உள்ளடக்கத்துக்குச் செல்

இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள்/கடிதங்கள்

விக்கிமூலம் இலிருந்து

வண்ணாரப்பேட்டை

4.1.37

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

அருமையோடு தாங்கள் அனுப்பிய கடிதமும் புதுவருஷ வாழ்த்தும் வந்தன. ரொம்ப சந்தோஷம்.

ரவீந்திரர் எழுதிய கவி முக்கியமாக 1900 ஆவது வருஷத்தைக் குறித்ததாய் இருந்தாலும், தற்போது நிகழ்கிற 1938 ஆவது வருஷத்துக்கு ரொம்ப அமைப்போடு பொருந்துவதாய் இருக்கிறது. சோர்வடைந்து மனம் தத்தளித்துக் கொண்டிருக்கிற யாவருக்கும் எக்காலத்திலுமே கைதூக்கிவிடக்கூடிய அரியதொரு சமாதானமாக இருக்கிறது. அதை மேற்கோளாகக் கையாண்டது ரொம்பவும் நயமான காரியம்.

காகிதம், அச்சு முதலான அம்சங்கள் எல்லாம் ரொம்ப அலங்காரமாக அமைந்திருக்கின்றன. வருஷப் பிறப்பன்று அத்தகைய வாழ்த்து கைக்கு வருகிறது என்றால் எப்பேர்ப்பட்ட சகுனம்.

நான் அதை ரொம்பவும் அனுபவித்தேன். அப்படியே பல நண்பர்களும் அனுபவித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். 1938 ஆம் வருஷத்துக்கு நான் வாழ்த்த வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தாங்கள் எப்படியும் இங்கே மாற்றி வந்து விடவேண்டும். வட்டத் தொட்டியை அலங்கரித்துப் பலப்படுத்த வேண்டும் என்பதுதான்.

தாங்கள் கிறிஸ்துமஸ் ரஜாவில் இங்கே வந்து போவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் தங்களை எப்படியும் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். தாங்கள் வந்த இரண்டு தடவையும் நான் இங்கே இல்லாமல் போய்விட்டது வருந்தத்தக்கதே.

தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் தாங்கள் கலந்து கொண்டது ரொம்பவும் சந்தோஷமான செய்தி. நாலைந்து வருஷங்களுக்கு முன் தலைமை வகித்த முறையில் நானும் கலந்துகொண்டேன். அப்போது சைவத்துக்கும் புறம்பல்ல. கம்பராமாயணம் படித்தக் குற்றம் உண்டானாலும் சைவத்தை விட்டுவிட்டு வேறொரு சமயத்துக்குப் போனவன் அல்ல என்று ரொம்பத் தடபுடலாய் விளம்பரப்படுத்திக்கொண்டேன்.

இந்த நையாண்டிக்கெல்லாம் அங்குள்ள சைவ நன்மக்கள் சிரித்துவிடுகிறார்களா? அல்ல. சரி என்று ஒப்புக்கொண்டு சந்தோஷப்பட்டார்கள். யாரோ ஒருவர் இருவர் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டார்கள்.

தாங்கள் இவ்வருஷம் போட்டதோ ஜப்பான் வெடிகுண்டு. ரொம்ப ரொம்ப சமாஜத்தைக் குலுக்கியிருக்கும். தலைவராவது கம்ப துவேஷியாய் இல்லாமற்போனது கொண்டாடத் தகுந்த விஷயம். திருநெல்வேலித் தமிழ் பயப்பட வேண்டிய காரியம் என்று எண்ணுவதற்குத் தாங்கள் மடத்தார் என்று சொன்னது ஒருவகையில் உண்மைதான். இருபது வருஷத்துக்கு முன் திராவிட மகா பாஷ்யம் என்று ஒரு பொக்கிஷம் ஒன்று இருக்கிறது. திருவாவடுதுறை மடத்தார் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏண்டா, மடத்தார் இப்படி வைக்கோல் படப்பு வைரவனாய் இருக்கிறார்கள். அப்படி அருமையான நூலை வெளியிட்டால் அவர்களுக்கு என்ன குறைந்து போய்விடும் என்றெல்லாம் சைவ பக்தர்கள் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக வந்ததய்யா திராவிட மகாபாஷ்யம்.

சைவப் புலவர்கள் கிடைத்ததடா வட்டை என்று அதை வாசிக்க ஆரம்பித்தார்கள். தமிழ் வசனத்துக்கு எடுத்துக்காட்டு உரைகள் என்று பலவாறாகப் புகழவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

அவ்வளவுதான், திருநெல்வேலி தமிழ் எழுத்தாளர் எல்லாரும் சேர்ந்தது போல கோபுரம் கட்டவே ஆரம்பித்துவிட்டார்கள். ஆகையால் தாங்கள் சொன்னது உண்மையே. பூசி மெழுகிறதற்கும், பொய் சொல்லிக் கொண்டிருப்பதற்கும் காலாவதி ஆய்விட்டது.

இனிமேல் வெட்டொன்று துண்டிரண்டு என்று விஷயம் விழவேணும்.. தாங்கள் பேசியது ரொம்பவும் சரி.

கொஞ்சம் இந்த முறையிலேதானே கல்கியின் கதைக் கொத்து முகவுரையில் எழுதிவிட்டேன். அரும்பத அகராதிக்குள் ஊசிபோய் குத்தத்தான் செய்யும். என்ன ஆகிறது என்றுதான் பார்ப்போமே. தாங்கள் எழுதிய கடிதத்தை ரொம்பவும் அனுபவித்தேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை வி.பி.எஸ். அவர்கள் அங்கே வந்திருப்பார்களே. பிறகு அவர்களைப் பார்க்க நேரம் வாய்க்கவில்லை. எனக்கும் தூத்துக்குடி போய் வரவேணும் என்று ஆசைதான். இடது தோள்பட்டையில் கொஞ்சம் வலியிருந்து கொண்டு இடைஞ்சல் செய்வதால் பிரயாணம் என்றால் கொஞ்சம் பயமாய் இருக்கிறது. சௌக்கியமாயிருந்தால் வி.பி.எஸ்.கூட நானும் வந்திருப்பேன்.

'என்னத்தை' என்ற வியாசத்தைப் பற்றி ப.ப. ஸ்ரீனிவாசய்யங்கார் அவர்கள் பிரமாதமாக எழுதியிருக்கிறார்கள். டாக்டர் சொக்கலிங்கம் பிள்ளை அவர்களுமே அதை ரொம்ப ரொம்ப அனுபவித்ததாகத் தெரிகிறது. இதிலிருந்து எனக்கு ஒரு படிப்பினை. இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சம் எழுதவும் முயல வேண்டியதுதான். அது முற்றிலும் வீண் என்று ஆய்விடாது என்ற உண்மை.

செல்லையா திருவனந்தபுரம் பாங்கி, வீரராகவபுரம் பிராஞ்சில் வேலை பழகுகிறான். கிறிஸ்துமஸ் ரஜாவுக்கு சென்னை போயிருக்கிறான். இரண்டு மூன்று தினத்தில் திரும்புவான். வீட்டில் எல்லாரும் சௌக்கியமே. அவ்விடத்திலும் தாங்கள், அம்மாள் குழந்தைகள் எல்லாம் சௌக்கியம் என்று எண்ணுகிறேன்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

2, சாம்பசிவம் தெரு, தியாகராஜ நகர், சென்னை. 18.1.1938.


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் ரொம்ப அருமை பாராட்டி அனுப்பிய பொங்கல் வாழ்த்தும் கடிதமும் வந்து சேர்ந்தன. ரொம்ப சந்தோஷம். விளாத்திகுளத்தைப் பற்றி எழுதிய குறிப்புகள் எனக்கு ரொம்பவும் ரஸமாய் இருந்தன.

பழுதுபட்டுப் போன காரியங்கள் எல்லாம் தங்கள் ஆதரவால் திருத்தம் அடையும் என்று நம்புகிறேன். விளாத்திகுளம் போன்ற சிறு ஊரில் நாம் உத்தேசிக்கிறபடி எல்லாத் திருத்தங்களையும் கைகூடும்படி செய்துவிடலாம். ஜனங்கள் திருத்தங்களின் பயனை மறுநாளே கண்கூடாகப் பார்த்துவிடலாம். அதனால் திருத்த முயற்சியில் எல்லாரும் கலந்து கொள்ளுவார்கள். ஆகையால் தங்கள் முயற்சி வீண் போகாது. ஊர்க்காரருடைய நன்றிக்குத் தாங்கள் எப்போதும் உரியவராவீர்கள்.

மாம்பலம் வந்து மூன்று மாசம் ஆகிறது என்பது தங்களுக்குத் தெரிந்ததே. எப்படியும் வண்ணார்பேட்டைக்கு சங்கராந்தி சமயம் போய்விடவேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.

ஆவுடையப் பிள்ளையவர்கள் நாகர்கோயில் சிதம்பரம் பிள்ளையவர்கள் மற்றும் நண்பர்கள் டிசம்பர் ரஜாவுக்கு இங்கே வந்திருந்தார்கள். தாங்களும் வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். நண்பர்கள் உடன் வண்ணார்பேட்டைக்குப் போக வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இடையில் செல்லையாவுக்கு காய்ச்சல் (iInfluenza) வந்து ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டது. நாலைந்து நாளாகக் காய்ச்சல் இல்லை. ஆனால் ஹீனம் இருந்து கொண்டிருக்கிறது. உடம்பு தேறுவதற்கு இரண்டு வாரம் செல்லலாம். இது காரணமாக ஊருக்குப் போவதை குறைந்தது இரண்டு வாரமாவது ஒத்திவைக்க ஏற்பட்டுவிட்டது.

தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் பாடல்கள் அடங்கிய புத்தகத்தை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். அது நல்ல முறையில் அச்சிட்டு அழகுபெற கட்டிடம் அமைந்திருப்பதால் தங்களுக்கு மிக்க உவகையைக் கொடுக்கும். இதெல்லாம் செய்தது அடுத்த வீட்டு நண்பர் அருணாசலம் பிள்ளையவர்கள். அவர்களும் தம்பியும் மைத்துனரும் ரொம்பவும் தமிழில் ஈடுபாடுள்ளவர்கள். அவர்கள் ஒரே வளைவில் அடுத்த வீட்டில் இருப்பதால் இணை பிரியா நண்பர்களாய் இருக்கிறார்கள்.

இவர்கள் தேசிக விநாயகம் பிள்ளையவர்களோடு விடுவதாய் இல்லை. வருகிற மார்ச்சு மாதம் 18, 19 ஆம் தேதிகளில் கம்பர் விழாவினை கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூரில் மிக விமரிசையோடு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய உறவினரும் நண்பருமான சில மிராசுதார்கள் தேரெழுந்தூரிலேயே வசிக்கிறர்கள். அவர்களுக்கெல்லாம் கம்பர் விழாவை வெகு கோலாகலமாக நடத்தவேண்டும் என்று ஆசை. நம்முடைய வட்டத்தொட்டியைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் விழாவுக்கு வந்து சேரவேணும். தாங்கள் அவசியமானால் மார்ச்சு 20, 2! ஆம் தேதிகளையும் சேர்த்து விழாவோடு உபயோகித்துக் கொள்ளும்படி ஏற்பாடு இப்போதே செய்துகொள்ள வேண்டும். கல்கிக்கும் விழாவில் ரொம்ப ஆத்திரம். ஆகவே கம்பர் விழா என்றும் இல்லாத முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த 1939 ஆம் வருஷம் தமிழுக்கு முக்கியமான வருஷம் என்று சொல்ல நேரும் என்பது என்னுடைய அபிப்பிராயம். ஒன்று தே.வி.யின் கவிகள் வெளிவந்த விஷயம்.அடுத்தது கம்பர் விழாவின் மூலம் கம்பர் பெருமை தமிழ் உலகுக்கு (தமிழ்ப் புலவர்களைப் பற்றிப் பேச வேண்டாம்) தெளிவாய்த் தெரிய வருவது. இந்த இரண்டு அம்சங்களும் சேர்ந்துதான் வருஷத்துக்குச் சிறப்புக் கொடுக்க வேணும்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் சௌக்கியந்தானே? இங்கே எல்லாரும் விசாரித்ததாகச் சொல்லவேணும்.

தங்கள்

டி.கே.சிதம்பரநாதன்


❖❖❖

குற்றாலம்

6.4.38


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் நாங்குனேரியிலிருந்து எழுதிய கடிதம் வந்தது. ரொம்ப சந்தோஷம். எப்படியும் தூத்துக்குடி தூரந்தான். நாங்குனேரி பக்கந்தான், நாங்குனேரியிலும் தாங்கள் வசிக்கிற இடமோ ரொம்பச் சரியான இடம். முஜாபரி பங்களா முதலிய சௌகரியங்களைப் பார்த்தால் ஏன் அங்கே நாலுநாள் தங்கக்கூடாது, தங்களோடும் மற்ற நண்பர்களோடும் கூடி ஒரு ஜமா போடக் கூடாதென்று சதா இனி தோன்றும். தாங்கள் தூத்துக்குடியில் இருந்தபோது அப்படி ஒன்றும் தோன்றிவிடாது. உண்மையிலேயே நம்பிபுரம் திருநெல்வேலி ஜில்லாவில் அழகாக அமைக்கப்பட்ட வாசஸ் தலங்களில் ஒன்று. தாங்கள் அங்கே தங்குகிறீர்கள் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷமான சமாச்சாரம். குழந்தைகளும் அம்மாளும் நன்றாய் வசதியாய் அனுபவிப்பார்கள். ஆரோக்கியமும் அதனால் அதிகமாக ஏற்படும்.

நான் குற்றாலத்தில் முகாம் போட்டு கிட்டத்தட்ட இரண்டு மாசம் ஆகிறது. ஒரு வாரம் வண்ணாரப்பேட்டையில் தங்கியிருக்க நேர்ந்தது. குற்றாலத்துக்கு வந்தபின்தான் எனக்கு உடம்பு சௌகரியப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கிவிட்டு வண்ணாரப்பேட்டைக்குத் திரும்பிவிடுவேன்.

ஆர்.வி. சாஸ்திரிகளின் பிரசங்கத்தை தென்காசிவாசிகள் நன்றாக அனுபவித்தார்கள். விஷயத்தையும் நன்றாய் உணர்ந்தார்கள் என்பது, இனி யாராவது பாகவதர் பாட வந்தால், உம் பூச்செல்லாம் இங்கே பலியாது. தமிழில் பாடத் தெரியுமானால் பாடும். அல்லாத பட்சத்தில் நடையைக் கட்டும் என்று சொன்னதிலிருந்து தெரிந்தது. அந்த சமயத்தில் கல்கி எல்லாம் வந்து 13 நாள் எங்களோடேயே தங்கினது உற்சாகமாக இருந்தது. அவர்கள் சென்னைக்குப் புறப்பட்டுப் போய்விட்டபின் குற்றாலம் குற்றாலமாகக் காணவில்லை. நான் என்னடா செய்கிறது என்று கையை நெறித்துக் கொண்டிருந்தேன்.

வருகிற செவ்வாய் அன்று இங்கிருந்து வண்ணாரப் பேட்டைக்குத் திரும்ப உத்தேசித்திருக்கிறேன். அங்கே வந்துவிட்டால் எப்படியும் தங்களைப் பார்த்தல் எளிது. தங்களுக்கு தூத்துக்குடி விலாசத்திற்கு எழுதவேண்டும் என்று கருதிக் கொண்டிருந்த தருணத்திலேயே தங்கள் கடிதம் வந்தது. அது ஒரு அதிசயந்தானே. தாங்கள் அம்மாள் குழந்தை எல்லாம் சௌக்கியம் என்று நம்புகிறேன்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

வண்ணார்பேட்டை

27.4.38


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்களுடைய அன்பும் உல்லாசமும் கலந்த கடிதம் வந்தது. செல்லையாவும் வாசித்துப் பார்த்துக் கடிதம் நன்றாய் அமைந்திருக்கிறது என்று அனுபவித்தான். இன்னும் மற்ற நண்பர்கள் பார்க்கவில்லை. பார்த்தால் அவர்களும் அனுபவிப்பார்கள். தாங்கள் அனுபவித்துக் கடிதம் எழுதுவதற்கும் நண்பர்கள் வாசிப்பதற்கும் காரணமாய் இருந்தது விமர்சனம் அல்லவா. இது பற்றியே "நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர், பயனில சொல்லாமை நன்று" என்று திருவள்ளுவர் பெரும்போடு போட்டிருக்கிறார். கல்கி சிறந்த எழுத்தாளராய் இருக்கிறதில் அவ்வளவு வருத்தம் இல்லை. டிகேசி சிறந்ததாயிருக்கிறது கல்கி எழுத்து என்று சொன்னதில்தான் வருத்தம். ஆமா புருஷன் அடித்ததில் ஒன்றும் இல்லை. அடுத்த வீட்டுக்காரி சிரித்ததில்தானே கோபம். இப்படி எல்லாம் மணல் வறுக்கிறது சகஜந்தான். ஆனால் நமக்காக வறுத்தால்தான் நாம் நன்றாய் உணரலாம் அனுபவிக்கலாம்.

வட்டத்தொட்டி நண்பர்களில் அனேகர் பத்திரிகை வந்த உடனேயே வாசித்துவிட்டு எனக்கும் ஒரு பிரதி கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்களுக்கு ரொம்ப ரொம்ப கோபம். தாங்களும் நாங்குனேரியிலிருந்து கொண்டே வட்டத்தொட்டிக்குள்ளிருந்து நடப்பதுபோல நடந்து கொண்டீர்கள். ஆகையால் வட்டத் தொட்டிக்குக் குறுக்களவு பதினைந்தடி அல்ல காதக் கணக்கில் சொல்லவேண்டும்.

இதுசம்பந்தமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். பாரதியார் கவி எழுதுவதில் தேர்ந்தவர், தமிழ்நாடு என்றும் போற்றத்தகுந்தவர். சிலர் அளவுகடந்த வார்த்தைகளில் பாரதியாரின் கவியைப் புகழ்ந்து பேசினாலும் அவர்கள் அதை நான் மதிக்கிற அளவு அனுபவிக்கிற அளவு, மதிக்கிறதாக அனுபவிக்கிறதாகவாவது சொல்லமுடியாது. கவியை எவ்வளவோ அனுபவித்தாலும் அவர் எழுதிய வசனம், நான் படித்தமட்டில் அவ்வளவாகச் சிறந்ததென்று சொல்லமுடியாது. அப்படியேதான் வி.வி.எஸ். ஐயர் எழுதிய வசனமும் பகட்டும் பளபளப்பும் அதிகப்பட்டு, உண்மையான பாவம் அதாவது சாயல் சிதைந்து போவதையே காண்கிறோம். இந்த இரண்டு ஆசிரியர்களின் வசனத்தைப் பற்றி எத்தனையோ தடவை நான் பேசினதுண்டு. அதை ஒட்டித்தான் (மறதியினால் அல்ல, பகைமையோ இல்லவே இல்லை) கணையாழியின் முகவுரையில் அவர்களைப் பற்றிப் பிரஸ்தாபியாமல் விட்டது. இது ஒன்றும் தெரியாமல் பேனாவும் கடுதாசியும் கிடைத்தது என்று எண்ணிக்கொண்டு கைக்கு வந்ததை எழுதிவிட்டால் நாம் என்ன செய்கிறது. சிரிக்க வேண்டியதுதான். வேண்டுமானால் தமிழ் மகள் அழுது கொள்ளட்டும்.

தாங்கள் சொல்லுகிறபடி உயிருள்ள தமிழ், உயிர் அற்ற தமிழ் என்ற வித்தியாசம் நம்மவர்களுக்குத் தெரியவேணும். அப்படித் தெரிந்தால் அல்லவா உண்மையான இலக்கியம் நாட்டில் உற்பத்தியாகும். சுந்தரம், சோமு இருவருக்கும் பரிசு கிடைத்தது வட்டத்தொட்டிக்கே ஒரு சிறப்பு. சுந்தரம் தங்கள் கடிதத்தை வாசித்து நடை நல்ல மாதிரியாக உல்லாசப் போக்காய் ஓடுகிறது என்று அனுபவித்துச் சொன்னார். பரிசு கிடைத்தது சம்பந்தமாய் தாங்கள் சந்தோஷப்பட்டதற்கும் நன்றி ரொம்பவும் பாராட்டுகிறார்.

இரண்டு மாசமாய் நான் குற்றாலத்தில் தங்கிவிட்டதால் மார்ச்சு மாசம் மத்தியில் இங்கே வந்தபோது ஒரு கூட்டம் மாத்திரம் கூடி கிஷ்கிந்தா காண்டத்தை முடித்தோம். மே முதல் தேதி வாக்கில் கன்னியாகுமரிக்கு முகாம் போவதாக உத்தேசம். ஏதோ பத்து இருபதுநாள் தங்கலாம் என்று  உத்தேசம். தாங்களும் அங்கே வந்து போகலாம் அல்லவா. கன்னியாகுமரியிலிருந்து திரும்பி வந்தபிறகு நாங்குனேரி வருகிறதைப் பற்றி யோசிக்கிறேன். நாங்குனேரி வருகிறதென்றால் வட்டத்தொட்டி முழுதுமே வரவேண்டியதுதான். சரியானபடி முகாமை அனுபவித்துவிடத்தான் உத்தேசம்.

நம்மை ஆராவது கண்டு இனம் விசாரிக்க நேரலாம். அப்போது தெ.கி. சிதம்பரநாதன், தொ.மு. பாஸ்கரன் என்று யாரிடமாவது பயந்து பேர் சொல்லுவோமானால் காரியம் மோசத்துக்கு வந்துவிடும்.

உலகமே ரொம்ப தமாஷ்தான். அதற்கு நபர்கள் ரொம்ப ரொம்ப வேணும்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாம் சௌக்கியந்தானே.

தங்கள்

டி.கே.சிதம்பரநாதன்


❖❖❖

முகாம், மத்தளம்பாறை, தென்காசி 20.5.38


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நேற்று தென்காசி வந்தேன். இன்று சாயங்காலம் இங்கு வந்தேன். நடராஜனும் பாட்டியும் உடன் வந்திருக்கிறார்கள். நாளை இங்கே இருந்து புறப்பட்டு. சாயங்காலம் வண்ணார்பேட்டை வந்து சேர உத்தேசம்.

நாங்குனேரியில் கம்பராமாயணப் பாட்டும், பாரதி விழாவும் தங்கள் விருப்பம்போல எல்லாருக்கும் திருப்தியை உண்டாக்கின. வட்டத்தொட்டி நண்பர்களுக்கு என்றும் இல்லாத கோலாகல நாளாய் இருந்தது. பஸ்ஸில் வரும்போதும் வந்து சேர்ந்த பிறகும் பேச்செல்லாம் நாங்குனேரி வைபவந்தான். எல்லாருக்கும் எப்படியாவது வராதவர்கள் வயிற்றில் பொறாமை பற்ற வேண்டும் என்ற விஷயம் ஏற்பட்டு சாப்பாட்டைப் பற்றியும் உல்லாசத்தைப் பற்றியும் ரொம்ப ரொம்ப விளம்பரம் செய்யத் தலைப்பட்டு விட்டார்கள். எல்லாருமே எண்ணுகிறார்கள். இதோடு விட்டுவிடக் கூடாது, நாங்குனேரியைப் பார்த்து இன்னொரு படையெடுப்பு எடுக்க வேண்டியதுதான் என்று... நாள் நட்சத்திரம் பார்ப்பதாகவும் எண்ணம் இல்லை. தாங்கள் மறந்தாவது தலையசைக்க மாட்டீர்களா... போதும் அவ்வளவு என்றிருக்கிறார்கள்.

நம்முடைய நாங்குனேரி நண்பர்கள் எல்லாருக்கும் ரொம்பவும் விசாரித்தாகச் சொல்லவேணும்.

ஹிந்து கலாசாலையிலும் பாரதிவிழா சிறப்பாக நடந்தது. பாரதியின் மனைவியும் பேத்திப் பெண்களும் விஜயம் செய்தார்கள். பேத்திப் பெண்கள் பாடிய பாட்டு ரொம்ப அருமையாய் இருந்தது. பாரதியார் பாடல்களைப் பாடியது ராகபாவமும் இதயபாவமும் கலந்து ரொம்ப நயமாய் இருந்தது. இவர்களுடைய பாடல்களே விழாவைச் சிறப்பித்தன என்று நன்றாய்ச் சொல்லலாம். கமிஷனர் ராமலிங்க முதலியார் அவர்கள் ஒவ்வொரு துறையிலுமே பாரதியாருக்கிருந்த சுதந்திர நாட்டத்தை பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னார்கள். முத்துசிவனும் ஸ்ரீனிவாசராகவனும் சில விஷயங்களை எடுத்து அழுத்தமாகச் சொல்லி விளக்கினார்கள். நான் பாரதியும் தேசிகவிநாயகம் பிள்ளையுந்தான் கவி பாடியிருக்கிறார்கள் என்பதை உதாரணங்கள் மூலமாகக் காட்டினேன். விழாவை எல்லாரும் அனுபவித்தார்கள். தாங்கள் வந்திருந்தால் ரொம்ப நன்றாய் இருந்திருக்கும். வி.பி.எஸ் அவர்களும் வந்திருந்தார்கள். ரொம்ப அனுபவித்தார்கள்.

நானும் நடராஜனும் பாட்டியும் 25.9.38 இல் சென்னைக்குப் புறப்படுகிறோம். தீபாவளியை சென்னையிலேயே கொண்டாடிவிட்டுத் திரும்புவதாக உத்தேசம்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே.

தங்கள்


டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

வண்ணார்பேட்டை

6.9.38


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் மிக்க அருமையோடு எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது. வட்டத்தொட்டி நண்பர்களுக்கு அதை வாசித்துக் காட்டினேன். எல்லாருமே தங்கள் விருப்பத்திற்கிணங்கி நாங்குனேரி வர ஆசைப்படுகிறார்கள். ஸ்ரீனிவாசராகவன் மாத்திரம் ஏதோ முடியாது என்று காலைத் தேய்த்தார்கள். காரணம் கேட்டதில் ரஜாநாள் அன்றைக்கு ஆரம்பிப்பதால் ஊருக்குப் போய்விட்டு வரவேண்டும் என்றார்கள். இதைக் கேட்டதும் அங்கிருந்த எல்லாருக்குமே கோபம் வந்துவிட்டது. நாங்குனேரிக்குப் போய்விட்டு வந்தபிறகு எவ்ளவு நாள் வேண்டுமானாலும் ஊருக்குப் போங்கள் என்று சொன்னார்கள். உடனே ராகவன் நல்லவர் ஆய்விட்டார். எல்லாருக்கும் தான் நல்லவன்தான் என்று காட்டிக் கொள்வதற்கே அப்படி பிகு பண்ணினார்களோ என்னமோ. வி.பி.எஸ்.உம் வந்தால் நன்றாய் இருக்கும். பாளையங்கோட்டை முனிசிபல் கமிஷனர் இராமலிங்க முதலியார் அவர்களும் வட்டத்தொட்டிக்கு வந்திருந்தார்கள். அவர்களையும் தாங்கள் பேரில் அழைத்தால் அநேகமாய் அவர்களும் வரலாம். அவர்களுக்குத் தமிழிலே அபாரமான ஆசை. சென்ற ஞாயிற்றுக்கிழமைதான் எங்களுடன் இருந்து கம்பராமாயணம் கேட்டார்கள். ரொம்பவும் அனுபவித்தார்கள். அவர்களுக்குத் தாங்கள் ஒரு கடிதம் தனியாய்ப் போடலாம்.

யார் யார் எல்லாம் என்பதை விபரம் தெரிந்த பின்பு எழுதுகிறேன். எப்படியும் மத்தியான சாப்பாட்டுக்குப் போய்விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். காலையிலே புறப்பட்டு வந்தால் ரொம்ப நல்லது என்றும் சொல்லியிருக்கிறேன். பாரதிவிழா ஆரம்பிக்கும் முன்னதாக தாங்கள் வீட்டில் கம்ப ராமாயண வாசிப்பு நடத்தத் தயாராய் வருகிறேன். நேரம் இருந்தால் வைத்துக் கொள்ளுவோம். அல்லாத பட்சம் பாரதி விழாவை ஆரம்பித்துவிடலாம்.

தங்களுடைய அழைப்பை எல்லாருமாக அனுபவிக்கிறோம். வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியத்தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



வண்ணார்பேட்டை

8.9.38


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

பாரதி நாள் அறிக்கைகளும் தங்களுடைய குறிப்பும் வந்து சேர்ந்தன. வட்டத்தொட்டி நண்பர்கள் பலரையும் நேற்று இரவு பாளையங்கோட்டையில் வைத்துச் சந்திக்க நேர்ந்தது. கவுண்டர், ஸ்ரீனிவாசராகவன் மகரம் முதலாகப் பலருடனும் கலந்து ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கு எல்லாரும் என் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடவேணும். பிறகு 9 மணிக்கு இங்கிருந்து பஸ்ஸில் புறப்பட்டு 10 மணிவாக்கில் தங்கள் வீட்டுக்கு வந்துவிடுகிறது என்று தீர்மானித்திருக்கிறோம். ஆவுடையப்பப்பிள்ளை அவர்கள் வருவார்கள். நாகர்கோயில் பி. சிதம்பரம்பிள்ளை அவர்களும் நண்பர்களும் நாகர்கோயிலிருந்து நேராக நாங்குனேரிக்கு அன்று சாயங்காலம் வந்து சேருவதாகச் சொல்லிப் போயிருக்கிறார்கள். சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கும் ஒரு அழைப்புக் கடிதம் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். வி.பி.எஸ். அவர்கள் நேற்று இங்கு வந்தார்கள். அவர்களுக்குத் தங்கள் கடிதம் கைக்குக் கிடைக்கவில்லை போல் இருக்கிறது. ஆனால் நான் தங்களுடைய விருப்பத்தை அறிவித்தேன். செளகரியப்பட்டால் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

விழாவில் பேசுகிறதாகக் குறிப்பிட்டிருக்கிற மூவரும் வட்டத் தொட்டியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறோம். ஆகவே நாங்குனேரியிலும் கொண்டாடுவது வட்டத்தொட்டியாகவே முடிந்திருக்கிறது. நாங்குனேரியில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் நம்மோடு கலந்துகொண்டு பேசினால் நயமாய் இருக்கும். இதற்குமுன் நான் எழுதிய கடிதம் வந்திருக்கலாமே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்



வண்ணார்பேட்டை

9.9.38


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்களுடைய கடிதம் வந்து சேர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9 மணிக்கு வண்ணார்பேட்டையிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டு வருகிறோம். ஒரு பஸ்ஸுக்கு நண்பர்கள் இருப்பார்கள். அதாவது இருபது பேர்.

திரும்பும்போது நாங்குனேரியிலிருந்து இரவு 10 அல்லது 11 மணி ஆகலாம். ஆகையால் அந்த நேரத்தில் எங்களை இங்கே இட்டுக்கொண்டு வருவதற்கு ஒரு பஸ் வேணும். அதை நாங்குனேரியிலேயே ஏற்பாடு செய்வது வசதியாயிருக்கும். அதற்கு மாத்திரம் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.

வட்டத்தொட்டி நண்பர்களுக்கு நாங்குனேரிக்கு வருவதில் மோகமான உற்சாகம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

2. சாம்பசிவம் தெரு,
தியாகராஜ நகர்.
3.3.39


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் மிக்க அருமையோடு எழுதிவிடுத்த கடிதம் வந்து சேர்ந்தது. கடிதத்தை எல்லாரும் அனுபவித்தோம். முக்கியமாக அருணாசலம்பிள்ளை அவர்கள் ரொம்பவும் வியந்து அனுபவித்தார்கள். தங்கள் கடிதம் என் கைக்கு வந்த சமயம் அருணாசலம்பிள்ளை அவர்கள் உடன் இருந்தார்கள். அடுத்தாற்போல் சி.எஸ். அவர்களும் வந்தார்கள். அவர்களிடத்திலும் வாசித்துக் காட்டினார்கள். அவர்களும் நடை முதலான எல்லா அம்சங்களையும் பாராட்டிப் பேசினார்கள். இவ்வளவும் நான் திருநெல்வேலி போய் இங்கே வந்த பின்புதான்.

தாங்கள் தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் பாடல் சம்பந்தமாகப் பேசும்போது தாங்களும் அங்கங்கே பார்த்த பாடல்களைச் சேகரித்துச் சேர்த்து வைத்திருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். கலைமகள் மாசி மலரில் நான் ஒரு கட்டுரை மலரும் மாலையும் சம்பந்தமாக எழுதியிருக்கிறேன். அதில் தங்களைப் போலவே நானும் தே.வி. பாடல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன் என்று எழுதியிருக்கிறேன். நாம் இருவரும் உண்மையை அழுத்தமாகச் சொல்லுவதற்கு ஒரே உத்தியைக் கையாண்டிருக்கிற விஷயம் இங்கு எல்லாருக்கும் வியப்பைத் தந்தது. கட்டுரை நகல்கள் வந்ததும் தங்களுக்கு ஒன்று அனுப்புகிறேன். -

தாங்கள் தமிழ் ஆர்வம் விளாத்திகுளம் படாகையில் பரவி இருக்கிறது என்பது தெளிவாய்த் தெரிகிறது. கம்பர் விழா அங்கே ரொம்ப கோலாகலமாய் நடக்கும் என்பது நிச்சயம். அதில் நான் கலந்துகொள்ள வேணும் என்று கோருகிற அன்புக்கு நான் ரொம்ப நன்றி செலுத்துகிறேன். எனக்குத் தாங்களோடெல்லாம் கலந்து விழாவை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைக்குக் குறைவில்லை. ஆனால், சென்னையிலுள்ளவர்கள் சென்னையில் நடக்கும் விழாவுக்கு நான் இருக்கவேண்டும் என்கிறார்கள். காரைக்குடியிலும் மூன்று நாள் பிரமாதமாக நடத்தப் போகிறார்களாம். அதற்கு நான் இருந்தே தீர வேண்டும் என்று அங்குள்ளவர்கள் சொல்லுகிறார்கள். இந்த விழாவெல்லாம் ஏப்ரல் மாதம் முதல் நடக்கும். காரைக்குடி நண்பர்களுடைய ஆர்வமும் அக்கறையும் அளவுகடந்ததாய் இருப்பதால் நான் அங்கு போவதுதான் பொருத்தம். தாங்கள் விழா வேறொரு நாளில் நடத்தினால் நான் வரக்கூடும். விளாத்திகுளம் படாகையில் எப்பொழுதும் கம்பராமாயண மணம் நிறைந்திருக்கும். திருநெல்வேலிக்கு மாறான கொள்கையுடையவர்கள் அங்குள்ளவர்கள் என்று சொன்னாலுங் குற்றமில்லை. அவர்களுடன் கலந்து கம்பர் விழா கொண்டாடுவதில் எவ்வளவு ஆனந்தம் ஏற்படும் என்று சொல்லவேண்டியதில்லைதானே.

இரண்டு வாரத்துக்குமுன் காரைக்குடிக்குப் போய் சில சொற்பொழிவுகள் தமிழ் சம்பந்தமாகவும் கம்பர் சம்பந்தமாகவும் செய்தேன். கேட்பதற்குப் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தமிழ், என்னால் காட்டப்படுவதால் அனுபவிக்கத்தக்கதுதான் என்று அபிப்ராயம் உண்டாய்விட்டது. அதிலிருந்து தமிழிடத்தில் புதுஆர்வம் பிறந்திருக்கிறது. செட்டிநாட்டில் அப்பேற்பட்ட உணர்ச்சி பிறந்துவிட்டால் அது எங்கும் பரவும். தமிழ் மகள் யோகந்தான் இது.

காரைக்குடியிலிருந்து திருநெல்வேலி தென்காசி வெள்ளகால் முதலான இடங்களுக்குப் போனேன். வெள்ளகாலில் வி.பி.எஸ். அவர்களைப் பார்த்து நாலைந்து மணி நேரம் பொழுது போக்கினேன். தங்கள் கடிதங்களையும் செய்திகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். தேரெழுந்துரில் நடக்கப் போகும் கம்பர் விழாவைப் பற்றியும் அவர்களுக்குத் தாங்கள் எழுதியிருப்பதாகவும் சொன்னார்கள். அவர்கள் அனேகமாய் விழாவுக்கு வருவார்கள். தாங்களும் வந்தால் நண்பர்கள் ரொம்பவும் ஆனந்தம் அடைவார்கள்.

திருநெல்வேலி நண்பர்களிடம் நான் சென்னையிலேயே தங்கி விடுவேன் என்று சொல்லி ரொம்ப பயமுறுத்தி யிருக்கிறீர்கள். இது சம்பந்தமாக கலிங்கத்துபரணிச் செய்யுளையும் அழகாக கையாண்டிருக்கிறீர்கள். உண்மையாக செல்லையாவுக்கு உடம்பு செளக்கியம் அடைந்தவுடன் திருநெல்வேலிக்குத் திரும்பிவிடுவேன். சென்னை நண்பர்கள் ஒரு பக்கம் இழுக்கிறார்கள். திருநெல்வேலி நண்பர்கள் மற்றொரு பக்கம் பலபேர் இழுக்கிறார்கள். என் பாடு டக் ஆப் பார் கயிற்றின் பாடாகத்தான் இருக்கிறது. திருநெல்வேலி நண்பர்கள் எல்லோரும் இளைஞர்கள் அல்லவா (15 முதல் 82வரை வயசு) ஆகையால் அவர்களே வெற்றிபெறுவார்கள்.

செல்லையா நாளுக்கு நாள் சுகமடைந்து வருகிறான். இரண்டு வாரத்தில் வேலை பார்க்கக் கூடும்.

அங்கே தாங்கள் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே. தங்கள் கடிதத்தை ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். வந்தது ரொம்ப சந்தோஷம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



எட்டறை,

ஐந்தலை அருவி ரோடு,

குறறாலம்

வழி தென்காசி

5.9.39


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் நேற்று எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது. ரொம்ப சந்தோஷம். குற்றாலத்தில் அருவி குறைந்துகொண்டு வருவதால் நண்பர் கல்கி மெள்ளப் புறப்படப் பார்க்கிறார்கள். நாங்கள் இங்கு வந்து சுமார் மூன்று வாரமாகிறது. எல்லாம் இதுதான் காரணம். அவர்களுக்கு ஊருக்குப் போகவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆகவே அவர்கள் நாளை ஊருக்குப் புறப்படுகிறார்கள். நானும் இன்னும் பத்துநாளில் சென்னைக்குப் போக வேண்டியிருப்பதால் 7.9.39 அன்று குற்றாலத்தை விட்டுப் புறப்பட்டு வண்ணார் பேட்டைக்குப் போக வேண்டியிருக்கிறது. இதனால் தங்களுக்கு இடைஞ்சல் ஒன்றும் இல்லை. நான் இருக்கும் வீடுகளில் ஒன்றையே தங்களுக்கு அமைத்துவைக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்களும் அம்மாளும் இங்கு 9.9.39 இல் வந்து சேரும்போது ஜாகை தயாராய் இருக்கும்.

அருவி ஸ்நானத்துக்குப் போதுமானபடி இருக்கிறது. அம்மாள் ஸ்நானம் செய்தால் சுகம் ஏற்படும் என்பது நிச்சயம்.

சென்ற சனிக்கிழமையன்றுதான் ஐந்தாவது கம்பர் கவிச்செல்வம் பற்றிய பிரசங்கம் நடந்தது. ஆறாவதும் கடைசியும் உள் பிரசங்கங்கள் 16.9.39 அன்று நடக்கும். எப்படியோ கம்பரையே முடித்தாய்விட்டது. ரேடியோக்காரரும் அதை எல்லாம் சேர்த்துப் புத்தகமாகப் போடப் போகிறார்கள். கேளாததால் அப்படியாக நஷ்டம் ஒன்றும் தங்களுக்கும்  பிறருக்கும் ஏற்பட்டுவிடவில்லை. இரண்டு வாரத்துக்கொரு தடவை திருச்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன் - கிரிமினல் போல் வாய்தாவுக்குப் போன கணக்கில்தான். 16.9.39 அன்று எப்படியும் கம்பன் கேஸ் முடிந்து தீர்ப்பு சொல்லிவிடுவார்கள். திருநெல்வேலியில் தங்களைப் பார்க்க முயலுகிறேன்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

வண்ணார் பேட்டை,

14.9.39


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

குற்றாலத்திலிருந்து தங்கள் கடிதத்துக்கு எழுதிய பதிலையும் இத்துடன் அடக்கம் செய்திருக்கிறேன். நானும் மனையாளும் நடராஜனும் நாளை சென்னைக்குப் போகிறோம். இது காரணமாகத் தான் குற்றாலத்திலிருந்து அவசரமாகப் புறப்பட நேர்ந்தது. நான் அங்கு (குற்றாலத்தில்) இருக்கும்போதே தாங்கள் வராதது பெருங்குறையே. பத்தறையிலும் எட்டறையிலுமே தங்களுக்கு இடம் பண்ணி வைத்திருந்தேன். திருநெல்வேலியின் நிலையைப் பார்த்தால் குற்றாலம் சுகமாகத்தான் இருக்கும். அம்மாளுக்கு செளக்கியம் ஏற்படும் என்று நம்புகிறேன்.

பாரதி விழா எட்டயபுரத்தில் தாங்கள் எண்ணியபடி நடக்கவில்லை போலும். அதற்குப் பாத்தியாக திருநெல்வேலியில் நாலு பாரதி விழாக்கள். நாலுக்கும் நான்தான் தலைமை வகிக்கிறேன். ஆகவே கணக்குப் பார்த்தால் இன்னும் நாலு வருஷத்துக்கு நான் தலைமை வகிக்க வேண்டியதில்லை. வெளிநாட்டு நண்பர் கான்போர்ட் அங்கே வந்திருக்கிறார். எட்டறையில் இருக்கிறார். அவருக்கு வேண்டிய செளகரியங்களை பார்த்துக்கொள்ள வேணும். உடம்புக்கு அசெளகரியமாய் இருப்பதால் சாப்பாடு பத்தியம். இதோடு அவர் முத்தமிழ் வல்லார். தமிழில் வெண்ணெய், தயிர், வாழைப்பூ ஆகிய வார்த்தைகள் தெரியும். ஆகையால்தான் தங்கள் உதவி அவருக்கு அவசியமாய் இருக்கிறது.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

ஏரோ

மீனம்பாக்கம்,

பல்லாவரம் ரோடு.

23.10.39

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் அருமைக் கடிதம், கட்டுரை, படங்கள் முதலானவைகளும் வந்து சேர்ந்தன. கல்கியிடம் கட்டுரையையும் படங்களையும் கொடுத்துத் தீபாவளி மலரில் வெளிவந்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். அது விஷயமாகத் தங்களுக்கு ஆ.வி. ஆபிசிலிருந்து குறிப்பு வந்திருக்கும் என்று நம்புகிறேன். படங்களுக்கு அடிக்குறிப்பு அவசியந்தானே. கூடிய சீக்கிரம் குறிப்பு எழுதி அனுப்பினால் நல்லது. மைசூர் கிருஷ்ணன் படம் ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது. அது நேராக எடுத்தப் படமாக இல்லாததால் மலரில் பிரசுரிக்கமாட்டார்கள். அப்படியே தான் மொழிபெயர்ப்புச் செய்யுள்களைப் பொதுவாய் பிரசுரிப்பதில்லை. தங்கள் மொழிபெயர்ப்பு, விஷயத்தைத் தெளிவாய் விளக்குகிறது. ஆனால் தமிழ்ப் பண்பை வெளிப்படுத்துகிறதைப் பார்க்கிலும் ஆங்கிலப் பண்பைத்தான் வெளிப்படுத்துகிறது. தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பாடல்களிலும் சில அப்படிப்பட்டனவாகவே உள்ளன. அது காரணமாகவே நேயர்களை நோக்கி எச்சரித்து எழுதும்படி நேருகிறது. இது தங்களுக்கு ஞாபகமிருக்கலாம். எப்பொழுதும் இந்த விஷயத்தை நாம் எல்லாரும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு இலக்கிய விஷயத்தில் பிரவேசித்தால் நல்லது. பாரதியார் கூட சில வேளைகளில் மறந்து போனதின் காரணமாக கவியை விட்டு செய்யுள் யாத்தலில் இறங்கிவிடுகிறார். மேலும் ஆங்கிலக் கவிகள் பலரும் வசனத்தில் எழுத வேண்டியவைகளை செய்யுள் வடிவத்தில் எழுதி வைத்துக்கொள்ளுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். மேல்நாட்டு பிரபல ஆசிரியர்கள் வருத்தம் இதுதான். கவிக்குத் தமிழ் பாஷையும் அதன் பண்பும் போல் வாய்ப்புடையது கிடையாதுதான். நிற்க.

விளாத்திகுளம் சாமியவர்கள் இங்கே (மீனம்பாக்கத்தில் வீட்டில்) ஒருநாள் சுமார் அரைமணி நேரம் பாடினார்கள். எல்லாம் தமிழ்ப் பாட்டு, பாவம் உணர்ந்து பாடுகிறார்கள். அதனால் பாட்டுக்கு முக்கியமாக ராக விஸ்தாரத்துக்கு அபூர்வமாக நயம் ஏற்பட்டிருக்கிறது. The art heart is the dynamic mountain. இந்த உண்மை அவர்கள் சங்கீதத்தில் நன்றாய்த் தெரியவந்தன. சங்கீத உலகம் அவர்கள் சங்கீதத்தை அங்கீகரிக்கவில்லை என்பதில் வருத்தந்தான். ஆனாலும் வியப்பில்லை. ஆடம்பர வெற்றொலியி லேயே (தமிழாசிரியர்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள்). முழுகிப்போய் உள்ளவர்களுக்கு சாமியவர்கள் பாட்டை எப்படி அனுபவிக்க முடியும். ஆனால் இப்போது இங்கே சில சங்கீத உணர்ச்சியுடையவர்கள் அங்கீகரிக்க முன் வந்திருக்கிறார்கள். சந்தோஷமான காரியம் அது. இரண்டு நாளில் ஊருக்குத் திரும்புவதாகச் சொன்னார்கள். ரொம்ப விசாரித்தாக அவர்களிடம் சொல்லவேணும்.

நான் இன்று நேமத்தான்பட்டிக்கு (செட்டிநாடு ஸ்டேஷன்) ஊருணித் திறப்பு விழாவுக்காகப் போகிறேன். 27.10.39 அன்று அங்கிருந்து திருநெல்வேலி போகிறேன். பிறகு தென்காசி. ஒரு வாரத்தில் இவ்விடம் திரும்பிவர உத்தேசம்.

தங்கள் கடிதத்தை எல்லாரும் வாசித்து அனுபவித்தோம். தாங்கள் முறையிடுகிறீர்கள். அடிக்கடி கடிதம் எழுத முடியவில்லையே என்று. நானும் அதற்கு ஒப்பம் போடவேண்டியதுதான்.

குற்றாலத்தில் தாங்கள், நண்பர் கான்போர்டு உல்டிங்குக்கு ரொம்பவும் துணை செய்தீர்கள் என்று ரொம்பவும் பாராட்டிச் சொன்னார். ரொம்ப சந்தோஷம். இங்கே எல்லாரும் செளக்கியம். செல்லையா ஆபிசுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். உடம்பு தேறி வருகிறது.

அங்கே தாங்களும் அம்மாளும் குழந்தைகளும் செளக்கியந்தானே. அம்மாளுக்கு இப்போது உடல்நிலை திருப்திகரமாய் இருக்கும் என்று நம்புகிறேன். விளாத்திகுளத்துக்கு வந்துவிட்டார்கள் அல்லவா. அங்குள்ள நண்பர்களுக்கு என் அன்பைத் தெரிவிக்க வேணும்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

ஏரோ

மீனம்பாக்கம்

2.12.39


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் அன்பான கடிதம் வந்தது. விளாத்திகுளத்து அதிகாரிகளைப் பார்க்க ரொம்ப சந்தோஷம். பொதுவாக உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ரெட் டேப்பில் ஒன்றில்தான் சுவை. அதையே இருபத்து நாலு மணி நேரமும் முந்நூற்றறுபத்து ஐந்து நாளுமே வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கலாம். வேறொரு விஷயத்தில் சுவையிருக்கக்கூடும் என்று எண்ணக்கூட அவர்களுக்கு முடியாது. பண்பாடு என்பது அவர்களிடம் இருந்தால் ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவோ திருத்தங்கள் செய்து கிராமவாசம் நகரவாசத்தைவிட மேலானது என்று எளிதில் காட்டியிருக்கலாமே. தாங்கள் எங்கே போனாலும் அந்தவிதமாக கிராமத்தைத் திருத்தி விடுகிறீர்கள். நாங்குனேரி தாங்கள் இருந்தபோது கலகலப்பாய்த் தான் இருந்தது. விளாத்திகுளத்தில் இவ்வளவெல்லாம் நடந்திருப்பதைப் பார்க்கும்போது அவ்வூர்க்காரர்கள் ரொம்பவும் புண்ணியம் செய்தவர்கள்தான். தாங்கள் விளாத்திகுளத்திலிருக்கும் போது அங்கு வரவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. எப்படியோ சமயம் வாய்க்காமல் போய்விட்டது. விளாத்திகுளத்துக் காரர் அதிர்ஷ்டசாலிகள் அல்ல என்றும் கோவில்ப்பட்டிக்காரர் அதிர்ஷ்டசாலிகள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. எனக்கு செளகரியம் நாங்கள் கோவில்பட்டியிலிருப்பதுதான்.

தீபாவளி மலரில் தங்கள் கட்டுரை ரொம்பவும் உபயோகமானது. நம்முடைய கலையோ மிகச் சிறந்தது. அதை எடுத்துக்காட்ட வேண்டியது தமிழன் ஒவ்வொருவனுடைய கடமை. மனுஷனுக்கு அறிவு உணர்ச்சி எல்லாம் கெட்டுப் போவதற்குக் காரணம் கலை உணர்ச்சி இல்லாததுதான் என்று நேற்று மாலையில் அடையாறு கலாஷேத்திரத் திறப்புவிழாவில் சொன்னேன். ரொம்ப உண்மை. நேற்று பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது தங்கள் கட்டுரைதான் ஞாபகத்துக்கு வந்தது. நம்மடைய தமிழ்நாட்டில் கலைச்செல்வம் எவ்வளவோ இருந்தும் நம்மவருக்கு அதைப் பற்றிய உணர்ச்சியே இல்லை. தங்கள் கட்டுரையைப் பார்த்து ஏதோ கோணலும் சொத்தையுமான உருவங்களுக்கு இவ்வளவு வார்த்தைத் தூபமெல்லாம் வேண்டுமா என்று கூடச் சொல்லுவார்கள். நம்முடைய முன்னோர்கள் எவ்வளவெல்லாமோ கஷ்டப்பட்டு பொருள் விரயஞ் செய்து சிற்ப வேலைகள் செய்து முடித்தார்கள். அவர்களும் பைத்தியக்காராகள்தானே. ஆமா சடையப்ப வள்ளலும் கம்பருமே பைத்தியக்காரர்கள்தான் அவர்களுக்கு. ஆகையால் தங்கள் கட்டுரை நம்மவரில் சிலருக்காவது சிற்பக் கலையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் நல்ல காரியமே.

கம்பர் பற்றிய என்னுடைய ரேடியோ பிரசங்கங்களை திருச்சி நிலையத்தார் புத்தகமாக வெளியிடுவதாகச் சொன்னார்கள். யுத்தம் காரணமாக ஒருக்கால் அதை ஒத்திவைத்துவிடலாம். ஆனால் புதுமைப் பதிப்பகத்தாருக்குத் தாங்கள் அதை வெளியிடவேண்டும் என்ற ஆசை. ஆகையால் எப்படியாவது வெளிவந்துவிடும் புத்தகமாக. தங்களுக்கு நிச்சயமாய் ஒரு புத்தகம் வந்து சேரும்.

நான் இன்று திருச்சிக்குப் போகிறேன். நாளை இரவு ஏழு மணிக்கு ரேடியோவில் முத்தொள்ளாயிரத்தைப் பற்றிய பேச்சு. பேச்சு முடிந்ததும் நாளை இரவே செங்கோட்டை பாஜஞ்சரில் திருநெல்வேலிக்குப் போகிறேன். கோயில்பட்டிக்கு காலை (திங்கள்) 6 மணிக்கு வந்து சேருகின்றது. போகும்போது இறங்க முடியவில்லை. திரும்பும்போது 7.11.39 அல்லது 8.11.39 வாக்கில் கோயில்பட்டிக்கு வந்து தங்கிவிட்டு காரைக்குடிக்குப் போகலாம் என்று எண்ணுகிறேன். காரைக்குடியில் 9 ஆம் தேதி இருக்கவேண்டும்.

கோயில்பட்டியானது வீட்டம்மாளுக்கு ரொம்பப் பொருத்தமாய் இருக்கும் என்று நம்புகிறேன். உடம்பு சீக்கிரம் ஆரோக்கியம் அடையும் என்று நம்புகிறேன். இங்கே எல்லாரும் செளக்கியம். இங்கு ஏற்பட்ட Coldmare காரணமாக செல்லையாவுக்கு கொஞ்சம் ஜலதோஷம். மற்றபடி நோயாய் ஒன்றும் இல்லை. -

வட்டத்தொட்டியிலிருந்து தீபாவளி மலருக்கு ரொம்ப விஷயம் வந்திருக்கிறது. நமக்கெல்லாம் திருப்தி தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

ஏரோ

மீனம்பாக்கம்

21.1.40


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் மிக்க அருமையோடு அனுப்பிய பொங்கல் வாழ்த்து வந்தது. ரொம்ப சந்தோஷம். கைகுவித்து நண்பர்களைத் தாங்கள் வரவேற்கிறது ரொம்ப வாய்ப்பாய் இருக்கிறது. முகப்பிதழானது சட்டமாகிப் படத்தைப் பின்வாங்கச் செய்வதால் தாங்கள் உருண்டு திரண்டு நின்ற மாதிரியே இருக்கிறது. முகப்பிதழைப் பின்புறமாக மடக்கி ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் உயரமும் விதியும் மாத்திரங்காட்டி மூன்றாவது பண்பான இனத்தை காட்டாது போய்விடும். நம்முடைய நண்பர்கள் எல்லாரும் பால் பொங்கிற்றா என்று விசாரிக்கிற தங்கள் ஆர்வத்தை அனுபவிப்பார்கள். ஆகவே நல்ல பொங்கல் படி கிடைத்துவிட்டதுதான் எங்கள் எல்லாருக்கும்.

பாலரை வாழ்த்திய கர்த்தரில் தமிழ்ப் பாடலின் பண்பு வாய்த்திருக்கிறது.

சின்னஞ்சிறுவர் சிறுமியர்கள் - நிதம்

சிந்தை களிக்கவே வாழ்ந்திருந்தார்

ரொம்ப நயமாய் அமைந்திருக்கிறது. தாங்கள் கையாண்ட ஆங்கில மூலத்தையும் எதிர்ப்பக்கத்தில் அச்சிட்டிருக்கிறது ரொம்ப பிரயோசனம். ஆங்கிலக் கவி ஆங்கிலக் காதுகளுக்கு எப்படி இருக்குமோ. நம்முடைய காதுக்கு நன்றாயிருக்கா? இல்லவே இல்லை என்று சாதித்துவிடுவேன். தாளமும் யாப்பும் தெரிகிறதுதான். ஆனால் எப்படியோ கல்தச்சன் வந்து காதில் வேலை செய்கிற மாதிரிதான் இருக்கிறது. தமிழிலோ தாளமும் யாப்பும் (சாமானிய விஷயங்களை) மாத்திரம் அல்ல இசைப்பண்பே காதுக்குத் தென்பட்டு விடுகிறது. தமிழ்ப் பாஷையும் செய்யுளும் இசையோடு ஒட்டிக் கிடப்பதால் பாட்டு இயல்பான முறையில் நடக்கிறது. நமக்கு சுகத்தை விளைவிக்கிறது. ஆனாலும் ஒன்று தமிழ் எவ்வளவு பயின்றிருந்த போதிலும் அயலார் (ஆங்கிலேயர்தான்) தமிழை அனுபவித்தோம் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. சரிதான். நம்மவர்கள் ஆங்கிலக் கவியை அனுபவித்தோம் என்று சொல்லுகிறது. மயிலைத் தடவிப் பார்த்துவிட்டு "அடடா எவ்வளவு அழகாயிருக்கிறது” என்று குருடன் சொல்லுகிற கணக்குத்தான். நம்மவர்களுக்கு, நாம் குருடர்தான் என்று சொல்லிக்கொள்ள மனமில்லை. ஆங்கிலேயனும் நம்மைப் பார்த்து எல்லாம் குருடுதான் என்று சொல்லிவிட்டால் காரியம் கெட்டுப் போகுமே என்று பயப்படுகிறான். இது நம்முடைய துர் அதிர்ஷ்டம்.

ஜனவரி முதல் தேதி அன்று சிதம்பரத்தில் இருக்க நேர்ந்தது. அங்குள்ள நண்பர் கம்பராமாயண வாசிப்புக்கு இடம் பண்ணினார். வக்கீல்கள் புரோபஸர்கள் பலர் வந்திருந்தார்கள். மற்ற ஆடவரும் பெண்டிருமாக மொத்தம் முப்பது பேர். இடம் சதுரத் தொட்டிக் கட்டு. வட்டத்தொட்டியில் வாசிக்கிறது போல இருபது பாட்டு வாசித்தோம். எல்லாருக்கும் ஒரே வியப்புதான். இப்படியும் இலக்கியம் உண்டா என்று வியந்தார்கள். இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிற்றே என்றும் ஏமாற்றத்தை உற்சாகமாக வெளியிட்டார்கள். மறுநாளும் வாசிக்க வேண்டும் என்று வற்புறுத்தி என் பயணத்தை ஒற்றி வைத்தார்கள். மறுநாளும் வாசித்தேன். முந்திநாளை விட அதிகமாகவே அனுபவித்தார்கள் (வியக்கா விட்டாலும்). சிதம்பரத்துக்கு அடிக்கடி வரவேணும் கம்பராமாயண வாசிப்பு நடத்த வேண்டும் என்று மாத்திரம் சொல்லிவிடவில்லை. வட்டத்தொட்டியின் கிளை ஒன்றை நிரந்தரமாக அமைத்துவிட்டார்கள். வட்டத்தொட்டி விசாலம் அடைந்து வருகிறது சந்தோஷமான காரியம் அல்லவா.

தாங்கள் கோயில்பட்டியிலிருப்பது ரொம்ப சந்தோஷமான காரியம். எப்படியும் 31.1.40 அன்று திருநெல்வேலிக்கு வருகிறேன். தங்களையும் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்புகிறேன்.

செல்லையாவுக்கு இப்போது காய்ச்சல் ஒன்றும் இல்லை. உடல் தேறியிருக்கிறது. இன்னும் ஒரு மாசத்துக்காவது சலனம் இல்லாமல் நிம்மதியாயிருந்தால் உடம்பு பழைய நிலைக்கு வந்துவிடும். வைத்தியரும் அப்படியே சொல்லுகிறார்.

செல்லையாவும் அண்ணியும் தங்கள் பொங்கல் விசாரிப்பை ரொம்பவும் அனுபவித்துப் பாராட்டினார்கள்.

வீட்டில் அம்மாளுக்கு இப்போது உடம்பு தன்னிலைக்கு வந்திருக்கும் என்று நம்புகிறேன். குழந்தைகளும் செளக்கியந்தானே. தாங்களோ கட்டுமுட்டாய் உருண்டு திரண்டு இருக்கிறீர்கள்.

ரொம்ப சந்தோஷம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

ஏரோ

மீனம்பாக்கம்

8.3.40


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் கடிதம் வந்தது ரொம்ப சந்தோஷம். சென்ற மாதம் அந்தப் பக்கம் வந்திருந்தபோது எப்படியாவது கோயில்பட்டிக்கு ஒருநாள் போய்விட்டு வரவேணும் என்று எண்ணினேன். கலியாண நெருக்கடிகளினால் அது முடியாமல் போயிற்று. கோயில்பட்டி இலக்கியச் சங்கத்தில் தாங்கள் கட்டுரை நிகழ்த்தியதாகவும் ரொம்ப நன்றாய் இருந்ததாகவும் வி.எஸ். சிவக்கொழுந்து முதலியார் சொன்னார். ரொம்ப திருப்தியாய் இருந்தது. தாங்கள் எந்த ஊரிலிருந்தாலும் விளாத்திகுளமாய் இருந்தாலுமே அங்கு ஒரு தமிழ்க்குழாம் கூடிவிடும். கம்பருக்கும் நல்ல காலம் பிறந்துவிடும். கோயில்பட்டியில் தெல்லாம் நடந்தது என்பதில் அதிசயம் இல்லைதான்.

இந்த வருஷம் காரைக்குடியில் நாலுநாள் 21.3.40 முதல் 24.3.40 வரை வெகுவிமரிசையாக கம்பர் விழாவை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கென்று ஒரு படம் தயாரித்திருக்கிறார்கள். தாங்கள் பால்நாடார் அவர்கள் மற்ற நண்பர்களும் அங்கு வருவீர்கள் என்று நம்புகிறேன். விழாவோடு முதல் இரண்டு நாளும் கலந்து கொள்ள எனக்கு முடியும். மூன்று நாள் தென்காசிக்கு என் மருமகனுடைய மகள் கலியாணத்துக்கு நான் எப்படியும் போகவேண்டும். காரைக்குடி நண்பர்கள் இதுபற்றி ரொம்ப புகார் சொல்லுகிறார்கள். ஆனால் வேறு வழியில்லை.

தேரழுந்துளில் ஏப்ரல் மாதம் விழா நடத்தலாம் என்று எண்ணுகிறார்கள். இந்த வருஷம் திருநெல்வேலியில் கட்டாயம் கம்பர் விழா நடத்திவிடவேண்டும். ஜூலை மாதத்திற்குப் பிறகு நடத்தினால் போதும். கம்பர் விழாவே முதல்முதலில் திருநெல்வேலியில்தான் ஆரம்பித்தது. எப்படியும் அது அங்கு விட்டுப்போகக் கூடாது. தாங்கள் வேண்டும் உதவி செய்ய வேணும்.

தூத்துக்குடியில் 15.3.40 அன்று தாங்கள் பிரசங்கம் நடப்பது பற்றி ரொம்ப சந்தோஷம். இப்படி கம்ப உணர்ச்சியை அடிக்கடி தூண்டுதல் ரொம்ப அவசியம். பால்நாடார் அவர்களுக்கு என் சந்தோஷத்தைச் சொல்லவேணும்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே. செல்லையாவுக்கு உடம்பு நன்றாய்த் தேறியிருக்கிறது. தொண்டைக் கம்மல் மாத்திரம் இருந்து கொண்டிருக்கிறது. அதுவும் சீக்கிரம் தெளிந்துவிடும் என்று டாக்டர் சொல்லுகிறார்கள்.

தங்கள்

டி.கே. சிதம்பர்நாதன்


❖❖❖

ஏரோ



மீனம்பாக்கம்

22.1.41


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நேற்று இரவு ரேடியோவில் தங்கள் (பேச்சையல்ல) கட்டுரையை நானும் அருணாசலம்பிள்ளை அவர்களுமாகக் கேட்டோம். ஒலிபரப்பு (முதல் விஷயமாக) தெளிவாய் இருந்தது. யாரும் விஷயங்களை எளிதில் கேட்டு உணரும்படியாகவே இருந்தது. பொதுவாகச் சென்னையில் திருச்சி ரேடியோ நன்றாய்க் கேட்பதில்லை. நேற்றிரவு ஆகாயமும் தெளிவுபட்டிருந்தது.

வாசித்தவர் (யாரோ) நிறுத்தி, பாவம் புலப்படும் படியாகவே வாசித்தார். செய்யுள்களை மடக்கி வாசித்துப் புரட்ட நேரம் போதாது என்பது தெரியவந்தது.

நாட்டில் வறட்சியென்ன மழையின் பயன் என்ன என்பதெல்லாம் பட்டினவாசிகளுக்குத் தெரிய முடியாது என்று வழியைத் தூக்கிக் காட்டி விளக்கியது வாய்ப்புதான். மழையை எப்படிக் குடியானவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கக் கோடையைப் புரட்டாசி மாதம் வரையும் நீட்டிவிட்டது. நன்றாய் இருந்தது. பழுத்துக் காய்ந்த தோசைக் கல்லில் விட்டால்தான் நீர்த்துளி சப்தம் போடும். அதாவது பாவமாகப் பேசும்.

மூத்தபள்ளி கொடுக்கிற சாட்டையெல்லாம் ரஸந்தான். கதாநாயகம் நாம் அல்ல என்பதில் நமக்குக் கும்மாளி கூட.

நானும் அருணாசலம்பிள்ளை அவர்களும் கேட்டோம் ரொம்ப அனுபவித்தோம். அதிகமாகவே அனுபவித்திருப்போம். தாங்களே வந்து பேசியிருந்தால் ரேடியோகாரர் தங்களைப் போன்றவர்களை அழைத்தால் ரஜாநாளில் வரும்படியாகச் செய்யவேண்டும். எளிதாகவும் செய்துவிடலாம். -

பொங்கலுக்கு பூ ஒன்று கொடுத்திருக்கிறீர்கள். வாடாத பூவே என்றென்றும் கமழும்பூவே, புலவர்கள் ராமலிங்க சுவாமிகளைக் கவியென்று அங்கீகரிப்பதில்லை. ஏதோ சாமான்யம் என்று சொல்லி விடுவார்கள். ஒருவேளை பாசுரங்களை நன்றாய் இருக்கிறதென்று கூடச் சொல்லிவிடுவார்கள். கீர்த்தனைப் பகுதியைக் கண்ணெடுத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அவைகள்தான் அருட்பா, கவி என்பதெல்லாம். தாங்கள் கொடுத்த பாடல் நன்றாய் அமைந்திருக்கிறது. ரொம்ப திருப்தி.

கம்பர் விழாவைக் கொண்டாடவேண்டும் என்று தீர்மானித்தது பற்றி ரொம்ப சந்தோஷம். நாம்தான் ஆரம்பித்தோம். ஒரு விழாவைச் சிறந்த விதமாகவும் நடத்தினோம். தரிசு விழுந்துவிட்டது எப்படியோ. இந்த வருஷம் எப்படியாவது நடத்திவிடவேண்டியதுதான். மார்ச்சு மாதம் 11க்குப் பிறகு ஒட்டி வைத்தால் எனக்கு வர செளகரியமாக இருக்கும். செட்டிநாட்டுக்கும் போய்விட்டு 27.1.41 அன்று மாலை 7.30 மணிக்கு ரயிலில் திருநெல்வேலிக்கு வருகிறேன். ஒருநாள் வண்ணார்பேட்டையில் தங்க உத்தேசம். எல்லாவற்றையும் பற்றிக் கலந்து கொள்ளலாம் ஜாகை ஆவுடையப்பப் பிள்ளையவர்கள் வீட்டில்.

கலிங்கத்துப்பரணி பற்றிய பேச்சு ரொம்ப ரத்னச் சுருக்கமாய்ப் போய்விட்டது என்று தாங்கள் சொன்னீர்கள். அப்படியேதான் பல நண்பர்களும் சொன்னார்கள். ஆனால் விஷயம் வேறு. கலிங்கத்துப்பரணி பற்றி மூன்று பேச்சும் பேச வேண்டும் என்று ஏற்பாடு. அன்று நடந்தது முதல் பேச்சு. அதாவது முகவுரை. அடுத்தது 11.2.41 அன்று. கடைசியாயுள்ளது 11.3.41 அன்று மூன்றையும் வைத்து ஒருவகையாகச் சமாளிக்கலாம் என்றுதான் வகைப்படுத்தினேன். மூன்றையும் கேட்டால் சாமான்யமாகத் தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லாதவர்களுக்கு நூல் விஷயமும் ஒரு வகையாக அதன் நயமும் தெரியவரலாம் என்ற எண்ணத்தோடுதான் பேசுகிறேன். தாங்கள் குறித்த பாட்டு (பொருதடக்கை வாளெங்கே) எளிமையுள்ளது, பாவமும் நிறைந்த பாட்டு. முந்தின இரண்டு பாட்டுகளில் உண்மையான உணர்ச்சிப் பாவம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மூன்றாவது பாட்டிலுள்ள எளிமையில்லை. அதற்குத்தக்கபடி பாவத்தின் வேகம் குறைவுதான். தாங்களும் ராமலிங்கம் பிள்ளையவர்களும் பேச்சைக் கேட்டது பற்றி ரொம்ப சந்தோஷம். அத்தகைய நண்பர்களும் தமிழ்ப் படையில் சேர வேண்டியதுதான். ரொம்ப சந்தோஷம்.

இங்கு செல்லையா முதலான யாவர்களும் தங்கள் பொங்கல் பாடலையும் கழகத்தையும் அனுபவித்தார்கள். செல்லையாவுக்கு உடம்பு மெள்ளத் தேறி வருகிறது.

தங்கள்


டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு

ராவ் சாகிபு ஐ.பி.எஸ். அங்கு வந்தால் 27.1.41 அன்று வண்ணார்பேட்டைக்கு வருகிறேன். என்று தெரிய செய்ய வேண்டும்.

❖❖❖

ஏரோ

மீனம்பாக்கம்

18.4.41


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் அரிய பொங்கல் வாழ்த்தும் கடிதமும் வந்து சேர்ந்தன. ரொம்ப சந்தோஷம் என்னை ரொம்பத்தான் வேலை வாங்குகிறார்கள். கட்டுரைகள் பல எழுதித் தள்ள வேண்டியிருக்கிறது. தாகூஜியண்யந்தான். கம்பராமாயணமும் வெளிவரவேண்டியிருக்கிறது. புதுமைப் பதிப்பகத்தார் ஒரு கற்றுச் சொல்லியை என் மேல் ஏவிவிட்டார்கள். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பேனாவைக் கொண்டு என்னைக் குத்திக் கொண்டிருக்கிறார். பாலகாண்டமும் அயோத்திய காண்டமும் இரண்டு மாசத்தில் அச்சிட்டு வெளியாக வேண்டும். காரணம் தெரிந்து கொண்டதல்லவா நான் உடனே பதில் எழுதாதற்கு.

நண்பர் கணேசன் சொன்னார்கள், என்னுடைய திருத்தங்களைத் தாங்கள் கோவையில் சேர்க்கவேண்டும் என்று. அவ்வளவுதான். பிறகு நான் சந்திக்க முடியவில்லை. சில நாளில் சந்திப்போம். வேண்டியதைச் சொல்கிறேன்.

சங்கரன்கோயிலில் மழைபெய்து இந்த வருஷம் செளகரியமாயிருக்கும் என்று நம்புகிறேன்.

வீட்டில் குழந்தைகள் அம்மாள் எல்லாரும் செளக்கியந்தான்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்

ஏரோ
மீனம்பாக்கம்
12.5.41

நண்பர் பாஸ்கர தொண்டைமான் அவர்களுக்கு,

காரைக்குடியில் நடந்த விஷயங்கள் சம்பந்தமாகவும் மற்ற விஷயங்கள் சம்பந்தமாகவும் தாங்கள் எழுதிய கடிதம் வந்தது. அவ்வளவு அருமையாய் எழுதிய கடிதத்துக்கு உடனே பதில் எழுதியிருக்க வேண்டும். விரிவாய் எழுத வேண்டிய பதிலாச்சே என்று எண்ணி எண்ணி நாள்கடந்துவிட்டது.

இருபதாவது நூற்றாண்டின் இடைப்பகுதியிலுள்ள தமிழ்ப் பேராசிரியர்களின் சரித்திரம் மிகவும் விசித்திரமானது. எப்படி? பூர்வமான புலவர் குழாத்தினர் கம்பரையும் கம்பரைக் கற்கிறவர்களையும் வைதார்கள். அவர்களைத் தங்களுக்குத் தெரியும். பிறகு ஊரோடு ஒக்க ஓடு என்று சொல்லுகிறபடி அனேகம் பேர் கம்பரைக் கற்க ஆரம்பித்தார்கள். சரி அது ஒரு குழாமாய்ப் பெருகிவிட்டது. இந்தக் குழாத்தில் சிலருக்குக் கம்பரைப் புகழ்ந்து கொண்டிருந்தவர்க்கு அவ்வளவாக லாபம் இல்லை என்று கணக்குப் பார்த்ததில் தெரியவந்தது. பெரியபுராணத்தைப் புகழவேணும், சிலப்பதிகாரத்தைப் புகழவேணும், சங்கநூலைப் புகழவேணும் என்று தோன்றிவிட்டது. இதில் ஏதாவது ஒன்றிரண்டில் சார்பு காட்டினாலும் போதும். ஆனால் ஒன்று தமிழைக் குறைக்கவேணும். அதோடு கம்பனும் ரொம்ப மேலே போய்விடக்கூடாது. இந்த எண்ணம் எல்லாம் கம்பர் அபிமானிகளுக்குள்ளே கவிந்துவிட்டது. கம்பர் சம்பந்தமாக நாம் செய்யும் பிரச்சாரம் எல்லாம் ரொம்ப மேலே போகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆத்திரம் வந்துவிட்டது. ஆகவே இப்போது கம்பருக்கு விரோதிகள் கம்பராமாயணத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். கணேசன் கம்பர் விழாவைத் தன்னிச்சையாய் நடத்துவதால் மேலே சொன்ன மனப்பாங்கு அவ்வளவாக வெளிக்காட்டவில்லை. அல்லாத ப௯ம் கம்பப் பிரசங்கிகள் எல்லாரும் கம்பரையும் தமிழையும் அவ்வளவாக மேலே போய்விடாமல் பார்த்துக்கொள்ளும் கடமை பூண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

யுனிவர்சிட்டியிலுள்ளவர்கள் தமிழைப் பற்றி பேசும்போது ரொம்ப அளந்து பேச வேண்டியிருக்கிறது. கம்பரை 12 வது நூற்றாண்டுக்கு முன் போய்விட இடங்கொடுக்கக்கூடாது. தமிழில் அப்பர் காலத்துக்கு முன் இசையோடு கூடிய பாடல் கிடையாது என்றெல்லாம் சொல்லித் தீர்க்க வேண்டியிருக்கிறது. இப்படி யெல்லாம் சொன்னால்தான் Revalutionary என்று தங்களை எண்ணுவார்களாம். அர்த்தம் என்ன? மைலாப்பூர் நண்பர்கள் சிலர் சொல்லுகிறதை ஒட்டியே தமிழும் சரித்திரமும் இருக்கவேண்டும் என்பது கொள்கை.

எப்படியோ இந்த மனப்பாங்கை நம்முடைய நண்பர்கள் கண்டு கொண்டார்கள். நல்ல கருவிதான் என்று எண்ணினார்கள். நாம் எல்லாம் இருந்தால் செளகரியம் அல்ல என்றும் தெரிந்து கொண்டார்கள்.

தாங்கள், அருணாசலம்பிள்ளை நீலாவதி அம்மாள் எல்லாருக்கும் சூழ்ச்சி இன்னதென்று தெரிந்துகொண்டது. வையாபுரி பிள்ளை அவர்கள் அப்படி யாதொரு சூழ்ச்சியும் கிடையாது என்று வாதாடுகிறார்கள். நாம் என்ன செய்கிறது.

ஆனால் காரைக்குடியில் உள்ளவர்கள் எல்லாரும் சூழ்ச்சி செய்துவரும் குழாத்தை கண்டுகொண்டார்கள். அதுபோதும். இந்த வருஷத்திய கம்பர் விழாவில் இதுவே முக்கியமான காரியம் என்று சொல்லலாம். 29.41 மாலை ரேடியோ கேட்க முடியாமல் போய்விட்டது. நந்திக்கலம்பகத்தைப் பற்றிய கட்டுரை வானொலியில் வெளியாகும். அதைப் படித்துத்தான் திருப்தி அடைய வேண்டும் நான். ஸ்கிருப்டுக்கு நகல் இருந்தால் அனுப்பவேணும்.

நண்பர் ஆவுடையப்பப் பிள்ளையவர்களை மற்றும் நண்பர்களையும் கலந்து மீனம்பாக்கத்திலேயே இன்னும் கொஞ்ச காலம் தங்குவதாக உத்தேசித்திருக்கிறேன்.

29.6.41 இல் திருச்சிக்கு வருகிறேன் (ரேடியோ சம்பந்தமாக). அதை ஒட்டி திருநெல்வேலிக்கு நான் வருவேன். நண்பர்களை எல்லாம் பார்த்துக்கொள்ளவேணும். வி.பி.எஸ். அவர்களைச் சமீபத்தில் பார்த்தீர்களா. செளகரியமாக இருக்கிறார்களா.

கோகலே ஹாலில் வியாழன் தோறும் கம்பரமாயணம் வாசித்தேன். நூற்றைம்பது பேர் வருவார்கள். எல்லாரும் ரொம்ப ரொம்ப ரிசிக்கிறார்கள். முதியோரும் இளைஞரும் பெண்டிருமே வருகிறார்கள். இவ்வளவு பேரும் கம்பரில் ஈடுபட்ட பிறகு கம்பரை அழித்துவிட முடியாது எளிதில்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே. -

தங்கள் உதவி கொண்டு மாணவர் சங்கத்தில் நண்பர் வீரபத்திர பிள்ளையவர்கள் கம்பர் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நண்பர்கள் கணேசனும் நீலாவதி அம்மையும் வந்தது ரொம்ப பாராட்டவேண்டிய விஷயம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்



ஏரோ

மீனம்பாக்கம்

9.8.41


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கோர்ட்டுகளில், முக்கியமாக ஹாலில் கோர்ட்டுகளில் பெரிய கேஸ் என்றிருந்தால் ஏதாவது சாக்கை வைத்துக்கொண்டு ஒற்றி ஒற்றி வைக்கிறது வழக்கம். அதுபோல நீண்ட கடிதம் எழுத வேண்டியிருந்தால் ஒற்றிப் போடுகிறது வழக்கமாய்ப் போய்விட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில் நல்ல சங்கம் ஏற்படக்கூடும் என்று நம்புகிறேன். நண்பர் திருவேங்கடத்தய்யங்கார் நல்ல ரசிகர். அவர்களும் மற்ற நண்பர்களுமாகச் சேர்ந்து சபை கூடவும் கம்பராமாயணத்தை அனுபவிக்கவும் வசதி ஏற்படலாம்.

தாங்கள் காலை 4 மணிக்கு எழுந்திருந்து ஆபிஸ் வேலையை எல்லாம் தீர்த்துவிட்டுப் பொழுதுபோகவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கத்தான் வேண்டும். திருநெல்வேலி என்றால் சிந்துபூந்துறை, வீரராகவபுரம், வண்ணார்பேட்டை, பாளையங் கோட்டை முதலான இடங்களுக்கு சவாரி செய்து தமிழையும் கலைகளையும் பற்றி நண்பர்களுடன் பேசி காலை நாலுமணி நேரத்தையும் கடத்தலாம். ஸ்ரீவைகுண்டத்தில் சவாரியெல்லாம் முன்கட்டுக்கும் பின் கட்டுக்குந்தானே.

ஆனாலும் ஒன்று ஸ்ரீவைகுண்டத்தில் சீதா கலியாணத்தை முடிப்பது எளிதுதான்.

நண்பர் ராமசுப்பிரமணியம் தங்கள் சீதாகல்யாணத்தைக் கொடுத்தார்கள். ஒருவகையாக முழுதும் பார்வையிட்டேன். வாசிப்பவர்களுக்கு ரசமாகவே இருக்கும். அச்சுக்குச் சீக்கிரமாக கொடுக்க வேண்டியிருந்ததால் சாவகாசமாகப் பார்க்க நேரமில்லை. மேலும் சாவகாசமாகப் பார்த்ததாலும் தாங்களும் உடனிருந்தால் தானே பிரயோசனம். அதனால் உடனேயே அச்சுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டேன். அச்சிட்டு விநியோகம் செய்தால் விசேஷ வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாரும் வாசிப்பார்கள் அனுபவிப்பார்கள். விசேஷத்துக்கு புத்தகம் ஒரு சோபையைத்தரும்.

சா. கணேசன் இங்கே ஒரு பகல் தங்கினார்கள். நாட்டரசன்கோட்டையில் நடந்த விருத்தாந்தங்களைப் பற்றி தங்களை ஒட்டியே பேசினார்கள். அவர்களுக்கும் விஷயங்கள் தெரிந்திருக்கிறது. நானும் சா.க.வுக்கு எழுதியிருந்தேன். வையாபுரிப்பிள்ளை அவர்களுடைய பாடங்கள் கண்டுள்ள ராமாயணத்தை அச்சிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தையே வை. பிள்ளையவர்களுக்கு அனுப்பிவிட்டார்களாம். இதனால் தெரியலாம் அவர்களுக்கு நாம் எவ்வளவு ஒத்தாசை செய்யத் தயாராய் இருக்கிறோம் என்று. அவர்களுக்குப் படையாய் வந்த ஆசாமிகள் சா.கவுக்கு நம்மைப்போல எழுதுவார்களா என்றுதான் கேட்கிறேன்.

இப்போது ரொம்ப சுறுசுறுப்பான ஆசாமியாகிவிட்டேன். நானாக அல்ல. கல்கியும் அருணாசலம்பிள்ளையும் என்னைத் தெழிஉழவுதான் வாங்குகிறார்கள். நான் இப்போது ஈசிச்சேர் ஆசாமி அல்ல. காலை முதல் இரவு 11 மணி வரையும் ஏதாவது கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். பிரசங்கங்களும் பெருகுகின்றன. படலம்பாடவேண்டியதுதான் சோம்பேறி சுறுசுறுப்பானது என்று.

கல்கியில் வரும் ராமாயணக் கட்டுரைகளை வாசித்துவிட்டு லேசாய் இருக்கிறது என்று பலர் சொல்லத்தான் செய்கிறார்கள். ஆனாலும் பாட்டுகள் இல்லாமலிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று சொல்லவும் சிலர் முன் வருவார்கள். கன்றுக்குட்டி ஓட்டமாய் ஓடும். ஆற்றில் தண்ணீரைக் கண்டவுடன் பக்கென்று நின்று விடும். திரும்பியே போய்விடும். கல்கி நேயர்களும் அனேகமாக அப்படித்தானே. அடடா கவி வந்துவிட்டதே சார், இதோடு யார் சார் மாரடிக்கிறது என்றெல்லாம் பட்டுவிடும். இதுதான் கவிக்கு ஏற்பட்ட சாபம். இவர்களை நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம். வேறு சிலர் தமிழில் ஏதாவது கஷ்டமாய் இருக்க வேண்டியது அல்லது அபத்தமாய் இருக்கவேண்டியது - உடனே அதை எடுத்து மார்போடனைத்து முத்தமிட்டு பாராட்டிச் சீராட்ட எல்லாம் ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்கள் ஒருநாளும் நம்மோடு சேரமுடியாது. அவர்களை உயர்ந்த பீடத்தில் வைத்து மரியாதை பண்ணிவிட வேண்டியதுதான். வேறு செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்தப் பிற்போக்குத் தெய்வத்தின் ஆதிக்கம் வருவதற்கு நாளாகும். அந்த நாள் எல்லாம் கழிந்தால்தான் கலை தலைகாட்டமுடியும். எதற்கும் பருவம் காலம் எல்லாம் உண்டுதானே.

நானும் பல வருஷங்களாக தமிழ்ப் பாடல்களே சங்கீதக் கச்சேரிகளில் பாடவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வருகிறேன். தமிழர்கள் அதற்கு இசையவில்லை. கடைசியாக செட்டிநாட்டு ராஜா அவர்கள் பதினாறாயிரம் ரூபாய், தமிழ்ப்பாட்டாகக் கச்சேரி செய்பவர்களுக்கு வெகுமதி கொடுப்பதற்கு ரூ.10000 ஒதுக்கி வைத்து, வருகிற 14.8.41 முதல் 17.8.41 வரை அண்ணாமலை யுனிவெர்சிட்டியில் தமிழிசை மாநாடும் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். என்னையும் அழைத்திருக்கிறார். சங்கீதம் தெரியாத என் போன்றவன் சொல் எப்படி அங்குள்ளவர்களுக்கு ஏறப் போகிறதோ தெரியவில்லை. அண்ணாமலை நகருக்குப் போகிறேன்.

வி.பி.எஸ். அவர்களைச் சமீபத்தில் பார்த்ததுண்டா. வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்



ஏரோ

மீனம்பாக்கம்

16.9.41


நண்பர் பாஸ்கரத்தொண்டைமான் அவர்களுக்கு,

தங்கள் ரசமான கடிதம் கிடைத்தது. தாங்கள் இங்கு வருவது பற்றி ரொம்ப சந்தோஷம். 20 ஆம் தேதி காலை ரயிலில் எப்படியும் தங்களை எதிர்பார்க்கிறேன். மறுநாள்தான் நான் சிதம்பரம் போகிறேன். தமிழ்ப்பண்ணை ரொம்ப ஆவலோடு தங்களை எதிர்பார்க்கிறது. தமிழ்ப்பண்ணை சென்னையில் இருந்தாலும் திருநெல்வேலி ரிவினியூ ஜாகை ரிஜிஸ்டிரேஷனைச் சேர்ந்ததாகவே தெரிகிறது. தென்காசியில் என் வீடு சில வருஷங்களுக்கு முன் வரையும் அம்பாசமுத்திரம் தாலுகாவைச் சேர்ந்ததாய்த்தான் இருந்தது. அதுபோலத் தமிழ்ப் பண்ணையில் பங்கு எடுத்துக் கொள்பவர்களில் (எல்லாரும் அல்ல) முக்கால்வாசிப்பேர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள்தான். தரிசு விழுந்தால் என்னைப் போட்டுவிடுகிறார்கள். பி.ஸ்ரீ. மகரம், சீனிவாசக ராகவன், மு. சுப்பிரமணியபிள்ளை, வையாபுரிபிள்ளை, கே. பாலசுப்பிரமணிய ஐயர் (கலியாணம் திருநெல்வேலி), தம்பி ம. சந்திரசேகரன், தாங்கள். ஒன்பது பேர் செங்கல்பட்டு ஜில்லாவுக்குள். திருநெல்வேலி ஜில்லா எப்படியோ திருநெல்வேலி பேரைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

சீதா கலியாணம் எனக்கும் கிடைத்திருக்கிறது. அழகாக அச்சிட்டு விருந்தினருக்கு வழங்கியிருக்கிறார்கள். விருந்தினரும் ரொம்ப ஆர்வத்தோடு ஏற்றிருப்பார்கள். கம்பரை எல்லாரும் அறிந்துவிடவேண்டும் என்ற நோக்கம் இந்த மாதிரி வெளியீடுகளில் இருக்க வேண்டியதில்லை. கம்பரோ ஒரு கடல். அதோடு கண்ணாம்பொத்தி விளையாடுகிற கடலாயிருக்கிறது. சாமானிய மக்களை இதெல்லாம் பற்றித் தொந்தரவு பண்ணவேண்டாம். அவர்கள் சந்தோஷமாக புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டியது ரசமான பாடல்களாகப் பாடிப்பாடி அனுபவிக்க வேண்டியது. அனேகர் அப்படி அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நண்பர் நா. சிதம்பரம் அவர்கள் போன்ற இளைஞரின் உற்சாகத்தை வைத்துத்தான் கம்பரும் தமிழும் தங்களுக்கு உரிய உன்னத பதவியை அடைய வேண்டும்.

தங்கள் சீதா கலியாணம் நல்ல தோற்றுவாயாக அமைந்திருக்கிறது. ரொம்ப சந்தோஷம்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே. மற்றவை நேரில்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



ஏரோ, மீனம்பாக்கம்

13.10.41


அருமை பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் மிகச் சிரத்தை எடுத்து அனுப்பிய கர்ணாமிர்த சாகரத்திரட்டும் பால்நாடார் அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையும் தங்கள் கடிதத்துடன் வந்தது. ரொம்ப சந்தோஷம். நண்பர் கம்பரைப் பற்றி ரொம்ப ஆர்வத்தோடு எழுதியிருக்கிறார்கள். பேரம் பண்ணவில்லை. வி.வி.எஸ். ஐயரைக் கொண்டு லத்தீன், கிரிக்கு, ஆங்கிலம் பிரஞ்சு ஆகிய பாஷைகளிலுள்ள ஒப்புயர்வற்ற கவிஞர்களைவிடக் கம்பன் மேல் என்று சொல்லுகிறார்.

இப்போது தமிழிசை பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிற கோடையில் நம்முடைய கம்ப நண்பர்கள், கம்பருக்குத் தொண்டாற்றும் நண்பர்கள் கம்பருக்கு அங்கொரு சாட்டை இங்கொரு சாட்டை கொடுக்காமல் சும்மா இருக்க முடியுமா. முன்னமேயே ரா. ராகவய்யங்காரது வாகனத்துக்குத் தோள் கொடுக்கிறவர்கள், இனிமேல் கம்பரை, தமிழை, பாடங்களை, ஐயங்கார் பால் நாடார் அவர்களை, என்னை, ஜெயிலில் இருக்கிற சா. கணேசன் அவர்களை, உங்களைத் தான் குறைத்துப் பேசாமல் இருக்க முடியுமா? சீக்கிரத்தில் இந்தக் கூட்டத்தையெல்லாம் பாாக்கத்தான் போகிறோம். கம்பரைக் குறைப்பதற்காகவே செருகு கவிகளை எடுத்து அப்படியும் இப்படியும் சிலம்பம் விடவேண்டும். யாராவது அதில் சுவை இல்லையே என்று சொல்ல வேண்டும். உடனே கம்பனிலும் தமிழிலும் இதற்கு மேலாக எதையும் எதிர்பார்க்கலாமா என்று சொல்லி தமிழிசைக்கு மாறாகப் பிரச்சாரம் செய்கிறவர்களுக்குத் திருப்தி பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். டிகேசி எக்ஸாஜ்ஜரேட் பண்ணுவார். தமிழ் பற்றியும் கம்பர் பற்றியும் என்று இதுவரை பிரசாரம் செய்துகொண்டு வந்தவர்கள் வெறும் வாயையா மெல்லுவார்கள். அவலை உழக்கு உழக்காக வாயில் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறார்களே. இங்கே இதுவரையும் தமிழ்தான் நமக்கு உவந்தது. அதிலுள்ள பாடல்கள் மிக உயர்ந்தன என்று இதுவரை சொல்லிக்கொண்டு வந்த எஸ்.வி.வி. சங்கீத சாகித்தியத்துக்கு வடமொழியும் தெலுங்குந்தான் பொருத்தமான பாஷைகள். தமிழ் எந்த விதத்திலும் உதவாது என்று ஒய்.எம்.சி.ஏ.இல் அழுத்தம் திருத்தமாகப் பிரச்சாரம் செய்துவிட்டார். இனிமேல் எல்லாரும் அதை ஒட்டிப் பேச வேண்டியதுதானே. எல்லாம் கோவிந்தா கோவிந்தாதான்.

இந்தப் பிரச்சாரம் எல்லாம் நன்மையைத்தான் விளைவிக்கப் போகிறது. ஒரு நண்பர் தமிழிலே ஒன்றும் இல்லை கம்பரில் ஒன்றும் இல்லை என்று பிரச்சாரம் செய்தார். ஏதோ யுனிவர் சிட்டியிலுள்ள ஸ்காலர்ஸ் அவரை ஆமோதித்தும் பேசி வந்தார்கள். மற்றவர்களோ அதிக ஆர்வங்கொண்டு தமிழையும் கம்பரையும் கற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே எதிர்ப் பிரச்சாரம்தான் நம்மவருக்கு ஊக்கம் கொடுக்கும். ரொம்ப திருப்தி.

கர்னாமிர்த் திரட்டின் விஷயம் எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. சங்கீத வித்வான்களைக் கொண்டு தெரிந்துகொள்ள முயலுகிறேன். ஒன்று நிச்சயம். தமிழ்நாட்டில் வழங்குகிற ராகங்கள் எல்லாம் இங்கேயே பிறந்து வளர்ந்து வந்தன. ஆதியில் தமிழ்ப் பெயர்கள் அவைகளுக்கு வழங்கிவந்தன. நம்முடைய தலையில் வடமொழிப் பெயர்கள் வந்து விழுந்ததுபோல், ராகங்கள் தலைகளிலும் வடமொழிப் பெயர்கள் விழுந்து தொலைந்தன.

தாங்கள் தேவகோட்டைக்கு வருவதாய் இருந்தால் நன்றாய் இருக்கும். தமிழிசை மாநாடு பல இடங்களிலும் கூட வேண்டியதுதான் வெகு பிரயோசனம்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் சுகந்தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்

ஏரோ

மீனம்பாக்கம்

26.3.42


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் கடிதம் (23.3.42) கிடைத்தது. ரொம்ப சந்தோஷம். வி.பி.எஸ். அவர்களை தமிழ் அன்பர்கள் பலரும் பார்க்க விரும்புகிறார்கள். கம்பர் விழாவுக்கு முதல் நாள் தலைமை வகிக்க இணங்கியது ரொம்ப நல்ல காரியம். 28.3.42 மாலையே நான் காரைக்குடிக்குப் போய்ச் சேரலாம் என்று எண்ணுகிறேன். வி.பி.எஸ். அவர்களுக்கு ஜாகை செளகரியமாக அமைக்கும்படி சொல்லி விட்டிருக்கிறேன்.

நண்பர் கணேசன் அவர்கள் டில்லிக்குப் போயிருந்தார்கள். காரைக்குடிக்குத் திரும்பிய விபரம் தெரியவில்லை. எப்படியும் 29 ஆம் தேதி அன்று கன்னித்தமிழ் வாழ்க, கம்பன் வாழ்க என்று முழங்குவதற்கு விழாக் கொட்டகையில் வந்து குதித்துவிடுவார்கள்.

தங்கள் பாதுகா பட்டாபிஷேகம் சமீபத்தில் கிடைத்தது. முகப்புப் படம் புத்தகத்தை எடுத்துக்காட்டுகிறது. வ.வெ.சு. ஐயரின் தீர்ப்பு கம்பருக்கு ரொம்ப அவசியமான தீர்ப்பே. பாலர்களுக்கு என்று புத்தகம் ஏற்பட்டிருந்தாலும் அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் அனேக பாடல்களை அனுபவிக்கமுடியும். விஷயத்தை வசனத்தில் விளக்கி யிருப்பதால் கஷ்டம் இராது வாசிப்பதில். தமிழர்கள் மீது கம்பனை எப்படியெல்லாமோ விட்டெறிய வேண்டியிருக்கிறது. என்னத்தைச் சொன்னாலும் தோலுமேலே தொண்ணூறடி துடைத்துப் போட்டால் ஒண்னுமில்லை என்ற கணக்குக்கு வருகிற ஆசாமிகள் தானே மிகுதி. கம்பனைப் படித்து வந்தவர்களுக்கு இப்போது கொஞ்சம் அஸ்வாரஸ்யம் ஏற்பட்டு வருகிறது என்று தெரிகிறது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கவிதைச்சுவைக் கெட்டுப்போய்விட்டது என்று ஆங்கிலேயர் முறையிடுகிறார்கள். கம்பரைப் பற்றிப் பிரசங்கம் செய்து கவிதைச்சுவை கெட்டுவிட்டதோ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. வேண்டாதவர்களுக்கு வேண்டாத அளவில் கம்பர் பாடல்களை எடுத்து வீசும்படி நேர்ந்துவிட்டது எனக்கு. ஆனாலும் நம்மவர்கள் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாளைக்கு இந்தப் பொறுமை இருக்குமோ தெரியவில்லை. இந்தச் சங்கடமான நிலையில் புதுமைப் பதிப்பகத்தார் என்னுடைய ராமாயணத்தை (பாலகாண்டம், அயோத்தியா காண்டம்) கம்பர் விழாவில் வெளியிடப் போகிறார்கள். என்ன நடக்கப் போகிறதோ பார்ப்போம்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே. காரைக்குடியில் பார்ப்போம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



வண்ணார்பேட்டை,

திருநெல்வேலி

8.5.42


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நேற்று இரவு ஒரு மணிக்கு இங்கு வந்து சேர்ந்தோம். காலை 6 மணி வரையும் கணேசன் அவர்களும் சிதம்பரம் அவர்களும் நன்றாய்த் தூங்கினார்கள். தோசை காப்பியெல்லாம் ஸ்ரீனிவாசராகவனுடன் இருந்து சாப்பிட்டார்கள். 8.30 மணி பஸ்ஸில் ஏறி நாகர்கோயிலுக்குப் போயிருக்கிறார்கள். நாளைக் காலை இங்கே திரும்புகிறார்கள். நாளை மத்தியானமோ சாயங்காலமோ இங்கிருந்து புறப்பட்டு விட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.

வி.பி.எஸ் அவர்கள் இன்று சிறு காலையில் புறப்பட்டுப் போயிருப்பார்கள். தஞ்சாவூரில் ஒருநாள் தங்கினால் போதும் என்று சொல்லியிருக்கிறேன். ஏதோ சொல்லிவிட்டிருக்கிறோம். சொல்வதைக் கேட்டால் தானே. போர் முனைக்குப் போகத் தயாராய் இருக்கிற மாதிரி தோன்றுகிறது அவர்கள் படபடப்பு.

தேரழுந்துரில் வருகிற ஜூன் மாசம் 2, 3 தேதிகளில் கம்பர் விழாவைக் கொண்டாட மருத்துர் கந்தசாமிப் பிள்ளை அவர்களும் மற்றவர்களும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தங்களைக் கட்டாயம் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்று அவர்ளும் பாலகிருஷ்ண பிள்ளையும் எழுதியிருக்கிறார்கள். கணேசன் ஸ்ரீனிவாசராகவன் மூவரும் தேரெழுந்துருக்கு வர இன்று காலையிலேயே திட்டம் போட்டுவிட்டார்கள். தாங்களும் இப்பொழுதே திட்டம் போட்டால் நல்லது.

சங்கரன்கோயிலில் தமிழ்ச் சங்கத் திறப்பு விழா ஒரு மாநாடு போலவே நடந்தேறியது. ஏதோ நம்முடைய பாக்கியந்தான். சா. கணேசன், ஸ்ரீனிவாச ராகவன் அங்கு வந்து கலந்துகொள்ள நேர்ந்தது. நாம் எலலாரும் பேசிய பேச்சை சபையோர் ரொம்ப நன்றாய் அனுபவித்தார்கள். நேற்று நடந்த விஷயங்கள் எளிதில் அவர்களது இதயத்தை விட்டுப் போய்விடாது. சங்கம் தழைத் தோங்குவதற்கு வேறென்ன வேண்டும். வினைத்திட்பம் என்பது ஒருவர் மனத்திட்பந்தானே.

தங்கள் அன்பை எல்லாம் செலுத்தி, சங்கரன்கோயில் வாசிகளுக்கு என்னை அறிமுகப்படுத்திவிட்டீர்கள். நேற்று தாங்கள் பேசும்போது அவர்கள் என்னை இந்த உலகத்து ஆசாமி என்றுகூடக் கருதியிருக்கமாட்டார்கள் (நானே கருதவில்லையே). இந்த அறிமுகத்துக்குப் பிறகு என்னுடைய சொல் எங்கே ஏறப் போகிறது அவர்களுக்கு என்றுகூடச் சந்தோஷப்பட்டேன். ஆனாலும் எப்படியோ அவர்கள் எல்லாவற்றையும் மறந்து நான் பேச ஆரம்பித்ததும் அவர்களைச் சேர்ந்தவன்தான் நானும் என்று எண்ண ஆரம்பித்து விட்டார்கள். நான் சொன்னதை அறிந்துவிட்டார்கள். அனுபவித்தும் விட்டார்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தமிழ் ஆர்வத்துக்கு எப்படியோ சிமெண்ட் கான்கிரீட் அஸ்திவாரம் போட்டாயிற்று. நமக்கு இனி கவலை இல்லை.

தாங்களும் அம்மாளும் செய்த விருந்தோம்பலை மறக்க முடியாது. ஸ்ரீனிவாசராகவன், கணேசன் மூவரும் அனுபவித்தார்கள். நானும் வி.பி.எஸ் அவர்களுமோ உடல்நலம் பெற்றோம். 7.5.42 ஆம் தேதியை அரியதொரு நாளாகத் தினக் குறிப்பில் பதிந்துகொள்ள வேண்டியதுதான். இந்த மாதிரி பத்து நாட்கள் ஒருவருக்கு ஒரு வருஷத்தில் கிடைக்குமானால் பெரிய லாபந்தான். வாழ்க்கைக்குள் ரசம் புகுந்துவிடும். தம்பி சிதம்பரம் குழந்தைகள் எல்லோரும் விருந்தோம்பலில் பங்கெடுத்துக் கொண்டது அலங்காரமாய் இருந்தது. நல்ல பயிற்சிதான் அவர்களுக்கு நெருக்கடியான வேலைக்குள் தாங்கள் கண்ணுங்கருத்துமாய் விருந் தோம்பியதைப் பற்றி சா. கணேசன், ஸ்ரீனிவாசராகவனும், வி.பி.எஸ் நானுமாக நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இடம் பொருள் ஏவல் மூன்றும் வெகு சிறப்பாய் அமைந்தன. ரொம்ப சந்தோஷம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

திருக்குற்றாலம்

திருநெல்வேலி ஜில்லா

13.8.44


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

ரொம்ப சந்தோஷம். இங்கு வந்ததுதான் தெரிந்தது. திருநெல்வேலிக்கே ஆர்.டி.ஒவாகத் தங்களை நியமித்தது பற்றி அளவிறந்த திருப்தி. பொதுவாக நம்மவர்களை டிப்டி கலெக்டர் பதவியில் நியமிப்பதென்றால் எட்டாத்தொலைவில் அதிலும் தமிழ் வாசனையே இல்லாத ஜில்லாவில் கொண்டுபோய் போட்டு விடுவார்கள். அவர்களுக்கு எதற்கடா இந்தப் பதவி என்று தோன்றும். நண்பர்களுக்கும் அப்படியே தோன்றும்.

தாங்கள் திருநெல்வேலியிலேயே இருப்பதால் தமிழும் கம்பரும் பயன்பெற வசதியுண்டு. விசாகப்பட்டணத்தில் எப்படி இருந்தால்தான் என்ன, வாமன பத்தியத்துக்கு விளக்கம் ஏற்பட்டுவிடும் தங்களால். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.

இப்போதுள்ள தேகபலம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். இருக்கும். செய்யவேண்டிய சேவையையும் திருந்தச் செய்வீர்கள். ஜில்லாக் கலெக்டராகவும் வேலை பார்ப்பீர்கள். எல்லாவற்றிற்கும் இறைவனது அருளை வேண்டுகிறேன்.

அருமை ராஜேஸ்வரிக்கு என் அன்பு.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு : எனக்குச் செய்யவேண்டிய பல் வைத்தியம் செய்தாகிவிட்டது. உடம்புக்கு செளக்கியம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு வாரம் இங்கு தங்க வேண்டியிருக்கும்.

திருக்குற்றாலம்

திருநெல்வேலி ஜில்லா

20.9.44


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

திருச்சியில் ரேடியோ பேச்சு தங்களுக்கு இருந்தது தெரியும். பேசுகிற நேரத்தில் கோமதிநாயகம் பிள்ளை அவர்கள் வீட்டில் தாம்பூலம் வாங்கிக்கொண்டும் கல்யாணத்தை விசாரித்துக்கொண்டும் மேளத்தைக் கேட்டுக் கொண்டும் இருந்தோம். அதனால் தங்கள் பேச்சைக் கேட்க வசதியில்லாமல் போய்விட்டது.

மறுநாள் திருநெல்வேலி திரும்புவீர்கள் என்று எண்ணினேன். விசாரித்ததில் சென்னைக்குச் சோமுவுடன் போயிருப்பது தெரியவந்தது. எப்படியும் 17.9.44 அன்று வீட்டிலிருப்பீர்கள் என்று எண்ணி வீட்டுக்குப் போனேன். தாங்கள் இல்லை. அதனால் ஏமாற்றம் ஒன்றும் இல்லை. அருமை ராஜேஸ்வரியும் அம்மாளுந்தான் இருந்தார்களே. அவர்கள் என்னை லேசில் விடுவார்களா. பால் காய்ச்சிச் சாப்பிடச் செய்தார்கள். மத்தியானம் பனிரெண்டு மணிக்கு சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் பால் சாப்பிடுவது இயல்பான காரியமா அல்ல. அதனால்தான் கட்டாயம் வேண்டியிருந்தது. வெகுநேரம் பேசிக்கொண்டும் இருந்தேன். பெண் கல்வி பற்றிய பேச்சும் ஊடாடிற்று. எல்லாம் வெகு ரசமாய் இருந்தது. தாங்கள் 18 ஆம் தேதி வருவதாகச் சொன்னார்கள். நான் எப்படியும் 18 ஆம் தேதி காலை புறப்பட வேண்டியிருந்தது. புறப்பட்டு வந்துட்டேன்.

புறப்படும்போது நான் கே. பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் வர இயலாது என்று கடிதம் ராஜேஸ்வரிக்கு வந்திருப்பதாகத் தெரியவந்தது. இங்கும் எனக்குக் கடிதம் வந்திருக்கிறது. தாயாருக்கு சிரார்த்தம் வருவதால் திருநெல்வேலிக்கு வர இயலவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். மிக வருந்தியே எழுதியிருக்கிறார்கள். வாஸ்தவத்தில் தாங்கள் நடத்துகிற விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ரொம்ப ஆசை. தங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். என்னையும் தங்களுக்கு எழுதச் சொல்லுகிறார்கள்.

அவர்கள் குமாரத்தியும் மாமனார் திவான்பகதூர் ஏ.வி. இராமலிங்க ஐயர் அவர்களும் குற்றாலத்தில் தான் இருக்கிறார்கள். 1.10.44 வாக்கில் தானும் இங்கு வந்து சில நாள் தங்குவதாகவும் எழுதியிருக்கிறார்கள். எப்படியும் நமக்கு ஏமாற்றந்தான். அவர்கள் திருநெல்வேலிக்கு வருவதாயிருந்தால் புதுர் ஜமீன்தார் சீனிவாச ராவ் அவர்கள் வீட்டில் ஜாகை ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஆவுடையப்பப் பிள்ளை அவர்களும் நானுமாகப் பேசி முடித்திருந்தோம்.

கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ஆவுடையப்பப் பிள்ளை அவர்களின் வீட்டிலேயே தங்கலாம். நானும் உடன் தங்குகிறேன்.

தங்கள் விழா பிரதமாதமான விழாதான். இந்து காலேஜ் பின் முற்றம் ரொம்பவும் பொருத்தமான இடந்தான்.

25 ஆம் தேதி நான் திருநெல்வேலி ஜங்ஷன் வந்து சேருகிறேன். அதாவது மலை ரயிலில். தே.வியும் அன்றே வண்ணார்பேட்டை வந்துவிடும்படி செய்யவேண்டும். அப்படியானால் தானே இளைப்பாற முடியும்.

சேலத்திலிருந்து ரங்காச்சாரி வருகிறார். இங்கே தாங்கள். வருவதாக ராஜேஸ்வரி சொன்னாள். எப்போதோ?

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்

குறிப்பு - என்னுடைய நண்பர் சிந்துபூந்துறை பொன்னையாப் பிள்ளைதான் சென்ற கம்பர் விழாவில் பொறுப்பாய் நின்று இளைஞர்களை ஊக்கியவர்கள். உத்தமமான உற்ற நண்பர். அவர்கள் தங்களை வந்து பார்ப்பார்கள். வேண்டிய வேலையைப் பொறுப்பாய்ப் பார்க்கக் கூடியவர்கள். விழாவுக்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம். நல்ல தொண்டன்.

❖❖❖



கல்கி

கீழ்ப்பாக்கம்

சென்னை

2.10.44


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் அக்கறை காரணமாகவே டிக்கெட் கிடைத்தது. பிரயாணம் செய்ய முடிந்தது. எழும்பூரில் வந்து இறங்கவும் முடிந்தது. கல்கி கார் ஆட்கள் எல்லாம் ஸ்டேஷனில் தயாராய் நின்றன. செளகரியமாகவே கல்கி வீடு வந்து சேர்ந்தேன்.

இதெல்லாம் ஏது, திருநெல்வேலியில் டிக்கெட்டு கிடைக்காமல் போனால்?

கலைவிழாவில் அழைப்பையும் பத்திரிகையையும் பார்த்து கல்கி ரொம்ப அழகாய் இருக்கிறது என்று பாராட்டினார்கள். விழா நடைபெற்றது அதைவிட அழகாய் இருந்தது என்று சொன்னேன். எல்லாம் உயர்ந்த தோரணையில் இருந்தது என்றும் சொன்னேன். -

இதுவரையும் திருநெல்வேலி ஆடவர் பெண்டிருக்குத் தமிழ் விழா என்றால் ஒரே தலைவலிதான். நம்மைப் போன்றவர்களுக்கோ இம்சைக்கு ஏற்பட்ட சூழ்ச்சி என்றுதான் தோன்றும். அத்தகைய சூழ்ச்சிகளுக்குத் தாங்கள் உலைவைத்துவிட்டீர்கள்.

எல்லாம் முதலிலிருந்து கடைசி வரை அனுபவிக்கத்தக்கதாய் இருந்தது. கவிஞர் தே.வி. அவர்கள் வந்து பிரசன்னமானது சாமானிய காரியமா? எத்தனையோ ஆடவர் பெண்டிர் குழந்தைகள் அவர்கள் பாடல்களைப் பாடுகிறார்கள், அனுபவிக்கிறார்கள். பாடும்போது கவிஞரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை உண்டாவது இயல்பு. அந்த ஆசை தீரும்படி கவிஞரைக் கொண்டு வந்து காட்டினர்கள். அருமையான வாழ்த்துப் பத்திரம் அழகான முறையில் அமைத்துக் கொடுத்தீர்கள். இதில் எல்லாம் கவிஞருக்கும் குடும்பத்தாருக்கும் எவ்வளவோ திருப்தி. அதைவிட ஒருவகையில் வந்திருந்த கலைஞருக்குத் திருப்தி அதிகம்.

தங்கள் மூலமாகத் திருநெல்வேலி தமிழ்க் கவிதைக்குச் செய்ய வேண்டிய கடமையை நன்றாய் செய்துவிட்டது.

கவிஞரோடு என்னையும் சேர்த்து ரொம்ப பாராட்டிவிட்டீர்கள். எல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த நன்றி.

படங்கள் வந்தன. உருவங்கள் நன்றாய் விழுந்திருக்கின்றன. தே.வி. அவர்களது உருவம் மூன்று படத்திலும் திருப்தியாய் விழுந்திருக்கிறது. தாங்கள் ராஜேஸ்வரி மற்ற சகோதர சகோதரிகள் எல்லாரும் கூட்டுப் படத்தில் வெகு துலாம்பரமாகவும் அழகாகவும் இருக்கிறார்கள். கூட்டுப்படம் ரொம்ப வாய்ப்பு. கூட்டுப்படம். வாய்த்தல் பொதுவாக அருமை.

தீபாவளி மலருக்கான வேலை தீவிரமாய் நடக்கிறது. கல்கி அவர்களுக்கு ஒரே வேலைதான். இருபத்தைந்து மணி நேரமும் வேலை என்று சொல்லலாம். இந்த சிரமம் எல்லாம். மலரில் தெரியவா போகிறது. அது என்ன ஒரே அழகாய் இருக்கும். நமக்கு சந்தோஷமாய் இருக்கும். மற்றதைப் பற்றி நமக்கென்ன கவலை. படங்கள் அற்புதமாய் இருக்கும் என்றுதான் சொல்ல முடியும். ஒவ்வொரு படத்தோடுமே கொடுக்கிற விலை சரியாய்ப் போய்விடும்.

தங்களுக்கு ரெம்ப சிரமம். ராஜேஸ்வரிக்கு சிதம்பரத்துக்கு மற்றும் உத்யோகஸ்தர்களுக்கும் ரொம்ப சிரமம். சிரமத்தால் ஒரு பாதகமும் இல்லை. சிரமத்துக்கு மேல் கூலி கிடைத்துவிட்டதே. அபூர்வமான விழா அல்லவா நடந்தேறியிருக்கிறது.

வெங்கட்ட சுப்பிரமணியத்துக்கு அனுப்பிய கடிதம் படங்கள் வரவேற்பு பத்திரங்கள் எல்லாம் வந்தன.

கொஞ்சம் பிந்தி வந்து சேர்ந்ததால் கூட்டுப் படத்தையும் அதற்குத் தகுந்த குறிப்பையும் மாத்திரம் இந்த வாரத்துக் கல்கியில் போடுகிறார்கள். அல்லாத பட்சம் இன்னும் விரிவாகவே கல்கியில் திருநெல்வேலி கலைவிழாவைப் பரப்பியிருப்பார்கள். -

உபசாரப் பத்திரங்களில் உண்மையும் உணர்ச்சியும் எப்படித் துலங்குகின்றன என்று வாசித்துப் பாாத்தவர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள். உபசாரப் பத்திரம் உண்மைப் பத்திரமாய் இருப்பதாலேயே அனுபவிக்கக் கூடியதாயிருக்கிறது. தமிழின் கதி (ஸ்டைல்) வெகு அழகாய் இருக்கிறதென்று எல்லாரும் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது.

கவிஞரது கவி இலக்கணம் வெகு அருமையாய் வாய்த்திருக்கிறது. இந்த மாதிரி இலக்கணம் தொல்காப்பியர், பவணந்தி, தண்டி மற்றும் யாப்பிலக்கிய பிரகிருதிகள் ஒருவரும் எழுதவில்லை. அந்த இலக்கணத்தைத் தங்கள் வெள்ளிப் பூங்கொடிகளுக்குள் வைத்துத் துலக்கியிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்.

என்னையும் நீங்கள் லேசில் விடவில்லை. வெளுத்து வாங்கி விட்டீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

கம்பருக்கு நான் செய்த சேவைகளில் எல்லாம் பெரிய சேவை அவரை அனுபவித்த சேவைதான். நான் அறிந்த காரியத்தை ஊர் அறிந்ததில்லையே என்று சொன்னால் ஈடுபாட்டைக் குறிக்கிறதே ஒழிய அகம்பாவத்தைக் குறிக்காது. ஈடுபாடுகளைச் சேர்ந்த உண்மை இது. ஆகையினால் யாரும் என்னோடு சண்டைக்கு வரக்கூடாது.

ஆனால் சண்டைக்கு வர காரணங்கள் பல இருக்கின்றன.

ஒன்று விறகுப் பஞ்சத்தை கவனியாது வேண்டாத காரியத்தைச் செய்துவிட்டேன் என்று புகார் சொல்லலாம். கம்பரை எரித்துப் பெரிய தீ வளர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவர்களுக்கு எரிதுரும்பு குறைந்துவிட்டதே என்று வருந்துவதில் பொருள் இருக்கத்தானே செய்கிறது.

இரண்டு, கம்பரைப் படிக்க ஜன்மம் காணாதே என்று பயந்து அதைத் தொடாதே இருந்தவர்களை எல்லாம் கம்பரைப் படிக்கச் செய்து காலத்தை வீணாக்கச் செய்துவிட்டாய் என்று என்னை அதட்டலாம்.

மூன்று, நல்ல மலையாளத்து அப்பளம், வாயிலே போட வேண்டியது, பல்லைத் தொட வேண்டியது, அப்படியே பொருபொரு என்று தூளாய்ப் போய்விடும். 50 அப்பளத்தைத் தீர்த்துவிடலாம் என்று படும். நம்மிடம் வஞ்சம் இல்லை. போடுவார் இல்லை என்பதுதான். போட்டால் மாயமாய்ப் போய்விடும்.

அப்பேற்பட்ட அப்பளத்தில் இரண்டொரு மணலைத் தூவிவிட வேண்டும். அப்பளத்தைக் கடிக்கும்போது இதோ இருக்கிறேன் நான் என்று. கல் சொல்லிவிடும். பல்லின் பாட்டைச் சொல்ல வேண்டுமா, வேண்டாம். அப்பளக் கூடையில் வறுத்து வைத்த அப்பளம் அப்படியே இருந்துவிடும். மிச்சந்தான். கம்பன் பாடல்களும் அப்பளம் போலத்தான். பிழைபட்ட பாடம் இருந்தால் பாடல் மிச்சந்தானே. கல்லை எப்படி எடுக்கலாம் நீ என்று கோபிக்கிறார்கள்.

அனேகர் இந்த விஷயங்கள் சம்பந்தமாக வாய் எடுத்துப் பேசப் பயப்படுகிறார்கள். டிகேசி ராமாயணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று வாய் தவறிச் சொல்லிவிட்டால் எங்கே ஜனங்கள், ராமாயணத்தை எழுதினது கம்பர் அல்ல. டிகேசிதான் என்று தப்பாய் எண்ணிவிடுவார்களோ என்று பயம். கம்பரிடத்தில் எவ்வளவு விஸ்வாஸம் பாாத்தீர்களா. டிகேசியைக் குறைவாய் மதிக்கிறேன் என்பதல்ல, கம்பரை அதிகமாய் மதிக்கிறேன் என்பதுதான் விஷயம்.

தாங்களுக்கு இப்படியெல்லாம் சூத்திரங்கள் செய்யத் தெரியவில்லை. செருகு கவிகளை அகற்றியது பற்றியும் பாடல்களைத் திருத்தியது பற்றியும் மிக்க அனுதாபத்தோடு பாராட்டிப் பேசியிருக்கிறீர்கள். தாங்கள் சொன்னால் போதுமே எனக்கு. பண்டித உலகம் ஸ்காலர் உலகம் எல்லாம் சேர்ந்து கருத்த செண்டாவைப் பிடித்து வானத்தைமூமுடட்டுமே.

மோனைக் கொடிகளின்
காடு, நெடுவெளி
மூடி, அடங்கலும்
ஒடி யிருண்டபின்,
ஏனைச்சுடர்விரி
இடப கேதனம்
எழுந்து திசைதிசை
விளங்கவே

- குறவஞ்சி


இருட்பிழம்புக்குள் கிழித்துக் கொண்டு வருகிறது தங்கள் பாட்டு. சி.ஆர். அவர்களின் பாட்டு, கல்கியின் பாட்டு கவிஞர் தே.வி.யின் பாட்டு இவைகளின் ஒளி. ஒளியின் அழகை அனுபவிப்பதற்கு இருட்டு எவ்வளவு அவசியம் தெரிகிறதா?

ராஜேஸ்வரியின் நடிப்பு நல்ல தோரணையிலிருந்தது. சகாக்களைக் கூட்டுவதற்கு அவளுக்கு அபாரமாய்த் திறம் இருக்கிறது. அந்தப் பெண்களை எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்கச் செய்கிற காரியம் எளிதா?

வந்தனோபசாரம் சொல்லுவது எப்பொழுதும் கஷ்டம். அதற்கு வேண்டிய நன்றி பாவம் நமக்கு வருவதில்லை. ராஜேஸ்வரிக்கு வெகு தெளிவாய் வந்தது. எல்லாவற்றையும் விட அவள் என்னிடம் காட்டிய அன்பும் பரிவும் வெகு அழகு. அருமைப் புதல்விக்கு என் மனமார்ந்த நன்றி.

மற்றவை பின்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - 7.10.4 அன்று இங்கிருந்து குற்றாலத்துக்குப் புறப்பட உத்தேசம்.

❖❖❖



திருக்குற்றாலம்

12.12.44


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் 5.11.44 அன்று அனுப்பிய அழகான கட்டுரை கிடைத்தது. அதைக் கடிதம் என்று சொல்லக்கூடாது. கட்டுரை என்றுதான் சொல்லவேண்டும்.

பெரிய உண்மையை அல்லவா அதில் எழுதியிருக்கிறீர்கள். இங்குள்ள நண்பர்களோடு பல தடவை வாசித்து அனுபவித்தேன்.

தாங்கள் தலைவரைக் குற்றம் சொல்ல வேண்டியதில்லை. அவர் பேசிய விஷயங்களை இவர்களிடமிருந்துதானே கைமாற்றாக வாங்கியிருக்கிறார்.

சிலப்பதிகாரத்தின் பாஷை, நமக்கே கஷ்டம். இதில் தமிழ்ப் பயிற்சி இல்லாதவர் ஒருவர் அறிந்துவிட்டார் என்றால் பரிதவிக்க வேண்டிய காரியந்தான். நோய் அஸ்தியிலேயே தாக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

தலைவரும் ஸ்காலர்களும் வேறு பிறவி ஒன்று எடுத்தால் அல்லவா கம்பரது தெய்விக தத்துவம் தெரியும். மக்களால் செய்யவே முடியாத ஒரு காரியத்தை ஒருவர் செய்தால் அவரது செயலைத் தெய்வீகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆங்கிலப் படிப்பு நம்மவர்களை என்னவெல்லாமோ செய்துவிட்டது. ‘பா’வம் ஒன்றிருக்கிறது உருவம் ஒன்றிருக்கிறது என்ற காரியமே தெரியாமல் போய்விட்டது. ஆங்கிலத்தில எழுவாய் பயனிலையைக் கண்டுபிடிப்பதிலும், பொழிப்புரையைப் பார்த்தும் எழுதியும் அதை வியந்து கொண்டிருப்பதிலுமே காலம் போய்விட்டது.  இப்படிப் பழகிப்போய்விட்டால் சிலப்பதிகாரம், பெரியபுராணம், கந்தபுராணம் எல்லாம் ஒன்றாய்த்தான் தோன்றும். சங்கநூல்கள் அபாரமாய்த் தோன்றிவிடும்.

இதை எல்லாம் உத்தேசித்துத்தான் மாதவய்யா வருந்தினார். ஏன் இருந்து இருந்து கம்பன் தமிழ்நாட்டில் வந்து பிறந்தான் என்பதாக.

தலைவர் எப்படியோ பேசிவிட்டுப் போகிறார் போகட்டும். ஆனால் தாங்கள் ஆணித்தரமாய்ப் பேசினீர்கள். ரொம்ப வாய்ப்பாய் பேசியிருக்கிறீர்கள். நம்மவர்கள் எல்லாருக்கும் ரொம்ப திருப்தியாய் இருந்திருக்கும்.

ராஜாஜி இரண்டு நாளைக்குமுன் இங்கு வந்தார்கள். 20 ஆம் தேதி வாக்கில் அவர்களோடு சென்னைக்குப் போகலாம் என்று எண்ணுகிறேன். ஜனவரி 3 ஆம் தேதி வரை சென்னையில்தான் இருக்க வேண்டிய வரும்.

ராஜேஸ்வரிக்கு உடம்பு சரியாய் இல்லை. அம்மை போட்டிருந்தது என்று எழுதியிருந்தீர்கள். அவள் ரொம்ப கஷ்டப் பட்டிருப்பாள். பலஹீனம் கொஞ்சநாள் இருக்கும். அதனால் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குளிக்க வைக்கவேண்டும். முற்றிலும் குணமான பிறகுதான் கல்லூரிக்குப் போக வேண்டும். அவளுக்கு என் அன்பைச் சொல்ல வேண்டும்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - 17.12.44 அன்று மதுரையில் கல்ச்சரல் ஆண்டுவிழா நடக்கிறது. அதில் நான் வந்து பேச வேண்டும் என்று ஏ.எஸ்.பி. ஐயர் அவர்கள் கேட்டிருந்தார்கள். உடம்பு செளகரியமாய் இல்லை என்று எழுதிவிட்டேன். செகளரியமாயிந்தால் போயிருக்கலாம். ஏதோ தமிழைப் பற்றி பேசியிருக்க வாய்ப்புக் கிடைத்திருக்குமே. 

திருக்குற்றாலம்

தென்காசி

13.4.45


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

புதுவருட வாழ்த்து கிடைத்தது. வெகு அழகாய் இருக்கிறது. பொங்கலைப் பரிமாறப் பூச்சூடி அழகாய் வருகிறாள் பெண். இறைவனோடு திளைத்த மாணிக்கவாசகரது உள்ளமும் பால் பொங்கினது போலப் பொங்கிப் பொழிகிறது. அரிய முறையில் அரிய விஷயத்தை நினைவூட்டுகிறது செய்யுள். ரொம்ப சந்தோஷம்.

தங்கள் வீட்டிலும் அருமை மக்களது உவகை ஆரவாரங்களுக்கு இடையே அழகாய்ப் பால்பொங்கும். நல்ல காட்சிதான்.

அருமை ராஜேஸ்வரிக்கு உடம்பு பழைய ஆரோக்கியத்துக்கு வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

15.1.45 அன்று சாயங்காலம் வண்ணார்பேட்டை வருகிறேன். தங்களைப் பார்த்துக் கொள்கிறேன்.

எனக்கு உடம்பு நன்றாய்த் தேறியிருக்கிறது.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



திருக்குற்றாலம்

திருநெல்வேலி ஜில்லா

3.3.45


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் வெள்ளியன்றே வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நேற்றும் எதிர்பார்த்தேன். வரவில்லை. விசாரணைகளைத் தள்ளிப் போட்டுவிட்டீர்கள் என்று தெரிகிறது. இருக்கட்டும். அடுத்தவாரம் பார்த்துக் கொள்ளுகிறது.

கல்கியின் பாட்டு, பிரதிநிதி கச்சேரி எல்லாம் சேர்ந்து திருச்செந்தூர் விழாப் போட்டி விழாவாகப் போய்விட்டது. உத்யோகஸ்தர்கள் எல்லாரும் திருச்செந்தூருக்குப் போய்விட்டார்கள். கவலை இல்லை தாங்கள் இருந்தீர்கள் அதுபோதும்.

எல்லா விஷயமாகவும் கல்கிக்கும் சதாசிவத்துக்கும் ரொம்ப திருப்தி. அவர்கள் இருவரும் பாரதி நிதிக் கச்சேரிக்காக எடுத்துக் கொண்ட சிரமம் இவ்வளவு அவ்வளவென்றில்லை. வசூல் ஒரு மாதிரிதான். ஆனால் அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. செம்பை செளடய்யாக் கச்சேரி ரொம்ப வாய்ப்பாய் இருந்தது. சபையும் நிறைந்த சபையாய் இருந்து அனுபவித்து விட்டார்கள். சிரமத்திற்கும் கையிலிருந்து செலவழித்த செலவுக்கும் போதுமான பலன் வந்ததென்றே கருதினார்கள் கல்கி நண்பர்கள்.

எப்படியோ கல்கி காரியாலயமும் செட்டிநாட்டு ராஜாங்கமும் திருநெல்வேலி விஷயமாய்த் தனிப்பட்ட அக்கறை காட்டி வருகிறார்கள். நம்முடைய ஜாதகம் நல்ல ஜாதகம். வேறு என்ன சொல்ல. இந்த தடவை ராஜேஸ்வரியை மீட்டிங்கிலும் கச்சேரியிலும் பார்த்துக்கொள்ள முடிந்தது. அளவளாவ செளகரியம் இல்லாமல் போய்விட்டது. 24 ஆம் தேதி மாலை நண்பர் கோபாலபிள்ளையுடன் அரிய விஷயங்கள் பேச நேர்ந்தது. தமிழ்ப் பாடல்களை வெகு நுட்பமான முறையில் அனுபவித்தார். தாங்கள் ராஜேஸ்வரி இருவரும் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். நம்முடைய தமிழ் இலக்கிய அனுபவத்துக்கு தனியான ஒளி கொடுத்த மாதிரி இருந்தது. தமிழ்க் கவியின் நுட்பத்தை அனுபவிப்பதற்கு ஒரு மலையாளிக்கு தமிழ்நாட்டில் பத்து வருஷம் இருந்தால் போதும் என்பது அன்று நான் கண்ட உண்மை. ஆனால் தாங்கள் கேட்கலாம் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து தமிழ் இலக்கியங்களோடு கட்டியழுதும் ஏன் பிரயோசனம் இல்லாமல் போகிறது சிலருக்கு என்று. அதற்குக் காரணம் ஒரு சாபம், வேறொன்றும் இல்லை.

25 ஆம் தேதி தமிழ் ஆசிரியர் அந்தோணி (புனித சேவியர் கல்லூரி பண்டிட்) பார்க்க வந்தார். ஒரு மணி நேரம் அளவளாவ நேர்ந்தது. அதிலிருந்து தமிழிடத்தில் அபார மதிப்பு ஏற்பட்டது. அதோடு நிற்கவில்லை என்னிடத்திலுமே ஏற்பட்டுவிட்டது. எப்படி இருக்கிறது காரியம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

திருக்குற்றாலம்

தென்காசி

29.7.45


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

இப்போதுதான் பிற்பகல் மதுரையிலிருந்து இங்கு வந்து சேர்ந்தேன். நேற்று மாலை மதுரை காலேஜுக்காக எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாளது பாட்டுக் கச்சேரி நடந்தது. அபாரமாக இருந்தது சங்கீதம். ஹாலுக்குள் இரண்டாயிரம் பேர், தெருவில் நின்று கேட்டவர் ஆறாயிரம் பேர் வசூலான தொகை ரு 81,000. இதுவரை எங்கும் ஒரு கச்சேரியில் இவ்வளவு வசூலானது கிடையாது.

இதெல்லாம் காரணமாக எல்லாருக்கும் ஒரே திருப்தி. டாக்டர் ராமசுப்பிரமணியம் அவர்களுக்கு அபார திருப்தி. அவர்கள்தான் நிதி விஷயமாக வேலை செய்து வசூல் செய்தது. அவர்கள் முதலில் ரூ. 20,000 தான் எதிர்பார்த்தார்கள். வசூலானது நாலு மடங்குக்கு மேல் போய்விட்டது. சந்தோஷத்துக்குக் கேட்பானேன்.

தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது 70 ஆவது ஆண்டுவிழா ஆகஸ்டு 8, 9, 10 ஆம் தேதிகளில் நடத்துவதாக காரியதரிசி வெ. நாராயணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. ஆனால் எனக்கு நாகர்கோயில் போய்வர இயலவில்லை. தாங்கள் போவீர்கள் என்று நம்புகிறேன். போனால் விழா சரியான முறையில் நடைபெறுவதாக மேற்பார்த்துக்கொள்ள வேண்டும்.

விழாவை நடத்த முன்வருகிறவர்கள் ஒரு தினுசான ஆட்கள். அதற்கு நாம் என்ன செய்வது என்றுகூடச் சொல்லத் தோன்றும் அவர்களுக்கு. வேண்டாத பேர்களைக் கொண்டு பேசச் செய்வார்கள். ஆகையால் தாங்கள் போகிறதாயிருந்தால் அசந்தர்ப்பங்கள் நடவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் 70 வது ஆண்டு விழாவில் எத்தனையோ பேர் கலந்துகொள்ள விரும்புவார்கள். ராஜாஜி கல்கி முதலியோர் கலந்து கொள்ளுவார்கள். ஆனால் அவர்களது வசதி எப்படி என்று தெரியவில்லை. தற்சமயம் அவர்களுக்கு வசதியும் இல்லைதான்.

நாகர்கோயிலில் திருவனந்தபுரத்தில் எத்தனையோ பிரமுகர்கள் தே.வி.யின் விழாவில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புவார்கள், சந்தேகம் இல்லை. ஆனால் அவர்களுடைய பேர் காணவில்லை. எப்படியும் நாம் கலந்துகொள்ள வேண்டியதுதானே.

எனக்கு உடம்பும் சரியாய் இல்லை. நாள் வசதியும் இல்லை. ராஜேஸ்வரியின் கடிதம் அழகிய இலக்கியம். இங்கு பலரும் ரொம்ப ரொம்ப அனுபவித்தார்கள். பண்டிதர்களிடம் சொன்னால் அதை ஒப்பவா செய்வார்கள். பாராட்டுரை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் எந்த விஷயத்தில்தான் அவர்களைக் கவனித்துப் பேசினோம், ஒன்றிலும் இல்லை.

வருகிற வெள்ளிக்கிழமை முகாம் இங்கு உண்டல்லவா. 10.7.45 அன்று மறுபடியும் சென்னைக்குப் புறப்படுகிறேன்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

எனக்கு இரண்டு மாதமாக உடம்பு பலவீனமாகவே இருந்தது. வசூரிக்கு பிறகு உடம்பு தேறுவது கஷ்டந்தானே. இங்கு வந்ததும் ராஜாஜி கல்கி முதலிய நண்பர்கள் இன்சுலின் இன்ஜெக்ஷன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டார்கள். டாக்டர் கோபால கிருஷ்ணய்யரோ தினம் தினம் வீட்டுக்கு வருகிறார். நீரை உடனே சோதித்தார். 4% சர்க்கரை இருந்தது. மறுநாள் கட்டாயம், வாயையும் காலையும் கட்டியாவது, இன்ஜெக்ஷன் செய்துவிடுவதாகச் சொல்லிவிட்டுட்ப போனார். 15.8.45 அன்று இன்ஜெக்ஷன் கொடுத்தார். மறுநாள் உடம்புக்கு செளகரியம் ஏற்பட்டது. மாலையில் எழுத்தாளர் சங்கத்திலும் பேசினேன். திடமாகவும் தாட்டியாகவும் பேச்சு இருந்துவிட்டது.

பக்கத்திலிருந்த கல்கி இதைப் பார்த்துவிட்டார்கள். அப்படியே மீட்டிங் முடிந்ததும் ராஜாஜியிடம் போய்க் கோள் சொல்லி விட்டார்கள். இன்ஜெக்ஷனால டிகேசிக்கு உடம்பு குணப்பட்டுவிட்டது என்பதாக. மறுநாள் சதியாலோசனை. 17 ஆம் தேதி மாலை நான் ரயிலுக்குப் புறப்படுகிற நேரம் ராஜாஜியும் கல்கியும் இங்கேயே இருந்து கால் மண்டலம் இன்ஜெக்ஷன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார்கள். குற்றாலத்துக்குப் போய் அங்குள்ள டாக்டரிடம் இன்ஜெக்ஷன் எடுத்துக் கொள்ளுகிறேன் என்று எவ்வளவோ தாவாப் பண்ணிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கோ என்னிடம் நம்பிக்கை இல்லை.

அந்தவேளை சதாசிவம் களத்தில் காட்சி கொடுத்தார்கள். சரிசரி ரயிலுக்குப் புறப்படலாம் டாக்டர் கோபால கிருஷ்ணய்யரும் கூடவே வருகிறார். குற்றாலத்திலேயே இஜ்செக்ஷனைச் செய்து முடித்துவிட்டு இங்கே திரும்புவார் என்று ஒரு போடு போட்டார்கள் - அட்டாமிக் பாம் போட்ட மாதிரி. பிறகு என்ன செய்கிறது. இங்கேயே இருக்கிறேன். சிகிச்சை நடக்கட்டும். டிக்கெட்டுகளைக் கொடுத்துப் பணத்தை வாபஸ் வாங்கி வரச்சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

குற்றாலத்தில் உள்ளவர்கள் வேண்டும் என்றே டிமிக்கி கொடுக்கிற ஆசாமி என்று என்னை எண்ணுகிறார்கள். ஆனால் விஷயம் எப்படி இருக்கிறதென்று பார்த்துக் கொண்டீர்கள் அல்லவா.

நாளை 24 ஆம் தேதி கானாடுகாத்தானுக்கு கல்கியும் நானும் போகிறோம். சி.வி.ஆர்.எம். அழகப்பச் செட்டியார் அவர்கள் வீட்டில் 26 ஆம் தேதி கலியாணம். 25 ஆம் பிற்பகல் சித்தனவாசல் போய்வர ஏற்பாடு செய்திருக்கிறோம். தாங்கள் சொன்னீர்கள் சித்திரம் எல்லாம் அழிந்துபோய்விட்டதாக. அகத்தியர் நூல் எல்லாம் போய்விட்டது. ஆனாலும் அகத்தியர் இருந்த இடம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் அல்லவா. ஆகவே சித்திரம் இருந்த இடத்தைப் போய்ப் பார்த்து வருகிறோம்.

❖❖❖

24.8.45


இன்று பயணத் திட்டம் மாறிவிட்டது. கானாடு காத்தானுக்குப் போகவில்லை. சித்தன்னவாசலுக்கும் போகவில்லை.

டாக்டர் சோதனை செய்ததில் நோய் வசத்துக்கு வந்திருக்கிறது என்று தெரிகிறது. சர்க்கரை 4% ஆக இருந்தது 2% ஆகக் குறைந்திருக்கிறது சிகிச்சையைத் தொடர்ந்து நடத்தி முடித்துவிட வேண்டும் என்று டாக்டர், அவரைவிடப் பெரிய டாக்டர் ராஜாஜி மற்ற நண்பர்கள் எல்லாரும் தீர்மானம் போட்டு நிறைவேற்றி விட்டார்கள். இங்கேயே நாலைந்து நாள் இருந்து சர்க்கரையைப் பூரணமாய்க் குறைத்துக்கொண்டு குற்றாலம் திரும்புவதாக நானும் தீர்மானம் செய்துவிட்டேன்.

மத்தியில் ஒரு தடவையாவது குற்றாலத்துக்கு முகாம் போயிருப்பீர்கள் என்று நம்புகிறேன். சாரல் அங்கே திருப்தியாய் இருக்கிறதாகத் தெரிகிறது. மாமா இருக்கிறது குற்றாலத்திலா புதுக்கோட்டையிலா.

அருமை ராஜேஸ்வரி செளக்கியமாய் இருக்கிறாள் அல்லவா. பரீட்சைக்காக உடம்பைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. அவளுடைய நுண்ணிய அறிவுக்கு பரீட்சை ஒரு விஷயமே அல்ல. கவலைப்படவே வேண்டாம்.

அவளைப் போல பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு ஏதேனும் தெரிந்திருந்ததாகத் தோன்றவில்லை. அப்படியிருந்தும் பரீட்சையை ஒப்பேற்றி விட்டேன். அப்படியானால் ராஜேஸ்வரிக்குப் பரீட்சை ஒரு விஷயம் என்று சொல்லமுடியுமா? இதெல்லாம் படாடோபம் இல்லை உள்ளதை உள்ளபடி சொல்லுகிற காரியந்தான்.

கல்வி விஷயத்தில் நான்தான் அதிகாரி என்று ராஜாஜி சொல்லுகிறார்கள். ஆரம்பக் கல்வி சம்பந்தமாக வார்தாவில் சோதனை நடக்கிறதாம். அந்த சோதனைக்கெல்லாம் நிர்வாகியாக நான் இருக்கவேண்டும் என்ற தன் அபிப்பிராயத்தைச் சொல்லுகிறார்கள். ஆகையால் நான் சொல்லுவதில் உண்மை இருக்கத்தானே வேண்டும்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - இந்த மாதிரி பேப்பரில் சின்ன அளவில் லெட்டர் பேடு செய்தாகிறதல்லவா.

❖❖❖



திருக்குற்றாலம்

தென்காசி

19.9.45


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நேமத்தான்பட்டியிலிருந்து கிருஷ்ணன் செட்டியார் அவர்களும் மனைவியாரும் வந்திருக்கிறார்கள். உடன் தங்குகிறார்கள். ஜாகை மாத்திரம் போடிநாயக்கனூர் பங்களாவில்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் அவசியமானால் ஜாகைக்கு போடி பங்களா இருக்கிறது. அருமை ராஜேஸ்வரியையும் கோபாலபிள்ளை அவர்களையும் அவர்களது செல்வக் குமாரத்தியையும் வசதியாக இருக்கச் செய்வதற்கு என்பதைத் தெரியப் படுத்தத்தான்.

கொஞ்சம் ஓய்ந்திருந்த சாரல் மறுபடியும் ஆரம்பித்திருக்கிறது. குற்றாலத்துக்கு ஜோர் கிளம்பிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

செப்டம்பர் இண்டர்மீடியட் எக்ஸாமினேஷனைத் தீர்த்துவிட்ட நகரத்தார், மற்றவர் நாயுடு, குற்றாலத்தில் சிலநாள் தங்கலாம் என்றுதான் வந்திருக்கிறார்கள். முதலில் கொஞ்சம் பயந்தார்கள். பிறகு தைரியம் ஏற்பட்டு என்னைப் பார்க்க வந்துவிட்டார்கள். தமிழ்ப் பாடப் புத்தகம் ஆசிரியர்களது இருள் விளக்கம், பரீட்சை இவைகளுக்குள்ளிருந்து வெளிவந்தவர்கள். தமிழ் என்பது பயப்பட வேண்டிய காரியந்தானே. ஆனாலும் எப்படியோ என்னைப் பார்த்துவிடவேண்டும் என்று துணிந்து வந்துவிட்டார்கள்.

தமிழ் இன்னது, சைவம் இன்னது, தேசிக விநாயகம் பிள்ளை இன்னார் அவர்களது கவிகள் இப்படி என்பதை எல்லாம் நன்றாய் அறிந்து கொண்டார்கள். ஒரே ஆனந்தமாய் திருநாவுக்கரசு மடத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள். நாளை மத்தியானம் சாப்பிட வரச்சொல்லியிருக்கிறேன். பாண்டித்ய நோய் ஏதேனும் மிச்சம் கிச்சமிருந்தால் அதையும் தீர்த்துவிடவேண்டும் அல்லவா?

கோபாலபிள்ளை அவர்களிடம் ஞாபகப்படுத்தி சாமான்களைக் கட்டச் சொல்ல வேணும். -

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



கல்கி

17.10.45


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

அருமைப்புதல்வி ராஜேஸ்வரி 7.10.45 அன்று அனுப்பிய கடிதம் கிடைத்தது. அதற்குப் பதில் இனிமேல்தான் எழுத வேண்டும். எப்பொழுதும்போல அழகாய் உண்மை பொதிந்ததாய் இருக்கிறது கடிதம்.

மேல் நாட்டுப் பேராசிரியர்கள் சொல்லுவார்கள் பெண்டுகள் தான் கடிதம் எழுதத் தகுதி உள்ளவர்கள் என்பதாக, ஆனால் இலக்கியம் என்றாலும் கடிதமாய் விஷயத்தை எழுதுவதுதானே. நான், வாசகர், விஷயம் மூன்றும் ஒன்றுபட்ட முறையில் பேசவேண்டும். அப்போது இலக்கியம் பிறந்து விடுகிறது. இது ஏதோ வேதாந்த ரகசியம் போல ஒலிக்கிறதே என்று தோன்றும், அப்படி ஒன்றும் இல்லை. எழுதுகிறவர், வாசிப்பவர் மனசிலிருந்து கொண்டு எழுதுகிறார் என்றால் இருவரும் சேர்ந்து எழுதுகிறார்கள் என்று சொல்லுவதில் பிகு இல்லை. இனி, விஷயமே பேசுகிறது என்று சொல்லும்போது, தானே சங்கடம் வருகிறது. கடிதத்தில் அடுத்த வீட்டுக் குழந்தையைப் பற்றி எழுதுகிறதென்றால் எழுதுபவருக்கு எவ்வளவு ஆசை குழந்தையிடத்தி லிருக்கிறதோ அவவளவு ஆசையும் வாசிப்பவர் உள்ளத்திலும் ஏறிவிடுகிறது. அவ்வளவு தான். குழந்தை அப்படியே முன்னால் வந்துவிடுகிறது. அப்படி விளையாடும், இப்படி விளையாடும், அதற்குக் கொஞ்சம் காய்ச்சல் குணமாய் விடுகிறது. விளையாடாமல் இரு என்றால் இருக்க மாட்டேன் என்கிறது. இப்படி எல்லாம் குழந்தைத் தெள்ளத்தெளிந்த விதமாக நம் கண்முன் வந்து நின்று காட்சி அளிக்கிறது, குழந்தை பேசுகிறது என்ற விஷயத்தைக் குறித்துச் சொல்லலாம் அல்லவா.

அப்படியேதான் கடிதத்தில் கையாளும் எந்த விஷயமும்,

நமக்குத் தெரியும், நூல்களின் தாரதம்மியத்தைப் பற்றித் தாறுமாறாய்ப் பண்டிதர்கள் பேசுவார்கள் என்பது. கம்பருக்கு மேல் காளமேகம் என்று சொல்லுவதைக் காதாரக் கேட்டிருக்கிறோம். இந்த விஷயம் பற்றிக் கடிதத்தில் எழுத ஆரம்பித்தால், விஷயமே பேசுகிறது என்று சொல்லலாந்தானே. கடிதத்திலும் இலக்கியத் திலுந்தான் இப்படிச் சொல்லுவது பொருந்தும். ஆனால் சையன்ஸ் சம்பந்தமாக அவ்வளவாக பொருந்தாது. அதிலும் பொருந்துவிதமாக காணப்பட்டுவிட்டால் இலக்கியமாய்ப் போய்விடும் அது.

ராஜேஸ்வரியின் கடிதத்துக்குப் பதில் எழுதுவதை ஒற்றிப் போட்டுவிட்டு கடிதத்திலிருந்து இவ்வளவு நீண்டு போகிறது, வியாக்கியானம். இருக்கட்டும்.

19.10.45 அன்று போட் மெயிலில் ஏறி எட்டயபுரம் போகிறேன். 21 ஆம் தேதி ராஜாவின் பிறந்தநாள். அன்று எட்டயபுரம் கோயிலை ஹரிஜனங்களுக்குத் துறந்து வைக்கப் போகிறார்கள் ராஜா. அதற்காக ராஜாஜியும் வருகிறார்கள். 23 ஆம் தேதி பிற்பகல் கோயில்பட்டியிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி வருகிறேன். 22 ஆம் தேதி கோயில்பட்டியிலேயே தங்க உத்தேசம். சுப்பராயிலு நாயுடு அவர்களைப் பார்த்துவிட்டு வர உத்தேசம்.

ஆகவே 23 ஆம் தேதி சாயங்காலம் வண்ணார்பேட்டை வந்து சேருகிறேன். தங்களை ராஜேஸ்வரியை எல்லாம் பார்க்க ஒருநாள் வசதி வைத்துக்கொண்டு வருகிறேன்.

22 ஆம் தேதியே வருவதாக ஆவுடையப்பப் பிள்ளை அவர்களுக்கு எழுதியிருந்தேன். அப்படி அல்ல 23 ஆம் தேதி மாலைதான் வருகிறேன் என்று தகவல் கொடுத்துவிடவேணும் அவர்களுக்கு. -

தாங்கள் 19 ஆம் தேதி ஆரல்வாய்மொழியிலிருப்பதாக அழைப்பிலிருந்து தெரியவருகிறது. ரொம்ப சந்தோஷம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்

திருக்குற்றாலம்

தென்காசி

13.11.45


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நாளை நின்று 15 ஆம் தேதி சென்னைக்குப் போகிறேன். வர ஒரு வாரம் 10 நாள் செல்லலாம்.

யோக்யதையான படம் மீரா. ஆடவர் பெண்டிர் எல்லாரும் இருந்து பார்க்கக்கூடிய படம் மீராதான் என்று தாங்கள் சொன்னீர்கள்.

தங்கள் அபிப்ராயத்துக்கு ஏன் விளம்பரம் கொடுக்கக்கூடாது என்று கேட்கிறேன்.

நம்முடைய கலைக்கழகம், மகளிர் கழகம் இன்னும் எத்தனையோ கழகங்கள் இருக்கின்றன. அவைகளில் எல்லாம் தங்கள் அபிப்ராயத்தைத் தீர்மானமாகப் போட்டுப் பத்திரிகைகளுக்கு அனுப்பவேணும். சதாசிவத்துக்கும் அனுப்பவேணும். எப்படி உபயோகப்படுத்த வேண்டுமோ அப்படி உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள்.

ஆவுடையப்பப் பிள்ளை அவர்களுக்கும் எஸ். ஏ. பொன்னையாப்பிள்ளைக்கும் எழுதியிருக்கிறேன். அவர்களையும் கலந்து செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். அருமைப் புதல்வி ராஜேஸ்வரியும் மகளிர் கழகத்திலிருந்து தீர்மானம் போடவேண்டும். உடனேயே செய்ய வேண்டும்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - அபத்தப்படந்தான் தமிழர்களுக்கு வேண்டும் என்ற கொள்கை, பிரச்சாரம் எல்லாம் ஒழிய வேண்டும் அல்லவா. அதற்குத்தான் இந்த வேலை எல்லாம். 

முகாம்,

சென்னை

22.1.46


வி.ஆர்.எம். செட்டியார் அவர்களிடமிருந்து புத்தகம் வந்துவிட்டது.

ரிஜிஸ்தர் புக் போஸ்டில் வந்தது. உறையை அப்புறப்படுத்திப் பார்க்கவும், ஏதோ ஒரு அழகான புத்தகம் அல்லவா வந்திருக்கிறது. கைக்கே அலங்காரமான புத்தகம் என்று மிக்க திருப்தியோடு கையில் வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். பிறகு தெரிந்துவிட்டது. என்னைப் பற்றிய புத்தகம்தான் என்று. பயமே உண்டாய்விட்டது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பது போன்ற பயந்தான். புத்தகத்தை ஊடே ஊடே வாசித்துப் பார்த்தபோது பயம் போய்விட்டது. லஜ்ஜை ஏற்பட்டுவிட்டது. அப்படியே புத்தகம் மேஜை மேல் கிடக்கிறது. படிக்கவில்லை. ஆனந்தியைக் கூப்பிட்டு மேலட்டை ஒன்று போட்டுக் கொண்டுவரச் சொன்னேன். அப்படி மேலட்டை போட்ட புத்தகந்தான் கையில் வைத்துக்கொண்டு படித்தேன். வந்தவர் போனவர்களுக்கு ஏதோ ஒரு புத்தகத்தை, எனக்குச் சம்பந்தம் இல்லாத புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றுதானே படும்.

அணையடைச் சேலையில் வைத்துப் பிள்ளையை எடுத்த மாதிரி வெகு ஜாக்கிரதையாய் வெகு அருமையாய் என்னைக் கையில் எடுக்கிறீர்கள்.

பெரியாழ்வார் ஆய்ச்சியர்கள் அவர்களுக்கு என்ன ஆசை, ஆர்வம் எல்லாம் ஏற்பட்டதோ அவ்வளவும் தங்களுக்கும் உண்டாய்விட்டது. தங்கள் பேச்சை வைத்துப் பெரியாழ்வார் பாசுரங்களை நன்றாய் விளக்கலாம். ஆழ்வார் குழந்தையோடு எப்படி ஒட்டுகிறாரோ அப்படியே தாங்களும் என்னோடு ஒட்டிக்கொண்டீர்கள். மனசில் உண்டான எழுச்சிகளை அப்படி அப்படியே கொட்டிவிட்டீர்கள். கொஞ்சம் குறைத்துக் கொட்டியிருக்கலாமே என்று அடிக்கடி படந்தான் செய்கிறது. ஆனால் கரைபுரண்டு வரும் அன்பை யார் தடுக்க.

படிக்கும்போது அனுபவித்துக் கொண்டிருந்தது விஷயம் பற்றி அல்ல. வார்த்தைக்குப் பின்னால் துடித்துக் கொண்டிருந்த தங்கள் தூய உள்ளத்தைத்தான் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தேன். அன்பானது, தான் பிறக்கும் உள்ளத்தை ஆனந்த மயம் ஆக்குகிறது. அதோடு எந்த உள்ளத்தில் பாய்கிறதோ அந்த உள்ளத்தையும் ஆனந்த மயம் ஆக்குகிறது. ஆகவே நம்மிருவருக்கும் ஆனந்தப் பேறு கிடைத்துவிட்டது. போதும்.

தங்கள் அன்பு ஆர்வம் உல்லாசம் எல்லாவற்றையும் பேச என்ன என்ன கும்மாளி எல்லாமோ போட்டுக் கூத்தாடுகிறது தமிழ். இவ்வளவு கூத்தாட்டமும் வேறு ஒரு பொருளைச் சுற்றி நடந்தால் எவ்வளவோ நன்றாய் இருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் தமிழின் விளையாடல்களைக் காட்டவா புத்தகத்தை எழுதியிருக்கிறது.

இங்கே ஆனந்தி, ஆனந்தியின் அம்மா, எம்.எஸ், சதாசிவம், கல்கி, ராஜாஜி எல்லாருக்கும் சந்தோஷம்.

கலியாணப் பெண்ணை ஜோடித்த மாதிரி மேலே சொன்ன பாத்திரங்களை வைத்து புத்தகத்தை ஜோடித்து விட்டீர்கள். ரொம்ப சந்தோஷம்.

ஐம்பது வருஷத்துக்கு முன் என்னைப் பெற்ற அண்ணி காலம் சென்று போனாள். அவளுக்கு எவ்வளவோ சந்தோஷத்தை அளித்திருக்கும் புத்தகம். அவள் ஸ்தானத்திலிருந்து இப்போது அனுபவிக்கிறாள் அருமைப் புதல்வி ராஜேஸ்வரி.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்



திருக்குற்றாலம்

தென்காசி

13.2.46


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் புத்தகம் சம்பந்தமாக மகராஜன் கும்மாளி போட்டு எழுதியிருக்கிறார்கள். அது இத்துடன். எனக்கும் வேறு எழுதியிருக்கிறார்கள்.

தமிழுக்கே புதுமையான நூல் என்று அழகாய் எழுதியிருக் கிறார்கள். வாஸ்தவந்தான். கதாநாயகன் இத்தனை அடி உயரம் தையல்காரர் கொடுத்த கழுத்தளவு, கையளவு, நெஞ்சளவு இப்படி சொல்லேர் தராசில் நிறுத்த கணக்குப்படி இத்தனை மடங்கு ராத்தல் என்றெல்லாம் எழுதலாம். தாங்கள் எழுதவில்லை அல்லவா. மகாராஜ பிள்ளையவர்களது போக்குக்கு ஒத்த புத்தகந்தான்.

ஆசைக்கோர் அளவில்லை. அது வரவில்லை. இது வரவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது என்று சொல்லுகிறார்கள். அவர்களே அப்படித் தோன்றுவது பிசகுதான் என்றும் முடித்தும் விடுகிறார்கள்.

அப்படியெல்லாம் எழுத ஆரம்பித்தால் பக்கம் 1500 ஆக ஆகி விடும். பிறகு சரஸ்வதி பூஜை அன்றுதான் கையில் எடுப்பார்கள். தூசி தட்டிப் புத்தகங்களோடு புத்தகமாய் அடுக்குவார்கள். சகலகலாவல்லி மாலையையும் படித்துத் தீர்த்துவிடுவார்கள்.

இப்போதுள்ள அளவே அளவு என்று படுகிறது. புத்தகத்துக்கு அடிபிடியாய் அல்லவா இருக்கிறது.

சோமுவும் அவன் கதையை விடுகிறான். புத்தகம் காரணமாக மூன்று இஞ்சு அதிகமாக வளர்ந்திருப்பான் போலத் தோன்றுகிறது. யாரோ ஒருவர் வசனக்கோவை போடப் போகிறாராம். அதில் விருந்து என்ற அத்தியாயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வி.ஆர்.எம். செட்டியாருக்கு எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறார். அந்த மாதிரி. அதிகாரங்கள் பிரைவேட் சர்குலேஷன் என்ற ஹோதாவில் வைத்துக்கொள்ள வேண்டிய காரியம்.

எப்படியும் இரண்டு நாளில் பார்க்கிறோமே. திருவனந்தபுரத்தி லிருந்துதானே வருகிறீர்கள்.

ராஜேஸ்வரிக்கும் மற்றவர்களுக்கும் என் அன்பு.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



முகாம்

கல்கி

27.2.46


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

21.2.46 அன்று குற்றாலத்தை விட்டுப் புறப்பட்டேன். திருச்சியில் சோமுவும் அவனது சகாக்களுமாக வந்து சகல செளகரியங்களையும் செய்து கொடுத்து வழியனுப்பினார்கள். ஸ்டேஷனில் 25 நிமிடந்தான் வண்டி நின்றது. வந்தவர்கள் எல்லாரும் சோமு, சுகி, கணபதியா பிள்ளை, நடராஜ மூப்பனார், அருணாசல முதலியாரும் மனைவியாரும் எல்லாருமாகத் தங்கள் புத்தகத்தை ரொம்ப ரொம்பப் புகழ்ந்துவிட்டார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாகம் ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்று தெரியவந்தது. மூப்பனார் விருந்தோம்பும் பாகத்தை ரொம்ப அனுபவித்துவிட்டார். அண்ணியைப் பார்த்து புத்தகத்தின் மூலமாகத் தங்களைப் பற்றியும் தோசையைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். தங்களைப் பார்க்கத்தான் முக்கியமாக வந்தேன். பார்த்துக்கொண்டேன். நமஸ்காரம். இனி குற்றாலத்துக்கு வருகிறேன் என்று ஒரு அத்தியாயம் படித்து முடித்தார். புத்தகத்துக்கு விமரிசனங்கள் இப்படி அல்லவா வரவேண்டும்.

புத்தகத்தைப் பார்க்க எனக்கு லஜ்ஜையாய் இருக்கிறது. வேறு எப்படி இருக்கும். இன்னும் அதிகமாக லஜ்ஜையாய் இருக்கிறது. புத்தகத்தைப் பற்றிய கல்கியின் விமரிசனம். விமரிசனத்தைப் பார்க்க எனக்குத்தான் லஜ்ஜையாய் இருக்கிறது, ஆனால் ரொம்ப ரொம்ப திருப்தியாய் இருக்கும் பாஸ்கரனுக்கு என்று சொன்னேன். இந்த விஷயம்தானே முக்கியம்.

தாங்கள் 25.2.46 அன்று எழுதிய கடிதம் கிடைத்தது. தாங்கள் செங்கோட்டைக்கு வராதது நல்லதுதான். திருவனந்தபுரத்தில் தமிழ்ப் பணியாற்ற முடிந்ததல்லவா. ரொம்ப சந்தோஷம்.

தனியாக இருந்த திருப்புகழ் மணியின் பஜனையையும் - கேட்டுவிட்டீர்கள். மற்ற கோலாகலங்கள் இருக்கவே செய்கின்றன.

தாங்கள் மார்ச்சு மாதம் மூன்றாவது வாரத்தில் இங்கு ஜோலி வைத்திருக்கிறீர்கள். சகல செளகரியங்களும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். கஷ்டமே இல்லை.

கல்கி அவர்களுக்கு உடம்பு சுமாராய் இருக்கிறது. தாம்பரத்தில் போய் ஒருவாரம் பத்து நாள் தங்கி வரலாமா என்ற யோசனை நான் ஊருக்குத் திரும்புவதை பற்றி ஜோஸியரிடம் கேட்டுத் தெரிய வேண்டும்.

வீட்டில் ராஜேஸ்வரி, அம்மாள் மற்றவர்கள் எல்லாரும் செளக்கியந்தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



திருச்சி ஜங்ஷன்

17.4.46


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

15.4.46 அன்று கல்கியும் நானும் குற்றாலத்திலிருந்து புறப்பட்டு எட்டயபுரம் வந்தோம். தோசையோடுந்தான் வந்தோம். அமிர்தசாமி அவர்கள் எங்களுக்கு ஒரு வரவேற்பும் ஏற்படுத்தவில்லை. ஆனால் தோசைக்காக வேண்டிய மட்டும் ஏற்படுத்திவிட்டார்கள். தோசை, காரை விட்டு இறங்கியதும் அவர்களும் சில நண்பர்களும் இலையைப் போட்டுக்கொண்டு வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள். சாப்பிட்டார்கள். ஏதோ பாட்டுக் கச்சேரியைத் தலையசைத்தும், பலே போட்டும் அனுபவித்துக் கொண்டிருந்ததாகத்தான் தோன்றும் துரத்திலிருந்து பார்த்தவர்களுக்கு.

தோசை வருகிற விஷயத்தை அரண்மனையிலும் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தார்கள். மகாராஜா ராணி இளவரசுகள் எல்லாரும் ராச்சாப்பாட்டுக்கு தோசையையே உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.

இவ்வளவு மிருதுவாகவும் ருசியாகவும் இருப்பதற்கு ஏதேனும் தனியான முறை உண்டோ என்று மகாராஜா கேட்டார்கள். இல்லை என்றேன். அரிசியும் உளுந்தும் நல்ல தினுசாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். மற்ற குறிப்புகளைத் தங்கள் புத்தகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டுமே என்று விட்டுவிட்டேன்.

தோசை விரிந்துகொண்டே போகிறது தங்களால், எங்கே போய் நிற்கப் போகிறதோ தெரியவில்லை.

பாரதி மண்டபம் முக்கால்வாசி ஆகிவிட்டது. சீக்கிரம் பூர்த்தியாய்விடும். ஜூன் மாதம் 30 ஆம் தேதி கச்சேரி ஆரம்பித்தால் நல்ல முகூர்த்தமாகவே இருக்கும். எட்டயபுரத்தில் நாலுநாள் அல்லவா தங்க எண்ணினோம். ஆனால் கல்கியை நேற்றே புறப்பட்டு சென்னைக்கு வரும்படியாக சதாசிவம் தந்தி அடித்தார்கள். அதனால் நேற்றே இருவரும் எட்டயபுரத்தி லிருந்து புறப்பட்டுவிட்டோம். கல்கி நேரே சென்னைக்குப் போய்விட்டார்கள். நான் இங்கே திருச்சியில் இறங்கிக் கொண்டேன்.

இன்றும் நாளையும் இங்கே தங்கிவிட்டு நாளை சாயங்காலம் நேமத்தான்பட்டிக்குப் புறப்பட உத்தேசிக்கிறேன். நாளை நின்றுதானே கலியாணம்.

நேற்று இரவு 11 மணிக்கு இங்கே ரிடையரிங் ரூமுக்குள் நுழைந்தேன். ஒரு அழகான முகம் கொண்ட இளைஞர் சர்ட்டுடன் வராந்தாவிலிருந்து உள்ளே வந்து என்னை வரவேற்றார். பார்த்த சாயல் இருந்தது. ஆனால் அடையாளம் தெரியவில்லை. ஜம்பத்தைத் துரக் கட்டி வைத்துவிட்டு தெரியவில்லையே என்று சங்கோஜத்துடன் சொன்னேன்.

பதில் குற்றாலத்திற்கு வந்திருக்கிறேன் அல்லவா என்று வந்தது. பூர்வ வாசனை தென்பட்ட மாதிரி இனந்தெரிந்துவிட்டது. கல்லாக்கோட்டை ஜமீன்தார் அவர்கள்தான். வேறு யாரும் இல்லை. -

பிறகு தங்களைப் பற்றிய பேச்சு எல்லாம் வந்துவிட்டது. தங்களைப் புதுக்கோட்டையில் எதிர்பார்த்தாகவும் சொன்னார்கள். இன்று காலையும் பேசிக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் வைக்க வேண்டும் என்பதாகவும் அதற்குத் தங்களைக் கலந்துகொண்டு வேண்டிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதாகவும் சொன்னார்கள். அவர்களும் நாளை வரை இங்கே இருப்பார்கள்.

அனேகமாய் நானும் சென்னைக்குப் போய்விட்டுத்தான் குற்றாலம் திரும்ப வேண்டிவரும். எதற்கும் கல்கியின் தந்தியை நேமத்தான்பட்டியில் எதிர்பார்க்கிறேன். வீட்டில் அம்மாளும் மற்றவர்களும் செளகரியந்தானே. ராஜேஸ்வரிக்கும் பரீட்சைகள் எல்லாம் முடிந்திருப்பதால் உடம்பு தேறியிருக்கும். அவளுடைய பரீட்சையை எண்ணினால் எனக்கே பயமாய் இருக்கிறது. ஆனால் அவள் பயப்பட வேண்டியதே இல்லை. பரீட்சை அவளுக்கு ஒரு பொருட்டாய் இருக்க வேண்டியதே இல்லை. எனக்கு பரீட்சை என்றால் ஒரே பயந்தான். எல்லாப் பாடங்களும் ஒரே அமாவாசையைத்தான் இருக்கும். மற்றவை பின்பு.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



கல்கி

24.4.46


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கம்பர் கோயில் நிதி சம்பந்தமாக கல்கி சதாசிவம் நான் மூவர்களும் யோசனைசெய்தோம். ஆகஸ்டு மாதம் கச்சேரி வைத்தால் பலவிதத்திலும் செளகரியமாய் இருக்கும் என்று தெரிகிறது. முதலில் நமக்கு வசூல் செய்யக் கால வசதி இருக்கிறது. அரசியல் களேபரங்கள் எல்லாம் ஓய்ந்து ஆட்சியும் அமைந்துவிடும். எல்லாரும் ஒத்துழைக்க மன அமைதியும் ஏற்படும். ஆகஸ்டு மாதம் கடைசியில் செளகரியமான இரண்டு நாளைக் குறித்துக் கொள்ளுங்கள்.

இடையில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி கல்லிடைக்குறிச்சிப் பள்ளிக் கூடத்துக்காக ஒரு கச்சேரி ஏற்படாகி இருக்கிறது. முன்னமேயே ஏற்படான விஷயம். கல்லிடைக் குறிச்சியில்தான் கச்சேரி. நன்கொடையாளரை கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் இரண்டு ஊர்களைத் தவிர வேறு இடம் போய்த் தேடப் போவதில்லையாம். ஆகையால் அது நம்முடைய காரியத்தைப் பாதிக்கப் போவதில்லை.

வசூல் செய்யவேண்டிய காரியத்தை இப்போதே ஆரம்பித்து விடலாம். கல்கியும் சதாசிவமும் இந்த விஷயத்தைத் தங்களுக்கு எழுதச் சொல்லுகிறார்கள்.

ராஜாஜி டில்லியிலிருந்து 30.4.46 அன்று வருகிறார்கள். வந்து இரண்டு நாளையில் அவர்களும் கல்கியும் குடும்பத்துடன் குற்றாலம் வருவதாக ஏற்பாடு. ஆகவே எனக்குச் சென்னை வாசம் நீடிக்கிறது.

குற்றாலம் வந்த பிறகல்லவா ராஜேஸ்வரியை அழைக்க வேண்டும். வீட்டில் எல்லாரும் செளக்கியந்தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்



கல்கி

30.4.46


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

27 ஆம் தேதி கடிதம் கிடைத்தது. கம்பர் கோயில் விஷயமான நடவடிக்கையை ஆகஸ்டுக்கு ஒற்றிப்போட்டது செளகரியந்தான் என்று தங்களுக்கும் படுகிறது. ரொம்ப சந்தோஷம்.

கல்கி, எம்.எஸ், சதாசிவம் மூவரும் பம்பாயிலிருந்து நாளை ஆகாய விமானத்தில் இங்கு வருகிறார்கள். எம்.எஸ்.ஸின் கச்சேரி பம்பாயில் அபாரமாய் இருந்தது. ரேடியோவில் நானும் முக்கால் மணி நேரம் கேட்டேன். தெய்வகானமாய் இருந்தது. சாரீரம் அநாயாசமாக பாதாளத்துக்கும் வானத்துக்கும் இடையே சஞ்சரித்தது. மனசைப் பறிகொடுத்துத்தான் கேட்க வேண்டியிருந்தது. வடதேசத்து சங்கீத வித்வான்கள் பலரும் கச்சேரிக்குப் போயிருந்தார்கள். அவர்கள் ரொம்ப ரொம்ப பாராட்டினார்களாம். வடநாட்டில் நம்முடைய தமிழ் சங்கீதமே உயர்ந்ததென்று ஆகிவிட்டது. எல்லாம் எம்.எஸ்.எஸ்ஸின் பண்பட்ட தமிழ் சங்கீதத்தினால்தான். தமிழ்நாடு பண்பட்ட நாடு, உயர்ந்த கலைக்கு உரிய நாடு என்று அங்கீகரித்துப் பேசுகிறார்கள். வடநாட்டில் இத்தகைய சங்கீதம் எங்குமே கிடையாது என்கிறார்கள். ஆனால் சென்னையில் உள்ள சிலர்தான் உண்டு என்று சொல்லுகிறார்கள். யானை அனையர் நம்மவர். தன் தலையிலேயே மண்ணை எடுத்துப் போட்டுக் கொள்ளுகிற ஜந்து யானைதானே.

கீழ சூரிய மூலை வெங்கட்டராமய்யர் அவர்களது குமாரன் 13 வயது பையன், சீதாராமன். என்னைப் போன்ற பொடிப்பயல்களையும் கம்பர் வசீகரித்துவிடுகிறார். கம்பர் என்றால் எங்களுக்கெல்லாம் ஒரே குஷி, பாஸ்கரன் புத்தகத்தை ரொம்பவும் அனுபவித்தேன் என்ற தோரணையில் எனக்கு எழுதுகிறான். கம்பர் தரும் காட்சியை அவன் அனுபவிக்கிறது அபாரம் என்று தந்தையார் எழுதுகிறார். இலக்கிய உலகத்தில் நடக்கிற புரட்சியைப் பார்த்தீர்களா?

கம்பராமாயணத்தைப் புலவர்கள் புலவர் சிகாமணிகள் கம்பராமாயணப் பிரசங்கிகள் அனுபவிக்கவில்லை என்பது நாம் கண்கூடாகக் கண்ட காட்சி. அடுத்த பாட்டு அடுத்த பாட்டு என்றார் கவிராயர். மற்றவர்கள் சங்கநூல் சங்கநூல் பெரியபுராணம் கந்தபுராணம் சிலப்பதிகாரம் பிரபுலிங்க லீலை என்றெல்லாம் பேசிவிடுகிறார்கள்.

ஆனால் 13 வயசு பையன் பொடிப்பயல்களையும் கம்பர் வசீகரித்துவிடுகிறார் என்று கும்மாளி போட்டுச் சொல்லுகிறான். பெண்கள் அனுபவிப்பதைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். ராஜேஸ்வரி சாட்சி.

இரண்டு மூன்று நாளில் எப்படியும் குற்றாலம் வந்துவிடுவேன். பயப்பட வேண்டாம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



திருக்குற்றாலம்

தென்காசி

15.5.46


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நேற்று தென்காசிக்குப் போனபோது திருவள்ளுவர் கழகத்துக்குப் போனேன். அங்கத்தினர் ஏழெட்டுப் பேர் வந்து சேர்ந்தார்கள். ஒரு மணி நேரம் வரை அளவளாவிக் கொண்டிருந்தேன். அதில் அவர்களுக்கு விஷயத்தைச் சரியானபடி மதிக்கும் சக்தி வந்திருக்கிறது என்று தெரியவந்தது.

செங்கோட்டையில் பாஸ்கரன் அவர்கள் பேசியது வெகு நன்றாய் இருந்தது. மனசைக் கொள்ளை கொண்டுபோய் விட்டது என்று சொன்னார்கள். இதோடு நிறுத்தியிருந்தால் ஏதோ என்னைத் திருப்தி செய்வதற்காகச் சொன்ன வார்த்தைதான் என்று எண்ணி யிருப்பேன். அப்படி அல்ல என்பது பிற்பாடு சொன்ன வார்த்தையால் வெளியாயிற்று.

நூறு ரூபாய் செலவழித்து அந்த வித்வானை வரவழைத்திருக்க வேண்டாமே என்றும் சொன்னார்கள். ஆகவே உண்மை பலருக்கும் விளங்கி வருகிறது என்பது தெரியவருகிறது.

தாங்கள் பேசிய பேச்சு உண்மையும் உணர்ச்சியும் பொதிந்ததாய் இருந்தது. சபையோர்களின் இதயத்தைத் தொடாமல் என்ன செய்யும்.

நாளை அருமைப் புதல்வி ராஜேஸ்வரி, அம்மாள் எல்லோரையும் அங்கு அழைத்து வரும்படியாக கேட்டுக் கொள்கிறேன். 19 ஆம் தேதி இலஞ்சி இளைஞர் சங்கத்தில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

மகாராஜன் அவர்களுக்கும் தந்தி போயிற்று. உடம்பு அசெளகரியத்தால் வர இயலவில்லை என்று பதில் தந்தி கொடுத்திருக்கிறார்கள் ஏமாற்றந்தான்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



திருக்குற்றாலம்

தென்காசி

6.10.46


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

வி.எஸ். பழனியப்ப முதலியார் கடிதம் இத்துடன். வி.பி.எஸ் அவர்களுக்கு உடம்பு செளகரியப்பட்டு வருகிறது. ஆகாரம் எல்லாம் திரவமாய் இருந்ததால் ஜீரணசக்தி உறங்கிவிட்டது என்று தெரிகிறது. ஆகையால் ஒரு உருண்டை சாதத்தை புளியாத மோரில் பிசைந்து உட்கொண்டால் வயிற்றிலுள்ள ஜீவசக்தியைக் கிளரும், மெள்ள மெள்ள ஜீரண சக்தியே உண்டாகிவிடும். பிறகு போஷணையை வாங்கிக்கொள்ளும். எல்லாம் பிறகு சரியாய்ப் போய்விடும்.

மாமா இங்கேதான் இருக்கிறார்கள். பாரிவேட்டை பற்றி வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றோடு வேட்டை நின்றுவிட்டது. இனிமேல் ஒரு வருஷத்துக்கு அமைதிதான்.

கம்பர் விழாச் செயலாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

தாங்கள் நாலு மணி (காலை) ஆசாமி ஆதலால் உத்யோக ஜோலி குடும்ப ஜோலி, ஒப்புரவுக்கான ஜோலி, கம்பர் ஜோலி எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. ஜோலி இல்லையே என்றுகூடத் திண்டாடுவீர்கள் போலத் தெரிகிறது.

விழா அபாரமாய் இருக்கும். திருநெல்வேலியை ஒரு புரட்டுப் புரட்டிவிடும். சந்தேகம் இல்லை.

பி. எக்ஸ். ரங்கசாமி நாடார் நேற்று மாலை இங்கு வந்தார். அரை மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருக்க முடிந்தது. தமிழில் நல்ல உணர்ச்சியும் தேட்டமும் இருக்கிறது. அதற்குக் காரணம் தமிழ்ப் பண்டிதராய் இல்லாததுதான் என்று அவரிடம் சொன்னேன்.

கல்கியில் வந்திருக்கிற அவருடைய பாடல் நல்ல போக்கில் அமைந்திருக்கிறது. பாடலுக்கு உரிய சந்தத்தோடு பாடினால் தானே, ஹாசியபாவம் துலங்கும். அல்லாத பட்சம் மிஞ்சுவது கோணலான வசனந்தான். வெறும் வசனத்தையும் ஏதோ செய்யுள் போல வாசித்துக் குட்டிச்சுவர் பண்ணலாம். குட்டிச்சுவர் பண்ணியும் காட்டினேன்.

கவிகளை, கம்பர் கவிகளையே ஆசிரியர்கள் குட்டிச்சுவர் பண்ணுகிறார்கள். பிறகு கம்பராமாயணம் கட்டை மண்ணுதானே என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு அதுவும், அதற்கு மேலும் வேணும். கம்பர் மாளிகைக்கு டிக்கெட்டுக் கிடையாது. அவர்களுக்கு ஒருநாளும் கிடையாது. அடைபட்ட மாளிகைதான்.

ஆனால் என்ன குறைஞ்சுபோச்சு. நன்றாய் ஊடாடித் திரியத்தான் சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, கந்தபுராணம், வில்லிபாரதம் எல்லாம் இருக்கே.

வாயில்லாப் பூச்சி என்று
வாத்தியாரை மூலையிலே
வைத்து விட்டார் .
எங்கள் காங்கிரஸ் மந்திரி - சொந்தச்
சம்பளத்தை
உயர்த்திக் கொண்டார் தந்திரி

எக்ஸ் ரங்கசாமிக்கு தமிழின் விஷயம் தெரிகிறதல்லவா பெரிய விஷயம். அருமை பாப்பா, அம்மா எல்லாரும் இங்கு வந்து தங்கியதில் குறைச்சல் இல்லை. அவர்களோடு அளவளாவத்தான் சாவகாசம் இல்லாமல் போய்விட்டது என்பது ஆராய்வதற்கு உரிய காரியம்.

என்னுடைய வண்ணார்பேட்டை மேல்வீட்டுக்கு (டிவிஎஸ் ஸ்டோர்ஸ்) மேடையைக் கொஞ்சம் துப்புரவு செய்து வைத்திருந்தால் சிலர் அங்கேயும் தங்கலாம். ஆவுடையப்ப பிள்ளை அவர்களிடம் சொன்னால் ஏஜெண்டிடம் சொல்லி ஏற்பாடு செய்வார்கள்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

திருச்சி

10.10.46


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

திருச்சி ஜங்ஷனுக்கு செளகரியமாய் வந்து சேர்ந்தோம். ரிடையரிங் ரூமில் படுத்துக்கொண்டோம். காலையில் எல்.எம்.எஸ். மணி அவர்கள் வீட்டுக்கு வந்தேன். எனக்கு முன்னாலேயே எம்.எஸ். சதாசிவம், கல்கி எல்லோரும் டவுண் ஸ்டேஷனில் இறங்கி வீடு வந்து சேர்ந்திருந்தார்கள். சந்திப்பு ஒரே உணர்ச்சிமயமாய் இருந்தது. எம்.எஸ். பட்ட கஷ்டம் எனக்கு ஞாபகம் வந்தது. அவர்களுக்கு எல்லாம் மறந்துபோன மாதிரி இருந்தது. அன்பு எதையும் கரைக்கக்கூடிய சக்தி வாய்ந்ததல்லவா.

பட்டாபி வீட்டுக்குப் போயிருந்தேன். தங்கள் கடிதங்களை வியந்தவண்ணமாய் இருக்கிறார்கள். டிபுடி கலெக்டருக்கு இந்தக் கலை ஆர்வம், செளகர்யகுணம் எல்லாம் எங்கே இருந்து வந்தது என்கிறார்கள். நான் சொன்னேன். தந்தையை முதுகுக்கு மண் காட்ட அருமைக் குமாரத்தி இருப்பதாக.

கச்சேரியானதும் சென்னை போகிறோம். நாளை அங்கிருந்து பம்பாய். நானுந்தான் போக உத்தேசம். மற்றவை பின்பு.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

முகாம்

கல்கி

28.11.46


அருமை நண்பர் பாஸ்கரன் அவ்ர்களுக்கு,

26.11.46 அன்று அனுப்பிய கடிதம் கிடைத்தது. தங்கள் விஷயம் சம்பந்தமாக சத்தியமூர்த்தி அவர்களிடம் நேற்றும் கலந்து பேசினேன். நாராயணசாமி பிள்ளை அவர்களிடமிருந்து பேப்பர் வந்துவிட்டது. தாங்கள்தான் ரிவினியூ டிபார்ட்மெண்டில் வேலை பார்க்க விருப்பமா, மாஜிஸ்டீரியல் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்க விருப்பமா என்று குறிப்பிட்டு எழுத வேண்டும்.

ரிவினியூ டிபார்மெண்ட் என்றால் டெக்ஸ்டைல் கமிஷன் இலாகாவில் உத்தியோகம். மதுரை டிவிஷனுக்கு ஆபிசர் என்று பெயர். ஆனால் அது திருநெல்வேலி ஜில்லாவையும் உள்ளிட்டது. ஹெட் குவார்ட்டர்ஸ் திருநெல்வேலியாக வைத்துக்கொண்டுத் தாங்கள் பாளையங்கோட்டையிலேயே இருந்து கொண்டு வேலை பார்க்க வேண்டியது. இதுதான் நல்ல வேலையாம்.

இந்த வேலைக்கே ஆர்டர் போட்டு அனுப்பலாம் என்று நானே சொல்லிவிட்டேன். எதற்கும் தாங்கள் இந்தக் கடிதம் பார்த்தவுடன் கல்கிக்கு ஒரு தந்தி கொடுத்துவிடுங்கள். கல்கி எந்த விஷயத்தை ஆபிசுக்குத் தெரியப்படுத்திவிடுவார்கள். தந்தியை உடனே அனுப்ப வேண்டும்.

நாளை நின்று ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கிருந்து செட்டி நாட்டுக்குப் புறப்பட்டுப் போகிறேன். அங்கு இரண்டு நாள் இருந்து விட்டு வண்ணார்பேட்டை வருகிறேன். தங்களையும் ராஜேஸ்வரியையும் பார்த்துக் கொள்ளுகிறேன்.

கவிமணியின் பிரசங்கத்தைப் பற்றி நன்றாய்க் கணக்காய் எழுதியிருக்கிறீர்கள். தமிழை நான் பாராட்டுகிறேன் என்றால் அதன் உபயோகத்தை நாடியோ ஏதோ தேசபக்தி பாஷை பக்தி என்னும் காரணங்கள் பற்றி அல்ல. மற்றவர்களுக்கு அப்படி எண்ண முடியவில்லை. தமிழுக்காக மட்டுமே.

மாம்பழம் ருசியாய் இருக்கிறது. சரி சாப்பிடுவோம் அனுபவிப்போம் என்பது என் கொள்கை. வேறு சிலரோ மாம்பழம் நம் மூதாதையர்கள் விளைவித்தது. மூதாதைகளும் மூதாட்டிகளும் தின்றது. நம்முடைய புனித பூமியில் விளைந்த தெய்வக்கனி. இத்தகைய மாம்பழத்தைத் தின்னாதவன் தேசத் துரோகி. காலத்தின் கொடுமை எப்படி இருக்கிறது பாருங்கள். அயல்நாட்டுப் பழங்களான ஆரஞ்சையும் ஆப்பிளையும் வாய் கூசாமல் பாராட்டுகிறார்கள். பாராட்டோடு நிற்பதில்லை. அவைகளைத் தின்னவே செய்கிறார்கள். என்ன அநீதி. இதற்கு விமோசனந்தான் உண்டா என்றெல்லாம் முழங்குவது ஒரு கொள்கை,

மேலே சொன்னபடி பேசும்போது ஒன்று தெளிவாகிறது. பேசுகிறவர்களுக்குத் தமிழில் நம்பிக்கை இல்லை. தமிழ்ப் பக்தியில் தான் நம்பிக்கை உண்டென்பது. நிற்க.

பம்பாய் நிகழ்ச்சிகளைக் கல்கியில் போடும்போது எலியை பூதக் கண்ணாடியில் வைத்து யானையாய் காட்டின கணக்குதான். பம்பாயிலுள்ள ஒரு இளைஞர் தமிழில் அவருக்கு ஒரே வெறிதான். ஆகவே எலி யானையாய்த் தோன்றுவதில் வியப்பில்லை.

மனுஷனை எலியாய் எண்ணுகிறவர்கள் ஒரு பக்கம், யானையாய் எண்ணுகிறவர்கள் ஒரு பக்கம். சராசரியாய்ப் பார்க்கும் போது மனுஷன் மனுஷனாய் தோற்றம் அளித்துவிடக்கூடும் அல்லவா.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்



திருக்குற்றாலம்

தென்காசி

15.2.47


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கண்ணனூரிலிருந்து அனுப்பிய கடிதம் நேற்றே வந்துவிட்டது. பலராமுக்கு எழுதிய கடிதத்தையும் பார்த்துக்கொண்டேன். தங்கள் மனம் தமிழ்நாட்டை நோக்கியே இருக்கிறது. எத்தனைவிதத்தில் நாம் வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது இங்கே தமிழ்நாட்டு குற்றாலம், அருவி, கோயில், தமிழ்ப்பாட்டு, தமிழ்த்தெய்வம், ஐயப்பன், தமிழின் கும்மாளிப் பேச்சுக்கள், தென்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த தமிழ்ப் பண்பாடு இவைகளை எல்லாம் தாங்கள் அனுபவிக்கிறார்கள். இவைகளுக்குப் பாத்தியாக மலையாளத்தில் ஏதேனும் உண்டோ, கிடையாது.

இப்போது தாங்களுக்கு ஆங்கிலப் பாடல் ஒன்றின் பொருள் தெரியவரலாம்.

Home home sweet home

There's no place like home.

இரண்டாவது பாரத்தில் இதைப் படித்தேன். சப்தத்தைத் தவிர வேறு ஒன்றும் நுழையவில்லை எனக்கு.

மன்னார்கோயில் இளைஞருக்கு இரண்டு வரியும் சுகமாக வந்திருக்கிறது. தமிழின் பண்பு அவருக்குத் தென்பட்டிருக்கிறது. தமிழை அனுபவித்து வெறிகொள்ளக் கற்றுக்கொண்டார். வெகு திருப்தி.

தமிழை, வித்வான் ஆவதற்காகப் படித்தவர்கள் பாடு பெரும் பாடாகத்தான் இருக்கிறது. தென்காசி ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் தென்காசியில் நடந்த தமிழ் விழாவில் அதிகார தோரணையோடு பேசினார். கம்பர், திருவாசகம் எல்லாம் ஒன்றும் இல்லை. பாரதிதாசன் ஒருவர்தான் கவி, மகாகவி என்று ரொம்ப ரொம்ப ஆர்ப்பாட்டத்தோடு பேசினார். தாகத்துக்கு சோடாவைத்தான் குடித்துக்கொண்டார் வேறொன்றும் இல்லை.

ஊர்மேனி அழகியானில் அவ்வூர்க்கவிஞர் சேதுரகுநாதன் பிரசங்கமே யெதிருக்கிறார். அது விஷயமாகத் தென்காசி சிதம்பரம் பிள்ளை என்று ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். தங்களுக்குமே எழுதியிருக்கிறாராம். கல்கி சொல்லுகிறமாதிரி தமிழ்க்கல்வி சம்பந்தமாக ஒரு மூன்று வருஷம் தரிசு போட்டால் நல்லது. தமிழ்க் கல்வி வெட்கக் கேடான காரியமாக இருக்கிறது. இது மாதிரிப் புகாரே திருவையாற்றிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. எல்லாப் பல்கலைகழகங்களுமே அப்படித்தான்.

தமிழ் என்று சொல்லும்போது நமக்கு எக்களிப்பு உண்டாகிறது. தமிழ்ப் பண்டிதர்கள் என்னும்போது அவமானமாய் இருக்கிறது.

மார்ச்சு மாதம் 15 வாக்கில் டில்லிக்குப் போகலாமா என்று கல்கி அவர்கள் கேட்கிறார்கள். டில்லியிலிருந்து கடிதத்துக்கு மேல் கடிதம் வந்து கொண்டிருக்கிறது. எப்படிடா போகப் போகிறோம் டில்லிக்கு என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கல்கியும் தமிழ்ப் பண்ணை அண்ணாமலையும் உடன் வருகிறார்கள். ஆகவே பயம் நீங்கிவிட்டது. டில்லியிலிருந்து சாந்திநிகேதனுக்குப் போக உத்தேசம். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களுடைய உபயமாக ரூ 2000க்கு தமிழ்ப் புத்தகங்கள் தயார் ஆகின்றன. அவைகளை நான் போய்க் கொடுக்க வேண்டுமாம். அந்தப் புத்தகங்களுக்குள் உள்ள செல்வம் இன்னதொன்றும் அங்குள்ள தமிழர்களுக்குச் சொல்ல வேண்டுமாம்.

தமிழின் பெருமையை மற்றவர்கள் அறிய முடியாது. ஆனால் தமிழர்கள் அறிந்து கொள்வதில் தோஷம் இல்லையே. தங்களுக்கு இதெல்லாம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும் என்றே எழுதுகிறேன்.

கல்கி இங்கேதான் இருக்கிறார்கள். அவர்களது மனைவியாரும் குழந்தைகளும் இரண்டொரு நாளில் இங்கே வந்துவிடுவார்கள். கொஞ்சநாள் குற்றால வாசம் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம். ஆகவே குற்றாலத்திலும் ஜமா ஏற்படுகிறது.

பண்டிட் சவாரிராயபிள்ளை அவர்கள் எனக்கு 7 ஏ கிளாசில் ஆசிரியர். என்னிடம் எப்பொழுதும் மிக்க அன்பு காட்டி வந்தவர்கள்.

அவர்களது பேரன் சவரிமுத்துப்பிள்ளை அவர்களும் தமிழில் நல்ல உணர்ச்சி உடையவர்களாய் இருக்கிறார்கள். திருத்தங்களை அறிகிறதென்றாலே தமிழில் உணர்ச்சி இருக்கவேண்டும் என்பது ஏற்படுகிறது. மிக்க சந்தோஷம். தங்களுக்கு அந்த தீவாந்திரத் தரத்தில தற்காலத்தில் வறண்ட பண்டிதரோடு பழகும் துர்பாக்கியம் இல்லாமல் நல்ல தமிழ் அறிஞரோடு சத்காலலேபம் செய்ய வாய்த்தது பற்றி ரொம்ப சந்தோஷம்.

திருப்புகழ்மணி 'முன்னம்நீ அன்னை' என்கிற பாட்டை அனுபவித்திருக்கிறார்கள். அனுபவிக்க வேண்டிய பாட்டுத்தான். பாவம் உள்ள பாட்டுத்தான். துடைக்க வேண்டிய முக்கைத் துடைத்தாய்விட்டது. பாட்டுச் சரியாய்ப் போய்விட்டது.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்



விமானம்

11 மணி காலை

17.8.47


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

எனக்கும் பலராமுக்கும் கடிதங்கள் வந்தன. காலை 7 மணிக்குக் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டோம். 1.30 க்கு சென்னை போய் சேருவோம். கல்கி, சின்ன அண்ணாமலை நான் ஆகிய மும்மூர்த்திகளும் சாந்திநிகேதனுக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குள்ள நிபுணர்களுக்குத் தமிழ்நாடே கலைக்கு விளைநிலம் என்பது தெரியும். அதனால் எங்களுக்கு அபார வரவேற்பு.

கல்கியும் சின்ன அண்ணாமலையும் பத்திரிகை ஆசிரியர்கள். ஆகையால் அவர்களை அப்படியே விட்டு விட்டார்கள். ஆனால் என்னை அங்கேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி விட்டார்கள். எனக்கும் அது ஆசைதான். நம்முடைய உடல் மற்ற காரியாதிகள் சம்மதிக்கவா செய்யும்.

நந்தலால், போஸ், ரவீந்திரநாத் தாகூர், மூக்கில்தே முதலானோர்கள் கூடிய ஒரு கூட்டத்தில் சொன்னேன். சிற்பக் கலைக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள சம்பந்தம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ரொம்ப சந்தோஷம். ஆனாலும் தமிழ்ப்பண்பாடு சிறந்து தனித்து விளங்குகிற காரியம் மூன்று உண்டு.

1. பரதநாட்டியம், 2. சங்கீதம், 3. கவி. இந்த மூன்று கலைகளும் தமிழ்ப் பாஷையோடு கலந்திருப்பதால் மற்றவர்களுக்கும் பூரணமாய் அறிந்துகொள்ளுவது கஷ்டம்.

மேலும் அந்த மூன்று கலைகளின் உதவியாலேயே சமயத் தெளிவு உண்டாயிருக்கிறது. கோயில்களும் சிற்பங்களும் அப்படியே உடன் விளைந்தவை என்பதாகச் சொன்னேன். இந்த உண்மையை ஒப்புக்கொள்ள முடிந்தது அவர்களுக்கு. நம்முடைய தமிழ்ப் பிரமுகர்களுக்குத்தான் முடியவில்லை. தமிழிலே ஒன்றும் இல்லை, கம்பனை எரி, திருவாசகத்தை எரி என்று பேச ஆரம்பிக்கிறார்கள். சாந்திநிகேதனுக்குப் போன தூது வெற்றிகரமாய் முடிந்தது.

கல்கத்தா தமிழர்கள் தமிழ் மோகம் பிடித்து அலைகிறார்கள் என்று சொல்லலாம். ஆடவர் பெண்டிர் எல்லாரும் ஒரே குழாமாய் தமிழைக் கேட்க வருகிறார்கள். கேட்டுப் பரவசமாகிறார்கள். நேரில் பார்த்தால்தான் உண்மை தெரியவரும்.

நேற்று இரவு 11 மணி முதல் 1 மணி வரை 500 ஆடவரும் 300 பெண்டிரும் கூடி இருந்து எங்களுக்கு விடை கொடுக்கும் விழா நடத்தினார்கள். பல பேர் மிக்க செல்வாக்கு உடையவர்கள் முதல் தரமான பத்திரிகை ஆசிரியர்கள் வியாபாரிகள், ஐபிஎஸ் ஆபிசர்கள், விஷயம் தெரிகிறதல்லவா. இவர்கள் எல்லாரும் விமானக்கூடம் வந்து வழியனுப்பினார்கள்.

சென்னையில்தான் சிலநாள் இருக்க வேண்டும். கொஞ்சம் வைத்தியம் நடத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறார்கள். பிறகுதான் குற்றாலம்.

பாளையங்கோட்டையில் ராஜேஸ்வரி முதலானோர்கள் செளக்கியந்தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



கல்கி

சென்னை

7.2.48


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

பலராமுக்கு எழுதிய கடிதம் பார்த்துக்கொண்டேன். 30 ஆம் தேதி மாலை மதுரை ஸ்டேஷனில் வைத்து மகாத்மாவின் மரணச் செய்தி கிடைத்தது. மூளையைக் குழப்பிவிட்டது. சென்னைக்கு வந்து பார்த்தால் எல்லாம் ஒரே ஆற்றாமையும் குழப்பமுமாய் இருந்தது. ரேடியோவும் பத்திரிகைகளும் ஒரே புலம்பல்.

இங்கு ஒவ்வொரு மாலையும் வீட்டிலும் வெளியே சபாக்களிலும் பிரார்த்தனைக் கூட்டம். சில சமயங்களிலும் என்னையும் கலந்து கொள்ள சொல்கிறார்கள் மனசுக்கு உவந்த பாடல்களை ஆங்காங்கு எம்.எஸ். பாடத்தான் செய்கிறார்கள். அந்தப் பாடல்களிலும் சோகம் ஊறிவிடுகிறது. இப்படியெல்லாம் இருக்கும்போது கடிதம் எழுதுவது கஷ்டமாய் போய்விடுகிறது.

ராஜேஸ்வரிக்குக் கூட கடிதம் எழுதவில்லை. எழுதினாலும் அவ்வளவு பிரயோசனம் இருக்காது.

எப்படியும் 10 ஆம் தேதி வண்ணார்பேட்டை போய்ச் சேருகிறேன். ஆவுடையப்பப் பிள்ளை அவர்களுடைய குமாரத்தியின் கல்யாணம் 1 ஆம் தேதி, ராஜேஸ்வரியைப் பார்த்துக் கொள்ளுகிறேன்.

நண்பர் சின்னுதேவரை வரும்போது மதுரையில் பார்க்கலாம் என்று எண்ணி கடிதம் போட்டிருந்தேன். சரியான நேரத்தில் கடிதம் போய்ச் சேரவில்லை. ஆகையால் திரும்பும்போது சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். நல்ல குணமான பிள்ளை. திண்டிவனத்துக்கு வேண்டுமென்று அக்காலத்தில் ரயிலைக் கொண்டுவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது. ரயில்காரனை வையவே தோன்றுகிறது. -

கங்கா நதிப் பக்கமாக ஓடிக்கொண்டு, தாகத்துக்குத் தண்ணீர் இல்லையே என்று நா வறட்சி எடுத்தவனும் உண்டுதானே. கம்பரது ஆனந்த கங்கை பக்கத்திலேயே பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்க மண்ணை வாரி வாரி வாயில் போட்டுக்கொண்டு தாகம் எப்படித் தீருகிறது என்று சொல்லுகிறவர்களுடைய காரியமும் திண்டிவனத்து காரியந்தான். திண்டிவனம் போதும்.

நண்பர் திருவிளங்கத்தின் பேச்சுக்கு ரொம்ப வியாபகம் உண்டாய்விட்டது. குழந்தை மாதிரி பேசிவிட்டார். கடல் கடந்து போனால் தான் புத்திசாலிகளைப் படிக்கலாமோ என்று சோமு எழுதுகிறான்.

பெங்களுரிலிருந்து ஏ.எஸ்.ஆர். சாரி அவர்களும் மிக்க உற்சாகமாக எழுதுகிறார்கள். அகஸ்மாத்தாய் தினகரனைப் பார்த்து விட்டுத்தான் தினகரன் பிரதியை எனக்கே அனுப்பியிருக்கிறார்கள். தினகரன் இங்கே எப்படி தொம்சம் செய்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரியாமல்,

எப்படியோ அன்பும் அன்பர்களும் மலிவான சரக்குகளாய் இருக்கின்றன. 9 ஆம் தேதி அன்று திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலிக்குப் புறப்படுகிறேன் பலராமுடன்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



முகாம்

கல்கி

சென்னை

22.10.48


கம்பர் விழாவில் தாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பது முதல் செய்தி. தங்களை எல்லாரும் எதிர்பார்த்தார்கள். முக்கியமாக நான் எதிர்பார்த்தேன்.

கல்கியும் சதாசிவமுமாகச் சேர்ந்து கம்பர் விழாவை வெகு சிறப்பாக, ஆயிரம் வருஷமாக இல்லாத சிறப்போடு நடத்திவிட்டார்கள்.

பத்திரிகைகாரர்கள் எல்லாரும் சேர்ந்து வேலை செய்தார்கள். ராமாயண ஏடுகளை யானை மேல் ஏற்றி ஊர்வலம் வரச் செய்தார்கள். ஊர்வலம் இரண்டு மைல் தூரம் சென்றது. ஊர்வலத்தில் நல்ல கூட்டம். எல்லாம் சிறப்புதான்.

கல்கியின் வரவேற்பு உரையும் பிரதமரின் திறனாய்வும் பிரமாதமாக இருந்தன. மிச்சம் வைக்காமலே பிரதமர் பேசினார்.

மற்றபடி சுமார் இருபது பேர் பண்டிதர்கள். ஸ்காலர்கள், கம்பராமாயண விரிவுரையாளர்கள், எல்லாரும் வந்து வந்து பேசினார்கள். தங்கள் தங்களைப் பற்றிப் பேசினார்களே ஒழியக் கம்பரைப் பற்றிப் பேசினார்கள் என்று சொல்ல முடியாது. பிரதமர், மராமத்து மந்திரி முதலானவர்கள் பாராட்டிப் பேசிய பின்பு ஸ்காலர்கள் நேர்முகமாகக் கம்பரை எதிர்த்தோ தாழ்த்தியோ திட்டியோ பேச முடியவில்லை. உள்ளத்திலிருந்த கொதிப்பைக் கொட்டிக் கொண்டார்கள். கம்பருக்கு நல்ல காலம்.

இவர்களை விட்டுவிட்டால் மூன்று தரமான பேச்சுக்கள் நிகழ்ந்தன. 1. நீலாவதி அம்மை, 2 டாக்டர் திருமூர்த்தி, 3. திருமதி ஆர். வி. சாஸ்திரி அம்மாள். மூன்று பேரும் கம்பரை அபாரமாய் அனுபவித்தவர்கள். அனுபவத்தை அப்படியே கொட்டிவிட்டார்கள். ஆக பிரயோசனமாக பேச்சு மூன்று. போதாதா ஒரு விழாவுக்கு.

நானும் பலராமும் நாளை புறப்பட்டு திருச்சி போகிறோம். 24, 25 ஆம் தேதிகளில் திருச்சியில் தங்கல். 26, 27 ஆம் தேதி வண்ணார் பேட்டை 27 ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபரசுவாமிகள் புத்தக சாலைத் திறப்புவிழா நான் திறக்க வேண்டும். 28 குற்றாலம்.

ராஜேஸ்வரி எங்கே இருக்கிறாள்? நடராஜன் காரைக்குடியில் இருப்பதாகக் கேள்வி. அப்படி இருந்தால் மிக்க சந்தோஷம். மற்றபடி அம்மாள் எல்லாரும் வேலூருக்கு வந்துவிட்டார்களா.

எனக்குக் காலிலிருந்து வந்த புண் அனேகமாய் குணமாய் விட்டது. கொஞ்சம் பாக்கி இருக்கிறது. நாலைந்து நாளில் குணமாக வேண்டும் பூரணமாக.

தாங்கள் கம்பர் விழாவுக்கு வந்திருந்தால் நாலு நல்ல பேச்சைக் கேட்டிருப்பார்கள் சபையோர்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - கல்கிக்கும் சதாசிவத்துக்கும் பாராட்டி ஒரு கடிதம் தாங்கள் எழுதவேண்டும்.

❖❖❖



திருக்குற்றாலம்

தென்காசி

17.11.48


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

வேலூர் ரயில் மார்க்கமாக திண்டிவனத்தைவிட துரந்தான். ஆனால் அப்படி அதிகமான தூரம் அல்ல, போஸ்ட் மார்க்கமாக, ஆனாலும் வேலூருக்குப் போனபிறகு கடிதப்போக்குவரத்து குறைந்து போய்விட்டது.

சென்னையிலிருந்து 23.10.48 அன்று புறப்பட்டேன். 24, 25 தேதிகளில் திருச்சிராப்பள்ளி முகாம், மாதர் சங்கத்தில் புத்தகாலயம் ஒன்று திறந்துவைத்தேன். அன்று பேசியதை அங்கத்தினர் ரொம்பவும் அனுபவித்துப் பாராட்டினார்கள்.

பொதுவாகப் பெண் இனத்தின் மேன்மையைப் பற்றி பேச ஆடவர்க்கு நேரம் இல்லை. அன்று எனக்கு வசதி இருந்தது. பேசினேன். உண்மையைத்தான் சொன்னேன். அது அவ்வளவு உகந்ததாய் இருந்தது அவர்களுக்கு.

அங்குள்ளவர்களுக்கு நான் ஒரு மாதம் திருச்சியில் தங்க வேண்டுமாம். 10 நாளாவது தங்கி கம்பரையும் தமிழையும் பற்றிப் பேச வேண்டுமாம். சென்னைக்குப் போகும் போது வழி மறிக்கக் கூடச் செய்வார்கள் போல் இருக்கிறது.

அது நல்ல காரியந்தான். பிரயோசனமான காரியந்தான். ஆனால் உடல்நலம் அவகாசம் எல்லாம் வேண்டும். திருச்சி காரியம் மிக்க திருப்தி.

திருச்சியிலிருந்து வண்ணார்பேட்டை, 27 ஆம் தேதி சீவைகுண்டம் போய் குமரகுருபரர் புத்தக சாலையைத் திறந்து வைத்தேன். விழா சிறப்பாய் நடந்தது. என்னைக் கேட்கவே பல ஊர்களிலிருந்தும் அன்பர்கள் வந்திருந்தார்கள். ஆனால் மடத்தை (திருபுவனந்தான்) சேர்ந்தவர்கள் தங்களைத்தான் கேட்க வந்திருந்தார்கள் என்று எப்படியோ எண்ணிவிட்டார்கள். அதுவும் நல்லதாய்ப் போயிற்று.

சீவைகுண்டம் சின்ன ஊர்தானே. விழாவுக்காகப் புத்தக ஆலயக் கட்டிடத்தில் (சிறு கட்டிடம், சிறு முற்றம்), பாண்டு, மேளம், கிராமபோன் ஒலிபரப்பி மூன்றுமாகச் சேர்ந்து கூப்பாட போட ஆரம்பித்தன. மூன்று மணிக்கே ஆரம்பித்துவிட்டன. வேறு என்ன வேண்டும் விபத்து. கூட்டம் ஒரே கூட்டமாய்க் கூடிவிட்டது. பத்து வயசுப் பையன்கள் பெண்கள் மற்றும் வயசான மாதர்கள் எல்லாருமாகக் கூடிவிட்டார்கள். இருக்க இடமில்லை. நிற்க இடமில்லை. கூச்சல் போட்டால் சொல்லி முடியாது. வேலூருக்குக் கேட்டிராதுதான்.

சபை ஆரம்பித்த 6.30 மணிக்குத்தான் நெருக்கமும் கூச்சலும் உச்சத்தை அடைந்திருந்தது. இந்தக் களேபரத்தில் நானாவது பேசவாவது என்று பயந்தேன். ஏன் குமரகுருபரர் 5வது வயசுவரை பேசிய மாதிரி பேசிவிட வேண்டியதுதான். அதாவது ஊமையாய் இருந்துவிடவேண்டியது என்று முடிவுகட்டிவிட்டேன்.

ஆனால் நாம் ஒன்று நினைக்கக் கடவுள் வேறொன்று நினைக்கிறது என்ற முறையில் விமோசனம் ஏற்பட்டது.

என்னுடைய முகவுரையாக சில வார்த்தைகள் முடிந்ததும், குமரகுருபரரது பாடல்களையும் பிரபந்தங்களையும் சுவைத்துக் குடித்த ஒரு சுவாமிகளும் ஒரு பண்டிதரும் பேசினார்கள். அந்தச் சொற்பொழிவுகளின் பயனாக மேலே சொன்ன பக்தகுழாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தப்பி வெளியே ஓட ஆரம்பித்தன. ஒன்றரை மணி நேரத்தில் இடத்தைக் காலி பண்ணிவிட்டன.  தக்க மனுஷர்கள் மாத்திரம் மிஞ்சி இருந்தார்கள். கமார் முன்னூறு பேர் பல ஊர்களிலிருந்து வந்திருந்தவர்கள் நண்பர் வெங்கிட்டாச்சாரி, அம்பாசமுத்திரம் சிவானந்தம் பிள்ளை இன்னும் பலர் வந்திருந்தார்கள். எல்லாரும் ஆத்திரத்தோடு இருந்தார்கள். அபிமானிகள் என் பேச்சை உணர்ந்து அனுபவித்தார்கள். ஆனால் கூட்டத்தைக் கலைத்துக்கொண்டு செய்தார்களே அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

குமரகுருபரர் திருவடி வாழ்க

28 ஆம் தேதி குற்றாலம் வந்து சேர்ந்தேன். அன்று நண்பகலிலேயே திருமதி ஆர்.வி. சாஸ்திரி அம்மாளும் குமாரரும் வந்திருந்தார்கள். நல்ல சங்கீதம், நல்ல கம்பெனி. அருவி திம்திம் என்று விழுகிறது. கூட்டமோ இல்லை. பொழுது நன்றாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.

டிசம்பர் வரை கீழ்ப்பாக்கத்து அன்பர்கள் லீவ் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். டிசம்பர் 2 வாக்கில் சென்னைக்குப் புறப்பட வேண்டும்.

தேவகோட்டை தமிழிசைச் சங்கத்தில் ராஜேஸ்வரி பேசுவதாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருநத்து. நன்றாய்ப் பேசியிருப்பாள். ஆடவர்கள் ஆசிரியர்கள் எல்லாரும் இனிமேல் யோசனை பண்ணியே பேச வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள். யோசனை இல்லாமல் பேசுவதே பேச்சு என்றல்லவா எண்ண ஆரம்பித்து விட்டார்கள் நண்பர்கள்.

என் காலிலிருந்த புண் குணமாகப் பார்க்கிறது. நாலைந்து நாளில் குணமாய்விடும் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள். அது குணமாய்விட்டால் ஆட்டோட்டத்தைக் கொஞ்சம் ஜாஸ்திப்படுத்திக் கொள்ளலாம், வேலூருக்கு வரலாம். இன்னும் என்ன எல்லாமோ செய்யலாம். வீட்டில் அம்மாளுக்கு உடம்பு செளகரியந்தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - மகாராஜனும் அக்காள் வேலம்மாளும் இலக்கியங்களாகக் கடிதம் எழுதிய வண்ணமாய் இருக்கிறார்கள். அவர்களுடைய அரிய பண்பாட்டையும் தெளிவையும் கவனித்தால் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்திருக்கக்கூடாது. ஜெர்மனியில் தான் பிறந்திருக்க வேண்டும். பிசகு செய்துவிட்டார்கள்.


❖❖❖



திருக்குற்றாலம்

தென்காசி

12.12.48


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கடிதங்கள், அன்பான கடிதங்கள் கிடைத்தன. இங்கே வந்ததும் ஜோலி அதிகமாய்ப் போய்விட்டது. உடனே பதில் எழுத முடியவில்லை. பலராம்தானே எழுதுகிறாரே என்று மெத்தனமாய் இருந்துவிட்டேன்.

குற்றாலத்தை விட்டுப் புறப்படும்போதே எப்படியாவது வேலூருக்குப் போய்விட வேண்டும் என்று பலராமிடம் சொன்னேன். 20 ஆம் தேதி வேலூர் வந்து திரும்பலாம் என்று எண்ணுகிறேன். ராஜேஸ்வரியும் அப்போது வந்துவிடுவாள். அவள் செளக்கியமாய் காரைக்குடியில் குடும்பப் பிரதானியாய் விளங்குகிறாள். ரொம்ப சந்தோஷம். தேவகோட்டை தமிழிசை ஆண்டுவிழாவில் பேசி இருக்கிறாள். நன்றாய்த் தெளிவாய்ப் பேசியிருப்பாள். சந்தேகம் என்ன? சந்தேகம் என்ன. “Have Some thing, how will know how to say it" என்று சாக்ரடீஸ் சொன்ன உண்மையை அவளிடம் தெளிவாய்ப் பார்க்கிறோம்.

பொதுவாக நாம் பேச்சில் என்னத்தைப் பார்க்கிறோம். காகிதத்தைத் தும்புதும்பாகக் கிழித்துக் காற்றில் பறக்க விடுகிற மாதிரி வார்த்தைகளைப் பறக்க விடுகிற காரியமாகத்தானே இருக்கிறது பேச்சு. 20 ஆம் தேதி அவளும் வந்துவிடுகிறாள். மிக்க சந்தோஷம். அம்மைக்கு வேலூர் பிடித்திருக்கும். மகளும் வந்துவிட்டால் முற்றிலும் சரியாகப் போய்விடும். இங்கே ஒரே பாட்டுத்தான். இடையிடையே நடனம். ஆக தேவலோகந்தான். உடம்பும் அதனால் தேறி இருக்கிறது. காலிலுள்ள புண்தான் கொஞ்சம் ஏதோ மழை விட்டும் தூவானம் தீரவில்லை என்பது போலே ஒரு சிறு பசப்பு. அதுவும் இரண்டு நாளில் காய்ந்துவிடும். ஒருவாரமாகக் கொஞ்சம் நடைபழகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம். அதனால்தான் ஆறிய புண் கொஞ்சம் தொந்தரவு கொடுக்க நேர்ந்தது. அவ்வளவுதான்.

வேலூரைச் சுற்றியுள்ள நன்னாடு தங்களை நன்றாய் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறது. மிக்க சந்தோஷம். தாங்களும் மகாராஜனும் எங்கே இருந்தாலும் சரி, தமிழ்ப்பயிர் நன்றாய் விடுகிறது. மிக்க திருப்தி.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



கல்கி

சென்னை

1.1.49


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

அருமைக் கண்மணி ராஜேஸ்வரிக்கு அனுப்பிய கடிதம் கிடைத்திருக்கும். அவளும் நடராஜும் காரைக்குடிக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். அவர்களோடு கருணாகரனும் புறப்பட வேண்டும். தங்கையும் பாளையங்கோட்டை போக வேண்டும். பிறகு அம்மாளும் தாங்களும் வேலூருந்தான்.

இப்படியாகக் குடும்பத்திலுள்ளவர்கள் வாழ்நாளில் முக்காலே மும்மாகாணி டூர் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. லாப நஷ்டங்களைப் பார்க்கிறதென்று ஏற்பட்டுவிட்டால் குடும்பக் கச்சவடம் மேற்படி கீழ்ப்படி என்ற கணக்குத்தான் வருகிறது. ஆனாலும் 1949 ஆம் வருஷம் மொத்தத்தில் லாபம் கொடுக்குமாறு எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வாராக.

நண்பர் செளந்திரராஜன் ஞாபகத்தோடு புதுவருஷ வாழ்த்து அனுப்பியிருக்கிறார்கள். வேலூர் என்னை மறக்கவில்லை. வேலூரை நானும் மறக்கவில்லை. மிக்க சந்தோஷம்.

அன்று கொண்டு வந்த சக்கரவர்த்திக் கீரையை இங்கே எல்லாரும் அனுபவித்தார்கள். அவர்களுக்குப் புதிதாய் இருந்ததால் ருசியை வியந்தார்கள். சக்கரவர்த்திப் பட்டம் தகும் என்றார்கள்.

நல்லெண்ணையையும் அனுபவித்தார்கள். சதாசிவத்துக்கு ஒருநாள் இட்லிக்கு எண்ணெய்விட்டார்கள். இது ஏது ரொம்ப வாசனையாக இருக்கிறதே என்று சொல்லி அதற்காகவே இன்னொரு இட்லியையும் வாங்கிக்கொண்டார்கள். ஆனால் எண்ணெயின் விருத்தாந்தத்தைப் பரிசாரகர் சொல்லவில்லை. இங்குள்ள நல்லெண்ணெய் கொஞ்சம் குருடாயிலுடன் உறவாடிக் கொண்டிருக்கும்.

ஆகையால் நல்ல எண்ணெயாக அம்மாள் பார்த்து ஒரு டின்னோ முக்கால் டின்னோ இங்கே சதாசிவம் அவர்கள் விலாசத்துக்கு அனுப்பச் செய்யவேண்டும். டபேதாரைக் கொண்டு விலையும் இன்னதென்று தெரிவிக்கச் செய்யவேண்டும். வேண்டும் போதெல்லாம் அந்தவிதமாகப் பார்த்து அனுப்ப ஏற்பாடு செய்வோம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - 5.1.48 இரவு புறப்பட்டுத் திருச்சி போகிறேன். 6, 7 தேதிகளில் திருச்சியில் தங்கல் 8 காலை குற்றாலம் போய்ச் சேரவேண்டும்.

❖❖❖

கல்கி

சென்னை

13.2.49


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நான் குற்றாலத்தை விட்டு வந்து ஒரு யுகம் ஆகிறது. ஏதோ ஒரு மாசத்தில் இங்கு வந்தேன். கோயம்புத்தூர், மதுரை, தென்காசி ஸ்டேஷன் கடைசியாக ஆழப்புழை போனேன். அங்கிருந்து திரும்பச் சென்னை வந்தேன்.

இங்கே ஆனந்திக்கும் அம்பிக்கும் (சதாசிவத்தின் மருமகன்) கலியாணம் நிச்சயம் ஆயிற்று. 9.2.49 அன்று நிச்சயதாம்பூலம், அதை ஒட்டி நடராஜன், தங்கம், குற்றாலம், சாமி, பாட்டி எல்லாரும் வந்தார்கள். கவர்னர் ஜெனரலும் வந்தார்கள். ஆகவே விருந்துக்கு மேல் விருந்து. கவர்னருடைய விருந்தும் சேர்ந்துகொண்டது. நேற்றே இதை எல்லாம் விட்டு தப்பியோடப் பார்த்தேன். சதாசிவம், அதெல்லாம் முடியாது, கலியாண நாளையும் நிச்சயித்து விட்டுத்தான் போகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். டிக்கட்டுகளை எல்லாம் இன்றைக்காக மாற்றிஆய்விட்டது.

இன்று இரவு புறப்படுகிறோம். நாளை போய் குற்றாலத்தை இனங்கண்டு கொள்ளுவேன்.

வீட்டில் தாங்களும் அம்மாளும் செளக்கியந்தானே. காரைக் குடியில் ராஜேஸ்வரியும் மாப்பிள்ளையும் சுகமாய் இருக்கிறார்கள். மிக்க திருப்தி. அவர்களுக்குத் துணையாக கருணாகரத் தொண்டை மான் இருக்கிறான். சரிதான். அவனுடைய சகோதரிதான் பாளையங் கோட்டையில் கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கிறாள். கற்பவை இன்னதென்றுதான் ஆசிரியர்களுக்குத் தெரியாது.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்

முகாம்

சீவிலிபுத்துர்

7.8.49


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

முந்தாநாள் இரவு ரேடியோவில் தங்கள் பேச்சை எல்லாருமாகக் கேட்டோம். கலை விஷயமாக பலபல இடங்களைத் தொட்டுச் சொன்னீர்கள். நம்முடைய அதாவது தமிழ்நாட்டுக் கலையைப் பற்றி ஆவேசங்கொண்டே பேசினீர்கள். அந்த ஆவேசம் எங்களுக்கும் உண்டாயிற்று. மாமல்லபுரம், தென்காசி, சீவிலிபுத்துருமே எழுந்துவிட்டன கலைக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்ல.

முந்தாநாள் 5 மணி மாலை ரயிலில்தான் இங்கே வந்து சேர்ந்தேன். சேர்ந்ததும் நல்ல சகுனம் என்று சொல்லும்படியாக ரேடியோ பேச்சைக் கேட்க முடிந்தது. மிக்க சந்தோஷம்.

மகாராஜனும் அக்காள் வேலம்மாளும் இருக்கிற இடத்துக்கு நான் யாத்திரை போவது வழக்கம். அந்த வழக்கத்தை ஒட்டித்தான் வந்திருக்கிறேன். தமிழை அவர்கள் அனுபவிக்கிறதென்றால் அதோடு ஊறுகிறது என்றுதான் அர்த்தம். லகுவாகச் சொல்லாமல் பரையாமல் போய்விடுகிறது நேரம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை நேரத்தை ராஜபாளையத்துக்காரர் பிடுங்கிக் கொண்டார்கள். ராஜபாளையத்துக் கம்பர் கழகம் திறப்பு விழாவை இன்று கொண்டாடுகிறது. மகாராஜன் திறந்து வைக்கிறார்கள். நான் தலைமை வகிக்கிறேன்.

அதனால் சீவிலிபுத்துர் கலைக் கழகம் இன்று காலை 10 மணிக்குக் கூடி என்னைக் கேட்கப் போகிறது. விஷயம் ரிதும் மேல்நாட்டாரைத் திண்டாட வைக்கிற காரியம். நாங்கள் இங்கே திண்டாட வேண்டியதாக ஒன்றும் இல்லை. ரிதும் பற்றி நான் பேச வேண்டாமே தமிழ்ப் பாடல்கள் பேசுமே தெளிவாக.

நாளைக் காலை குற்றாலம் திரும்புகிறேன்.

ராஜேஸ்வரியும் மாப்பிள்ளை நடராஜனும் காரைக்குடியில் செளக்கியமாக இருக்கிறார்கள் அல்லவா, கருணாகரனும் அங்கே தானே இருக்கிறான்.

தாங்களும் அம்மாளும் செளக்யந்தானே. வேலூர் உடம்புக்கு பிடித்திருக்கிறதல்லவா.

சென்னையிலிருந்தபோது வேலூர் வர எண்ணினேன். அங்கே கம்பர் கழகம் கல்கி அவர்களின் நிர்வாகத்தின் கீழ் ரொம்ப ரொம்ப வேலை செய்தது. என்னையும் வேலை வாங்கிற்று. நாலைந்து இடங்களில் கம்பரைப் பற்றிப் பேச நேர்ந்தது. வேலூருக்கு வர இயலவில்லை. வேலூர் தமிழ்க்குழாம் நன்றாய் உல்லாசமாய்த் தொண்டு செய்து கொண்டிருக்கும். அன்பர்களுக்கு என்னை ஞாபகப்படுத்த வேண்டும். -

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



திருக்குற்றாலம்

தென்காசி

18.3.50


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தஞ்சாவூருக்கு போனபிறகு கடிதப் போக்குவரத்தே இல்லை. டிஸ்டிரிக்ட் வெல்பேர் ஆபிசர் என்றால் வேலையும் தொல்லையும் வேண்டிய மட்டும் இருக்கத்தானே செய்யும். வேலையே இல்லாததால் எனக்கும் எழுத நேரம் இல்லை. தமிழகத்துக்கே வெல்பேர் ஆபிசர் என்று என்னை அனேகர் எண்ணிவிடுகிறார்கள். எங்கே எல்லாமோ அழைக்கிறார்கள். வரமுடியாது என்று கடிதமாவது எழுதவேண்டும்தானே.

எப்படியோ மாதங்கள் கழிந்துவிடுகின்றன.

மார்ச்சு மாதம் முதல் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டேன். வழியில் திருச்சி ரேடியோவில் பேசினேன் இலக்கணம் பற்றி.

அந்தப் பேச்சு எப்படியோ சிலருக்குப் பிடித்திருக்கிறது. கல்கி பாராட்டியிருக்கிறார்கள். திருஞானசம்பந்தம் வசந்தத்தில் அச்சிட்டிருக்கிறார். மற்றும் பலரும் நன்றாய் இருந்தது என்று சொல்லுகிறார்கள். சந்தி இலக்கணப் பண்டிதர்கள் என்ன சொல்லுவார்களோ - கண்டதார்.

ராஜேஸ்வரியும் நடராஜூம் காரைக்குடியிலேதானே இருக்கிறார்கள். குழந்தை செளக்கியந்தானே, அம்மாள் தஞ்சையில் தானே.

எப்படியும் எல்லாரும் கம்பர் விழாவை ஒட்டிக் காரைக்குடியில் சந்தித்துக் கொள்ளலாம். 3 ஆம் தேதி காலை ராஜாஜி, கல்கி, நான் மூவரும் சென்னையிலிருந்து காரைக்குடி வந்து சேருகிறோம். எங்களுக்கு ஜாகை மகளிர் இல்லத்தில்.

கம்பர் விழாவை சா. கணேசன் வெகு ஜோராய் நடத்தப் போகிறார்கள். நடத்த வேண்டும் என்று எண்ணிவிட்டால் நடத்தலாந் தானே. வந்த கூட்டத்துக்கு ஒரு பாட்டை அனுபவிக்கத் தெரிந்து விட்டு, வீட்டுக்கோ ஊருக்கோ போனால் போதும். கம்பர் விழாக்களில் ஒரு பாட்டு கூட கிடைப்பதில்லை வந்த மக்களுக்கு. இந்த வருஷம் ஏதாவது பாட்டுகள் கிடைக்குமா?

புதுப்பதிப்பு வேண்டும் என்று எல்லாருமே பேசுவார்கள். யாரும் அதுபற்றிப் பேசலாந்தானே. அப்படி ஒன்று வரும் வரையும் தொந்தரவே இல்லை. வந்தாலும் என்ன என் பதிப்பு, கோபால கிருஷ்ணமாச்சாரி பதிப்பு, சிதம்பர முதலியார் பதிப்பு இவைகளுக்கு இருக்கும் மதிப்புத்தானே. ஒருவரையும் ஒருவரும் படிக்கப் போவதில்லை. ஆனாலும் அதுவரும்வரை இப்போதுள்ள புத்தகங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடலாம் அல்லவா?

இந்த செளகரியத்துக்காகத்தானா கம்பர் விழா கூட்ட வேண்டும். கம்பரை அறிமுகப்படுத்துவதற்கான விஷயம் இருந்தால் நல்லது. இருக்கிறதா என்று பார்க்கலாம், இந்த விழாவில். நாம் எல்லாரும் முக்கியமாக மகாராஜனும் தாங்களும் கம்பர் பாடல் விஷயமாகவும் கவித்துவமான அற்புத தத்துவம் சம்பந்தமாகவும் சதா ஆத்திரத்தோடும் இருக்கிறோம். அப்படித்தானே எல்லாரும் இருக்கவேண்டும். சில பண்டிதர்கள் வந்து செளடால்தனமாகக் கம்பரை ஏளனம் பண்ணிவிட்டு ஏதோ அறியா சிறுவர்களின் கைதட்டலையும் பெற்றுவிட்டு ஜெயக்கொடி பறக்கவிட்டுக் கொண்டு காம்பீர்யமாய் நடக்கிறதென்றால் அதைவிட டிராஜடி வேறு உண்டா. அந்த படாடோபத்துக்காகவா அத்தனை கூட்டம். சா. கணேசனும் சகாக்களான பிரமுகர்களும் வருஷம் வருஷமாக உழைத்து வருவதெல்லாம் பயனில் சொல் பாராட்டுவாருக்காகத்தானா எல்லாம் கொஞ்சம் பக்தியோடு இருந்துவிட்டால் பெரிய மோளோவாகப் போய்விடும் கம்பர் விழா. சா. கணேசனுக்கு ஜே போடவேண்டியதுதான்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - இப்போது பழைய தண்டியலங்காரம்.

புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன். உதாரணச் செய்யுள்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பண்டிதர்கள் ஏன் சூத்திரத்தோடு கட்டி அழுது கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. சூத்திரத்திலுள்ள விஷயங்கள் வெகுசாமான்யம். உதாரணச் செய்யுள்களோ அபாரம் சில செய்யுள்களாவது தொன்மை தழுவிய அழகான செய்யுள்களாக இருக்கின்றன.

ஒரு பாடல்

தலைவன் தான் பிழைகளை உணர்ந்து தலைவியிடம் எனக்கே அவமானமாக இருக்கிறது உன்னிடம் வர. உன்னைவிட்டுப் பிரிந்திருப்பது சகிக்க முடியாதபடி இருக்கிறது. அக்கினிப் பிரவேசம் செய்யலாமா என்றுகூடத் தோன்றுகிறது என்பதாக பாணனிடம் சொல்லிவிடுகிறான் தலைவன். எல்லாம் இந்தப் பயல் பாணனுடைய கட்டுமானச் சரக்குக்குத்தான் வேறொன்றும் இல்லையாக்கும் என்று தோழியிடம் சொல்லுகிறாள் தலைவி

நாண்போலும் தன்மனைக்குத்
தான்சேறல் இந்நின்ற
பாண்போலும் வெவ்வழலிய்ப்
பாய்வதூஉம் - காண்தோழி

கைத்தலம் கண்ணாக்
கனவுகாண் பான்ஒருவன்
பொய்த்தலைமுன் நீட்டுதலே
போள்ம்

கள்ளவாசல் வழியாகப் பொய்த்தலையை விட்டு சோதிப்பது போலத்தான் இந்தப் பண்ணை விட்டுச் சோதிப்பதும். பாணன் என்ன வருகிறது? அவனே வரட்டும் பார்த்துவிடுகிறேன் ஒரு கை.

இப்படியிருக்கிறது நாடகம்.

விளாத்திகுளத்தில் தாங்கள் குறிப்பிட்டிருக்கிறபடி தேங்காய் தட்டித் தமிழ்ப் படிக்க ஆரம்பித்தேன். தமிழுக்கு வேறு எங்கேயாவது பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லைதானே.

சீக்கிரத்தில் காரைக்குடியில்,

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

திருக்குற்றாலம்

தென்காசி

12.5.50


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

அன்பான கடிதம் கிடைத்தது. மிக்க சந்தோஷம்.

காரைக்குடியில் நடந்த காரியத்தைப் பற்றிப் பலநாள் பேசவேண்டியதே ஒழிய கடிதத்தில் எழுத முடியுமா.

கணேசன் அபார முயற்சி எடுத்தார்கள். 5000 ரூபாய் செலவாயிற்று. பயன் இருந்தது. 10000 பேர் அல்லவா வந்திருந்தார்கள். பெண்டுகள் அதில் 2000 பேர். எல்லாரும் கம்பரைப் பற்றி ஏதாவது ரசமான விஷயம் சொல்லுவார்கள் கேட்கலாம் என்றே வந்திருந்தார்கள். தூரமான பெங்களுரிலிருந்து வந்திருந்தார்கள். நல்ல விஷயங்களைக் குறித்துச் சொல்லும்போது சந்தோஷப் பட்டார்கள். ராஜாஜி, கல்கி இருவரும் பக்தி சிரத்தையோடு பேசினார்கள். அந்த சிரத்தையுடனேயே கேட்டார்கள் சபையோர்கள். அவர்கள் இருவரது ஆத்திரத்தோடு கலந்து கொண்டார்கள் பதினாராயிரம் பேரும். அதுதான் விழா. அத்தகைய உணர்ச்சியையும், அறிந்து அனுபவிக்கும் தன்மையையும், முன் நடந்த எந்த கம்பர் விழாவிலும் நாம் பார்த்தது இல்லைதானே.

கம்பரை அனுபவரீதியாகப் புகழ்ந்து பாடினீர்கள் தாங்கள். தம்பி, முத்துசிவன், சுரபி எல்லாருமாக வெறும் செய்யுள் இயற்றும் காம்போஸிஷனாக இல்லை. நால்வர் பாடிய பாடல்களும். கம்பரது சிருஷ்டி அற்புதங்களைக் கண்டே அனுபவித்துப் பாடினீர்கள். எனக்கு எவ்வளவோ திருப்தியாக இருந்தது. பாடல்களைக் கேட்ட சபையோரும் நால்வரோடும் கலந்து உற்சாக அலையால் மிதந்து கொண்டிருந்தார்கள்.

இத்தனை விதமாக சா. கணேசனுக்கு வெற்றி கிடைத்து விட்டது. மற்றபடி வித்வான்கள் என்னத்தைச் சொன்னால் என்ன. அதெல்லாம் சபையோரை பாதிக்கவில்லை. பெருநெருப்புக்கு ஈரம் இல்லை என்றுதான் இருந்தது.

வையாபுரிபிள்ளை அவர்கள் இடைச்செருகல் சம்பந்தமாகத் தலையையாவது அசைத்தார்கள், சீனிவாச ராகவாச்சாரியார் அவர்களுக்கு அதுவும் முடியவில்லை. அய்யோ பாவம், கம்பர் உயர்ந்ததுபோய்விட்டால் எவ்வளவு ஆபத்து.

கடிதத்தை கல்கி அவர்களும் மகாராஜன் அவர்களும் பார்த்துக் கொண்டார்கள். விஷயத்தைத் தெரிந்து கொண்டார்கள். கம்பர் பாடே அப்படி இருந்தால் நம் போன்றவர் என்னவாயிருக்கும் சொல்லவும் வேண்டுமா.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வெள்ளி விழா மலர் வந்திருக்கிறது.

அதில் வையாபுரிபிள்ளை அவர்கள் பின்வருமாறு எழுதியிருக்கிறார்கள். சில உட்கதைப் பகுதிகளும் பெரிதும் ஐயத்திற்கு இடமாய் உள்ளன. உதாரணமாக ஏகி மன்னனை எனவரும் மிதிலைக் காட்சிகளும் செய்யுளுக்குப் பின் முனியும் தம்பியும் என்பவரை 56 செய்யுட்கள் ஒரு பழம் பிரதியிலும் இல்லை. இப்பிரதியில் மேலைச் செய்யுட்கள் காணாமையால் கம்பன் இயற்றிய மூலப்பகுதியில் இப்பகுதி உள்ளதோ என்பது பெரிதும் ஐயுறத்தக்கதே. பாட்டுக்களும் சுவை குன்றியுள்ளன என்பதை நாம் மறத்தல் ஆகாது. ஆனால் வித்வான் மாணிக்கம், அவரோடு மற்றப் புலவர்கள் சீனிவாசராகவன் ஆகியவர்கள் இதே ஆதாரத்தை எப்படி ஒப்புக் கொள்ளுவார்கள். ஒப்புக்கொண்டுவிட்டால் கம்பனை மட்டந்தட்ட வேண்டும் என்று காரியம் நிறைவேறாமல் தானே போக நேரிடும். பிறகு கம்பன் ஒழிக. என்றுதானே கோஷம் போடவேண்டும்.

மேலே சொன்ன 56 பாடல்களையும் நாம் ஒதுக்கிவிட்டோம். வையாபுரிபிள்ளை அவர்களுடைய கரத்துக்கு அந்த ஏடு வருவதற்கு முன்னமேயே.

இதெல்லாம் போக எடுபட்ட பாடல்கள் வேறே. அதைக் கண்டு பிடிக்கிற காரியமோ முடியாத காரியம். ஆகவே கம்பரைக் கந்தலை ஒட்டி அலங்கோலம் ஆக்கினது மாத்திரம் அல்ல சதையையே ஆங்காங்கு பிச்சு வேறு எடுத்துவிட்டார்கள்.

கம்பரைக் கேவலமாக எண்ண இடம் இருக்கவே செய்கிறது என்றுதானே ஜனங்கள் எண்ணுவார்கள். காரைக்குடி கம்பர் விழாவில் கம்பரைக் கேவலப்படுத்திப் படேபடே வித்வான்கள் வாய்விட்டுப் பேசினார்கள். அவர்கள் மேல் என்ன குற்றம்? தமிழ் ஆர்வத்தில் செய்த பாவம் அப்படி

கலைக்கு எல்லா தேசத்திலும் எக்காலத்திலுமே தத்துவங்கள் உண்டு. தமிழ்க் கலையும் அப்படித்தான். ஆனாலும் தமிழ்க் கலைக்கு இப்போது புதிய உயிர்ச்சத்து பிறந்திருக்கிறது.

தமிழ் மக்கள் லட்சக்கணக்காகத் தமிழைக் கம்பரைத் தமிழ்ப் பண்பாட்டை அனுபவித்து வருகிறார்கள். நித்தியமான இடம் கிடைத்துவிட்டது தமிழுக்கு. கம்பர் காரியம் அப்படி கிடைக்கட்டும்.

மகாராஜன் அவர்களைத் தென்காசிக்கு மாற்றி ஆய்விட்டது. இனிமேல் தென்காசிக்குத் தெளிவு உண்டாகும்.  சந்தேகம் இல்லை. முத்துசிவனும் இங்கே வருவதாக எழுதி இருக்கிறார்கள். ரஜா காலந்தானே.

கல்கி அவர்கள் வந்து 10 நாளாகிறது. நாளை சென்னைக்குத் திரும்புகிறார்கள்.

குற்றாலத்தில் நல்ல காற்று இருக்கிறது. அருவிதான் இல்லை. கிணற்றுத் தண்ணீரை வைத்துச் சமாளித்துக் கொள்ளுகிறோம்.

ராஜேஸ்வரியும் குழந்தையும் நடராஜூம் தஞ்சையில் தானே இருக்கிறார்கள். காலேஜ் திறக்க நாள் இருக்கிறதே. அம்மாளுக்கு உடம்பு செளக்யந்தானே. மற்றும் எல்லோருக்கும் என் அன்பு.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - கும்பகர்ணனது குணாதிசயங்களை அற்புதமாய் வகுத்திருக்கிறார் கம்பர். மிக உயர்ந்த பாத்திரமாகவே வரைந்திருக்கிறார். அவனை இடைச்செருகல் ஆசாமிகள் கோரமாய் காரிக்கேச்சர் செய்துவிட்டார்கள். நம்முடையவர்களுக்கும் அந்த கோரச் செயல்கள் உவந்தவையாய் இருக்கின்றன. அவர்களுக்கு இனிக் கம்பன் மேல் தனியான கோபம் ஒன்று பிறக்கப் போகிறது. அதையும் பார்த்து அனுபவிக்கலாம் நாம். கோயம்புத்துருக்குத் தாங்களாவது வரவேண்டும் என்று எண்ணியிருக்கிறார்களே. மிக்க திருப்தி.

❖❖❖



திருக்குற்றாலம்

தென்காசி

5.6.50


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கடிதம் கிடைத்தது. மிக்க சந்தோஷம். மாப்பிள்ளை நடராஜூக்குக் குணத்துக்குத் தக்கபடி உத்யோகம் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடராஜூம் ராஜேஸ்வரியும் வாய்ப்பான தம்பதிகள். நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நல்ல சேவை செய்ய ஆசை கொண்டவர்கள்.

முதல் முதலாக நடராஜ் குற்றாலத்துக்கு வந்திருந்தபோது கம்பரது பொருளாதார தத்துவத்தை எடுத்துச் சொல்ல நேர்ந்தது. நடராஜ் அபாரமாய் அனுபவித்தார். அன்று அவருடைய அன்பு எனக்குக் கிடைத்தது. இன்றும் அப்படியே இருக்கிறது. அவருக்கும் ராஜேஸ்வரிக்கும் எல்லாம் வல்ல இறைவன் சகல பாக்யத்தையும் அருளுவானாக.

இருவருக்கும் என் ஆசியைத் தெரிவிக்கவேணும். விசாகப் பட்டணத்தில் எத்தனை மாசம் இருக்க வேண்டுமோ தெரியவில்லை. ராஜேஸ்வரி தஞ்சையில்தானே இருக்கிறாள். விசாகப்பட்டணத்துக்கு இப்போது போக வேண்டாந்தானே.

அவளுடைய குழந்தை முதலாக எல்லாரும் செளக்கியந்தானே. எல்லாருக்கும் என் அன்பு.

மகாராஜன் அவர்கள் தென்காசி முனிசிபாக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அடிக்கடி சந்திக்க முடிகிறது. என்ன வாய்ப்பு பார்த்தீர்களா. நாலு நாளாக மகாராஜன். வேலம்மாள், நடராஜ நாடார், புஷ்பம்மாள், தங்கை சண்பகத்தம்மாள், குலசேகரப்பட்டணம், சிவசுப்பிரமணிய பிள்ளை, ஜமந்துர் ராமசாமி ரெட்டியார், டிக்டிரிக்ட் ஜட்ஜ் வெங்கட்டராமன் இப்படியாக ஒரு குழாம். தமிழ் வந்து அதன் அபூர்வ நடனங்களை ஆடிக் கொண்டிருந்தது. எல்லாரும் நன்றாய் அனுபவித்தார்கள்.

நேற்றோடு சங்கம் கலைந்தது. நாலுநாள் போதா தமிழை இணங்காண.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

திருக்குற்றாலம்

தென்காசி

10.9.50


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

சென்னை, கோவை மறுபடியும் சென்னை என்றெல்லாம் சுற்றிவிட்டு நேற்று குற்றாலம் வந்து சேர்ந்தேன்.

இப்போதும் இங்கே நல்ல சாரல், அருவியில் நல்ல வெள்ளம். கூட்டம் கிடையாது. குற்றாலத்தை அனுபவிக்க வேண்டுமானால் இதுதான் பருவம்,

நாங்கள் ராஜபாளையம் பாரதிவிழாவை ஒட்டி இங்கே வருகிறீர்கள்.

ராஜபாளையத்தில் விழாவை இந்த மாதம் 17 ஆம் தேதி வைத்திருக்கிறார்கள். நம்மோடு மகாராஜனும் கலந்து கொள்ளுகிறார்கள். மூன்று பேர் போதாதா தமிழுக்கு. அனேகமாக முத்துசிவனும் வருவார்கள்.

ராஜேஸ்வரியும் குழந்தையும் செளகரியமாய் இருக்கிறார்கள். மிக்க சந்தோஷம் நடராஜ்தான் தெலுங்கு தேசத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருக்கட்டும். சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுவார்கள். தமிழ் ஏக்கம் அவர்களுக்கு அதிகமாய்க் கொண்டிருக்கிறது. தங்களுக்கு மலையாளத்தில் ஆய்க் கொண்டிருந்த மாதிரிதான். அப்படி அனுபவித்துப் பார்த்தால்தான் தமிழின் சுவை பெருமை எல்லாம் தெரியவரும்.

தமிழ்ப் பண்டிதர்களைக் கொஞ்சம் தமிழ்நாட்டுக்குப் புறம்பேயுள்ள நாடுகளுக்கு அனுப்பினால் அவர்களுக்கும் தமிழின் மேல் ஆசை உண்டாய்விடும். நிழல் அருமை வெயிலிலே நின்றறிமின். தாங்களும் கோவை பேரூர் எல்லாம் போய் வந்திருக்கிறீர்கள். நல்ல அனுபவந்தான். எட்டயபுரத்து நண்பர்கள் வேண்டிய மட்டும் கலவரம் விளைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாரதியார் எவ்வளவு நல்லவராய் இருந்தாலும், அரிய பாடல்களைப் பாடி இருந்தாலும், குற்றம் குற்றந்தான். அனாவசியமாக அல்லவா எட்டயபுரம் போய்ப் பிறந்து தொலைத்தார்.

இப்போது எட்டயபுரத்தில் தங்க நேர்ந்திருந்தால், அவர் பாடு ரொம்பக் கஷ்டமாய்ப் போய் இருந்திருக்கும். பாடாய்ப் படுத்தி யிருப்பார்கள் எட்டயபுரம் நண்பர்கள்.

லட்சக்கணக்கில் உதவி வந்திருக்கிறதே தங்களுக்கு என்பதைக் கொஞ்சமும் கருதியதாக இல்லை அவர்கள். நல்லதுக்குத்தான் பாரதிவிழாவை ஒற்றிப் போட்டிருக்கிறது.

ஆனால் ராஜபாளையம் நல்ல ஊர். ராஜபாளையத்திலேயே பிறந்திருக்கலாம் பாரதியார். தங்களை 17க்கு முன்கூட்டியே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் அம்மாள், ராஜேஸ்வரிக்கு எல்லோருக்கும் என் அன்பு.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

முகாம்

கல்கி

சென்னை

7.11.50


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் அன்பான கடிதம் கிடைத்தது. தஞ்சாவூருக்கு வரவேணும் கவிக்குழாத்தோடு கலந்துகொள்ள வேண்டும் என்று எவ்வளவோ ஆசை. முக்கியமாகத் தாய்மார்களுக்குத் தமிழின் இனிமையும் பெருமையும் இப்படி என்று சொல்லி மகிழ வைக்கவேண்டும் என்று ஒரு போவார்.

ஆனால் என் உடம்பு கொஞ்ச நாளாக வம்பு பண்ணிக் கொண்டிருக்கிறது. இன்புளுவென்ஸா வந்து வந்து என்ன எல்லாமோ செய்கிறது. ரொம்பவும் பலவீனப்படுத்திவிடுகிறது உடம்பை. இதெல்லாம் காரணமாக என்னை மன்னித்துவிடவேண்டியதுதான். 2.12.50, 3.12.50 வாக்கில் தஞ்சைக்கு நான் வருகிறது என்பது முடியாத காரியம். எனக்கு ஏமாற்றமான காரியந்தான். அங்குள்ள நண்பர்களுக்குச் சொல்லவேணும். தினம் தினம் இன்ஸுலின் எல்லாம் போட்டுத்தான் ஆகிறது. தாங்கள் இருக்கும்போது எல்லாம் பிரமாதமாகத்தான் இருக்கும் சந்தேகம் இல்லை.

கோயம்புத்தூரில் ஒருவாரம் இருந்தேன். தமிழ்ப் பிரச்சாரத்துக்காகத்தான். முன்னமேயே எழுதிவிட்டேன். பெரிய கூட்டம் லெக்ச்சர் ஒன்றும் வேண்டாம், ஏதோ பத்தோ இருபதோ பேர் வந்து கேட்டால் போதும் என்பதாக. அப்படித்தான் வந்தார்கள், சாதாரணமாக ஐந்து பேர்தான். ஆர்.கே. சண்முகம் செட்டியார்கள் அவர்கள் ஒன்று, பழனிசாமி நாயுடு இரண்டு, பலராம் மூன்று, நடராஜன் நாலு, நான் ஐந்து. இதுதான் சங்கமம்.  இப்போது கலாக்ஷேத்திரத்திற்குப் போகிறேன், எல்லாம் முப்பது பேர். மற்றவர்களை அதாவது ஐம்பதுக்கு வருகிறவர்களை வரவேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள் ருக்மணி தேவி.

விஷயம் தெரிகிறதல்லவா. மன்னித்துவிடுங்கள்.

டில்லி தமிழ்ச் சங்கத்தார் வி.வி.எஸ். அய்யரது கம்பர் என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். வி.வி.எஸ். அய்யர் முதல் பாராவில் கம்பர்தான் உலகத்தில் மேலான கவிஞர் என்று கட்டியம் கூறுவது போல எழுதிவிட்டார். கோபம் வந்துவிட்டது நம்முடைய வால்மீகிக்கு. எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வி.வி.எஸ் அய்யர் மேல் கம்பர் மேல், தமிழ் மேல், உலகத்தின் மேலேயே கோபம். ஆனாலும் கம்பரைப் பற்றிப் பிரசங்கம் செய்கிறார்கள். இது ஒரு புது யுகந்தான்.

ராஜேஸ்வரி, குழந்தை, அம்மாள் எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்தும் அன்பும்.

குறிப்பு - 10 ஆம் தேதி வாக்கில் குற்றாலம் திரும்ப உத்தேசம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



திருக்குற்றாலம்

தென்காசி

10.6.51


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

30 ஆம் தேதி அனுப்பிய அழகான கடிதம் கிடைத்தது.

ராமாயண விழாவில் மிச்சம் கிச்சம் வையாமல் கம்பரைப் பாராட்டி விட்டீர்கள். எடுத்து விளக்கிய பாடல்கள் எல்லாருடைய உள்ளத்தையும் பரிபூரணமாய்க் கலந்துவிடும். சந்தேகம் என்ன?

நாராயணசாமி பிள்ளை அவர்கள் கம்பர் பக்தர். அவர்கள் இறங்கிப் போனதில் வியப்பில்லை.

'நின்னாவார் பிறரின்றி நீயே ஆனாய்' என்ற பாசுரம் தங்களை ஆட்கொண்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மிக்க திருப்தி.

எனக்கு உடம்பு மெள்ள மெள்ளத் தேறி வருகிறது. காரில் சிலவேளை கொஞ்ச தூரம் வெளியே போய் வர முடிகிறது. பிச்சுக்குட்டி (வில்லுப்பாட்டு) வந்திருக்கிறார் பார்வதி கலியாணத்தை வில்லுக்கு அழகாய் அமைத்திருக்கிறார். இன்று மாலை Rehearsal நடக்கப் போகிறது. மகாராஜன் ரொம்ப ரொம்பப் பாராட்டி அனுபவிக்கிறார்கள். - -

ராஜேஸ்வரி, குழந்தை, அம்மா எல்லாருக்கும் என் அன்பு.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

திருக்குற்றாலம்

தென்காசி

21.5.52


அன்பான நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கடிதங்கள் கிடைத்தன. மிக்க சந்தோஷம். தென்காசி திருவள்ளுவர் கழகத்து வெள்ளிவிழாவுக்கு வருகிறீர்கள். கொஞ்சம் செளகரியப்படுத்திக்கொண்டு வந்தால் நல்லது. யார் யார் எல்லாமோ கம்பரைப் பற்றி எப்படி எல்லாமோ பேசித் தொலைத்திருக்கிறார்கள். எழுதியும் தொலைத்திருக்கிறார்கள். புத்தகமாக வேறு வெளிவருகிறது. யாரும் கம்பரை உணர்ந்ததாக இல்லை. அது குற்றம் அல்ல. கம்பரைப் பற்றி விஷயம் தெரிந்துகொள்ளுவது கஷ்டந்தான். நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் கம்பர் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே கம்பரை அறியவில்லை என்றால் குற்றம் இல்லை. ஆனால் கம்பரை மேலே எவ்வவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேசுகிறது, எழுதுகிறது, புத்தகம் போடுகிறது என்று வந்துவிட்டால் சங்கடமான காரியந்தானே. இந்தப் புண்ணிய ஆத்மாக்களைப் பற்றி எல்லாம் பேச வேண்டியிருக்கிற தல்லவா. அதற்காகத்தான் செளகரியப்படுத்திக்கொண்டு வரச் சொல்லுகிறேன்.

கம்பருடைய காரியமோ பொல்லாத காரியம். அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் முத்துச்சலாபம் குளிக்கிறவர். அவரோடு கீழே முங்குவதற்கு முதலில் அபார தைரியம் வேண்டும். அதோடு தண்ணீரில் இறங்குகிற பழக்கமும் வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் மகாராஜனிடத்திலும் சகோதரி வேலம்மாளிடத்திலும் இருக்கின்றன. கம்பருடைய யோகந்தான். நம்முடைய யோகமுந்தான். இங்கே குற்றாலத்துக்கு செயிண்ட் ஜான்ஸ் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் ஜெபரத்னம் வந்திருக்கிறார்கள். இரண்டு நாளாகக் காலை மாலை சந்தித்து நீண்ட பேச்சுகள் பேசி வருகிறோம். பல வருஷங்களாக எனக்குத் தெரிந்தவர்கள் தான். ஒரே நிலையிலிருந்து நெடுகிலும் தமிழை மதித்து அனுபவித்து வருகிறார்கள். இப்படியும் ஒருவர் உண்டா தமிழ் ஆசிரியர்களுக்குள் என்று வியந்த வண்ணமாக இருக்கிறேன். ஜெபரத்னம் பாக்யசாலிதான். தமிழ்ப் பாடலை அனுபவித்துத் திளைக்க முடிகிறதல்லவா. சகாக்களுக்கு முடியவில்லையே. ஜெபரத்னமே வருந்துகிறார்கள். நிற்க.

ராஜேஸ்வரியிடமிருந்து கடிதமே இல்லை. டிப்டி கலெக்டர் வேலை அவளையுமா பிடித்துக்கொள்ளும். நடராஜ் குழந்தை எல்லாரும் செளக்யமாய் பொழுதுபோக்கிக் கொண்டிருப்பார்கள். நல்ல இடந்தான் திருக்கோவிலூர்.

தஞ்சையில் தாங்களும் பழனியப்ப பிள்ளை அவர்களும் இருக்கிறீர்கள். கலை மயந்தான் தஞ்சை மிக்க சந்தோஷம்.

என்னை காலைக் கட்டிப்போட்ட மாதிரி வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருக்கிறேன். நண்பர்களையும் அன்பர்களையும் நான் போய் பார்க்கிறது என்பது முடியாத காரியமாய்ப் போய்விட்டது. மலை தான் மகமதிடம் வர வேண்டியிருக்கிறது. சதாசிவம் கல்கி எம்.எஸ். எல்லாரும் இரண்டு நாளில் இங்கே வருகிறார்கள். செம்மங்குடியின் மகள் கல்யாணம் இங்கே குற்றாலத்தில் 25.5.52 அன்று.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



திருக்குற்றாலம்

தென்காசி

26.10.52


அன்பான பாஸ்கரனுக்கு,

தங்கள் கடிதம் வந்து ஒரு மாசம் ஆகியும் பதில் எழுதத் தாமதம் ஆகிவிட்டது. தாமதம் ஆகிவிட்டதற்குக் காரணம் கிடையாது. கால தத்துவந்தான் பொறுப்பு.

தாங்கள் எங்கே போனாலும் செளகரியமாய்ப் போய்விடும். நல்லார்க்குத் தம்மூர் என்று ஊரில்லை.

தமிழில் பற்றுடையவர்கள் கும்பகோணத்தில் இருக்கிறார்கள். (திருநெல்வேலி அல்ல கும்பகோணம்) தூண்டுகோலாகத் தாங்கள் போயிருக்கிறீர்கள். விளக்கு அணைந்து போய்விடாது. மிக்க சந்தோஷம்.

தீபாவளி, மக்கள் மருமக்கள்மாருடன் கோலாகலமாய் நடந்து வாழ்க்கைக்குப் புது ருசியைக் கொடுத்திருக்கும்.

ராஜேஸ்வரி தான் அங்கேயே இருக்கிறாள். பேறுகாலம் நவம்பர் மாசம், உடம்பு செளரிகயமாக இருக்கிறதல்லவா. வாசிப்பை அடியோடு கட்டி வைத்துவிட்டு வீட்டு வேலையைப் பார்க்கவேணும். அதுதான் டானிக்.

கம்பாமாயணப் புதுப்பதிப்புக்காக காகிதம் அவ்வளவும் ஹிலால் பிரஸ்ஸுக்கு வந்துவிட்டது. டைப்புகளும் அநேகமாய் வார்த்தாய்விட்டது. 10 நாளில் அலட்டிக்க ஆரம்பிக்கலாம். பதிப்பு விஷயமாகப் பலரும் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். அப்படியெல்லாம் கம்பரோடு உறவு கொண்டாடும்படி இருந்தால்தான் கலை பிழைக்கும். இது விஷயமாகப் பிறகு எழுதுகிறேன். கம்பர் தனி சிருஷ்டிகர்த்தா. பிரம்மாவோடு போட்டி போடுகிறவராய் இருக்கிறார். அதற்கு இடம் கொடுத்துவிடலாமா, தமிழனை மண்டையில் ஒரு தட்டுத் தட்டவேண்டியதுதான் என்று நம்முடைய தமிழ் நண்பர்கள் ரொம்ப ரொம்ப வேலை செய்து வருகிறார்கள். தமிழ் கொடுத்த ரூபாய் எல்லாம் அப்போதுதான் ஜீரணமாகும்போல் படுகிறது அவர்களுக்கு. தமிழனைப் பிடித்த ஜாதகம் அப்படி இருக்கிறது.

இந்த நிலையில் கும்பகோணத்தில் தமிழ்ப் பக்தர்கள் இருக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொண்டாடத்தக்க காரியம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖



திருக்குற்றாலம்

தென்காசி

12.1.53


அன்பான பாஸ்கரன் அவர்களுக்கு,

அன்பான கடிதம் வந்தது. சர்க்கார் வேலை வேண்டிய மட்டும் அதற்கு மேல் சமயத் தொண்டும் சமயத் தொண்டு உங்களை இங்கேயே கெண்டுவரப் போகிறது. மிக்க சந்தோஷம்.

தஞ்சையில் தான் ராஜேஸ்வரியும் குழந்தைகளும் பொழுது காணாதுதான்.

அவ்வப்போது திருக்கோயிலூருக்கும் போய் வருகிறார்கள். அவள் இல்லாதபோது வீடு ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். -

ஹிலால் பிரஸ் இன்னும் எழுத்துகளை முற்றிலும் வார்த்தாக வில்லை என்று தெரிகிறது. ஆனவுடன் புரூப் போட்டுக்கொண்டு வருவதாகக் கடிதம் வந்திருக்கிறது. கம்பர் காரியம் எல்லாம் அப்படித்தான். ஆயிரம் வருஷம் காத்திருக்கிறார் தன்னை உலகம் அறிந்துகொள்ள. இன்னும் கொஞ்சம் காத்திருக்கட்டுமே.

தமிழ்க் களஞ்சியத்தைப் பலரும் பயப்படாமல் எடுத்துப் படிக்கிறதாகத் தெரிகிறது. தமிழ் செய்த புண்ணியந்தான். ஆனால் தமிழ் ஆசிரியர் யாருமே அதை ஏறிட்டுப் பார்த்தாகத் தெரியவில்லை. புண்ணியம் செய்த பாடல்கள்தான்.

சக்ராந்திக்கு எல்லாரும் வருவார்கள். எல்லாருக்கும் என் அன்பு,

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்



திருக்குற்றாலம்

தென்காசி

30.1.53


அன்பான பாஸ்கரன் அவர்களுக்கு

26 ஆம் தேதி கடிதம் கிடைத்தது. கடிதம் வெகு ரசமாய் இருக்கிறது. கடிதத்தை பலராமோ நடராஜனோ வாசிக்கிறது, நண்பர்கள் கேட்டனுபவிக்கிறது என்கிற காரியமாய் இருக்கிறது. மகாராஜனும் தமக்கை வேலம்மாளும் ரொம்ப ரொம்ப அனுபவிக்கிறார்கள். பாஸ்கரனை விட்டு வெகுதொலைவுக்குப் போய்விட்டார்கள் பண்டிதர்கள் என்கிறார்கள். பண்டிதர்களை விட்டுத்தான் பாஸ்கரன் ஓடிவந்துவிட்டார்கள் என்று நான் சொல்லுகிறேன். நான் பார்க்கிற பண்டிதர்களுக்கு உண்மை வேண்டாம் உணர்ச்சி வேண்டாம், வேண்டியதெலலாம் வார்த்தைகள். அதிலும் செத்த வார்த்தைகளிடம் ஒரே மோகம். நேருக்கு நேராக எதையும் சொல்ல முடியாது. சென்னை என்று சொல்லமுடியாது, வடபாலுள்ள சென்னை என்றுதான் சொல்ல முடியும். வந்தான் அல்ல போந்தான் வேண்டும். இந்தக் கோணல்களை நிமிர்த்தல் என்பது முடியாத காரியம். பார்த்தாய்விட்டது வேண்டிய மட்டும்.

தங்கள் கடிதம் வெகுதெளிவாய் ஓடுகிறது. விஷயங்களை அப்படி அப்படியே எடுத்துக்காட்டுகிறது.

'பறக்கும் எம் கிள்ளைகாள்' மாதிரி எல்லாப் பாடல்களும் தங்களை வந்து சேருகின்றன. யாவை யாதும் இலர்க் கியையாதவே, ஏறுமின் வானத்து இருமின் விருந்தா இமையவர்க்கே, பொருள்த் தக்கீர் எல்லாம் விலாசம் விசாரித்துத் தங்களிடம் வருகின்றன. விஷயம் தெரிந்த பாடல்கள்தான், சமர்த்துத்தான். பொருள்த்தக்கீர் என்ற பாடலை மகாராஜன் கேட்டுவிட்டுப் போனார்கள் தென்காசிக்கு. இரவெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்த தாம். மறுநாள் கோர்ட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதும் வந்து ஒலித்துக் கொண்டிருந்ததாம். தமிழ் அப்படி அல்லவா ஒருவரைச் செய்யவேண்டும். அந்தப்பாடு தங்களையும்தான் படுத்தியிருக்கிறது. மிக்க சந்தோஷம். தமிழ்க் களஞ்சியம் வீணாய்ப் போகவில்லை. தமிழர்கள் காதைப் பிடித்து இழுக்கத்தான் செய்கிறது.

தெருத்தெருவாய்த் தங்களைத் தேடி அலைந்த மாதிரி இருக்கிறது. சுந்தரர் பாடல்.

தங்கள் கடிதத்தை வாசிக்கும்போது தங்களுக்குண்டான, அதிசயம் அதிர்ச்சி எல்லாம் எங்களுக்கும் உண்டாகிறது. அத்தனை உண்மையும் இயல்பும் தங்கள் அனுபவத்தில் இருக்கின்றன. மிக்க திருப்தி,

கலை மண்டப வேலை மும்முரமாய் நடத்துகிறீர்கள். பழநியப்ப பிள்ளை அவர்களுக்கு என் சந்தோஷத்தைச் சொல்ல வேண்டும். ‘; -

ஒரு பாடலும் விளக்கமும் எழுதி அனுப்புகிறேன். எனக்கு உடம்பு சுமாராய் இருக்கிறது. தாங்களோ சீக்கிரமே இங்கு வருகிறீர்கள். மிக்க சந்தோஷம். ராஜேஸ்வரி, மாப்பிள்ளை, குழந்தைகள் எல்லாருக்கும் என் அன்பு.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - தமிழை வியந்து பேசியிருக்கிறார் சென்னை கவர்னர். தமிழ்ப் பண்டிதர்களுக்கு ஞாபகம் ஊட்டி வாசிக்கச் சொல்லுங்கள். 

திருக்குற்றாலம்

தென்காசி

7.10.53


அன்பான பாஸ்கரன் அவர்களுக்கு,

கடிதம் கிடைத்தது. ராஜேஸ்வரிக்குக் கழுத்து வலி தீர்ந்து சுகமாய் இருக்கிறாள் என்று எண்ணுகிறேன். மொத்தத்தில் உடம்பில் கொஞ்சம் பலகீனம் இருப்பதாகத் தெரிகிறது. சரியான போஷிப்பு கொடுத்து தேகத்தை சரியாக்க வேணும். மற்றும் அம்மா குழந்தைகள் எல்லாரும் சுகந்தானே.

கம்பர் தரும் ராமாயணம் பால அயோத்தியா காண்டம் முடிவடைந்துவிட்டது. அட்டவணைகளைப் போட்டுப் பூர்த்தி பண்ண வேண்டியது, பைண்டு கட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.

அரங்கேற்றுக்கு நவம்பர் மாசம் முதல் தேதியைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அன்றுதான் ராஜாஜிக்கு வசதி. செட்டிநாட்டுப் பிரமுகர்களுக்கும் நவம்பர் முதல் தேதி வசதி உங்களுக்குமே வசதி கலெக்டர் பழனியப்பாவும் கவர்னருக்கு விடைகொடுத்துவிட்டு வசதியாய் இருப்பார்கள். குற்றாலம் வருவதில் கஷ்டம் இராது.

கல்கி எடுத்த காரியம் எதிலும் வெற்றிதான். கல்கி எத்தனையோ காரியங்களை சாதித்திருக்கிறார்கள். கம்பர் யுகத்தையும் தாபிக்கிறார்கள். தமிழ்நாடு செய்த புண்ணியந்தான்.

பாட்டை நன்றாய் அனுபவித்திருக்கிறீர்கள். இதுவரை யாருக்கும் பாட்டு விளங்கினதில்லை. பண்டிதர்கள் என்ன சொல்லுகிறார்களோ? கபிலர் அகவல் தீபாவளி மலருக்குக் கொஞ்சம் அப்படி அப்படித்தான். கம்பரில் இருந்து ஒரு கட்டம் எடுத்து விளக்கியிருக்கிறேன். முக்கியமான கட்டந்தான். கம்பரை இனம் காணச்செய்யும் கட்டுரை.

எனக்கு உடம்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறது.

கம்பர் பதிப்பு விஷயமாக நீங்கள் ஹிலால் பிரஸ் முதலாளியோடு கலக்க வேண்டும். எப்போது செளகரியம் வாய்க்குமோ. -

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖

திருக்குற்றாலம்
தென்காசி
19.10.53

அன்பான பாஸ்கரன் அவர்களுக்கு,

கம்பர் தரும் ராமாயண அரங்கேற்றம் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிறது என்ற முடிவு தெரிந்திருக்கும். ராஜாஜி 3 ஆம் தேதி காலையே வந்து விடுகிறார்கள். மறுநாள் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் புறப்படுகிறார்கள்.

உங்களுக்கு அழைப்பு வந்திருக்கும் உங்களையும் பேசக் குறிப்பிட்டிருக்கிறது. பேசுகிறவர்கள் எல்லாரும் கம்பரை மதிக்கிறவர்கள். கம்பருக்கு யோக தசைதான். சடையப்ப வள்ளல்களாக அணிவகுத்து நிற்கிறார்கள். கோவிந்தசாமி மூப்பனார், கே.வி.எல்.எம். ராம், குழந்தையின் செட்டியார் எல்லாரும் துணையாய் நிற்கிறார்கள்.

அவர்களுடைய வள்ளன்மைக்குத் தக்கபடியாக உயர்ந்த பதிப்பாகவே இருக்கிறது புத்தகம். இவ்வளவு அழகாகத் தமிழ்ப் புத்தகம் வெளிவந்தததில்லை என்று சொல்லுகிறார்கள். எல்லாம் கடவுள் அருள்தான்.

ஏதோ வட்டத்தொட்டி என்று ஆரம்பித்தோம். கம்பர் தரும் ராமாயணம் என்ற பூர்த்தியாகி இருக்கிறது. கல்கியால்தான் எல்லாம் நிறைவேறி இருக்கிறது. கல்கி ஆசிரியர் கொடுத்த நிலையான ஆதரவை அளவிட்டு சொல்ல முடியாது. வேறெந்தப் பத்திரிகையும் போடாது. போட்டாலும் நாலு இதழோடு சமாப்தி ஆய்விடும்.

கல்கி இடம் பண்ணி வைத்தார்கள் கம்பர் கம்பீரமாய்க் கொலு வீற்றிருக்கிறார். நாம் எவ்வளவோ திருப்திப்பட வேண்டிய காரியம். கலெக்டர் பழனியப்பாவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். விழாவுக்கு வருவார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எப்போது வருகிறீர்கள்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - ராஜேஸ்வரி நடராஜ் எல்லாரும் வருவார்கள் என்று நம்புகிறேன். குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே.


❖❖❖