இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/இரவீந்திரநாத தாகுர்
உலகப் பெருங்கவிஞர்களில் இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்ப்பவர் இரவீந்திரநாத தாகுர் - இளங்கோ - சீத்தலைச் சாத்தனார் - கொங்குவேளிர் - திரிகூடராசப்ப கவிராயர் ஆகியோரின் ஓங்கிய கருத்து - மொழிவளம் - சிந்தனைப் போக்கு அனைத்திலும் மேலாய் ஒளிப்பவர் இவர்.
மனித இனத்திற்குச் சுவைபயக்கும் அனைத்து இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கினாலும் பாடலின் திறத்தாலே வையத்தைப் பாலித்த - பாலிக்கும். உயர் இடம் பெற்றிருப்பவர்.
பல்லாயிரக் கணக்கான மக்களின் வெளியிட முடியாத உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புத்தம் புதிய உவமைகளாலும் உருவகங்களாலும் கருத்தூற்றை மலையூற்றாய்த் தருபவர். மாந்த இனத்தின் இயற்கை அழகுயிர்ப்பையும் இனிய துன்பங்களையும் எல்லா வகை இலக்கியங்களிலும் வியப்புற வெளிப்படுத்துகிறவர்.
இயற்கை - காதல் - வாழ்க்கை ஆகிய முக்கோணத்தில் மனித நல நாட்டத்தையே மன வெழுச்சியில் வான் மழையை - நிலச் செழிப்பை - தீச்சுடரை - நாற்றிசைக் காற்றினை மொழியில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று விழைந்து தருபவர்.
தெள்ளிய நடையும் சீரிய பொருளும் வீறிய சிந்தனையையும் எவரும் வாழ்வியக்கத்தில் பெற்று மகிழச் செய்யும் அறிவின் ஒளியும் புதுப்புது சொல்லாட்சியும் சொற் செட்டும் கூரிய சீரிய சிந்தனைத் திட்டமும் ஒளிரச் செய்பவர்.
ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களையும், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இன்னிசையின் பண் சுமந்த பாடல்களையும் தீட்டியுள்ளவர். உள்ளத்தில் ஆழ்ந்த படிப்பறிவையும் பட்டறிவையும் சிறுகதை, புதினம், நாடகங்கள் எனப் பன்முக இலக்கியமாகத் தந்துள்ளவர்.
உலக முழுதும் சுற்றிச் சுற்றி சொற்பொழிவுகள் ஆற்றி ‘சாந்தினிகேதன்’ பல்கலைக்கழகம் அமைத்தவர். உலக மக்கள் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் ஊட்டமளிக்கும் அவர் மொழியோவியங்கள் சொற் சிற்பங்களும் என்றும் அழியாதவை. அவற்றை நுகர்க.
- தி. ஸ்ரீனிவாசராஜகோபாலன்