உள்ளடக்கத்துக்குச் செல்

இதழியல் கலை அன்றும் இன்றும்/பதினாறு தகுதிகள் உள்ளவரே; விளையாட்டுப் போட்டிச் செய்தியாளர்

விக்கிமூலம் இலிருந்து


25


பதினாறு தகுதிகள் உள்ளவரே;
விளையாட்டுப் போட்டிச் செய்தியாளர்


த்திரிகை வாசகர்கள் பெரிதும் விரும்பிப் படிக்கும் சுவையான செய்திகளில், காதல் மட்டும் முக்கியமானதன்று; வீர விளையாட்டுச் செய்திகளில் வெளியிடப்படும் நுட்பங்களும் ஆகும்.

அதனால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள், வாழ்வியலை இரு கூறுகளாக்கி, அவற்றுள் ரத்தபாச உணர்வுகளை ஊட்டுவது அகம் என்றும், வீரம் விளைவிப்பது புறம் என்றும் கூறி வாழ்ந்து காட்டிப் புகழ் பெற்றார்கள். அதனால்தான் இந்தத் தமிழ் பண்பு வீரம் செறிந்த அறமறம் உடையதாக, மறஅறம் செறிந்ததாக மணந்து வருவதை இன்றும் நுகர்ந்து நாம் பெருமைப்படுகிறோம்.

பழந்தமிழர்கள் வீர விளையாட்டுகளில்- சிலம்பாட்டம், கில்லியாட்டம், கொம்பாட்டம், மற்போர், விற்போர், வாட்போர், கரகாட்டம், பரி போர், கரி போர், சேவல் போர், காளைப் போர், ஆடுகள் போர், ஏறு தழுவல் போர், அரிமா அடக்கல் போர், சடுகுடு வீரப்போர், கழைக் கூத்துப் போர் என்று பல வீர விளையாட்டுகள் தமிழர்களால் போற்றி வளர்க்கப்பட்டு வந்தன.

அந்த வீர விளையாட்டுகளில் ஒன்று கில்லியாட்டம்! கில்லி அடிக்கப்பட்டதும் வீரர்கள் ஓடி ஓட்டத்தைக் கணக்கிட்டு, அதிக ஓட்டங்கள் பெற்றவனே கில்லியாட்ட மறவனெனப் போற்றப்படுவான்.

அந்தக் கில்லி ஆட்ட்ம்தான் இன்று உலகப் புகழ் பெற்றுள்ள கிரிக்கெட் விளையாட்டு. அது தமிழ் மக்களின் வீர விளையாட்டுடமை என்றால் எவனாவது ஒப்புவானா?

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழர் இசைக் கருவிகளுள் ஒன்றாக இருந்த பதலை என்று தோலால் உருவான ஓர் இசைக் கருவியை, இன்று உலகம் தபலா என்று குறிப்பிடுவதைப் போல, கில்லி ஆட்டம்தான் கிரிக்கெட் ஆட்டம் என்றால் மட்டையைத் திருப்பி அடிப்பான் போலிருக்கிறது! அவ்வளவு கிரிக்கெட் வெறி இன்று பைத்திய வெறிபோல விளையாட்டு வரலாற்றில் புகழடைந்து விட்டது.

எனவே, பத்திரிகைகள் எல்லாம் இன்று அதிகப் பக்கங்களை ஒதுக்கி, படங்களையும் ஏராளமாக வெளியிட்டு, ஒவ்வொரு நாட்டிலும் கிரிக்கெட் என்ற விளையாட்டுத் துறையை விரிவுப்படுத்தி விட்டார்கள். அதனால் கிரிக்கெட் விளையாட்டு - சர்வதேச விளையாட்டாக விளங்கி விட்டது. கேட்டால் விளையாட்டுக் கலை என்று அதற்கு இலக்கண, இலக்கியம் வகுக்கிறார்கள்.

Sport என்றால் அது சாதாரண விளையாட்டக இருந்து, பின்பு, வீர விளையாட்டாகி, போட்டி விளையாட்டாக மாறி, உடற்பயிற்சி விளையாட்டாக விளங்கி, பந்தய விளையாட்டாகப் பரவி, வன்மை விளையாட்டாக பல்கி, மான ரோஷ விளையாட்டாக மாறி, இன்று விளம்பர விளையாட்டாக நின்றுக் கொண்டிருக்கிறது. இந்த விளையாட்டு, எதிராளியிடம் பெருந் தன்மையுடைய நடத்தை (Sporting Conduct)யையும், Sporting offer எனும் எதிர் அணிக்கு வாய்ப்புப் பேறு வழங்கும் அக்கறையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

அதனால்தான் பத்திரிகைகள் விளையாட்டுத் துறைகளில் மக்களுக்குரிய ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு பத்திரிகையும், விளையாட்டுச் செய்திகளை எழுதிட, விமர்சனம் செய்திட, விளக்கம் வழங்கிட சிறப்புச் செய்தியாளர்களை நியமித்துள்ளார்கள்.

எனவே, விளையாட்டு நுட்பங்களை, விரிவான, சுவையான, நுட்பமான விறுவிறுப்பான, பரப்பரப்பான மொழி நடையில் எழுதிட தனித்திறமை பெற்றவர்களாக விளையாட்டுச் செய்தியாளர்கள் விளங்குகிறார்கள்.

தனித் திறமையுடன் இவ்வாறாகப் பத்திரிகைகள் விளையாட்டுச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுவதால் அதற்கான வாசகர்களும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டுக்களை முன்பெல்லாம் வானொலிகள் வருணனைகளோடு வெளியிட்டன. இப்போது அந்தப் பணியைப் பத்திரிகைகள் மேற்கொண்டு விட்டன. இவற்றை எல்லாம் கேட்க, படிக்க வாசர்களுக்கு நேரம் போதாதக் குறையாகி விட்டது. அவ்வளவு Sportmanகளாக, விளையாட்டில் அக்கறை காட்டுபவர்களாக மாறி விட்டார்கள் வாசகர் என்றால் மிகையன்று.

செய்தியாளர்க்கு
தகுதிகள் சில

விளையாட்டுச் செய்திகளைச் சேகரிப்பவர்கள், விளையாட்டுகள் சிலவற்றைப் பற்றிய முழு விவரங்கள், அதற்கான சட்ட திட்ட விதிகள், நுட்பங்கள், விளையாடும் அறிவுத் திறமைகள், அவற்றை வாசகர்களுக்கு விளக்கிக் கூறும் சுவை நுட்பங்கள் அனைத்திலும் தேர்ந்தத் திறமையாளராக இருக்க வேண்டும். இருந்தால், பத்திரிகை விற்பனைப் பல்கிப் பெருகிவிடும்.

விளையாட்டு வீரர்கள் யார்? அவர்களது விளையாட்டுத் திறன்கள் என்ன? திறன்களால் முன்பு பெற்ற வெற்றி விவர வரலாறுகள், பெற்றிட்ட விருது விவரங்கள், ஏன் பெற்றார்? எப்படிப் பெற்றார்? எங்கே பெற்றார்? எப்போது பெற்றார்? என்ற விருது நுட்ப நிகழ்வுகள் போன்றவற்றை எல்லாம் விளையாட்டுச் செய்தியாளர் தெரிந்துள்ளவரானால் அவருக்கும் புகழ் விளையும்.

விளையாட்டுப் போட்டி எந்த நாட்டில் நடந்தாலும் நடுநிலை உணர்வோடு விமர்சனம் அமைய வேண்டும். ஒரு பக்க சாய்வு மருந்துக்கும் இருக்கக் கூடாது. அது கலவரங்களை உருவாக்கும். செய்தியாளர் பணிக்கும் எமனாகி விடும்.

விளையாட்டுத் துறைச் செய்தியாளர் ஆட்டத் திறனுடைய வராகக்கூட இருக்கலாம். ஆனால், அவர் உணர்ச்சி வயப்பட்டுச் செய்திகளை விளக்குவது ஆபத்து; விளையாட்டுக்களை வருணனை செய்வதில் உணர்ச்சிகளைக் கொட்டலாம். அதுவும் விளையாட்டு விதி வரம்புக்குள்ளேயே வட்டமிட வேண்டும்.

எழுதுபவர்களை விட, விளையாட்டுச் செய்திகளைப் படிப்பவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பதை எழுதும் செய்தியாளர் மறந்து விடக்கூடாது. எனவே, எழுதப்படும் செய்திகள் ஆழமாகவும், அருமையாகவும், சுவையாகவும், இனிமை பயப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதைச் செய்தியாளர்கள் கவனத்தில் நிறுத்தல் வேண்டும்.

விளையாட்டுச் செய்திகளை எழுதும் செய்தியாளருக்கு பதினாறு வகை திறமைகள் இருக்க வேண்டும். இதைத் தமிழ்க் கல்வி அறிவில் கூறுவதானால், விளையாட்டுச் செய்தியாளர் சோடசாவதானியாக இருக்கப் பழகிக் கொள்வது நல்லது.

என்ன அந்த சோடசாவதானம் என்ற 16 வகைக் கலைகள் என்கிறீர்களா? இதோ அந்த கலைகள் விவரம் :-

1. ஆடு கள வீரர்கள் யார்? யார்? அவர்கள் இதற்கு முன்பு எவ்வளவு வேறுபாட்டில் வெற்றி பெற்றார்கள்?

2. அந்த ஆடுகள வீரர் பெற்ற ஒவ்வொரு மதிப்பெண்ணையும் (Score) எவ்வாறு பெற்றார்?

3. என்ன நுட்ப விளையாட்டு முறைத் திறமையால் அதைப் பெற்றார் எனும் விவரம்!

4. பெற்ற வெற்றிகளின் திறமை உணர்வுகள்; செயல் நுட்பங்கள்.

5. ஏதாவது ஆட்ட விவகாரங்களில் குறைபாடுகள், சர்ச்சைகள் நடந்ததுண்டா? அவை எவ்வாறு தீர்க்கப்பட்டன?

6. என்ன குறைகளை அவரது ஆட்டத்தில் நிபுணர்கள் கண்டார்கள்? அல்லது பெற்ற பாராட்டுணர்வுகள் என்ன?

7. ஆட்டத்தில் ஈடுபட்டது முதல் அன்று வரை அவர் சாதித்த விளையாட்டுச் சாதனைகள் என்னென்ன?

8. அவர் ஆடிய ஆட்டங்களில் அவரால் நிரூபிக்கப்பட்ட அற்புத நுட்ப உணர்ச்சிகள்?

9. அந்த நுட்பத் திறமைமிக்க ஆட்டத்தால் உண்டான திருப்புமுனை வெற்றிகள்.

10. ஆட்டத்தின் இறுதி நேரத்தில் அவர் காட்டிய உணர்ச்சிக் கூறுகள்.

11. அதனால் திடீரென எதிரணிக்கோ அல்லது தனது அணிக்கோ ஏற்பட்ட சாதனைகள்!

12. ஆடு களங்களில் ஏதாவது விபத்துகளில் சிக்கினவரா?

13. ஆட்டத்தில் திரண்டிருந்த ஆட்ட ரசிகர்கள் அளவு என்ன?

14. எந்த ஊர்களில் ஆடினாலும் அவர் ஆடிய களங்களின் அமைப்பு நிலை.

15. ஆரம்ப கால நிலை; அதனால் ஏற்படும் தட்பவெப்ப, சாதக, பாதக நிலைகளது விளைவுகள்.

16. ஆட்டத்தில் பணியாற்றும் நடுவர்கள் யார்? அவர்கள் தரம், தகுதிகள் என்ன? என்ற 16 வகைத் தகுதிகளையும், விளையாட்டுச் செய்திகளைச் சேகரிக்கும் நிருபர் பெற்றிருப்பாரேயானால், அவர் எழுதும் ஆட்ட விமர்சன விளக்கங்கள், புகழ் பெற்ற, பண்பட்ட, அனுபவ ஆட்டக்காரர் ஒருவர் விமர்சனம் எழுதும் திறமைக்கு ஈடாக விளங்கிப் புகழ் பெறுவார்! அவர் பணி புரியும் பத்திரிகையும் நல்ல பெருமை பெறும்; விற்பனையும் பெருகும் என்பது உறுதி.