இராமதேவர் பூசா விதி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சித்தர் பாடல்கள்

நூல் வரிசை 23

இராமதேவர் பூசா விதி / பூஜா விதி

பக்கம் 326

1-5[தொகு]

1

ஆதி என்ற மணி விளக்கை அறிய வேணும்

அகண்ட பரி பூரணத்தைக் காண வேணும்

சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம்

சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள் தன்னை

நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம்

நிற்குணத்தின் நின்ற நிலை யாரும் காணார்

வேதி என்ற வேதாந்தத்து உள்ளே நின்று

விளங்குவதும் பூசை இது வீண் போகாதே

2

போகாமல் நின்றதோர் ஐயா நீதான்

பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே

ஆகாமல் ஆனந்த வல்லி யாலே

அடிமுடியின் நடுவாசி ஆறுக் குள்ளே

வாகாமல் வாலையுடை மூலத் தாலே

வழி தோன்றும் மூன்று எழுத்தை உரைக்க வேணும்

சாகாமல் சாகுமடா இந்த மூலம்

சசிவட்டம் நடுக்கோணம் முக்கோணம் ஆமே

3

முக்கோணம் மூசுழி தற்கோணம் ஆகி

முதலான மூலமணி வாலை தன்னில்

நாற்கோண நாலுவரை நயந்து காக்க

நாயகியாள் பரஞ்சோதி நாட்டம் உற்றுத்

தீக்கோணத் திக்குதிசை இருந்த மாயம்

தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக

தாக்கோண விட்டகுறை வந்தது என்றால்

தனியிருந்து பார்த்தவனே சித்தன் ஆமே

4

சித்தான மூன்று எழுத்துச் செயலாம் சோதி

சீரியவை யுங்கிலியும் சவ்வுமாகி

முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி

முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும் தான்

வித்தான வித்தையடா மூட்டும் பாரு

விரிவான முகக்கருவும் மூன்று கேளு

சத்தான அதன் கருவும் சிலையில் வைத்துச்

சதுரான விதி விவரம் அறியக் கேளே

5

கேளப்பா பலி கொடுத்துப் பூசை செய்து

கிருபையுள்ள உருவேற்றித் திட்ட மாக

வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்

வளமாகப் புதைத்துவிடு நடுச்சாமத்தில்

ஆளப்பா அடியற்று மரணம் ஆகி

ஆண்டிருந்த தவசுநிலை தான் குலைந்து

காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி

கதை தெரியச் சொல்லுகிறேன் இன்னம் பாரே

6-10[தொகு]

6

இன்னம் இன்னம் கண்முன் சோதனையும் ஆகும்

ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம்

அன்னம் இன்னா அகில் கட்டை தேவ தாரம்

அறிவுடைய முளைசீவிச் சிங்கையோதி

வன்னம் இன்னார் பேர்சொல்லி ருசியென்றே தான்

வலுவான நூற்றெட்டு உருவம் போடு

சன்னம் இன்னா மரத்திடியில் இருந்து கொண்டு

சதிராக ஆணிகொண்டு அடித்தி டாயே

7

அடித்த முளை பிடுங்கி வைத்து இறுக்கிப் போடு

ஆனந்த உருக்குலைந்து பட்டுப் போகும்

தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானுந்

தொகை முடிந்து ஆச்சுதடா இந்தப் போக்கு

விடுத்த பின்பு விடம் ஏறிக் கருவிப் போகும்

விரித்து உரைத்தேன் பூட்டிதுவே வீண் போகாது

தடுத்துவிடு நகரத்தில் அடித்துப் பாரு

தட்டழிந்து உயிர் முதலாய்ச் சேதம் ஆமே

8

ஆமப்பா அடிதரிசிங் களத்தில் ஆனால்

அதிசயம் காண் கண்டவர்க்கே அடைக்கலம் போம்

வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு

விளையாட்டே இல்லையடா இந்தப் போக்கு

சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கிச்

சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம்

தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு

தவறாது ராமனுடை வாக்யம் தானே

9

தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு

தனதான நூற்று எட்டுக் குள்ளே சித்தி

ஆனென்ற அண்டர் பதி யெட்டும் ஆடும்

அறுபத்து நால்மூலி எல்லாம் ஆடும்

கோன் என்ற கோடி சித்துக் கணத்தில் ஆடும்

குணமாக ரேவதி நாள் செய்ய நன்று

வானென்ற அட்டமியில் செய்ய நன்று

வளர்பிறையில் செய்தவனே யோகியாமே

10

யோகியாய் ஆவதற்கு ஈதுனக்குச் சொன்னேன்

ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே

யோகிகளாய் ஏகாந்த வல்லி ஆட்கிங்

ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு

தாகிகளாய் தாயடைய கிருபை யாலே

தவமாகும் மவமாகும் சுபம் உண்டாகும்

மோகிகளால் மூலபூசா விதி பத்தாலே

முத்தி பெறச் சித்திவிளை பத்துமுற்றே
நூல் முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=இராமதேவர்_பூசா_விதி&oldid=976545" இருந்து மீள்விக்கப்பட்டது