உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னொரு உரிமை/பகலில் சென்னை

விக்கிமூலம் இலிருந்து

பகலில் சென்னை

ந்த பல்லவ பஸ்ஸுக்குள் என்ன காரணத்தாலோ ஏற்பட்ட கலாட்டா, வெளியேயும் பரவி அதன் பலனாக பஸ்ஸின் முன் கண்ணாடி கல்லெறிபட்டு பாளம் பாளமாகவும், சுக்கல் சுக்கலாகவும் தெறித்தபோது-

பயணிகளில் சிலர் தைரியசாலிகள் பஸ்ஸின் முன் வாயில் வழியாகக் குதித்தார்கள். மற்றும் பலரோ வெளியே போகமுடியாமலும், உள்ளே இருக்க முடியாமலும் நிலை குலைந்து தவித்தார்கள். பெண்களின் ஒப்பாரியும், குழந்தைகளின் கூக்குரலும் ஆண்களின் அலை மோதலுமாய் அமளி நிலவியபோது-

பஸ்ஸுக்கு உள்ளேயே தூக்கித் தூக்கிப் போடும் பின்னிருக்கையில் இருந்த வேதா, கிட்டத்தட்ட அழத் துவங்கி விட்டாள். கல்லூரியில் படிப்பவள். அரசியல் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்தவள். என்றாலும், இவ்வளவு நெருங்கிய தூரத்தில் கல்லெறி கலாட்டாக்களைப் பார்க்காதவள். வழியெங்கும் கண்ணாடித் தோட்டாக்கள் அவளை நோக்கிப் பாய்வது போலிருந்தது. ஒவ்வொரு கண்ணாடித்துண்டு பாய்ச்சலுக்கும் ஒவ்வொரு ‘அம்மா’ போட்டாள். இவ்வளவுக்கும் அவள் சிறுமியல்ல. பத்தொன்பது வயதுக்காரி. நோஞ்சானும் அல்ல. கல்லெறியை ஓரளவு தாங்கிக் கொள்ளும் அளவில் அமைந்த மேனிக்காரி. அவள் தலையில் ஒரு கோலியை வைத்து, அதில் ஒரு நூலைக்கட்டி முகம் வழியாகக் கீழே தொங்கப்போட்டால், அந்த நூல் இரு சாண் இறக்கத்தில் மட்டும், லேசாய் மேடுபட்டு பிறகு நெளியாமலே பாதங்களுக்கு இடையே விழும். அப்படிப்பட்ட நேர்கோடு உருவக்காரியின் பாதங்களுக்கு மத்தியில் இப்போது நிசமாகவே ஒரு கல் விழுந்தது. உடனே அவள் எட்டுக்கால் பூச்சிபோல் உடம்பை வளைத்து ‘எம்மா டாடி’ என்று இருமொழியில் கூக்குரலிட்டு எழுந்தபோது—

அவளுக்கு இருபக்கமும் உட்கார்ந்திருந்த இரண்டு பெண்கள் அவளோடு அவளாய் எழுந்தார்கள். அவளை ‘அச்சச்சோ’ போட்டு பார்த்தபடியே “நாங்க இருக்கோம். கவலைப்படாதே பாப்பா” என்று சொன்னபடியே ஒருத்தி அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தாள். வேதா மாதிரியான ‘பாப்பா வயதுக்காரி’ “நான் அழுகிறேனா... அழாதீங்க” என்று தன்னையே முன்னுதாரணமாக்கி அவள் கண்ணிரைத் துடைத்துவிட்டாள். அந்த அன்பு வெள்ளத்தில் வேதா மெய்மறந்தபோது, அந்த இரண்டு பெண்களும் அவளை அவள் தோளில் தொங்கிய ஜோல்னா பையுடன் சேர்த்து அனைத்தபடியே பஸ்ஸின் பின்வாசல் வழியாக படிப்படியாய் இறங்கி தரையில் விட்டார்கள்.

வேதாவுக்கு உடலெல்லாம் புல்லரித்தது. இப்படிப்பட்ட அன்பை தாயிடம்கூட கண்டதில்லை. தந்தையிடம் பார்த்ததில்லை. அந்தப் பெண்களுக்கு நன்றி சொல்வதற்காக ஏறிட்டுப் பார்த்தாள். நான்குபுறமும் திரும்பிப் பார்த்தாள். அவர்களை எங்கேயும் காணோம். ஒருவேளை கூட்டத்திற்குள் சிக்கியிருப்பார்களோ என்று பயப்படாமல் அந்த வன்முறைக் கும்பலுக்குள் எட்டிப் பார்த்தாள். காணவில்லை. வேதா யோசித்தாள். புறநானூறில் “உண்டால் அம்ம” என்று வருமே அதுமாதிரி, கைமாறு கருதாமல் உதவக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வேதா நடந்தாள். அதோ பாரிமுனை தெரிகிறது. நடக்க நடக்க, அது மலை மாதிரி போய்க்கொண்டுதான் இருக்கும். ஆனாலும் பதினனந்து நிமிடத்தில் நடந்துவிடலாம். இதுக்காக இன்னொரு பஸ் வேண்டாம். பாரிமுனையில் இருந்து திருவான்மியூருக்கு நேரடி பஸ் இருக்கவே இருக்குது.

வேதாவுக்கு நடக்க நடக்க வலதுதோள் வலிப்பதுபோல் இருந்தது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஐந்து நிமிடம் வரை யோசித்தபடியே தொடர்ந்து நடந்தவளுக்கு அப்புறம்தான் புரிந்தது. லேசாய் தனது மக்குத் தனத்தையே எள்ளி நகையாடுபவள்போல் சிரித்துக்கொண்டாள். வலது தோளுக்கு வலிகொடுத்த ஜோல்னா பையை இடதுதோளுக்கு மாற்றுவதற்காக அதை எடுத்தாள். உடனே—

கண்கள் பறிக்கப்பட்டவள்போல் அவற்றை உருட்டாமல் பிறட்டாமல் வைத்தபடியே அந்தப் பையைப் பார்த்தால், மேலே போட்டிருந்த ஜிப் என்னமோ மூடித்தான் கிடந்தது. ஆனால் அந்தப் பையின் மத்தியப் பகுதியில் சதுரமான ஓட்டை, ஒரு கையை உள்ளேவிட்டு, தாராளமாக வெளியே எடுக்கலாம். பைக்குள் வெள்ளை வாயில் புடவை இருந்ததால் அது ஓட்டை மாதிரி தெரியாமல், பேஷனுக்கு வெள்ளைத்துணி தைத்து வைக்கப்பட்டிருப்பதுபோல் தோன்றியது.

வேதா அவசர அவசரமாக ஜிப்பைத் திறந்தாள். கை போட்டுத் துழாவினாள். பர்ஸைக் காணவில்லை. ஐந்து ரூபாய் நோட்டுக்களையும், ஒரு இரண்டு ரூபாய் நோட்டையும் உள்ளடக்கிய பர்ஸ். இல்லவே இல்லை. பைக்குள் இருந்த ஒவ்வொரு துணியாக வெளியே எடுத்து உதறினாள். இதற்குள், இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் எங்கேயும் கூடும் கூட்டம் அங்கும் கூடப்போனது, அவள் பைக்குள் துணிகளை மீண்டும் பலவந்தமாய் திணித்துவிட்டு, ஓட்டமும் நடையுமாக நடந்தாள். பிட்ஸ்ஸ்... வுட்ஸஸ்... அந்த ரெண்டு ரூபாய் நோட்டையாவது வச்சிருக்கலாம். இப்போ வீட்டுக்கு எப்படிப் போவது? அடக்கடவுளே... கடவுள் எதுக்குடி... ஆட்டோ ரிக்க்ஷா இருக்குதே...”

வேதா எதிர்ப்பட்ட ஆட்டோ ரிக்க்ஷாக்களை கையாட்டியபடியே நடந்தாள். ஒருசிலர் கண்டுக்கவில்லை. ஆனாலும் ஒன்று வந்து நின்றது. அதுவும் கிழடு. அதன் டிரைவரும் கிழடு வேதா இனிமையாகக் கேட்டாள்:

“திருவான்மியூருக்கு வாறிங்களா...”

“அய்யோ! திருவான்மியூரா! எந்த ஊருக்குப் போனாலும் போவேன். அந்த ஊருக்கு மாட்டேம்மா!”

ஆட்டோக் கிழடு போய்விட்டார். அதுபோன வேகத்தில் இன்னொரு ஆட்டோ சடன் பிரேக்கால் சக்கரங்கள் தரையில் கோடுகள் போடும்படி வந்து நின்றது. அவளை எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோகத் தயார் என்பது போல் குறுந்தாடி டிரைவர் அவளை குற்றேவல்காரர் போல் பார்த்தார்.

வேதா அந்த ஆட்டோ ரிக்க்ஷாவில் ஆனந்தமாகத்தான் ஏறப்போனாள். திடீரென்று ஆட்டோக் கிழவர் சொல்லி விட்டுப்போன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. சில திரைப்படங்களும், புத்தகங்களுக்குள் மூடி வைத்தும் படித்த, மாத நாவல்களும், இப்போதைய பத்திரிகை செய்திகளும் நெஞ்சுக்குள் ஊடுருவி அவளைப் பயமுறுத்தின. இந்த டிரைவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் எதில் ரிஸ்க் எடுத்தாலும் கற்பில் ரிஸ்க் எடுக்க முடியுமா...

வேதா ஆட்டோவை நோக்கி முன்வைத்த காலைப் பின் வைத்தாள். ஆட்டோ டிரைவர் முனங்கியபடியே வண்டியை நகர்த்தினார். வேதா நடக்க நடக்க யோசித்தாள். பஸ்சுக்கோ பணமில்லை. ஆட்டோவோ அபாயம். வீட்டுக்கு எப்படிப் போவது? திடீரென்று அவளின் படிக்காத சித்தப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. ‘பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவாது’ என்பார். டெலிபோனுக்கு உதவாதா என்ன... உதவும். வீட்டில் டெலிபோன் இருக்கு. அதுவும் பழைய படாதி டெலிபோன் அல்ல. பட்டன் கொண்ட டெலிபோன். டாடிக்கு போன் செய்தால் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ஓடி வரமாட்டாரா...

வேதா பர்மா பஜாரைத் தாண்டி டெலிபோன் இருக்கும் கடைகளைப் பார்த்தபடியே நடந்தாள். பல கடைகளில் ஏறி இறங்கினாள். ஒரு கடையில் டெலிபோன் அவுட்டாப் ஆர்டராம். இன்னொரு கடையில் ரெண்டு ரூபாயாம். மற்றொன்றில் சாவி இல்லையாம். இந்தக் கடைகளை விட்டுவிட்டு, அல்லது அந்தக் கடைகளால் கைவிடப்பட்டு அவள் ஒரு துணிக்கடைக்குள் நுழைந்தாள். ஆண் பெண் ஆடைகளைக்கூட ஒன்றாக சேர்ப்பதில் ரசனை கண்டவர் போல் சேலைமேல் பேண்ட் துணியை விரித்துப் போட்ட் சேவகர் ஒருத்தர் அவளை வரவேற்றார். “பாலிஸ்டரா? பாரினா? பட்டா?” என்று அடுக்கடுக்காய் கேட்டார். வேதா முதல் தடவையாகப் பிச்சைக்குப் போனவள்போல் கேட்டாள்:

“வீட்டுக்கு ஒரு டெலிபோன் செய்யனும் சார்!”

“கொடுக்கிறதில்லம்மா...”

“பர்ஸ் பிக்பாக்கட் ஆயிட்டு சார். அப்பாவை ஸ்கூட்டர்ல வரச்சொல்லணும் சார்.”

“அய்யய்யோ! ஆனாலும் நான் ஒனர் இல்லம்மா.”

“அப்பா வந்ததும் நீங்க எந்தப் புடவையை எடுக்கச் சொல்றிங்களோ அதை எடுக்கிறேன் ஸார். அப்பாவையும் பேண்ட் பீஸ் எடுக்கச் சொல்றேன் ஸார்! டெலிபோன் பீஸையும் கொடுத்திடுறேன். ஸார்!”

"சரி, சரி, மடமடன்னு பேசு! நம்பர் சொல்லு, நானே டயல் செய்யுறேன். ஏன்னா சிலர் ரெண்டு ரூபாய்க்கு டில்லிக்கு எஸ்.டி.டி. போட்டு பேசிடுவாங்க. நீ அப்படி இல்லன்னு தெரியும். இருந்தாலும் கண்டிஷன்னு ஒண்ணு வச்சிருக்கோம் பாருங்க!”

வேதா உதடுகளைக் கடித்தபடி சேவகர் சொல்வதைக் கேட்டுவிட்டு, ஒவ்வொரு நம்பராகச் சொல்ல, அதற்கேற்ப அவர் டயலைச் சுழற்ற, அந்தக் கடையின் ‘நம்பர் ஒன்’ வழுக்கைத் தலை கல்லாவில் இருந்து குதித்து. அவர்களுக்கு இடையே வந்து கர்ஜித்தது:

“டெலிபோனுக்குக் காசு வாங்கினியா...”

“வந்து ஸார்... இந்தப் பெண்ணோட...”

“நீங்க ரெண்டுபேரும் கிசுகிசு பேசினதை நான் கவனிச்சுட்டுத்தான் வாறேன். அறிவுகெட்ட கம்மனாட்டி, இந்தக் காலத்து நாகரீகத் திருடு பற்றி ஒனக்குத் தெரியாதா! டெலிபோன் செய்யுற சாக்குல ஒரு பட்டையோ, பாலிஸ்டரையோ பைக்குள்ளே வச்சுட்டால் ஒப்பனா காசு தருவான். ஒம்மாவா திருப்பித் தருவாள்! எந்த அழகான பெண்ணும் ஒன் கண்ணுல பட்டுடப்படாதே! கடையையே தூக்கிக் கொடுத்திடுவியே! அடுத்த வாரம் ஒன் கணக்கைத் தீர்க்கேனா இல்லியான்னு பாரு! இந்தாம்மா, ஒன்னைத்தான். மொதல்ல இடத்தைக் காலி பண்ணு. காலங்காத்தாலே, பத்துமணிக்குக் கடையைத் திறந்தவுடனேயே கலாட்டாவா, உருப்பட்டாப்லதான். இந்தாடா இந்தப் பொண்ணோட பையை செக் பண்ணி அனுப்பு. ஒன்னை இல்லடா. நீ ஒரு துணியை அவள் பைக்குள்ளே வைச்சுக்கூட அவளை வழியனுப்புவே!”

பாண்டவர் காலத்தில் துச்சாதனனாகப் பிறந்திருக்கக் கூடிய கடைச் சேவகன் ஒருத்தன் வேதாவின் ஜோல்னா பையைத் துழாவினான். துணிகளை எடுத்து வெளியே போட்டான். அப்படியும் திருப்தியடையாமல் ஒவ்வொரு துணியையும் உதறினான். அந்தப் பையைத் தலைகீழாகத் தூக்கினான். அவள் எதையும் ஒளித்து வைத்திருப்பாளோ என்று அவள் மார்பகத்தைக் கூட உன்னிப்பாய் பார்க்கப் போனான். வேதா கூனிக் குறுகினாள். பிறகு கோபத்தோடு திட்டப்போனாள். ஆனால் வாய்த்திட்டுக்களுக்குப் பதிலாக, கண்களில்தான் திட்டுத் திட்டாக கண்ணீர் வந்தது. அவன் நீட்டிய ஜோல்னா பையை வேண்டா வெறுப்பாய் வாங்கியபடியே வெளியேறினாள்.

வேதா அங்குமிங்குமாய் நடந்து அலைமோதினாள். “வீட்டுக்கு எப்படிப் போவது?” ஏன் போகமுடியாது? அதோ “உங்கள் நண்பன்” போலீஸ் ஸ்டேஷன் இருக்குதே. அப்பா செக்கரட்டேரியட்டில் அண்டர் செக்கரட்டரி. அவர் பேரைச் சொன்னாலே போதும். போதுமோ போதாதோ, இந்தமாதிரிச் சமயத்தில் உதவுவது போலீஸ் கடமை. யாச்சே!”

வேதா, அந்தக் காவ்ல்நிலையத்திற்குள் வந்தபோது, லாக்கப்வாசிகள் சந்தோஷப்பட்டு எதையோ எழுதிக் கொண்டிருந்த ரைட்டரை “ஸார்... ஸார்” என்றார்கள். உடனே கோபத்தில் முகம் திரும்பிய ரைட்டர் மகிழ்ச்சியை முகமாக்கினார். பிறகு முகத்தை மீண்டும் கஷ்டப்படுத்திய படியே அவளை அதட்டலாகப் பார்த்தார். வேதா மன்றாடும் தொனியில் விளக்கப்போனாள்:

“ஸார் எங்கப்பா.”

“ஒங்கப்பா யாரா இருந்தா என்ன, விஷயத்துக்கு வா!”

“என் பணத்தை பிக்பாக்கெட் செய்துட்டாங்க, திருவான்மியூர்ல வீடு. வீட்ல...”

ரைட்டர் ‘ராங்கரானார்...’ மனதுக்குள்ளேயே எப்ஐஆர் எழுதினார். பெண்ணோ அழகு, ஊரோ ஏடாகோடம், கேஸோ பிக்பாக்கெட்! மாதமோ கடைசி. நல்ல கேஸாத்தான் வந்திருக்கு ஜாமின்லகூட விடப்படாது.

ரைட்டர் பதவித் தோரணையில் பேசினார்:

“இதோ பாரும்மா! நீ எது பேசணுமுன்னாலும் இன்ஸ்பெக்டர்கிட்டேதான் பேசணும்.”

“ஸார் நான் என்ன சொல்ல வந்தேன்னா...”

“சொல்லவேண்டியதை இன்ஸ்பெக்டர் கிட்டேதான் சொல்லனும்.”

“அவர் எப்போ வருவார்?”

இப்போ வரலாம்! சாயங்காலம் வரலாம்! வீட்டுக்குப் போனாரோ. பீட்டுக்குப் போனாரோ!

“அப்போ!”

“அதுவரைக்கும் நீ இங்கேயே உட்காரணும்.”

“எங்கப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சா!”

“சரிதான் உட்காருமே! நீ யாரோ.. எவேளா.. எது வேணுமுன்னாலும், இன்ஸ்பெக்டர் வந்து ரிகார்ட் செய்வார். இந்தண்ட அந்தாண்ட நகராமல் இங்கேயே இரு இல்லன்னா உள்ளே தூக்கிப்போட்டுடுவேன்... ஏய் டு நாட் ஒன்.”

வேதாவுக்கு, பயம் பிடித்தது. அந்த பயமே பீதியானது. கைகால்கள் ஓடப்போவதுபோல் ஆடின. இதற்குள் ஒரு டெலிபோன். ரைட்டர் இன்ஸ்பெக்டர் அறைக்குள் ஒடிப் போய் டெலிபோன் குமிழைத் தாவிப் பிடித்தபோது, லாக்கப்வாசிகள் அவளை ‘போயிடு, போயிடு’ என்பது போல் சைகை செய்தார்கள்.

வேதா, அந்த காவல் நிலையத்தை விட்டு பூனைமாதிரி நகர்ந்தாள். பிறகு போலீசுக்கு அகப்படாமல் இருப்பதற்காக சந்துபொந்துகளில் ஓடினாள். அப்போது ஒரு சிலர் அவளைச் சந்தேகமாகப் பார்த்தபோது, ஓட்டமும் நடையுமாக நடந்தாள். முட்டுச்சந்து மூடச்சந்து, முடியாத சந்து என்று சந்து சந்தாகவும், ஒண்ணாவது தெரு, இரண்டாவது குறுக்கு, நாலாவது லேன் என்று தெருத்தெருவாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியும், அப்படித் திரும்பினால், அடையாளம் கண்டுகொள்ளப்படலாம் என்று திரும்பாமலும் ஒடினாள். கால்கள் தானாக நின்றபோது அவளுக்கு நின்ற இடமோ அதன் திக்கோ திசையோ தெரியவில்லை. இவ்வளவுக்கும் ஒரு ஐம்பது வயதுக்காரனிடம்தான், அவள் கேட்டாள்—திருவான்மியூருக்கு எப்படி வழி என்று. ஆனால் அந்த மனிதரோ, “என் கூட வா” என்று சொல்லி அவளுக்கு இணையாக நடந்தார். அவள் தந்தையோடு நடப்பதுபோல் நடந்தபோது, அவர் கையைப் பற்றியபடியே “ஹோட்டலுக்குப் போயிட்டுப் போகலாம்” என்றார். வேதா பீதியுற்றாள். அந்தப் பீதியுடன் இனந்தெரியாத தைரியமும் தானாய் வந்தது. அவரைக் கோபமாகவும், விரோதமாகவும் முறைத்துப் பார்த்தாள். மீண்டும் ஒட்டமும் நடையுமானாள் ஆங்காங்கே போலீஸாரைக் கண்டபோது மட்டும், தன்னைத்தானே மறைத்துக் கொண்டாள்.

எப்படியோ, கடற்கரைச் சாலையைக் கண்டுபிடித்து, கண்ணகி சிலையைக் கடந்து வானொலி நிலையத்தைத் தாண்டி வேகவேகமாய் நடந்தாள். வடசென்னையில் இருக்கும் சித்தியை கோபம் கோபமாய் நினைத்துக்கொண்டாள். “நான் தனியாகவே திருவான்மியூருக்குப் போறேன்னு சொன்னது நிசந்தான். அதுக்காக, என்னைத் தனியாகவே விட்டுடுறதா... இனிமேல் வடசென்னைக்கே போகப்படாது காலேஜுக்குக் கூட டாடியை ஸ்கூட்டர்லதான் கொண்டு போய் விடச் சொல்லணும். இல்லன்னா லூனா வாங்கித் தரட்டும்.”

வேதாவுக்கு தாகம் எடுத்தது. உச்சிவெயில், உள்ளங்கால்களைக்கூடத் துளை போட்டது. தலை சுற்றியது. கீழே விழப்போவது போன்ற மயக்கம். பெற்றோரையும் உடன் பிறந்தோரையும் பார்த்துவிட்டுத்தான் உடல் சாய்க்க வேண்டும் என்ற உறுதி.

இடையிடையே இளைப்பாறாமலே, எந்தப் பக்கமும் கண்களைத் திருப்பாமலே, வேதா நடந்து நடந்து, வீடு இருக்கும் தெருவுக்கு வந்துவிட்டாள். அங்கே அப்பா, அம்மா தம்பி, தங்கைகள் வாசலுக்கு வெளியே நின்றார்கள். அம்மா அங்கிருந்தபடியே இரண்டு கைகளையும் நீட்டினாள். அவள் தம்பி அவளை நோக்கி ஓடி வந்து வேதாவின் கையைப் பிடித்துக்கொண்டே கதைபோல சொன்னான்:

“எக்கா, எக்கா! அம்மா அழுதுட்டாங்க. நானும் அழுதுட்டேன். இந்த பாருதான் அழலக்கா. திருட்டுப் பொண்ணு. அவளுக்கு டி.வி.யில் இந்தி டிராமாவுக்கு அர்த்தம் சொல்லாதே. டாடி இப்படி பயந்து நான் பார்த்ததே இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகப் போனார். மம்மிதான் தடுத்துட்டாங்க, எங்கக்கா போனே, சித்தி... நீ காலையில ஒன்பது மணிக்கே பஸ் ஏறிட்டதாய் போன் போட்டாள். ஏன் லேட் எனக்கு என்ன வாங்கீட்டு வந்தே!”

“என்னையே வாங்கிட்டு வந்திருக்கேன் ராஜா!”

வேதா, ஒடினாள். பெற்றோர்கள் மார்பில் சாயவோ, மனம்விட்டுக் கதறவோ ஓடினாள். தனக்காக அவர்கள் பட்ட வேதனையில், பாசத்தின் சாதனையைக் கண்டவளாய். சிரிப்பும் அழுகையுமாக அவள் ஒடியோடி வீட்டு வாசலுக்குள் நுழைந்தபோது-

டாடி அவளருகே நெருங்கி வந்தார். வேதா, தந்தையின் தோளில் சாயப்போனாள். ஆனால் அவரோ அவள் தலைமுடியை வலது கையால் பற்றினார். பற்றிய கையைச் சுற்றினார். அவள் சுருண்டு விழுந்தாள். விழுந்தவள் விலாவைக் காலால் இடறியபடியே அப்பாக்காரர் கத்தினார்:

“எச்சிக்கலை நாயே! வீட்டுக்கு எப்போ வேணுமுன்னாலும் வரலாம் என்கிற அளவுக்கு திமிரு வந்துட்டா? நாலு மணி நேரமாய் எங்கே போனே? பொட்டைக் கழுதைக்கு இவ்வளவு தைரியமா... ஏய் விடுடி என்னை. எல்லாம் நீ கொடுத்த செல்லம்.”