந்தக்காலம். எனவே, இல்லறத்தான் விருந்தோம்ப வேண்டும் என்று அந்தக் காலத்தில் வள்ளுவர் வற்புறுத்தியிருப்பது பொருத்தந்தானே! எல்லாம் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்திலும் இவ்விருந்தோம்பல் தேவைப்படுகின்றதென்றால் மேலும் கூறுவானேன்?

எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கே (எள் + நெய்) எண்ணெய் என்று பெயர்; அந்தப் பெயர், பின்பு தன்னோடு ஓரளவு ஒப்புமை உடைய ஏனைய எண்ணெய்களுக்கும் வழங்கப்பட்டதைப்போல, புதியோரைக் குறிக்கும் விருந்து என்னும் பெயர், பின்பு அவரைப்போல் வந்து போகும் உறவினர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. எனவே, இதுகாறும் கூறியவற்றால், தம்மை நாடி வரும் புதிய விருந்தினரை ஓம்பவேண்டியது இல்லறத்தாருக்குரிய கடமைகளுள் ஒன்று என்பது உணரப் பெறும்.

ஒக்கல் என்றால் சுற்றத்தார்கள். இல்லறத்தான் தன்னைச் சேர்ந்த சுற்றத்தார்களையும் ஓம்பதேண்டும். ‘செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்கல்’ என்பது நாம் அறிந்ததுதானே?

முதல் குறளில் உள்ள ‘இயல்புடைய மூவர்’ என்பதற்கு, பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்னும் மூவகையினர் எனப் பொருள் உரைத்தேன் யான். ஏன்-அம்மூவரையும் இக்குறளில் உள்ள சுற்றத்தாருக்குள் அடக்கிவிடக்கூடாதா? என்ற வினா எழலாம். ஈண்டு அடக்க முடியாது. ஏன்?

ஒருவன் தன் பெற்றோர், மனைவி, மக்கள் எனும் மூவகையாரோடு கொள்ளும் தொடர்புக்கும், ஏனைய சுற்றத்தார்களோடு கொள்ளும் தொடர்புக்கும் வேற்றுமை மிக உண்டு. வெளியூருக்குச் சென்ற பெற்றோரோ மனைவியோ, மக்களோ திரும்ப வீட்டிற்கு வந்தால், வீட்டிற்குரியவன் பிறரை நோக்கி, என் வீட்டிற்குச் சொந்தக்காரர் வந்திருக்கிறார் என்றோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்றோ சொல்லும் வழக்கம் எங்கும், என்றும் இல்லை. ஏனைய உறவினர் வந்தால் அப்படிச் சொல்லுவது உண்டு. தமையன், தமக்கை, தம்பி, தங்கை என்பவரும் தனித்தனிக் குடும்பத்தினராக ஆய்விடுவதால் அவர்களும் விருந்தாளிகளாகக் கருதப்பட்டு விடுவதை நாம் வாழ்க்கையில் கண்டே வருகின்றோம். மேலும், - ஒருவன் தன் பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்பவர்க்கு உரிய உடைமைகளையெல்லாம், ஏறக்குறையத் தனக்கும் உரியனவாக எண்ணுகின்றான். ஏனையோர் உடைமைகளை அங்ஙனம் எண்ணுவது இல்லை. எனவே இம்மூவரும், ஏனையோரைப்போலச் சுற்றத்தார் என்னும் சொற்குள் கட்டுப்படாமல், பிரிக்க முடியாத குடும்ப உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றார்கள் என்பது இனிது புலனாகும், இதற்கு அகச்சான்று வேண்டுமானால், ‘இயல்புடைய மூவர்க்கும்’ என்பதில் உள்ள ‘இயல்புடைய’ என்னும் சொற்றொடர் ஒன்றே போதுமே! சுற்றம் ஓம்புதலாவது:- பல வேலைகளின் நிமித்தம் வெளியூரிலிருந்து வந்து போகும் சுற்றத்தார்க்கு உணவு முதலியன உதவுதல், ஆதரவற்ற சுற்றத்தார்களைத் தம்மோடு வைத்து ஆதரித்தல், அன்னோரின் பிள்ளைகட்குக் கல்வி வசதி செய்தல், அன்னோர்க்கு ஏதேனும் வருவாய்க்கு வழி தேடித்தருதல் முதலியனவாம். இவ்வுதவிகளையெல்லாம் இல்லறத்தான் இயன்றவரை இயற்றலாமே!

ஐந்தாவதாக (தான்) இல்லறத்தான் தன்னையும் ஓம்பவேண்டும் என்று தெரிவித்துள்ளார் திருவள்ளுவர். இஃது சிலர்க்கு வியப்பையும் அளிக்கலாம். அப்படியொன்றும் இங்கு வியப்பிற்கு இடமில்லை. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் பாதுகாத்துக் கேடுகெட்ட மக்கள் எத்துணையோ பேர் உண்டு. இல்லாதவனைப் பற்றி இங்கு எடுத்துரைக்கவில்லை. சிலர் அரும்பாடுபட்டுச் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பார்கள். ஆனால் நல்ல உணவினையோ, உடையினையோ, உறக்கத்தினையோ, உறையுளையோ, (இடம்), இன்ன பிற இன்பங்களையோ வேண்டிய அளவு பெற்றிருக்கமாட்டார்கள். என்னே இவர்தம் இரங்கத்தக்க நிலை! தன்னைப் பாதுகாத்துக் கொண்டால்தான், மேன்மேலும் பல நல்ல காரியங்களைச் செய்ய முடியும். எனவே மேற்கூறிய ஐந்தும் இல்வாழ்வான் இயற்ற வேண்டியவை என்பது இக்குறட் கருத்து.

(மண -உரை) பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தான் என்னும் ஐந்திடமாகிய நெறியைக் கெடாமல் ஓம்புதல் தலையான இல்வாழ்க்கை

(பரி-உரை) பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம். பிதிரர் ஆவார் படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென் திசை ஆதலின், தென்புலத்தார் என்றார்.

(ஆராய்ச்சி உரை) தென்புலத்தார் என்பதற்கு, முதல் முதல் உலகத்தை உண்டாக்கிய போதே நான்முகனால் (பிரமனால்) உண்டாக்கப்பட்ட ஒரு தெய்வசாதி என்று பரிமேலழகர் பகர்ந்தார் உரை. ஏன் - இவர்களை, தெய்வம் என்பதற்கு அவர் கூறும் பொருளான தேவர்க்குள் அடக்கி விடலாமே! தென்திசையில் இருக்கும் இத்தெய்வ சாதியார்கள் நமக்காக என்ன செய்கின்றார்களோ? நாம்

இவர்களுக்கு என்ன செய்யவேண்டுமோ? ஒன்றும் புரியவில்லை. ஏனைய தெய்வங்களைப் போலவே இவர்களும் அருள் புரிகின்றார்கள் என்றால், இவர்களையும் தெய்வக்கூட்டத்துள் சேர்த்துவிடுவதால் என்ன இடையூறு? எனவே இப்பொருள் பொருத்தம் அன்று.

மேலும், இப்பொருள் உரைத்தால், யான் உரைத்தபடி முன்னோரின் நினைவு விழாவிற்கு இடமில்லாமலேயே போய்விடும். இறந்துபோன வீரர் முதலியவர்களுக்கு விழாக் கொண்டாட வேண்டாவா? கொண்டாடியதாகக் கூறுகின்றனவே சங்க கால இலக்கண இலக்கியங்கள்! வீர மங்கை கண்ணகிக்கு விழாக் கொண்டாடினானே ஒரு தனித் தமிழ் மன்னனாம் சேரன் செங்குட்டுவன். சிலப்பதிகாரத்திற்குள் சென்று பார்த்தால் தெரியும். எனவே, தென் புலத்தார் என்பதற்கு, சிறந்த செயல்கள் செய்து சென்று பட்ட முன்னோர் எனப் பொருள் கூறலே சாலப் பொருந்தும்.

காமத்துப்பால்
களவியல் - தகையணங்குறுத்தல்
உயிர் உண்ணும் தோற்றம்

(தெளிவுரை) பெண் தன்மையுடைய இப்பேதைக்குக் கண்கள், கண்ணுக்குரிய கண்ணோட்டம் இன்றி, எதிர்மாறாக, பார்த்தவரது உயிரைத் தொலைக்கும் பார்வையுடையனவாய் உள்ளன.

“கண்டா ருயிருண்ணுங் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன எண்”

(பதவுரை) பெண் தகை = (உருவத்தால்) பெண் தன்மை பெற்றுள்ள, பேதைக்கு = இந்தப் பேதைப் பெண்ணுக்கு, கண் = கண்களானவை, கண்டார் = பார்த்தவரது, உயிர் உண்ணும் தோற்றத்தால் = உயிரைத் தொலைக்கும் பார்வையைப் பெற்றிருப்பதால், அமர்த்தன = (கண்ணுக்கு இருக்க வேண்டிய தன்மையின்றி) எதிர்மாறாய் உள்ளன, (தோற்றம் = பார்வை; பெண்டகை - பெண் தகை = பெண் தன்மை; பேதை = அறியாத இளம் பேதைப் பெண்; அமர்த்தல் - மாறுபடுதல், அமர்த்தன - மாறுபாடாயுள்ளன.)

(மணக்குடவர் உரை) தம்மைக் கண்டவர்கள் உயிரை யுண்ணும் தோற்றத்தாலே, பெண் தகைமையையுடைய பேதைக் கொத்தன கண்கள்,

(பரிமேலழகர் உரை) பெண்டகையை யுடையவிப் பேதைக்கு உளவாய கண்கள், தம்மைக்கண்டா ருயிருண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்ந்திருந்தன.

{ஆராய்ச்சி விரிவுரை) உயிர் உண்ணல் என்றால் உயிரைப் போக்குதல்--- தொலைத்தல். இந்தப் பொருள் எந்த அகராதியில் உள்ளது? வேண்டியதில்லை - பணம் போட்டு வாங்கிய எந்த அகராதியும் இங்கு வேண்டியதில்லை. மக்கள் அகராதியில் இதனைக் காணலாம்; அதாவது, மக்களது பேச்சு வழக்கில் இதனைக் காணலாம். ஒருவன் ஒரு பொருளைத் தொலைத்துவிட்டால், "அதைத் தொலைச்சு வாயில் போட்டுக்கொண்டாயா" என்று பெரியவர்கள் அவனைக் கண்டிப்பதை நாம் அறிவோம். வாயில் போட்டுக் கொள்ளலும் உண்ணலும் ஒன்று தானே! இன்னும் சிலர் தம் எதிரியைக் குறிப்பிட்டு, "அவன் என்னை என்ன செய்து விடுவான்? சாப்பிட்டு விடுவானோ?" அப்படியே எடுத்து விழுங்கி விடுவானோ? என்று காய்வதும் உண்டல்லவா? எனவே, உண்ணல், வாயில் போட்டுக் கொள்ளல், சாப்பிடுதல், விழுங்கல் என்னும் சொற்கள், தொலைத்தல் - அழித்தல் என்னும் பொருள் தருவதை நோக்குக. இச்சொல் வழக்கு மக்களது பேச்சில் எவ்வாறு புகுந்தது? எப்போது புகுந்தது? மிக மிகப் பழங்காலத்தில் உயிரைத் தொலைத்துத்தானே உண்டார்கள்? அதாவது மக்கள் வேட்டையாடித்தானே உண்டார்கள்? மக்களுக்கு மக்கள் கொன்றும் உண்டார்களாம். பின்னரே பயிர்த் தொழில் வளர்ந்தது? இப்போதும், மக்கள் விலங்கு முதலியவற்றை, உயிர் போக்கி உண்ணல் நடைபெறுகிறதே! இந்த அடிப்படையில் அன்று தொட்டு எழுந்ததுதான் இச்சொல் வழக்கு!

அடுத்து, இக் குறளில், 'தோற்றம்' என்பதற்குப் பார்வை என்பது பொருள். "இப்பொழுதெல்லாம் எனக்குத் தோற்றம் சரியாய்ப் புலப்படுவதில்லை" என்று கிழங்கள் முணுமுணுப்பதை நாம் கேட்கின்றோம் அல்லவா? பார்வை என்ற பொருளில் தானே தோற்றம் என்று சொல்கின்றனர் முதியோர்கள்.

வள்ளுவர், மற்றோரிடத்தில் 'கண்ணோட்டம்' என்னும் தலைப்பில், கண்ணைப் பற்றிப் பத்துக் குறள்கள் இயற்றியுள்ளார். அங்கே, இனிய பார்வை -- இரக்கப் பார்வை, அன்புப் பார்வை- அருள் பார்வை உடையதுதான் கண் எனப்படும்; கண் என்றால் கண்ணோட்டம் அதாவது இரக்கம் என்றெல்லாம் கருத்தமைத்து வைத்துள்ளார். உலக வழக்கில் கூட, 'உனக்குக்கண் இல்லையா'? என்கின்றனரே! இல்லையா என்றால் இரக்கம் இல்லையா என்பது தானே பொருள் !

உண்மை நிலைமை இப்படியிருக்க, இந்தப் பேதைப் பெண்ணின் கண்களோ, இயற்கைக்கு எதிர் மாறாயுள்ளன - அதாவது - பார்த்தவரது உயிரைப் பருகுகின்றன. இதுதான் இக்குறளின் கருத்து. இதனுள் இன்னுஞ் சில நயங்கள் இருக்கின்றன.

இவளோ பெண் தகைப் பேதையாவாள். பெண் தகை என்றால் பெண் தன்மை - அதாவது விரும்புதற்குரிய தன்மை -- அன்புக்குரிய தன்மை. அன்பு என்னும் பண்பு இருக்கவேண்டிய இடத்தில் கொலை புரியும் வன்பு உள்ளதே! இது இயற்கைக்கு மாறுதானே?

மேலும், பேதை என்றால், ஒன்றும் அறியாத இளஞ்சிறுமி என்பது பொருள், பெண்களின் பருவ நிலையை ஏழாகப் பிரித்துள்ளனர் ஆன்றோர், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை தெரிவை, பேரிளம் பெண் என்பன அவை. இவற்றுள் பேதைதான் முன் நிலை. ஐந்து வயதுக்கு மேல் ஏழு வயது வரையும் போதைப் பருவம் எனக் கணக்குஞ் செய்துள்ளனர். எனவே, பேதை என்பவள் ஒன்றும் அறியாத இளஞ்சிறுமி என்பது இப்போது நன்கு விளங்குமே! பேதை என்பதற்கு அறியாமை என்ற பொருளும் உண்டு, இனிக் குறளுக்கு வருவோம். இவள் பார்வைக்கு ஒன்றும் அறியாத இளஞ்சிறுசிறுமிபோல் காணப்படுகிறாள். (இவள், உண்மையில், ஏழு வயது நிரம்பாத இளஞ்சிறுமியல்லள். இளம் பெண் என்பதை அறிவிக்கும் ஒரு கற்பனையே.) ஆனால், அவள் பார்வையிலோ கொலைக் கொடுமை இருக்கிறதே! இஃதென்ன வியப்பு. இயற்கைக்கு மாறாயுள்ளதே! இவ்வாறெல்லாம் இக் குறளுக்குப் பொருள் நயம் உ.ரைத்துக் கொள்க.

கண் பார்வையின் கொடுமை படிப்படியாக மிகுகிறது. இக்குறளுக்கு முன்முன் குறளில் கண்ணோக்கை, அணங்கு படை கொண்டுவந்து தாக்குவதாகப் புனைந்தார் (வருணித்தார்); முன் குறளில் எமனென எடுத்தோதினார்; இக்குறளிலோ கண்டவரது உயிரை உண்ணுவதாக உரைத்துள்ளார். படை கொண்டு தாக்குங்காலும், படை உடம்போடு தொடர்பு கொண்டால் தான் உயிர் போகும்; எமன் உயிரைப் பிடிக்க வந்தாலும், அருகே வந்து ஏதோ (பாசக்) கயிற்றை வீசி எறிந்து கட்டியிழுப்பதாகக் கதையளப்பது வழக்கம். ஆனால் இவள் கண் பார்வையோ படையையும் எமனையும் மிஞ்சிவிட்டது. அருகே வராமலேயே, உடம்போடு தொடர்பு கொள்ளாமலேயே. தொலைவிலே இருக்கும்போதே, கண்ணால் பார்த்த அளவிலேயே உயிரைக் கொல்லுகிறதே! என்ன கொடுமை! எவ்வளவு கொடுமை! இதைத்தான் "கண்டார் உயிர் உண்ணும் தோற்றம்" என்று கற்பனை செய்தார் ஆசிரியர். என்ன அழகு! என்ன அழகு! அணுவுக்குள் ஆழ்கடல் என்பது திருக்குறளுக்கு முழுக்க முழுக்கப் பொருந்தும்!

கூற்றமோ கண்ணோ பிணையோ

(தெளிவுரை) இப்பெண்ணின் கண் நோக்கு, கூற்றுவனது கொலைத்தொழில் உடையதா? அல்லது, கண்ணுக்குரிய கண்ணோட்டம் பெற்றதா? அல்லது, மானினது மருண்ட பார்வை உடையதா? என்று கேட்டால், இம்மூன்று தன்மைகளையுமே கலந்து பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

"கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்று முடைத்து"

(பதவுரை) மடவரல் நோக்கம் = இந்த இளம் பெண்ணின் கண்பார்வை, கூற்றமோ = (என்னைக் கொல்வது போல் பார்ப்பதால்) எமப் பார்வையோ? கண்ணோ = (ஒவ்வொரு நேரம் என்னை உள்ளன்போடு பார்ப்பதுபோல் தெரிவதால்) உண்மையான கண்பார்வைதானோ? அல்லது. பிணையோ = (சில நேரம் மருண்டு மருண்டு மிரண்டு) மிரண்டு பார்ப்பதால்) பெண்மானின் பார்வைதானோ? இல்லையில்லை) இம் மூன்றும் உடைத்து = இந்த மூன்று தன்மைகளையுமே ஒருங்கு கலந்து பெற்றுள்ளது.

(கூற்றம்-எமன் ; பிணை - பெண்மான்; மடவரல் - இளம் பெண்.)

(மணக்குடவருரை) கொடுமை செய்தலால் கூற்றமோ? ஒடுதலால் கண்ணோ ? வெருவுதலால் மானோ? மடவரலே? நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து.

(பரிமேலழகருரை) என்னை வருத்துதலுடைமையாற் கூற்றமோ? என் மேலோடுதலுடைமையாற் கண்ணோ ? இயல்பாக வெருவுதலுடைமையாற் பிணையோ? அறிகின் றிலேன், இப்ப மடவரல் கண்களிநோக்கம் இம்மூன்றன் தன்மையையு முடைத்தாயிரா நின்றது .

(விரிவுரை) அவளது கண்பார்வை தன்னை வருத்தியதால் கூற்றமோ என்றான் அவன். சிலநேரம் அன்போடு ஆசையோடு பார்ப்பதாகப் பட்டதால் உண்மையான கண்ணோ என்றான் , வெளியிடத்திலே புதிய ஆண் மகனைக் கண்டதால் ஏற்பட்ட நாணத்தோடும் அச்சத்தோடும், சுழல் விளக்குபோல் மேலும் கீழும் சுற்றிச் சுழற்றி மிரண்டு மிரண்டும் பார்ப்பதால், மருண்டு மருண்டு பார்த்தோடும் மான் பிணையோ என்றான், இவற்றுள் எந்த ஒன்றாகத் துணிந்து கூறுவது? நேரத்துக்கு ஒரு நிறமளிக்கும் 'வெல்வெட்' (Velvet) பட்டுத் துணியைப் போல, நேரத்துக்கு ஒரு குணம் தெரிகிறது. எனவே, அவளது கண்பார்வையில் மூன்று தன்மைகளுமே ஒருங்கு அமைந்திருப்பதாக உரைத்தான் அவன்.

இங்கே யானை பார்த்த குருடர்கள் கதை நினைவிற்கு வருகிறது. வாலை மட்டும் தடவிப் பார்த்த குருடன், 'யானை விளக்குமாறு போல் இருக்கிறது' என்றானாம். காலை மட்டும் தடவிப் பார்த்த குருடா 'யானை உரல் போல் இருக்கிறது' என்றானாம். காதை மட்டும் தடவிப் பார்த்த குருடன் 'யானை முறம்போல் இருக்கிறது' என்றானாம். தும்பிக்கையை மட்டும் தடவிப் பார்த்த குருடன் 'யானை உலக்கைபோல் இருக்கிறது' என்றானாம். ஆனால், இந்த ஒவ்வொன்றும் மட்டும் யானையாகாதே! இத்துணை யும் யானை யிடம் உள்ளன. இதுபோலவே, அம் மூன்று தன்மைகளும் அவளது கண் பார்வையில் உள்ளன.

இந்தக் குறளில் 'சுருதி' கொஞ்சம் இறங்கியிருக்கிறது. கொலை நோக்கோடு ஏதோ குறிப்பு நோக்கும் கலந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றதல்லவா? ஆம்; பின்னர் திருமணம் புரிந்துகொள்பவர்களாயிற்றே!

பொருள்பால்
அரசியல் - இறைமாட்சி
நீங்கா நிலன் ஆள்பவற்கு
"தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு"

(பதவுரை) தூங்காமை - சோம்பல் கொள்ளாமையும். கல்வி = சிறந்த கல்வி உடைமையும், துணிவுடைமை = நல்ல துணிச்சல் உடைமையும் ஆகிய, இம்மூன்றும் = இந்த மூன்று பண்புகளும், நிலன் ஆள்பவற்கு = நாடாளும் வேந்தனுக்கு. நீங்கா = நீங்காது இருக்க வேண்டியவையாகும், (தூங்குதல்-சோம்புதல், தூங்காமை - சோம்பல் கொள்ளாமை; நிலன்-நிலம்- நாடு.) (மணக்குடவர் உரை) மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியையாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.

(பரிமேலழகர் உரை) நிலத்தினையாளுந் திருவுடையாற்கு அக்காரியங்களில் விரைவுடைமையும் அவையறிதற்கேற்ற கல்வியுடைமையும் ஆண்மையுடைமையுமாகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா.

(விரிவுரை) தூங்காமை, கல்வி, துணிவு என்னும் மூன்றும் இல்லாத சோம்பேறி மடக்கோழை எவ்வாறு நாடாளா முடியும்? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியுமே!

இங்கே தூங்காமை என்பது. கண்ணை மூடிக்கொண்டு தூங்குவதைத் தடுக்கவில்லை. தூங்காமல் இருக்க முடியுமா? சோம்பல் இன்றி, விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் விரைவும் வேகமும் உடைத்தாயிருத்தல் என்பது தான் இங்கே பொருள், உலகில் ஒருவர் விரைந்து வேலை செய்யாமல் மெள்ளச் செய்வாராயின். 'அலுவலகத்தில் அவர் தூங்குகிறார்' என்று 'கேலி' பேசுவது வழக்கம். உண்மையில் அவர் அலுவலகத்தில் படுத்தா தூங்குகிறார்? அவர் படுத்துத் தூங்கவும் இல்லை. நாற்காலியில் சாய்ந்தபடித் தூங்கவும் இல்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் அவ்வளவு வேகமாக - அதாவது ஆமை வேகத்தில் வேலை பார்க்கிறார் என்பது தான் இதற்குப் பொருள். உண்மையில் உறங்கியே விடுகின்ற ஒரு சில (ஊக்கக்காரர்களால் தான் இல்லையில்லை) தூக்கக்காரர்களால்தான் இந்தப் பொல்லாத 'விருது' எல்லார்க்கும் ஏற்பட்டது போலும்! இங்கேயும் இதே கருத்துத்தான்! ஆகவே, ஆளும் அரசனுக்குச் சுறுசுறுப்பு வேண்டும். எதையும் உரிய காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும். "உயிர் போன பிறகு தண்ணீர் கொண்டுவந்து என்ன பயன்?" "இராசா சிங்காரிப்பதற்குள் பட்டணம் பறிபோய் விட்டது" என்னும் பழமொழி இத்தகைய துப்புக்கெட்ட 'தூங்கு மூஞ்சி' ஆட்சியாளர்களுக்காகவே எழுந்தது.

இங்கே தூங்காமை என்பதற்கு இன்னொரு பொருளும் இயம்பலாம். அதாவது எதிலும் எப்போதும் கண்ணும் கருத்துமாய், கவனமாய், விழிப்புடன் இருத்தல் என்பதே அப்பொருள், அதாவது ஏமாந்து போகாதிருத்தல் என்பது பொருள். உலக வழக்கில், தன் உடைமையைப் பிறர்பால் இழந்த ஒருவனை நோக்கி, 'நீ தூங்கிக் கொண்டிருந்தாய்; அதனால் அவன் அடித்துக்கொண்டு போய் விட்டான்' - என்று கூறுவது வழக்கம். இவன் ஒன்றும் தூங்கவில்லை, கவனமின்றி இருந்தான்; அதனால் ஏமாந்து போனான். அவ்வளவுதான். இங்கும் அதே கருத்துத்தான்.

அக்காலத்தில் ஊருக்கு ஊர் அரசர்கள் இருந்தனர். தூங்குபவனது ஆட்சியை அடுத்தவன் தட்டிக்கொண்டு போய் விடுவான். அதனால் அரசர்கள் எப்போதும் விழிப்புடன் இருத்தல் வேண்டும், அரசர் இல்லாத இக்காலத்திலோ - அதாவது, கட்சிக்காரர்கள் ஆளுகின்ற இக்காலத்திலோ, ஆளுங்கட்சிக்காரன் தூங்கினால், அயல்கட்சிக்காரன் பதவியைப் பறித்துக்கொள்வான். அதனாலேயே ஒவ்வொரு கட்சிக்காரரும் கண்ணுக்கு விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு விழிப்புடன் இருப்பது வழக்கம். அது கிடக்க! பாராண்ட பழந்தமிழ் மன்னரின் பரம்பரை எங்கே? எங்கே? ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே அது அழிந்து ஒழிந்து விட்டதே! அந்தோ ஐயோ, அது அழிந்து ஒழிந்து விட்டதே! ஏன், என்ன காரணம்? பிற்காலத் தமிழ் மன்னரின் பெருந்தூக்கமே.! ஆமாம், பெருந் தூக்கமே! எனவே, இனியேனும் தமிழர்கள் உறக்கத்தினின்று விழித்தெழுவார்களாக!

அடுத்து, ஆள்பவனுக்குக் 'கல்வி' வேண்டும். எல்லோருக்குமே கட்டாயக்கல்வி வற்புறுத்தப்படுகின்ற இக்காலத்தில், அரசனுக்குக் கல்வி வேண்டும் என்பதைப் பற்றி அவ்வளவாகப் பேச வேண்டியதில்லை. பழந்தமிழ் மன்னர் பலர் பல்கலைப் புலவர்களாகத் திகழ்ந்தமையைப் பழைய நூல்களே பறைசாற்றுகின்றன அல்லவா? இக்காலத்தில் அரசாள்பவர் எந்தக் கல்வி பெறாவிடினும் அரசியல் கல்வியாவது பெறுவார்களாக! வள்ளுவரின் பொருட்பாலைப் படித்தால்கூடப் போதுமே!

அடுத்தபடியாக, ஆள்பவனுக்குத் 'துணிவுடைமை' வேண்டும். துணிவு என்பதற்கு தைரியம் என்றும், துணிதல் அதாவது தீர்மானித்து ஓர் உறுதியான முடிவுக்கு வருதல் என்றும் இரு பொருள் கூறலாம். இவ்விரண்டு கருத்துக்களுமே ஏறக்குறைய ஒன்றோடொன்று தொடர்புடையனவே! தைரியம் உடையவன் தானே எதிலும் திட்ட, வட்டமான, ஒரு முடிவுக்கு விரைந்து வருவான்? இல்லாதவன். வெண்டைக்காய் போல் 'வழ வழா' 'குழ குழா' என்று வளர்த்திக் குட்டை. குழப்புவான். இப்படியிருந்தால் அரசாங்கத்தில் எந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும்? தீர்மானத்தை ஒத்திப்போட்டபடியே போகவேண்டியது தான். அப்புறம் நாடு, நட்டாற்றில் அவிழ்த்து விட்ட கட்டுமரந்தான்! இப்போது புரியுமே இக்குறட் கருத்து !

மானமுடையது அரசு

(தெளிவுரை) அறநெறி வழுவாமலும், தீமைகளைக் களைந்தும், வீரங்குன்றாதும் மானத்துடன் விளங்குபவனே அரசன்,

"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு"

(பதவுரை) அறன் இழுக்காது = அறநெறி தவறாமல், அல்லவை நீக்கி = நல்ல செயல்களல்லாத தீய செயல்களைப் போக்கி, மறன் இழுக்கா (த) = வீரத்துக்குப் பழுதில்லாத, மானம் உடையது அரசு = மானம் உடையவனே அரசன். (அறன் - அறம்; இழுக்குதல் - தவறுதல் - வழுவுதல்; அல்லவை -- தீயவை; மறன் - மறம் - வீரம்.)

(மணக்குடவர் உரை) அறத்திற்றப்பாம லொழுகி, அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து, மறத்திற்றப்பாத மானத்தை யுடையவன் அரசன்.

[பரிமேலழகர் உரை] தனக்கோதிய அறத்தின் வழுவாதொழுகி, அறனல்லவை தன்னாட்டின் கண்ணும் நிகழாமற் கடிந்து . வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினையுடையான் அரசன்.

[விரிவுரை! இக்குறளில் மிக மிக நுணுக்கமானதொரு பொருள் பொதிந்து கிடக்கின்றது . அதனைப் பழைய உரையாசிரியர் எவரும் உணர்ந்தாரிலர், அவரெல்லோரும், அறனிழுக்காதிருப்பதைத் தனி ஒன்றாகவும், அல்லவை நீக்குதலைத் தனி ஒன்றாகவும், மறனிழுக்கா மானம் உடைமையைத் தனி ஒன்றாகவும் பிரித்து வைத்துப் பேசியிருக்கின்றனர். 'மூன்று நிலையும் அமைந்திருப்பதே மானம் உடைமையாகும்' என்றே வள்ளுவர் கூறியுள்ளார் என நான் சொல்லுகிறேன். இதனை இன்னுஞ் சிறிது விளங்க நோக்குவாம்: அரசன் அறன் இழுக்கினும் மானம் போம்; அல்லவை நீக்காவிடினும் மானம் போம்; மறன் இழுக்கினும் மானம் போம். எனவே, அறன் இழுக்காமையும் மானம் உடைமை தான்; அல்லவை நீக்குதலும் மானம் உடைமைதான்; மறன் இழுக்காமையும் மானம் உடைமைதான், இன்னுங் கேட்டால், இந்த எல்லாப் பண்புகளும் அமைந்திருப்பதே மானம் உடைமையாகும்.

முதலில், அம்மானத்தின் கூறாகிய அறன் இழுக்காமையைப் பார்ப்போம். அரசன் தான் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறியிலிருந்து - கடமைகளிலிருந்து தவறாது நடத்தலே அறனிழுக்காத மானம் ஆகும். அரசனின் கடமைகள் முன்னும் பின்னும் பரக்கப் பேசப்பட்டுள்ளன. ஆங்காங்கே கண்டுகொள்க. ஒருவன் தன் கடமைகளிலிருந்து வழுவுவானேயாயின் - தான் பின்பற்றவேண்டிய நல்லொழுக்கக் கடப்பாட்டிலிருந்து தவறுவானே யாயின், அவன் தடம் புரண்ட புகைவண்டியாகி விடுகிறான். அவனை மானம் உடையவன் என்று எவ்வாறு உலகம் மதிக்கும்? 'மானங்கெட்ட வனே' என்று வைத்தான் செய்யும்.

அடுத்தது, அல்லவை நீக்கும் மானம் உடைமையாம். நல்லவை என்னும் சொல்லின் எதிர்மொழியே அல்லவை என்பது, அதாவது தீயவை என்று பொருள், இச் சொல் வழக்கை, "நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" என்னும் புறநானூற்றுப் (195) பாடல் பகுதியாலும் உணரலாம். அரசன் தான்மட்டும் அறநெறி பிறழாது கடைப்பிடித்தால் போதாது; அறநெறி யல்லாத தீமைகளைத் தன் நாட்டினின்றும் - நாட்டு மக்களினின்றும் நீக்கவேண்டும். ஒரு நாட்டு மக்களிடையே தீய எண்ணங்களும் - தீய செயல்களும் நிறைந்திருப்பின், உலகம் அந்நாட்டின் தலைவனைக் காறித் துப்பி எள்ளி

நகையாடும். எனவே, மானம் விரும்பும் அரசன், நல்லற நெறிகளைத் தான் கடைப்பிடிப்பதோடு நாட்டிலும் நிலை நாட்ட வேண்டும்.

இங்கே ஒரு கதை நினைவிற்கு வருகிறது; இரண்டு நாட்டு முதல் அமைச்சர்கள் ஓரிடத்தே எதிர்ப்பட்டனராம். ஒருவர் மற்றவரிடம், "எங்கள் நாட்டில் மருத்துவ மனைகளும், நீதி மன்றங்களும், சிறைச்சாலைகளும் வேலையின்றிக் கிடக்கின்றன" என்றாராம். அதாவது அவர் நாட்டில் நோயாளிகளோ குற்றவாளிகளோ இல்லை என்பது பொருள். இதனைக் கேட்ட அடுத்த அமைச்சர், "எங்கள் நாட்டில் மருத்துவ மனையோ - சிறைச்சாலையோ இல்லவே யில்லை" என்று அவரிடம் சொன்னாராம். இதுதான் 'அல்லவை நீங்குதல்’ என்பது.

அடுத்தது மறனிழுக்கா மானம் உடைமையாகும்; அதாவது வீரங்குன்றாத மானம், வீரங்குன்றினால் மானம் போயிற்றுத்தானே! இந்த மானம் இருபதாம் நூற்றாண்டில் மருந்துக்கும் கிடையாது. வெற்றிகரமாகப் பின்வாங்குங் காலமாயிற்றே இது! கீழே விழுந்தாலும் மீசையில் மண் படாத காலமாயிற்றே இது! ஆனால் அக்காலத் தமிழ் மன்னர்கள் இந்த மானமே உருவானவர்கள். போரிலே, குழந்தைகள், கிழவர்கள், பெண்கள், பேடிகள் மற்றும் கையாலாகாதவர்கள் யாரையும் கொன்றதில்லை. புற முதுகிட்டு ஓடினும், புறமுதுகிட்டு ஒடுபவன்மேல் அம்பு போடினும் மானம் போனதாகக் கருதினார்கள். புறநானூறு போன்ற இலக்கியங்களுள் புகுந்து பார்த்தால் இந்த மானமுடைமை விளங்கும். ஒரு பிணக்குக் காரணமாக, கோப்பெருஞ் சோழன் என்னும் சோழமன்னன் உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்தான். கரிகாலனால் தன் மார்பிலே எய்யப்பட்ட அம்பு முதுகுவரையும் துளைத்துக்

கொண்டு போய்விட்டதால், அம் முதுகுப் புண்ணுக்கு நாணி, பெருஞ்சேரலாதன் என்னும் சேரமன்னன் உண்ணா நோன்புற்று உயிர் விட்டான். இன்னும் என்ன சொல்ல வேண்டும்?

அறத்துப்பால்


இல்லறவியல் - இல்வாழ்க்கை

வழி எஞ்சல் இல்

“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.”

(பதவுரை) வாழ்க்கை = (ஒருவனுடைய) இல்வாழ்க்கையானது, பழி அஞ்சி = (பொருள் தேடுதல் முதலியவற்றில் உண்டாகும்) பழிக்கு அச்சப்பட்டு, பாத்து = (அப்படி நல்ல வழியில் வந்த செல்வப்பயனைப் பலர்க்கும்) பகுத்துக் கொடுத்து, ஊண் = (தானும்) உண்ணுதலை, உடைத்தாயின் = உடையதாக இருக்குமேயானால், வழி = (அந்நல்வாழ்க்கையின்) தொடர்ச்சி, எஞ்சல் = அற்றுப் போதல், எஞ்ஞான்றும் இல் = எப்பொழுதும் இல்லை. (பாத்தல் = பகுத்தல்; எஞ்சுதல் = அற்றொழிதல்)

(மண-உரை) இல்வாழ்க்கையாகிய நிலை பழியையும் அஞ்சிப் பகுத்துண்டலையும் உடைத்தாயின், தனதொழுங்கு இடையறுதல் எக்காலத்தினும் இல்லை.

(பரி-உரை) பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும் தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான்

உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின், அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றலல்லது இறத்தல் இல்லை.

(ஆராய்ச்சி விரிவுரை) கெட்ட வழியில் பணம் தேடினும், தான் மட்டுமே உண்ணினும், உலகம் பழிக்கும் என்று அஞ்சி, நல்ல வழியில் தேடி, அதனைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்பவனுடைய வாழ்க்கை தொடர்ந்து நல்ல விதமாக நடக்கும் என்பது வள்ளுவரின் வாய்மொழி, இஃது என்னே விந்தை! உலக நடை ஒன்றும் திருவள்ளுவர்க்குத் தெரியாது போலும்! என்று வியக்கலாம் சிலர். ஏன்?

கெட்டவழியில் பொருள் தேடாவிட்டால் பலர்க்கும் பகுத்துக்கொடுக்கும் அளவு பொருள் சேர்வது எப்படி? நல்ல வழியில் பொருள் தேடும் நல்லோர் சிலர், தம்மையே நன்கு பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றார்களே! அவர்கள் பலர்க்கும் பகுத்துக்கொடுப்பது எப்படி? செல்வம் சேர்ந்திருந்தாலும், பலர்க்கும் பகுத்துக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அக்குடும்பம் விரைவில் நொடித்து விடாதா? பின்பு இடையறாமல் எப்போதும் விளங்குவது எப்படி? என்பவற்றை யெல்லாம் எண்ணும்போது இக் குறளில் நம்பிக்கை தோன்றாது தானே! இதனைச் சிறிது ஆராய்வோம்:

திருவள்ளுவர் இந்தக் குறளில் தெரிவித்திருப்பது என்ன? நல்ல வழியில் பொருள் ஈட்டவேண்டும்; அப் பொருளை, (பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை, துறந்தார், துவ்வாதவர், இறந்தார், தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றத்தார், தான் என்னும்) பலர்க்கும் பயன்படுத்தி வாழவேண்டும் என்பதுதானே! இல்வாழ்வான் தன்னையும், தன் பெற்றோர், மனைவி, மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறியிருப்பதால் ஒருவன் தன் செல்வம் முழுவதையும் பிறர்க்கே செலவிட்டுத்

தன் குடும்பத்தை, அழித்துவிட வேண்டும் என்பதன்று. போதுமான அளவு தன் குடும்பத்தையும் காப்பாற்றி, இயன்றவரை ஏனையோரையும் ஆதரிக்க வேண்டும் என்பது இனிது புலப்படுகின்றதல்லவா? எனவே, பிறர்க்கு ஓரளவு உதவுவதால் தன் குடும்பம் நொடித்துவிடும் என்பதற்கு இடமில்லை. பலர்க்கும் உதவிப் பலருடைய நன்மதிப்பையும் பெறுவதால், தப்பித்தவறித் தன் குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டாலும் அப்பலரும் உதவுவர். பலருள் சிலர்கூடவா நன்றி பாராட்டமாட்டார்கள்? பிறர்க்கு உதவாதவனுடைய குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அதிலும் அவன் கெட்ட வழியில் பொருள் ஈட்டியிருந்திருப்பானே யானால் அவன் குடும்பத்தை அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள்.

மேலும், கெட்ட வழியில் மிக்க பொருள் திரட்டி வாழ்வது வெள்ளத்தை நம்பி வாழ்வது போலாகும். வெள்ளம் எப்போதும் வருமா? ஆனால், நல்ல வழியில் ஈட்டி வாழ்வதோ, ஊற்றுநீரை நம்பி வாழ்வதுபோலாகும். ஊற்று எப்போதும் சுரக்குமன்றோ? எனவே, நல்வழியில் பொருளீட்டி, நாலாபேர்க்கும் உதவி வாழ்வானுடைய குடும்பம் தொடர்ந்து விளக்கம் பெறும் என்னும் இக்குறட் கருத்து இப்போது ஏற்புடையதாய்த் தோன்றுமே!

சிலர் இன்னொருவருடைய பொருளை எடுத்துத் தம்முடையதுபோல வழங்குவார்கள். ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைப்பது’ என்றால் இதுதான்! இன்னும் சிலர், பிறரை வருத்திப் படாதபாடு படுத்தி அவரிடம் உள்ள பொருளைப் பறித்து, நல்லவர்போலத் தாங்கள் வழங்குவார்கள். ‘மாட்டைக்கொன்று செருப்புத் தானம் செய்வது’ என்றால் இதுவேதான்! இவ்விதம் பழிப்புக்கிடமான முறையில் பொருள் தேடிச் செய்பவை

யெல்லாம் உண்மையான உதவியாகா. இது குறித்தே, ‘பழியஞ்சிப் பாத்துரண்’ என்றார் ஆசிரியர்.

பண்பும் பயனும்

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”

(பதவுரை) இல்வாழ்க்கை = (ஒருவனுடைய) இல்லற வாழ்க்கையானது, அன்பும்=(யாவரிடத்தும்) அன்பினையும், அறமும் = அறச் செயலினையும், உடைத்தாயின் = உடையதாய் இருக்குமேயானால், பண்பும் = (அவ்வில்வாழ்க்கையின்) இலக்கணமும், பயனும் = நன்மையும், அது = அந்த அன்பும் அறமும் உடைத்தா யிருக்கின்ற அச்செயலே.

(தெளிவுரை) பண்பு என்றால் இலக்கணம்; அஃதாவது தன்மை. இல்வாழ்க்கைக்கு இருக்கவேண்டிய இலக்கணம் அன்பும் அறமும் உடைமையே - இல்வாழ்க்கையின் பயனும் அந்த அன்பும் அறமும் உடையதாய் இருப்பதே. அன்பும், அறமும் இல்லாதவன் இனிமையாக இல்வாழ்க்கையை எப்படி நடத்தமுடியும்? முடியாது. அதனாலேயே அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் இலக்கணம் என்றார். யாவரிடத்தும் அன்பு காட்டுவதும், அறம் செய்வதுமே இல்வாழ்க்கையின் நோக்கம் ஆதலால், அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் பயனும் ஆகும் என்றார்.

இஃதென்ன! ஒன்றையே இலக்கணமாகவும், பயனாகவும் கூறித் தியங்கச் செய்துள்ளாரே திருவள்ளுவர் என்று திகைக்கலாம் சிலர். இத்தியக்கத்தாலேயே பரிமேலழகர் வேறு விதமாக உரை பகர்வாராயினார். கூர்ந்து நோக்கின், இங்குத் திகைப்பிற்கே இடம் இல்லை. எடுத்துக்காட்டு ஒன்று வருக:

பிள்ளையின் இலக்கணம் பெற்றோரைக் காப்பாற்றுதலும், உலகிற்குத் தொண்டு செய்தலும் ஆகும் என்று ஒருவர் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அவ்விரண்டுந்தானே பிள்ளையினால் உண்டாகும் பயனுங்கூட? எனவே, ஒன்றையே இலக்கணமாகவும், பயனாகவும் திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பதைக் குறித்துத் தியங்கவேண்டாவன்றோ?

(மண - உரை) இல்வாழ்க்கையாகிய நிலை யாவர் மாட்டும் அன்பு செய்தலையும், அறம் செய்தலையும் உடைத்தாயின் அதற்குக் குணமாவதும் பயனாவதும் அவ்விரண்டினையும் உடைமைதானே.

(பரி-உரை) ஒருவன் இல்வாழ்க்கை, தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தினையும் உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆம். இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடை போகாமையின் (நடவாமையின்) அன்புடைமை பண்பாயிற்று; அறனுடைமை பயனாயிற்று.

(ஆராய்ச்சி உரை) அன்பு என்பதற்கு மனைவிமேல் உள்ள அன்பு என்று பகர்ந்துள்ளார் பரிமேலழகர். இங்கே வள்ளுவர் காதல் என்னும் சொல்லை வைத்திருந்தாலும் பரிமேலழகர் பகரலாம்; அவ்விதம் இல்லையே! ஆகவே, அன்பு என்பதற்கு யாவரிடத்தும் உள்ள அன்பு என்று பொருள் கூறினால், அவ்வில்வாழ்வானுக்கும் பெருமை - திருவள்ளுவர்க்கும் பெருமை! எல்லோரிடத்திலும் அன்பு உள்ளவன் தன் மனைவியிடத்திலா அன்பு இல்லாதவனாகப் போய்விடுவான்? பரிமேலழகர் கூறியபடியே வைத்துக் கொண்டாலும், தம் மனைவியின்மேல் அளவு மீறி அன்பு கொண்ட சிலர், பிறரை நோகச் செய்கின்றனரே! பிறரை

என்ன? பெற்றோரையே பேதுற-மயங்கச் செய்கின்றனரே! இதுதானா இல்வாழ்க்கையின் இலக்கணம்?

மேலும் பரிமேலழகர், அன்பை இல்வாழ்க்கையின் இலக்கணமாகவும், அறத்தைப் பயனாகவும் பகர்ந்துள்ளார். இங்குக் கூர்ந்து நோக்க வேண்டும். ‘பண்பும் பயனும் அது’ என்பது குறள். ‘அது’ என்னும் ஒருமை அன்பையும் அறத்தையும் உடைத்தாயிருக்கும் செயலைக் குறிக்கின்றது. எனவே, பண்பும் அச்செயல்தான்-பலனும் அச்செயல்தான். பரிமேலழகர் உரைப்படி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துக் கூறும் நோக்கம் வள்ளுவர்க்கு இருந்திருக்குமேயானால், “பண்பும் பயனும் அவை” என்று பாடியிருப்பார். அன்பு இலக்கணமாகும்போது, அறம் மட்டும் இலக்கணம் ஆகாதா? அறம் பயனாகும்போது, அன்பு மட்டும் பயனாகாதா? ஆகுமே! ஆய்க அறிஞர்.

காமத்துப்பால்

களவியல்-தகையணங் குறுத்தல்

கொடும் புருவக் கோட்டம்

(தெளிவுரை) இந்தப் பெண்ணின் பொல்லாத புருவங்கள் கோணி வளைந்து கண்களின் மேல்புறம் செல்லாமல் ஒரே நேர் நெட்டாய்க் கண்களினூடே சென்று திறக்க வொட்டாதபடி அவற்றை மறைத்திருக்குமாயின், அக்கண்கள் இப்போது எனக்கு இவ்வளவு துன்பம் செய்திருக்க மாட்டா.

“கொடும்புருவங் கோடா மறைப்பின் கடுங்களுா
செய்யல மன்னிவள் கண்”


(பதவுரை) கொடும் புருவம் = ( இவளுடைய கொடிய) வளைந்த புருவங்கள், கோடா (து) = அவ்வாறு வளையாமல், மறைப்பின் = (கண்களின் நேர் குறுக்கே சென்று திறக்க முடியாதபடி) மறைத்திருக்குமாயின், இவள் கண் = இவளுடைய கண்கள், நடுங்கு அஞர் - நடுங்கக்கூடிய துன்பத்தை, செய்யலமன் = உண்டாக்கியிருக்கமாட்டா; அவ்வாறு அந்தப் புருவங்கள் மறைக்காமையினாலேயே இவள் கண்கள் என்னைத் துன்புறுத்துகின்றன.

கொடுமை = கொடிய பொல்லாத தன்மை, வளைவு; கோடுதல் . கோணுதல் - கோடாது = கோணாது - வளையாது; அஞர் = துன்பம். மன்=சொல்லாது ஒழிந்த "ஒழி யிசை"ப் பொருள் தருவதோர் இடைச்சொல்.

(மணக்குடவர் உரை) வளைந்த புருவங்கள் தாம் செப்ப முடையனவாய் விலக்கினவாயின், இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா.

(பரிமேலழகர் உரை) பிரியா நட்பாய கொடும் புருவங் கடாஞ் செப்ப முடையவாய் விலக்கினவாயின், அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்குந் துயரைச் செய்ய மாட்டா.

(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில், உயர்ந்த சொல் நயங்களையும் பொருள் நயங்களையும் உலகப் பெரும் புலவனாம் வள்ளுவன் வாரி வாரிக் கொட்டியிருக்கிறான் - ஆமாம், வாரி வாரிக் கொட்டியிருக்கிறான்! அவற்றை நாம் அள்ளிக் கொள்ளுவோமா? தலைமகளின் கண்வலையில் சிக்கித் தவிக்கும் தலைமகன், அவள் கண்ணின் மேல்புறத்துள்ள புருவத்தைக் காய்கிறான். புருவம் கண்ணுக்குத் துணை செய்கிறதாம். அழகாய் அமைந்ததும் மேலே மை. பூசப்பட்டதுமான, புருவத்தின் தோற்றப் பொலிவு கண்ணுக்கு மேலும் மேலும் அழகு தருவது இயற்கைதானே! இயற்கையாகவே வருத்துங் கண்ணோடு இந்தப் புருவமும் சேர்ந்து கொண்டால் இவன் என்ன ஆவான்? அதனால் தான் புருவத்தைக் 'கொடும் புருவம்' என்கிறான்.

இங்கே சொல்லப்பட்டுள்ள 'கொடுமை' (கொடும்) என்னுஞ் சொல்லுக்கு, பொல்லாத கொடிய தன்மை எனவும் வளைவு எனவும் இரு பொருள் உண்டு. இவற்றுள் முதல் பொருளை எல்லோரும் எளிதில் அறிவர். வளைவு என்ற பொருள் தான் பலருக்குத் தெரியாது. அவர்களும் தெரிந்தும் தெரியாமல் இச் சொல்லை - இப்பொருளில் வைத்துப் பேசுகின்றனர், மக்கள் அகராதியைப் (பேச்சு வழக்கை) புரட்டுவோம். கொடுவாள் கத்தி, கொடுக்காய்ப் புளி மரம் என்னும் பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள 'கொடு' (கொடுமை) என்னும் சொல், வளைந்தவாள், வளைந்த காய் என வளைவுப் பொருளைத் தருவதுணர்க. இந்த இரு பொருள் (சிலேடை) அழகு தோன்றக் 'கொடும்புருவம்' என்றான் அவன். புருவம் வளைந்து தானே இருக்கும்? புருவம் வில்போல் வளைந்திருப்பதால், விற்புருவம்- புருவ வில் என்றெல்லாம் புலவர்கள் உவமமும் உருவகமும் செய்வது வழக்கம், அதனால் 'கொடும் (வளைந்த) புருவம்' என்றது சரியே! மேலும், வருத்துகின்ற கண்ணுக்குத் துணையாய் நின்று கொடுமை செய்வதால் 'கொடும் பொல்லாத கொடிய) புருவம்' என்றதும் சரியே! ஒரே சொல்லில் இரு பொருள் அமைத்து விளையாடும் வள்ளுவரின் சொல் நயமும் பொருள் நயமும் என்னே, என்னே! மேலும் சில அழகு காண்பாம்.

புருவத்தின் புறப்பாட்டைக் காணுங்கால், அது கண்ணை மறைக்க வேண்டுமென்றால் மறைத்திருக்கலாம்; ஆனால், அவ்வாறு செய்யவில்லை என்பது புலனாகும். இரண்டு கண்களுக்கும் நடுவிடம் இருக்கிறதே. அங்கிருந்து. தான் புருவம் புறப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு புருவமும் ஒவ்வொரு கண்ணின் முதல் பகுதியிலிருந்து புறப்பட்டு, கண்ணைப் பாதியளவு சுற்றி வளைத்து, கடைக்கண் முனையில் வந்து முடிந்து விடுகிறது. வில்லின் இரு முனைகளைப் போலுள்ள புருவத்தின் இரு முனைகளும், கண்ணின் இருமுனைகளைத் தொட்டுக்கொண்டுள்ளன. புருவம் இவ்வாறு கோடாமல் - வளையாமல், கண்ணின் நீள் குறுக்கிலே நேர்க்கோடாய் நீண்டிருக்குமாயின், ஏன் அப்புருவத்தின் கோணலை நிமிர்த்திவிடின், அப்புருவத்தின் அடர்ந்த மயிர்ப் பகுதி, திறந்துகாண வொட்டாமல் கண்ணை மறைத்துவிடும். அங்ஙனம் மறைத்திருப்பின், அக்கண் பார்வையால் அவன் கலங்கியிருக்கமாட்டான். இதைத்தான், 'கொடும் புருவம் கோடா மறைப்பின்' என்றார்.

இந்தப் பருவம் பொல்லாத புருவமாய் இல்லாமல் நல்ல புருவமாய் இருந்திருந்தால், உண்மையில் என்ன செய்திருக்கவேண்டும்? தன் நண்பனாகிய கண்ணைப் பார்த்து, 'ஏ கண்ணே! நீ ஏன் அந்த ஆடவனை வருத்துகிறாய்? அது முறையன்று' என்றல்லவா கடிந்திருக்க வேண்டும்? அவ்வாறு இடித்துரைப்பதற்கு இதனிடம் நேர்மையிருந்தால்தானே முடியும்? இது தான் கோணியுள்ளதே! கோணல் குணம் (ஓரவஞ்சனை) உடையவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா? அவர்கள், தம் நண்பன் பிறரைத் தாக்கி வருத்துவதைப் பார்க்காதவர் போல் வளைந்து ஒதுங்கித்தான் போவார்கள்! நண்பனுக்கு ஆதரவாகச் சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள்! இந்த நயங்களையெல்லாம் அமைத்துத்தான், 'கொடும் புருவங் கோடா(து) மறைப்பின்', என்றார், சிறிது இடைவெளி தெரியினும் அதன் வாயிலாக அக்கண் வருத்தும்; ஆதலின் அதனை முற்றும் மறைத்துவிட வேண்டும் என்பதற்காக 'மறைப்பின்' என்றார்.

புருவத்துக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு வில்லுக்கும் அம்புக்கும் உள்ளது போன்றதாம். புருவ வில்லிலிருந்து கண்ணம்பு பாய்ந்து தாக்குகிறது. அதற்கு ஆற்றாது நடுங்குகிறான் அவன். அதனால்தான் 'நடுங்கு அஞர்' என்றார். அடுத்த குறளில் 'ஓ' என்று அலறி அழவே போகிறான் தலைமகன்). 'வில் வணக்கம் தீங்கு குறித்தமையான்' என்று வள்ளுவர் மற்றோரிடத்தில் கூறியுள்ளபடி. வில் வளைவின் நோக்கம் பிறரைத் துன்புறுத்தலே. வஞ்சகர் நல்லவர்போல் வளைந்து கொடுப்பதும் பிறகு துன்புறுத்தவே, இந்தக் கொடும் புருவத்தின் கோட்டமும் அதுவே தான். அதனால்தான் அவன் நடுங்குகிறான், என்ன செய்யுமோ என்று! புருவமும் கண்ணும் ஒன்றுக்கொன்று தோழமை பூண்டு ஒத்துழைப்புடன் செயலாற்றுவதாக இவ்வளவு நேரம் பேசினோம். இஃது உண்மையா? இஃதோர் இலக்கிய மரபு. அவ்வளவுதான்! இதுபோலவே அம்பிகாபதி கோவையிலும் ஓர் ஒற்றுமைக் கருத்து உள்ளது; ஒருத்தியின் கண்கள் ஒருவனைக் கண்டன . காதல் பிறந்தது. காதலராயினர். பின்னர் பிரிந்தனர். பிரிவு தாளாது தலைவியின் உடல் சோர்ந்தது. கைகள் மெலிந்தன. அதனால் வளையல்கள் கழன்றன. வளையல் இழந்த கைகளைக் கண்கள் கண்டு, ஐயோ நமக்கு மை பூசிய கைகளாயிற்றே! நாம் தலைவனை முதல் முதல் கண்டதனாலல்லவோ, இவ்வாறு நேர்ந்தது என்று அழுதனவாம், அதாவது, தலைவனைப் பிரிந்த துயரால் தலைவி அழுதாள். அதனை இங்ஙனம் கற்பனை செய்து விட்டார் புலவர், இதனை,

"பண்டு நமக்குப் பரிந்துமையூட்டிய பங்கயக்கை
ஒண்டொடிசோர உயங்குத னோக்கித் தயங்குமுது"
"தண்டலை தன்னில் தலைப்பட்ட நாளில் தலைவனைநாம்
கண்டது கொண்டல்லவோ என்று போலுங்கலுழ் கின்றதே"

என்னும் அம்பிகாபதிகோவைச் (338) செய்யுளால் அறியலாம். உறுப்புகளின் ஒற்றுமைக்காக இங்கே இது எடுத்துக் காட்டப்பட்டது.

மன்னிக்கவும்! வடமொழியில் காளிதாசனது கைப்புனைவு ஒன்று இங்கே நினைவிற்கு வருகின்றது . அதையுங்கூற ஒப்புதலளிக்க வேண்டுகிறேன். ஒரு பெண் ஒரு நீர்த் துறையில் தன் மார்புக்கச்சைக் கல்லில் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். அதனைக் கண்டு கற்பனை செய்கிறான் காளிதாசன். அந்தக் கச்சானது, மார்பிலுள்ள கொங்கைகளைக் கட்டியடக்கிச் சிறைப்படுத்தி இவ்வளவு நேரம் வருத்திற்றாம். அக்கொடுமையைக் கண்டு பொறுக்க முடியாத கைகள், அந்தக் கச்சினைக் கல்லில் அடித்துப் பழிக்குப்பழி வாங்கினவாம். அடிவாங்குபவன் சோர்ந்து விழுந்துவிடாமல் இருப்பதற்காகத் தண்ணீர் கொடுத்துக் கொடுத்து அடிப்பதைப் போல, அந்தக் கச்சைத் தண்ணீரில் நனைத்து நனைத்துக் கைகள் அடித்தனவாம். இஃதுமோர் இலக்கிய இன்பம், அவ்வளவுதான்! இதுவும் உறுப்புகளின் ஒற்றுமைக்காக இங்கே எடுத்துக் காட்டப்பட்டது!

அம்பிகாபதி கோவையின்படி கண் கைகளின் சோர்வுக்காக அழுதிருப்பதும், காளிதாசனது கவியின்படி கொங்கைகளுக்காகக் கைகள் கச்சினைக் கல்லில் அடித்திருப்பதும், 'தும்பை விட்டுக் கொம்பைப் பிடிப்பதுபோல்', இப்பிறவியில் விட்டு மறு பிறப்பில் வருத்துவது போல, முதலில் விட்டுப் பின்னர்ச் செயலாற்றும் மடிமையாகும். ஆனால், புருவம் முதலிலிருந்தே கண்ணோடு ஒத்துழைப்பதாகக் கற்பனை செய்து காட்டியுள்ள வள்ளுவர்க்குக் கைம்மாறு யாதோ? இந்தக் குறளில் மொழியழகு ஒன்று பொதிந்து கிடக் கிறது. 'மறைப்பின் நடுங்கு அஞர் செய்யல மன்' என்பது குறள் பகுதி. 'புருவங்கள் கண்களை மறைத்திருந்தால் அவை துன்பம் செய்திருக்கமாட்டா' என்ற கருத்தை 'மறைப்பின் நடுங்கு அஞர் செய்யல' என்ற பகுதியும், 'மறைக்காததனாலேயே இவ்வாறு என்னைத் துன்புறுத்துகின்றன' என்ற கருத்தை 'மன்' என்னும் ஒரே சொல்லும் அறிவிப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க. 'மறைக்காததால் துன்புறுத்துகின்றன' என்ற கருத்து. குறளில் வெளிப்படையாய்ச் சொல்லாதொழிந்த கருத்து. இந்த ஒழிந்த (விட்ட) கருத்தை 'மன்' என்பது இசைத்துக் கொடுப்பதால், இதற்கு 'ஒழியிசைப்பொருள்' என்று இலக்கணத்தில் பெயராம். இரண்டெழுத்தில் இத்துணைப் பெரிய பொருள் பொதிந்து கிடக்கிற மொழியழகுதான் என்னே! என்னே! இது விளங்காமல் இக்குறளைக் கற்று என்ன பயன்?

ஊசி முனையில் நிற்பதே கடினம். கூத்தாடுவதோ அதனினும் அருமை! இந்த அருஞ்செயலைத்தானே இந்தக் குறளில் வள்ளுவர் செய்திருக்கின்றார்! இப்படி ஒரு கருத்தைக் கற்பனை பண்ணுவ தென்பது கிள்ளுகீரையா?


பொருட்பால்
அரசியல் - இறைமாட்சி
வல்லது அரசு

(தெளிவுரை) செல்வம் வருதற்குரிய வழிதுறைகளைத் திட்டமிட்டுச் செய்து. நிரம்பச் சேர்த்து, சிதறாமல் காத்து, எல்லோருக்கும் கிடைக்கும்படிப் பகுத்து அளிக்க வல்லவனே அரசனாவான்.

"இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"

(பதவுரை) இயற்றலும் - (பொருள் வரும் வழிகளைத் தேடி யாராய்ந்து திட்டமிட்டுச்) செயலாற்றுதலும், ஈட்டலும் = (அவ்வாறு செயலாற்றி) நிரம்பச் சேர்த்துத் தொகுத்தலும், காத்தலும் - (தொகுத்த பொருளைச் சிதறாமல் அழியாமல் காப்பாற்றுதலும், காத்த வகுத்தலும் - அவ்வாறு காப்பாற்றிய பொருளை எல்லோர்க்கும் உதவும்படிப் பகிர்ந்து அளித்தலும், வல்லது அரசு = {ஆகியவற்றில் எல்லாம் வல்லமை உடையவனே அரசன் (வல்லது அரசு = வல்லவன் அரசன்.)

(மணக்குடவர் உரை) பொருள் வரும் வழியியற்றலும், அதனை அழியாம லீட்டலும், அதனைச் சோர்வு படாமற் காத்தலும், காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான்).

(பரிமேலழகர் உரை) தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேலுளவாக்கலும், அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமற் காத்தலும், காத்தவற்றை அறம் பொருளின் பங்களின் பொருட்டு விடுத்தலும் வல்லவனே அரசன்.

(விரிவுரை) இந்தப் பகுதியை அரசியலிலே ஓர் 'உயிர் நாடி' எனலாம். அரசனுக்கு எந்தத் திறமை இருந்தாலும் இல்லாவிடினும், முதலில் இந்தத் திறமை இருந்தாக வேண்டுமல்லவா? இந்தத் திறமையை உரைகல்லாக வைத்தே அரசாங்கத்தின் தகுதி உரைத்துப் பார்க்கப்படுவதை இக்காலத்தில் செய்தித்தாள் படிப்பவர் -- அரசியல் அறிவு பெற்றவர் அனைவரும் உணர்வர். இந்தத் திறமையில்லாமல், மக்களது சொந்த முயற்சியால் மட்டும் கிடைக்கும் பொருள்களைச் சுரண்டிச் சுருட்டிக் கொண்டு 'தாம் தீம்' பண்ணி ஆரவாரமாய்ப் பொழுது கழிக்கும் அரசன் எதற்கு? அதற்கு, சீட்டாட்டத்தில் வரும் அட்டைப் பட 'ஆடுதன் ராசா'வே போதுமே! இத்தகையோனை மக்கள் மன்னனாக மதித்து ஏற்றுக்கொள்வரா? மனைவி எவ்வளவுதான் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு உடையவளாயினும், 'கல்லானாலும் கணவன் - புல்லானாலும் புருழ்சன்' என்ற 'மூலமந்திரத்தை' நாடோறும் ஆயிரத்தெட்டு உருப்போடுபவளாக இருப்பினும், வருமானம் இல்லாத --- துப்புக்கெட்ட கணவனை நோக்கி, ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்காவது, 'நீ வெட்டுகிற வெட்டுக்கு இது வேறா?' என்று சுட்டிக் காட்டித் திட்டி மட்டந்தட்ட மாட்டாளா? இதே விருது தான் ஆக்கத் தெரியாத அரசியல் தலைவனுக்கும்! இது குறித்தே 'வல்லது அரசு' என 'வல்லது' என்னுஞ் சொல்லை வள்ளுவர் பெய்துள்ளார். இதுவே பெரிய வல்லமை போலும்! இனி இவ்வல்லமையின் உட்பிரிவு ஒவ்வொன்றினையும் ஒரு சிறிது ஊன்றி நோக்குவோம்: இக்குறளில், இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் என நான்கு நிலைகள் பேசப்பட்டுள்ளன. இவை ஒன்றுக்கொன்று இளைத்தனவல்ல; ஒத்தன; ஒன்றோடொன்று தொடர்புடையன. இவற்றுள் ஒன்றின்றி ஒன்றில்லை என்னலாம். ஏன்? ஏனா? 'ஆண்டிமடங்கட்டுவது' போல ஏட்டில் திட்டங்களைத் தீட்டி விட்டால் போதுமா? அவற்றைச் செயல்முறைக்குக் கொண்டுவரவேண்டும். கொண்டு வந்தும், 'புசுபுசு வாணம்' போல் புகைந்து விட்டால் போதுமா? போதிய அளவுக்கு மேலும் பொருள்கள் உருப்படியாகவேண்டும். பொருள்கள் உருவானால் போதுமா? அவற்றை இரண்டு கால் செல்லுகள்' அரித்து விடாதபடி, 'ஏறப் படித்த எலிகள்' இழுத்துக்கொண்டு போகாதபடி, 'பதவிப் பூனைகள்' பாய்ந்து பறிக்காதபடிக் கட்டிக்காக்க வேண்டும். காக்கிறேன் என்று காத்துக் கொண்டேயிருந்து விடக்கூடாது. அப்பொருளுக்காக மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். அனைவர்க்கும் - அனைத்துக்கும் போதிய அளவு பகிர்ந்தளிக்க வேண்டும். அவ்வாறு செய்யின் அரசன் என்றால் அரசன் தான்! ஆட்சி என்றால் ஆட்சிதான்!

(ஆராய்ச்சி உரை) இயற்றல் என்பது யாது? பொருள் வருதற்கான ஆக்க வேலைகளைப் புரிதல்தான் இயற்றல், அவையாவன:- பகைவரை வென்று பறிக்கும் பொருளுக்கும், சிற்றரசரிடமிருந்து பெறும் கப்பப் பொருளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டியதுதான். காலம் மாறிப் போயிற்றல்லவா? அடுத்து, வரிப்பொருளும் சுங்கப் பொருளும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியனவே! இதற்கு அரசனது முயற்சி அவ்வளவாக வேண்டற்பாற்றன்று. பின் அரசன் ஆற்றவேண்டிய ஆக்கவேலைதான் என்ன? உணவுப்பொருள்கள், சுரங்கப்பொருள்கள், தொழிற் சாலைப் பொருள்கள் முதலியவற்றை மிகுதியாக உண்டு பண்ணுவதின் வாயிலாகவும் அவற்றை விற்கும் வாணிகத்தின் வாயிலாகவும் நாட்டில் பெருஞ்செல்வம் கொழித்துச் செழிக்க வேண்டும். அதற்கு ஆவன புரிதலே இயற்றுதல்.

ஈட்டல் என்றால், வேற்கூறிய பல வழிகளிலும் பல்வகைப் பொருள்களை மிகுதியாகத் திரட்டிச் சேர்த்தல். இங்கே கூர்ந்து கவனிக்கவேண்டும். ஈட்டம் என்றால் கூட்டம் - மிகுதி என்று பொருள். பொருள் வரும் வழிகளும் பல; ஒவ்வொரு வழியிலும் வரும் பொருள்களின் வகைகளும் பல; ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு பொருளிலும் எண்ணிக்கையும் அளவும் மிகுதி; இவ்வாறு சேர்த்தல்தான் ஈட்டல். எடுத்துக்காட்டாக, உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்வோம். நெல், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, சோளம், கோதுமை, கரும்பு, இன்னும் பல பல பற்பலவகைப் பொருள்கள்; நெல் என்று எடுத்துக்கொண்டால், சாலி, சிறுமணி, மிளகு எனப் பலப்பல; இந்த நெல்வகை ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கான மூட்டைகள் விளைதல், இவ்வாறு கணக்கிடுக.

அடுத்தபடியாக, காத்தல் என்பதில் கருத்து மிக உண்டு. பொருள்கள் தாமே அழியாமலும், பிறரால் அழிக்கப்படாமலும் காத்தல் மட்டும் காத்தல் ஆகாது. பின் வேண்டுமென்று சேமித்து வைப்பதும் காத்தல் தான். இதுவும் மிக இன்றியமையாததுதானே? எடுத்துக்காட்டு ஒன்று தருவேன். இந்த - மழைக்காலத்தில் மேட்டூர் அணையில் நிரம்பத் தண்ணீரைச் சேர்த்துச் சேமித்து வைத்துக் காக்கின்றோமே, அதுதான்! இருக்கும்போது எல்லாவற்றையும் எடுத்து விளாவிவிட்டால் பிறகு என்ன செய்வது? எனவே காக்க வேண்டும்.

நான்காவதாக, வகுத்தல் என்பதில், எல்லா வகையான சோழ்சலிசமும், கம்யூனிசமும் அடங்கிவிட்டன. ஆனைக்கு 'அல்வா' வாங்கினது ஐயாயிரங்கோடி, குதிரைக்குக் 'குருமா' செலவு ஆயிரங்கோடி, புலிக்குப் 'பூரி கிழங்கு இரண்டாயிரங்கோடி என்று கணக்குக் காட்டி ஒருவனே ஏப்பம் விடாமல், பலர்க்கும் பலவற்றுக்கும் பயன்படும்படியாகப் பணத்தைப் பரவலாகச் செலவு செய்யவேண்டும். ஒரு நாட்டில் ஒருவனுக்கு உணவில்லை என்றாலும் நாட்டின் தலைவன் நாணமடைய வேண்டும், அதற்கு ஆவனபுரிய வேண்டும், எல்லோரையும் பணியில் ஈடுபடுத்தி வாழ வைக்க வேண்டும். இவ்வளவும் 'வல்லது அரசு' என்பது தான் வள்ளுவர் வாக்கு. அரசன் இல்லாத எதிர்காலத்துக்கும் இடம்வைத்து, வல்லது அரசு - அதாவது வன்மையுடையதே அரசாங்கம் என அஃறிணை முடியில் அமைத்துப் போந்துள்ள ஆசிரியரின் ஆற்றலை ஓர்ந்துணர்க!

மீக்கூறும் மன்னன் நிலம்

(தெளிவுரை) வந்து காண்பவரிடம் எளிமையாய்ப் பழகி, கடுஞ்சொல்லின்றி ஆவன புரியும் அரசனது நாடு மேலானதாக மதிக்கப்படும்.

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறும் மன்ன னிலம்"

(பதவுரை) காட்சிக்கு எளியன் = தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காட்சி கொடுத்து எளிமையாய்ப் பழகுபவனாயும், கடுஞ்சொல்லன் அல்லனேல் = கடுஞ்சொல் பேசாதவனாயும் ஒர் அரசன் இருப்பானேயானால், மன்னன் = அம்மன்னனை, நிலம் = உலகமானது, மீக்கூறும்= மேலாக மதிக்கும். (மீ = மேன்மை; மீக்கூறுதல் = மேலாக மதித்துக் கூறுதல்).

(மணக்குடவர் உரை) காண்கைக்கு எளியனாய்க் கடுஞ் சொற் கூறுதலும் அல்லனாயின், அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.

(பரிமேலழகர் உரை) முறை வேண்டினார்க்குங் குறை வேண்டினார்க்குங் காண்டற் கெளியனாய், யாவர்மாட்டும் கடுஞ்சொல்ல னல்லனுமாயின், அம்மன்னனது நிலத்தை எல்லா நிலங்களினும் உயர்த்துக் கூறும் உலகம்.

(விரிவுரை) 'மீக்கூறும் மன்னன் நிலம்' என்னுந் தொடருக்குப் பலவிதமாகப் பொருள் கூறலாம். மன்னனை இந்நிலவுலகம் மேலாக மதிக்கும் எனவும், மன்னன் உலகில் மேலாக மதிக்கப்படுவான் எனவும், மன்னது நாடு (நிலம்) மேலாக மதிக்கப்பெறும் எனவும் கூறலாம்.

'காட்சிக்கு எளியன்' என்பதற்கு இருபொருள் கூறலாம்., பிறருக்கு எளிதில் காட்சி கொடுப்பவன் - அதாவது யாரும் எப்போதும் எளிமையாய்க் காணக்கூடியவன் என்ற பொருள் எல்லோரும் அறிந்ததே. மற்றொரு பொருள்தான் புதிது. கையில் கத்தி கம்பு வைத்துக்கொண்டிருக்கிற கடுந்தெய்வங்களைப் போலல்லாமல், காந்தியடிகளைப் போலக் காண்பதற்கு எளிய தோற்றம் உடையவன் என்பது தான் புதிய பொருள்.

ஒரு சிறிது படிப்போ , பட்டமோ, பதவியோ, பணமோ வந்துவிட்டாலே, தங்களைப் பெருமக்கள் என்று தாங்களே தவறாக எடைபோட்டுக்கொண்டு, பலரோடு பழகாமல், பேசாமல், தனியிடத்தில் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக்கொள்கின்ற அற்பர்களுக்காக இந்தக் குறள் இயற்றப்படவில்லை. இந்தப் பதர்கள் எக்கேடுகெட்டால் என்ன? இவர்தம் செயலால் ஆவதோ, அழிவதோ ஒன்றும் இல்லை. மன்பதையோடு (சமுதாயத்தோடு) இரண்டறக் கலந்து பழகாத இந்த மரமண்டைகள் செத்தவர்க்கு நிகர், செத்தவர் எவ்வாறு வந்து பழகமுடியும்? இவ்வாறு குறுக்குவழியில் சுருக்கப் பெருமக்கள் ஆக முயல்கின்ற இன்னோர்க்காகவே,

"சிறியரே மதிக்கு மிந்தச் செல்வம் வந்துற்ற ஞான்றே
வறியன் செருக்கு மூடி வாயுளார் முகராவர்
பறியணி செவியுளாரும் பயிறரு செவிடராவர்
குறியணி கண்ணுளாரும் குருடராய் முடிவான்றே”

(பிறரை ஏறெடுத்துப் பாராமையால் குருடர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால் செவிடர்; பிறரிடம், பேசாமையால் ஊமையர்) என்ற குசேலோபாக்கியானப் பாடலும்,

பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடின்
உருத்தெரி யாமலே ஒளி மழுங்கிடும்
மருத்து உளவோ எனில் வாகடத்திலை
தரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே"

என்ற தனிப்பாடலும் எழுந்தனபோலும். ஆனால் இக்குறள் எழுந்தது, நாட்டு மக்களின் தலையெழுத்தை விதிக்கின்ற நாட்டுத் தலைவனுக்காகவேயாம். மேலும் இக்குறள் எழுந்தது இந்தக் குடியரசுக் காலத்தில் அன்று; எல்லாம் வல்ல முடியரசன் காலத்தில். அங்ஙனமெனில் இக்காலை எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

வேந்தன் எளியவனாய் இருக்க வேண்டும் என்றால் இளித்தவாயனாய் இருக்கவேண்டும் என்பதன்று; கடுகடுப்பு சிடுசிடுப்பு, வீரம் - வேகம் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவேண்டும்; தன்னை நாடியவரிடம் இருக்கக்கூடாது. அதியமான் என்னும் அரசனை ஒளவையார் பாடியுள்ளார். 'யானைப்பொம்மையுடன் விளையாடுவதைப் போலச் சிறுவர்கள் தன்னுடன் விளையாடித் தன் கொம்புகளை நீரில் கழுவுமளவிற்குக் காட்டி நிற்கும் ஒரு பெரிய யானையைப்போல, அதியமான் தன்னைச் சேர்ந்தோரிடம் இனிமையாய்ப் பழகுவானாம்; அந்த யானை மதம் பிடித்துத் திரிந்தாற்போலத் தன் பகைவரிடம் நடந்து கொள்வானாம்' என்பது ஒளவையார் பாடலின் கருத்து. இதனை,

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும் எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே என்னும் புற நானூற்றுப் (94) பாடலால் அறியலாம். இப்படிப்போல, சங்க நூல்களில் இன்னும் பலப்பல எடுத்துக் காட்டுகள் உள. எனவே, மன்னன் தன்னை நாடிவந்தோர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாயிருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்தான், மக்களின் குறைகளையும் முறைகளையும் நேரில் அறிந்து போக்கவியலும். இன்னும், காட்சிக்கெளியன் என்பதற்கு, எங்கும் தோன்றிப் பழகுவான் என்றும், எங்கும் சென்று காணலாம் என்றும் மேலும் இருபொருள் கூறலாம்.

அடுத்து, கடுஞ்சொல்லன் 'அல்லனேல்' என்றார் ஆசிரியர். ஏன் 'இன் சொல்லன்' என்றிருக்கலாமே! இல்லை; இன்சொல்கூட வேண்டியதில்லை; கடுஞ்சொல் இல்லாதிருந்தால் போதும். அரசன் சில குற்றங்களைக் கண்டிக்கும் போது இன்சொல் கூறமுடியாமற் போகலாம். ஆனால் கடுஞ்சொல்லின்றி நடு நிலையில் நடந்து கொள்வது நன்று,

இந்தக் குறளினை இக்கால முறைக்கு வைத்துப் பார்ப்போம், இப்போது பொதுமக்கள் அரசாங்கத்துக்கு ஒரு குறை தெரிவித்தால், அது பல கைக்கு மாறிப் பதிலுருவத்தில் மக்களின் கைக்கு வரப் பல நாட்கள் ( திங்களும்) ஆகலாம். அந்தத் தாள்கட்டு 'சிவப்பு நாடா'வால் கட்டப்பட்டுக் கிடக்கும். இதற்குத்தான் 'சிவப்பு நாடாமுறை' என்று பெயர். இந்நிலை கூடாது. மக்கள் வேண்டுகிற குறைகளையும் வெளியிடுகின்ற முறைகளையும் அரசன் நேரில் அறிந்து உடனுக்குடன் ஆவன புரியவேண்டும், அதாவது 'சிவப்பு நாடா முறை' ஒழிய வேண்டும் என வள்ளுவர் கூறுகின்றார். இப்போது அரசியலார் இதில் கண் செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது.