உள்ளடக்கத்துக்குச் செல்

இதழியல் கலை அன்றும் இன்றும்/பத்திரிக்கையாளர்களுக்கு திரு. வி. க.

விக்கிமூலம் இலிருந்து

35

பத்திரிகையாளர்களுக்கு
‘திரு.வி.க. தமிழ்நடை அனுபவங்கள்’

பாரதியாருக்கு அடுத்தப்படியாகப் பத்திரிகை உலகில் புரட்சி செய்து, தீந்தமிழுடன் தேசிய உணர்வைக் கலந்து ஊட்டியவர் திரு.வி.க. ‘தெய்வமிகழேல், தக்கார் நெறிநில், தேசத்தோடொத்து வாழ்’ என்ற வாசகங்களை ஒரு வட்டத்தில் சுற்றி வரைந்து, நடுவே இந்திய நாட்டுப் படமும், சென்னை நகர் அமைந்த இடத்தில் ஒரு விண்மீனும் பொறித்த இலச்சினைச் சின்னத்தைத் தாங்கி, திரு.வி.க.வின் ‘தேசப்பக்தன்’ 7.12.1917 அன்று தோன்றியது. இரண்டரை ஆண்டுகள் தேசபக்தனின் ஆசிரிய பீடத்திலிருந்து திரு.வி.க. எழுதிய கட்டுரைகள் ‘தேசபக்தாமிர்தம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு, முதல் மலர் 1919-இல் வெளியிடப்பட்டது. அந்த தமிழ்நடை, பத்திரிகையாளருக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதோ அந்த தமிழ்நடைகள்.

‘பண்டைத் தமிழ் மக்கள்’ உரை நடையில் எனக்குப் பெரும் பற்றுண்டு. பிறமொழிக் கலப்பின்றித் தமிழ்பேசல் வேண்டும், எழுதல் வேண்டுமென்னும் ஆர்வம் எனக்குண்டு. அப்பற்றும் அவ்வார்வமும் என்னளவில் கட்டுப்பட்டுக் கிடப்பதை நோக்குழி, வீட்டின்பத்தில் வெறுப்பும், தமிழ் நாட்டில் பலமுறை பிறவி தாங்கித் தொண்டு புரிவதில் விருப்பும் எனக்குள் நிகழ்கின்றன’’

‘தேசபக்தன் சுதந்திரத்தை விரும்புகிறான்; சுய ஆட்சி கேட்கிறான்; இந்தியாவிற்கும் - இங்கிலாந்திற்கும் சகோதரத்துவத்தை உண்டு பண்ணுகிறான். - ‘பக்தன்’ மாதவின் அடித் தொண்டன். அவன் பாரத நாட்டில் தோன்றிய ஒவ்வொருவருக்கும் உரியன்’ என்று 7.3.1918 இதழில் எழுதிய தலையங்கத்தில், பாரத நாட்டுக்குப் பத்திரிகையை அவர் காணிக்கையாக்கினார். தேசபக்தனில் தம் எழுத்துப் பற்றி, ‘யான் உருத்திரனானேன். என் எழுதுகோல் பாசுபதமாயிற்று’ என்று திரு.வி.க. விமர்சித்தார். பஞ்சாப் படுகொலை, சத்யாக்ரக இயக்கம் ஆகியவை நிகழ்ந்த வேளையில் ‘தேச பக்தன்’ நிலையம் காளி கட்டமாயிற்றென்றும்’ காளி, வீர நடம் உமிழும் சுவாலை எரிமலை போன்று விளங்கியதென்றும் அவர் நெஞ்சம் நிமிர்ந்து கூறினார். தேச பக்தனுக்கென்று ஒரு தனி நடை கொண்டேன். சிறு சிறு வாக்கியங்கள் அமைக்கலானேன்; என் நடை எங்கெங்கேயோ ஓடும்; திரியும்; அலையும்; பொருளுக்கேற்ற கோலந் தாங்கும்; இடத்துக்கேற்ற நடம் புரியும்” என்று தம் நடையை அவரே படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

அக்காலத்தில் பெயரளவில் தமிழில் வெளிவந்த போதிலும், தமிழ் உணர்வோ, மொழி வளமோ, நடைத் தெளிவோ குறையாய் வெளியிட்டு, கலங்கலும், கழிவும், கலப்பும் களங்கமும் நிறைந்த தமிழ் நடையில் தாக்கு பிடித்துக் கொண்டிருந்தன. பெரும்பான்மையான தமிழ்ப் பத்திரிகைகள்.

அந்நிலையை மாற்றி, தமிழ் ஆர்வத்தை ஊட்டி, தெள்ளு தமிழ் நடையில் மனத்தை அள்ளும் வகையில், பத்திரிகையில் எழுத இயலும் என்பதை நிலை நாட்டியவை, திரு.வி.க.வின் ‘தேச பக்தனும் நவசக்தி’யும். ‘அந்நாளில் நாட்டு மொழிப் பத்திரிகைகளில் அயல்மொழி நாற்றம் வீசும் ...... தேச பக்தன், பத்திரிகையுலகில் புரட்சி செய்தான். படிப்படியே செய்தான்.... தேசபக்தன் தமிழரை அன்னிய மோகத்தினின்றும் விடுவித்தான் என்று சொல்வது மிகையாகாது’ என்று பெருமிதம் கொண்டார் திரு.வி.க.

அதிகாரிகளின் நற்செயல்களைப் போற்ற விரைந்து, மற்றவற்றை மறுக்க முனைந்து அற வழியே பொது வாழ்வை வழி நடத்தத் தொண்டு புரிந்தான். ‘தேச பக்தன்’. மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்ட தலைவர்க்குச் சொல் மலர்களால் அஞ்சலி செய்த அப்பத்திரிகை, திலகர், காந்தியடிகள், பெசண்ட் அம்மையார் முதலியோர் புகழை ஓதி, வழிபாடே நடத்தி வந்தது.

‘தலைமையேற்று ஒரு தேசத்தை நடத்துவோர் அந்நிலையில் அவர் தேசமேயாவர்; தேசம் அவரேயாகும். தலைமையாவது: தேசத்தின் உணர்வும் சக்தியும் திரண்டு தேங்குமிடம்’ என்று தலைமையை வணங்கும் நெறிக்கு விளக்கம் அளித்தார் திரு.வி.க.

‘தேச பக்தன் தோன்றியிராவிடில் வகுப்புவாதம் கிளைத்து ஓங்கியிருக்கும், வகுப்புவாதக் கட்சியின் நச்சுப் பல் தேசபக்தனால் பிடுங்கப்பட்டது. அக்கட்சியின் வேகம் ஒடுங்கியது. அது வறுத்த நெல்லாயிற்று; பல்லிழந்த பாம்பாயிற்று’ என்று தேசபக்தனின் தொண்டைத் திரு.வி.க. மதிப்பிட்டார்.

டாக்டர் சுப்ரமணிய ஐயர், சர் பட்டத்தைத் துறந்தபோது, ‘மயிலை முனிந்திரர்’ என்ற தலைப்பில் 21.6.1918-ல் திரு.வி.க. எழுதிய ஆசிரியர் கட்டுரையை சுப்ரமணிய ஐயர் பாராட்டினார்.

‘நானா எழுதினேன்? தங்கள் வீரத்தில் தோய்ந்த பக்தி அதை எழுதியது. தாங்கள் மூலம்; யான் கருவி’ என்று திரு.வி.க. பதிலிறுத்தலில், தன்னடக்கம் மட்டுமல்ல, கொள்கைக்குத் தன்னைக் காணிக்கையாக்கி, பக்தியின் படைக்கலனாகத் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்ட தகைமை விளங்கியது.

தெய்வ பக்தி, ராஜபக்தி, தேசபக்தி, மூன்றும் அவர் நோக்கில் மேலோங்கியிருந்தது. 16.8.1918ல் அவர் எழுதிய தலையங்கத்திலும் புலனாகிறது. ‘எங்கள் மன்னர் மன்னராகிய ஐந்தாம் ஜார்ஜுக்கு வெற்றி ஓங்கச் செய்து, எங்கள் பந்தத்தை அவர் வாயிலாக ஒழிக்கக் கருணை புரிவாயாக. நாங்கள் விரும்புவது சுதந்திரம்; வெறுப்பது அடிமைத்தனம். சாந்தி, சாந்தி, சாந்தி. அவனின்றி ஓரணுவும் அசையாது’ மன்னரை நம்புகிறாரே, மகேசுரன் துணையை நாடுகிறாரே, மக்கள் சக்தியின் வல்லமையை மறந்து விட்டாரோ, என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு, அவர் எழுத்தில் பக்தியும், பழமையும் பதிந்திருந்தன.

பழைமையில் அவர் கொண்டிருந்த பக்தி, இன்றைய நாகரிகத்தில் அவருக்கு வெறுப்பை மூட்டியது. தற்கால நாகரிகம் பேயாக நமது தேசத்தைப் பிடித்தாட்டுகிறது. விஷமாக நமது தேசத்தை எரிக்கிறது. பூதமாக நமது தேசத்தை விழுங்குகிறது. தற்கால நாகரிகத்தை வெட்டிச் சாய்க்க வேண்டுவது நமது கடமை என்று 7.1.1919 இதழில் எழுதிய தலையங்கம், தகைமைசால் நெறி, தர்மவெறியாகவும், பழமையில் கொண்ட நாட்டம், புதுமை அனைத்தும் சுட்டெரிக்கும் காட்டாமாகவும், மரபில் கொண்ட பிடிப்பு, முற்போக்கை எதிர்க்கத் துணியும் பிடிவாதமாகவும், பிற்போக்காகவும், வலுத்து விடுமோ என்ற அச்சத்தை ஊட்டும் அளவுக்குச் செல்கிறது.

பண்டைக் காலத்தில் சூரன், இராவணன் முதலிய ஒரு சில இராட்சதரிருந்தனர். இப்பொழுதோ வீடுகள்தோறும் இராட்சதர்கள் இருக்கின்றார்கள். இராட்சதர் என்போர் யாவர்? என்றும் பிறர்க்குத் தீங்கிழைப்பவர். பிறரை அடக்கியாள வேண்டுமென்று நினைப்பவர்; காம குரோத முதலிய தீக்குணங்கள் நிரம்பப் பெற்றவர் இன்னோர் இராட்சதர் எனப்படுவர். இவரல்லாத பிறரே அந்தணர் என்போர்’ என்று 8.11.1918-இல் அவர் தலையங்கத்தில் எழுதியது சன்மார்க்க உபதேசமாக அமைகிறதே ஒழிய, சமுதாய அநீதிகளுக்கு முழு விளக்கம் தருவதாயில்லை என்று குறைபடுவதற்கு இடமுண்டு.

‘மஹரிஷிகளே! நவநாத சித்தர்களே! எங்கிருக்கின்றீர்கள்? உலகத்தில் இராட்சத குணம் பெருகுகிறதே. நீங்கள் கருணை செலுத்த வேண்டிய காலமிதுவே’ என்று அவர் நெஞ்சுருக வேண்டுகையில், சமுதாய அரக்கர்களை வீழ்த்த ஜன சக்தியை நம்புகிறாரா அல்லது ஞான ரிஷிகளைத் தேடுகிறாரா, அரசியலை அணுகுகிறாரா அல்லது அவதாரங்களை அழைக்கின்றாரா, சம தர்மத்தை நாடுகிறாரா அல்லது சாத்திரங்களில் சரணாகதி அடைகிறாரா என்ற ஐயப்பாடு எழத்தான் செய்கிறது.

இந்தியா மந்திரியாகிய மிஸ்டர் மான்டேகு நம்தேசத்தில் விஜயம் செய்திருக்கின்றார். இங்கிலாந்திலுள்ள தொழிற்கட்சிக்காரரும் நம் சார்பாக நிற்கின்றனர். இச் செயல் யாவர் செயல்? ஈசன் செயலன்றோ? அவனின்றி ஓரணுவும் அசையாது என்னும் ஆப்த மொழி பொய்யாகுமோ? இப்பொழுது நாம் செய்ய வேண்டிய வேலை, பரோபகாரியாகிய அன்னை பெசண்ட் அம்மையார் தெய்வச் சபையாகிய காங்கிரஸ் அக்கிராசனத்திலிருந்து நமக்கு அனுப்பியுள்ள செய்தியை உற்று நோக்குங்கள்’ என்று 28.12.1917-இதழில் எழுதிய தலையங்கத்தில், அரசியல் நிகழ்ச்சிகளும் ஆண்டவனின் திருவிளையாடல்கள் என்று விளக்கம் கூறியதன் மூலம், தெய்வ பக்தி எனும் பீடத்தில் தேச சக்தியைத் தத்தம் செய்து, வீறு கொண்டு எழ வேண்டிய மக்களுக்காக வேதாந்த விலங்குகள் பூட்டி விட்டாரே என்ற வேதனை பிறக்கிறது.

‘காந்தி அடிகள் ஆறு வருடக் காவல் பெற்றார் என்னும் செய்தி எமக்கெட்டியபோது, எமது அடியிலிருந்து முடி வரை மின்சாரம் ஊடுருவி பாய்ந்தாலென ஒருவித நடுக்கம் உண்டாயிற்று என்று 24.3.1922-இல் நவசக்தியில் எழுதுகிறார்.

‘இங்கிலாந்தே! உனது அரசு கிறிஸ்து தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. உன் பெயரால் இங்கு எம்மை ஆளும் அதிகார வர்க்கத்தார் கிறிஸ்து போன்ற காந்தியடிகளை ஓர் உலகச் சட்டத்தால் கட்டி இருக்கிறார். உனக்கு உண்மை வேண்டாமா? அன்பு வேண்டாமா? பொறுமை வேண்டாமா? மனிதர்கள் செய்த சட்ட கண் கொண்டு காந்தியடிகளை நோக்காதே. கிறிஸ்துவக் கண்கொண்டு நோக்கு! உண்மையும் அன்பும் பொறுமையும் புலனாகும் சாந்தி! சாந்தி! சாந்தி!’ என்று முடிக்கிறார். அதில் அழுகை இருக்கிறது, அரசியல் இல்லையே; புலம்பல் இருக்கிறது, புரட்சி உணர்வு இல்லையே; வேதனை இருக்கிறது; விமோசனத்துக்கு வழி இல்லையே; வேதாந்தம் இருக்கிறது, வீரம் இல்லையே; பெண்மை இருக்கிறது, ஆண்மை இல்லையே; பொறுமை போதிக்கும்போது பொங்கி எழும் பொது மக்கள் சக்தியைப் போற்றவில்லையே, சாந்தி என்பது சமுதாயத்திற்கு அறை கூவலா? அல்லது ஆறுதலா? என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

இக்கேள்விகளுக்குப் பதில், ‘தமிழ் பெரியார்கள்’ என்ற நூலில் திரு.வி.க.வைப் பற்றி வ.ரா. அவர்கள் தீட்டிய சிறப்பான சொல்லோவியத்தில் ஓரளவு புலனாகிறது.

‘ஆண் பெண் தன்மைகளால் வீட்டுக்கும் நாட்டுக்கும் இடையே நசுக்குண்டு கரைந்து உருகுகின்றார் திரு.வி.க.’ என்று அவர் எடுத்துக்காட்டி, அறத்துக்கும் அரசியலுக்கும் சன்மார்க்கத்துக்கும் சமதர்மத்துக்கும், பரம்பரை வலுவுக்கும் நவீன தேவைகளுக்கும் இடையே எழும் மோதல்கள் பற்றி ஓயாத சிந்தனையில் மூழ்கிவிட்ட திரு.வி.க. ‘காரிய உலகில் சோபை இல்லாது போனார்’ என்று காரணம் காட்டுகிறார்.

மோன நிலையில் மூழ்கிய முனிவராகிவிட்ட திரு.வி.க. முழுமையான போராட்ட வீரராக விளங்க இயலவில்லை என்று வரலாற்று உண்மையைக் கூறுவது, அறம், அன்பு, அறிவு, தாய்மொழி, ஆர்வம், தாய்நாட்டுப் பற்று ஆகியவற்றின் உருவகமாய்த் திகழ்ந்த அவர், நாட்டுக்கும் தமிழுக்கும் ஆற்றிய கற்றொண்டுக்குக் களங்கம் விளைவிப்பதாகாது.

திரு.வி.க.வின் தமிழால் தேசியம் வளர்ந்தது; திரு.வி.க. வின் தேசியத்தால் தமிழ் தழைத்தது. ஆனால், திரு.வி.க. வளர்ச்சியின் முழுமையை அடைய இயலாமல் போயிற்று. அது அவருக்கு இழுக்கல்ல; நாட்டுக்கு இழப்பு. சண்டமாருதமாகவில்லையே என்று தென்றலைப் பழித்துப் பயனென்ன? தகிக்கும் கதிரவனாய் இல்லை என்பது தண்மதியின் தவறல்லவே. அமைதியான குளத்தில் ஆற்றுப் பெருக்கு இல்லையே என்று வருந்தலாமா? தேனின் இனிமை தாகத்தைத் தணிக்கவில்லையே என்று குறை கூறுவது பொருந்துமா? தம் வாழ்வாலும் வாய்மையாலும் தொண்டாலும் தூய்மையாலும் தமிழகத்துக்கு வாழ்வளித்த பெரியார்களில் ஒருவர் திரு.வி.க. தமிழுலகம் அவருக்கு தலை சாய்த்து வணங்குவதால், தலை நிமிர்ந்து நிற்கும் தகுதி பெற்றுத் திகழும்.

(குறிப்பு: இக்கட்டுரை ‘தேசியம் வளர்த்த தமிழ்’ என்று கா. திரவியம், I.A.S. அவர்கள் எழுதிய நூலிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி)