உள்ளடக்கத்துக்குச் செல்

இதழியல் கலை அன்றும் இன்றும்/பத்திரிகை நடத்துவது?

விக்கிமூலம் இலிருந்து


14


பத்திரிகை நடத்துவது எப்படி?


‘துக்ளக்’ சோ
விளம்பரம்

2005-ஆம் ஆண்டான இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் ‘துக்ளக்’ என்ற வாரப் பத்திரிகை ஆசிரியரான ‘சோ’ - ஒரு வழக்குச் சொல்லி; திரை உலகில் ஒரு நகைச்சுவை நடிகர். இனமான அரசியல் நடத்துவோரின் தொடர்பாளர்; அவர் முதன் முதலாகப் பத்திரிகை நடத்த விரும்பின நேரத்தில் :

சென்னை மாநகரில், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், ‘சோ’ பத்திரிகை நடத்தலாமா?” என்ற பெயரில் பொது மக்கள் கருத்தறிய, ஒரு வாசகர் வட்டத்தை நடத்தினார். ‘முரசொலி’ அடியார், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் அறந்தை நாராயணன், புலவர் என்.வி.கலைமணி மற்றும் சிலர் அதில் கருத்தறிவித்தார்கள்.

என்.வி. கலைமணி
கருத்துரை

“இன்றைய உலகில் பத்திரிகை நடத்துவது ஒரு சிறப்பான தொழில்தான். பத்திரிகை நடத்த ஏதோ பல்கலைக் கழகப் பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும் போலவும், அல்லது ஜர்னலிசம் Journalism படித்தவர்கள் மட்டும்தான் பத்திரிகை நடத்தத் தகுதியுடையவர்கள் என்பதைப் போலவும், ‘சோ பத்திரிகை நடத்தலாமா?’ என்று கூட்டம் போட்டுக் கேட்கிறார்.

இந்தக் காலத்தில் யார் வேண்டுமானாலும் பத்திரிகை நடத்தலாம். மதம், சாதி, இனப்பற்றுக்காக; வழக்குச் சொல்லி வாதாடும் குறிக்கோளோடு ‘சோ’ தனது பத்திரிகையை நடத்தாமல் இருந்தால், உண்மையாகவே அவர் பத்திரிகைத் தொண்டர்தான் என்று மக்களால் மதிக்கப்படுவார்.

‘சோ’ சினிமா நடிகர். அவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைப் போலத் தனது பத்திரிகையில் சமுதாயச் சீர்திருத்த இலட்சியங்களைப் பரப்புவாரா? அல்லது ‘துக்ளக்’ இன பண்புகளோடு தனது இன மானம் காக்க நடத்தப் போகிறாரா?

சோ : அப்போது எழுந்து குறுக்கிட்ட ‘சோ’, “கலைவாணர் சினிமாவிலே என்ன கிழித்துவிட்டார்?” என்று கோபமாகக் கேட்டார்.

கலைமணி : உடனே குறுக்கிட்டு, சினிமா நடிகனைக் கூத்தாடி என்று அருவருத்துப் பேசிய சமுதாயத்திலே, இன்று உம்மை இந்த மேடையிலே; சுயமரியாதையோடு, நடிகர் என்ற மரியாதையோடு பேச வைக்கும் சுயமரியாதையை இந்தச் சமுதாயத்தில் உருவாக்கியவர்களிலே கலைவாணர் ஒரு முன்னோடிக் கலைஞர் என்பதை நீர் நன்றியோடு உணரவில்லையா? என்றார்.

வாக்கு வாதங்கள் முற்றி அதிகமாகவே, தலைவர் எழுந்து, இப்போது அறந்தை நாராயணன் பேசுவார்’ என்றார்.

அறந்தை : தோழர் கலைமணி கருத்தை நான் ஆதரிக்கிறேன். ‘சோ’, தனது சாதிக்காக வாதாடாமல் பத்திரிகை நடத்துவேன் என்று இங்கே கூடியுள்ள மக்கள் எதிரே பிரமாண வாக்குமூலமாகக் கூறுவாரா? என்றதும் ஒரே கைத்தட்டல்!

கூட்டம் குழப்பத்தில் முடியும் நிலையில்; கூட்டத்தில் உணர்ச்சி கொந்தளிக்கவே, தலைவரே நன்றி கூறிவிட்டார்; கூட்டமும் கலைந்தது.

ஏன் இதை இங்கே சுட்டிக் காட்டினோம் என்றால், பெருந்தலைவர் காமராஜர் தனது பொது வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் விருதுநகர் நகராட்சித் தேர்தலிலே வேட்பாளராகப் போட்டியிட முயன்றபோது, விருது நகர் காங்கிரஸ் கட்சிச் செயற்குழுவில் “காமராஜ் நகர சபை தேர்தலிலே நிற்கலாமா? வேண்டாமா?” என்று கருத்துக் கேட்கப்பட்டது. யாரும் எதிர்ப்புக் கூறாமல் நிற்கலாம் என்ற முடிவு உருவாயிற்று. அதனால் காமராஜர் வேட்பாளரானார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருவர் வாக்களிக்க வேண்டுமானால், அவர் கல்வித் துறையில் பல்கலைக் கழகம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது நகராட்சிக்கு வரி கட்டக் கூடிய ஏதாவது சொத்து, இருக்க வேண்டும் என்பவை தேர்தல் விதிகளாகும்.

வேட்பாளர் காமராஜர் பெயரில் வரிகட்டக் கூடிய அளவுக்கு வீடோ, நிலமோ எதுவும் கிடையாது. அதனால் ஆட்சிக்கு வரிகட்டக் கூடிய நிலையில் அப்போது காமராஜ் இல்லாததால், அவர் நகராட்சித் தேர்தலிலே கவுன்சிலராகப் போட்டியிடும் தகுதியில்லை.

காமராஜருக்கும், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும் நண்பராக இருந்த விருதுநகர் சுப்பையா ஆசாரி என்பவர், உடனே பசும்பொன் கிராமம் சென்று காமராசரின் இக்கட்டான நிலையை உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார். காங்கிரஸ்காரரான முத்துராமலிங்கத் தேவர் உடனே எட்டு ரூபாயை அந்த ஆசாரியிடம் கொடுத்து, ஓர் ஆடு ஒன்றைக் காமராஜ் பெயருக்கு விலைக்கு வாங்கச் சொல்லி, அதைக் கால் நடைச் சொத்தாக்கி, அரசுக்கு வரிகட்டி, காமராசர் வேட்பாளராக நின்று வெற்றிபெற்று, நகரமன்ற உறுப்பினரானார்.

அதனைப் போல, ‘சோ’வும் பத்திரிகை நடத்தலாமா? என்ற கேள்வியை எழுப்பி, பத்திரிகை நடத்த, பல்கலைக் கழகப் பட்டமோ, ஆங்கிலர் ஆட்சி போல வேட்பாளர் வரி கட்டியிருக்க வேண்டும் என்ற விதிகளோ தற்போதைய மக்களாட்சியில் இல்லையல்லவா? அதனால்தான் இங்கே இந்த சம்பவத்தை நினைவு படுத்தினோம்! அவ்வளவுதான்!

நமது நாட்டில் பத்திரிகைகளை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். நடத்த விரும்புவோர்க்கு அரசு விதிமுறைகள் சில உள்ளன. அவற்றைப் புரிந்து கொண்டு, பின்பற்றினாலே யாரும் பத்திரிகையை நடத்தலாம்.

ஆரம்ப விதிமுறைகள் :

பத்திரிகை உலகில் புதிதாகப் புக விரும்பும் ஒருவர், முதலில் என்ன வகையான இதழ்களை நடத்தலாம்? நாளிதழா, வார இதழா? வாரம் இருமுறை இதழா? வாரம் மும்முறையா? மாதமா? மாதம் இருமுறையா? மும்மாதத்திற்கு ஓரிதழா? ஆண்டு மலரா? என்பதை முதலில் சிந்தித்துத் திட்டமிட வேண்டும். ஏனென்னறால், அதற்குரிய பண நிலை வசதிகளுக்கான திட்டம் தீட்டுவது நல்லதல்லவா?

முடிவெடுத்த பின்பு, என்ன நோக்கத்திற்காகப் பத்திரிகை நடத்தலாம் என்பதை எண்ண வேண்டும். இலக்கியத்துக்காக மட்டுமா? உவமைக் கவிஞர் சுரதாவைப் போல கவிதைத் துறை வளர்ச்சிக்கா? அரசியலுக்கா? பொருளாதாரப் போக்குக்கா? கல்வி வளர்ச்சிக்கா? சமுதாய மூன்னேற்றத்திற்கா? சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக்கா? திரைத் துறை பொழுது போக்குக்கா? அறிவியல் துறையிலே பணியாற்றுபவர்களின் தொண்டு விமரிசனத்துக்கா? நகைச் சுவைக்காகவா? அரசியல் கட்சிக்காகவா? ஆட்சிக்கு ஆதரவாகவா? விஞ்ஞான; மருந்தியல் புதுமைகளை விளக்கவா? வரலாற்று விவரங்களை நினைவுப்படுத்தவா? தினந்தோறும் நடைபெறும் சமுதாய வம்படி, அதிரடிகளைச் சுட்டிக் காட்டிச் சட்டத்தின் சக்தியை உணர்த்தவா? நீதிமன்ற வழக்குகளின் வாதாட்ட அபூர்வ வரலாறுகளை எடுத்துக் காட்டவா? வணிக நிறுவனங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கி அவர்கள் உரிமைகளை உணர்த்தவா? மேடைப் பேச்சுக்களை மட்டுமே தேர்ந்து வெளியிடவா? மஞ்சள் ஏடா? இவற்றுள் எந்த வகைப் பத்திரிகையை நடத்தலாம்? எப்படி நடத்தலாம்? எதற்காக நடத்தலாம் என்ற துறை வகையை முடிவு செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் இவற்றைக் கூறுகிறோம் என்றால், பத்திரிகை நடத்துவது புகழுக்காக, பதவிக்காக, பணத்துக்காக, வணிக நோக்குக்காகத்தானே! அதனால்தான் குறிப்பிட்டோம். அதெல்லாம் இல்லை, தொண்டுக்காக, இலட்சியத்துக்காக, பொழுதுபோக்குக்காக என்று எவராவது கூறினால், அவர்கள் இறுதியிலே கடனாளிகளாவர்; சொத்துக்களை அழிப்பர்; இகழைப் பெறுவர் உறவுமுறைகள் பகையைத் தேடி ஓட்டாண்டிகள் ஆவர்! எனவே, பத்திரிகை நடத்துவோர்க்கு அறிவு வளம், ஆதரவு பலம், பண பலம் ஆரம்பத்தில் வேண்டும். போகப் போக பத்திரிகைப் பலம் அவர்களை இமய உச்சியிலே கூட அமர வைக்கலாம்!

பத்திரிகைத் தொழில் பயங்கரமான தொழில் என்று நாம் பயங்காட்டுவதற்காக மேலே உள்ள விவரங்களைக் கூறவில்லை. முழுக்க முழுக்கத் திறமை பலம் திகழ்பவராக பத்திரிகையாளர் இருக்க வேண்டும்.

‘தினத்தந்தி’ குடும்பம், முரசொலி குடும்பம், ஆனந்த விகடன் குடும்பம், குமுதம் குடும்பம், தினமலர், தினமணி குடும்பம் அடுக்கடுக்கான வகைத் தொழிலில் வெற்றிக் கொடிகளைப் பறக்க விடவில்லையா?

அந்த இதழ்க் குடும்பங்களின் அறிவுரைச் சுவடுகளை ஏகலைவன் துரோணரிடம் கற்ற வித்தையைப் போல, நமது மனத்தில் நாம் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மேலே உள்ளவற்றை பாடமாக்கினோம்; படமாக்கவில்லை.

பதிவு செய்யும்
வழிகள் சில!

எந்த வ்கையான பத்திரிகைகளைத் துவங்க நினைத்தாலும், அவற்றைத் துவங்குவதற்கு முன்பு பத்திரிகைப் பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த ‘பத்திரிகைப் பெயரை, சென்னை நகராக இருந்தால் பெருநகர நீதிபதியிட மனு செய்து (Metropolitan Magistrate), மாவட்டமாக இருந்தால் மாவட்ட நீதிபதியிடமும் (District Magistrate), வட்டமாக இருந்தால் வட்டத் துணை நீதிபதியிடமும் (Sub-divisional Magistrate) பதிவு செய்து பத்திரிகைக்குரிய டெக்ளரேஷன் (Declaration) என்ற உரிமையை பெற வேண்டும்.

எந்த ஊரில் பத்திரிகையை நடத்த விரும்புகிறோமோ அந்தந்த இடத்திலுள்ள நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளிடம் இதழ் நடத்துபவர் மனு விண்ணப்பிக்க வேண்டும்.

காவல் துறையிடம் மனு விண்ணப்பிக்காமல் நீதித் துறைக்கு ஏன் போக வேண்டும் என்று கேட்பீர்கள் அல்லவா? காவல் துறைக்கும் - பத்திரிகைத் துறைக்கும் எந்தவித ஒட்டுறவும் கிடையாது. ஜனநாயக நாட்டில் பத்திரிகைத் துறை நான்காவது தூண்! அதைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் மக்களாட்சிக் கோட்டையின் மூன்றாவது தூணான நீதிமன்றத் தூணுக்குத்தான் அந்த அதிகார பலம் உண்டு. அதனால்தான் பத்திரிகை நடத்துவோர் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்பது இதழியல் இன மரபு ஆகும்.

விண்ணப்பிக்கும் மனுவில் பத்திரிகை வெளியிடும் இட்ம் முகவரி, பெயர், எந்த மொழியில் அது நடத்த இருக்கிறது? எந்த நாட்களில் அந்தப் பத்திரிகை வெளிவருகிறது? அச்சகம் பெயர், முகவரி, நாளேடா, வாரமா, மாதமா என்று இதழ் வெளிவரும் கால அளவு போன்ற பத்திரிகை விவரங்களைக் குறிப்பிட்டு, நீதிபதி முன்பு கையொப்பமிட்டு அந்த மனுவைக் கொடுக்க வேண்டும்.

பத்திரிகைப் பெயரைக் குறிப்பிட்டீர்கள் அல்லவா? அத்துடன் மேலும் மூன்று பெயர்களை அதே மனுவில் குறிப்பிட வேண்டும். ஏன் தெரியுமா?

நீங்கள் குறிப்பிடும் பெயரில் வேறு எவராவது பத்திரிகை நடத்தும் உரிமையை நீதிமன்றத்தில் உங்களுக்கு முன்னே பெற்றிருக்கக் கூடும். அதனால் நீங்கள் பத்திரிகைக்கு வைத்துள்ள பெயரில் உங்களுக்கு நடத்தும் உரிமை கிடைக்காது.

தனியாக வேறு மூன்று பெயர்களைக் குறிப்பிட்டிருந்தீர்கள் அல்லவா? அந்தப் பெயர்களில் எவரும் நீதிமன்ற உரிமை பெறாதிருந்தால் அவற்றுள் இரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்ட பெயருக்கு உரிமை கிடைக்கும்.

எந்த பெயர்களுக்கும் உரிமை கிடைக்கவில்லை என்றால், அந்தப் பெயர்களில் பத்திரிகை நடத்தும் உரிமைகளை எவரோ ஏற்கனவே பெற்றுவிட்டார்கள் என்று பொருள். அதனால், விண்ணப்பித்த உங்களுக்கு உரிமை கிடைக்கவில்லை என்று உணர வேண்டும்.

பத்திரிகை நடத்தும் அனுமதியை நீதிபதியிடமிருந்து பெற்றுவிட்டால், பிறகு நீங்கள் பத்திரிகையாளராகப் பதிவு செய்யப்பட்டு விட்டதாகப் பொருள்.

பத்திரிகை உரிமை
பெற்றாகி விட்டதா?

பத்திரிகை நடத்த நீதிபதி அனுமதி பெற்ற பின்பு உடனடியாக ஆறு வாரத்திற்குள் அதைத் துவக்கிவிட வேண்டும். மாத இதழாக இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அதை ஆரம்பித்துவிட வேண்டும்.

மேலே கூறிய கால எல்லைக்குள் பத்திரிகையை நடத்தா விட்டால், அதற்கு நீதிபதி வழங்கிய அனுமதி தானாகவே செத்துவிடும். பிறகு, மறுபடியும் நீதிமன்றத்திற்கு மனு செய்து உயிர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை வரும். Renewal என்று அதற்குப் பெயர்.

வேறு அச்சக மாற்றமோ, வேறு வெளியீட்டகமோ, வேறு வெளியிடும் கால அளவோ, புதிதர்க இடம் மாற்றம் ஏற்பட்டாலோ, நீதிமன்றத்திற்கு மனு அனுப்பி, அவர்கள் குறிப்பிடும் தேதிக்குச் சென்று, நீதிபதி முன்பு கையெழுத்துப் போட வேண்டும்.

பத்திரிகை துவக்கப்பட ஏதோ சில தடைகள் ஏற்பட்டு ஓராண்டாகி விட்டால், பத்திரிகை நின்றுவிட்டதாக நீதிமன்றம் நினைக்கும்.

மறுபடியும் அதை நடத்தும் சமயம் வந்தால், பத்திரிகைப் பெயருக்குப் புத்துயிரளிக்க நீதிமன்றத்திலுள்ள பத்திரிகைப் பணிப் பிரிவுக்கு மீண்டும் மனுமூலம் தெரிவித்து, நீதிபதி முன்பு கையெழுத்துப் போட வேண்டும்.

பத்திரிகை ஆசிரியர் பெயரை முதல் பகத்திலேயே அச்சடிப்பது சிறப்பானது. கடைசி பக்கத்தில் பத்திரிகைப் பதிவு எண், அச்சிட்டவர் முகவரி, வெளியிடுபவர் முகவரி, ஆசிரியர், உரிமையாளர், பத்திரிகை வெளியிடப்படும் இடம், முகவரி போன்ற விவரங்களை, அதாவது (imprint line) இம்பிரிண்ட் என்பதை அச்சடிக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்காக. ஏதாவது ஒரு பத்திரிகையின் கடைசி பக்கத்தைப் பார்த்தாலே போதும். புரியும்.

பத்திரிகை வெளிவந்தவுடன் அதன் பிரதிகளில் ஒவ்வொன்றை புதுதில்லியிலே இருக்கும் Registrar of News Papers என்ற அலுவலகத்துக்கு அனுப்பி பத்திரிகையை அங்கே பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பதிவு எண்ணை உங்களுடைய பத்திரிகை அலுவலகத்திற்கு அந்த அலுவலகம் அனுப்பி வைக்கும்.

முன்பு குறிப்பிட்டதுபோல பொது நூலகத்திற்கும், எந்த நீதிபதி முன்பு பத்திரிகை நடத்த அனுமதிபெற கையெழுத்துப் போட்டோமோ, அந்த நீதிமன்ற பத்திரிகைப் பிரிவுக்கும், காவல் துறை ஆணையருக்கும், பத்திரிகையாளர் செலவிலேயே பிரதியை அனுப்ப வேண்டும்.

அஞ்சலகச் சலுகை
பெறுவது எப்படி?

பத்திரிகை அச்சடித்து வெளிவந்த உடனே கடைசி பக்கத்தின் உச்சி முனையில் Regd. என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு; அருகே இடம் காலியாக இருக்கும் இடத்தில் டில்லி பத்திரிகைப் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ரிஜிஸ்டர்டு நெம்பரை அதாவது பதிவு எண்ணை அச்சடிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக (Regd. No.5454), பதிவு எண் 5454 என்பதைப் போல அச்சிட்டிருக்க வேண்டும். அவ்வாறு அச்சடித்தால்தான் பத்திரிகையை வெளியூர்களுக்கு அனுப்பிவைக்கும் மத்திய அரசின் அஞ்சல் சலுகை வசதி கிடைக்கும்.

அஞ்சல் சலுகை பெற வேண்டுமானால், எந்த நீதிமன்றத்தில் பத்திரிகை நடத்திட அனுமதி பெற்றோமோ, அந்த அனுமதி நகலுடன் பத்திரிகைப் பிரதி இரண்டு இணைத்து, வெளியூர்களிலே பத்திரிகை விற்பனையாகின்றதா சந்தா வாசகர்கள் இருக்கிறார்களா? என்பதை அஞ்சலகத்தினர் சோதித்துப் பார்ப்பதற்காக 50 சந்தா வாசகர்களது முகவரிகளை இணைத்து, அஞ்சலக அஞ்சல் வசதி உதவி தேவை என்று பத்திரிகை Letter Paperரிலே எழுதி, பத்திரிகை வெளிவரும் எல்லைக்குட்பட்ட பெரிய அஞ்சலதிகாரி யார் என்பதை விசாரித்து, மேற்கூறிய விவரங்களை அந்த Post Office அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பத்திரிகை அலுவலகத்தினர் கொடுத்துள்ள 50 சந்தாதாரர் முகவரிகளில் அஞ்சலக அதிகாரிகள்; பத்து பேர்களுக்காவது அவர்கள் செலவிலேயே அஞ்சலனுப்பி, “நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகையின் சந்தாதாரரா?” என்று கேள்வி கேட்டு, அதற்கு சந்தாதாரர்கள் பதில் எழுதும் வசதிக்கான ஓர் அஞ்சலுரையை உள்ளே வைத்து அனுப்பிப் பதில் எழுதுமாறு கேட்டார்கள்.

அஞ்சலகத்தார் அனுப்பும் அஞ்சலட்டையை சந்தாதாரர்கள் பெற்றதும், ‘ஆம்’ நான் சந்தாதாரர்தான், எனது சந்தா எண் இது என்று எண்ணையும் குறித்து, உடனே அனுப்பிய அஞ்சலகத்தாருக்கே அட்டையைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட வேண்டும்.

அவ்வாறு அனுப்பப்பட்ட பத்து அஞ்சலட்டைகளில் குறைந்தது ஆறு அட்டைகளாவது ‘ஆம்’ என்ற பதிலோடு அவர்களுக்கு வந்துவிட்டால், அஞ்சலகம் அந்தப் பத்திரிகைக்குரிய அஞ்சல் சலுகை அனுமதியை வழங்கிவிடும். இதுதான் பத்திரிகையைக் குறைந்த தபால் செலவில் அனுப்பி வைக்கும் அரசு அஞ்சல் சலுகை வசதி.

அஞ்சலகத்தார் பத்திரிகையாளருக்கு அனுப்பிய சந்தாதாரர் சலுகை உத்தரவு நகலை, சம்பந்தப்பட்ட எல்லையிலுள்ள அஞ்சலக அதிகாரியிடம் காண்பித்தால், பத்திரிகையைச் சந்தாதாரர்களுக்கு மட்டுமல்ல, வெளியூர் விற்பனை முகவர்களுக்கும் Agents இரயில்வே நிலைய பார்சல் அதிகாரிகளுக்கும், பத்திரிகைகளை அனுப்பி வைக்கும் அஞ்சல் சலுகை நகலைப் பார்த்ததும் அனுமதித்து விடுவார்கள்.

அஞ்சலகம் குறிப்பிடும் வெளியீட்டு நாட்களில் பத்திரிகையைத் தவறாமல் அனுப்பிவிட வேண்டும். குறிப்பிட்ட அந்த நாள் தவறினால் அரசு வழங்கிய அஞ்சல் சலுகை அனுப்பமுடியாத தடைகள் உண்டாகும்.

அஞ்சலகமும், இரயில்வே பார்சல் நிலையமும், பதிவு பண்ணப்பட்ட பத்திரிகைதானா என்று பார்க்க Regd. எண் அச்சாகி இருக்கிறதா என்று பத்திரிகையின் கடைசி பக்க மேல் முனை இடத்தை அஞ்சலக அதிகாரிகள் பார்ப்பார்கள்.

எனவே, தவறாமல் இதழ்தோறும் பதிவு எண்ணும், இம்பிரிண்ட் விவரமும் அச்சடித்திருக்க வேண்டும். இல்லையானால், பத்திரிகை விற்பனைக்குப் போகாத சூழ்நிலைக்கு உருவாகிவிடும் என்ற பயம் பத்திரிகை நடத்தும் அலுவலகத்திற்கு இருந்தாக வேண்டும். இந்த விவரம்தான் பத்திரிகை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளாகும்.