இன்பம்/மேட்டூர் டி. கே. இராமச்சந்திரன்

விக்கிமூலம் இலிருந்து
8
இன்பம்

மேட்டூர் டி. கே. இராமச்சந்திரன்

இன்பம், இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம்; நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும் இவை பற்றி மேட்டுர் டி. கே. இராமச்சந்திரன் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

உடலை வருத்துவது துன்பம், உடலை, உள்ளத்தை குளிர்விப்பது இன்பம், இதைத்தான் பலரும் பொதுவாகக்கூறுகின்றனர். இதுதவிர நிலையாய இன்பம், நிலையற்ற இன்பம் என்றும், மரண நிலைக்குப்பின்னர் கற்பகதருவும் காமதேனுவும் அருளும் பேரின்பத்தைப்பற்றியுங்கூடச் சிலர் கூறுகின்றனர். மரணநிலைக்கு அப்பாற்பட்ட இன்பத்தைப்பற்றிச் சடலம் அழிந்து சவக்குழியின் மணற்புதைப்பிலே புதையுண்டுகிடக்கும் பிரேதங்கள் விவாதித்துக் கொண்டிருக்கட்டும். நாம் இன்னும் இறக்கவில்லை. நடமாடும் உலகிலேதான் உயிருடனிருக்கிறோம், ஆதலால் நமக்கு அத்தகைய அடுத்த உலகத்திய அழியா இன்பத்தைப்பற்றி அறிந்திருக்கக் காரணமுமில்லை வசதியும் கிடையாது. உள்ளத்திலே ஏற்படும் உணர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாயிருந்தால் அதை இன்பம் என்கிறோம். வருத்தம் உண்டாக்குவதாயிருந்தால் துன்பம் எனக் கூறுகிறோம். ஆகவே இந்த முறையிலே பார்த்தால் பசிப்பது துன்பம், புசிப்பது இன்பம். மல்லிகாவின் வரவுக்காக மலர்ச்சோலையில் காத்திருக்கும் காதலனுக்குக் கூட பசி தான்! காதற்பசி!!

ஆனால் பசித் துன்பத்தைப், போக்கிப் புசித்து இன்பமடைவதிலே எத்தகைய விபரீதங்கள் நேரிடுகின்றன. ஓநாய் தனது பசியை ஆட்டுக்குட்டியின் உயிரைக் கொண்டுதானே போக்கிக்கொள்கிறது. நரிபுசித்து இன்பமடையவேண்டுமானால் நண்டு அதற்கு இரையாக வேண்டும். பூனை இன்பமடைய எலியை விழுங்கவேண்டும். மீனுக்கு அதனின் குஞ்சு, இது மிருகராசியில் மட்டுமல்ல!

நீலாவின் கணவனுக்கு, வனிதாவின் தகப்பன் வடிவேலு முதலியாருடைய தென்னந்தோப்பிலே தேங்காய் பறிக்கும் தொழில். பறிக்கப்பட்ட தேங்காய்கள் பம்பாய் மார்க்கட்டிலே பணமாக்கப்பட்டுப் பண்ணை முதலியாரின் பைக்குள் வந்துவிடும். நீலாவின் கணவனுக்குக்கூலி எனும் பெயரால் மாதமொன்றுக்கும் பத்து ரூபாய்கள் கிடைக்கின்றன. மாரிகாலம். கனத்தமழை, மரங்களெல்லாம் வழுக்கல் படிந்துவிட்டன. தேங்காய் பறிக்க ஏறின நீலாவின் கணவன் ஒரு தென்னையிலிருந்து சருக்கிவிழுந்துவிட்டான், மார்பிலே பலத்த அடி. பறிக்கப்பட்ட தேங்காய்கள் வழக்கப்படி மார்க்கெட்டுக்குச் சென்று பணமாகத் திரும்பிவிட்டன. பண்ணையாரின் பெட்டிக்கு. பறித்துக் கொடுத்த பாட்டாளி இன்னும் படுக்கையிலே கிடக்கிறான். மார்பிலே பட்ட அடியால் நெஞ்செலும்பு நொருங்கி விட்டது எனக்கூறிய கிராமவைத்தியர் பணம் இல்லாமல் பார்ப்பதற்கு நான் தர்மவைத்திய சாலை வைத்து நடத்தவில்லை என வேறு கூறிவிட்டார். நிர்க்கதியான நீலா பண்ணையாரை அணுகிச் சற்று உரிமையோடுதான் கேட்டாள். “மரங்களெல்லாம் வழுக்கல். அதனால்தான் என் கணவன் விழுந்துவிட்டான். விலா எலும்பு நொருங்கி விட்டது என வைத்தியர் கூறுகிறார். பணமின்றிப் பார்க்க முடியாது எனவும் கூறிவிட்டார். வைத்தியச் செலவுக்காவது ஏதாவது கொடுங்கள்” என்று. “ஏதோ விஷக்கடிவேளை, அதற்கு நான் என்ன செய்யட்டும். ஏறின மரத்துக்கெல்லாம் காசுகொடுத்தாய் விட்டது, என்னால் இனி ஒன்றும் முடியாது” என்றுகூறிவிட்டார் முதலியார். பாவம்! நீலா கண்களில் நீர் சொரிய பண்ணையாரைப் பார்த்துப் பரிதாபம் கலந்த குரலிலே தனது மாங்கல்யத்தைத் தொட்டுக் காண்பித்துக் கதறினாள். கதறவா செய்தாள், தனது நைந்துபோன இருதயத்தின் ஆழமான புண்ணை அவரிடம் காண் பித்தாள். முதலியார் இதற்கெல்லாம் இரங்குபவரா என்ன! “மாங்கல்யம் போகாமலிருக்கக் கோயிலைச் சுற்று” எனக் கூறிவிட்டு வீட்டினுள் சென்று விட்டார். சின்னாட்களிலே நீலாவின் கணவன் இறந்தான். நெஞ்செலும்பு நொருங்கி நீலாவின் கணவன் இறக்கிறான். வடிவேலு முதலி வளமாக வாழ்ந்து இன்பத்தில் புரளுகிறான். இதுதானே இன்றைய இன்பத்தின் நிலை.

முதுகெலும்பு முறிய முறிய, இரத்தத்தின் சத்து வியர்வையாக வெளிப்படத், தோல் காய்ப்பேற ஆலையிலே வேலை செய்யும் ஆயிரம் பேரின் உழைப்பினால்தானே ஆலையின் சொந்தக்காரன் ஆறடுக்கு மாளிகையிலே ஆடம்பரமாய் வாழ்கிறான் துன்பக் கேணியிலே ஆயிரவரைத் தூர்த்து, இவன் இன்ப ஏணியிலே ஏறுகிறான். உருமாறிப் போகுமளவுக்கு உழைத்து அலுக்கிறான் உழவன். காலில் நகம் முளைத்த நாள் முதலாய் அவன் கண்டதெல்லாம் கலப்பையும் கஞ்சிக் கலயமும் தவிர வேறில்லை. மழையிலே நனைந்து, குளிரிலே நடுங்கி, வெப்பத்திலே வெந்து, அவனை வறுமை வதைக்க அவன் குழந்தைகளைப் பிணிபிய்க்க, அவன் உழைத்த உழைப்பை, அறுவடைக்காலத்திலே ஆனந்தித்து இன்பமடைகின்றான் சுகபோகியாகிய வேறொருவன். பலரின் இரத்தத்தையும் சதையையும் கொண்டுதானே பிறிதொருவன் இன்பமடைகிறான், இறைச்சித் துண்டுகளைத் தின்று இன்புறும் கழுகுக் கூட்டத்தைப்போல! தனது ஐந்து மக்கள் களத்திலே மாண்டது கூடக் கவலையைத்தரவில்லையாம் ஒரு இத்தாலிய மாதுக்கு. தன் நாட்டைப் பிடித்திருந்த பாசிசப் பீடை, முசோலினியின் சவம் மிலான் நகருக்கு வந்துள்ளது எனத்தெரிந்தும் இறந்துபோன பிரேதம் என்பதை கூட எண்ணிப் பாராமல் அதனைச்சுட்டாள் மீண்டும் சுட்டாள். மீண்டும் மீண்டும் சுட்டாள். நாட்டின் நாகரிக வாழ்வைச் சிதைத்த அப்பாசிஸ்டுப் பகைவனை வஞ்சந்தீர்ப் பதைத்தான் இன்பம் எனக்கொண்டாள். கிடைக்க வேண்டிய, அவசியமான உரிமையைக் கொடு என்று கேட்ட லெனின் கிராடுத் தொழிலாளர் பலரைத் தனக்கிருக்கும் அதிகார ஆணவத்தால் சுட்டுக்கொன்ற ருஷ்ய அரசன் ஜாரையும், அவன் வம்சவாரிசுகளையும், புரட்சி நடந்தபோது, வரிசையாக நிறுத்தி வைத்துப், பைத்தியம் பிடித்த நாய்களைச்சுடுவது போலச் சுட்டுக்கொல்வதைத்தான் ருஷ்ய மக்கள் “இன்பம்” என மகிழ்ந்தனர். தனிப்பட்ட ஆணோ,பெண்ணோ எவராயினும் சரி,அவன் அல்லது அவள் பரந்து கிடக்கும் மானிடக் கூட்டத்தின் ஒருபகுதிதான். அந்தமுறையிலே இன்பத்தை ஒரு கூட்டம், ஒரு இனம் அல்லது ஒருவர்க்கம் கூட்டாகத்தான் அனுபவிக்க முடியும். அதைத்தான் இன்பம் எனக் கூறவும் முடியும். அவ்வாறின்றேல் ஆட்டின் உயிரைக்கொண்டு இன்பமடையும் ஓநாய் போல்தான் இருக்கமுடியும் அவ்வின்பம். அதை இன்பம் எனக் கொள்ளவும் முடியாது.

அந்த ரீதியில் இன்பம் என்பதைப் பற்றிப் பேசுவோமானால், திராவிட இனத்தின் இன்பத்தைப்பற்றித்தான் பேசமுடியும். பேசவும் வேண்டும். பொதுவான இன்பம் நிலையாக இருக்கவேண்டுமானால் பொருளாதார பேத அமைப்புப் போக்கடிக்கப்பட்டுப், பிறவி காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள உயர்வு தாழ்வு பிய்த்தெறியப்பட்டு, மதத் துறையிலே படிந்துள்ள மாசுதுடைக்கப்பட்டுக் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போகும்படி செய்து, எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும், வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சம உரிமை தரப்பட்ட காலத்தில்தான் அத்தகைய “இன்பம்” எல்லோருக்கும் கிடைக்கும், .

திராவிட நாடு
3-6-1945