உள்ளடக்கத்துக்குச் செல்

இதழியல் கலை அன்றும் இன்றும்/கிரைம் செய்திகள் எவையெவை? அவை அறமா? சேவையா? ஆபத்தா?

விக்கிமூலம் இலிருந்து


20


கிரைம் செய்திகள் எவையெவை?
அவை அறமா? சேவையா? ஆபத்தா?


க்கட் சமுதாயத்தில் குற்றம் (கிரைம்) செய்யாத மனிதனே கிடையாது? புராண - வேத சாஸ்திர நெறிகள் எல்லாம் குற்றம் செய்பவனைத் திருத்துவதற்காவே எழுதப் பட்டவை! குற்றம் புரிபவர்களை அசுரர்கள் என்றும், குற்றம் செய்யாதவர்களைச் சுரர்கள் என்றும் அவை குறிப்பிடுகின்றன.

இராவணன், இரண்யன், கம்சன், பத்மாசூரன், பானுகோபன், இந்திரஜித்தன், கும்பகர்ணன் போன்ற எண்ணற்றவர்கள் அசுரர்கள்! இராமன், கிருஷ்ணன், இலட்சுமணன் போன்ற விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் சுரர்களெனச் சுட்டப்படுகிறார்கள்!

எனவே, குற்றம் இழைப்பது என்பது மக்கட் சுபாவம், பண்புகளாக இருக்கின்றன். அதைத் திருத்தி மனிதனாக்குவது நீதிநெறி நூல்களும், அரசு சட்டங்களும்தான் என்பது உலகம் உணர்ந்த உணர்ச்சி வழி வகைகளாகும்.

மன்னிக்கும் பண்புடையவனே மனிதனாவான்; குற்றம் பார்க்கில் சுற்றமில்லை; குற்றங் கடிதல் அரசு அறநெறிகளில் ஒன்று என்ற பண்பார்ந்த நோக்கிலேதான் சட்டங்களை மனிதன் எழுதுகிறான்; அமல்படுத்துகிறான். நீதியை மனித சமுதாயத்தில் நிலைநாட்ட அரும்பாடுபடுகிறான் என்பதற்கு உலக சரித்திரத்தில் எண்ணற்றச் சான்றுகள் இருக்கின்றன.

இத்தகையச் குற்றச்சாட்டுகளின் நிகழ்ச்சிகளை மனிதன் படிக்க ஆர்வம் காட்டுவது என்பது என்னமோ உண்மைதான். என்றாலும்; அவற்றை சில பத்திரிகைகள் பணம் பண்ணுகின்ற செய்திகளாகவே பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இலட்சுமி காந்தன் என்பவர் ஒரு பத்திரிகை ஆசிரியன். ‘இந்துநேசன்’ என்ற பத்திரிகையை நடத்தியவரும் ஆசிரியரும் அவரே! அவரைக் கொலை செய்யும் சதி வழக்கில் சினிமா நடிகர்களும் சம்பந்தப்பட்டார்கள் என்பது வழக்கு!

அதனைப் போலவே, ஆளவந்தார் என்ற ஒரு பேனாக் கடைக்காரர் கொலை வழக்கு. அந்த வழக்கும் அக்காலத்ல் பிரபலமாக நடைபெற்றது. அதையும் பத்திரிகைகள் தொடர்ந்து விவரமாக வெளியிட்டன. அந்த வழக்கு விவரங்களையும் மக்கள் தொடர்ந்து ஆர்வத்தோடு விரும்பிப் படித்தார்கள்! பத்திரிகைகளும் பரப்பரப்பாக விற்றன.

இப்போது காவல் துறையினரால் சீரழிக்கப்பட்டதாக ஜெயலட்சுமி என்ற ஒரு பெண்ணின் வழக்கும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விவரங்களையும் தற்போது பத்திரிகைகள் பரப்பரப்புடன் வெளியிட்டப்படி உள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அதன் மேலாளராகப் பணிபுரிந்த சங்கரராமன் என்பவருடைய கொலை வழக்கில், காஞ்சி மடம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அவர்களும், இளைய மடாதிபதி விசயேந்திரர் அவர்களும், அந்தக் கொலை வழக்குச் சதியில் ஈடுப்பட்டிருப்பதாகக் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். அந்த வழக்கின் விவரங்களையும் பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வழக்குச் சம்பவங்களையும் தமிழ் மக்கள் தினந்தோறும் விரும்பிப் படித்துப் பரபரப்படைகின்றார்கள்.

எனவே, பொதுவாகச் சட்டத்திற்கு எதிராகவோ, மீறியோ, புறம்பாகவோ செய்யும் எந்த ஒரு செயலும், சதியும் குற்றம் என்று கூறப்பட்டு அது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் சொல்லுகின்றது.

அதனைப் போலவே, திருட்டு, கொலை, சதி, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, மோசடி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், அடிதடிச் சண்டை, இலஞ்சம் பெறுதல் போன்றவை எல்லாமே கிரைம் குற்றம் (Crime News) புரியும் செயல்களாகின்றன.

பத்திரிகைகள் நிலை :

மேற்கண்ட வகையானச் குற்றச் செய்திகளைப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இதை மக்களும் விரும்பி ஆர்வமாகப் படிக்கின்றார்கள். இவ்வாறு Crime Newsகளை வெளியிடுவது நாட்டுக்குச் செய்யும் தொண்டுகள் தானா என்று சில நடுநிலையாளர்களும் சிந்திக்கிறார்கள்?

பொது மக்களில் வேறுசிலர் குற்றச் செய்திகளை வெளியிடுவது சமுதாயச் சேவை அல்ல; ஆன்மீகம் சம்பந்தப்பட்ட அல்லது காவல் துறை ஊழல் குறித்தக் குற்றச் செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தருமத்திற்கு விரோதமானது; அந்தச் செய்திகளைப் படிக்கும் மக்கள் சமுதாயத்திற்கு அவை ஊறு விளைவிப்பன என்றும் சிந்திக்கிறார்கள். எனவே, குற்றச் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிடுவதைப் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் மக்களிடையே நிலவுகின்றன.

நாட்டில் நடைபெறும் எந்தவிதமான சம்பவங்களையும் கற்பனைக் கலவாமல்; உண்மையை உண்மையாக வெளியிடுவது பத்திரிகைகள் கடமை. அவ்வாறு வெளியிடாமல் மறைத்து விட்டால் நாட்டில் நடக்கும் நன்மை - தீமைகள் பற்றிய விவரங்கள் மக்களுக்குத் தெரியாமல் போய்விடும். அது சமுதாய அநீதியுமாகும் என்பர் பலர்!

பத்திரிகைகளின் தர்மத்திற்குப் பங்கம் நேராமல், இதழ்களின் மரியாதைக்கு நேர்மைக் குறைவு ஏற்படாமல், சமுதாயத்தில் மேலும் குற்றங்கள் மேம்படாமல், காவல் துறை குற்றக் கண்டுபிடிப்புக்கு உதவும் வகையில் குற்றங்களைத் தொடர்ந்து செய்ய மக்களைத் தூண்டாமல், எச்சரிக்கையோடு அவர்கள் வாழும் வகையில், பத்திரிகைகள் பொறுப்புணர்ச்சியோடும், கண்ணியத்தோடும், குற்றச் செய்திகளைத் தரத்தோடும் - மனசாட்சிப் பண்புகளோடு வெளியிட்டு வரும் அவற்றின் தொண்டு மனப்பான்மைகளின் தன்மைகளையும் மக்கள் பாராட்டுகிறார்கள்.

அதற்கான எடுத்துக்காட்டுகள்தான் ‘இந்துநேசன்’ பத்திரிகை ஆசிரியர் கிரைம் வழக்கும், ஆளவந்தார் கொலை வழக்கும், ஜெயலட்சுமி என்ற பெண்ணின் போலீஸ் கிரைம் புகார் வழக்கும், காஞ்சி மடாதிபதிகளான இரண்டு சங்காரசாரியார்கள் வழக்குகளின் குற்றப் புகார்களையும் பத்திரிகைகள் வெளியிட்டு வரும் சம்பவங்களாகும்.

எனவே, பத்திரிகைகள் எல்லாம் தங்களுக்கு உருவாகும் ஆபத்து உணர்வுகளைக் கருதாமல், சட்டம், பண்பாடு, அறம், மரபு, சமுதாயப் பொறுப்புணர்ச்சிகளோடு குற்றப் புகார்கள் செய்திகளை வெளியிடும் உண்மைச் செய்திகள் தான் என்றால், அவை மக்களால் பாராட்டப்படும் செய்திகளே! மிகையன்று!