இங்கிலாந்தில் சில மாதங்கள்/உலக அரங்கில் நாம்

விக்கிமூலம் இலிருந்து

உலக அரங்கில் நாம்

ஒவ்வொரு தேசமும் நமக்கு ஒரு படிப்பினையைத் தருகிறது. பிரெஞ்சுப் புரட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷத்தைத் தந்தது. மனிதன் சுரண்டப்படக் கூடாது; ஆட்சியாளர்கள் குடிமக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பறிக்கக்கூடாது. அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்ற லட்சிய தாகத்தை எழுப்பியது; ஆண்டான் அடிமை நிலை ஒழிய வேண்டும் என்பது அங்கு எழுந்த புரட்சியின் வேகம்.

மார்க்சியம் தெளிவான புதிய பார்வையை உலகுக்குத் தருகிறது. பாரத நாடு தனி மனித ஒழுக்கத்தை வற்புறுத்துகிறது; அதைச் சுற்றியே அவன் சிந்தனை வளர்ந்தது. இராமன் ஏகபத்தினி விரதன் என்பதால் அவனுக்குப் பெருமை கற்பிக்கப்பட்டது. பெண் பிறர் நெஞ்சு புகக் கூடாத கற்பு தேவைப்பட்டது. ‘அறம் பொருள் இன்பம் வீடு’ இந்த நான்கு அடிப்படைகளை வைத்து வாழ்க்கை லட்சியம் பின்னப்பட்டது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் எனப் பேசப்பட்டது . பொருள் ஈட்டுதல் அதனைத் தனக்கும் அறச் செயல்களுக்கும் பயன் படுத்துவது பொருள் எனப் பேசப்பட்டது . ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் பொருளாதாரத்தின் அடிப்படைகள் ஆயின; ஒருவன் ஒருத்தி என்ற அடிப்படையில் இல்லறம் காத்து இன்பம் எய்தல் வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. அதற்குப் பிறகு ‘வீடு’ என்ற கோட்பாடும் புகுத்தப்பட்டது, அதனை ஒட்டி இம்மை மறுமை என்ற இருவேறு நிலைகள் பேதப்படுத்திக்காட்டப்பட்டன, உலக வசதிகளைத் துய்த்தல் சிற்றின்பம் என்றும், அவற்றை விட்டு மறு வாழ்வுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வது பேரின்ப வாழ்வுக்கு வழி என்றும் கூறப்பட்டன. பேரின்பத்தை அடைய வழிகள் கூறப்பட்டனவே தவிரப் பேரின்பம் அடைந்தவர்களின் வரலாறுகள் கூறப்படவில்லை. இறக்கும்போது இறப்பை இனிய நிலையில் வரவேற்கும் மனோநிலையை ஜீவன் முக்தி என்று பேசினார்கள். சாகும் போதும் துன்பம் இல்லாமல் சாகவேண்டும் என்று விரும்பினான். இதை ஒட்டிப் பல சமய சாத்திரங்கள் விவாதங்கள் பெருகின. இவற்றை மாற்றி இன்று தனி மனிதனும் சமுதாயமும் எவ்வாறு பிணைப்புறுகிறது என்று எண்ணும் சூழ்நிலைக்கு நாம் வந்துள்ளோம். நாட்டின் வளர்ச்சியில் அதன் அரசியல் சமுதாய மாற்றத்தில் தனி மனிதனின் நல்வாழ்வு பிணைப்புண்டு கிடக்கிறது என்பதை அறிந்து செயல்பட்டு வருகிறோம்.

மார்க்சீயம் புதிய கோட்பாட்டை உலகுக்கு அறிவுறுத்துகிறது. தனி மனிதனின் ஒழுக்க மேம்பாடும் வாழ்வும் வளமும் பொருள் உற்பத்தியையும் அதன் பங்கீட்டு முறையையும் ஒட்டி அமைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. சமயம் தத்துவம் இந்தச் சொற்களுக்குப் புதிய பொருள் தந்து ‘நீ மனிதனை நேசி! என்ற கோட்பாட்டில் காட்டுகிறது. ‘மனித வாழ்வை நேசி! என்பது மார்ச்சீயத்தின் முடிந்த முடிவு; இன்று மார்க்சீயம் நம் இளைஞர்களைப் புதிய சிந்தனைப் போக்கில் இட்டுச் செல்கிறது.

பிராய்டிசம் என்பது மனித இயல்பையும் ஆசாபாசங்களையும் விளக்கும் கோட்பாடாகும். பாலியலை ஒட்டியே வாழ்வியல் அமைந்துள்ளது என்பது இதன் அடிப்படைச் சித்தாந்தம். இந்த அடிப்படையிலேயே இன்றைய மனோ நிலை சமுதாய அமைப்பு இயங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை; தனி ஒருவன் நினைவுக்காகத் தாஜ் மகால் கட்டிடம் கட்டப்பட்டது என்றால் அது எதனைக் காட்டுகிறது? இது மனிதனின் ஆரம்ப மனோநிலையாக இருக்கலாம்; அதனை மாற்றி மனிதனை மனிதன் நேசிக்கும் சமுதாய நல் உணர்வு பெருகும் போது பாலியல் இரண்டாம் இடத்தையே பெறுகிறது. அந்தப் போராட்ட நிலை இன்று உருவாகி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. தனிமனித நல்வாழ்வுக்கே தரும் முதலிடத்தைப் போலவே சமுதாய நல்வாழ்வு அமைய வேண்டும் என்ற கோட்பாடு இன்று வளர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி இயங்கி வருகிறோம் என்று சிந்திப்பது தேவையாகிறது.