உள்ளடக்கத்துக்குச் செல்

இதழியல் கலை அன்றும் இன்றும்/பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி கார்ல்

விக்கிமூலம் இலிருந்து


33

பத்திரிகையாளர்களுக்கு
வழிகாட்டி கார்ல் மார்க்ஸ்

(அஞ்சா நெஞ்சக் கட்டுரை)





(ஜெர்மன் நாட்டில் பிறந்தவர் கார்ல் மார்க்ஸ். அவர் ஜெர்மன், ஃபிரெஞ்சு, பெல்ஜியம், இரஷ்சிய நாடுகளில் நடந்த எதேச்சாதிகார ஆட்சிக் கொடுங்கோன்மைகளை எதிர்த்து, அஞ்சாநெஞ்சுடன் பத்திரிகைகளை நடத்தியவர். பத்திரிகை சுதந்தரத்திற்காக மார்க்ஸ் அரும்பாடுபட்டவர். இன்றைய பத்திரிகையாளர்களுக்கு அந்த மேதையினுடைய வைர நெஞ்சுரம் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த அஞ்சா நெஞ்சக் கட்டுரை வரலாற்றை இங்கே வெளியிட்டுள்ளோம். பயன்பெற இது உதவும்.)

- நன்றி : ‘தமிழ்த் தென்றல்’

அக்டோபர், 2004.


சிரியர் என்ற சொல்லை, ஆசு என்றும் இரியர் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். மனதிலே உள்ள ஆசுகளை, குற்றங்களை, இரியர் அதாவது நீக்குபவராதலால் அவரை ஆசிரியர் என்று அழைக்கின்றோம். -

அந்த ஆசிரியர்களிலே இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ஏட்டைக் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர். மற்றொன்று நாட்டைக் காட்டி நல்லதை நாட்டும் பத்திரிகை ஆசிரியர்.

ஜெர்மன் நாட்டின் பான் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்து பணியாற்ற விரும்பிய கார்ல் மார்க்சுக்கு அப்போது அங்கே நடைபெற்றக் கொடுங்கோல் ஆட்சியில் தனக்கு ஆசிரியர் பணி கிடைக்காது என்று எண்ணி வேறு வேலை ஏதாவது தேடலாம் என்று அலைந்தார்.

அந்த அலைச்சலின் முடிவுதான் பத்திரிகை ஒன்றைத் துவக்கலாம் என்று திட்டமிட்டு, 1842-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ‘ரைன்லாந்து கெசட்’ என்ற பத்திரிகையிலே பல கட்டுரைகளை எழுதி வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அதே பத்திரிகைக்கு ஆசிரியரானார்.

மார்க்ஸ் தான் எழுதும் கட்டுரைகள் ஒவ்வொன்றையும், குறிப்பிட்ட அந்த சம்பவங்களை நேரில் போய் பார்த்து விட்டே வந்து, எழுதி வந்தார். அவர் எழுதும் எல்லாக் கருத்துக்களும் அவரது பார்வைக்குப் பிறகே அச்சேறின.

ஜெர்மன் கொடுங்கோல் அரசு அதிகாரிகள், செல்வச் சீமான்கள், அப்போதைய அரசியல்வாதிகள் பலரும், மார்க்ஸ் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிப் படிக்கும் சூழ்நிலை இருந்ததால், பத்திரிகைச் செல்வாக்கு அவர்கள் இடையே அதிகமாயின. அதனால் அதன் விற்பனையும் பெருகின.

‘ஆட்சிக்காகவே மக்கள் இருக்கிறார்கள் என்ற ஆட்சிப் போக்கை மாற்றி, மக்களுக்காகவே ஆட்சி இருக்கிறது என்ற கருத்தை நிலைநாட்டி மார்க்ஸ் பத்திரிகையை நடத்தி வந்தார்’.

இதனால் அரசு கண்காணிப்பு அதிகாரிகளின் ஒற்றாடல் வேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. பத்திரிகையைக் கண்காணிப்பு செய்ய அதிகாரி ஒருவரை அந்த அரசு நியமித்தது. அவருடைய மேலாண்மை இல்லாமல் பத்திரிகையை வெளியிடக் கூடாது என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இரஷ்யாவில் நடைபெறும் ஏதேச்சாதிக்கார ஆட்சி முறைய மார்க்ஸ் கண்டனம் செய்து பத்திரிகையை வெளியிட்டார். அப்போது ஜெர்மன் அரசுக்கும் இரஷிய அரசுக்கும் நட்புக் கூட்டணி இருந்ததால், இரஷியாவைக் கண்டித்து எழுதக் கூடாது என்று ஜெர்மன் அரசு ஆணையிட்டது.

அரசு நிர்பந்தங்களுக்கு உட்பட்டுத்தான் பத்திரிகை வெளிவர வேண்டும் என்று ஜெர்மன் அரசு பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறித்தது. மார்க்ஸ் இந்த நிபந்தனையைத் தூக்கி எறிந்தார். ஆசிரியர் பதவியிலே இருந்து விலகி விட்டார்.

பத்திரிகை பங்குதாரர்கள் மார்க்ஸை சந்தித்து “என்ன காரணத்தால் ஆசிரியர் பதவியை விட்டு விலகினீர்கள்?” என்று அவரிடம் நேரிலே கேட்டபோது.

“மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு சட்ட சபைக்குள் செல்பவர்களின் கடமை என்ன? என்பதை விளக்கி எழுதினேன்” என்றார்.

ஜெர்மன் அரசின் சுயேச்சதிகார அக்ரமத்தை, அதன் சுய ரூபத்தை மக்களுக்குப் புரியுமாறு விளக்கினேன். ஒரு பத்திரிகையின் நியாயமான கடமை எதுவோ அதைத்தான் எனது பத்திரிகையும் செய்தது.

நான் அவ்வாறு எழுதினேன் என்பதற்காக, ஓர் அரசு பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்க, அதன் குரல்வளையை தனது அதிகாரத்தால் நெறிக்கும் போது என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அத்தகைய ஒரு பத்திரிகை ஆசிரியனாக இருப்பதை விட சும்மா இருப்பதே சுகம்” என்று கூறினார் மார்க்ஸ் அவர்களிடம்.

பத்திரிகை பணம்
பறிக்கும் கருவியா?

“பத்திரிகையைப் பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாக, வேறொரு வியாபாரத்தை விரிவு படுத்திக் கொள்வதற்கான ஒரு துணையாகப் பயன்படுத்தக் கூடாது”

“எந்த ஒரு பத்திரிகையும் தனது இலட்சியத்தைக் கைவிடக்கூடாது. வியாபாரத்தில் இறங்கி விடுகிற எந்தப் பத்திரிகையும் சுதந்திரமாக இருக்க முடியாது”

“பத்திரிகை ஆசிரியன் பணம் சம்பாதிக்க வேண்டியது தான். எதற்காக சம்பாதிக்க வேண்டும்? உயிர் வாழ்வதற்காக சம்பாதிக்கலாம். தொடர்ந்து எழுதுவதற்காக பத்திரிகை இருக்க வேண்டுமே, அதற்காகவும் பணம் சம்பாதிக்கலாம். ஆனால், பணம் கொள்ளை அடிக்கவும், சுயநல வாழ்க்கையை விருத்தி செய்து கொள்வதற்காகவும் பத்திரிகையை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது”

“எவன் ஒருவன் பணம் கொள்ளை அடிக்கப் பத்திரிகையைப் பயன்படுத்துகிறானோ, அவன் தண்டிக்கப்பட வேண்டியவன். ஏனென்றால், அவன் வணிக நோக்கங்களுக்கு அடிமையாகி விடுகிறான்” என்ற பத்திரிகை இலட்சியங்களைக் கொண்டவர் மார்க்ஸ். அதனால்தான் எனது ஆசிரியர் பதவியை விட்டு விலகினேன்” என்றார். அவர் ஆசிரியர் பதவியை விட்டு விலகியதும் விற்பனைக் குன்றியது. பிறகு பத்திரிகை நிறுத்தப்ப்ட்டு விட்டது.

நிறுத்தப்பட்ட பத்திரிகையை பற்றி அவர் ஒரு மேடைப் பேச்சில் மக்களுக்கு விளக்கம் தந்தார். அந்தப் பேச்சு இது :

“ஒரு பத்திரிகை நின்று விட்டது என்றால் என்ன பொருள்? சுயமாகச் சிந்திப்பவர்களுக்கும், மக்களுக்காகப் போராடுகிறவர்களுக்கும் இனி ஜெர்மனியில் இடம் கிடையாது என்பது தானே?”

“மக்களுக்கு அவர்களுடைய நிலைமைகளை எடுத்துக் கூற வேண்டும் என்றால், மக்களோடு பத்திரிகை எராளமாகப் பேச வேண்டாமா? அவ்வாறு பேசிட உரிமை வேண்டாமா?”

“அந்த உரிமை இல்லையென்றால் மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறிக் கொள்வதில் என்ன பயன்?”

“ஓர் அரசின் தயவில் இருந்து கொண்டு மக்களுக்காக உழைக்கிறோம் என்பதெல்லாம் வெறும் பாசாங்கு! ஏமாற்று வித்தை!” என்றெல்லாம் சற்று விரிவாகவே முழக்கமிட்டார் மார்க்ஸ்.

வேறொரு மேடையிலே பத்திரிகைச் சுதந்திரம் பற்றி மார்க்ஸ் பேசும்போது :

“பத்திரிகைக்கு சுதந்திரம் வழங்குகிறோம் என்று ஓர் அரசு கூறிக்கொண்டு, அதனை வளரவிடாமல், அரசைத் தட்டிக் கேட்க உரிமை வழங்காமல், கீழறுப்பான் வேலைகளைச் செய்வது மகா கேவலம்; வெளி வேஷம்; முட்டாள் தனம்!

“மிருக பலத்தைக் கையாளல், பத்திரிகையைத் தலை வணங்க வைத்தல், பல் இளிக்க வைத்தல், முதுகை வளைந்து கொடுக்கச் செய்தல், குதர்க்கமாகப் பேச வைத்தல் போன்றவற்றுக்காக ஒரு பத்திரிகை அஞ்சக் கூடாது”

“இவற்றையெல்லாம் பார்த்து நான் சலித்து விட்டேன். ஜெர்மன் அரசு என்னை ஆசிரியர் பொறுப்பிலே இருந்து விடுதலை செய்து விட்டது. இனி நான் ஜெர்மனியிலே செய்யக் கூடியது ஒன்றுமில்லை. அப்படி ஒருவன் ஜெர்மனியிலே இருக்க வேண்டுமானால், அவன் தனக்குத் தானே பொய்யனாக நடந்து கொள்ள வேண்டும்” என்று கர்ஜித்தார்.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு தான் மார்க்ஸ், கீழ் மட்டத்தில் நலிந்து கிடக்கும் ஏழை மக்கள், தொழிலாளர்கள், பொருளாதாரத்தின் மீதுதான் அரசியல் வாழ்வு கணிக்கப்படுகிறது என்பதைத் திட்டவட்டமாக உணர்ந்தார்.

எந்த ஒரு தத்துவமும் மக்களுடைய தொடர்பு பெறாவிட்டால், அதனால் நாட்டுக்கு எந்தவித பயனுமில்லை என்பதைப் புரிந்து கொண்டார்.

இதற்குப் பிறகுதான் ஏழை மக்கள் பொருளாதாரத்தைச் சீரழிப்பது எது? என்று மார்க்ஸ் ஆராய்ந்தார்.

இரும்பு பிடித்தவன் கையும், சொரி பிடித்தவன் கையும் சும்மா இராது என்பதற்கேற்ப, மார்க்ஸ் தனது நண்பர் ஆர்னால்டு ரூஜ் என்பவரின் உதவியோடு பாரீஸ் நகரிலே இருந்து ‘ஃபிரெஞ்சு மலர்’ என்ற பத்திரிகையைத் துவக்கினார்.

‘ஃபிரெஞ்சு மலர்’ 1844-ஆம் ஆண்டில் வெளி வந்தது. அதில் ஜெர்மன் கொடுங்கோல் ஆட்சி பற்றியக் கட்டுரை ஒன்றை மார்க்ஸ் எழுதினார் என்பதற்காக, அந்தப் பத்திரிகையை ஜெர்மன் நாட்டுக்குள்ளேயே, நுழைய விடாமல் தடை செய்துவிட்டது ஜெர்மன் அரசு.

அதற்குப் பிறகு பாரீஸ் நகரிலே இருந்து வெளிவந்த கொண்டிருந்த ‘முன்னேற்றம்’ என்ற பத்திரிகையிலே மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதினார். அவை ஒவ்வொன்றும், அரசர்ககள் கடவுளின் பிரதிநிதிகள் என்ற பாமரர்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறியும் அணுகுண்டுகளாக இருந்தன. ஜெர்மன் மன்னன் நான்காம் ப்ரடெரிக் வில்லியம் என்பவனைப் பிற்போக்குவாதி என்று அந்தக் கட்டுரைகள் விமர்சனம் செய்தன.

அரசு அதிகார அம்புகள் மார்க்ஸ் மீது பாய்ந்தன. பாரீஸ் நகரத்தை விட்டே ஓட வேண்டும் என்று ஃபிரெஞ்சு அரசு உத்தரவிட்டது. உடனே மார்க்ஸ் பெல்ஜியம் நாட்டிலுள்ள ப்ரசெல்ஸ் நகருக்கு ஓடினார்.

பத்திரிகை ஆசிரியர் சுதந்திரத்தைக் காக்கவும், மக்கள் உரிமைகளை அரசுக்கு எடுத்துக் கூறவும், மாவீரன் கார்ல் மார்க்ஸ் சொல்லொணா வேதனைகளை அனுபவித்து வாழ்ந்து காட்டிய மேதை ஆவார்.

அவர் பத்திரிகைத் துறைக்கு ஒரு குரு, முன்னோடி, வழிகாட்டியாக உலகுக்குத் திகழ்ந்தவராவார்.

புலவர் என்.வி. கலைமணி