இதழியல் கலை அன்றும் இன்றும்/பத்திரிகை ஓர் அறிமுகம்

விக்கிமூலம் இலிருந்து

1
பத்திரிகை ஓர் அறிமுகம்

ன்னன் கோல் எடுத்தால் - அது செங்கோல்!

கன்னன். கோல் எடுத்தால் - அது கொடைக்கோல்! கொடை மடம்கோல்; அறக்கோல்!

சிற்பி உளி ஏந்தினால் - அது - சிற்பக்கோல்! கல்லோவியக் கலைக்கோல்!

இடையர் கோல் எடுத்தால் - அது, குத்துக்கோல்! மேய்ப்பர் கோல்!

சித்திர வித்தகன் கோல் எடுத்தால் - அது, துரிகைக் கோல்! ஓவியக் கோல்!

குருடன் கோல் எடுத்தால் - அது விழிக்கோல் - வழிக்கோல்!

கதவைத் தாழிட இல்லாள் கோல் எடுத்தால் - அது பூட்டுக்கோல்! திறவுக் கோல்!

காவி உடைக்காகத் தீட்சைப் பெற்றவன் கோல் எடுத்தால் - அது துறவுக்கோல்! சந்நியாசக் கோல்!

அறிதோறும் அறியாமை கண்டுணர அறிஞர்கள் கோல் எடுத்தால் - அது அறிவுக்கோல்! ஞானக்கோல்!

மனக்கோலை மங்கையர் அகமும் - புறமும் வளைத்து - நெளித்து, நெருஞ்சி முள் ஆசையால் குத்தினால் - அது, நாணக்கோல்! 

நீதியின் முன் எல்லாரும் சமம் என்றிட; நீதிதேவன் கோல் எடுத்தால் - அது, நியாயக்கோல் - துலாக்கோல்!

எண்ணங்களை ஆட்சி செய்திட எழுத்தாளர்கள் கோல் எடுத்தால் - அது, எழுதுகோல்!

இவ்வாறு எண்ணற்றக் கோல்கள் - சிந்தனைக் கோல்களாய் கணிதக் கோல்களாய் இந்த வியனுலகில் தோன்றினாலும், அவற்றை விளக்கி வியந்திட இந்த நூல் இடம் தராது என்பதால் அவற்றை இங்கே சுட்டிக் காட்டிட முடியவில்லை - நூல் விரியும் என்பதால்!

அரசு அலுவலகங்களில் அல்லது தனியார் நிறுவனங்களில் எழுத்துத் துறையிலே பணியாற்றுபவரை நாம் எழுத்தர் அல்லது எழுத்தாயர் (Clerk) என்று கூறுகின்றோம். அலுவலகக் கடிதப் போக்குவரவு வரையாளர் அவ்வாறு பணிபுரிவதால்; அவரை எழுத்தாளரென அழைக்கின்றோம்.

ஆணாக அவர் இருந்தால் அந்தப் பதிவக அலுவலரை கிளர்க் என்கிறோம். அதே பணிகளைச் செய்பவர் ஒரு பெண்ணாக இருந்தால், அவரை Clerkess என்று ஆங்கிலத்திலும், தமிழில் எழுத்தி என்றும் குறிப்பிடலாம்.

எழுத்தரின் இயல்புக்குரிய போதிய கல்வி அறிவற்றவராக ஓர் எழுத்தர் பணிபுரிவாரானால், அவரை “Clerk’ Less என்றும், அதே எழுத்தர் பணியில் ஒருவர் புலமை சான்றவராகப் பணிபுரிந்தால் அவரை Clerk - Like புலமை எழுத்தர் என்றும் இங்லீஷ் மொழியில் சுட்டுகின்றோம்.

எது எவ்வாறு இருந்தாலும் எழுத்துக்களை பதிவக அலுவலகத்தில் பதிவு செய்பவரை ‘எழுத்தர்’ என்றுதான் பொதுவாகக் குறிப்பிடுகின்றோமே ஒழிய, அவரை எழுத்தை ஆட்சி செய்யும் ஓர் எழுத்தாளர் என்று எவரும் அழைப்பதில்லை. என்ன காரணம் இதற்கு?

ஆங்கிலத்தில் writer என்ற ஒரு சொல் உண்டு. ஏறக்குறைய அது எழுத்தர் என்ற சொற்பொருளையே உணர்த்துவதாக இருந்தாலும், எழுத்தை உருவாக்கி, இலக்கியம் வடிவங் கொடுத்து; எழுத்துக்கள் மூலமாக ஒரு செய்தியை விளக்கி விரித்துரைக்கும் தகுதிகளோடு - அந்த எழுத்துக்கள் எழுதுபவரால் ஆளப்படுவதால், எழுத்துக்கள் ஒரு கருத்து வடிவமாக ஆட்சி செய்யப்படுவதால்; அந்த ‘ரைட்டர்’ (writer) என்ற பெயர்ச் சொல்; எழுத்தாளர் - நூலாசிரியர் - எழுத்து முறைகளைக் கற்பிக்கும் கையேட்டாளர் என்ற தகுதிகளைப் பெற்றதால் - அந்தச் சொல்; எழுத்துக்களை ஆட்சி செய்கின்ற எழுத்தாளர் என்ற பெருமையோடும் புகழோடும் அறிவு உலகத்திலே வலம் வருகிறது.

அந்த எழுத்துகள்; எழுத்தாளர் என்ற தொழிலில் வளத்தோடும், நலத்தோடும், பலத்தோடும் அறிவாட்சி செய்வதால், அவை ‘ரைட்டர்ஷிப்’ (writership) என்ற எழுத்தாண்மைப் பெருமையைப் பெற்று, உலகத்தை உலுக்கி, உற்சாகப்படுத்தி, புரட்சியை உருவாக்கி, இறுதியில் அறிவு மணம் கமழும் தென்றலாகவும் வீசுகின்றன.

இத்தகைய எழுத்தாளர்கள், செயல், எழுத்துத் திறன், எழுத்துக் கலை, இலக்கியப் படைப்பு, ஏடாக்கம், இலக்கியப் பத்திரிகை, இலக்கிய, பொருளாதார, அரசியல், அறிவியல் சார்ந்த நூற்கள், கட்டுரைகள், கவிதைகள், எழுதப்பட்ட வரலாறுகள், ஆவணங்கள், ஓர் இனத்தின், சாம்ராச்சியத்தின், பண்பாடு, நாகரிகங்களின் வீழ்ச்சிகளையும், எழுச்சிகளையும், உணர்ச்சிகளையும், புரட்சிகளையும், முன் கூட்டியே அறிவிக்கும் நிகழ்ச்சிகளாக உலகத்தில் இன்றும் நடமாடி வருகின்றன.

இதைத்தான் கி.பி. 1694 முதல் 1778 வரை வாழ்ந்த பிரெஞ்சு நாட்டுப் பேனா முனை புரட்சிவாதியான வால்டேர் (voltaire), “வாளின் வலிமையை விட எனது பேனா முனை கூர்மையான பலம் வாய்ந்தது. எனது எழுதுகோல் ஒரு கொடுங்கோல சாம்ராச்சியத்தையும் அழிக்கும். ஒரு செங்கோல் ஆட்சியையும் உருவாக்கும்” என்றான்.

அவனது பேனா முனை தான்; உலகிலே சமையப்பற்றின்மை, சமைய நிலை, ஐயப்பாட்டு வாதக் கோட்பாட்டை உருவாக்கி; பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்கு விதை போன்று விளங்கியது.

வால்டேர், ரூசோ, மான்டெஸ்கியூ போன்ற எழுத்துலக அரிமாக்கள் ஏந்திய எழுதுகோல்களின் அற்புதங்கள், அந்தந்த நேரங்களில் உலகையே உலுக்கின என்றால், அவை வரலாறு படித்தோருக்கு நன்கு புரியும்.

வியக்கத்தக்க வகையில் இன்று பத்திரிகை எழுத்துக்கள் உலகில் பரபரப்பூட்டி வருவதற்கு அவர்களைப் போன்ற பலர் காரண கர்த்தாக்களாக விளங்கி வருகிறார்கள்.

பத்திரிகை என்று
பெயர் வந்ததது ஏன்?

‘பாஸ்வெல்’ என்ற இங்கிலாந்து எழுத்தாளர், 1785-ஆம் ஆண்டில், “The Journal of a Tour to the Hebrides” என்ற நூலை எழுதினார். பாஸ்வெலும், டாக்டர் ஜான்சன் என்ற இருவரும் ஸ்காட்லாந்து நாட்டைச் சுற்றிப் பார்த்திட கி.பி. 1773-ஆம் ஆண்டில் பயணம் செய்தபோது எழுதப்பட்ட நூல் அது.

பாஸ்வெல் எழுதிய அந்தப் பயணக் கையேட்டுக் குறிப்பை; டாக்டர் ஜான்சனும் மற்றவர்களும், படித்து முடித்திட காலதாமதமானது என்பதால், அந்தப் பயணக் குறிப்புக்களைச் ‘சுற்றுப்பயணம்’ (Tour) என்ற பெயரில் அவர்கள் அதைப் புத்தகமாக வெளியிட்டார்கள். அந்த நூலைத்தான் இங்கிலாந்து நாடு முதன் முதலாக “Journal” என்று குறிப்பிட்டது.

இங்கிலாந்து நாட்டில் அடிக்கடிக் கொள்ளை என்ற நோய் உண்டாகி; மக்கள் ஒழுக்க முறை அழிவுக்கேடுகளுக்கு மூலகாரணமாகப் பல செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றைப் பெரிய அளவில் தொகுக்கப்பட்ட சம்பவங்களடங்கிய தொகுதிக்கு “Journal of the Plague Year” “கொள்ளை நோய் ஆண்டின் நாட்குறிப்புச் சுவடி” என்று பெயரிடப்பட்டது. இந்த நூல் பெயரும் ஜெர்னல் என்ற வகையில் சேர்க்கப்பட்டது.

பொதுவாகவே, ஜெர்னலிசம் Journalism என்ற இங்லீஷ் மொழிச் சொல்: டயர்னல் Diurnal என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது என்று மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த இங்லீஷ் வார்த்தையை நம்மவர் இதழியல் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

“Brewer’s Dictionary, Phrase Fabule” என்று இலண்டனில் வெளியிட்டுள்ள அகராதியில் “Journal Applied to News Papers, the word strictly means a daily paper. But, the extension of the term to weekly and other periodicals is sanctioned by custom.”

‘டையர்னல்’ என்ற பண்டைய இலத்தீன் மொழிச் சொல், “செய்தித்தாள் என்ற பெயரின் செயல்முறைச் சார்பு கட்கும், ஜர்னல் என்ற அந்தச் சொல், நாளேடுகளைக் குறிக்கும் சொல் என்றும், ஆனால்; தன் பருவப்பொழுதைச் சற்று விரிவுப்படுத்தும்போது வாரப் பத்திரிகைகளுக்கும் மற்றும் பருவ வகை பத்திரிக்கைளுக்குமுரிய மரபு ஆகவும் அனுமதிக்கப் பட்டிருக்கிறது” என்பதைப் ப்ரெவர்ஸ் என்ற ஆங்கில அகராதி; ஜெர்னல் என்றால் பத்திரிகை வகை மரபுக்குரிய ஒரு பெயர் என்பதைத் திட்டவட்டமாக விளக்கிக் கூறியுள்ளது.

“Journal a daily record, as of occurences, experiences, or observations.

A Register of the daily transactions or observations or a public; or legislative body”.

“The serials devoted to learned socialies and professions, A News paper, Magazine, or the like, Book keeping, a day book in double entry journalism. One engaged in Journalism, used more widdly in England, than united states.

- [The Modern Library Dictionary of English Language.]

ஒரு Journal, அதாவது ஒரு பத்திரிகையின் இலக்கணத்தை, அதன் கடமையைக் கூற வந்த இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக் கழகத்தின் “மார்டன் டிக்‌ஷனரி”:

“ஜர்னல்” என்றால் ஒரு நாட்குறிப்பு, ஆவணம், தினந்தோறும் உலகில் நடைபெறும் சம்பவங்களின் குறிப்பு, தொழில் கணக்கு முறையில் நடைபெறும் அன்றாட அனுபவங்கள், அந்தந்த நிகழ்ச்சிகளின் அல்லது சம்பவக் காட்சிகளின் கூர்நோக்கு அறிவு, தினசரி தொழில் நடைமுறைகள், உலக நாடுகளில் நடைபெறும் வணிக நடவடிக்கைகள், சமுதாயத்தில் பாதிக்கப்படும் சட்ட உரிமை பாதிப்புகள், பொது மக்களிடம் நாள்தோறும் நடைபெறும் காட்சிகளின் நுட்பங்களை உற்று நோக்கும் அறிவுத் திறன் அல்லது சட்டமன்றச் சம்பவங்களின் நிகழ்ச்சிகள், நாடாளுமன்றம் - நீதிமன்றம், மருத்துவமனைச் சம்பவங்கள், ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் நடைபெறும் அன்றாட மக்கள் நலன் பணிகளின் நிறை-குறைகள் போன்றவற்றை வெளியிடும் ஒரு குறிப்பேட்டின் தொகுப்புக்கு ஜெர்னல் என்ற பெயர் என்று கூறுகின்றது அந்த டிக்‌ஷனரி.

“கற்றறிந்த, அறிவு வளம் நிரம்பிய, சமுதாயத்தில் ஒன்றிணைந்து கூடி வாழ்கின்ற மக்களது அன்றாட வளர்ச்சிக்காக; வாழ்க்கையையே தொழிலாகக் கொண்டவர்களுக்குரிய செய்தித் தாளாக, போர்க் காலத்தில் செருமுனைக்குரிய ஆயத்த ஆயுதங்களைச் சேர்த்து வைக்கும் பாசறைகள் போல, பல எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கிய ஒரு பருவ இதழ்ச் சுவடியாக அல்லது தினப் பத்திரிகை போன்ற, ஒரு நாட்குறிப்பு ஏடாக, இரட்டை எண்ணிக்கை முறையில் வெளி வருவதுதான் ஜர்னல் என்பதின் இலக்கணம்.

அந்தப் பத்திரிகையில் அன்றாடம் வெளிவரும் ஒவ்வொரு கணக்கும், படிப்பவர் நெஞ்சில் இருமடியாகப் பதிய வைக்கும் கணக்காண்மை முறையில் அமைந்திருக்குமாம் ‘ஜர்னல்!’.

அந்த இருமுறை - அதாவது Double Entry முறை என்பவை - என்னென்ன தெரியுமா?

அவற்றுள்ள ஒன்று ஜெர்னலிசம் என்ற பத்திரிகை அமைப்புக் கொள்கையோடு கிரேட் பிரிட்டன் நாட்டை வலம் வரும் ஏடாம். மற்றொன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பரவி வளர்ந்த கணக்காண்மை முறை இதழாம்.

எனவே, டையர்னல் என்ற இலத்தீன் மொழிச் சொல்லுக்கு “அன்றன்று” என்று பொருள். அதனால் ஜர்னல் என்பதற்குச் சரியான உட்பொருள் - தினந்தோறும் நாட்டில் நடப்பதை எழுதி வைக்கும் பத்திரிகை, ஓர் ஆவணம் என்றே ஆங்கில அகராதிகள் நமக்கு அறிவிக்கின்றன.

ஆனால், “தமிழ் இதழ்கள் தோற்றம், வளர்ச்சி” என்ற நூலில், அ.மா. சாமி எனும் பத்திரிகையாளர், ஜர்னல் என்றால் ‘இதழ்’ என்று கூறுகின்றார். தமிழ் அறிஞர்கள் அந்தச் சொல்லையே நாளடைவில் ‘பத்திரிகை, செய்தித் தாள்’ ‘தாளிகை’ என்று குறிப்பிட்டார்கள். மேற்கண்ட சொற்களில் ‘தாளிகை’ என்ற சொல்லைவிட ‘பத்திரிகை’, செய்தித் தாள் என்ற பெயர்களே மக்கள் மன வானில் விண்மீன்களாக ஒளிர்ந்தாடிக் கொண்டிருக்கின்றன.

“மேகசின்” என்ற
பெயர்க் காரணம்

பத்திரிகையை ஜெர்னல் என்றும், ஜெர்னலைப் பத்திரிகை என்றும் அகராதிகள் ஏன் குறிப்பிட்டன என்ற காரணத்தை, விளக்கத்தை இது வரைப் பார்த்தோம்.

அதே பத்திரிக்கைக்கு ‘மேகசின்’ (Magazine) என்ற பெயர் உருவானது ஏன்? மேகசின் என்ற இங்லீஷ் சொல்லுக்குப் படைக்கலப் பாசறை, போர்க் காலத்தில் படைக்குரிய ஆயுத தளவாடங்களையும், கருவிகளையும் சேர்த்துப் பாதுகாப்பாக வைத்திருக்கும் இடமாகும். துப்பாக்கிகள், அதற்குரிய வெடி மருந்துகளைக் குவித்து வைத்திருக்கும் இடம் என்பவை பொருள்.

அதனைப் போலவே, பத்திரிகை வகைகளில் ஒன்றான, பருவ இதழ்ச் சுவடிகளில் பல அறிஞர்களின், எழுத்தாளர்களின் அரிய பல கட்டுரைகள், அடங்கி - அடக்கி அல்லது குவிக்கப் பட்டிருக்கும்.

அத்தகைய எழுத்துப் புதையல்களை, அந்தப் பருவ இதழ்கள் போர்ப் பாசறை ஆயுத தளவாடங்களைப் போல பெற்றிருப்பதால், அந்த வெளியீடுகள் மக்களது அறியாமைப் பகைகளை, விரோதிகளை விரட்டியடிக்கும் பண்பு பெற்ற பத்திரிகைகள் பருவ வெளியீடுகள் என்பதால்; அவற்றை இங்லீஷ் மொழியில் Magazine என்று குறிப்பிட்டார்கள்” என்று தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள “ஆங்கிலம் - தமிழ் சொற் களஞ்சியம்” கூறுகின்றது.

Magazine என்ற சொல்லுள் உள்ள முதல் நான்கு எழுத்தான Mega ‘மெக’,என்பதிலே உள்ள Aவுக்குப் பதிலாக E, என்ற எழுத்துச் சேர்வதால்; அதே ஓசையுள்ள Mage என்ற சொல்லுக்கு அறிஞர்கள், அறிவர்கள், புலவர்கள், மேதைகள், மாயாவிகள் என்ற பல பொருட்கள் உள்ளன.

மேற்கண்ட பொருட்களுக்குரிய மேன்மக்களது அறிவைப் போற்றுவதும், ஏற்பதும், புகழ்வதும், பாராட்டுவதும், மாயாவி போல மக்கள் இடையே காட்சிப் பொருளாய் மாறிமாறி அற்புதங்களை ஆற்றுவதும், பரப்புவதும் போல, மேகசின்கள் ஒவ்வொன்றும் - அதனதன் பருவக் கூறுகளுக்கு ஏற்ப அந்தப் பத்திரிகைகளும் அரும்பாடுபட்டு உழைப்பவை என்பதால் - அவற்றுக்கு ‘மேகசின்’ என்று மேல் நாட்டார் பெயரிட்டார்கள்.

எப்போதும் வடதிசையினையே காட்டும் மேக்நெட்டிக் காந்த ஊசி முனை போல, மேகசின் என்கின்ற பருவ கால பத்திரிகைகளும், எப்பொழுதும் மக்கள் நலன் மீதும் அவர்களிடம் அறிவொளியை இயக்குவதிலுமே அவை நாட்டமாக நடமாடும் ஏடுகளாகும்.

அந்த ஏடுகள் அவ்வாறு தங்களது பருவ கால எழிலோடு இயங்கும்போதுதான் - அவற்றின் அழகுகள், கவர்ச்சிகள், செய்திகளின் வசிய வித்தைகள், மனித அறிவைப் பற்றும் காந்தக் கல் அற்புதங்களாக இயங்குகின்றன. இன்றும் பல பருவ ஏடுகள் அந்த அழகு மேனிக் கவர்ச்சிக் கலை நயங்களோடு இயங்கிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கின்றோம் இல்லையா?

எடுத்துக்காட்டாக பொள்ளாச்சித் தொழிலதிபர் திரு. நா. மகாலிங்கம் நிறுவனத்திலிருந்து வெளிவரும் ஓம் சக்தி, கோவை கலைக்கதிர், கலைமகள், அமுத சுரபி, உண்மை, தாமரை, முத்தாரம் போன்ற சில பருவ இதழ்களைக் கூறலாம்.

பத்திரிகைத்
துறை பணிகள்

மனித சமுதாயத்தின் இடைக் காலந்தொட்டு இன்று வரையிலும், மக்களது உணர்ச்சிப் பெருக்காக, கொந்தளித்தோடும் எண்ணப் பிரவாகமே பத்திரிகை!

மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை, அரசியல் கலையை, பண்பாட்டை, நாகரிகத்தை, கல்வியியலை, பொருளாதாரப் பெருக்க வழிகளை, காலத்திற்கும், கருத்திற்கும், உணர்ச்சிகளுக்கும், எழுச்சிகளுக்கும், முயற்சிகளுக்கும், புரட்சிகளுக்கும் ஏற்றவாறு இன்பச் சுவைகளையும், துன்பச் சுவைகளையும் ஏற்றி அறிவுறுத்தும் வாழ்க்கைக் கலையே பத்திரிகையின் செயல்முறைகளாகும்.

இலக்கியம் ஒன்றை உணர மக்களது இதய உனாவுகளான குணங்களை, சுபாவ-பாவங்களைப படிப்பவன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் போல, பத்திரிகைப் படிப்போருக்கும், அதை நடத்துவோருக்கும் அவற்றுக்குரிய பயிற்சித் தடங்களை, சுவடுகளை அறிந்திருக்க வேண்டிய அவசியமும் தேவை.

இத்தகையப் பத்திரிகைகளைப் படிக்கும் மக்கள், அவரவர் எண்ணங்கள், தேவைகள், விருப்பங்கள், அன்றாட இதழ்களிலே வெளிவந்துள்ளனவா என்று பார்த்து, ஏக்க உணர்வுகளோடு ஊஞ்சலாடிக் கொண்டிருப்பார்கள்.

பத்திரிகைகளிலே வரும் துன்பச் சம்பவங்களைக் கண்டால் துவள்வர்; இன்ப நிகழ்ச்சிகளைப் பார்த்தால் மகிழ்வில் உழல்வர்; வெறுப்பூட்டும் உணர்வுகளை அறிந்தால் வெதும்புவர்; கட்சிக் கருத்துகள் வெளியானால் களிகொள்வர்; இந்தப் பண்புகளைப் பத்திரிகைகள் தினந்தோறும் மக்கள் இடையே உருவாக்கிக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

மக்களது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து வரும் காதல், திருமணம், கூத்து, குறை கூறல், நிறை பாராட்டல், போர்த் தொடுத்தல், மக்கள் விபத்துக்களால் மாளல், சீமான்களது ஆடல் பாடல், பணக்காரர்களது படாடோபப்பகட்டுகள்; விவசாயம் புரிவோர் குறை நிறை சம்பவங்கள், தண்ணீர்க் குடங்களை ஏந்தி அலையும் தளிர்மேனியர், பள்ளி மாணவ மாணவியர்களது பாட்டு, ஆட்டங்கள், கிராம மக்கள் இடையே நடைபெறும் தெம்மாங்கு, பறையறை சம்பவங்கள்; கல்விமான்களது உரையாடல், கவியரங்கம், பட்டிமன்றம்; திருவிழாச் சம்பவங்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள், வானொலி-தொலைக் காட்சிச் செய்திகள்; வம்படி வழக்குகள், நீதிமன்றம், காவல் துறையினர், ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி கடமைகள், மருத்துவ மனைத் துன்பங்கள், இன்பங்கள், முடிதிருத்துவோர், சலவையாளர், கொல்லன், கொத்தன் ஆகியோரின் வருவாய் அவலங்கள் ஆகிய பிற சம்பவங்களை எல்லாம் பத்திரிகைகள் அன்றாடம் சுமந்து வந்து மக்கள் இடையே காட்சிப் பொருள்களாக்குவதே அவற்றின் கடமைகளாக இருக்கின்றன.

எனவே, பத்திரிகைகள், செய்தித் தாள்கள், நாளேடுகள் தினந்தோறும் அவற்றை மக்களிடையே கொண்டு வந்து குவிக்கும் வாழ்க்கைக் கலையின் சுரங்கங்களாகப் பணியாற்றுகின்றன எனலாம்.

அதனால், பத்திரிகைகளை வெறும் கற்பனைத் தாள்கள் என்று மட்டும் கூற முடியாது. ஏதோ வாய்மொழிகளாக வந்து குவிந்த ஏடுகளல்ல. பத்திரிகைகள் உண்மைச் செய்திகளை, அந்தந்த ஊர் மக்கள் செயல்களிலே முளைவிட்டு வெளியேறி தலைக்காட்டும் எண்ணங்கள் வழியாகக் கண்ட கேட்ட உணர்ச்சிகளை, நிகழ்ச்சிகளை மக்கள் அறிய வேண்டும் என்ற ஆர்வப் பெருக்கோடு, ஊரறிய, உலகறிய எடுத்துக் கூறும் ஒரு விஞ்ஞானச் செய்திக் கருவிதான் பத்திரிகை!

மக்கள்கவி பாரதியார் பாடியது போல; ‘கலைமகளின் கொள்ளிடம் மட்டுமன்று பத்திரிகை; மக்கள் சக்திதான் அதன் பிறப்பிடமும் என்ற எண்ண வடிவுக்கேற்றவாறு, பத்திரிகை மக்களுக்காக, மக்களைச் சுற்றி வட்டமிடும் கழுகுப் பார்வையோடு பறக்கும் பண்புமுடையதாகும்’ என்றார். அந்த கழுகு நோக்கு பத்திரிகைகளுக்கு இன்றும் அமைந்துள்ளது.

பத்திரிகையாளர்களது இந்த நோக்குகள், அறிவியல் தொடர்பானதாகவும், கலையியல் சார்பானதாகவும் அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால், கண்களால் காண முடியாத காரியங்களை அறிவியல் நம்பாது. காண இயலாதவற்றைப் பற்றிய ஆய்வையும், தேடுதலையும் செய்வதுதான் விஞ்ஞானத்தின் வித்தகம்.

ஒரு துளி இரத்தத்தைச் சோதிக்கின்ற அறிவியல் ஆய்வாளன்; அதிலுள்ள நீர் எவ்வளவு? உப்பு எவ்வளவு? அழுக்கு எவ்வளவு? என்ற கணக்கிலே ஈடுபடுவான்.

அந்த இரத்தம் கெட்டுப் போனது ஏன்? என்ற வினாவை எழுப்பி அதற்கு விடை காண்பான் உடற்கூறு மேதை.

இரத்தம் கெட்டு விட்டது என்றால், அதில் சுத்த இரத்தம் எவ்வளவு? அசுத்த அளவு எவ்வளவு? என்று ஆய்வான் மருத்துவன்.

எப்போது ரத்தம் கெடுகின்றது என்றே சிந்திப்பான் மனோ தத்துவஞானி. ஆனால், தத்துவஞானி என்ன செய்வான் தெரியுமா? அந்த இரத்தம் அசுத்தமானதற்கு என்ன காரணம் என்றே எண்ணுவான், ஆராய்வான்.

எனவே, காரண காரியங்களை ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி, அவற்றை ஒழுங்குமுறையிலே ஆய்ந்து விஞ்ஞானம் விடை விளக்கம் அளிப்பதைப் போல, பத்திரிகையாளனும் நாட்டுப் நடப்புகளை, சமுதாய நிறைவு-குறைவுகளைச் சீர்ப்படுத்தும் உண்மைகளைத் திரட்டி மக்கள் முன்பு வைப்பதோடு நில்லாமல், அவற்றை ஆய்ந்து, தொகுத்து, முறைப்படுத்தி, நல்லது-கெட்டதுகளை வகைப்படுத்திக் கூறுவதும், செய்தியாக வெளியிடுவதும் பத்திரிகையாளர்களின் பணிகளாகும். இவ்வாறு செய்யும் பத்திரிகைகளால்தான் நாடும் நலமுறும். மக்களும் வளம் பெற்று வாழ்வர்!

இங்கிலாந்து ஆட்சியை இந்தியாவிலே வளமாக வேரூன்றச் செய்ய வேண்டும் என்ற வேட்கையால், இங்லீஷ் மொழியை மக்கள் கல்வியில் திணித்து, அதை ஆங்கிலேயருக்கு குமாஸ்தா வேலையைச் செய்ய வைக்கும் கருவியாக்கிய லார்டு மெக்காலே பிரபு, 1828-ஆம் ஆண்டில் ஓர் அரசியல் நிர்ணய வரலாற்றை எழுதினார்.

அந்த மெக்காலே பிரபுதான் பத்திரிகையாளர்களுக்கு புது மரியாதையை, மதிப்பை அந்த ஆட்சியிலே உருவாக்கினார். அதாவது, பத்திரிகையாளர்களை அரசாங்கத்தின் நான்காவது தூண் (Fourth Pillar) அதாவது Estate என்று கூறிக் கெளரவப்படுத்தினார்.

மெக்காலே பிரபுவுக்குப் பிறகு வந்த எட்மண்ட் பர்க் என்ற இங்கிலாந்து பிரதமர், மெக்காலே குறிப்பிட்ட அந்த ‘நான்காம் தூண்’ என்ற தகுதிக்கு விளக்கமளித்தபோது, ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தில் Royalty என்ற அதிகாரம் வகிக்கும் அரச குடும்பம், ஒரு எஸ்டேட் என்றும், சமயத் தலைவர்கள், செல்வந்தர்கள் எனப்படுவோர் House of Lords பிரபுக்கள் சபையினர் என்றும், பொது மக்களால் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர், House of Common அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும், நான்காவதாக பத்திரிகை நிருபர்கள் அமர்ந்திருந்த Reportersகள் பகுதியைச் சுட்டிக்காட்டி, அதோ, அந்த நிருபர்கள் செய்யும் அரசியல் பணிதான் நான்காவது எஸ்டேட் என்று கூறிப் பெருமைப்படுத்திப் புகழ்ந்தார். அத்தகைய ஓர் அரசியல் வித்தகச் சிந்தனையாளர்களை நம்மால் இன்றும் மறப்பதற்கில்லை.

இந்தியா சுதந்திர உரிமை நாடாக உருப் பெற்றதற்குப் பிறகு, இங்கிலாந்து நாட்டு அரசியல் நிர்ணய வரலாற்றையே பெரும்பாலும் பின்பற்றி வருவதால், நமது மக்களாட்சியின் நாடாளுமன்ற நடவடிக்கைகளையே முதல் எஸ்டேட்டாகவும், அதன் நிர்வாகத் துறைகளை Executive இரண்டாவதாகவும், நீதித் துறையான Judicial-லை - இறைவன் தீர்ப்புக்குரிய முறை மன்றம் சார்புடையதை மூன்றாம் எஸ்டேட்டாகவும், பத்திரிகைத் துறையை நான்காம் எஸ்டேட்டாகவும் கருதி நாம் ஆட்சி நடத்தி வருகிறோம். இந்தியா உலகிலே மிகப் பெரிய ஜனநாயக நாடல்லவா? அதனால்-!