ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்/பொருட்பால்-2

விக்கிமூலம் இலிருந்து
பொருட்பால்
அரசியல் இறைமாட்சி
தான் கண்டனைத்து


(தெளிவுரை) இன்சொல்லுடன் உதவியும் செய்து மக்களைக் காக்கும் மன்னன் சொன்னால் சொன்னபடி, நினைத்தால் நினைத்தபடி இவ்வுலகம் ஆடும்.

"இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தாள்கண் டனைத்திவ் வுலகு"

(பதவுரை) இன்சொலால் = இன் சொல்லுடன், ஈத்து = ஈதலையும் செய்து, அளிக்க வல்லாற்கு =மக்களைக் காக்கவல்ல மன்னனுக்கு, இவ்வுலகு = இந்த உலகமானது, தன் சொலால் = தான் சொல்லுகிற சொல்லின்படியும், தான் கண்டனைத்து = தான் கருதுகிறபடியும் இயங்கும். (அளித்தல் = அருளுடன் காத்தல்; காணுதல் = கருதுதல்; அனைத்து = போன்றது; தான். கண்டனைத்து = தான் கருதுவது போலவே நடக்கும்.)

(மணக்குடவர் உரை) இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்யவல்ல அரசனுக்குத் தன்னேவ லாலே இவ்வுலகம் தான் கண்டாற்போலும் தன் வசத்தே கிடக்கும்.

(பரிமேலழகர் உரை) இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகந் தன் புகழோடு மேவித் தான் கருதிய வளவிற்றாம்.

(விளக்கவுரை) இந்தக் குறளில் வேந்தனுக்கு மூன்று நிலைகள் பேசப்பட்டுள்ளன. இன்சொல், ஈதல், அளித்தல் என்பன அவை. "இம் மூன்றும்" ஒருங்கு அமையப்பெற்ற அரசன் சொல்படியே, நினைத்தபடியே மக்கள் நடப்பர் என்பது குறட் கருத்து, அங்ஙனமெனில், இதிலுள்ள மறை பொருள் (இரகசியம்) யாது?

'பணம் பத்தும் செய்யும்', 'பணம் பாதாளம் வரையும் பாயும்', 'பணக்காரனைச் சுற்றிப் பத்துப் பேர் என்றும் இருப்பர்' என்னும் பழமொழிகள் அறிவிப்பது என்ன? பணம் படைத்த பலர், பணத்தை எலும்புத் துண்டாகப் போட்டு, பாமரர் முதல் படித்தவர்வரை பணியவைத்து, நீர் சொட்ட நாக்கைத் தொங்கவிட்டு வால் குழைக்கச் செய்கின்றனர் - என்பதுதானே இப்பழமொழிகளின் உட்கிடை? இந்தப் பணக்காரர்கள் காலால் இட்ட வேலையை அந்த நாய்கள் தலையால் செய்வதெல்லாம் பணம் கொடுக்கும் வரையில்தான். பாராட்டுவது எல்லாம் எதிரில் மட்டுந்தான். இதற்குக் காரணம் என்ன? பணம் கொடுப்பவர்கள் வாங்குபவரின் நன்மைக்காகக் கொடுப்பதில்லை; தங்கள் நன்மைக்காகவே கொடுக்கிறார்கள். ஆனால், இந்தக் குறளில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னனிடத்தில் மக்களுக்கிருக்கும் ஈடுபாடு, மகாகனம் பண மூட்டைக்கும் 'உயர்திருவாளர்' எலும்புத் துண்டுக்கும் இடையே உள்ள ஈடுபாடு போன்றதன்று. பின் என்ன? பெற்றோர்க்கும் பிள்ளைக்கும் உள்ள ஈடுபாடாகும் அது! பெற்றோர் - பிள்ளை என்ற பிறகு, விளக்கம் வேறு வேண்டியதில்லை, மன்னனும் மக்களும் அப்படித்தானே?

ஒவ்வொரு சொல்லையும் தொடரையும் ஊன்றி நோக்கல் வேண்டும். இன்சொலால் அளித்தல் - சத்து அளித்தல் - இன்சொலால் ஈதல் - இன்சொலால் ஈத்து அளித்தல் -- இவ்வாறெல்லாம் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க, இந்த உயர் நிலை எல்லோர்க்கும் இயலுமா? அதனால்தான் 'வல்லாற்கு'. (வல்லவனுக்கு என்றார். இனி அடுத்த தொடருக்குச் செல்வாம்:-

'தன் சொலால் தான் கண்டனைத்து இவ்வுலகு' என்பதில், உலகு என்பதற்கு முன்னுள்ள 'இ' (இ + உலகு = இவ்வுலகு = இந்த உலகம்) என்னும் சுட்டு, வள்ளுவர் நம் பக்கத்தில் இருந்து கொண்டு இந்த இருபதாம் நூற்றாண்டைச் சுட்டிக்காட்டுவது போல் காணப்படுகின்றது. அதாவது, இந்த உலகம் - ஒருவரையொருவர் மதிக்காமல், ஒருவர்க்கொருவர் கட்டுப்படாமல், ஒருவரோடொருவர் பொறாமையுடன் போட்டியிட்டுப் போர் செய்து கொள்கின்ற இந்த உலகமுங்கூட, இன்சொலால் ஈத்தளிக்க வல்லானுக்கு அடங்கிக் கட்டுப்படும் - என்னும் நுண் பொருளை இந்த 'இ' (இவ்வுலகு) என்ற ஒரு சுட்டெழுத்து அறிவிக்கவில்லையா?

'தன் சொலால்' என்பது தான் சொல்லுகிறபடி நடக்கும் என்பதைக் குறிக்கிறது. 'அவர் சொல்லுக்கு அங்கே நிறைய மதிப்பு உண்டு', 'அவர் சொல்லுக்கு அங்கே இரண்டாவது இல்லை', 'அவர் சொன்னால் போதும்', 'அவர் சொன்னால் சொன்னதுதான்', 'அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்' ஆகிய உலக வழக்குகள் இதே கருத்தை அறிவிப்பனவேயாம். அடுத்து, 'தான் கண்டனைத்து' என்பது. தான் கருதுகிறபடி - எண்ணுகிறபடியே உலகமும் நடக்கும் என்பது இதன் பொருள். இங்கே உளநூல் (Psychology) கருத்து ஒன்று என் உள்ளத்தை உந்துகின்றது. அதனைச் சுருங்கத் தருகிறேன் :- மக்களுக்கு இளமையிலிருந்தே - இயற்கையிலேயே சில பொதுவான மனப்போக்குகள்' (General Tendencies ) உள்ளன. அவற்றுள், ஒத்துணர்வு (Sympathy), குறிப்பு உணர்தல் (Suggestion), பின்பற்றல் (Imitation) என்பன இன்றியமையாதன. இம்மூன்றும் ஒருசார் ஒப்புமை யுடையன வெனினும், இவற்றுக்குள் வேற்றுமையும் உண்டு. ஒருவர் உணர்ச்சிகளைப் பிறரும் எதிரொலித்தல் 'ஒத்துணர்வு' ஆகும். ஒருவர் எண்ணக் குறிப்புகளையும் நோக்கங்களையும் பிறரும் எதிரொலித்தல் 'குறிப்புணர்தல்' ஆகும். ஒருவர் செய்யும் செயல்களைப் பிறரும் செய்தல் 'பின்பற்றுதல்' ஆகும். இவற்றுள் நடுவண் கூறப்பட்டுள்ள 'குறிப்பு உணர்தல்' என்பது இக்குறளில் எதிரொலிக்கின்ற தன்றோ? மக்களுக்குக் குறிப்புணர்தல் என்னும் மனப்போக்கு இயற்கையிலேயே அமைந்து கிடப்பதால்தான், அவர்களை, அரசியல் கட்சித் தலைவர்களும், மதத் தலைவர்களும், வாணிக விளம்பரக்காரர்களும் ஆட்டிப் படைக்க முடிகிறது. இவர்களுள்ளும், மிக்க சீரும் சிறப்பும் - பேரும் பெருமிதமும் உடையவர்களின் எண்ணப்படியே பொதுமக்கள் ஆடுவர். இதற்குத்தான் பெருமிதக் குறிப்புணர்தல் (Prestige Suggestion) என்று பெயர். இந்தச் சீரும் சிறப்பும்-பேரும் பெருமிதமும் யார்க்குக் கிடைக்கும்? 'ஈவார்மேல் நிற்கும் புகழ்' என வள்ளுவர் ஓரிடத்தில் கூறியுள்ளபடி இன்சொலால் ஈத்தளிக்க வல்லாரே இந்தப் பெருமிதக் குறிப்புணர்தலுக்கு இலக்கியமாவர். இதைத்தான் 'தான் கண்டனைத்து' என்னும் தொடர் உணர்த்தி நிற்கிறது 'யான்கண்டனையர் என் இளையரும்' என்னும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பகுதியையும் நோக்குக.

'தான் கண்டனைத்து' என்பதற்கு, தான் கருதுகிறபடி மக்கள் நடப்பர் என்று பொருள் பண்ணினோம். இன்னும், தான் கண்குறிப்புக் காட்டுகிறபடி நடப்பர் என்றும் கூறலாம், மற்றும் தான் எல்லா இடங்களுக்கும் சென்று நேரில் பார்வையிட்டால் எப்படியிருக்குமோ, அப்படியே தான் ஒரே இடத்தில் இருக்கும்போதும் எல்லாம் ஒழுங்காய் இயங்கும் என்றும் உரைக்கலாம். மேலும், காணுதல் என்பதற்குச் செய்தல் என்ற பொருளும் உண்மையின், தனக்கு எப்படி எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி அப்படி. எல்லாம் புதிதாய் ஓர் உலகத்தைச் செய்து அமைத்துக் கொண்டதுபோல் இவ்வுலகம் இருக்கும் என்றும் உரை கூறலாம். 'செய்து வைத்தாற்போல இருக்கிறது' என்று உலக வழக்கில் கூடச் சொல்லுகிறோம் அல்லவா? இன்னும் இப்படி எத்தனை நயங்கள்! எத்தனை கற்பனைகள்! அம்மம்மா!

அறத்துப்பால்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
முயல்வாருள் எல்லாம் தலை
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை"

(பதவுரை) இயல்பினான் = இயல்பான ஒழுக்க முறையுடன், இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் = குடும்ப வாழ்க்கை நடத்துபவன் என்று புகழ்ந்து பேசப்படுபவன், முயல்வாருள் எல்லாம் தலை = (வேறு நன்மை பெற முயல்பவர்களுக்குள் எல்லாம் முதன்மையானவன் ஆவான், (இயல்பினான் என்பதின் இறுதியிலுள்ள 'ஆன்' மூன்றாம் வேற்றுமை உருபு )

(மணக்குடவர் உரை) நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவ னென்பான், முயல்வா ரெல்லாரினுந் தலையாவான், முயறல் - பொருட்கு முயறல். (பரிமேலழகர் உரை ) இல்வாழ்க்கையினின்று அதற்குரிய இயல்போடு கூடி வாழ்பவ னென்று சொல்லப்படுவான், புலன் களை விட முயல்வா ரெல்லாருள்ளும் மிக்கவன்.

(விளக்கவுரை) இக்குறளில் உள்ள 'இல்வாழ்க்கை வாழ்பவன்' என்னும் தொடர் ஓர் அரிய அணுத்தொடர் ஆகும். இத்தொடரில் இரண்டு முறை வாழ்(தல்) என்னும் சொல் வந்துள்ளது. இதற்கு வள்ளுவர் அகராதியில் என்ன பொருள்? கணவனும் மனைவியுமாய் இல்லில் இயைந்து வாழ்தலையே வாழ்தல் என வள்ளுவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இல்வாழ்க்கையே வாழ்க்கையாக அவர்க்குப் புலப்பட்டிருக்கிறது. மற்ற வாழ்க்கையெல்லாம், "வாழாது வாழ்கின்றேன்" என ஒரு காரணம் பற்றி ஓரிடத்தில் மணிவாசகர் கூறியிருப்பது போல், வாழாத வாழ்க்கையே போலும்! வள்ளுவர் 'வாழ்க்கைத் துணை நலம்' என்னும் பகுதியில், மனைவியை 'வாழ்க்கைத்துணை' எனக் கூறுகிறார். அங்ஙனமெனில், 'வாழ்க்கை என்பது எது? என நாமே உய்த்துணர்ந்து கொள்ளலாமே. இல்வாழ்க்கையே வாழும் வாழ்க்கை என்னும் கருத்தை உள்ளடக்கியே 'இல் வாழ்க்கை வாழ்பவன்' என இக்குறளில் ஆசிரியர் கூறினார். (வாழ்க்கையை வாழ்தல் - அதாவது வாழும் வாழ்க்கை).

இத்தொடரில் இன்னும் ஒரு நயங் காணலாம். 'எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்' என்பது போல இல்வாழ்க்கையில் உள்ள எல்லோருமே வாழ்ந்தவராகி விடுவார்களா? இல்லறமென்னும் நல்லறத்தைப் புல்லறமாக்கிக் கொண்டவர்கள் எத்துணையோ பேர்! 'கலியாணம் பண்ணியும் பிரமச்சாரி' என்றபடி, பேருக்குத் திருமணம் செய்து கொண்டு பேதுறுகின்ற பேதைப்பித்தர்கள் எத்துணையோ பேர்! இவர்களெல்லாம் இல்வாழ்க்கை வாழ்பவராக மாட்டார்கள். இல்வாழ்க்கை வாழவேண்டிய இயல்பின்படி வாழ்பவரே வாழ்வாராவர் என்ற கருத்தையும் அடியொற்றித்தான் 'இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன்' என்றார் வள்ளுவப் பெருமானார்.

இல்வாழ்க்கை வாழவேண்டிய 'இயல்பு' என்பது என்ன? இயல்பு என்பதற்கு, இயற்கை, தன்மை, உண்மை, ஒழுக்கம், நேர்மை, முறை என்றெல்லாம் பல பொருள் உண்டு. போதிய அளவு உழைத்து, உண்டு, உடுத்து, நுகர்ந்து, உறங்கி, பிறருக்கும் உதவி வாழும் வாழ்வு இயல்பான வாழ்வுதான். இக்காலத்தில் பலரிடம் செயற்கையான போலி வாழ்வே காணப்படுகின்றதன்றோ? எண்ணத்திலும் பேச்சிலும் செயலிலும் இயல்பான உண்மையின்றி, செயற்கையில் உண்மைபோல் நடிக்கின்ற போலித்தனமே காணப்படுகின்றதல்லவா? இது கூடாது. செயற்கையான போலித்தனமின்றி, இயல்பான ஒழுங்கு முறையுடன் இல்வாழ்க்கை வாழ்பவன், வேறு துறைகளில் முயல்பவர்களுக்கெல்லாம் தலைமையானவன் ஆவான் என்பதே இக்குறட்கருத்து.

இக்குறளில் உள்ள 'முயல்வார்' என்பதற்கு. உலகியல் பொருளியல் துறையில் முயலுபவர் என்னும் கருத்தில் மணக்குடவரும் தவநெறியில் முயலுபவர் என்னும் கருத்தில் பரிமேலழகர் போன்றோரும் பொருள் கூறியுள்ளனர். இயல்பான இல்வாழ்க்கையல்லாத வேறு துறைகளில் முயல்பவர் என்று நாம் பொருள் எடுத்துக்கொள்ளலாமே.

உலகில் எந்த உயிர்ப்பொருளை எடுத்துக்கொண்டாலும் ஆணும் பெண்ணுமாயிருப்பதையும், இவ்விரண்டின் சேர்க்கையாலேயே தோற்றம் ஏற்படுவதையும் நாம் கண்டு வருகின்றோம். எனவே, இயற்கைப் படைப்பின் அமைப்பு நோக்கம், ஈரினமும் இயல்பாய் இணைந்து வாழ்தலே? இவ்வாறு அமையாத வாழ்வெல்லாம் அரைக்கிணறு தாண்டும் அரைகுறை வாழ்வே! மனைவி மக்களுடன் வாழ்ந்தறியாதவன், பெரிய பணக்காரனாய் அல்லது பெரிய படிப் பாளியாய் அல்லது பெரிய துறவியாய் நூறாண்டு வாழ்ந்திருந்தாலும் அவனது வாழ்வு பதினெட்டு வயதுப் பையனது வாழ்வேயாகும். சாவு - வாழ்வுக் காரியங்களில் சமூகம் அவனுக்கு முதன்மை கொடுப்பதில்லை. நல்ல பிள்ளை குட்டி பெற்ற நரைத்த தலைகளையே நாடுவர் மக்கள், அவர்களுக்குத்தான் மனித வாழ்வின் முழுப் பூட்டுத்திறப்பும் தெரியும். அவர்களே - அவர்தம் அறிவுரைகளே மற்றவர்க்கு வழிகாட்டியாகும். எனவேதான், இயல்பினால் இல் வாழ்க்கை வாழ்பவன், அங்ஙனம் வாழாது வேறு வழியில் வாழ முயலுகின்ற மற்றவர்க்கெல்லாம் தலைமை தாங்குகிறான். இப்போது புரிந்திருக்குமே இக்குறளின் உட்கிடை!.

நோற்பாரின் நோன்மை உடைத்து
"ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை யுடைத்து"

(பதவுரை) ஆற்றின் ஒழுக்கி = (ஓர் இல்லறத்தான் தன் - மனைவி மக்கள், துறவிகள் முதலானோரையும்) நல்ல வழியில் நடக்கச் செய்து, அதன் இழுக்கா இல்வாழ்க்கை - (தானும்) நல்லறத்திலிருந்து தவறாது நடத்துகின்ற இல்வாழ்க்கையானது, நோற்பாரின் - தவஞ்செய்வாரைக் காட்டிலும், நோன்மை உடைத்து = தவவலிமை உடையதாகும், (ஆற்றின் - ஆறு = நல்ல நெறி; இழுக்குதல் = தவறுதல் - இழுக்கா(த) = தவறாத.)

(மணக்குடவர் உரை) பிறரையும் நன்னெறியிலே ஒழுகப் பண்ணித் தானும் அறத்தின்பா லொழுகும் இல் வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து.

(பரிமேலழகர் உரை) தவஞ்செய்வாரையுந் தத்தம் நெறியின்க ணொழுகப் பண்ணித் தானுந் தன்னறத்திற் றவறாத இல்வாழ்க்கை அத்தவஞ் செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (விளக்கவுரை) 'ஆற்றின் ஒழுக்கி' என்பது குறட் பகுதி. ஒழுகுதல் தன்வினை - அதாவது தான் நடத்தல்; ஒழுக்குதல் பிறவினை - அதாவது பிறரை நடக்கச் செய்தல். குறளில் 'ஒழுக்கி' எனப் பிறவினையாகக் கூறியிருத்தலின், "மனைவி, மக்கள் முதலிய மற்றவரை நல்ல வழியில் நடக்கச் செய்து" என்று பொருள் பண்ண வேண்டும். இல் வாழ்க்கை நோன்மை உடையது என்றால், இல்வாழ்வான் நோன்மை உடையவன் என்பது கருத்து.

நோன்மை என்றால் தவவன்மை. தவம் என்றால் ஏதோ தனிப்பட்டது - அப்பாற்பட்டது என்று எவரும் தயங்கவேண்டா, ஒழுங்கான முறையில் இல்லறம் நடத்துவதும், ஓர் உயர்ந்த தவமே. மேலும் இந்த இல்லறத் தவம், துறவிகளின் துறவுத்தவத்தைவிட வலியதும் சிறந்ததும் ஆகும், சமய நூலார் 'இல்லறத் துறவு' என்று சொல்வது இந்த இல்லறத் தவத்தைத்தான் என்பது எனது கருத்து. இல்லறத் துறவு என்றால் வேறு எதுவும் இல்லை; பொழுது விடிந்து பொழுது போகும் வரையும் தம் மனைவி மக்களை மட்டுமே கட்டியழுது கொண்டு - அவர்கட்கு வேண்டியவற்றை மட்டுமே தேடி உழன்று கொண்டு கிடக்காமல், மற்ற மன்பதைக்கும் (சமுதாயத்துக்கும்) தொண்டாற்றுதலே இல்லறத்துறவு. இத்தகைய தொண்டு புரிவோரே 'இல்லறத் துறவிகள்' என்பது கருத்து.

தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார்' என மற்றொரு குறளில் கூறியுள்ளபடி, தாம் மட்டுமே தனியே அமர்ந்து 'மூக்கு விழிகளை' மூடிக்கொண்டு செய்யும் துறவுத் தவத்தைவிட, மனைவி மக்களுடன் மக்கள் சமுதாயத்துக்கும் தொண்டாற்றும் இல்லறத்தவம் எவ்வளவோ சிறந்தது தானே! இது குறித்தே. 'இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து' என்றார் வள்ளுவர். ஆனால், 'எல்லோரையும் ஆற்றின் ஒழுக்கித் தானும் அறனிழுக்காது நடத்துகின்ற இல்வாழ்க்கையே நோற்பாரின் நோன்மை யுடைத்து' என்பதும் ஈண்டு நினைவிருக்க வேண்டும். எனவே, இல்லறத் தவத்துக்குரிய இலக்கணம், அனைவர்க்கும் ஆகவேண்டிய உதவிகளைச் செய்து அவரவரையும் நல்ல வழியில் நடத்துதல், தானும் நல்ல வழியில் நடத்தல் என்னும் இரண்டும் உடைமை எனத் துணிக.

இதைத்தானே பிசிராந்தையார் என்னும் சங்கப் புலவர் செய்தார்! அவர் தமது பண்பாட்டால் மனைவி. மக்கள், தொழிலாளர் முதலிய எல்லோரையும் திருத்தினார்; அரசனும் நல்லவன்; ஊராரும் சான்றோர்கள்; அதனால் அமைதியான நல்ல சூழ்நிலையில் நல்வாழ்வு வாழ்ந்தார் புலவர். இந்த இனிய இல்லறவாழ்வால், வயது மிக நிரம்பியும், என்றும் நரை திரையில்லாத இளைஞராகவே அவர் காணப்பட்டார். என்றும் இளமை பெற்ற இதனினும் பெரிய தவம்-பெரிய யோகம் வேறு என்ன? இதனை, தம் என்றுங் குன்றா இளமை பற்றி அவரே பாடிய.

"யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்காகியர் என வினவுதி ராயின்,
மாண்டஎன் மக்களொடு மனைவியும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்...
சான்றோர் பலர் யான் வாழு மூரே"

என்னும் புறநானூற்றுப் (191) பாட்டாலறியலாம்.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை

(தெளிவுரை) உலகில் எது எதுவோ அறம் என்று சொல்லப்படினும், உண்மையில் அறம் என்று சொல்லப்படுதற்கு உரியது இல்வாழ்க்கைதான்! அந்த இல்வாழ்க்கையும் பிறனொருவன் பழிக்காதபடி இருந்தாலே சிறந்ததாம்.

"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"

(பதவுரை) அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை = அறம் அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டதெல்லாம் இல்வாழ்க்கைதான்; அஃதும் = அப்பேர்ப்பட்ட சிறப்புடைய இல்வாழ்க்கையும், பிறன் பழிப்பது இல்லாயின் = பிறன் எவனும் பழிப்பதற்கு இடமில்லாதிருக்குமானால் தான், நன்று = நல்லதாகும் - சிறந்ததாகும். (அறன் - அறம்)

(மணக்குடவர் உரை) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப் படுவதொன்றை யுடைத்தல்ல வாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை.

(பரிமேலழகருரை) இருவகை யறத்தினும் நூல்களான் அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; ஏனைத் துறவறமோவெனின், அதுவும் பிறனாற் பழிக்கப்படுவதில்லையாயின், அவ்வில்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.

(விளக்கவுரை) 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்பதற்கு வாடிக்கையாக ஏதேதோ பொருள் சொல்வது வழக்கம். இல்லறம், துறவறம் என அறம் இருவகை; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்னுங் கருத்தில் பரிமேலழகர் எழுதியுள்ளார். இன்னும் எத்துணையோ அறங்கள் (முப்பத்திரண்டு அறங்கள்) சொல்லப்படுவதுண்டு; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்றெல்லாம் சொல்லுவதுண்டு. இங்கே நான் என்ன சொல்லுகிறேன்? அறமே இல்வாழ்க்கை - இல்வாழ்க்கையே அறம்; கரும்பே கன்னல் - கன்னலே கரும்பு என்பது போல, அகராதி தொகுப்பவர்கள், அறம் என்பதற்கு நேரே இல்வாழ்க்கை எனவும், இல்வாழ்க்கை என்பதற்கு நேரே அறம் எனவுங்கூட எழுதிவைக்கலாம். இதற்கு நிகண்டு போன்றதொரு சான்று, 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை ' என்பதே.

'அறன் எனப்பட்டதே' என்பதின் இறுதியிலுள்ள 'ஏ' துறவறத்தினின்று இல்லறத்தைப் பிரித்துக் காட்டும் பிரிநிலை ஏகாரம் ஆகும் எனப் பொருள் கொண்டு, 'அஃது' என்ற சொல்லுக்கு 'அந்தத் துறவறமும்' எனப் பொருள் கூறியுள்ளார் பரிமேலழகர். ஏகாரத்தைத் தேற்ற ஏகாரமாகக் கொள்ளின் இந்தக் குழப்பத்துக்கு இடமில்லை. 'அஃது' என்னும் சுட்டு எவ்வாறு துறவறத்தைக் குறிக்க முடியும்? முதலில் இல்வாழ்க்கையைக் கூறி, பின்பு அது என்று சுட்டிக்காட்டினால் எது என்று எண்ணுக.

இல்வாழ்க்கையில் இருந்து கொண்டுதான் எல்லா அறமும் செய்ய முடியுமாதலின் 'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை' என்றார். இல்வாழ்க்கையே அறம் எனத் தேற்றப்படுத்திக் கூறிவிட்டதால், குடும்பத்தில் இருந்து கொண்டு எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாமா? பிறர் பழிக்காதபடி நடந்துகொண்டால் தானே நல்லதாகும் என்பதை அறிவிக்கவே 'பிறன் பழிப்பதில்லாயின் நன்று' என்றார் ஆசிரியர். இங்கே 'பழிப்பது' என்னுஞ் சொல்லுக்கு, பழித்தலுக்குரிய தாழ்ந்த குலத்து மனைவி எனப் பொருள் எழுதியுள்ள மணக்குடவருக்கு நமது. கழிபேரிரக்கம் உரித்தாகுக!