இன்னொரு உரிமை/வரம்பு மீறிகள்
வரம்பு மீறிகள்
அரசாங்கக் கடனில் கட்டப்பட்டதால், 'கடனே' என்று காட்சி காட்டும் சின்னஞ்சிறிய அந்த வீட்டின் விசாலமான முன்புறத்தில், அந்த இடத்தின் ஒரே ஓர் அலங்காரமாய்த் தோன்றும் பூச்செடிகளில் மலர்களைக் கொய்து, கையில் இருந்த பூக்கூடையை அந்த மலர்களாலேயே, பொங்கி வழியவிட்டு, வீட்டுக்குள் வந்த இசக்கியா பிள்ளை ஓர் ஓரமாய் உள்ள பூஜை அறைக்குள் வழக்கமான வேகத்தோடு தான் போகப் போனார். சமையலறையைத் தாண்டி, அவள் இருந்த அறையின் நினைவே இல்லாமல் அகலப் போனவரை, அந்தக் குரல் கட்டிப் போட்டது. டேப்புகளால் பின்னப்பட்ட கட்டிலில், கரங்களைப் பின்னி, அந்தப் பின்னலையே தலையணையாக்கி, குப்புறக் கிடந்த மகளை 'சிவசிவ' என்று மனதுக்குள் ஓலமிட்டு மருண்டபடி பார்த்தார், அடியற்றுக் கிடந்த அவளோ, தோள்களை நிமிர்த்தாமலே கழுத்தை வளைத்து தந்தையையே பார்த்தாள்.
இசக்கியா பிள்ளைக்கு அவள் தனது கழுத்தில் தொங்கும் உத்திராட்ச மாலையையே பார்ப்பதுபோல் தெரிந்தது. அதைப் பறிக்கப்போவது போன்ற பார்வை... உடனே அவர், மார்பின் முடிவிற்கும், வயிற்றின் தொடக்கத்திற்கும் எல்லைக்கோடான நெஞ்செலும்புக் கூட்டின் இடைவெளியில், ஒற்றை உத்திராட்சக் கொட்டையுடன் முற்றுப்பெற்ற மாலை முனையை ஒரு கையில் பிடித்து, அந்த மாலையைக் கழற்றாமலே சுருட்டிக்கொண்டார். ஒரு கைக்குள்ளேயே மறைத்துக்கொண்டார். இப்போது, அவள் இன்னொரு கையிலுள்ள பூக்கூடையைப் பார்ப்பதுபோல் இருந்தது. கையசையமாலே அந்தக் கூடை ஆடியது. அவள் கண்களே அதை ஆட்டி வைப்பதுபோல் தோன்றியது.
இசக்கியா பிள்ளை கால்களை அங்குமிங்குமாய்த் தேய்த்தபடி, சிறிதுநேரம் காலடி வட்டத்திற்குள்ளேயே ஒற்றைக்காலில் சுற்றினார். பிறகு அவள் சொன்னதைக் கேட்காததுபோலவும், அவள் பார்த்தது கண்களில் படாதது போலவும், பாவனை செய்தபடியே பூஜை அறை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். மகளின் இன்னொரு கேள்வி அவர் உடம்பைக் குலுக்கியது.
"பூஜை அறை இருக்கறதுக்கு, இந்த வீட்டுக்கு என்ன யோக்கியதை இருக்குது?"
இசக்கியா பிள்ளை பூஜையறையில் துணிக்கதவு போலான அந்தத் திரைச்சீலையைப் பார்த்தார். ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் உடுக்குமாய்க் காட்சி காட்டும் அந்தச் சீலையில் பொறித்த திரிபுர சுந்தரியையே பார்த்தார், மகளை மாதிரியே அம்மாவின் முகம். “ஒன்னைத்தான் பார்க்கிறேன். என்பது மாதிரியான பிரிந்தும் பிரியாதது போன்ற உதட்டோரச் சிரிப்பு. அழுத்தமான பார்வை. அங்கேயே அப்படியே அசைவற்று நின்றார். 'அம்மா எனக்கு பூஜை செய்ய யோக்கியதை இல்லையாம்மா... சொல்லம்மா!'
அம்மாவே சொல்ல வந்தது போல், சமையலறையில் இருந்து. முகத்தில் பவுடர்போல் அப்பிய கோதுமை மாவோடு காமாட்சி வெளிப்பட்டாள். கணவருக்கு முன்பே காரியம் ஆற்றுபவள் என்பதைக் காட்டுவதுபோல் ஈரத்தலை... நெற்றியை ஒளியடிப்புச் செய்யும் விபூதி... நெற்றிப் பொட்டை மறைக்கும் பெரிய குங்கும வட்டம்.
காமாட்சி மகளைப் பார்த்து ஓடினாள். ஓரடி துள்ளி, ஈரடி நடந்து மூன்றடியில் நின்றவண்ணம், மகளையும் அவளைக் கொடுத்தவரையும் மாறி மாறிப் பார்த்தாள். காது வளையங்கள், கட்டிலின் அணிகலன்கள் போல் தோன்றும்படி கட்டில் சட்டத்தில் முகத்தை அழுந்தப் போட்டிருந்த மகளைப் பார்த்தாள். பூஜை அறைக்கு வெளியே நிற்கமுடியாமலும், உள்ளே போக முடியாமலும் தவிக்கும் அவரைப் பார்த்தாள். அவர் பிடித்த பூக்கூடை சரிந்து, மலைமகளுக்கான செம்பருத்தி மலர்களும், கலை மகளுக்கான வெண்பருத்தி மலர்களும் கீழே விழுந்து கிடந்தன, பின்னிக் கிடந்தவை பிரிந்து கிடந்தன. உயரமானாலும், ஒட்டடைக் கம்பின் அழுத்தம் கூட இல்லாமல், பூஞ்சை உடம்போடு பூப்பாரம் சுமக்க முடியாமல் வந்து நின்ற கணவனைப் பார்த்தாள், தாய்மையைக் கண்ணகித் தன்மை விரட்டியதை சாட்சி கூறுவதுபோல், குரலில் முன்பாதியில் கனிவையும், பின்பாதியில் கடுமையையும் கலந்தபடி பேசினாள்.
"ராகுகாலம் வரப்போகுது... நீங்க மொதல்ல உள்ளே போங்க. ஏய் இந்திரா வாய் ரொம்ப நீளுது..."
"அவன் கை நீண்டதைக் கேட்கத் துப்பில்லாமல் என் வாயை அடைக்க வந்துட்டிங்களா! பரவாயில்ல... மகளுக்கு ஏத்த அம்மாவாய் இருக்கமுடியாவிட்டாலும், புருஷனுக்கு ஏத்த பெண்டாட்டியாய் இருக்கறதுல சந்தோஷந்தான்..."
காமாட்சி, பாயைச் சுருட்டுவதுபோல் தன்னைச் சுருட்டிக்கொண்டு தொட்டு எழுந்து அந்த அறைக்குள் அங்குமிங்குமாய் சுற்றும் மகளையே பார்த்தாள். அவளோ, அவளை அங்கீகரிக்காமலே ஒரே சுற்றாய் ஆனவள்போல், பல சுற்றாய்ச் சுற்றினாள்.தாயும், மகளும் மெளனித்ததை தடங்கல் தீர்ந்ததாய் நினைத்துக்கொண்டு இசக்கியா பிள்ளை பூஜையறைக்குள் போனார். திரைச்சீலையை ஒரு பக்கமாய் தள்ளுவதற்கு மறந்து, அதை இரண்டாய் மடித்து நிலைப்படிக் கம்பியில் செருகினார். அதில் திரிபுரசுந்தரி காலும் கையும் குறுக்கப்பட்டு குறுகிக் கிடந்தாள்.
பூஜையறைக்குள் வந்த இசக்கியா பிள்ளை, எந்தச் சோதனையிலும் பூஜை நிறுத்தம் ஏற்படக்கூடாது என்று கடுக்கன் போட்ட அப்பா கிராமத்தில் உபதேசித்ததை நினைவுக்குக் கொண்டுவந்து அந்த அறையே ஆகாயமும் பூமியும் என்பதுபோல் அண்ணாந்தும், தலை தாழ்த்தியும் பார்த்துக்கொண்டார். அந்த அறை அனைத்தையும் உட்கொண்ட பிரபஞ்ச அறையாய்த் தோன்றியது. வீட்டைக் கட்டும்போது அறுநூறு சதுர அடிக்குள்ளேயே தனியாய் ஒரு பூஜை அறை கூடாது என்றாள் மனைவி. இவர்தான் அவள் காலில் விழாத குறையாக விழுந்தார். அவள் மசியவில்லை. ஒருநாள் அவள் வெளியூர் போனபோது, மேஸ்திரிக்குக் குடிக்கப் பணம் கொடுத்து, இந்தச் சின்ன அறையைக் கட்டி விட்டார். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கடப்பா பளிங்குக்கல்லை வாங்கியும் பொருத்திவிட்டார். அது நட்சத்திரக் குவியல்களைக் காட்டும் ஆகாய நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. இரண்டடி உயரத்தில், ஐந்தடி நீளத்தில் மூன்றடி முன் நோக்கிய அந்தப் பளிங்குக்கல்லில் மூன்று தெய்வப்படங்களைக் கொண்ட ஒரு படம். வலப்பக்கம் சுப்பிரமண்யர் ஆலய மூர்த்தியாக ஆதிசேஷ முருகன் பாம்பின்மேல் இருக்கிறார். இடப்பக்கம் உடுப்பி கிருஷ்ணர். நடுப்பக்கம் தர்மஸ்தலா லிங்கம். பக்கவாட்டில் ஒரு பக்கம் அய்யப்பன் மறுபக்கம் திருத்தணி முருகன். இரு சுவர் மடிப்புகொண்ட ஒரு மூலையில் மூகாம்பிகை. அம்மாவின் அருகே பிள்ளை யார் இன்னொரு மூலையில் பஞ்சமுக அனுமான். அதற்கு அருகே இரு கரத்தில் வீணையும், ஒரு கரத்தில் உத்திராட்சமாலையும், மறுகரத்தில் எத்தனையோ மகான்களும் கவிஞர்களும், மாமேதைகளும் படைத்த தத்துவக்கடலை. ஓர் ஏட்டுச்சரமாய்க் கொண்ட இன்னொரு கரமும் கொண்ட சரஸ்வதி தேவி.
இசக்கியா பிள்ளை ஒவ்வொரு தெய்வப்படத்தின் முன்னாலும், ஒவ்வொரு மந்திரத்தைச் சொல்லிக்கொண்டார்.
ஓம் வக்ர துண்டாய நம:
ஓம் சரவணபவ...
ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமசிவாய நம:
ஓம் விஸ்வமாதா ஜகத்தாத்ரி...
ஓம் சரஸ்வதி தேவி நம:
'புத்திர் பலம்' என்று சொல்லிக்கொண்டே பஞ்சமுக அனுமார்மேல் பூச்சூடப்போன இசக்கியா பிள்ளை, கைப்பூவை, ஆஞ்சநேயரின் உச்சந்தலையில் சூட்டியபடி, அந்தக் கையை எடுக்காமலே, வெளியே தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் வாக்குவாதத்தை உற்றுக் கேட்டார்.
"எத்தனை தடவ ஒனக்குச் சொல்றது... அந்தக் கம்ப்யூட்டர் சென்டர் இல்லாட்டால் இன்னொரு சென்டர். கட்டுன பணம், வீணாச்சேன்னு அப்பாவோ நானோ வருத்தப்படுறோமா?"
"ஒங்களுக்கு எப்படிக் கட்டுன பணம் வீணான திலே வருத்தம் இல்லியோ, அப்படி அந்தப் பிரின்ஸ்பால் பயல் என் கையைப் பிடிச்சு இழுத்ததுலயும் வருத்தமில்லை இல்லியா?"
"துஷ்டனைக் கண்டால் தூர விவகித்தான் ஆகணும். காலம் கலிகாலம்."
"அப்போ இனிமேல் கலியுக வரதான்னு ஆகாயத்தைப் பார்த்துப் பேசாதீங்க!"“கவலைப்படாதம்மா... நாம் கும்புடுற தெய்வம் அவனைக் கவனிச்சுக்கும்.”
“தெய்வமுன்னு இருந்தால் முதல்ல அது ஒங்களைத் தான் கவனிக்கும். எப்படியோ பன்றிக்குட்டிமாதிரி பெத்துப் போட்டுட்டிங்க! பன்றியாவே இருக்கச் சொல்றீங்க, ஆனால், என்னால... என்னால.”
இசக்கியா பிள்ளைக்கு மகளின் விசும்பல் சத்தமும், அதற்குப் பதிலாக மனைவியின் விக்கல் சத்தமும் கேட்டன. அதன்பிறகு மெளனம். “நீங்களே கேளுங்க. நான் பாடும் பாட்டைக் கேளுங்க” என்று அத்தனை படங்களையும் அனுசரணைக்காய்ப் பார்த்தார். பிறகு பத்மாசனம் போட்டார். அந்தப் பளிங்குக்கல்லின் மத்தியில் படங்களை மறைக்காமல் உள்ள சின்ன குத்துவிளக்கை ஜோதியாக் கினார். ‘ராமலிங்காய’ என்று சொல்லிக்கொண்டே இதயத்தில் இருந்து, தொண்டைக் குழியில் தெறித்து, காதில் விழுந்த சுயம்பு வார்த்தைகளைத் தனக்குள்ளேயே கேட்டார்.
எச்சோதனையும் இயற்றா தெனக்கே...
அச்சோ ஏற்றருள் அருட்பெருஞ் ஜோதி.
இசக்கியா பிள்ளை வள்ளலார் அருளிய அருட்பெருஞ் ஜோதி அகவல் புத்தகத்தை எடுத்தார். திருவடிப் புகழ்ச்சியை ஓதிவிட்டு அகவலைப் படித்தார். ஐம்பூத இயல்வகை, மண்ணியல், நீரியல், தீயியல், காற்றியல், வெளியியல், அகப்புறம், ஐம்பூதக் கலப்பு, வெளிவகை, அண்டப்பகுதி, கடல்வகை, மலைவளம், வித்தும் விளைவும், ஒற்றுமை, வேற்றுமை, ஆண் பெண் இயல், காத்தருள் வேண்டுதல் போன்ற பாக்களைப் பாடல்களாக்கினார்.
மீண்டும் தாய் மகள் யுத்தம் தொடங்கியதால் அவரால் தொடர முடியவில்லை. காது கொடுத்துக் கேட்டார்."ஏதோ நம்ம நல்ல காலம்... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போன மாதிரி கையைப் பிடிச்சதோட விட்டுட்டானே! நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது நடந்திருந்தால்... எப்படியோ அப்பாவோட பூஜா பலன், ஒன்னைக் காப்பாத்திட்டு, ஆண்டவன் அவனுக்குக் கூலி கொடுப்பான், இந்தத் தப்புல தப்பிச்சாலும் அடுத்த தப்புல மாட்டிக்கு, வான்!"
"ஒரு தப்புச் செய்தால் அந்தத் தப்புக்குன்னு தண்டனை கிடைக்கணும். அப்போதான் அந்தத் தப்பே அப்புறம் நடக்காது. இன்னும் விவரமாய் விளக்கம் கேட்டால் தப்புச் செய்தவன் நல்லது செய்யும்போது- அந்த நல்லதே தப்பாகி, தண்டனை கிடைக்குமுன்னு சொல்வீங்க. அதனால கெட்டது ரெட்டிப்பாகும். நல்லது ஓடிப்போகுமுன்னு நானும் பதில் சொல்ல வேண்டியது வரும்!"
"சரி, பல்லை விளக்கு. நேத்து ராத்திரியே சாப்பிடலை."
"எப்படிம்மா சாப்பிட முடியும்? லைப்ரரியில் ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு நின்ன என்னை, அந்தப் புத்தகத்தைப் பார்க்கிற சாக்கில், கழுத்தில் முகம் போட்டு அதன்பிறகு ஓடப்போன என்னை கையைப் பிடிச்சு... அந்தப் பயலை அடக்கவே முடியாதா?"
இசக்கியா பிள்ளையின் காதுகளில் மேற்கொண்டு எந்த வார்த்தையும் விழவில்லை. மாறாக மனைவியின் அழுகைச் சத்தம் கேட்டது. அவர் துள்ளிக் குதித்து எழப்போனார். அதற்குள் அவள் சத்தமடங்கி, தைரியப்பட்டதுபோல் தோன்றியது. மகளும் மறுவார்த்தை பேசாததில் இருந்து, விவகாரம் தீர்ந்துவிட்டதாய் நினைத்து அருட்பா அகவலைப் படிக்கத் தொடங்கினார். ஓதுவார் போலவே தாள லயத்தோடு ஓசை உயிரோடு ஓதிக்கொண்டிருந்தார்.
"மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு
மீண்டும் தாய்-மகள் சொற்போர். சொற்போர் என்பதைவிட ஒருவிதமான கெடுபிடிப்போர்.
"போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுக்கிறதுல என்னம்மா தப்பு?"
"தட்பு கம்ப்ளெய்ண்ட்ல இல்ல! போலீஸ்ல இருக்குது! கோர்ட்ல இருக்குது! இந்தச் சமுதாய அமைப்புல இருக்குது!"
"தட்டிக் கழிக்கணு முன்னா எனத வேணு முன்னாலும் தட்டிக் கழிக்கலாம்."
"ஒனக்கு பட்டறிவு போதாது. அதனால தான் இப்படிப் பேசுறே! போலீஸ்ல புகார் கொடுத்தால் மொதல்ல அவங்க கேட்கிற கேள்விகளே கற்பழிக்கப்பட்டதைவிடப் பயங்கரமா இருக்கும், உடலுக்குப் பதிலா உள்ளத்தையே கற்பழிச்சுடுவாங்க. அப்படியே அவங்க நடவடிக்கை எடுத்தால்... எடுத்தால்... என்ன. எடுக்கலாம். ஏன்னா , அவங்களுக்கும் பொண்ணுங்க இருக்குமே. அந்தச் சண்டாளப்பயலைக் கைது செய்து லாக்கப்புல வைக்கிறதாய் அனுமானம் செய்துக்கோ! இப்படிப்பட்ட வழக்குக்கு, ஜாமீன் கொடுக்கத் தான் கோர்ட் இருக்கே! கோர்ட்டுல அந்தப் பாவிப்பயல் மட்டுமா கூண்டுல நிற்பான். நீயும் நிற்கணுமே... அவன் வக்கீல், - நீதான் அவனை ஒன் வலையில சிக்க வைக்கப் பார்த்தேன்னு கேட்டால்... இல்லன்னா நீண்ட நாள் பழக்கத்தில அவன் அப்படிச் செய்தான், அன்றைக்குன்னு கட்டுன மனைவி பார்த்துட்டாள். அதனால் நீ பயந்துட்டேன்னு அடிச்சுப் பேசுவான். அவன் பொண்டாட்டியும் புருஷனுக்கு சாட்சி சொல்லுவாள். இந்த ஏழை தமிழாசிரியை என்ன செய்ய முடியுமம்மா?"
"ஒங்களால் முடியும்! மதுரையை எரித்த கண்ணகியைப் பற்றிப் பேசுறதை நிறுத்த முடியும். 'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே' என்று சூளுரைத்தானாமே நக்கீரன்.-- அதனைப் பற்றிப் பாடம் நடத்தாமல் இருக்க முடியும்!"மனைவியின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்த இசக்கியா பிள்ளை மீண்டும் நெடிய மௌனம் நிலவியதைக் கண்டார். தெய்வ வழிபாடு, இப்படிப்பட்ட லோகாயத விவகாரங்களால் தடைப்பட்டதற்கு வருந்தி, தம்பணம் போட்டுக் கொண்டார். அபிராமி அந்தாதியை எடுத்தார். கம்பெனி சகாக்களுடன் "தெய்வப் பயணம்" மேற்கொண்ட போது வாங்கிய புத்தகம். திருக்கடவூர் அபிராமிதேவியை அபிராமி பட்டர் பாடியதைப் பாடும்போதெல்லாம் இவரது குரல் தழுதழுக்கும். எலும்புருகிப் போகும். உடல் முழுதும் ஜோதியாவது போல் தோன்றும். அந்த அபிராமி பட்டருக்கு வராத துன்பமா? அவர் பட்ட பாட்டில்... என் பாடு சிறுபாடு...
"பரிபுரச் சீரடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரச் சுந்தரி ; சிந்துர மேனியள்; தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்பு சிலைக்கை
தடுத்தது இசக்கியா பிள்ளையின் பக்திப் பரவசத்தை. மீண்டும் தாய்-மகள் யுத்தம்.
"போராடும் முன்னாலேயே தோல்வியை ஒப்புக்கொண்டால் என்னம்மா அர்த்தம்? இன்ஸ்பெக்டர்கிட்டே சொல்லுவோம். அவர் கேட்காட்டா அஸிஸ்டெண்ட் கமிஷனர்! அவரும் சரிப்படாட்டா டெப்டி கமிஷனர்! அப்புறம் கமிஷனர்! டைரக்டர் ஜெனரல்! இவங்களாலயும் முடியாவிட்டால் முதலமைச்சர். இல்லாத பொண்ணுங்களை என்னவேணுமுன்னாலும் செய்யலாமுன்னு நினைக்கிறாங்க பாருங்க! இந்தமாதிரிப் பயல்களை விடப்படாதும்மா!"
"அம்மாவுக்கு ஒன்னைவிட யாரும்மா முக்கியம்? அப்படியே போலீஸ் மூலமாய் கோர்ட்டுக்குப் போய், நீ வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி, தோல்வியைவிட மோசம்மா... ஆமாம்மா. ஒரு பெண்ணோட பேரு நல்லவிதமாக்கூட அடி “படக்கூடாதுன்னு நினைக்கிற சமுதாயம் இது. ஒன் பெயர் பேப்பருல வந்தால், நீ ஒரு போராட்டக்காரின்னு படிக்கிறவன் நினைப்பான். ஆனால், ஒன்னைக் கட்டிக்க வரவன் அப்படி நினைக்கமாட்டான். நீதான் ஏதோ செய்யக் கூடாத தப்பைச் செய்ததாய் நினைத்து ஓடிப்போயிடுவான். அப்புறம் நீ அந்த மணிமேகலை மாதிரி காலமெல்லாம் கன்னியாய்... இப்பவாவது புரியுதாம்மா!”
இசக்கியா பிள்ளை அபிராமி அந்தாதியை அங்குமிங்குமாய் ஆட்டியபடியே ஒட்டுக் கேட்டார். மகளுக்கு அம்மா சொல்வது புரிந்துவிட்டதுபோல் தோன்றியது. அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அபிராமிவல்லி ‘அவள்’ மூலம் அவளுக்கு உபதேசித்துவிட்டாள். “அம்மா தாயே! தயவே... என் மகளுக்கு நல்ல புத்தியைக் கொடு.”
இசக்கியா பிள்ளை அந்த அந்தாதியின் ஒரு பகுதியைப் படித்துவிட்டு, நாளை விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்காக ஒரு மல்லிகைப்பூவை, படித்த-படிக்காத பக்கங்களுக்கு இடையில் வைத்துவிட்டு தேவாரத்திரட்டை எடுத்து ‘வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டனை’ ஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தில் ஓசைப் பிழையின்றி அட்சர சுத்தமாய்ப் பாடினார். பாடிக்கொண்டே இருந்தார். பிறகு அப்பர் அருளிய பகுதிக்கு வந்தார்.
“நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.”
வெளியே இப்போது அஞ்ச வைப்பது போன்ற வார்த்தைப் பிளிறுகள்... இந்திரா, ஏதோ ஒரு நாற்காலியை உடுக்காக்கி, காலடி தரை மோதிச் சத்தம் எழுப்ப ஊழிக் கூத்தாய்—காளிக் கூத்தாய் சாடிக்கொண்டிருந்தாள்.
“பெண்மைக்குக் களங்கம் வரக்கூடாது என்கிறதுக்காகப் போராடுற என்மேல் களங்கம் நினைக்கிற எந்தப் பயலும் எனக்கு வேண்டாம். கல்யாணம் என்கிறது ஒருத்த னோட சம்மதத்தில் மட்டுமில்ல. ஒருத்தியோட சம்மதத்துலயும் இருக்குது என்கிறதை மறந்துடாதீங்க! அத ஏதோ... ஒருத்திக்கு ஒருத்தன் கொடுக்கிற சலுகை இல்லே. நல்லவனோட கல்யாணம் நடக்கணும் என்கிறதுக்காக அயோக்கியனுக்கு அஞ்சி, ஒடுங்கி இருக்கப்படாது. அந்தப் பிரின்ஸிபால் பயலுக்குக் கொடுக்கிற பாடத்தைப் பார்த்துட்டு, அவனை மாதிரியான பயல்களெல்லாம் பெட்டிப் பாம்பாய் ஆகணும்!"
"நான் எதுக்குச் சொல்லுதேன்னால்..."
"சத்தியத்தைத் தேடுறது தான் மெய்யான பக்தின்னு டியூஷனுக்கு வார பிள்ளைங்ககிட்டே காசு வாங்கிட்டுக் கத்த மட்டுந்தான் ஓங்களுக்குத் தெரியுமா? ஒருத்தன் ஒரு பெண்ணோட வரம்பை மீறும்போது, அந்தப் பெண் தன்னோட வரம்பை அடக்கிக்கிட்டு இருக்கறது தான் தமிழ்க் கற்பா! குப்பையில் போடுங்க கொண்டு."
"நீ இப்போதான் இளமையின்..."
"நாலு நாளைக்குள்ளே நான் கிழவியாய் ஆயிட்டேம்மா. சரி. எப்படியோ தொலையுங்க! காலமெல்லாம் நான் கூனிக்குறுகியே கிடக்குறேன். அவன் தொட்ட இந்தக் கைகூட ஏதோ விபத்துல விழுந்துட்டாலும் அவன் தந்த விபத்த என்னால் மறக்க முடியுமா? வலியவனைக் கண்டு அவனோட வம்பையும் பொறுத்துக்கிட்டு மெலியவர் இருக்கிறது தான் நியாயமுன்னு அநியாயமாய்ப் பேசுறீங்க.... ஓர் அநியாயத்தை வெளில பேசுறது கூடத் தப்புன்னால் அது அந்த அநியாயத்துக்கு உடன்போவதாய் ஆகாதா? அதோ அப்பா 'நாமார்க்கும் குடியல்லோ'முன்னு ரொம்பத்தான் கத்துறார். அவருக்கு அதோட அர்த்தம் தெரியாது. தமிழா சிரியையான ஒங்களுக்காவது தெரியுமா! நாமார்க்கும் குடியல்லோ முன்னு... ஓதி... அப்பர் பாடுவதைக் கொச்சப்படுத்தாண்டாமுன்னு அப்பாகிட்டே போய்ச் சொல்லு.அர்த்தம் தெரியாமல் எந்தப் புனித வரியையும் வாசிக்கிறது அந்தப் புனிதத்தையே அவமதிக்கிறது மாதிரி. கையைத் தானே பிடித்தான்னு, அதுக்குப் பின்னால இருக்கிற ஆணவத்தை, அகந்தையைத் தெரியாமல் இருக்கீங்களே, அதேமாதிரிதான்!”
இசக்கியா பிள்ளையின் கண்ணீர் நாமார்க்கும் குடியல்லோம் வாசகங்களை நனைத்தது. அந்தப் பாடலை, அப்பர் பிரான் பாடிய சூழலை எண்ணிப் பார்த்தார். அப்பரே அங்கே வந்து... அவரையே ஒரு எதிர் பக்தியாளனாய், தன்னைக் கடலில் கல் கட்டித் தூக்கிப்போட்ட அந்த மன்னனின் மறுவுருவமாய்ப் பார்ப்பதுபோல் தோன்றியது. இந்தப் பாடலின் மெய்யான தாத்பரியம், அவர் இதுவரை யந்திரகதியில் ஓதிவரும் மந்திரங்களுக்குப் புதிய அர்த்தத் தைக் கொடுத்தது. புத்திர்பலம், யசோர் தைரியம், நிர்ப்பயத்துவம்... ஆம், பயம்தான்... பயப்பட வேண்டும். கொத்து திரி சூலிதிரி குலச ஓங்காரி... ஆங்காரி... ஓங்காரி போன்ற சொற்கள், புதுப்பொருளைக் கொடுத்த சூலாயுதம் என்பது பாலாபிஷேகம் செய்வதற்காக மட்டுமல்ல, நாமார்க்கும் என்பது ஓதுவதற்கும், உச்சரிப்பதற்கும் மட்டும் அப்பர் பெருமான் ஆக்கவில்லை.
இசக்கியா பிள்ளை மகளையே ஒரு துர்க்கையாக அனுமானித்தார். தன்னுள்ளே ஒரு கடல் பொங்குவதைக் கண்டார். அதிலே திரிசூலமும், உடுக்கும் எழுவதைப் பார்த்தார். நாமார்க்கும் குடியல்லோம்... ஆமாம்... அஞ்சி ஒடுங்கி வாயில்லாப்பூச்சியாய் இருப்பது அப்பர் பிரானை அவமதிப்பதற்கு ஒப்பாகும். சட்டம் என்ற கல்லைக் கட்டி, நீதிமன்றம் என்ற கடலில் போட்டாலும், நாமார்க்கும் குடியல்லோம்.
இசக்கியா பிள்ளை கற்பூரத்தை ஏற்றினார். ஆறுமுகமாய்ச் சுடர்விட்ட ஜோதியை அங்குமிங்குமாய் ஆட்டினார். பிறகு. அதை அப்படியே ஒளிரவிட்டு வெளியே வந்தார். ஒயர் கொடியில் தொங்கிய தேய்க்காத சட்டையைப் போட்டுக் கொண்டே மகளிடம் வந்து, படுத்துக் கிடந்தவளைத் தூக்கி நிறுத்தினார்.
"எழுந்திரும்மா போகலாம். ஆரம்பம் போலீஸ் ஸ்டேஷன்! அப்புறம் எதுவரைக்கும் வேணுமுன்னலும் போகட்டும். ஒன்னை மகளாய் நினைச்சுக் கூப்பிடலே. அம்பாளாய் நினைச்சுக் கூப்பிடுறேன். எழுந்திரு நாமார்க்கும் குடியல்லோம் எழுந்திரும்மா... ஆமாம் இப்படித்தான் எழுந்து நிற்கணும்."