இனியவை நாற்பது-மூலமும் உரையும்/உரையாசிரியர் முன்னுரை
சங்க இலக்கியம்:
சங்க இலக்கியங்களைப் பதினெண் மேற்கணக்கு எனவும் பதினெண் கீழ்க் கணக்கு எனவும் இருவகையாகப் பிரித்துக் கூறுவது மரபு. பதினெண் என்றால் பதினெட்டு: கணக்கு என்றால் நூல் (புத்தகம்). மேல்கணக்கு என்பது: - மிகவும் நீண்ட பெரிய பாடல்களைக் கொண்டுள்ள நூல்கள் மேல் என்னும் அடைமொழி பெற்றன - என்பதாகும். கீழ்க் கணக்கு என்பது: அடி அளவால் குறைந்த - அதாவது- ஐந்தடிகட்கு மேற்படாத சிறிய பாடல்களைக் கொண்ட நூல்கள் கீழ்' என்னும் அடைமொழி பெற்றனஎன்பதாகும். கீழ்' என்பது இங்கே மட்டமான தன்மை என்னும் பொருளில் இல்லை; அளவில் சிறியது என்னும் பொருளில் உள்ளது; மற்றபடி, கருத்தால் சிறந்தனவே யாகும். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டின் பெயர்களை அறிந்துவிடின் இவ்வுண்மை புலனாகும். அவையாவன:
கீழ்க்கணக்கு நூல்கள்:
திருக்குறள், நாலடியார், பழமொழி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஆசாரக் கோவை, இன்னிலை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது. கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திணை மொழி ஐம்பது-என்பன.
தமிழ் நூல்கட்குள்ளே தலையாய பதிணென் கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதன் காரணம், அடியளவால் சிறியனவாகிய - அதாவது - இரண்டே அடிகளை உடைய சிறு சிறு பாக்களை உடைமையேயாகும். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாகத் திருக்குறளோடு ஒத்த வரிசையில் வைத்து எண்ணப் பெறுதலின், நாற்பது என்னும் நூலும் சிறந்தது என்பது புலனாகும்.
பெயர்க் காரணம்:
இந்நூலில் கடவுள் வாழ்த்துப் பாடலை அடுத்து நாற்பது பாடல்கள் உள்ளன; ஒவ்வொரு பாவிலும் இனிய - இன்பம் பயக்கும் செய்திகள் - செயல்கள் பல எடுத்துக் கூறப்பெற்றுள்ளன; அதனால் இந்நூல் இனியவை நாற்பது என்னும் பெயர் பெற்றது. இந்நூலின் முப்பத்தொன்பது பாடல்கள் நான்கடி வெண்பாவாலும் 8 ஆம் பாடல் மட்டும் ஐந்தடி வெண்பாவாலும் யாக்கப்பெற்றுள்ளன.
நூலாசிரியர்:
சங்க காலத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர், 'மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார், எனக் குறிப்பிடப்பெற்றுள்ளார். அப்பாவைப் போலவே செயல்படுபவனை, 'அவன் அப்பன் மகன்' என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. பூதன் சேந்தனார் மதுரைத் தமிழாசிரியர் மகனாம். மதுரைத் தமிழாசிரியர் பெயர்என்ன - தெரியவில்லை. அவர் காலத்தில் மதுரையில் தமிழாசிரியர் என்றால் அவரைத்தான் குறிக்கும் போலும் அந்த அளவுக்குத் தலைமைப் புலமை உடையவராயிருந்திருக்கிறார்; அதனால் அவரது இயற்பெயர் மறைந்துவிட்டது. அத்தகையவரின் மகனாம் நூலாசிரியர் பூதன் சேந்தனார். இது இவரது இயற்பெயர்.
ஆசிரியர், கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிட்டுள்ள மூன்று தெய்வங்களுள் சிவனை முதலில் குறிப்பிட்டிருத்தலால் சிவ நெறியினராய் இருக்கலாம்.
இவரது இந்நூலைக் கற்று அதன்படி ஒழுகின் வாழ்க் கையில் நன்மை பெறுதல் உறுதி.
சுந்தர சண்முகன்