இதழியல் கலை அன்றும் இன்றும்/பத்திரிகை வளர்ச்சிகளை

விக்கிமூலம் இலிருந்து


10


பத்திரிகை வளர்ச்சிகளை அழிக்கும்
அடக்குமுறைச் சட்டங்கள்!


வாள்முனையின் வலிமையைவிட பேனா முனையின் சக்தி பலம் வாய்ந்தது’ என்றான். பிரெஞ்சு நாட்டின் எழுத்துலகச் சிற்பியான வால்டேர்! என்ன காரணம் அதற்கு?

ஒரு பேரரசை, ஏகாதிபத்திய ஆட்சியைப் பேனா முனையில் அழிக்கவும் முடியும்; ஆக்கவும் முடியும். எழுதுகோல் சிந்தனையால் கவிழ்க்கவும் இயலும்; காக்கவும் முடியும்’ என்றான் சமயப் பற்றற்ற அந்தச் சான்றோன்.

அதனால்தான் அரசியல் சட்டத்தை மக்களாட்சிக்காக வகுத்த வித்தகம், அரசியல் சட்டம், நாடாளுமன்றம்; நீதிமன்றம் என்ற முப்பெரும் சக்திக்கும் மேலாக - நான்காவதாகப் பத்திரிகைப் பலத்தை அரணாக அமைத்தது.

எனவே, ஓர் அரசு நிலையாகச் செயல்பட வேண்டுமானால் பத்திரிகைகள் அவற்றின் உரிமைகளோடு சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்று எண்ணினர் அரசியல் மேதைகள்.

அவை அவ்வாறு செயல்படாமற்போனால், ஆட்சிக்கு அடிமைகளாக இயங்கினால், எந்த மக்களாட்சியாலும் நாட்டுக்குரிய நலன்களை செய்யமுடியாமல், கேடுகளை, தீமைகளை உருவாக்கும் என்பது உறுதி.

இன்றையப் பத்திரிக்கைகள் வெளியிடும் செய்திகளில், எழுதும் கருத்துக்களில் எவை உண்மை, எவை உண்மையற்றவை என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றால் நாட்டிலே குழப்பங்களும், கலகங்களும், கலவரங்களும், அராஜகங்களும், அநீதிகளும் உண்டாகின்றன.

அதற்கு அடிப்படை நோக்கங்கள் என்ன? பத்திரிகையாளர்களில் பலர் ஒரு செய்தியை அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறுவெளியிடுகின்றனர் எதற்கெடுத்தாலும், உரிமைகள், சுதந்திரம் என்று அலறிக்கொண்டு வியாபாரக் குறிக்கோள்களுடன், பண ஆசையுடன், கட்சிகள் நோக்குடன், அரசியல் லாப நட்ட பதவி வெறிப் பிடிப்புகளுடன் செய்திகளை அவரவர் கண்ணோட்டங்களுக்கேற்ப வெளியிடும் அதர்மச் செயல்களிலே ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தகையச் செய்திகளை, கருத்துக்களைப் படிக்கும் மக்களில் பலர், மிருக உணர்ச்சிகளுக்குப் பலியாகின்றார்கள். பாலுணர்ச்சிகளுக்கு இரையாகின்றார்கள். சாதி, மத, அரசியல், பொருளாதாரப் பேதக் கலகங்களுக்கு ஆட்பட்டு, அரசியல், மதவியல், சாதிவியல் கலவரங்களை உருவாக்குகின்றார்கள். மக்கள் அமைதியான வாழ்க்கையை நடத்த முடியாமல் கோப, தாப உணர்ச்சிகள் உண்டாகி அடிதடி, குத்துவெட்டு, காவல் நிலையங்களின் கோரக் கெடுபிடிச் செயல்கள், இறுதியாக நீதிமன்ற நிழலை நாடி அமைதிகாணும் களைப்பு நிலைகள் ஏற்படுகின்றன.

சுதந்திரமாக உள்ள நாடுகளானாலும், அடிமை நாடுகளானாலும், ஆங்காங்கே இத்தகையச் சம்பவங்கள் அடிக்கடி தலைவிரித்தாடுவதை நாம் பார்க்கின்றோம். அத்தகையக் காலங்களில் பத்திரிகைகளில் வரும் செய்திகளை கருத்துக்களை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும் சூழ்நிலைகள் உண்டாகின்றன.

இந்த நோக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று எண்ணிய R.C.S.சர்க்கார், தனது ‘இந்தியாவில் பத்திரிகைகள் நிலை’ என்ற நூலில் ‘பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஒரு தேவையான தீமையாகும்’ என்கிறார்.

பத்திரிகைச் சுதந்திரத்தைச் தவறாகப் பயன்படுத்தும் இதழ்களுக்கும், சரியாக நடத்தும் பத்திரிகைகளுக்கும் இடையே உள்ள கட்டுப்பாடுகளில், ஒரு நடுநிலை நோக்கு உருவாக்கப்பட வேண்டும்’ என்று அவுர் குறிப்பிட்டுள்ளார்.

‘சர்க்கார்’ எழுதிய நோக்கத்திற்கு மாறாக, ஆங்கிலேயர் ஆட்சி, பத்திரிகைகள் மீது ஏவி விட்ட அடக்கு முறைகளையும் நாம் உணர்ந்தால்தான், அவர் ஏன் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதின் அருமையை நம்மால் உணர முடியும்.

இந்தியாவில் ஆங்கில ஏகாதிபத்தியம் ஏறக்குறைய இரண்டரை நூற்றாண்டாக நடைபெற்று வந்தது. அந்தக் கால கட்டத்தில் இந்திய மொழிகளில் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்தும் வந்தன.

அந்தப் பத்திரிகைகள் தனது நாட்டின் அடிமை விலங்கைத் தகர்த்தெறியத் தீவிரமாக உழைத்தன. ஆங்கிலேயர் ஆட்சி இந்தியர்களை மிருக உணர்ச்சிகளோடு நடத்தி வந்தக் கொடுமைகளை எதிர்த்து அவை எழுதின. அரசாங்கத்தில் இந்திய மக்களுக்குரிய வாழ்வியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்பதற்காக அக்காலப் பத்திரிகைகள் போராடின. அதற்காகவே, அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவை என்ற இயக்கம் 1885-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.

அந்த நேரத்தில் மக்களுக்குத் தேசிய சுதந்திர உரிமைகள் தேவை என்பதற்காக இந்தியர்களால் ஆங்கிலேயர் ஆட்சியிடம் ஏராளமான மனுக்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை எல்லாம் அந்த அன்னிய அரசு மதிக்கவில்லை.

இங்கிலாந்திலிருந்து வெள்ளையர்களை கொண்டு வந்து, இந்திய அரசு ஆட்சிப் பதவிகளில் வலிய வலியத் திணித்து, இந்திய மக்களின் சாதாரண சமத்துவ உரிமைகளைக்கூட புறக்கணித்த ஆட்சிக் கொடுமைகளை எதிர்த்து, இந்திய மொழிகளில் பத்திரிகைகளை ஆரம்பித்து நடத்திப் போராடின.

மக்களின் அந்த அடிப்படை வாழ்க்கையின் நியாயமான உரிமைகளைத் தங்களது பத்திரிகைகளில் எழுதியும், மனுக்கள் பல கொடுத்தும், நேரிடையாகப் பெரிய அதிகாரிகளைப் பேட்டிகண்டும், தலைமை ஆளுநரைக் கேட்டுப் பார்த்தும் சலித்துவிட்ட காரணத்தால், இந்தியப் பத்திரிகைகள் சற்று காரசாரமாகவே ஆட்சியை எதிர்த்து எழுத ஆரம்பித்தன.

இந்திய மக்களுக்காக கேட்கப்பட்ட உரிமைகளை, வசதிகளை ஆங்கில அரசு வழங்காததோடு, உரிமைக்காக வாதாடும் பத்திரிகைகளை அடக்குமுறைகளால் அழித்துவிடச் சில தடைச் சட்டங்களை இயற்றி அமல்படுத்த ஆரம்பித்தது. அந்தச் சட்டங்கள் எப்படிப்பட்டவை என்பதை உணர்ந்தால்தான் நாம் எப்படிப்பட்ட ஏகாதிபத்திய வெறிபிடித்த ஆட்சியின் கீழ் அடிமைகளாக வாழ்ந்தோம் என்பதை ஒரளவாவது அறியலாம் அல்லவா? அந்தச் சட்ட வகைகள் வருமாறு: