இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/இறுதிப்பாட்டு

விக்கிமூலம் இலிருந்து
இறுதிப்பாட்டு

எனது இறுதிப்பாட்டில் இன்பத்தின் அனைத்து இசைகளும் கலந்து இயங்கட்டும் - எந்த இன்பம் நாநிலத்தில் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்து பசும்புல் அளவுக்கு மிஞ்சி வளர்ந்து மண்டி விடும்படி செய்கிறதோ, எந்த இன்பம் பிறப்பு இறப்பு என்னும் இரட்டையர்களை வையகம் எங்கும் ஆடிப்பாடித் திரியும்படி செய்கிறதோ, எந்த இன்பம் சூறைக்காற்றோடு சுழன்று திரிந்து அனைத்துயிர்களையும் மகிழ்ச்சி வெறியுடன் எழும்படி செய்கிறதோ, எந்த இன்பம் இன்னல் என்னும் செந்தாமரை மீது கண்ணீர் சிந்திக்கொண்டு அமர்ந்திருக்கிறதோ, எந்த இன்பம் தன் உடைமைகள் அனைத்தையும் குப்பையில் கொட்டி விடுகிறதோ, எந்த இன்பம் சொல்லற்ற பேசா நிலையில் இருக்கிறதோ, அந்த இன்பத்தின் இசைகள் என் பாட்டோசையில் கலந்து ஒலிக்கட்டும். -கீ என் அரிய பாடலே, சோர்விலிருந்து எழுந்திடு, பழக்கமான திரையைக் கிழித்திடு, முதன்முதலில் நாம் கூடிய பொழுது அடைந்த மகிழ்ச்சியில் திளைத்தவாறே என் காதலியிடம் பறந்து சென்றிடு! -நா

இசையாகிற என் வலையில் என் அன்பே, நான் உன்னை இழுத்துவிட்டேன், சுற்றி இழுத்து வளைத்து விட்டேன். -தோ

என்னை கிண்ணமாக்கிவிடு; என் முழுமையை உனக்கே உரித்தாக்கிக் கொண்டு விடு. -ப.ப.

உனது ஆசைகளெல்லாம் கடந்தகாலத் தேன் கூட்டிலிருந்து கிளம்பி என் நெஞ்சத்தைக் கிறக்கிவிடவே வருகின்றன. அவற்றின் சிறகுகள் கூறுவதைக் கேட்டிட நான் சிலையாக அமர்ந்து கொண்டேன். -நா

உண்மையையே நான் பேசுகிறேன். வாழ்க்கையில் அதுவே நிலை என்று நான் கண்டு கொண்டேன். வேறு மலிவான பகட்டுகளை ஒதுக்கி விட்டேன். -கா.ப

பெரிய தலைவன் இசைக்கிறான். மூச்சுக் காற்று அவனதுதான். ஆனால் அந்த இசைக் கருவி நமது மனம்தான். அதன் மூலமே படைப்பாகிற பாடல்களை வெளிக் கொணர்கிறான். -ஆ

என் உலகில் ஒளி இருந்த நாள்களில் என் கண்களுக்கு வெளியே நீ இருந்தாய். இப்பொழுதோ என் உலகில் ஏதுமில்லை ஆனால் நீயோ என் உள்ளத்துள் புகுந்து விட்டாய். -எ.சு.

எவனோ என் உள்ளத்தைத் திருடிவிட்டான். அதை விண்ணில் சிதறிவிட்டான். -எ

வேனில் நாள்கள் மாறிமாறி வருகின்றன. முழு வெண்ணிலா விடை பெறுகிறது. மறுபடியும் தோன்றுகிறது. ஆண்டுதோறும் மலர்கள் மலர்கின்றன, கிளைகளில் மயங்கி நிற்கின்றன. இப்பொழுது நான் உன்னிடம் பெறுவதும் மறுபடியும் ஒருவேளை உன்னிடம் வருவதற்காகவே என்றே தோன்றுகிறது. -தோ

என் பாடல் உனது கனவுகளுக்கு இரட்டைச் சிறகுகளாக அமைந்து, யாரும் கண்டறியாத புதிய பொன் உலகுக்கு உன் உள்ளத்தை இழுத்துச் செல்லும்.

உன் வாழ்க்கைப் பாதையிலே இருள் கவிந்திருக்கும் போது, உனது தலைக்கு மேல், வழிகாட்டும் ஒளி சுடராகவே மின்னிக் கொண்டு வரும், எனது பாடல். -வ.பி

இனிமை உடையது இவ்உலகு, நான் பெண்ணாய்ப் பிறந்ததும் இனிமை உடையதே. -நூ.பா

புரட்சி மனங்கொண்ட வீர இளைஞன் முதியவர் ஆட்சியினை அழித்திடவே இனி அடிக்கடி தோன்றுவான். - -நூ.பா

பொன் வேண்டேன் புகழ்வேண்டேன், வாழ்வதற்குத் துளி இடமே நான் வேண்டுவது. -நூ.பா

சாரளக் கோப்பில் நறுமணமல்லிகை, ஆற்றின் அக்கரையில் தோன்றிடும் இளங்காலை ஒலி - ஒளிக் கூத்து இவையே வேண்டுவன. -நூ.பா

பொன் இல்லை, பெற்றி இல்லை, புகழில்லை நான் வேண்டுவது துளி அன்பே. -நூ.பா

காதலுக்குரிய மதிப்பினை இரு கைகளாலும் நீ அள்ளியே எனக்குத் தந்திடத் தந்திட என் உள்ளத்தில் பதுங்கி இருந்த ஓர் ஏமாற்றம் தானே வெளியே தோன்றிடும். -நூ.பா

வாழ்வுடன் ஒட்டியிராது போனால் பாட்டின் செல்வம் யாவும் பயனற்றே போகும். -நூ.பா

உண்மை விலை கொடுக்காமல் பெற்றிடும் இலக்கியப் புகழ், வெறும் கள்ளத்தனமே; இது நல்லதே அன்று. -நூ.பா

அன்பிரக்க மழைதனைப் பொழிந்திடுவேன்; கற்சிறைகளைத் தகர்த்திடுவேன், உலகிடை திசைகெட்டுத் திரிந்திடுவேன்; பித்தன் போலப் பாட்டிசைத்திடுவேன். -நூ.பா

அம் மெல்லிய சிரிப்பும், சுவைதரு கனிமொழியும் மையல் நோக்கும் காதலைக் காட்டுவனவே. -நூ.பா

இன்னலுக்கு இளகியும், காதலைத் தந்தும் இன்பக் கூட்டினை மறைவில் எழுப்யியும் எந்நாளும் அது நிலைக்கும் என்றே நம்பியும் வீண் செய்தேன் இவ் வாழ்வினை. -நூ.பா

மாந்தர் வீடுகளில் இரவு படர்கையில், மண் மகள் அயர்ந்தே தன் உடலைக் கிடத்துவாள்; துன்பங்களை மறந்தே எண்ணிலா உயிர்களும் உறங்கும்; வானகம் ஒன்றே விழித்திருக்கும். -நூ.பா

இவ் உலகின் மூலை எங்கும் மண்ணில் எழும் பண்ணினைக் காலப் பெண் வேய்ங்குழலில் இசைக்கிறாள். -நூ.பா

ஓ, காற்றே, கடலே, வானே நீங்கள் சேர்ந்தே இன்று இக் கோலாகலம் என்னே! ஆடுக ஊசல், ஆடுகவே. -நூ.பா

அழகிய மாநிலமே, எனது உள்ளம் உன்னைக் கண்டு எத்தனை முறைதான் களிப்புடன் பாடிப் பொங்கிற்று. -நூ.பா

பாவலன் மனத்துள் திகழும் காட்சியே பாவியமாக எழுந்திடும். -நூ.பா

தன்னலம் கொண்ட கொடுமை பிறர்படும் இன்னலைப் பார்த்து நகைக்கிறது. -நூ.பா

நீங்காத வறுமை, இருள், அடைப்பு: சோறு வேண்டும்; உயிர்வேண்டும், உடல்நலம் வேண்டும், வலிமை மிக்க தோள்வேண்டும்.

-நூ.பா

அறிய வேண்டாதொன்றை அறிந்து கொள்ளாதே; கிட்டாததைத் தேடிச் செல்லாதே; நிரம்பாத ஒன்றை நிரப்பத்தான் கூடுமோ? - -நூ.பா

காளிதாஸ் என்ற பெயரில் எவனோ ஒருத்தன் இருந்தான்; ஆனால் நான் இருக்கிறேனே, உயிர்த் துடிப்புடன் ஓர் ஆள். -நூ.பா

எனது அன்பார்வம் விடுதலை உருவில் ஒளிரும்; எனது காதலோ பத்தியின் வடிவாய்ப் பயன் தருமே. -நூ.பா

இந்தப் புல், இப்புழுதி, அந்த விண்மீன்கள், ஞாயிறு, திங்கள் இவற்றின் மறைவில் நிற்கும் நீ ஓவியமா? வெறும் ஓவியமா? -நூ.பா

வாழ்வு, இளமை, செல்வம், புகழ் யாவும் காலப் பெருக்கில் மறைவன. - -நூ.பா