இலக்கிய இன்பம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

((நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய “இலக்கிய இன்பம்” நூலுக்கு பொ. திருகூடசுந்தரம் எழுதிய முன்னுரை)

நாமக்கல் கவிஞர் அவர்கள் இதுவரை தமிழ் நாட்டார்க்கு உயர்ந்த இலக்கியங்களையே சிருஷ்டி செய்து தந்திருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைகள் தேசபக்தியும் சுதந்தர ஆர்வமும் நிறைந்துள்ள ஜீவ ஊற்றுகள் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவர்களுடைய ‘என் கதை’ என்னும் நூல் தமிழ்மொழியில் இதுவரை பிறவாத ஓர் அற்புத இலக்கிய இனமாகும். அவர்களுடைய சிறைவாசத்தில் ஜனித்த ‘மலைக்கள்ளனை’க் கையில் எடுத்தால் யாரும் இறுதி காணும் வரை கீழே வைக்க மாட்டார்கள்.

இதுவரை இலக்கியங்களைச் செய்து தந்த கவிஞர் அவர்கள், இப்பொழுது இலக்கியத்தில் நாம் காணக்கூடிய இன்பத்தையும் வடித்துத் தர முன்வந்திருக்கிறார்கள்.

இலக்கியம் என்றால் என்ன? அது தரக்கூடிய இன்பம் யாது? நம்முடைய மனத்தில் நிகழும் காரியங்கள், எண்ணங்கள் என்றும் உணர்ச்சிகள் என்னும் இரண்டு வகைப்படும். ஒருவருடைய எண்ணங்களைப் பிறர் மனத்தில் உண்டாக்கும்படி செய்வதற்காக ஏற்பட்ட சாதனங்களை அறிவு நூல்கள் (ஸயன்ஸ்) என்று கூறுவார்கள். அதுபோல் ஒருவருடைய மனத்தில் எழும் உணர்ச்சிகளைப் பிறருடைய மனத்திலும் உண்டாகும்படி செய்வதற்காக ஏற்பட்ட சாதனங்களை இலக்கிய நூல்கள் (கலை) என்று கூறுவார்கள்.

அறிவு நூல்கள் நமக்கு நம்முடைய வாழ்வின் இலட்சியத்தைக் காட்டும்; அதை அடைவதற்கு வேண்டிய சாதனங்களையும் செய்து வரும். இலட்சியம் தெரிந்தாலும் போதாது, சாதனங்களைப் பெற்றாலும் போதாது. இலட்சியத்தை அடைந்து தீர வேண்டும் என்ற அடங்காத ஆர்வம் உண்டானால்தான் இலட்சியத்தை அடைவோம். அத்தகைய ஆர்வத்தை உண்டாக்குவதுதான் இலக்கியத்தின் தனிப்பெரும் நோக்கம். ஆயினும், அதன் அற்புத இலட்சணம் யாதெனில் லட்சியம் இது என்ற அறிவு நூல் கூறுகிறதுபோல் அதைக் குறித்து விவரித்துக் கூறாமலே நம்முடைய மனத்தில் ஆசையை எழுப்புவதேயாகும். இப்படி அறிவு மூலமாக எதையும் கூறாமல் நம்மை உயர்த்துவதனாலேயே இலக்கியத்தை வாழ்வின் ஜீவநாடி என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே, எது உணர்ச்சி ஊட்டுமோ அதுவே இலக்கியம். அதனால் உணர்ச்சி ஊட்டப்பெறுவதே இலக்கியத்தால் நாம் அடையும் இன்பம். இதுதான் நாம் இலக்கியத்தால் பெறக்கூடிய பிரதான இன்பமும் நன்மையுமாயினும், இந்த இன்பத்தை இலக்கியகர்த்தா எந்தவிதமான சாதனங்களைக் கையாண்டு நம்முடைய மனத்தில் உண்டாக்கும்படி செய்கின்றார் என்பதை அறிவதும் ஒருவித இலக்கிய இனபமாகும்.

இந்தவிதமான இலக்கிய இன்பத்தையே கவிஞர் அவர்கள் இந்த நூலில் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். இவ்விதம் அறிவு மூலமாக அறியக்கூடிய இலக்கிய இன்பத்தை நமக்குக் கூறுவதற்காக, உலக மகா கவிகளில் ஒருவராகிய கம்பர் பெருமானுடைய இராமாயண காவியத்தையே உபயோகிக்கின்றார்.

“தமிழுக்குக் கதியாவர் இருவர். ‘க’ என்பது கம்பனையும் ‘தி’ என்பது திருவள்ளுவரையும் குறிக்கும்” என்று காலஞ் சென்ற செல்வகேசவராய முதலியார் கூறினார்.

அந்த இருவர் நூல்களிலும் அனவரதமும் திளைத்து வளர்ந்தவர் நம்முடைய நாமக்கல் கவிஞர். அதனாலேயே அவருடைய மலைக்கள்ளனும் பூங்கோதையும் திருக்குறளையும் கம்பராமாணயத்தையும் பெரிதாகப் போற்றுகின்றார்கள். மலைக்கள்ளனுடைய காவலாளிகள் கம்பராமாயணத்திலுள்ள விஷயங்களையே தங்கள் சமிக்கை வாசங்களாகக் கூறும் பொழுது நாம ஆசிரியருடைய திறமையையும் அவருக்குக் கம்பனிடமுள்ள அபார பக்தியையும் கண்டு ஆனந்தமும் ஆச்சரியமும் அடைகின்றோம்.

இப்படிக் கவிஞருக்குக் கம்பனிட்த்தில் அளவு கடந்த ஈடுபாடு உண்டாக்கியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால்,

“இம்பர் நாட்டிற் செல்வமெல்லாம் எய்தி அரசாண் டிருந்தாலும் உம்பர் நாட்டில் கற்பகக்கா ஓங்கு மீழலில் இருந்தாலும் செம்பொன் மேரு அனையபுயத் திறல்சேர் இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதையிற்போற் கற்றோர்க்கு இதயம் களியாதே”

புல்வர் என்றால் வள்ளுவரையும் கவிஞர் என்றால் கம்பரையுமே எண்ணுபவர் நம்முடைய நாமக்கல் கவிஞர். அவர் “கம்பன் என்ற பெரும்பெயரை நினைக்கும்போதெல்லாம் கவிதை என்ற கன்னிகைதான் வருவாள்.” ஆதலால், அவர் கம்பராமாயணத்தில் நாம் பெறக்கூடிய பலவிதமான இன்பங்களை எடுத்து, இந்த நூலில் தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் பரிமாறுகின்றார். அஹிம்சா தர்மத்தைக் குறித்துக் கம்பர் பாடியிருப்பதாகக் கவிஞர் அவர்கள் எடுத்துக்காட்டும் இலக்கிய இன்பம் இதயத்துக்கு அமுதம் போல இனிமையாக இருக்கின்றது.

அவர் பரிமாறும் இன்பங்களை இவை என்று முன் கூட்டி உரைப்பது நல்லதுமில்லை; என்னால் சாத்தியமுமில்லை. அத்துடன் அவர் எடுத்துக்காட்டும் முறையே ஒருவித இலக்கிய இன்பம் தருவதாக இருக்கிறது. அதையெல்லாம் நான் அழித்துவிட விரும்பவில்லை. அவரையே, “மெள்ளக் கீறி மெதுவாகச் சுளை எடுத்துத் தேனும் வார்த்து” உங்களுக்கு விருந்து செய்யுமாறு விட்டுவிடுகின்றேன்.

ஆயினும் எனக்கு அவரிடத்தில் ஒருவிதமாகக் கோபமும் உண்டாகிறது என்பதைக் கூறாமல் இருக்க முடியவில்லை. இதுகாறும் இவர் இந்த இன்பங்களை எல்லாம் தனியாகவே நுகர்ந்து வந்திருக்கிறார் என்பதை நினைக்கும்பொழுது என்னைப் போலவே உங்களுக்கும் கோபம் உண்டாகும். இனியேனும் அவர்தாம் கம்பனுடைய இலக்கியப் பூங்காவனத்திலிருந்து பறித்து வைத்திருக்கும் பச்சிலைகளையும் மலர்களையும் நமக்கு அளிப்பார் என்று நம்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இலக்கிய_இன்பம்&oldid=28243" இருந்து மீள்விக்கப்பட்டது