இசைத்தமிழ் (Musical Literature)

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தேவநேயப் பாவாணர் ஒப்பியன் மொழிநூலில், II பண்டைத்தமிழகம் என்ற உட்பிரிவில், இசைத் தமிழ் என்ற தலைப்பில் வெளியிட்ட உரைகள் வருமாறு:-

[தொகு]

இசையாவது ஓசை. அது பாட்டிற்குரிய இன்னிசையைச் சிறப்பாயுணர்த்திற்று. இன்னிசை = சங்கீதம். (இன்னிசையரங்கு = சங்கீதக் கச்சேரி).

தமிழ் தலைக்கழக காலத்தில் இயலிசை நாடகமென முப்பிரிவா யிருந்ததென்பது, அகத்தியம் முத்தமிழிலக்கண நூல் என்பதால் அறிகின்றோம். தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கண நூலாயினும், இசைத்தமிழ்க் குறிப்புகள் ஆங்காங்கு சிலவுள. அவையாவன:


“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்” ................. (எழுத்து.33)

“.....செய்தி யாழின் பகுதியொடு தொகைஇய
அவ்வகை பிறவும் கருவென மொழிப” ............... (அகத்.20)

“துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” (களவு. 1)

“பாணன் பாடினி.... வாயில்கள் என்ப.” ................. (கற்பு. 52)

“.... பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே” .......... (செய். 173)

என்பன.

இசை எல்லா நாட்டிற்கும் பொதுவேயானும், தமிழர் அதில் தலைசிறந்திருந்தமைபற்றி அதை மொழிப்பகுதி யாக்கினர். இழவு வீட்டில் அழுவதுகூட அராகத்தோடு அழுவது தமிழர் வழக்கம். அராகத்தோடு அழாவிட்டால், அழத் தெரியாதவராக எண்ணப் படுவர்.

இசைக்கு உறுப்பாவன அராகம், தாளம் என இரண்டு. அராகம் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்த இசையைக் குறிக்கும் சொல். அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா வுறுப்புக்களில் ஒன்றற்குப் பெயராயமைந்ததும் இச் சொல்லே. அரங்கன் என்பது ரங்கன், இரங்கன் என்று வழங்கினாற்போல, அராகம் என்பதும் ராகம், இராகம் என வழங்குகின்றதென்க.

தாளம் என்பது பாடும்போது காலத்தைத் துணிக்கும் துணிப்பு. தாள் = கால். தாள் - தாளம். பாடும்போதும் ஆடும் போதும், காலையாவது கையையாவது, அசைத்தும் தட்டியும் தாளத்தைக் கணிப்பது இன்றும் வழக்கம். தாளத்திற்குப் பாணி கொட்டு என்றும் பெயர். பாணி = கை. பண்ணுவது பாணி. ஒ.நோ. செய்வது செய். செய் (தெ.) = கை. செய்-(சை)-கை (த.) (செய்கை - சைகை.) பாணி கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளையுடையது. கொட்டு அமுக்கு தல்; அதற்கு மாத்திரை 1/2. அசை தாக்கியெழுதல்; அதற்கு மாத்திரை 1. தூக்கு தாக்கித்தூக்குதல்; அதற்கு மாத்திரை 2. அளவு தாக்கினவோசை 3 மாத்திரை பெறுமளவும் வருதல். “அரை மாத்திரையுடைய ஏகதாள முதல் 16 மாத்திரையுடைய பார்வதிலோசன மீறாக 41 தாளம் புறக்கூத்திற்குரிய” என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார். இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள், தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வட மொழிப் பெயர்கள்.

அராகம் இசை (சுரம்), பண், பாட்டு என முப் பிரிவையுடையது.

சுரம் மொத்தம் ஏழு, அவை ஏழிசை யெனப்படும். ஏழிசைகளாவன :

[தொகு]

தென்மொழிப்
பெயர்
வடமொழிப்
பெயர்
அடையாளவெழுத்து
(1) குரல்
ஷட்ஜமம்
(2) துத்தம்
ரிஷபம்
ரி
(3) கைக்கிளை
காந்தாரம்
(4) உழை
மத்திமம்
(5) இளி
பஞ்சமம்
(6) விளரி
தைவதம்
(7) தாரம்
நிஷாதம்
நி

[தொகு]

ஏழிசைகளில் குரலும் இளியும் தவிர, ஏனையவைந்தும் இவ்விரண்டாகப் பகுக்கப்படுவன. இவ் விருசார் சுரங்களும், முறையே, பகாவிசை (ப்ரக்ருதிஸ்வரம்), பகுவிசை (விக்ருதி ஸ்வரம்) எனக் கூறப்படும்.

ஏழுசுரங்களும் நுட்பப் பிரிவால் 12 ஆவதும் 24 ஆவதும் 48 ஆவதும் 96 ஆவதும் ஓர் இசையை நான் காகக் கருணாமிர்த சாகரத்துட் (பக். 860 - 62) கண்டு கொள்க. தமிழர் பகுத்துணர்ந்தது அவரது நுண்ணிய செவிப் புலனைக் காட்டும்.

ஏழிசைகளும் சேர்ந்த கோவை ஒரு நிலை(octare) யெனப்படும். இதை ஸ்தாய் என்று மொழிபெயர்த்தனர் வடநூலார். ஸ்தா= நில். (நிலை என்பதை நிலையி என்று வழங்குவது நலம்.)

மாந்தன் தொண்டையிலும், ஓர் இசைக்கருவியிலும் அமையக் கூடிய 3 நிலையிகள் வலிவு, மெலிவு, சமன் என்று கூறப்பட்டன. இப்போது, அவை, முறையே, தாரம், மந்தரம், மத்திமம் என்று வடசொல்லால் வழங்குகின்றன.

பாட்டுப் பாடும்போதும் ஒரு கருவியை இயக்கும் போதும் அடிமட்டமாக வைத்துக்கொள்ளும் சுரம் கேள்வி யெனப்படும். இதை ச்ருதி (சுதி) என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் வடநூலார். ச்ரு = கேள்,

கேள்விச் சுரங்கள் மொத்தம் 24 என்று தமிழ்நூல் களும், 22 என்று வடநூல்களும் கூறுகின்றன. தமிழ்நூற் கூற்றே சரியானதென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது கருணாமிர்த சாகரத்துள் மிகத் திறமையாய் விளக்கியிருக்கிறார்கள். என் இசையாசிரியர் காலஞ்சென்ற மன்னார்குடி யாழாசிரியர் இராஜகோபாலையரவர்களும், தமிழ்க் கூற்றே சரியானதென்று ஒப்புக்கொண்டார்கள்.

ஏழு சுரங்களின் அடையாளவெழுத்துகளான ச ரி க ம ப த நி என்பவை, தமிழில் ஏற்பட்ட குறிகளே யென்றும், அவை குறிக்குஞ் சொற்கள் இப்போது வழக்கிறந்துவிட்டன வென்றும் சில காரணங் காட்டிக் கூறுகின்றனர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள். (கருணாமிர்த சாகரம். பக். 11. 2-5)இது எங்ஙன மிருப்பினும், ஆரியர் வருமுன்னமே தமிழர்க்கு இசைத் தமிழ் இருந்ததென்பதும், ஆரியர் தமிழரிடமிருந்தே இசையைக் கற்றனர் என்பதும் மட்டும் மிகத் தேற்றமாம்.

ச ரி க ம ப த நி என்பவற்றிற்குப் பதிலாக, தமிழ்ச் சுரப்பெயர்களின் முதலெழுத்துக்களையே, கு து க உ இ வி த என்று வைத்துக் கொள்ளினும், அன்றி வேறு இனிய இசைவான எழுத்துகளை (க ச த நி ப ம வ) வைத்துக் கொள்ளினும், ஓர் இழுக்குமில்லை.

[தொகு]

பண்ணாவது இனிமையைத் தருவதும், தனியோசையுடையதும் ஆலாபித்தற் கிடந்தருவதுமான, ஒரு சுரக்கூட்டம். அது நால்வகைப்படும். அவை பண் (7 சுரம்), பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்), திறத்திறம் (4 சுரம்) என்பன. இவற்றை, முறையே, சம்பூரணம், ஷாடவம், ஒளடவம், சுவராந்தம் என வடசொல்லால் தற்காலத்தில் வழங்குகின்றனர். பண்ணை இக்காலத்தில் ராகம் என்கின்றனர். அது அராகம் என்பதன் முதற்குறை.

பண்களைத் திரிக்கும் முறைகளில் மிக விரிவானது பாலையெனப்படும். அது ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோண (முக்கோண)ப் பாலை, சதுர (நாற்கோண)ப் பாலை என நால்வகை. இந் நூல்வகையும், ஏழிசைகளையும் முறையே 12 ஆகவும் 24 ஆகவும் 48 ஆகவும் 96 ஆகவும் பகுக்கும் என்பர். அவற்றுள், ஆயப்பாலையினின்று, செம் பாலைப்பண் (தீர சங்கராபரணம்), படுமலைப் பாலைப் பண் (கரகரப்பிரியா), செவ்வழிப் பாலைப்பண் (தோடி), அரும்பாலைப்பண் (கல்யாணி), கோடிப் பாலைப்பண் (அரிகாம்போதி), விளரிப் பாலைப்பண் (பைரவி), மேற்செம் பாலைப்பண் (சுத்த தோடி) என்னும் ஏழுபண்கள் பிறக்கும்.

பெரும் பண்கள் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நால்வகைப்படும். இவை யாழெனவும் பண்ணெனவும் பெயர் பெறும். ஏழ்-யாழ் = ஏழிசையுடையது.

இனி குல(ஜாதி)ப் பண்கள் என நான்குண்டு. அவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்பன. இவற்றைப் பெரும்பண்களோடுறழப் பதினாறாம். இவற்றை யெல்லாம் கருணாமிர்த சாகரத்துட் கண்டுகொள்க.

பிங்கலத்தில் 103 பண்கள் கூறப்பட்டுள்ளன. தேவாரத்தில் 24 பண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. “நரப்படைவாலு ரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண் ணூற்றொன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை ஒருவாறுணரலாம்.

குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை முதலிய வாகப் பண்களுக்குரிய தனித்தமிழ்ப் பெயர்களையெல்லாம் மறைத்து, இடுகுறியான வடமொழிப் பெயர்களை வழங்கி இசைத்தமிழைக் கெடுத்தனர் ஆரியர்.

[தொகு]

இசைக்கருவிகள் தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி என நால்வகைப்படும். வாய்ப்பாட்டை மிடற்றுக் கருவியென ஒரு கருவியாகக் கூறுவர் சிலர்.

பண்ணைப் பாடும்போது, ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி யெனப்படும். அது இக்காலத்தில்.

ஆலாபனை, ஆலாபனம் என்னப்படுகிறது. இவற்றுக் கெல்லாம் வேர் ஆல் என்னும் தமிழ்ச்சொல்லே. ஆலுதல் சுற்றுதல், ஆடுதல். ஆலத்தி என்னுஞ் சொல்லை நோக்குக.

ஆரோசை, அமரோசை, அலுக்கு என்பவற்றுக்குப் பதிலாக, இப்போது, முறையே ஆரோகணம், அவரோகணம், கமகம் என்ற வடசொற்கள் வழங்குகின்றன.

பாட்டென்பது பண்ணுக்கமைந்த செய்யுள். பண்ணென்பது தனியிசை. இசையொடு சொல்லும் சேர்ந்தது பாட்டு. பாட்டை இன்று கீர்த்தனை என்பர். கடவுளின் கீர்த்திபற்றியது கீர்த்தனை.

சீர்த்தி - கீர்த்தி. “சீர்த்தி மிகுபுகழ்” என்பது தொல் காப்பியம். சீர் + தி = சீர்த்தி. கீர்த்தனை திருப்புகழ் என் றாற் போல்வது. கீர்த்தனைச் செய்யுள் கொச்சகக்கலி, அதன் திரிபான பரிபாடல் என்பவற்றினின்றும் பிறந்ததாகும்.

தோற்கருவிகள் “பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, நிமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை” முதலியன.

இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலைமுழவு என ஏழு வகைப்படும்; மீண்டும் பாடன்முழா (கீதாங்கம்), நட முழா (நிருத்தாங்கம்), பொதுமுழா (உபயாங்கம்) என மூவகைப்படும். இக் கருவிகளை யெல்லாம் செய்தவரும் இயக்கினவரும் தனித் தமிழரேயன்றி ஆரியரல்லர்.

துளைக்கருவி குழல், நாகசுரம் முதலியன. பாம்பாட்டி யின் குழலிலிருந்து தோன்றினமையால் நாகசுரம் எனப் பட்டது.

நரப்புக்கருவி பலவகைப்படும். அவற்றுள் ஐந்து பெருவழக்கானவை. அவை பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு). செங்கோட்டியாழ் (7 நரம்பு), சுரையாழ் (1 நரம்பு) என்பன.

நரப்புக் கருவிகளெல்லாம் பண்டைக்காலத்தில் யாழ் என்றே கூறப்பட்டன. இப்போதுள்ள வீணை செங்கோட்டி யாழாக அல்லது அதன் திருத்தமாக இருத்தல் வேண்டும். செங்கோடு நேரான தண்டி. செங்கோல் என்பதை இதனொடு ஒப்புநோக்குக.

“கணைகொடி தியாழ்கோடு செவ்விது”... (குறள். 279) என்று கூறியது, வளைந்த பிற யாழ்களை நோக்கியேயன்றிச் செங்கோட்டியாழை நோக்கியன்று.

இசைத்தமிழ் வழக்கற்றுப்போன பிற்காலத்தில், கம்பர் முதலியோர் யாழும் வீணையும் வேறாகக் கருதினர். யாழ் என்னும் தென்சொற்குப் பதிலாகவே, வீணையென்னும் வடசொல் வழங்கி வருகின்றதென்க.

இப்போது ப்விடில் (Fiddle) என்று சொல்லப்படும் மேனாட்டிசைக்கருவி, பண்டு கீழ்நாட்டிலிருந்தே சென்ற தாகத் தெரிகின்றது. தமிழ்நாட்டில் அதற்கு வழங்கும் பெயர் கின்னரி அல்லது கின்னரம் என்பது, “கின்னரி வாசிக்குங் கிளி” என்றார் காளமேகரும். தென்னாட்டில், யாழ்பயின்ற ஒரு வகுப்பார் யாழோர் எனப்பட்டது போல, கின்னரம் பயின்ற ஒரு வகுப்பார் கின்னரர் எனப்பட்டனர்போலும்! யாழோரும் (கந்தருவர்) கின்னரரும் பதினெண்கணத்தைச் சேர்ந்தவ ராகப் புராணங் கூறும்.

யாழுறுப்புகள் வாய், கவைக்கடை, கோடு, மாடகம், நரம்பு, திவவு, பத்தர், போர்வை, ஒற்று, தந்திரிகரம், ஆணி முதலியன. இவற்றுள், மாடகம், ஒற்று, தந்திரிகரம், ஆணி என்பவற்றால் வீணை போன்றிருந்த ஒரு யாழ் அனுமானித் தறியப் படும்.யாழில் இசையமைக்கும் வகை பண்ணல், பரிவட் டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும் போக்கு என எட்டு.

யாழை இயக்கும் (வாசிக்கும்) வகை வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என எட்டு.நின்ற நரம்பு(ச), இணை நரம்பு (ப), கிளை நரம்பு (ம), நட்பு நரம்பு (க), பகை நரம்பு என்பன நரம்புகட்கிடையுள்ள தொடர்பைக் காட்டும் குறியீடுகள். செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம் என்பன நரம்புகளின் குற்றங்களைக் காட்டும் குறியீடுகள். யாழ்நரம்பின் குற்றங்களைச் சீவக சிந்தாமணியிற் காந்தருவதத்தை யிலம்பகத்திற் கண்டு கொள்க.

இயம் என்பது வாத்தியத்திற்குப் பொதுப்பெயர். இயவர் = வாத்தியக்காரர். மேளம் என்பது ஒருவகைப் பறையையும், நிலையித் திட்டத்தை (Scale)யும் குறிக்கும் செந்தமிழ்ச்சொல்.

பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தொழில் நடாத்தி வந்தவர் பாணர் என்னும் பறையர் வகுப்பினர். “பாண்சேரிப் பற்கிளக்கு மாறு” என்பது பழமொழி. 11ஆம் நூற்றாண்டுவரை பாணரே தமிழ்நாட்டில் இசைத்தலைமை வகித்து வந்தமை, நம்பியாண்டார் நம்பியாலும் அபயகுல சோழனாலும் தில்லையம்பலத்திற் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்குமாறு, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் அமர்த்தப்பட்டமையால் விளங்கும்.

ஆரியப் பிராமணர் இசை பயிலக்கூடாதென்று பண்டு ஒரு விலக்கிருந்தது. மனுதர்ம சாஸ்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில், பிராமணர் “பாட்டுப்பாடுவது, கூத்தாடுவது ..... இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கருமத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக் கத்தினின்றும் தவறியதால், சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில் (புறஞ்சேரி. அ. 38, 89),

“வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூன் மார்பர் உறைபதி” (சிலப்பதிகாரம். 13:28-9)

என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது.

சாமவேத (சுருக்கம்) மொழிபெயர்ப் பாசிரியரான ஜம்பு நாதன் என்பவர், அவ் வேதத்தைச் சரளி முறைப்படி பாடத் தொடங்கியது பிற்காலமென்று குறித்துள்ளார். (சாம வேதம் : முகவுரை, ப. 19)

வேத மந்திரங்கள் மன்றாட்டாதலின், இசைத்தமிழ்ப் பாட்டுப் போல ஆலாபித்துப் பாடப்பட்டிருக்க முடியாது.

பாட்டுத்தொழிலால் மதிப்பு, வருவாய் முதலிய பயன் களைக் கண்ட பார்ப்பனர், பிற்காலத்தில் அத் துறையில் இறங்கிப் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுக்கும் குலமுறையமைப் பால், பாணர்க்குப் பிழைப்பில்லாது செய்துவிட்டனர். அவர் முதலாவது நரப்புக்கருவியும், பின்பு துளைக்கருவியும் பயின்று இதுபோது தோற்கருவியும் தொடங்கியிருக்கின் றனர்; ஆயினும், புல்லாங்குழல் மிருதங்கம் போன்ற மதிப் பான கருவிகளையே பயில்வர்.

பல நூற்றாண்டுகளாகப் பார்ப்பனர் இசைபயின்று அதைக் குலத்தொழில்போல ஆக்கிக்கொண்டமையா லேயே, தியாகராஜ ஐயர் என்னும் பார்ப்பனர் தலைசிறந்த இசைப் புலமை வாய்க்கப் பெற்றனர் என்பதை அறிதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இசைத்தமிழ்_(Musical_Literature)&oldid=1410731" இருந்து மீள்விக்கப்பட்டது