இன்பம்/டி. வி. நாராயணசாமி
இன்பம்
இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால், என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி டி. வி. நாராயணசாமி அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.
மாலைக் கதிரவன் மறைந்து கொண்டிருக்கிறான், மேற்குத் திக்கிலே ஒளிமயம், மாசுமருவற்ற ஆகாயத்தின் அடிவாரத்திலே தகதகவென, மின்னிக்கொண்டிருகிறான் அவன். அவன்தரும் மஞ்சள் நிற வெயில் ஆற்றோரம் அடர்ந்திருக்கும் மாமரச் சோலையிலே-அதனருகே ஓங்கி நிற்கும் தென்னஞ் சோலையிலே, படுகிறது, ஆகா! என்னென்பேன் அக்காட்சியை வீசுத் தென்றலால் ஆடும் தென்னங்குருத்தோலைகள் கண்ணிலே குளிர்ச்சியை ஊற்றியது. குயிலின் குரலோசை செவியிலே பாய்ந்து அங்கத்தைக் குறிவைத்தது. என் எதிர்ப்பட்டது அழகு லோகம்-இயற்கை எழில் இன்ப ஊற்று. ஆகா இன்பம் இன்பம் என்கிறார்களே அதை நான் இதோ காண்கிறேன். அழகிலே உருவாகிற்று இன்பம் என்று மாடிச் சாளரத்தின் வழியே, அஸ்தமனக் காட்சியைக் கண்டு கொண்டிருந்த எனக்கு என் உள்ளம் எடுத்துச் சொல்லியது. இன்பத்திலே, மூழ்கியிருந்த என் கண்களை அந்த நேரத்தில் யாரோ பொத்தினார்கள், எழுந்தேன், கலகலவெனச் சிரித்தாள் கமலா. இன்பம் என்னை எல்லையில்லா உயரத்திற்குத் தூக்கிச் சென்றது. பேச முடியவில்லை. மெளனமாகிவிட்டேன்.
சிற்றுண்டி கூடச் சாப்பிடாமல் சன்னல் ഖழியாக யாரைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றாள் அவள்.
உன்னைத்தான் என்றேன். என்னையா? வேடிக்கைதான். என்னைப்போல யாராவது அங்கு உலாவுகிறார்களா? தெரிந்தது விஷயம் என்று குறும்புடன் கூறினாள்.
ஆம், உலாவுகின்றனர். அதோ பார், நீல நிறவானம், அந்திப் பகலவனின் ஒளி, ஆற்றிலே ஓடும் நீர், பச்சைப் பசேலென்ற மாமரச்சோலை, அத்தனையும் சேர்ந்த அழகு வடிவம் நீ. உன்னைத் தான் கண்டேன். அங்கே, ஆம், கமலா உண்மையாக,
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மார்கழி மாதத்தில் ஒர் நாள். அதே இடத்திலே அந்தச் சன்னலருகே நின்றுகொண்டிருந்தேன் 5 மணிகூட ஆகியிருக்காது. பனிவீசத் தொடங்கியது. வீட்டுக் கூடத்தில் தபீல் தபீல் என்று அறையும் சத்தம் கேட்டது. என் இருதயத்தைக் கொடுந்தேள் கொட்டியது போன்ற உணர்ச்சி, பெரிய பையன் ஐயோ! அப்பா! அப்பா என்று கூவினான். மறுகணம் மாடிமீது வந்து நின்றாள் கமலா. சிடுசிடுத்த முகத்தோடு இடுப்பிலே கைகுழந்தை இருந்தது. அவளது முகத்திலே படர்ந்த கோப அனல் தாளாமலோ என்னவோ வீர்வீர் என்று கத்தியது கைக்குழந்தை. என்ன கமலா என்று நான் கேட்க ஆரம்பிக்கவில்லை. ஆமாம், நிரம்பவும் இலட்சணந்தான், நல்ல பிள்ளைகளைப் பெற்றீர்கள். கொஞ்ச நேரமாவது அமைதியிருக்கா தெருவிலே எது போனாலும் வாங்கித் தரவேண்டு மென்று கூச்சல். இது (கைக்குழந்தை) தொட்டிலில் கிடப்பேனா பார் என்று அடம் செய்கிறது. சமையற் காரியத்தை முடிப்பதற்குள் இந்தச் சங்கடம். வேலைக்கார முத்தம்மாள் இன்று வரவில்லை. அவளுக்குச், சம்பளம் தந்தால்தானே! முருக விலாசம் துணிக்கடைப் பையன் பாக்கியை வாங்கிப் போகவந்தான். மளிகைக்கடைச் செட்டியார் கோபித்துக் கொண்டாராம். எங்கேயாவது கடன்கிடன் வாங்கித் தந்தால்தான் ஆச்சு என்று உள்ளத்திலிருந்த துன்ப வெள்ளத்தைக் கொட்டி விட்டாள். அந்தத் துன்ப வெள்ளத்தினூடே அகப்பட்டுத் தத்தளித்தது என் மனம். பெரிய வார்த்தை பேச முடியவில்லை. இன்னும் கடன் வாங்க வேண்டுமா? இருப்பது போதாதா! என்றேன் கம்மிய குரலில், அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டு சென்றாள். சன்னல் வழியாக என்பார்வை ஊடுருவிச் சென்றது; எங்கும் துன்பக் காட்சிகனா, எதிர்ப்படவேண்டும்!
பகலவன் தகதகவெனச் சுழல்கிறான். என்னுள்ளமும் தகதகவென எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சத் தூரத்தில் ஐந்தாறு குடிசைகள், அங்கே சில வடிவங்கள் குந்தியிருந்தன. இடுப்பிலே கரிய கந்தல், தலைமயிர் குப்பை கூளங்கள் நிறைந்த தொட்டிபோல இருந்தது. சில சின்னக் குழந்தைகள் புழுதியோடு புழுதியாக உருமாறிக் கீழே உருண்டன. உழவன் ஒருவன் இரண்டு மாடுகளை ஒட்டிக் கொண்டு சென்றான். அவைகளில் எலும்பு தவிர வேறொன்றும் காணோம், கொம்புகள் மட்டும் வாடாமல் இருந்தன. அம் மாடுகள் சாகமாட்டாமல்-காலடி எடுத்து வைத்துக் கொண்டு செல்கின்றன. பின்னே செல்லும் உழவன் ஒரு கிழவன், மரக்கலப்பையைத் தோளிலே போட்டுக் கொண்டு நத்தைபோல் நகர்ந்து சென்றான். வளைந்த உடல், தரைத்தலை, ஐயோ இந்த வயதிலே அவன் துன்பப்படவும் வேண்டுமா? ஏனிந்தக் கோரம் இதனை நீக்க ஓர் வழியில்லையா? என்ற இரைச்சல் குமுறிக் கொண்டிருந்தது என் உள்ளத்தில்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் தான் நின்றேன் வீசுந்தென்றல்-ஆடுந் தென்னங் குருத்துகள்-பொன்னிறப் பகலவன்-நீலவானம் குயிலின் குரல், பட்சிகளின் ஒலம் இவைகளைப் பார்க்க-கேட்க இன்ப மயமாகத்தானிருந்தது எனக்கு எதிரே இன்று தோன்றும் குடிசைகள் அன்றுந்தான் இருந்தன. அன்று இந்தக் குடிசைகளின் கோரம் என் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆனால் இன்று எல்லையில்லாத தூரத்திற்குத், துன்பச் சாயலையே இந்தச் சாளரம் எனக்குக் காட்டுகிறது. இருண்ட வாழ்வு என் முன் திரண்டு நிற்கின்றது இன்பம் என்னை விட்டோடியது. துன்பம் என்னைச் சூழ்ந்துகொண்டது.
வறண்ட வாழ்க்கையின் பள்ளத்தாக்கிலே நான் தள்ளப்பட்டேன். இனி இன்பம் என்னை அண்டுமா? இன்பத்தை நாடுகிறது மனம். இன்பம் எது? பொய்-பொறாமை-சூது வஞ்சகம் நர்த்தனமாடுகின்றன எங்கும். வறுமை அந்த நர்த்தனத்திற்குப் பக்கமேளம் கொட்டுகிறது. கொலை களவு முதலியன நர்த்தனத்தைக் கண்டு கைதட்டி ரசிப்பது போலிருக்கிறது, அமைதியில்லை. ஆகையால் துன்பம் ஆளத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் இன்பத்தை எங்கே தேடுவது? இன்பம் எது என்று கூறுவது? ஆண் பெண் இரு பாலாரும் கூடி இருந்தால் துன்பமே முன்னிற்கும். வாழ்வின் தேவை பூர்த்தி செய்யப்படும் அந்நாளில் தான் இன்பந்தோன்றும். ஒருதனி மனிதனுக்கு மட்டுமல்ல. மனித இனத்துக்கே இன்பம் எதுவெனத் தெரியவேண்டுமாயின், மனிதனை ஒடுக்கும் வறுமை ஒழியவேண்டும்.
பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டத்தில் ஒரு சில இலட்சம் பேர் சுகபோகிகளாகி, உல்லாச உருவங்களாகத் திகழ்வதும் ஏனைய பெரும்பாலான மக்கள் சுகபோகிகளின் உல்லாச வாழ்விற்கென உதித்தவர்போல இருப்பதுமான பேதக் கொடுமை ஏற்றத்தாழ்வு நீங்கி, மனிதனை மனிதனாக எண்ணி மேற்குலம்-தாழ்குலம் எனும் இழிவான சாதிப்பித்தம் நீக்கப்பட்டு, மனித சமுதாய வாழ்வதற்கென வகையான திட்டம் அமைத்து, அத்திட்டத்தின் அடிப்படையிலே, புதியதோர். மனித சமுதாயம் தோன்றினால், நிலையான இன்பம் எது என்பதைக் காணலாம். இன்றிருக்கும் மனித சமுதாயமோ பூசல்களை உண்டாக்கிவைக்கும் கலாசாலை! அதிலே பயிற்றுவிக்கப்படுகிறது தனி மனித உணர்ச்சி. என் பிள்ளை, என்விடு, என் சொத்து, என்ற சத்தற்ற கொள்கை. அந்தக் கொள்கையை நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு, சமத்துவ வாழ்வினை-பொதுஉடைமைச் சமுதாயத்தைக் காணவேண்டும். ஆம், அதுதான் இன்பம்! இன்பம் அப்படித்தான் இருக்கவேண்டும்! இன்பம் அப்பொழுதுதான் மக்களிடையே தோன்றித் திகழ்ந்து மிளிரும் என்க.
திராவிட நாடு
13-5-1945