உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 12

விக்கிமூலம் இலிருந்து
12
ந்தாவது வகுப்பிலும், உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரே குறளைப் படித்தாலும் அதை வேறு வேறு மாதிரியான கோணங்களில் பார்ப்பதுபோல மணிமேகலை இன்றைய வாழ்க்கைக் கல்லூரியில் கிடைத்த அனுபவத்தில் முன்னைய உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையை வேறுவிதமாகப் பார்க்கத் துவங்கினாள். இதனால், தந்தையைத் தவிர மற்ற எல்லாருமே-தான் உட்பட-அவளுக்கு வேறு விதமாகத் தென்பட்டார்கள்.

ரயில் பயணம் நெடுக, பெற்ற குழந்தையையும், அவனை கையோடு கொண்டுவர முடியாமல் போன கொடுமையையும் நினைத்து கலங்கி வந்தாள். ஊருக்குள் வந்தபோது, தன்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது தெரியக்கூடாது என்று ஒடுங்கி வந்தாள். ஆனால் எப்போது அப்பாவை வாதம், அவர் அதனுடன் வாதிட முடியாதபடி முடக்கிவிட்டது என்பதை அறிந்தாளோ, அப்போதே தான் மிராசுதார் அருணாசலம் என்பவரின் மகள் என்பதைத் தவிர மற்றதை மறந்துவிட்டாள். கல்யாணம் ஆனதும், கணவன் இருப்பதும், கண்மகனைப் பிரிந்துவிட்டு வந்திருப்பதும், அவளுக்கு மறந்துவிட்டது.

அவளும், அவளைப் பெற்றவனையும் தவிர அவளுக்கு யாருமே அப்போதைக்கு உயிருடன் இல்லை. ஆனால் இந்தச் சந்திரன்-போன 'ரெண்டு' கண்ணில் ஒரு கண் வந்துவிட்ட திருப்தியில் இருக்க வேண்டியவன்-ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக வளர்ந்த அக்காவை, அப்போதைக்காவது நினைக்க வேண்டிய அந்த உடன்பிறப்பு அல்லது தாய்க்குத் தாயாய் வளர்த்த தந்தையின் அவலத்தை, அப்போதைக்காவது தாங்க முடியாததுபோல் துடிக்க வேண்டிய அந்த செல்ல மகன், பாமாவை நினைத்து விம்முகிறான். அந்த 'புனிதக் காதலில் சிக்குண்டு அவன் பெற்ற தந்தையையும், உற்ற உடன் பிறப்பையும் ஒரேயடியாய் மறந்தவன்போல் நடந்து கொண்டான். அண்ணிக்காரி எதிர்பார்த்ததுபோல் நடந்துகொண்டாள். அண்ணன் அசல் பெருமாள் மாட்டைவிட, ஒருபடி அதிகமாகப் போய்விட்டான்.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அவை நகர நகர, மணிமேகலை தன் பையனின் பக்கமாய் நகர்ந்து கொண்டிருந்தாள். காலையில் எழுந்ததும் அப்பாவின் கண்களை ஈரத் துணியால் துடைத்துவிட்டு நனைந்த வேட்டியை நீக்கி, புதுவேட்டி கட்டிவிட்டு அவரைத் தூக்கி வைத்து தன்னோடு அணைத்துக்கொண்டே, தலையணை உறையை மாற்றி, அவர் வாய் உலராமல் இருப்பதற்காக வெந்நீர்த் துளிகளை ஆறவைத்து, அவரது உதட்டோரத்தில் தடவிவிட்டு பணிவிடை செய்து வந்தாள்.

டேபிள் விசிறியைப் போட்டு கொசுக்களை விரட்டப் பார்த்தாள். ஆனால் அப்பாவுக்கு குளிரும் என்று அவளே அனுமானித்து அதை நிறுத்திவிட்டு கைவிசிறியால் கண் முன்னால் வீசிக்கொண்டிருந்தாள். கைவலிக்கும்போது, அந்தப் பக்கமாக வரும் சந்திரனிடம் கொஞ்சம் வீசுடா என்று சொல்லப் போவாள். ஆனால் அவனோ தன் கண்களை 'அரக்கோண' திசையில் வீசியவன்போல் அக்காவையும் அப்பாவையும் சிறிதுநேரம் அப்படியே பார்த்துவிட்டு, பிறகு தன் துயரம் அதைவிட மோசமானது என்று ஒப்பிட்டுப் பார்த்தவன்போல் விலகிப் போவான். படுக்கையில் கிடக்கும் தந்தை தனக்குச் செய்த நல்லதையெல்லாம் அவன் நினைத்துப் பார்க்கும்போது, அவர் பாமாவை தான் மணக்க சம்மதம் தெரிவித்ததே லிஸ்டில் முதலில் வந்தது. எங்கும். எதிலும் அவனுக்கு பாமாதான். அப்பா? அக்காள்? அதுதான் எங்கும் எதிலும் அந்த பாமா நிற்கிறாளே!

காலையில் கண் விழித்ததில் இருந்து இரவில் கண் மூடும் வரைக்கும் மணிமேகலை பெரும்பாலும் அப்பாவின் அருகிலேயே இருந்தாள். அவரது உடம்பும் லேசாக அசைவதுபோல் தெரிந்தது. பலாச்சுளை அடுக்குப்போல, வாழைப் பூ நெட்டுக்கள்போல, எண்ணத்திற்கு மேல் எண்ணமாகக் குவிந்த அவள் உள்ளத்தில் மகனின் நினைவு ஊடுருவி நின்றது. தகப்பனிடம் தாய்போல் நடந்த அவள், குழந்தையை நினைத்து குழந்தைபோல் கேவினாள். 'அம்மாங்க. அம்மாங்க' என்று அழுதுகொண்டிருப்பான். அவர் அடக்க முடியாமல் அடித்திருப்பார். என் பிள்ளை எப்படித் துடிக்கிறானோ? கண் கலங்கி நிற்கும்போது தன் மோவாயைத் தூக்கி முத்தமிடும் என் செல்ல மகன் எப்படி அழுகிறானோ? எப்படித் தவிக்கிறானோ? நான்கூட அவனை சில சமயம் அடிச்சிருக்கேனே. என்னால எப்படி அடிக்க முடிஞ்சுது! இப்போ எப்படி இப்படி இருக்க முடியுது? மணிமேகலை தோப்புப் பக்கமாக வெறித்துப் பார்த்தாள்.

பசு மாடு தன் கன்றை நக்கிக்கொண்டிருந்தது. கூடு கட்டிய காகம், கூட்டுக்குள் குஞ்சுக்கு எதையோ கொடுத்துக் கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. பத்துப் பன்னிரண்டு குஞ்சுகளுடன் வலம் வந்த கோழி, வீட்டுப் பூனையைப் பார்த்துக் கொக்கரித்தது. தூரத்துப் பாதையில் தெரிந்த பன்றி பின்னால் இடைவெளி போட்டு வந்த தன் குட்டிகள் வந்து சேருவது வரைக்கும் காத்து நின்றது.

மாட்டிலும், கோழியிலும், பன்றியிலும் மோசமாகப் போயிட்டேனே! உயிர்கொல்லி பூனையையே துரத்தும் கோழி மாதிரி, வசந்தி கொண்டுபோன பிள்ளையை வாங்காமல் வந்துட்டனே! அதோ அந்தப் பன்றிகூட, தற்செயலாகப் போகும் அந்த நாய் தன் குட்டிகளைத் தாக்க வருகிறது என்பதுபோல் தீப்பிழம்பு போன்ற தன் 'மூஞ்சியை' தூக்கிக்கொண்டு, முன்னாலும் பின்னாலும் நகருது. பெண்புலி தன் குட்டிகளைத் தின்ன வரும் 'கணவன் புலியை' எதிர்த்து கடைசிவரை போராடுமாமே. நான் புலியாய் இல்லாட்டாலும் பரவாயில்ல. ஒரு பன்றியாக்கூட இல்லாம போயிட்டேனே! இப்போ இந்த நிமிடத்தில் என் பிள்ளை என்ன செய்கிறானோ? யார் அடிக்கிறார்களோ ? 'என் செல்வமே! என் ராஜா ! வந்துடுறேண்டா. சீக்கிரமா வந்துடுறேண்டா!

அவளுக்கு அப்போது ஆறுதல் தேவைப்பட்டது. யாரிடமாவது சொல்லியாக வேண்டும். எவரிடமாவது அழ வேண்டும். தாங்க முடியல. தாங்க முடியாது. தாங்கவே முடியாது!

அந்தப் பக்கமாக வந்த அண்ணிக்காரிகட அவளுக்கு தன் அம்மாபோல் தெரிந்தாள். அவள் கையைப் பிடித்துக் கொண்டு "என் பையன் கண்முன்னாலயே நிக்கான் அண்ணி. இந்த வீட்ல பிறந்தவன் எந்த வீட்லயோ நிக்கான் அண்ணி. நான் இன்னும் சாகாம இருக்கேனே. இருக்கேனே...” என்று அவள் தோளில் சாய்ந்து துவண்டாள்.

அண்ணிக்காரியும், 'ஆறுதல்' சொன்னாள்.

"இந்தப் புத்தி, புறப்படுறதுக்கு முன்னால் வந்திருக்கணும். 'சித்திரப்பன் தெருவுல' என்கிறது சரியாப் போச்சி ஒன் மவன் எந்த சித்திரையில பிறந்தானோ, அதுக்கு அடுத்த சித்திரையில ஒன் அப்பாவுக்கு மாரடப்பு வந்தது. ஒனக்கு குஷ்டம் வந்தது. அப்பன துரத்தாம, அந்த அப்பன வச்சி ஒன்னையும் துரத்திட்டான். இப்போ இந்தப் பாவி மனுஷன்கூட லேசா இருமுறார். இன்னும் என்னெல்லாம் நடக்கப்போவுதோ? இருமுனாக்கூட பரவாயில்லே; கையில காலுல படை படையா வருது.” மரக்கிளை என்று நம்பி மலைப்பாம்பைத் தொட்டவள்போல, மணிமேகலை திடுக்கிட்டாள். அவளிடம் இருந்து விலகி நின்று ஒங்களுக்கு இந்தப்பிள்ள பிறந்த பிறகுதான் எங்கப்பா முடங்கிப் போயிட்டாரு என்று கூட வாதாடப் போனாள். 'என்னை யாரும் துரத்தல, நானாத் தான் வந்தேன்' என்று சொல்லப் போனாள். அவளையே கோபமாகப் பார்க்கப் போனாள். ஒரு நிமிடந்தான்.

பிறகு, கோபம் இருந்த இடத்தில் இயலாமை குடியேற வார்த்தைகளைச் சுமந்து நின்ற வாயில் கண்ணீர் சொட்டுக்கள் கரிக்க, தலையை குனிந்துகொண்டே அவள் தோப்புப் பக்கமாக நகர்ந்தாள். யாரை நொந்து என்ன பிரயோஜனம்? எல்லாம் தலைவிதி! காலத்தின் கோலம்!

வந்து ஒரு மாதமாகிவிட்டது. இதுவரை கணவனுக்கு மூன்று லட்டர் எழுதிவிட்டாள். முன்பெல்லாம் அவள் கடிதம் போய்ச் சேருமுன்னாலே 'ஏன் லட்டர் போடல' என்று அவன் எழுதுவான். அப்போதுதான் கடிதத்தை தபால் பெட்டியில் போட்டுவிட்டு வரும் அவள், அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு, 'உங்க லட்டர் இப்போதான் வந்துது என்று இன்னொரு லட்டரை அப்போதே எழுதுவாள்!. அதிலும் முழுக்க முழுக்க எழுதுவாள்! 'சீக்கிரமா வாரேன். சீக்கிரமா வாரேன்... கோபம் வேண்டாம்... கோபம் வேண்டாம்!' மனைவிக்கு பேக்டரியில் கடிதம் போடவில்லை என்று 'கோபித்து' கடிதம் எழுதிப் போட்ட அவனும், வீட்டில் காலை பத்து மணிக்கே வந்திருக்கும் கடிதத்தைப் படித்துவிட்டு, 'உன் லட்டர் வந்துது. இதுக்கு முன்னால எழுதிய கடிதத்தைத் தப்பா எடுத்துக்காதே. இருந்தாலும் இவ்வளவு நாளாகவா அங்கே இருக்கது? உன் வீடு அங்கே இல்லை; இங்கே தான்' என்று எழுத, உடனே அவளும் 'உன் வீடு இங்கேதான்னு நீங்கள் எழுதியதை நான் இப்போ இந்த மாந்தோப்பில் நின்று படித்தேன். அப்படின்னா என் வீடு இங்கேதானா? இந்த மாந்தோப்புப் பழைய வீடுதானா? அங்கே இல்லை என்றால் அந்த அரக்கோணம் வீடும், அந்த வீட்டின் இரண்டாவது பிள்ளையாண்டானும் எனக்கில்லையா? இவ்வளவு கல்நெஞ்சம் ஒங்களுக்கு ஆகாது. அதனால இன்னும் ஒரு வாரம் இருக்கப் போறேன்' என்று சுடச்சுட எழுதுபவள் போல் அவனைக் குளிப்பாட்டி எழுதுவாள்.

இப்படி யார் பதில் போட்டது, எந்தக் கடிதத்திற்கு எந்தக் கடிதம் பதில் என்று தெரியாதபடி இருவரும் எழுதிக் குவிப்பார்கள். இப்போது அவள்கூட மூன்று லட்டர்கள்தான் எழுதினாள். அவனோ இதுவரைக்கும் பதில் போடவில்லை. பாமாவுக்கும் லட்டர் போட்டாள். அவளும் அவரின் தங்கைதானே. இந்த இந்திராதான் எழுதியிருக்கலாமே? ஒருவேளை அவளும் மறந்துட்டாளோ? இருக்காது! சிலர், பிறக்கும்போதே அன்பைச் சுமந்துகொண்டே பிறக்கிறவர்கள். அவர்கள் இறப்பது வரைக்கும் அந்த அன்பும் இறக்காது. ஜாதி மதம் கடந்த அன்பு அது. இந்த இந்திரா அவர்களில் ஒருத்தி. சரி அவளாவது எழுதலாமில்லையா? பொறுத்து பொறுத்துப் பார்த்து கடைசியில் கம்பவுண்டர் மணிக்குக் கடிதம் போட்டாள். அவனிடமிருந்து உடனடியாக வந்தது. இப்போது தான் அந்த வீட்டுக்குப் போவதில்லை என்றும் குழந்தை அழுதுகொண்டே இருந்தாலும் சுகமாக இருக்கிறது என்றும் எழுதியிருந்தான். இன்னும் தன்னைப் பற்றி விரிவாக எழுதியிருந்தான். அவள் நினைவாகவே இருக்கானாம்.

அவனுக்கு இப்போது ஒரு லட்டர் எழுதி மகனைப் பற்றி விசாரிக்கலாமா? வேண்டாம். பனை மரத்தடியில் இருந்து பால்கூட சாப்பிடக்கூடாது. அதுவும் ரயிலில் அந்தக் கிழவி அப்படிச் சொன்னபிறகு, முதல் லட்டர் போட்டதே தப்பு! மணிமேகலை, மாந்தோப்பின் முனைக்கு வந்தாள். அவர் எப்படி இருக்காரோ? கஷ்டப்பட மாட்டார். வசந்திதான் இருக்காளே. இப்போ எந்த சட்டையை அவர் போட வேண்டும் என்று அவருக்கு ஆணையிடும் அளவுக்கு முன்னேறியிருப்பாள். கெட்டிக்காரி. சீச்சி! நான் ஒரு பெண்ணா? என் புத்தி ஏன் இப்படிக் கெட்டுப் போகணும்? அத்தை மகனிடம் மாமா மகள், தங்கை மாதிரி பழகக்கூடாதா?

மாந்தோப்பில் குருவிகள் ஒலமிட்டன. ஒரு கரிச்சான் குஞ்சு காகத்தை துரத்திக்கொண்டு வந்தது. ஊரெல்லாம் குஷ்டம் குஷ்டமுன்னு ஒரே பேச்சாப் போச்சு. ராம பத்திரன் புண்ணியவான்.... போகட்டும்.... என் வாயால அவரை சபிக்க வேண்டாம்.

கடந்த பதினைந்து நாட்களாக மருந்து சாப்பிடாமல் விட்டது அவளுக்கு நினைவுக்கு வந்தது. மாத்திரைகள் தீர்ந்து போய்விட்டன. மறுபடி வாங்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஞாபகம் இல்லை. ஞாபகப் படுத்தவும் ஆட்கள் இல்லை. ஊர் ஜனங்கள் எல்லாம் அவளை அன்போடுதான் பார்க்கிறார்கள். அவர்களுக்கு மாத்திரை விவரம் தெரியாது. விவரம் தெரிந்த சகோதரர்களோ, அதைப் பற்றி விசாரிக்கவில்லை. எப்படியோ போகட்டும். உடம்பு எக்கேடும் கெடட்டும் உடம்பு சுகமாயிட்டுன்னு தெரிந்த பிறகும் நம்பாதவன் போல் நடக்கும் கணவனுக்காக இருந்த இந்த உடம்பு இனிமேல் எப்படியோ போகட்டும். சீக்கிரமா போகட்டும்.

எவையெவை எல்லாமோ நெஞ்சில் புரள, அவள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தபோது, 'கூத்து' கோவிந்தன் அங்கே வந்தான். அடிக்கடி வந்து பார்க்கிறவன். அவளின் மனக் குமைச்சல் தெரியாமல் பேசினான். ஹிப்பி மாதிரி தொங்கிய முடியை தட்டி விட்டுக்கொண்டே பேசினான்.

"நாளைக்கி நம்ம பத்ரகாளியம்மன் முன்னால ஹரிச்சந்திரனோட மயான காண்டத்த போடுறேன். அம்மா கண்டிப்பா வரணும். இது மத்த கூத்தவிட புது சான கூத்து. வெட்டியான் வேலை பாக்கும் ஹரிச்சந்திரன், அங்கே தனியாக் கிடந்துவிட நோய் சொறிந்து செத்துப் போன மகனைத் துக்கிக்கொண்டு காசில்லாமல் அவனோட மன்றாடச்சே, அவன் 'பெண்ணே ! ஒன் தாலியைத் தரக்கூடாதான்’னு கேட்பான். உடனே சந்திரமதி கணவனுக்கு மட்டும் தெரிய வேண்டிய இந்தத் தாலி இந்தப் புலையனுக்கும் தெரிஞ்சுட்டே விதியே! விதியே! என்று ஒரு பாட்டுப் பாடுவாள். இப்படித்தான் எல்லாரும் கூத்துப் பண்ணுதாங்க. ஆனால், நான் புதுசாயும் மனோதத்துவப்படியும் பண்ணப்போறேன்.

'புலையன் பார்த்துட்டானேன்னு' ஒரு பத்தினிக்கு தன்மீதே சந்தேகம் வரப்படாது. தன் தாலிமீதே சந்தேகம் வரப்படாது. அதோட புலையன்னு கேவலமா அவள் நினைச்சால் என்னப் பொறுத்த அளவுல அவளுக்குப் பட்ட கஷ்டம் பத்தாது. அவ்வளவு கஷ்டப்பட்ட பிறகு, அவளுக்கு ஜாதி வித்யாசம் தெரிஞ்சிருக்காது. ஏன்னா, ஜாதி என்கிறதே தப்பு. அது இன்னும் இருக்குது மகா தப்பு."

"அதனால என்னோட ஹரிச்சந்திரன் 'கையில் ஒன்றுமில்லை என்று பொய் புகல்கிறாய் பெண்ணே. பொய் புகல்கிறாய். கணவனைப் பற்றிக் கேட்டபோது கண்ணிர் விட்ட காதகியே! ஒன் கழுத்தில் தாலி இருக்கிறதே, எப்படி இருக்கிறது? இதைப் போட்டவன் யார்? கை விட்டானா ? ஒன் மெய்யைத் தொட்ட அந்த பொய்யன் போய்விட்டானா ? புகல்வாய் பெண்ணே, புகல்வாய் ! என்கிறான். அவன் தாலியை தாவென்று கேட்கும் கொடியவன் இல்லை. தாலி இருக்கே, அதைக் கட்டியவனைக் காணலியே' என்று தன் சந்தேகத்தைத்தான் கேட்கிறான். உடனே சந்திரமதி சொல்பவன் தன் கணவன் என்பதைப் புரிந்துகொண்டு, அப்படியானால், சாமீ தாங்கள். என்கிறாள். வார்த்தையை முடிக்க முடி யாமல் திண்டாடுகிறாள். எப்படி நம்ம கற்பனை? இது என்னோட கற்பனை இல்லம்மா. தஞ்சை கோவிந்தராசுன்னு ஒரு கலைஞர், மெட்ராஸ்ல வன்னிய தேனாம் பேட்டையில இருக்கார். இங்க நாடகம் போட வந்தபோது இதைச் சொன்னார். இதனால என் பங்கு இல்லன்னு நினைக்காதிய ஊர் விவகாரத்தயும் ஜாட மாடயா இடையில விட்டிருக்கேன். ஒங்க அப்பாவுக்கு தினமும் ரெண்டு ரூபாய் மாத்திர கொடுத்துக்கிட்டு வரும்போது அவரு லேசா உட்காருவாரு ஒங்க அண்ணன் காசுக்கு ஆசப்பட்டு மாத்திர கொடுக்கறதை நிறுத்திட்டாரு. பாழாப்போற பாவி, இந்த மனுஷன் இல்லாம இவரு எப்படி வந்தாரு? இருக்க வைக்கிற மாத்திரைய வாங்கப் படாதா? இவ்வளவு சொத்துல ஒரு ரெண்டு ரூபா பெரிசா ? அதனாலதான் சந்திரமதி, பிணமாப்போன மகனை வைத்து தவிக்கும்போது 'மகனே! மகனே! மரணப் படுக்கையில் பிதா கிடக்கையில் நீ அன்னவர் வேதனை யைக் குணப்படுத்த அயச்செந்துரம் கொடுக்க மாட்டாய். மருந்து கொடுக்காமலே உன்னை பிறப்பித்த வனை இறக்க விடுவாய் என்று நினைத்து இந்த நல்ல பாம்பு மருந்து கிடைக்காத இடத்தில் உன்னைக் கொத்தி கொன்றதோ? என்கிறாள். அப்புறம் தன் தந்தையை நினைத்து,

அய்யாவே அய்யாவே அழகான அய்யாவே-ஒமக்கு
மருந்துகொடுக்காமல் மாளடித்த பாவியில்ல....
பொற்காசு போமென்று உம்மை போகவைத்த பாவியல்ல
முடங்கிக் கிடந்த ஓம்மை மூலையிலே சாத்தவில்லை

அடங்கிக்கிடந்த ஓம்மை அடுக்களையில் வைக்கவில்லை
விடமுண்(ட) நீலகண்டன் விடையேறி ஈஸ்வரனாம்
அசந்து படுத்த அந்த அருணாசலம் போல-நீர்
அசந்து படுக்கையிலே சுமந்து நின்ற மகளல்லவா”

என்று பாடுகிறாள். எப்படி பாட்டு? இனிமேயாவது ஒங்க அண்ணனுக்கு உரைக்கான்னு பார்க்கலாம்? ஏம்மா பேசமாட்டக்கிய ? எதுவும் தப்பாச் சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க, ஒங்களோட இந்த நிலைமையில இதைப் பேசியிருக்கப் படாதுதான். ஆனால் இந்த கலைஞன் இருக்கானே அவனுக்கு சோறு வேண்டாம். தண்ணி வேண்டாம். அந்தரங்க சுத்தியோட சொல்லுததை கேக்கதுக்கு ஒரு ஆளு கிடச்சால் போதும். படுவாப்பய மவன் விட மாட்டான்.” மணிமேகலை 'கூத்து’ கோவிந்தனை ஏறிட்டுப் பார்த்தாள். களங்கமில்லாத முகம். அதைவிட களங்கமில்லாத நெஞ்சம். சிறிது தலையை ஆட்டி சிந்தித்துவிட்டுக் கேட்டாள்.

"அந்த மாத்திர எங்க கிடைக்கும்?"

தூத்துக்குடில கிடைக்கும். மாத்திர பேரு ஒங்க தம்பிக்கும் தெரியும். நம்ம ரத்துனத்தோட அய்யாவுக்கும் இப்பிடித்தான் வந்துது. வேளா வேளைக்கி மருந்து கொடுத்து, இப்போ அவரு சடுகுடு ஆடுவேன்னு சொல்றாரு நான் வரட்டுமா? அப்பாவுக்கு எப்படியாவது அந்த மாத்திரைய வாங்கி எப்படியாவது கொடுங்கம்மா. நாளைக்கி என்னோட சந்திரமதி கூத்த பாக்க வாரதுக்கு மறந்துடாதிய நிச்சயமா அழுதுடுவிய.”

"நான் கூத்த பாத்துட்டுதான் அழணுமா ?”

கூத்து கோவிந்தன் அவளையே பார்த்தான். அவள், அவனுக்குப் புதிய சந்திரமதி போலவும், பழைய சீதை போலவும் தெரிந்தது. அவள் கஷ்டத்தைக் கேட்காமல், தன் கலியுக சிருஷ்டி வினோதத்தைப் பேசப் போனதற்கு வெட்கப்பட்டவன்போல் அதேசமயம் பிராயச்சித்தம் செய்யத் தெரியாதவன் போல் கால்களை இடறிக் கொண்டே போனான்.

மணிமேகலைக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஊருக்கெல்லாம் தானம் கொடுத்து, மிராசுதார்கள் என்றாலே ஒருமாதிரி மனிதர்கள் என்று ஆகிப்போன இந்தக் காலத்தில் இப்போதும் ஊர்மக்கள் புண்ணியவான் என்று சொல்லும்படி வாழ்ந்து இப்போ வதங்கிக் கிடக்கும் தந்தைக்கு, சகோதரர்கள் கேவலம் நிலையில்லாத காசுக்கு ஆசைப்பட்டு மாத்திரைகளை நிறுத்தியதால், மாகாளியாய் ஆனவள்போல் மாந்தோப்புச் சுவரில் சாய்ந்துகொண்டு எதையோ மெளனமாக உற்றுநோக்கிக் கொண்டிருந்த சந்திரனை நோக்கி நடந்தாள்.

“ஏண்டா! (இப்போதான் 'டா' போட்டாள்) அண்ணனுக்குத்தான் அறிவில்ல. ஒனக்கு எங்கடா போச்சு? அப்பாவுக்கு மாத்திரை வாங்க இல்லாத பணம் எதுக்காவடா இருக்கணும்?"

சந்திரன் பதில் பேசவில்லை. அவளிடம் அருணாசலக் கிழவர் பெயருக்கு வந்திருந்த ஒரு அழைப்பிதழைக் கொடுத்தான். படித்துப் பார்த்த மணிமேகலை விழித்தாள். பாமாவின் கல்யாண அழைப்பிதழ். இந்நேரம் கல்யாணம் நடந்திருக்கும். தமிழக அரசில், நெடுஞ்சாலை இலாகாவில் மாப்பிள்ளை எஞ்ஜினியராம்.

'எனக்கு ஒரு லட்டர் எழுதப் படாதா? எனக்கு உரிமை யில்லாமப் போயிட்டுதா? நான் இல்லாம காதுகுத்துக.ட நடக்காத வீட்டில், இப்போ கல்யாணமா..?

தம்பியை அவள் பரிதாபமாகப் பார்த்தாள். அதோடு, இனிமேல் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதால் இவனும் தனக்குக் கல்யாணம் ஆவதற்குரிய வழியைப் பார்ப்பான் என்று எண்ணி, சற்று திருப்திப்பட்டுக் கொண்டாள். பிறகு தம்பியின் கைகளை எடுத்து, தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டே "அவள் கிடைக்காமல் போனதும், ஒரு வகையில் நல்லதுக்குத்தாண்டா. சினிமாக்காரின்னு அண்ணி சொன்னதுல பாதியாவது சரியா இருக்கும். நான்கூட கேட்டேன். பெரியவங்க எதைக் காட்டினாலும் கட்டுவேன்னு என்கிட்டயே சொன்னாள். நல்ல வேளையா, ஆரம்பத்துலேயே அவள் சுயரூபம் தெரிஞ்சுபோனது நல்லதாப் போச்சு. ஒனக்கு பொண்ணா கிடையாது? விடுடா! எனக்கு வந்த நோயி, ஒனக்கும் வந்துடுமோன்னு பயந்துட்டாள். இவ்வளவுக்கும் படிச்சவள். விடுடா !”

சந்திரன் விட்டான். அக்காளின் கைகளை விட்டான். பாமாவின் 'சுய ரூபத்தை' பார்க்க முடியாமல் போனதுக்கு அக்காதான் காரணம் என்பதுபோல், அவளையே பார்த்தான். நெடிய மெளனம்; கொடிய பார்வை.

மணிமேகலை தன்னை சமாளித்துக்கொண்டே பேசினாள்:

"இப்போ அப்பா இருக்கிற நிலையைப் பாரு. ஏதோ ஒரு மாத்திரை இருக்காமே, ரெண்டு ரூபாயாம். அதை எதுக்குடா நிறுத்தினிங்க? நம்மை பெத்து வளர்த்தவருடா அவரு. இப்பவே போய் ஒரு மாதத்துக்கும் சேர்த்து மாத்திரை வாங்கிட்டு வாடா போடா! நம்ம அப்பாவை விட யாருடா உசத்தி? இந்த பாமா போனால், இன்னொரு பிரேமா கிடைப்பாடா, போய் மாத்திரை வாங்கிட்டு வாடா!”

சந்திரனால் பொறுக்க முடியவில்லை. இவள் அமரக் காதலின் மகத்துவம் தெரியாத மண்ணாங்கட்டி இந்தக் காதல் அமரத்துவம் பெற்றதுக்கு இவளே காரணம்; இவளுக்கு-இந்த நோயாளிக்கு-தான் தம்பியாகப் பிறந்ததே காரணம். இனிமேலும், அவளுக்குத் தம்பியாக இருக்கப் போவதில்லை என்பதுபோல் கத்தினான்.

"போக்கா ஒன் வேலய பார்த்துட்டு! எந்தச் சமயத்துல என்ன பேசணுமுன்னு தெரியல. எதைச் சொன்னாலும், அதுக்குன்னு ஒரு வேளா வேளை வேண்டாம் ஒனக்கு சாகப்போறவரு பெரிசாயிட்டாரு. வாழப் போறவன் சிறிசாயிட்டான். பேசாமல் போ! இல்லன்னா எதையாவது சொல்லிடப் போறேன்."

மணிமேகலை சிறிசாயிட்ட தம்பியையே பார்த்தாள். இவன் தம்பியல்ல. சொந்த அப்பனின் நோயைப் பற்றியோ, அவர் இருந்தும் இறப்பவராய் இருப்பதைப் பற்றியோ கவலைப்படாதவன்; அப்பனுக்குப் பிள்ளையாகாதவன், அக்காளுக்கு எப்படித் தம்பியாவான்?

மணிமேகலை தனது முன்னாள் தம்பியைப் பார்க்காமலே, வீட்டருகே வந்தாள். அண்ணன்காரன், மனைவிடம் கை, கால்களை காட்டிக்கொண்டிருந்தவன், தங்கையைப் பார்த்துவிட்டு, வேட்டியை இழுத்துப் போட்டான். மணிமேகலை எதையும் கவனிக்கவில்லை. அப்பாவுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும். அவர் எழுந்து உட்காருவதைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான் குறிக்கோள்.

குறிக்கோளில் குறி வைத்தவள்போல், அவள் அப்பாவைப் பார்த்துக்கொண்டே அண்ணனிடம் பேசினாள்.

"அப்பாவுக்கு முன்ன கொடுத்த மாத்திரையை எதுக்காவ நிறுத்துன அண்ணே? ஊர்ல நாலுபேரு நாலு விதமா பேசும்படியாவா நடந்துக்கது? அப்பா, நீ பிறந்த போது எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பாரு. நினைச்சிப் பார்த்தியா?” அண்ணன் ராமலிங்கம் 'நினைச்சிப்' பார்க்காதவன் போல் பேசினான்.

"எந்தப் பயலுவ நாலுவிதமா பேசுனது? செறுக்கி மவனுவள காலுல கிடக்கத கழட்டிக்கிட்டு அடிக்கேன் பாரு. என் வீட்ல ஆயிரம் நடக்கும். இதப்பத்திப் பேச எந்தப் பயலுக்கு உரிமை இருக்கு? யாரு சொன்னது? சொல்லு-சொல்லுமா !”

அண்ணி கனகம் நூறடி தாண்டிய கணவனை மீறி 'குதித்தாள்.'

"ஒனக்கு பொறுக்க முடியலன்னா, நீ வாங்கிக் கொடேன்? நாலுபேரு சொன்னாவளோ என்னமோ நீ நாலு பேருகிட்ட சொல்லியிருப்ப, இவ்வளவு நாளா புருஷன் ஞாபகமும், பிள்ள ஞாபகமும் இல்லாதவளுக்கு, அப்பா மேல பாசம் பொத்துகிட்டு வருதாக்கும்? இந்தப் பாவி மனுஷங்கிட்ட படிச்சிப் படிச்சி சொன்னேன், அவரு கேக்கல. நீ வந்த ஒரு வாரத்துல காலு கை ஊறுதுன்னார். பெருவியாதியா இருக்குமுன்னேன். பெரிசா கத்துனாரு இப்போ நீ வந்த புண்ணியத்துல படை படையாய் வந்திருக்கு. நாங்க. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவியாய் தவிக்கோம். நீ என்னடான்னா, இன்னிக்கோ நாளைக்கோ சாகப்போற கிழவனுக்கு அழுவுற எல்லாம் இந்த பாவி மனுஷனுக்கு வாக்கப் பட்டதால வந்த வினை. இன்னிக்கி இவருக்கு வந்தது, நாளைக்கி எனக்கும் வரும், வரத்தான் போவுது!”

கண்ட கண்ட இடங்களில் காசு கொடுத்து, பட்டைச் சாராயத்தோடு பகட்டுக்காரிகளையும், பகட்டில்லாதவர் களையும் கட்டிப்பிடித்து மேகப்படைகளை வாங்கிக் கொண்ட ராமலிங்கமும் மனைவி சொல்வது சரிதான் என்பதுபோல், அவள் தலையில் கிடந்த ஒரு தென்னங்குச்சியை எடுத்துக் கீழே போட்டான். மணிமேகலை அங்கே நிற்கவில்லை. மெளனியாக, கண்ணீர் விடாமலே அழுகிறவள் போல் வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட்டருகே வந்தாள். எதிரே தங்கம்மா பாட்டி வந்துகொண்டிருந்தாள். இவள் கேட்காமலே அவள் பேசினாள்.

"அதுல போயி உட்காரும்மா. நான் இந்த சாம்பல வச்சி மந்திரம் சொல்லி தடவிப் போடுறேன். எந்த நோயி இருந்தாலும் பஞ்சாப் பறந்து போயிடும். நான் சொல்ற மந்திரம் குஷ்டத்தக்கூட குத்தி விரட்டிடும். வாடியம்மா என் ராசாத்தி வந்து உட்காரும்மா. இங்கயே உட்காரலாம். நேத்து சாம்பலோட வந்தேன். ராமலிங்கம் அடிக்காத குறையா துரத்திட்டான். உக்காரு ராசாத்தி. ஒனக்கா இந்த கதி?”

மணிமேகலை, அந்தக் கிழவியையே பார்த்தாள். மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை. மனிதர்கள் இன்னும் முற்றிலும் மடியவில்லை.

மந்திரம்-மாயையில் நம்பிக்கை இல்லாத அவள், இப்போது அந்தக் கிழவியைத் திருப்திப்படுத்துவதற்காக, ஒரமாகக் கிடந்த ஒரு கல்லில் உட்கார்ந்தாள். தங்கம்மாக் கிழவி அவள் கழுத்துப் பக்கத்தில் சாம்பலைத் தடவிய போது மணிமேகலை அந்தப் பாட்டியின் கழுத்தை குழந்தை மாதிரி கட்டிக்கொண்டு விம்மினாள்.