இந்தியப் பெருங்கடல்/ஆராய்ச்சி ஏன்?

விக்கிமூலம் இலிருந்து



4. ஆராய்ச்சி ஏன்?


இந்தியக் கடலை ஆராய்வதற்குச் சிறந்த காரணங்கள் பல உள்ளன. அவற்றை இங்குக் காண்போம்.

உயிர்கள்

இறந்தொழிந்த பண்டைக்கால உயிர்களின் எச்சமிச்சங்களை இதில் தேடிக் கண்டுபிடிக்கலாம். அவ்வாறு கண்டுபிடிப்பதால், அக்கண்டுபிடிப்புக்கள் உயிர் நூல், நில அமைப்பு நூல் முதலிய துறைகளுக்கு மிகவும் பயன்படும். உயிர்களின் படிப்படி வளர்ச்சியைப் பற்றிய புதிய உண்மைகளை அறியலாம்.

உலகக் கடல்களிலேயே அதிக அளவுக்கு உயிர் வகைப் பொருள்கள் இதில் காணப்படுகின்றன. சிறப்பாக, மீன் வகைகள் அதில் நிறைய உள்ளன. அதன் மீன்வளத்தை அதற்கு அருகிலிருக்கும் நாடுகள் நன்கு பயன்படுத்தவில்லை. அவ்வாறு பயன்படுத்துமானல், உணவுப் பற்றாக்குறை தீர்வது மட்டுமன்றிப் பொருள் வளமும் பெருகும்.

மீன் கூட்டங்கள் உள்ள இடம், அவை மேல் வரும் இடம், மீன் பிடிப்பதற்குரிய இடம், காலம் முதலியவற்றை அறிவது மிக இன்றியமையாதது. மீன்களுக்கு வேண்டிய ஊட்டப் பொருள்களில் ஏற்படும் மாற்றம், அவற்றின் தன்மை, பரவல் முதலியவை அறியப்பட வேண்டும். தவிர, கடல் உயிர்களைப்பற்றி அறியவும் வாய்ப்பு ஏற்படும். இக்கடலில் பாதி அளவுக்கு இன்னும் உயிர் நூல் முறையில் மாதிரி பார்க்கப்படவில்லை.

இந்தியக் கடலில் மீன்கள் அதிக அளவுக்கு இருப்பது உண்மையே. ஆனால், அவை டன் கணக்கில் பல இடங்களில் மடிவதற்குக் காரணம் என்ன என்பதை அறிய வேண்டும்.

1957ஆம் ஆண்டு உருசியக் கப்பல் ஒன்று இந்தியக் கடல் வழியாகச் சென்றது. கொழும்பிற்கும் ஏடன் கல்ப் நீரோட்டத்திற்கும் இடையே மில்லியன் டன் கணக்கில் மீன்கள் மடிந்து மிதந்ததைக் கண்டறிந்து, உடன் அறிவித்தது. மீன்கள் மிதந்த பரப்பு 650 மைல் நீளமும் 140 மைல் அகலமும் இருந்தது. இதிலிருந்து இந்தியக் கடலின் செழுமை நன்கு புலப்படுகிறது.

கடலின் கீழிருந்து மேல், நீர் வரும் இடங்களில் மீன்கள் அதிகமாக இருக்கும். இந்நீரில் ஊட்டப் பொருள்கள் மிகுதியாக இருப்பதே காரணம். இவ்விடங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப மீன் பண்ணைகளை நிறுவலாம். இதனால் உணவு வளம் பெருகும்.

கனி வளம்

இந்தியக் கடல் கணிப் பொருள் களஞ்சியமாக உள்ளது. பொட்டாசியம், மக்னிசியம் முதலிய அடிப்படைக் கணிப் பொருள்கள் அதில்அதிக அளவுக்கு உள்ளன என்று பொதுவாக நம்பப்படுகிறது. அவற்றை எடுப்பதற்குத் தகுந்த முறைகள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படுமானல், மேலும் கூடுதலாக, மங்கனீஸ், நிக்கல், கொபால்ட், செம்பு முதலிய மூலகங்கள் அதன் நீரிலிருந்து பிரித்து எடுக்கப்படலாம்.

அதன் தரைப் பகுதியில் சில மூலகங்கள் புதைந்து கிடப்பதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கணிப் பொருள்கள் எல்லாம் இந்தியாவின் பொருள் வளத்தைப் பெருக்கும் என்று நாம் நம்பலாம். இதனால், இந்தியக் கடலுக்கு அருகிலுள்ள நாடுகளும் பயனடையலாம்.

எண்ணெய்ப் படிவுகளும் அதன் கரை ஓரங்ளில் காணப்படுகின்றன. அவற்றிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுப்பின், அதனால் இந்தியாவும் மற்ற நாடுகளும் பயனடையலாம்.

காற்றுகளும் நீரோட்டங்களும்

இந்தியக் கடலில் காற்றுகளும் நீரோட்டங்களும் முழு அளவுக்குத் திசை மாறுகின்றன. அவ்வாறு மாறுதல் ஆண்டுக்கு இரு தடவைகள் நடைபெறுகிறது. இது போன்று வேறு எங்கும் நடைபெறவில்லை.
தென்மேற்கு வடகிழக்குப் பருவக் காற்றுகளால் காற்றோட்டங்கள் திசை திருப்பப்படுகின்றன. இதனால் மாறுபடும் இயைபுள்ள காற்று உண்டாகிறது; அலை ஓட்டங்கள் உண்டாகின்றன. இந்நிகழ்ச்சி வானிலை அறிஞர்களுக்குப் புதிராக உள்ளது.

இந்தியக் கடலின் நீரோட்டங்களின் செறிவு, இருப்பிடம் ஆகியவற்றை அறிவதில் பெரிய நன்மை உண்டு. கப்பல்கள் செல்வதற்குரிய சிக்கனமான வழிகளை மேற்கொள்ளலாம். இதனால், எரிபொருள் - எண்ணெய்ச் செலவு குறைந்து, பணம் மீறும். இம்முயற்சி வட அட்லாண்டிக் கடலைப் பொறுத்தவரை வெற்றியளித்துள்ளது. நீரோட்டங்களை அறிந்து அவற்றிற்கேற்பப் பயண வழிகளை மாற்றியதால், கப்பல் பயணங்களுக்கு ஆகும் எரிபொருள் செலவில் பத்துப்பங்கு குறைக்க முடிந்தது. இப்பத்துப் பங்கிற்குரிய பணச் செலவு மீதியல்லவா?

இந்தியக் கடலின் நீரோட்டங்கள் பசிபிக், அட்லாண்டிக் கடல்களில் உள்ளது போன்று அவ்வளவு வலுவுள்ளவை அல்ல. அவை பசிபிக், அட்லாண்டிக் கடல்களின் நீரோட்டங்களிலிருந்து வலுவிலும் விரைவிலும் அதிக அளவுக்கு வேறுபடுகின்றன. இதை மேலும் நன்கறிந்து உறுதிப்படுத்தலாம்.

இந்தியக் கடலின் மேற்பரப்பு கிழக்காகச் சாய்ந்துள்ளது. மற்ற கடல்கள் மேற்காகச் சாய்ந்துள்ளன. மேற்பரப்புச் சாய்விற்கும் வலுவான புதை நீரோட்டங்கள் இல்லாமைக்கும் தொடர்பு இருக்கலாம். இந்தியக் கடலின் நீரோட்டங்களைத் தென்மேற்குப் பருவக்காற்று அடிக்கும் பொழுது ஆராய வேண்டும். அப்பொழுது தான் உண்மை புலப்படும்.

பருவக் காற்றுகள் திசைமாறி அடிப்பதனல், கடல் நீரோட்டங்களிலும், அதில் வாழும் உயிர்களிலும் குறிப்பிடத்தக்க விளைவுகள் உண்டாக்கப்படுகின்றன.

மேற்கூறிய விளைவுகளுக்குரிய காரணங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு இந்தியக் கடலை முழு அளவுக்கு நன்கு ஆராய வேண்டும். அதன் நீர் மேலிருந்து கீழ்வரை, அதிலுள்ள பொருள்களுடன் நன்கு ஆராயப்பட வேண்டும். பொருள்கள் என்பதில் உயிர் வகைப் பொருள்கள் அடங்கும். தவிர, நீரின் இயல்புகளையும், இயைபுகளையும் அறிய வேண்டும்.

அதன் நீருக்கும் காற்று வெளிக்கும் இடையிலுள்ள எல்லையையும் ஆராய வேண்டும். காற்று வெளியின் மேல் பகுதிகளையும் ஆராய்தல் நலம். இவ்வாறு பல நிலைகளில் ஆராய்ச்சி செய்வதால், இந்தியக் கடல் வெப்ப எந்திரமாகப் பயன்படுவதைப்பற்றி நன்கு அறிய இயலும். அது வெப்ப எந்திரமாக வேலை செய்வதால், அதற்கு மேலுள்ள காற்றோட்டத்தில் குறிப்பிடத்தக்க விளைவு உண்டாகிறது. இவ்வாறு எல்லாம் செய்வதால் உண்டாகக்கூடிய பெரும் நன்மை இதுவே. பருவக் காற்றுகள் அடிப்பதை முன் கூட்டியே கூற இயலும்.

கடல் நீரோட்டங்களைப் பருவக் காற்றுகள் திருப்புகின்றன. இதனால் நீர்கள் கீழிருந்து மேல் வருகின்றன. இந்நீர்களில் மீன்களுக்கு வேண்டிய ஊட்டப் பொருள்கள் நிறைய உள்ளன. இந்த ஊட்டப் பொருள்களின் தன்மைபற்றி மேலும் ஆராயலாம்.

பசிபிக், அட்லாண்டிக் கடல்களில் குறிப்பிட்ட ஆழங்களில் ஒரு வகை எதிர் நீரோட்டம் காணப்படுகிறது. இதற்கு நிலநடுக்கோட்டு எதிர் நீரோட்டம் என்று பெயர். இந்த ஓட்டம் இந்தியக் கடலிலும் இருக்கலாம் என்னும் ஐயத்திற்கு இடமிருக்கிறது. இந்த ஐயத்தை ஆராய்ச்சியினால்தான் போக்க இயலும்.

சுருங்கக் கூறின், பருவக் காற்றுகள் கடல் நீரோட்டங்கள் ஆகியவைபற்றிக் கடல் நூல் தொடர்பான பலவகைச் செய்திகளைத் திரட்டுவதற்கு இந்த ஆராய்ச்சி வழிவகை செய்யும்.

தரை

பொதுவாகக் கடலின் தரை ஒரே வகையான அமைப்பை உடையது அல்ல. இதற்கு இந்தியக் கடலும் விலக்கல்ல. மலைத் தொடர்களும், எரி மலைத் தோற்றமுடைய பாறைகளும் அதன் தரையில் உள்ளன. தரையில் பாறைகள் அதிகமுள்ளன. இவற்றைப்பற்றி மேலும் விரிவாக ஆராயலாம்.

அழகிய பவழமலைத் தொடர்களும் அதில் காணப்படுகின்றன. இவை உலகிலேயே மிகப்பெரியவை; சிக்கலான அமைப்பு உடையவை. இவற்றைப்பற்றி அறிந்தது மிகக் குறைவு.

இந்தியக் கடலின் அடிப்பகுதி 4,000 மைல் அளவுக்கு முறையாக ஆராயப்பட வேண்டும். அதன் அடிக்கும் நிலவுலகின் முடிக்கும் இடையிலுள்ள படிவின் அடுக்குகளையும் திட்டப்படுத்த வேண்டும். இதற்கு நிலநடுக்க முறையைப் பயன்படுத்தலாம்.

நிலவுலகின் வெடிப்பு இதில் நீண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையையும் இந்த ஆராய்ச்சியால் உறுதிப்படுத்தலாம்.

வானிலை

இந்தியக் கடல் ஆராய்ச்சியின் சிறந்த நோக்கம், கடல் நூல் தொடர்பாகத் திருத்தமான வானிலைச் செய்திகள் திரட்டுவதே ஆகும். இது நில இயல் நூல் ஆண்டுத் திட்டத்தின் சிறந்த நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

பருவக் காற்று அடிப்பதையும், மழை பெய்யும் அளவில் ஏற்படும் மாற்றங்களையும் அறிய வேண்டும். இவை இரண்டையும் திருத்தமாக அறிவதால் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தலாம். நீர்ப்பாசனத்திற்குவேண்டிய நீரைச் சரிவரப்பெறலாம். இவ்வாராய்ச்சி நீண்ட எல்லை வானிலை முன்னறிவிப்புக்கு மிகவும் இன்றியமையாதது.

சிறந்த இடம்

பல நிலைகளிலும் பார்க்கும் பொழுது, உலக அளவில் ஆராய்ச்சி செய்வதற்குச் சிறந்த இடமாக இந்தியக்கடல் திகழ்கின்றது.

உலக அளவில் ஆராய்வதற்கு ஏற்ற, கடலாக அது உள்ளது. ஐம்பெருங் கடல்களிலேயே மிகக் குறைவாக ஆராயப்பட்ட கடல் அது ஒன்றே. பயன்படும் நிலை, கொள்கை நிலை என இரு வகைகளிலும் அதைப்பற்றி அறியப்பட்ட விஞ்ஞான அறிவு மிகக்குறைவு என்றே சொல்ல வேண்டும்.

அதன் பரப்பில் ஒவ்வொரு 90,000 சதுர மைல்களுக்கு ஓர் அளவீடுகூட எடுக்கப்படவில்லை. அதில் ஏற்படும் பருவக் காற்று மாற்றம் போல் உலகில் வேறு எங்கும் ஏற்படவில்லை. அதன் நடத்தை பெருமளவுக்கு ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் கவர்ந்த வண்ணம் உள்ளது.

கடல் நூல் தொடர்பாக உள்ள பல சிக்கல்களைத் திறமையாக ஆராய்ந்து, அவற்றிற்குரிய தீர்வுகளைக் காணுதற்குரிய சிறந்த இடம் இந்தியக் கடலே. அவ்வகையில் பலவகை ஆராய்ச்சிகள் செய்ய அது வாய்ப்பளிக்கிறது.

வானிலையையும் தட்பவெப்ப நிலையையும் உண்டாக்குவதில், மற்றக் கடல்களைப் போன்று இதற்குச் சிறந்த இடம் உண்டு.

தற்கால அறிவியல் வளர்ச்சியினால் நுணுக்கங்களும் கருவிகளும் பெருகியுள்ளன. இவற்றை இந்தியக் கடலை ஆராய்வதற்கு நன்கு பயன்படுத்தலாம். இவ்வாறு பல நிலைகளில் ஆராய்வதற்கு வாய்ப்பு இருப்பதால்தான், மற்ற கடல்களைக் காட்டிலும் இதை ஆராய்வதில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

.