இங்கிலாந்தில் சில மாதங்கள்/நன்றி நவிலல்

விக்கிமூலம் இலிருந்து

நன்றி நவிலல்

வெள்ளையர்கள் ஒரு சிறு நன்மை செய்தாலும் உதவினாலும் உடனே ‘நன்றி’ என்று சொல்லும் பழக்கத்தைப் பார்க்கிறோம். நாமும் அங்கு அவ்வாறு சொல்லிப் பழகிக் கொள்கிறோம். இதனால் உதவி செய்தவர் பணி செய்தவர் மனமகிழ்ச்சி அடைகின்றார். நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறோம், அந்தப் பழக்கம் நம் பேச்சுக் கூட்டத்திலும் மேற்கொண்டு வருகிறோம். கூட்டம் முடிந்ததும் ‘நன்றி நவிலல்’ என்னும் சம்பிரதாயம் இங்கு நடைமுறையில் உள்ளது. இது மேல் நாட்டுப் பழக்கம்.

புதிதாக ஒருவரைச் சந்திக்கும்போது அவரைப் பார்த்து ‘வணக்கம்’ சொல்லுதலும் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்ட பழக்கம். ‘நல்ல நாள் ஆகுக’ (good morning) என்று சந்தித்து ஒருவரை ஒருவர் நல்லுரை பேசிச் சந்தித்துக்கொள்கிறோம். பேசுவதற்கு முன் ‘ஹல்லோ’ என்று சொல்லுவதும் மேல் நாட்டுப் பழக்கம். மாலை வேளைகளில் தனியே சலைகளில் உடல் நலத்துக்கும், அடங்கிக் கிடக்காமல் இருப்பதற்கும் வெளியே சுற்றி நடந்து வருவேன்; வயது மிக்க முதியவர்கள் அவர்கள் முன்பின் தெரியாது. நான் ஒரு இந்தியன்; அவர் ஒரு ஆங்கிலேயர்; நான் அங்கேதான் எங்கோ தங்கியிருக்கிறேன் என்பது மட்டும் தெரியும். எதிரே வரும்போதே ‘good morning’ என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். நானும் உடனுக்குடன் ‘good morning’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு மேலே போவேன். புன்முறுவலால் ஒருவரை ஒருவர் மகிழ்விக்கும் அன்பு முறையைக் கண்டு மகிழ்ந்து இருக்கிறேன். அதற்கு மேல் எந்தப் பேச்சும் தொடராது .

மற்றொன்று நாம் பேசும்போது இரைச்சல் போட்டுப் பேசிப் பழகிவிடுகிறோம். அதை அவர்கள் விரும்புவதில்லை. இங்கே கணவனும் மனைவியும் நேருக்கு நேர் அடித்துக்கொள்ளாத குறை; அதற்கு மாறாக உசந்த குரலில் மற்றவர் பேசமுடியாதபடி அடக்க முயல்கிறோம். 'நீ பேசாதே’ என்பதுதான் இதன் அடையாளம்; அடக்குமுறையாகும்; யாரிடமும் தன்மையாக அடக்கமாகக் குறைந்த குரலில் பேசுவது அவர்கள் நற்பழக்கங்களில் ஒன்றாகும். ஒருவர் மற்றொருவரை மதிக்கும்போதே பணிவு ஏற்படுகிறது. இதைச் செய்யலாமா செய்து தரட்டுமா என்ற பாணியில் இப்பேச்சுகள் அமைகின்றன. பிறரிடத்தில் உள்ள நல்லதை எடுத்துச் சொல்லிப் பாராட்டுவது அவர்களிடம் காணப்படும் நல்லியல்பு எனக் கூறலாம். குழந்தைகள் இதனால் ஊக்கம் பெறுகின்றனர். ஆற்றலோடு வளர்கின்றனர். கடைகளில் பொருள் வாங்கும் போது நன்றி நவின்றே அதைப் பெறுகிறார்கள். மேலை நாட்டில் இது பழகிவிட்ட பண்பு ஆகும். மற்றவர்களைப் புண்படுத்தாமல் நடந்துகொள்வது எப்படி என்பதை அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.