இதழியல் கலை அன்றும் இன்றும்/நேருக்கு நேர் சந்திக்கும் கலை!

விக்கிமூலம் இலிருந்து


28

நேருக்கு நேர்
சந்திக்கும் கலை!


பேட்டி (Interview)

ரண்டு மனிதர்கள் நேருக்கு நேராகச் சந்தித்து, அறிவையும், அனுபவத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்குப் பேட்டி என்று பெயர்.

தலைவர்கள், செய்தியாளர்களை அழைத்துப் பேசுவதற்கும், செய்தியாளர் கூட்டமாக இருப்பவர்களிடம் சென்று செய்திகளைக் கேட்டு அறிவதற்கும் பேட்டி என்று பொருள்.

செய்தியாளர் நேரிடையாகவோ, தொலைபேசி வழியாகவோ, கடிதங்கள் மூலமாகவே தொடர்பு கொண்டு செய்திகளை அறிவதற்கும் பேட்டி என்றும் சொல்லலாம்.

சிலர் பேட்டி தருவதற்கே அஞ்சுவார்கள். காரணம். அவர்கள் தரும் செய்தி சிக்கலானப் பிரச்னைகளை உருவாக்கி, மக்களிடமும் சம்பந்தப்பட்ட அரசியல் அல்லது கட்சித் தலைவர்களிடமும் கெட்ட பெயரை உண்டாக்கி விடுமோ என்பதால் பேட்டிக் கொடுப்போர் பயப்படுவதும் உண்டு.

வேறு சிலர், பேட்டிக் கொடுத்தால் பெயரும், அனுபவமும், அறிவும் மக்களிடம் செல்வாக்குப் பெறும் என்ற ஆசையால், புகழ் பெறுவதற்காக பேட்டித் தரவும் விரும்புவது உண்டு என்று ‘ஜனநாயகத்தில் பத்திரிகை பணி’ என்ற தனது நூலில் திரு. ஏ.ஜி. வெங்கடாச்சாரி அவர்கள் கூறுகிறார்.

எனவே, பேட்டி ஒரு கலை. இரண்டு மனிதர்கள் நேருக்கு நேராகச் சந்தித்து வெளியிடும் அனுபவமும், அறிவுமுடைய கலை என்கிறார் ‘சோமலே’ எனும் அறிஞர் தனது ‘தமிழ் இதழ்கள்’ என்ற புத்தகத்தில்.

இரண்டு பேர்கள் சந்தித்துப் பேசும் பேச்சுக்கள் எல்லாமே பேட்டி எனும் பெயர் பெறாது. அது கலந்துரையாடல் எனும் பெயர் பெறும்.

அந்த இரண்டு பேரும் ஒரு குறிப்பிட்டக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, செய்தியாளர் கேள்வி கேட்க மற்றவர் அதற்கான அனுபவ உரைகளைக் கூறுவதுதான் பேட்டி என்ற பெயரைப் பெறும்.

எடுத்துக்காட்டாக, அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்த பின்பு செய்தியாளர்கள் அவரை அணுகி, ‘பானை இருக்கிறது; மூன்று படி அரிசி போடவில்லையே’ என்று சுவரொட்டிகளை ஒட்டிப் பிரச்சாரம் செய்கிறார்களே, உங்களது பதில் என்ன?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அண்ணா அவர்கள் ‘மூன்றுபடி அரிசி அரசு நோக்கு, தற்சமயம் மக்களுக்கு போடும் ஒரு படி அரிசிதான் இலக்கு’ என்ற தகவலைத் தந்தார். இவ்வாறு தகவலைப் பெறுவதற்குத்தான் பேட்டி என்று பெயர்.

எனவே, பேட்டி காண்போர், இயல்பாக உள்ள பிரச்னைகள் வைத்துத்தான் பேட்டி காண வேண்டுமே தவிர, பேட்டி வழங்குபவருக்கு நெருக்கடியோ, அச்சுறுத்தும் சிக்கலையோ உண்டு பண்ணக் கூடாது. அது செய்தியாளருக்கும் அழகன்று.

அமெரிக்க நாவலரான இராபர்ட் கிரீன் இங்கர்சால் கூறியதை போல, மக்களுடைய அன்றாடச் சிந்தனைகளைப் பதிவு செய்வதுதான் பத்திரிகைப் பண்பு. ஒவ்வொரு மணி நேரமும் மனித சாதியின் முன்னேற்றத்தை அளந்து காட்டுவதுதான் செய்தியாளர் பணி என்கிறார். அதற்கேற்ற சூழ்நிலையைப் பேட்டியும் உருவாக்க வேண்டும் என்பது அவரது கருத்தின் நோக்கம்.

அன்றாட நடப்புகளை
அறியும் பேட்டி

தமிழ்நாட்டில் ‘கம்ப ராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்’ என்றார் தந்தை பெரியார். அதற்கான வாதப் பிரதிவாதங்கள், பத்திரிகைப் போராட்டங்கள், மேடைப் போர்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்தன! ஆத்திக நாத்திக அனலாறுகள் ஓடிக் கொண்டிருந்தன.

நாவலர் சோம சுந்தர பாரதியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை போன்றவர்கள் எல்லாம் சேலத்திலும் சென்னையிலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கருத்துக்களை எதிர்த்து தங்களது அறிவாராய்ச்சிக்களை அரங்குகளிலே சொற்போராகத் தொடுத்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள், போர் தொடுத்தத் தமிழ் அறிஞர்களை எதிர்த்து மேற்கண்ட இருநகர சொற்போர்களிலும் வாதப் போர் நடத்தினார்.

அந்த நேரத்தில் அண்ணல் காந்தியடிகள் சென்னையிலுள்ள இந்திப் பிரச்சார சபை விழாவுக்கு வந்திருந்தார். அடிகள் காலையிலும், மாலையிலும் தினந்தோறும், ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலைப் பாடி ராம பஜனை செய்யும் பழக்கமுடையவர் என்பது இந்திய மக்கள் அறிந்த செய்தி.

மகாத்மா அவர்கள் இந்திப் பிரச்சார சபை விழாவில் பேசி முடித்த பின்பு, அவரைச் சென்னைப் பத்திரிகைச் செய்தியாளர்கள் கூட்டமாக அணுகி, ‘தமிழ்நாட்டில் இராமயணத்தைக் கொளுத்த வேண்டும்’ என்று பெரியார் இராமசாமி கூறுகிறார். ராம பக்தரான நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று அப்போதைய நாட்டின் பரபரப்பு சூழ்நிலைக்கு ஏற்றவாறு காந்தி அண்ணலிடம் கேள்வி கேட்டார்கள்.

அதற்கு அண்ணல் காந்தி, ‘நான் வணங்குவது தசரதன் மகன் இராமனை அல்ல; சீதையின் கணவன் ராமனை அல்ல’ என்று சுருக்கமாக இரண்டே வாக்கியங்களில் பதில் கூறினார்!

உடனே அறிஞர் அண்ணா அவர்கள் தனது ‘திராவிட நாடு’ பத்திரிகையில் ‘எரியிட்டார் : என் செய்தீர்? என்று கேட்டு பதில் எழுதினார்.

இதுதான் அன்றைய கால கட்டத்தின் அன்றாட நடப்பினை அறியும் நேருக்கு நேர் சந்தித்துக் கேட்ட பேட்டிக் கலை. அதற்கு அடிகள் தனது அனுபவத்தை, அறிவை மக்களுக்கு விளக்கிக் காட்டிய பேட்டி காட்சியாக அமைந்தது. இந்தப் பேட்டி ஒரு வரலாற்றுச் சம்பவ ஆன்மிகத் தெளிவைத் தெரிவித்த பேட்டியாகும்.

நிகழ்ச்சியின் விவரங்களை
வெளிப்படுத்தும் பேட்டி

தந்தை பெரியார் சேலம் நகரில் பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போரட்டத்தை நடத்தினார்! இந்த சிலை உடைப்புப் போராட்டத்தால் வன்முறைகள் ஏதும் நடைபெறவில்லை; அமைதியாக மண் சிலைகளை நடுரோடில் போட்டு உடைத்தார்! தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டம் ஆன்மிக உலகில் ஒருவித பரபரப்பை உருவாக்கியது.

உடனே செய்தியாளர் ஒருவர் சேலத்தில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் முடிந்த பிறகு பேச வந்த அண்ணா அவர்களிடம் மேடையில் பேசுவதற்கு முன்பே, ‘பெரியார் பிள்ளையார் சிலைகள் உடைப்புப் போராட்டம் நடத்தினாரே, அதனை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? என்று பேட்டி கண்டு கேட்டனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் அதற்குப் பதில் கூறும் போது, ‘போராட்டங்களைத் தேடியும் போக மாட்டேன். போராடும் கட்டம் வந்தால் நடத்தாமலும் இருக்க மாட்டேன்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன், சிலைகளையும் உடைக்க மாட்டேன்’ என்றார்.

செய்தியாளர்களின் இந்தப் பேட்டி, அண்ணா அவர்களைச் செய்தியாளர் நேருக்கு நேர் சந்தித்தக் கலைக்காட்சி, அக்கால கட்டத்தில் நடைபெற்ற பகிரங்க நிகழ்ச்சியின் விவரங்களை வெளி கொணர்ந்து அதன் உட்பொருளை மக்களுக்குப் புலப்படுத்திய சாட்சி.

கண்ணோட்டக் கருத்தை
வெளிப்படுத்தும் பேட்டி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பராசக்தி படம் மூலம் அறிமுகமாகி அண்ணா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட மன உணர்ச்சியுடையவராக இருந்தார். பிறகு அவர் தேசியக் கட்சியில் சேர்ந்து தீவிர பங்கு கொண்டதால், திருப்பதி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து திரும்பினார்.

செய்தியாளர்கள் அறிஞர் அண்ணா அவர்களை அணுகி, ‘உங்களுடைய கட்சியிலே இருந்த நடிகர் திலகம் திருப்பதி சென்று வழிபாடு செய்துள்ளாரே என்று நேருக்கு நேராகக் கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு அண்ணா மெளனியாக இருந்து விட்டார். ‘ஒரு நாள் பழகினும் நட்புக்கு சீர்குலைவு வரக்கூடாதல்லவா? அதுதானே சான்றோர் எண்ணம்?

சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்திலே நடிகர் திலகம் நடிக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என்று நடத்துனர்கள் கேட்டதற்கு அறிஞர் அண்ணா ஒப்புக் கொண்டார், நாடக அரங்கிற்கு அவர் வந்து பேசிய தனது உரையில், ‘சிவாஜி கணேசன் என்ற மலர் மலர்ந்து மணம் வீசும் நேரத்தில் அவரது அருமை மணத்தை நீங்கள் நுகர்கிறீர்கள். அவர் செடியாக, அரும்பாக இருக்கும் போதே, இந்தச் செடி, அரும்பு ஒரு நாள் தமிழ்நாடு முழுவதும் மணக்கும் மலராகும் என்பதை முன்கூட்டிய நான் அறிந்தவன். ‘தம்பி’ சிவாஜிகணேசன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்திச் சென்றார்.

இந்தக் காட்சி, சிவாஜியை நேருக்கு நேர் கண்டு வாழ்த்தியக் காட்சி, அவர்மீது அண்ணா வைத்திருந்த கருத்தை, கண்ணோட்டத்தின் தனித்தன்மையை அன்று வெளிப்படுத்திய பேட்டி ஆகும். மாற்றான் தோட்டத்து மலரும் மணக்கும்’ என்றவரல்லவா அவர்?

எனவே, பேட்டியினால் நாட்டுக்கு பல நன்மைகள், வரலாற்றுண்மைகள், நட்பு உணர்வின் நெறிகள், இலக்கியச் சிந்தனைகள், அரசியல் தன்னடக்க உணர்வுகள், சான்றாண்மைச் சம்பவங்கள் கிடைக்கின்றன. இத்தகைய பேட்டிகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் செய்தியாளர்கள் வெளிக் கொண்டு வந்து வரலாற்றில் பதிவு செய்தால், வருங்கால இளைய தலைமுறைகளுக்குரிய பாடமாக, படக் காட்சிகளாக அமையாதா?

பேட்டிகள் ஒரு செய்தியை உருவாக்க வேண்டும். பல சம்பவங்களைப் படம் பிடித்துக் காட்டுவதாய் அமைய வேண்டும். புதிய கண்டுபிடிப்பார்களது சாதனைகளைப் பேட்டி கண்டு அதன் அருமைகளைப் பொது மக்களுக்கு உணர்த்தலாம்.

விளையாட்டு வீரர்களைப் பேட்டிக் கண்டு அவர்களது ஆற்றலை உலகுக்கு வெளிப்படுத்தலாம். இவை பொது மக்களுக்குரிய வீர உணர்ச்சிகளை வளர்க்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்தியாவின் ஒவ்வொரு துறையிலும் புகழ் பெற்று விளங்குபவர்கள் இலை மறை காயைப் போல வாழ்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பாலமாக பேட்டி விளங்க வேண்டும்.

‘சன்’ டிவியில் உங்களூர் விநோதங்கள் என்ற ஒரு பகுதி செயல்படுகிறது. அந்த டி.வி.யின் பத்து நிமிடத்தோடு அவர்களது சாதனை விவரங்கள் முடிந்து விட்ட சம்பவங்கள் அல்ல. செய்தியாளர்கள் அவர்களைத் தனியே பேட்டிக் கண்டு முழு விவரங்களையும் பத்திரிகையில் வெளியிடலாம். அதனால் அவர்களது சாதனை நோக்கம் மேலும் ஆக்கம் பெறும் வழியாக இருக்கும்.

சாலையின் ஓரத்தில் இளநீர் காய்களை வெட்டி விற்றவர் ஒருவர் சங்கத் தலைவரானார்! எப்படியானார் அவர் என்பதைத் தனி மனிதர் பேட்டியாகக் கண்டு முழு செய்தியை வெளியிடலாம். நாளை ஒரு பழ வியாபாரிகூட கனிகள் சங்கத் தலைவராக அல்லது பெரிய வணிகச் சீமானாக வரலாமில்லையா? அதைப் பேட்டியாக எடுத்து செய்தியாளர்கள் வெளியிடலாம்.

பொதுப்பணிப் பாலங்கள் கட்டும்போது செங்கல் சுமந்த ஒரு சிற்றாள், நகராட்சி கமிஷனராக உயர்கின்றார். அவர் உழைப்பைச் செய்தியாளர் நேருக்கு நேர் பேட்டி எடுத்துப் பத்திரிகையில் வெளியிட்டால் அதைப் படித்து விட்டு மண் சுமப்பவன் நாளை சட்டமன்ற உறுப்பினராகவும் வரக் கூடுமில்லையா? வந்தவர்கள் உண்டு! இவை எல்லாம் தற்செயல் The Casual Interviews பேட்டிகளாக அமையலாம் தானே!

தொலைபேசியில் பேட்டி எடுப்பதை கூடுமான வரைத் தவிர்த்து விடுதல் செய்தியாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் மிக நல்லது; ஏனென்றால், அந்தச் செய்தியை வழங்கியவருக்கு சாதகம் விளைந்தால் செய்தியாளரையும், பத்திரிகையையும் பாராட்டுவார். ஒருவேளை சரியாக கவனிக்க முடியாமல், கரகரப்பு ஒலிகளால் சரியாக கேட்க முடியாமல் இடையில் தொலைபேசி தடை ஏதாவது ஏற்பட்டு அந்தச் செய்தி பாதகம் விளைவிக்குமானால், நான் அது போல ஒரு செய்தியை வழங்கவில்லை என்று அவர் மறுத்து விடுவார். அதனால் பத்திரிகைக்கும் கெட்ட பெயர், செய்தி சேகரித்தவருக்கும் அவப்பெயர் வந்து சேரும். எனவே, தொலைபேசியில் செய்தி சேகரிப்பதைத் தவிர்ப்பது கூடுமானவரை நல்லது.

செய்தியாளர், செய்தி பெறுவோரிடம் நம்பிக்கையாளராக நடக்க வேண்டும். ‘இந்தச் செய்தியை வெளியிட வேண்டாம்’ என்று ஒரு தலைவர், மக்களால் போற்றப்படுபவர் கூறினால் அதை வெளியிடவே கூடாது. Off the record என்று அவர் கூறியே சொல்லும் போது அதை மீறினால், மறுபடியும் அந்தச் செய்தியாளர் பிறர் எவரிடமும் செய்தி பெற முடியாது. எல்லோருமே.அவரை வெறுத்து ஒதுக்கும் நிலை ஏற்படும்.

ஒரு செய்தியாளர் பேட்டியை வெற்றிகரமாக முடிக்க, பேட்டி தருபவர் யார், அவர் கல்வித் தகுதி, துறை அனுபவம், மக்களிடம் உள்ள தொடர்பு அல்லது அரசிடம் அவருக்குள்ள செல்வாக்கு ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, தான் காணும் பேட்டிக்கான கேள்விகளைத் திட்டமிட்டுப் பட்டியலிட்டுக் கொள்வது சிறந்தது. பிறகு அந்தக் கேள்விகளில் கேட்க வேண்டியதைக் கேட்டு பதில் பெறலாம்; நீக்க வேண்டியதை நீக்கி விட்டு விடலாம். அதை விட்டு விட்டு பேட்டி நடக்கும் இடத்திலே சமாளித்தும் கொள்ளலாம் என்று முன் தயாரிப்பின்றி சென்றால் நிச்சயம் குழப்பம் ஏற்பட்டு, பேட்டி தோல்வி பெறலாம் என்ற எச்சரிக்கை செய்தியாளர்களுக்கு இருப்பது நல்லது.

செய்தி சேகரிப்பவர்களுக்குப் புகழாசை இருக்க வேண்டும். பத்திரிகைக்கும் தனக்கும் நற்பெயர் தேடிக் கொள்பவராக இருப்பது நல்லது. ஆனால் சந்தர்ப்பவாதியாகும் ஆசைகள் அவரிடம் அண்டக் கூடாது.

பேட்டி எடுப்பவர் அதை நடத்திக் கொண்டே பேட்டி தருபவரின் கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும்போது, பேட்டிக் கருத்துக்கள் தடைப்படக் கூடாது. தொடர்பு விட்டு விட்டு அறுபடக் கூடாது. பேட்டிக்குப் போவோர் அவர்களுடன் ஒலிப்பதிவு நாடா (Tape Recorders)களைக் கொண்டு சென்றால், பேட்டிப் பணியும் சுலபமாக முடிவடையும்.

பேட்டி எடுக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நேரம், இடம், கேள்விப் பட்டியல், பொறுப்புணர்ச்சி, பொறுமை, நல்ல உடைத் தோற்றம், குறிப்பு எடுக்கும் கருவிகள், எவற்றை வெளியிடலாம், எதை வெளியிடக் கூடாது என்ற கேள்வி பதில் தகுதிகள் ஆகியவற்றைச் சிந்தித்து நடக்க வேண்டும்.

பேட்டி தருபவரை விட - நாம் விஷயமறிந்தவர் என்றோ, அவர் பதில் கூறும்போது இடையீடு செய்து எரிச்சலூட்டு வதாகவோ, அடிமைபோல - அவரிடம் ஏதோ பயன் பெறுபவர் போல பேட்டியளிப்போர் நினைக்கும் வகையில், செய்தியாளர் நடந்து கொள்ளக் கூடாது. குறிப்பாக ‘கவர்’ கிடைக்குமா? மதுபான விருந்துண்டா? என்ற தவறுகளுக்குச் செய்தியாளர்கள் இடமளிக்கக் கூடாது?