இயல் தமிழ் இன்பம்/மெய்ம் மயக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

20. மெய்ம்மயக்கம்

மெய்ம்மயக்கம்

1.1. மெய்ம்மயக்கம் பற்றித் தொல்காப்பியரும் நன்னூலாரும் கூறியிருப்பனவற்றையும் உரையாசிரியர்களின் உரை விளக்கங்களையும் படித்துப் பார்த்த எனக்கு, மெய்ம்மயக்கத்துடன் மன மயக்கமும் ஏற்பட்டுவிட்டது. காரணம், வழக்கம்போல், உரையாசிரியர்கள் ஒருவரோடொருவர் ‘சண்டை, போட்டுக் கொண்டிருப்பதுதான். நச்சினார்க்கினியர் பிறரை மறுக்கின்றார்; பிறர் இவரை மறுக்கின்றனர்.

1.2. இடைநிலை மயக்கம்

மொழியிலக்கண நூலில், மெய்ம்மயக்கம் என்ற ஒன்றைப்பற்றி எழுதித்தான் தீர வேண்டுமா என்ன? இது அவ்வளவு இன்றியமையாததா என்று சிறிது எண்ணிப் பார்த்தேன். சொற்களின் இடையிலே எந்த எந்த மெய் எழுத்துகள் இயைந்து இணைந்து வருகின்றன. எந்த எந்த மெய்யெழுத்துகள் இணையா - என்று கூறுவதுதான் மெய்ம்மயக்கம் என்பது. எது எது எப்படி எப்படி இருக்க வேண்டும் என நீதி நூல்கள் போல் கட்டளைகளை இலக்கண நூல்கள் இடாவிடினும், வரலாற்று நூல்கள் போல், எப்படி எப்படி உள்ளன எனக் கூறியிருப்பதைக் கொண்டு, மொழியை இப்படி இப்படிக் கையாளவேண்டும் எனக் குறிப்பாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. எல்லாம் இலக்கியம் கண்டதற்கு இலக்கணமாக உள்ளன.

சொற்கட்கு இடையில் உள்ள எழுத்துகளின் இயைபுகளை மயக்கங்களைக் கூறுகின்ற இப்பகுதிக்கு ‘இடை நிலை மயக்கம்’ என்னும் ஒருவகைப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப்பெயர் தரப்பட்டிருப்பதின் பொருத்தம் என்ன?

மொழிக்கு முதலில் வரக்கூடிய முதல்நிலை எழுத்துகளும், மொழிக்கு இறுதியில் வரக்கூடிய இறுதிநிலை எழுத்துகளும் இன்னின்னவை என்று கூறியிருப்பதால் மொழிக்கு இடையே இயைந்து - மயங்கி வரக்கூடிய எழுத்துக்களைப் பற்றியும் கூற வேண்டியதாயிற்று. இந்த மயக்கம் வடமொழியில் ‘சையோகம்’ என்று கூறப்படுகிறது.

2. தொல்காப்பியம்

இனித் தொல்காப்பியர் இடைநிலை மெய்ம்மயக்கம் பற்றி எழுத்ததிகாரம் நூன்மரபு என்னும் பகுதியில் கூறியுள்ள நூற்பாக்கள் வருமாறு:

“அம்மூவாறும்வழங்கியல் மருங்கின்
மெய்ம்மயங்கு உடனிலை தெரியுங்காலை” (22)

“டறலள என்னும் புள்ளி முன்னர்
கசப என்னும் மூவெழுத் துரிய” (23)

“அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும்தோன்றும்”(24)

“ஙளுண தமன எனும் புள்ளி முன்னர்த்
தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே” (25)

“அவற்றுள் ணனஃகான் முன்னர்க்
கசஞபம்யவ ஏழும் உரிய” (26)

“ஞநமவ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே” (27),

“மஃகான் புள்ளிமுன் வவ்வும் தோன்றும்”(28)

“யரழ என்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்” (29),

“மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம்முன்தாம் வரூஉம் ரழவலங் கடையே” (30)

என்பது தொல்காப்பிய நூற்பாக்கள்.

2.1 நச்சினார்க்கினியர் உரை

இந்த நூற்பாக்களுக்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர், இந்த இயைபுகள்- மயக்கங்கள் ஒரு சொல்லுக்குள் இருக்கவேண்டும் எனக் கருதுகிறார். - அவர் விரும்புவது சரிதான். ஆனால், அதற்கேற்ற இலக்கியங்கள்-அதாவது-எடுத்துக்காட்டுகள் கிடைக்கவில்லையே. இருசொற் புணர்ச்சிக்கண் உள்ள இயைபுகளை இவர் இடைநிலை மெய்ம்மயக்கமாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், பின்னர், இருமொழிப் புணர்ச்சியிலக்கணம், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பவற்றில் கூறப்பட்டிருப்பதாகும். இவர் இவ்வாறு கூறியிருப்பினும், ஒரே நிலையில் நில்லாமல் முழுகி முழுகி எழுந்திருக்கிறார். இவருடைய உரைப்பகுதிகள் சில காணலாம்:

“டறலள என்னும் புள்ளி முன்னர்
கசப என்னும் மூவெழுத்து உரிய” (நூன்மரபு.23)

என்னும் நூற்பாவிற்குப் பின்வருமாறு எடுத்துக்காட்டுகள் தந்துள்ளார்:

“கட்க, கட்சி-கட்ப எனவும் கற்க-முயற்சி-கற்ப எனவும், செல்க-வல்சி-செல்ப எனவும் கொள்க. நீள்சினை-கொள்ப எனவும் தனிமெய் பிறமெய்யோடு மயங்கியவாறு காண்க. கட்சிறார், கற்சிறார் என்பன இருமொழிப் புணர்ச்சியாகலின் ஈண்டைக் காகா” - என்பது எடுத்துக் காட்டுப் பகுதி. இருசொற் புணர்ச்சியில் உள்ள மெய்ம் மயக்கத்தை ஒத்துக்கொள்ளாத நச்சினார்க்கினியர், ‘நீள் சினை’ என்னும் ஓர் எடுத்துக்காட்டை வேறு வழியின்றித் தந்துள்ளமை வியப்பாகும். இனி அடுத்த நூற்பாவிற்குச் செல்லலாம்.

“அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்”

என்னும் நூற்பாவிற்குப் பின்வருமாறு எடுத்துக்காட்டுகள் தந்துள்ளார்:-

“கொல்யானை, செல்வம், வெள்யாறு, கள்வன் என வரும். இவற்றுள் ‘கொல்யானை’ என வினைத்தொகையும் ‘வெள்யாறு’ எனப் பண்புத்தொகையும் நிலை மொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின் இவ்வாசிரியர் இவற்றை ஒரு மொழியாகக் கொள்வர் என்றுணர்க. இக்கருத்தானே மேலும் வினைத் தொகையும் பண்புத் தொகையும் ஒருமொழியாகக் கொண்டு உதாரணம் காட்டுவதும் அன்றி, இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத் தொகைக் கண்ணும் பண்புத் தொகைக் கண்ணுமன்றி ஒரு மொழிக் கண்ணே மயங்குவன உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணம் கூறினார். அவை பின்னர் இறந்தன என்று ஒழித்து அல்லனவற்றிற்கு உதாரணம் காட்டாமல் போதலே நன்றென்று கூறலும் ஒன்று”- என்பது நச்சினார்க்கினியரின் உரைப்பகுதி.

குருடர்க்குக் குருடர் கும்மிருட் டதனில் வழிகாட்டல் போல் வாய்ந்துள்ளது நச்சினார்க்கினியரின் கூற்று. தொல்காப்பியரே எடுத்துக்காட்டுகளும் தந்திருப்பின் தொல்லையிராது. வினைத்தொகையையும் பண்புத்தொகையையும் தொல்காப்பியர் ஒரு சொல்லாகக் கருதினாராம். அதனால் தாமும் இவற்றை ஒரு சொல்லாகக் கருதுகிறாராம். மற்றும், இருசொற்கள் போல் காட்சி தரும் இவ்விரு தொகைகளேயன்றி, தொல்காப்பியர் காலத்தில் முற்றிலும் ஒரு சொல்லிலேயே இந்த மயக்கம் அமைந்த தனிச்சொற்கள் இருந்தனஅவை பின்னர் மறைந்து போயின- என்று கூறித் தனிச் சொற்கட்குப் பிறப்பு தந்து பிறகு இறப்பும் தந்து விடுகிறார். அடுத்து-

“ஞநமவ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே” (27)

என்னும் நூற்பாவின் உரையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“இங்ஙனம் ஆசிரியர் சூத்திரம் செய்தலின், அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்று பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன”- என்பது உரைப்பகுதி. மற்றும், வேறு உரையாசிரியர் உரிஞ்யாது - பொருந்யாது - திரும்யாது - தெவ்யாது என்று இருமொழி எடுத்துக்காட்டுகள் தந்திருப்பது பொருந்தாது என மறுத்துள்ளார். மற்ற நூற்பாக்களின் உரைகளிலும் நச்சினார்க்கினியர் இதே பாதையைப் பின்பற்றிச் சென்றுள்ளார். இவரால் மறுக்கப்பட்டவர் இளம்பூரணரே. பின்வருமாறு இளம்பூரணர் கூறியுள்ளார்:-

2. இளம்பூரணர் உரை

“மெய்ம்மயக்கம் ஒரு மொழிக்கும் புணர்மொழிக்கும் பொதுவாகலின், மேற்கூறும் புணர்மொழி செய்கையெல்லாம் தலையாய அறிவினாரை நோக்க ஒருவாற்றால் கூறியவாறாயிற்று.”

“டறலள என்னும் புள்ளி முன்னர்

கசப என்னும் மூவெழுத் துரிய”

என்னும் தொடக்க நூற்பாவின் உரை விளக்கத்துள் மேலுள்ளவாறு இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.

3.1 நன்னூல்

இனி மெய்ம் மயக்கம் பற்றிய நன்னூல் எழுத்தியலில் உள்ள நூற்பாக்களைக் காண்போம்:

“கசதப ஒழித்த ஈரேழன் கூட்டம்
மெய்ம்மயக்கு உடனிலை ரழவொழித் திரெட்டு
ஆகுமிவ் விருபான் மயக்கும் மொழியிடை
மேவும் உயிர்மெய் மயக்கள வின்றே” (55)

“ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே” (56)

“ஞநமுன் தம்மினம் யகரமொ டாகும்” (57)

“டறமுன் கசப மெய்யுடன் மயங்கும்” (58)
“ணனமுன் னினங் கசஞபமய வவ்வரும்” (59)

“மம்முன் பயவ மயங்கும் என்ப” (60)

“யரழ முன்னர் மொழிமுதல் மெய்வரும்” (61)

“லளமுன் கசபவய ஒன்றும்மே” (62)

“ரழி அல்லன தம்முன் தாம் உடனிலையும்” (63)

“யரழ வொற்றின் முன் கசதபஙஞநம
ஈரொற்றாம் ரழத் தனிக்குறி லணையா” (64)

“லளமெய் திரிந்த னணமுன் மகரம்
நைந்தீ ரொற்றாம் செய்யு ளுள்ளே” (65)

“தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும்
இம்முறை மாறியும் இயலும் என்ப” (66)

என்பன பவணந்தியாரின் நன்னூல் நூற்பாக்களாம். இவற்றிற்கு உரையும் எடுத்துக்காட்டும் தரின் விரியும். இருப்பினும், “கசதப ஒழித்த ஈரேழன் கூட்டம்” என்னும் நூற்பாவின் உரை விளக்கத்தில் பின்வருமாறு சங்கர நமச்சிவாயர் குறிப்பிட்டுள்ளார்.

2. சங்கர நமச்சிவாயர் உரை

“இவ்விடை நிலையை ஒருமொழி தொடர்மொழி என்னும் இரண்டினுங் கொள்ளாது ஒருமொழிக்கே எனக் கொள்வாரும் உளர். எவ்விடத்துவரினும், இரண்டெழுத்து இணங்கிப் பொருந்தும். பொருத்து வாயை இடைநிலை யென்றோதலானும், இணங்காதனவரின் விகாரப்படுதலானும், அது நூற்கருத்தன் றென்க!! என்பது உரைப்பகுதி. சிவஞான முனிவரின் கருத்தும் இன்னதே. பிரயோக விவேகநூல் விளக்கமும் இஃதே. இங்கே மறுக்கப்பட்டிருப்பவர் உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியரே.

3.3 எதிர்பார்ப்பு

நச்சினார்க்கினியர் எதிர்பார்ப்பது சரிதான். அதாவது, முதல்நிலை எழுத்துகள் - இறுதிநிலை எழுத்துகள் எனப்படுவன ஒரே சொல்லில் இருப்பனவாகும். அதுபோலவே, இடைநிலை எழுத்துகளின் இயைபும் ஒரு சொல்லுக்குள்ளே இருப்பதாகவே கொள்வதே பொருத்தமாகும். ஆனால், தொல்காப்பியர் கருத்து நச்சினார்க்கினியர் எதிர்பார்ப்பது போல் இருப்பதாகத் தோன்றவில்லை. தொல்காப்பியர் கருத்தும் நச்சினார்க்கினியரின் எதிர்பார்ப்பாக இருக்குமாயின் போதிய எடுத்துக்காட்டுகள் தரமுடியவில்லையே. தொல்காப்பியர் காலத்தில் இருந்த எண்ணற்ற சொற்கள் பிற்காலத்தில் வழக்கற்றுவிட்டன என்று நம்புவதற்கில்லை. சில வழக்கறலாம். பல வழக்கறா.

4. ஓர் உண்மை

நச்சினார்க்கினியர் ஓர் உண்மையை உள்ளத்தில் எண்ணிப் பார்க்காததால் மற்றவர்களோடு மாறுபடுகிறார். அந்த உண்மையாவது:

இடைநிலை மயக்கம் என்பது, ஒரு சொல்லுக் குள்ளேயோ அல்லது இரு சொற்களின் இயைபுக்குள்ளேயோ, மெய்களின் இயைபு - மயக்கம் எப்படி அமைந்துள்ளது என்னும் நிலைமையைக் கூறுவது.

ஆனால், - உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றிய லுகரப் புணரியல் என்பன, இருசொற்கள் இயையும்போது, இரண்டிற்கும் இடையே இல்லாத ஓர் எழுத்து புதிதாய்த் தோன்றல், இருக்கும் ஓர் எழுத்து மற்றோரெழுத்தாகத் திரிதல், இருக்கும் ஓர் எழுத்து கெட்டு நீங்கல் ஆகிய தோன்றல்-திரிதல் கெடுதல் என்னும் விகாரங்கள் பற்றிக் கூறுவன.

இடைநிலை மயக்கம் இன்னதன்று. விகாரமானதோ அல்லது இயற்கையாக உள்ளதோ - ஆங்கு எவ்வெவ்வெழுத்துகள் இணையக் கூடியலை என்ற முடிவை ஓரளவு கூறுவது.

எனவே, இருசொற் புணர்ச்சிநிலை வேறு - இடைநிலை மெய்ம்மயக்கம் வேறு என்ற உண்மையை நச்சர் உள்ளத்தில் எண்ணியிருந்தால் மற்றவரோடு மாறுபடார்; இவ்வளவு குழப்பத்திற்கு இடம் இருந்திராது.

5. எடுத்துக்காட்டுகள்

மெய்ம்மயக்கம் பற்றிச் சுருக்கமாக, எடுத்துக்காட்டுகளுடன் ஒரு செய்தி கூறி முடித்துக் கொள்ளலாம்:

மெய்ம்மயக்கத்தில் வேற்றுநிலை மயக்கம், உடனிலை மயக்கம் என இருவகைகள் கூறப்பட்டுள்ளன. மங்கல், அஞ்சல், நட்பு, பண்பு, ஓய்வு, ஆர்வம், செல்வம், சூழ்வு, தெள்கு, கற்பனை, தென்றல் - போன்றவற்றின் இடையில் உள்ள மெய்கள், பக்கத்தில் வேறு மெய்களோடு மயங்கியுள்ளன. இது வேற்றுநிலை மயக்கம்.

பக்கம், எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டம், பண்ணல், வெந்நீர், கத்தி, கப்பல், பொம்மை. வெய்யர். வெல்லம், தெவ்வர், பள்ளம், கொற்றவை, தென்னை - போன்றவற்றின் இடையில் உள்ள மெய்கள் தம் மெய்களுடனேயே இயைந்துள்ளன. இது உடனிலை மயக்கமாகும். ஒற்றளபெடையில் எந்த மெய்யும் இரண்டாக இருக்கும் என்பது அறிந்த செய்தியே. எல்லா நூற்பாக்கட்கும் உரிய எடுத்துக்காட்டுகளைத் தொல்காப்பிய உரையிலும், நன்னூல் உரையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கே நேரமும் உடல் நலமும் போதவில்லை.

6. புதிய இலக்கண ஆக்கம்

இக்கட்டுரையில் இதுகாறும் அறிமுகப்படுத்தியுள்ள முதனிலை, இடைநிலை, இறுதிநிலை என்பவற்றின் அடிப்படையில் புதிய இலக்கண ஆக்கம் என்னும் முயற்சிக்கு உதவக்கூடிய கூறு என்னவென்று காண்போம்:

தெனாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்கச் செய்த முயற்சிபோல, பழைய இலக்கணத்திற்கு மாற்றாகப் புதிய இலக்கணம் படைக்கும் முயற்சியின் பேரால் ஒன்று கிடக்க ஒன்று செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடனேயே இதைத் தெரிவிக்கிறேன்.

6.1 மாற்று வடிவங்கள்

ஸ, ஷ. ஜ, ஹ,க்ஷ என்ற கிரந்த எழுத்துகட்கும் fa என்னும் உரோமன் எழுத்துக்கும் ஈடான ஒலிப்புடைய எழுத்துகள் தமிழில் இல்லை. சில இடங்களில் ஸ என்பதற்கு ‘ய்ச’, ஷ வுக்கு ‘ழ்ச’, ஜ வுக்கு ‘ஞ்ச’ (பெருஞ்சோதி) ஹவுக்கு ‘ஃஅ’, க்ஷ வுக்கு ‘ட்ச’, fa வுக்கு ‘ஃப’ என்பனவற்றை மாற்றாகப் போடலாம் எனினும், எல்லா இடங்கட்கும் இது ஒத்து வராது. இருப்பினும், இந்தக் கிரந்த - ரோமன் எழுத்துகளைத் தமிழில் ஏற்றுக்கொள்ளத் தயங்கினால், ஸ்டாலின் - ரூஸ்வெல்ட் - புஷ் முதலிய பிறநாட்டார் பெயர்களையோ அல்லது சில பிறமொழி வழங்கும் இடங்களையோ தமிழில் சரியாகக் குறிப்பிடமுடியாது.

கம்பர் லக்ஷ்மணனை இலக்குவன் எனவும் விபீஷணனை வீடணன் எனவும் குறிப்பிட்டிருப்பதுபோல, இப்பெயர்களை இசுடாலின், ரூசுவெல்ட்டு, புழ்சு என்று குறிப்பிடலாம். ஆனால் இதில் சிக்கல் உள்ளது. ‘ஸ்’ என்பதோ அல்லது எந்தத் தனிமெய்யெழுத்துமே தமிழில் மொழிக்கு முதலில் வராது. ரூஸ்வெல்ட் என்பதில் ‘ரூ’ மொழிக்கு முதலிலும் ‘ட்’ மொழிக்கு இறுதியிலும் வராது. அதனால் கம்பர் செப்பனிட்டுத் தந்துள்ள பாதையில் வழிநடக்க வேண்டும்.

அறிவியல் வளர்ந்து வரும் இந்தக் காலத்தில், இந்தச் செப்பிடுவித்தையெல்லாம் முற்றிலும் ஒத்து வராது. எனவே, தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் ஸ், ஷ, ஜ, ஹ, க்ஷ, fa போன்ற எழுத்துகட்கு இணையாக - அதே ஒலிப்பில் புதிய வரிவடிவங்களைப் படைத்துக் கொள்ளலாம். மொழிக்கு முதலிலும் இடையிலும், இறுதியிலும் வரும் எழுத்துகள் - வரா எழுத்துகள் என்னும் வழியில் நின்று ஓரளவு விலக்கு அளிக்க வேண்டும்.

சமசுகிருத மொழியில் க, ச, ட, த, ப,- என்னும் ஐந்திலும் நான்கு நான்கு எழுத்துகள் உள்ளன. இவற்றைத் தமிழ் தவிர்த்த இந்திய மொழிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் (தண்டையான) தலையெழுத்து தமிழுக்கு-தமிழர்க்கு வேண்டியதில்லை. தமிழ்ச் சொற்கள் இனிமையாக ஒலிக்கக் கூடியவை.

சுருங்கக்கூறின், ஸ், ஷ, ஜ, ஹ, க்ஷ, fa - இன்ன சில எழுத்துகட்கு எப்படியாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது நம் கடமையாகும். மற்றும் மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரக்கூடாத எழுத்துகளும் வரலாம் என விதிவிலக்கு அளிக்கலாம் என்பதை நன்னூலாரே தொடங்கி வைத்து நமக்குக் கற்றுத் தந்து சென்றுள்ளார். அஃதாவது:-

7. விதிவிலக்கு

“தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும்
இம்முறை மாறியும் இயலும் என்ப” (66)

என்பது நன்னூல் எழுத்தியல் நூற்பா. இதற்கு மயிலை நாதர் எழுதியுள்ள உரை வருமாறு.

“என், முதனிலை இடைநிலைகட்கு உரியதோர் வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) எழுத்துக்கள் தம்பெயர்களை மொழியு மிடத்து ஈண்டுச் சொன்ன முறையன்றி, முதலாகாதன முதலாகியும் (இடையில்) மயங்காதன மயங்கியும் வரப்பெறும். எ-று.

வறு. அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்” (தொல் - நூன்மரபு. 24) என்பதனுள், ளகர மெய்ம்முன்னர் லகரம் மயங்கினவாறும், லகரம் மொழிக்கு முதலானவாறுங் காண்க”.

என்பது உரைப்பகுதி லளஃகான் முன்னர் என்பதில் உள்ள லள என்பவற்றை ல்ஸ் எனக் கொள்ளவேண்டும். மொழிக்கு முதலில் வராத லகரம், இங்கே ‘லள ஃகான்’ என மொழிக்கு முதலில் வந்திருக்கிறதாம். லளஃகான் என்பதின் இடையிலுள்ள ‘ள’ (ள்) என்பது ‘ல’ (ல்) என்பதுடன் மயங்கி உள்ளதாம். இனி இந்நூற்பாவுக்குச் சங்கரநமச்சிவாயர் வகுத்துள்ள உரைப்பகுதி வருமாறு.

“எனின் மொழி முதல் ஈறு இடை நிலைகட்கு
ஆவதோர் புறனடை யுணர்-ற்று.”

இ-ள். எழுத்துக்கள் தம் பெயர்களை மொழிந்து நிலை மொழி வழிமொழியாகப் புணர்க்குமிடத்து, எல்லா மொழி முதற்கும், இங்ஙனம் விதித்தனவும் விலக்கியனவுமாகிய எல்லா எழுத்தும் முதலாம்; (இடைநிலை) மயக்கத்திற்கு இங்ஙனம் விதித்தனவும் விலக்கியனவுமாகிய எல்லா எழுத்தும் மயங்கும் என்று சொல்லுவர் புலவர். எ-று.

இங்ஙனம் எல்லா வெழுத்தும் தனித்தனி அதற்கதுவே முதலாக வருமெனவே, ஈற்றிற்கு விதித்தனவும் விலக்கியனவு மாகிய எல்லா எழுத்தும் தனித்தனி அதற்கதுவே ஈறாக வருமெனச் சொல்லாதே அருத்தாபத்தியான் அமைதலின், ஈறுமென மிகைபடக் கூறாதொழிந்தார்.

உ-ம் “அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்” என்புழி, லகரம் முதலாகியும், கூனிறுதி ளகர வொற்றோடு மயங்கியும் நின்றது. ‘கெப்’ பெரிது என்புழி எகரம் மெய்யோடு ஈறாய் நின்றது. பிறவும் வரையறையின்றி வருதல் காண்க” - என்பது உரைப்பகுதி.

எல்லா எழுத்துகளும் முதலில் வரும் என்றதனால், எல்லா எழுத்துகளும் ஈற்றிலும் வரும் என்ற செய்திதானே தெரிய வருகிறது என்பதாகச் சங்கர நமச்சிவாயர் கூறியுள்ளார். மொழிக்கு ஈற்றில் வராத ‘எ’ என்பதும் ‘க்’ என்பதோடு சேர்ந்து ‘கெ பெரிது’ எனக் சொல்லின் ஈற்றில் வரும் என்பதாக எடுத்துக்காட்டும் தந்துள்ளார்.

8. புத்திலக்கணக்கூறு

எனவே, இப்போது அறிவியல் - உலகியல் வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப, பழைய இலக்கண விதிகள் சிலவற்றிற்குத் தேவையான இடங்களில் விலக்கு அளித்துப் புதிய விதிகள் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கருத்தைப் புதிய இலக்கண அமைப்பின் ஒரு கூறாகக் கொள்ளல் வேண்டும்.

கருத்து வழங்கிய கருவூலங்கள் (ஆசிரியர் பெயருடன்),

தொல்காப்பியம் - தொல்காப்பியர்
உரைகள் - நச்சினார்க்கினியர் & இளம்பூரணர்.
நன்னூல் - பவணந்திமுனிவர்
உரைகள் - மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் சிவஞானமுனிவர்
பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர்