உள்ளடக்கத்துக்குச் செல்

இனியவை நாற்பது-மூலமும் உரையும்/இனியவை நாற்பது - நூல்

விக்கிமூலம் இலிருந்து


இனியவை நாற்பது - நூல்


பிச்சைபுக் காயினும் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினிது ஆங்கினிதே

தெற்றவும் மேலாயார்ச், சேர்வு.

1



உடையான் வழக்கினிது ஒப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன்இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்

தலையாகத் தான்.இனிது நன்கு.

2



ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே

தேரின்கோள் நட்புத் திசைக்கு.

3



யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை ஊர்இனிது ஆங்கினிதே

மான முடையார் மதிப்பு.

4



கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயம்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்

பொல்லாங் குரையாமை நன்று.

5

பிச்சை எடுத்தாயினும் கல்வி கற்றல் மிகவும் இனியது. நல்ல அவையிலே கற்றவை நினைவுக்கு வந்து கை கொடுப்பது முற்பட மிகவும் இனியது. முத்து போன்ற புன்முறுவல் பல்லினரின் சொல் இனிமையானது. மற்றும், மேலான பெரியவர்களைச் சார்ந்து வாழ்வது உறுதியாக இனியதாம்.

1

செல்வம் உடையவன் பிறர்க்கு வழங்குதல் இனிது. இல்லற வாழ்க்கை கணவனும் மனைவியும் ஒன்றி நடத் தின் முற்பட இனிது. மனை வாழ்க்கை சிறவாதாயின், வாழ்க்கை நிலையாமை உணர்ந்து கால நீட்டிப்புச் செய் யாதவராய் உடனே துறவு கொள்ளுதல் நன்கு தலை யானதாய் இனிதாம்.

2

ஏவுவதைத் தட்டாத மக்கள் உடைமை முன் இனிது. மாணாக்கன் குற்றம் செய்யானாய் நாடோறும் கல்வி கற்றல் மிக இனிது. சொந்த ஏர் மாடு உடையவனது பயிர்த் தொழில்தான் இனியது. அவ்வாறே ஆராயின், செல்லும் திசைகளில் நல்ல நட்பு கொள்ளல் இனிது.

3

யானைகள் மிக்க படையமைத்தல் முன் இனிது. மற்றோர் உயிரின் உடலைத் தின்று தன் உடலை வளர்க்காதிருத்தல் முன் இனிது. காட்டு வழிவரும் ஆற்றங்கரையில் இருக்கும் ஊர் இனிது. மற்றும், மானமுடைய நல்லோர் தரும் மதிப்பு இனிது.

4

எவ்வுயிரையும் கொல்லாமை இனிது. செங்கோல் முறைதவறி வேண்டியவர்க்கு மட்டும் சிறப்பு செய்யா திருத்தல் இனிது. அரசன் செங்கோலனா யிருத்தல் இனிது. இயன்ற மட்டில் யாரிடத்தும்-யாரைப்பற்றியும் பொல் லாப்பு பேசாமை நன்கு இனிது.

5


ஆற்றும் துணையால் அறம்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்

காப்படையக் கோடல் இனிது.

6



அந்தணர் ஒத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல்

கொண்டடையா னாகல் இனிது.

7



ஊரும் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதம்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை

பேதுறார் கேட்டல் இனிது.

8



தங்கண் அமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்

அன்புடைய ராதல் இனிது.

9



கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண் பிலாதவரை அஞ்சி அகறல்

எனைமாண்பும் தான்இனிது நன்கு.

10

இயன்ற அளவு அறம் செய்தல் முற்பட இனிது. பண்பாளர் சொல்லும் பயனுள்ள அறிவுரைச் சிறப்பு இனிது. எல்லா நல்ல வாய்ப்புகளும் உடையவராய், நாணிலிகள் அல்லாராயுள்ள நல்லவரைப் பாதுகாவலராகக் கொள்ளுதல் இனிது.

6

அந்தணர்கள் வேதம் ஒதுதல் மிகமிக இனிது. உடல் வலிமை உடையவன் படையை ஆளுதல் முன் இனிது. தன் தந்தையே யானாலும் அடங்காப் பிடாரியா யிருப்பா னாகில் அவனை ஏற்றுப் பொருந்தா திருத்தல் இனிது.

7

போருக்கு ஏறிச்செல்லும் குதிரை வலிமை உடையதா யிருத்தல் முன் இனிது. மாலையணிந்த மன்னர்க்கு ஏற்பட்ட கொடிய போர்க்களத்தில் மலைபோன்ற யானைப் படையின் மறப்போர் காட்சிக்கு இனியது. நல்லதில் ஆர்வம் உடையவர்கள் மிகவும் நல்ல அற உரைகளை ஐய மயக்கம் இல்லாதவராய்க் கேட்பது இனிது.

8

தம்மிடம் பற்றுடையவர் சிறப்பாய் வாழ்தலைக் காண்பது இனியது. இடம் அகன்ற அழகிய விண்ணில் அகன்ற முழு நிலாவைக் காணுதல் இனிது. பழுதற்ற செயலராய், யாரிடத்தும் பரிவுகொண்டு அன்புடையவராய் ஒழுகுதல் இனிது.

9

கடன் வாங்கி உண்டு வாழாதிருத்தல் இனியது. கற்புச் சிறப்பு இல்லாத மனைவியை நீக்கி விடுதல் இனிது. மன நலம் இல்லாதாரை அஞ்சிப் பிரிதல் எல்லா நலத்தினும் மிகவும் இனிது. 1

10




அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத்

துண்ணாப் பெருமைபோல் பீடுடைய தில்.

11



குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிகள் அல்லராய் மாண்புடையார்ச் சேரும்

திருவும் தீர் வின்றேல் இனிது.

12



மானம் அழிந்தபின் வாழாமை முன்இனிதே
தானம் அழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை

மானிடவர்க் கெல்லாம் இனிது.

13



குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும்

போழ்தும் மனன் அஞ்சான் ஆகல் இனிது.

14



பிற்ன்மனை பின்நோக்காப் பீடினிது ஆற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர்வு இனிதே
மறமன்னர் தம்கடையுள் மாமலைபோல் யானை

மதமுழக்கம் கேட்டல் இனிது.

15


(நிலையான இடமின்றி) ஊர் ஊராய் வழி நடந்து தங்கி வாழாதிருத்தல் மிகவும் இனிது. (இதுவோ அதுவோ என்று) இரு பிரிவுக் கருத்துக் கொள்ளாமல் (உண்மைக் கருத்தைத் துணிந்து கொள்ளும்) கூரிய அறிவு இனியது. உயிர்போய் இறப்பதாயினும், உண்ணத்தகாத அற்பரின் கையுணவை உண்ணாத பெருமை போன்ற வேறு பெருமைச் செயல் இல்லை.

11

குழந்தை நோயின்றி வாழ்தல் இனிது. பேசும் சபைக்கு அஞ்சாதவனின் கல்வி இனியது. மயக்கம் அற்றவராய் நல்ல பண்புடையாரைச் சேர்ந்து வாழும் செல்வம் நீங்கா தாயின் இனிது அது.

12

மானம் போனபின் வாழாமை முன் இனிது. தானம் செய்வது கெடாமல் தான் அடக்கமாய் வாழ்தல் இனிது.தவறான வழியில் இன்றி உயர்ந்த முறையில் வந்த செல்வம் உடைமை மாந்தர்க் கெல்லாம் இனியது.

13

குழந்தை தத்தித் தத்தி நடக்கும் தளர் நடையைக் காண்பது இனிது. குழந்தையின் மழலை மொழியைக் கேட்பது அமிழ்தத்தினும் இனிது. தீவினை (விஷமம்) உடையவன் வந்து சேர்ந்ததால் (மனம்) வெந்து வருந்தும்போதும் மனம் அஞ்சாதவனாய் இருத்தல் இனிது.

14

பிறன் மனைவியைத் திரும்பியும் பாராத பெருந்தன்மை இனியது. வறட்சியால் வாடும் பயிருக்கு மழை சொரிவது இனிது. வீரவேந்தரின் கடை வாயிலில் மலை போன்ற யானையின் மதங்கொண்ட பிளிறலைக் கேட்பது இனிது.

15


கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்

எத்துணையும் ஆற்ற இனிது.

16



நட்டார்க்கு நல்ல செயல்இனிது எத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல்அதனின் முன்இனிதே
பற்பல தானியத்த தாகிப் பலர் உடையும்

 மெய்த்துணையும் சேரல் இனிது.

17



மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பிணிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்

கண்டெழுதல் காலை இனிது.

18



நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன் இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது

தக்குழி ஈதல் இனிது.

19



சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்

தகுதியால் வாழ்தல் இனிது.

20


 கற்றவர்முன் தாம் கற்றதை எடுத்துரைத்தல் மிகவும் இனியது. தம்மினும் மிக்க அறிஞரைச் சேர்ந்து பழகுதல் மிகவும் சிறக்க இனியதாகும். எள் அளவாயினும் பிறரிடம் இரவாது தான் பிறர்க்குக் கொடுத்தல் எல்லா வகையிலும் மிகவும் இனிது.

16

நண்பர்கட்கு நல்லன செய்தல் இனிது. சிறிதளவும் தம் பகைவருடன் ஒட்டாதவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வது முன்னதினும் இனியது. பல வகையான உணவுப்பொருள்களையும் உடையதாய், பகைவர் பலரும் உடைந்து ஒடச் செய்யும் மெய்யான அரண் துணையை அடைந்திருத்தல் இனிது.

17

பொது மன்றத்தில் பெருமக்கள் வாழ்ந்து அறிவுரை கூறும் ஊர் இனிது. நூல் நெறிப்படி வாழும் தவசிகளின் பெருமை இனியது. குறையாத உயர்ந்த சிறப்புடைய முதிய பெற்றோர்கள் இருவரையும் காலையில் எழுந்து கண்டு வணங்குதல் இனிது.

18

நண்பரைப் பற்றிப் புறம் பேசாதவனாய் வாழ்தல் மிக இனிது. மெய்ந்நெறியைப் போற்றிப் பணிவுடன் ஒழுகுதல் இனிது. முட்டுப்பாடில்லாத பெருஞ் செல்வத்தை ஈட்டினால், மற்றபடி அதைத் தக்க பிறர்க்குக் கொடுத்தல் இனிது.

19

வஞ்சகரைச் சேராமல் விட்டு நீங்குதல் இனிது. புலவர் களின் வாய் அறிவுரையைப் போற்றி ஒழுகுதல் இனிது பரந்த இடமுடைய உலகத்தில் உள்ள உயிர்கட் கெல்லாம் தக்க பயன் உறும்படி வாழ்வது இனியது.

20




பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந்து அல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத
திறம்தெரிந்து வாழ்தல் இனிது.

21



வருவாய் அறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங்கு ஆகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரியின்றி வாழ்தல் இனிது.

22



காவோடு அறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்ஈதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றும் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.

23



வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்புஇனிதே
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறைஇனிதே
இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.

24



ஐவாய வேட்கை அவாஅடக்கல் முன் இனிதே
கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.

25




மற்றொருவனது கைப்பொருளைப் பறிக்காதவனாய் வாழ்வது இனிது. அறச் செயல்கள் புரிந்து, அல்லாத தீய செயல்களை விட்டொழிப்பது இனிது. மாட்சிமையற்ற குழப்பவாதிகளை மறந்தும் சேராத வழியறிந்து வாழ்தல் இனிது.

21

வருமானத்தின் அளவறிந்து பிறர்க்கு வழங்குதல் இனிது. ஒருவர் சார்பு இல்லாத சொந்த ஊக்கம் இனி யது. பெரும் பயன் வருவதுபோல் தெரியினும் (மனம் போன போக்கில்) விரும்பியவற்றை யெல்லாம் செய்யா தவராய், அறநெறியினின்றும் திரியாமல் வாழ்வது இனிது.

22

சோலையோடு அறத்திற்குக் (தருமத்திற்குக்) குளம் தோண்டியமைத்தல் மிகவும் இனிது. அந்தணர்கட்குப் பசு வோடு பொன் அளித்தல் முற்பட இனிது. தீவினைக்கு அஞ் சாதவராய், - செய்யும் தொழிலிலும் பேசும் பேச்சிலும் சூது வைத்துச் செயல்படுபவரை நீக்குதல் இனிது.

23

எடுத்த செயலில் வெற்றி பெறுவதற்காகச் சினங் கொள்ளாமல் செயல்படுபவனது நோன்பு இனிது. ஒரு குறிக்கோளைக் கொண்டவன் இயன்றவரையும் பொறை யுடைமை இனிது. முடியக் கூடியதில்லாத ஒன்றை விரும்பி, ஏங்கி, துன்பப் படாதவராய்ச் செய்யக்கூடிய செயலைத் தேர்ந்து செய்தல் இனிது.

24

மெய் - வாய் - கண் - மூக்கு - செவி - என்னும் ஐந்து பொறிகளின் வழி வரும் வேணவாவை (பேரவாவை) அடங்கச் செய்தல் முன் இனிது. கை நிறையப் பொருள் கிடைக்கினும் கல்லாத மூடரைச் சேராமை இனிது. நிலையில்லாத கொள்கையுடன் மன ஒருமை இல்லாத மாந்தரைச் சேராமல் விடுதல் இனிது.

25




நச்சித்தன் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்.

26



தானம் கொடுப்பான் தகைஆண்மை முன்இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனம்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையால் கோடல் இனிது.

27



ஆற்றானை ஆற்றென்று அலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுஉண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.

28



கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென்று இகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது.

29



நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென்று அடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல்.

30


தன்னை நத்தி வந்தவரின் விருப்பத்தை அழிக்காத பெருந்தன்மை இனிது. நாணம் இல்லாத வழியில் வாழாத ஊக்கம் மிகவும் இனிது. எந்த வழியிலாயினும் தம்மால் உதவ முடிந்தவற்றை மறைக்காமல் தரும் அன்புடமையினும் இனிய பண்பு இல்லை.

26

தானம் தருபவனது தக்க கொடைவீரம் முற்பட இனிது. மானம் கெட நேரின் வாழாண்ம முன் இனிது. குற்றம் பாராட்டாமல், உறுதி (பயன்) கொடுப்பவற்றைக் கொள்ளும் முறையில் கொள்ளுதல் இனிது.

27

ஒன்றைச் செய்ய முடியாதவனைச் செய் என்று வருத்தாமை முன் இனிது. எமன் வருவது உண்மை என எண்ணி அதற்கேற்ப வாழ்தல் இனிது. செல்வம் அழிந்தாலும் முறை அல்லாதவற்றைக் கூறாத பட்டறிவினும் இனிய பட்டறிவு வேறு இல்லை.

28

கீழ்மக்களைக் கைகழுவிவிட்டு வாழ்வது இனிது. வளர்ச்சி உயர்வை எண்ணி ஊக்கம் உண்டாதல் இனிது இவர் தாழ்ந்தவர் என்று எவரையும் இகழ்ந்து பேசா தவராய்ப் புகழ் பெற வாழ்வது இனிது.

29

பிறர் செய்த நன்றியின் பயனைச் சீர்தூக்கிப் போற்றி வாழ்வது மிகவும் இனிது. நீதிமன்றத்தில் கொடிய உரை கூறாத பெருந்தன்மை இனியது. தம்மிடம் ஒருவர் அடைக்கலமாகக் கொடுத்த ஒன்றை, அன்ற அறிந்தவர் யாரும் இல்லை என்று தான் உரிமையாக்கிக் கொள்ளாத நற்செயலினும் இனிய நற்செயல் வேறில்லை.

30


அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டும் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.

31




கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையின் பாங்கினிய தில்.

32



ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாள்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது.

33



எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பிணிதே
புல்லிக் கொளினும் பொருளில்லார் தம்கேண்மை
கொள்ளா விடுதல் இனிது.

34



ஒற்றினான் ஒற்றிப்பொருள்தெரிதல் முன்இனிதே
முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே
பற்றிலராய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது.

35

தம்மை அண்டியவரின் துன்பம் மிகாதபடித் தணித்தல் இனிது. கடன் வாங்கியாவது செய்யவேண்டிய நல்லனவற்றைச் செய்வது இனிது. சிறப்பாய் அமைந்த கேள்வியறிவு உடையவராயினும், எதையும் ஆய்வு செய்து தெரிந்து மொழிதல் மிகவும் இனிது.

31

கற்றறிந்தவர் அறிவுறுத்தும் செயல் கொள்கை இனிது. குடிமகனிடம் அன்பு செலுத்தாத அரசன்கீழ் வாழாதிருத்தல் முற்பட இனிது. தெளிவாக ஆராய்தல் இன்றித் தம்மை நம்பிவிட்டவரைத் தீமை அடையச் செய்யாத அன்புடைமையினும் இனிய பண்பு வேறில்லை.

32

ஊரார் வெறுக்காத நற்செயல்களைச் செய்து நடக்கும் ஊக்கப் பண்பு மிகவும் இனியது. தலைவன் தானே சோம்பல் கொண்டிராத செயல்வீரம் முன் இனிது. வாள்கள் மோதும் படைகள் நிறைந்த போர்க்களத்தில் பின்னிடாத பெரிய வேந்தரின் சேனையைத் தடுத்து வெல்லல் இனிது.

33

இராக் காலத்தில் வழிப்பயணம் செல்லாமை முன் இனிது. நற்கருத்துகளைச் சொல்லும்போது சோர்வில்லாமல் சொல்லுதலின் சிறப்பு இனிது. அவரே வலியவந்து தழுவிக் கொண்டாலும், பொருட்படுத்தத்தகாத அற்பரின் நட்பைக் கொள்ளாமல் விட்டொழிப்பது இனிது.

34

வெற்றி வேல் வேந்தர்க்கு, ஒற்றர்களால் உளவு அறிந்து அதன் உட்பொருளைத் தெளிதல் முன் இனிது; நிலைமையை முற்றுமாக அறிந்து நீதி செலுத்துதல் முன் இனிது; சிலரிடத்தில் மட்டும் பற்று இல்லாதவராய், பல உயிர்கட்கும் வளங்களைப் பங்கிட்டு உறச் செய்து நன்முறை அறிந்து நடத்தல் இனிது.

35



அவ்வித்து அழுக்காறு உரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினம்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாம் கொண்டுதாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது.

36



இளமையை முப்பென்று உணர்தல் இனிதே
கிளைஞர்மாட்டு அச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென்று உணர்தல் இனிது.

37



சிற்றாள் உடையான் படைக்கல மாண்பினிதே
நட்டார் உடையான் பகைஆண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படும்
கற்றா உடையான் விருந்து.

38



பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்ற பொலிசை கருதி அறன் ஒருஉம்
ஒற்கம் இலாமை இனிது.

39



பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலின் காழ்இனிய தில்.

40

மனம் புழுங்கிப் பொறாமை பேசாமை முன் இனிது. திருந்திய பண்பாளனாய், கோபத்தை அழித்து நீக்கி வாழ்தல் இனியது. தாம் கண்டவற்றை யெல்லாம் மனம் கவ்விக்கொண்டு விரும்பிப் பற்றிக் கொள்ளாதவராய் விட்டுவிடுதல் இனிது.

36

இளமையை முதுமை எனக் கருதி நல்லதே செய்தல் இனிது. உறவினரிடத்தில் அச்சம் கொள்ளாத பேச்சைக் கேட்பது இனிது. சிறந்த மென்மையான மூங்கில் போன்ற தோள்களையும் தளிர் போன்ற மிருதுவான மேனியை பும் உடைய பெண்களை நஞ்சு என்று ஆடவர் உணர்வது இனிது.

37

சிறிய காலாள் படையை யுடைய மன்னனது மிக்க ஆற்றலுடைய படைக் கருவிகளின் சிறப்பு இனிது. நட்பரசர்கள் பலரை உடைய வேந்தன் பகைவரை வெல்லும் வீரம் முன் இனிது. நிரம்பப் பால் சுரக்கும் கன்றுபோட்ட பசுக்களை உடையவன் செய்யும் விருந்து, எல்லா வகையிலும் மிகவும் இனியது என்று உலகினர் கூறுவர். (கன்று + ஆ = கற்றா = பசு).

38

பிச்சை எடுத்து உண்பவன் சினமின்றிக் கேட்டல் இனிது. ஒதுக்குக் குடியிருந்து துன்பம் மிக உறாத சிறப்பு இனிது. மிக்க ஆதாயம் விரும்பி, அறநெறியைக் கைவிடும் வறுமை உணர்வு இல்லாமை இனிது.

39

பத்துவகைப் பொருள்கள் கொடுத்தாயினும் சொந்த ஊரில் இருந்து வாழ்வது இனிது. விதையைக் குத்தி உண்ணாத சீர்மை மிக இனிது. நன்னெறி கூறும் நூல்களைத் தவறு இன்றிப் பலப்பல காலத்தும் கற்றுவருவதைக் காட்டிலும் ஒளி தரும் இனிய செயல் வேறு இல்லை.

40