உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 15

விக்கிமூலம் இலிருந்து
15
வள் அந்த லாட்ஜை விட்டு வெளியேறிய விதமே தனிவிதம். அவள் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ‘கம்பவுண்டர்’ மணி உடை மாற்றுவதற்காக உள்ளே வந்து கட்டிலுக்குக் கீழே போட்டிருந்த தன் "பேக்கை" எடுக்கப் போனபோது மணிமேகலையும் தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியேறி படிக்கட்டுக்கள் வழியாக கீழிறிங்கி தெருவுக்கு வந்து திரும்பிப் பாராமலே நடந்தாள். சிறிது நேரத்தில் ஒருவர் ஓடிவரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள்.

கம்பவுண்டர் மணி ஓடிவந்தான். லுங்கி பனியனுடன் ஓடிவந்தான்.

“என்ன இப்படி ஒரே விசித்திரமா இருக்கு? இப்படியா போறது?”

“இதில் என்ன விசித்திரம்? அடையாறில் இருந்த விடுதி எட்வர்ட்ஸ் எலியட்ஸ் ரோடுக்கு வரும்போது, நான் போறதில் என்ன விசித்திரம் ?”

“நீங்க என்ன தப்பா நினைச்சிட்டிங்க.”

"தப்பா எடுக்கல. நாம அரக்கோணத்துல இருந்து புறப்படுறதுக்கு முன்னால ‘ஒங்கள தப்பா நினைச்சா. நெஞ்சுல புற்று வரும். வாய் அழுகிடுமுன்னு சொன்னேன். ஞாபகம் இருக்கா ? இப்போ... அப்படி நினைக்காததாலேயே அந்த ரெண்டும் வந்துடுமோன்னு நினைக்கேன். பரவாயில்ல. இருக்கிற ஒரு நோயோட, இது இரண்டு, மொத்தம் மூணு."

"நான் ஏதோ கற்பழிச்சிட்டது மாதிரி..."

"ஒரு பெண்ணுக்கு நன்மை செய்யுறதாய் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திட்டு, அப்புறம் அவளை அடுத்துக் கெடுப்பதைவிட கற்பழிப்பு எவ்வளவோ மேல்! ஒண்ண மட்டும் மறந்திடாதிங்க மணி என்கூடப் பிறக்காத சகோதரர்களாய் மூணுபேரை நினைச்சேன். அதுல ஒருவர் இப்போ செத்துட்டார். நான் வாரேன் மணி. வேண்டிய கணவனுக்கு விரும்பாதவளா.போகும்போது தனிவழியில் எப்போ நடக்கத் துணிஞ்சேனோ அப்பவே, எந்த ஆணையும் துரசாய் நினைக்க, தேவையானால் துடைப்பத்த வைத்து அடிக்கவும் துணிந்துதான் வந்தேன். மணி தயவுசெய்து ஒங்க சொந்த தங்கையையும் இப்படி..”

மேற்கொண்டு தொடர்ந்து முடிக்கத் தெரிந்த வார்த்தைகளை முடிக்காமலே, குமுறிக்கொண்டே அவள் நடந்தாள். மணி யோசித்தான். இந்த இருட்டில் இந்தத் தனிவழியில் எப்படிப் போவாள்? போகலாமா? வேண்டாம். அயோக்கியன் செய்கிற அப்பட்டமான நன்மைகூட தீமையில் விட்டாலும் விட்டுடலாம்.

எங்கே போவது, எப்படிப் போவது என்பது தெரியாமலே தன் பாட்டுக்கு கால்போன போக்கில் நடந்தாள். அவளைப் பார்த்து முறைத்த கண்கள்கூட, அந்தத் தோரணையில் தோல்வி கண்டு துவண்டன. ‘உயர்தரமான’ சிகரெட்டுகளை புகைத்துக்கொண்டே அவளுடன் சைடில் நடந்த பூட்ஸ் கால்கள், பெல்பாட் டம்கள், கிருதாக்கள் முதலிய எல்லாம் மேற்கொண்டு நடக்காமல், நடந்த வழியை, கடந்தால் கடைக்காரர்களும், மற்றவர்களும் தப்பாக நினைப்பார்களே என்று தயங்கி, நின்ற இடத்திலே நின்றபோது...

மணிமேகலை அங்கே வந்த பஸ்ஸில் அதன் போர்டை பார்க்காமலே ஏறினாள். அது அவளுக்குத் தெரிந்த பாரிமுனையில் விட்டது. மணி ஒன்பது, என்ன செய்யலாம்? எனக்கா இந்த கதி? எனக்கா? அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

பஸ் கவுண்டர் அருகே குப்புறப் படுத்துத் துங்கும் சிறுவர்கள். மரக்கட்டையை தலையணையாய் வைத்து, இன்னொரு மரக்கட்டைபோல் தூங்கும் ஒரு வயதுப் பெண். கரியடுப்பில் ஒரு பானை பொங்க, பொங்கியதை இறக்கி ஒலைப்பாயில் உட்கார்ந்திருக்கும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உணவு கொடுக்கப் போகும் பூக்காரி. ஒரு சின்னத் தட்டுப் பலகையை வீடாகக் கொண்ட ஒரு நடுத்தர வயது மாது. பஸ் ஸ்டாப்புகளில் பயணிகள் எப்போது போவார்கள் தாங்கள் ஒவ்வொரு துணுக் கருகிலும் பிளாட்பாரத்திலும் படுத்துத் துரங்கலாம் என்று நினைத்து நிற்கும் தெருவோரப் பெண்கள். அப்புறப் படுத்துவதற்குக்கூட அருகதை இல்லாதவர்களாய்ப் போன இவர்கள் முன்னால் நான் சாதாரணம். வெறுஞ் சாதாரணம் இந்த மனித ஜீவன்கள் அருகே முடங்கலாமா? எப்படி முடியும்? பழக்க தோஷமுன்னு ஒண்ணு இருக்கே!

மணிமேகலை உயர்நீதிமன்ற காம்பவுண்ட் சுவரை விழித்துப் பார்த்தாள். அது நீதி வழங்குவதுபோல ஒரு போஸ்டரைக் காட்டியது. பேரின்பப் பெருவிழா... கடற் கரையில்... சீரணி அரங்கத்தில் இன்று இரவு முழுக்கப் பிரார்த்தனையாம். பிரார்த்தனை செய்கிறோமோ இல்லையோ, பிரார்த்திப்பவர்களை மானசீகக் காவலர்களாக நினைத்து இன்றைய இரவை ஒட்டிவிடலாம்.

அந்த இரவில் ஒட்டத்திற்கும் நடைக்கும் உருவமாகி, சீரணி அரங்கிற்கருகே அவள் வந்தபோது, அரசியல் வாதிகள் நான்கு பேரையும் வைத்துக்கொண்டு சொல்வார்களே ‘அலைகள் அங்கே தலைகள் இங்கே’ என்று, அது போல் நிஜமாகவே மனிதத் தலைகள். தாழ்ந்த தலைகள். தலை கவிழ்ந்த தலைகள். மேடையில் வண்ண விளக்குகள் ஜொலித்தன. சிலுவைக்குறி வண்ண வண்ண விளக்குகளால் எண்ணத்தை தூய்மையாக்கும் எழுச்சிக் குறியாகச் சுடர் விட்டது. கூட்டத்தோடு கூட்டமாக, மணிமேகலை உட்கார்ந்தாள். கிறிஸ்தவர்களின் பேரின்ப விழா நடந்து கொண்டிருந்தது.

மேடையில் ஒருவர் தாள நயங்களுடன் பாடிக் கொண்டிருந்தார்.

இல்லங்கள் யாவிலும்
உள்ளங்கள் உண்டல்லோ
உள்ளங்கள் உண்டல்லோ...
காடு மலைகளிலும்-பல
வீடுகள் சிதறி உண்டே
தோட்டத்தில் உண்டு, தீவினில் உண்டு.
செல்வதுதான் யாரோ
சொல்வதுதான் யாரோ -(இல்லங்கள்)


பிள்ளையைக் கொடுப்பாயா-இல்லை
உன்னையே தருவாயா
உன்னையே தருவாயா...
உன் ஜெபம் தாங்குமோ... உன் பொருள் வருமோ
உன்னதர் கேட்கிறாரே. உன்னிடம்
உன்னதர் கேட்கிறாரே (இல்லங்கள்)

மணிமேகலை விம்மினாள். இல்லம் தோறும் இதயங்கள் உண்டல்லவா ! இது ஏன் மனிதர்களுக்குத் தெரிய வில்லை? இது ஏன் உறவைச் சுமப்பவர்களுக்குப் புரிய வில்லை? இது ஏன் மிஸ்டர் ஜெயராஜுக்கு தெரியவில்லை?

உள்ளங்கள் உண்டல்லோ
உள்ளங்கள் உண்டல்லோ...
உன்னையே தருவாயா...
உன்னையே தருவாயா...
உன்னதர் கேட்கிறார்

பாடல் முடிந்ததும், மற்றவர்களைப் போல் அவளும் முழங்காலிட்டாள். என்னையே தருகிறேன் என்பவள் போல் அந்த உன்னதனை முருகனாகவும், இயேசுவாகவும் எண்ணி, எல்லாம் கடந்தும், எல்லாவற்றிலும் ஊடுருவியும் நீக்கமற நிற்கும் ஞானப்பெருவெளிக்குள், அவள் பறவை போல் பறந்தாள். ரத்தினத்தின் பேச்சுக்கு இணையாக, இந்தப் பாடல் அவளை ஆட்கொண்டது. முரண்பட்டது போல் தோன்றிய இந்த இரண்டும், உண்மையில் ஒருமைப் பட்டதுபோல் அவளுக்குத் தோன்றியது. முன்னது, இப்படி வாழ்கிறார்களே என்ற தார்மீகக் கோபம், பின்னையது கோபத்தை நீக்கிய ஒரு தார்மீக வேதனை.

அப்படியும் இப்படியமாக அந்தப் பெருங்கூட்டத்தில் பிரார்த்தனையிலும், பாட்டிலுமாக நேரத்தைக் கழித்தாள். அந்தக் கூட்டத்தையும் அதற்கு மேடையில் நின்று ‘சுவிசேஷ செய்தி’ வழங்கியவர்களையும் பார்த்தபோது அவளுக்கு ஒன்று புரிந்தது. உலகில் பாவிகள் இருக்கும் அளவிற்குத் தியாகிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த இரு துருவத்திற்கும் இடைப்பட்டவர்கள்தான் மதில்மேல் பூனையாகிறார்கள்.

காலங் கழிந்து, காலையானது.

எல்லோரும் கலைந்தார்கள். சுற்றமும் நட்பும் சூழ வந்தவர்கள் இப்போது அவர்கள் புடைசூழப் போய்க் கொண்டிருந்தார்கள். பூச்சியைக் கெளவும் பல்லிபோல மணிமேகலையை பயம் கெளவிக்கொண்டது. எங்கே போவது ? விடுதிகளை விசாரித்துப் போகலாமா ? வீட்டுக்கே திரும்பலாமா?

மனம் அலைந்ததுபோல் கால்களும் அலைந்தன. இவ்வளவு பெரிய சபையிலே எனக்கொருவர் இல்லையா? இவ்வளவு பெரிய தலைநகரில் எனக்குப் புகலிடம் இல்லையே! சமுத்திரத்தில் விழுந்து சாகலாமா? ரயில் தண்டவாளத்தில் தலையைக் கொடுக்கலாமா?

உள்ளம் விறைக்க, உடம்பெல்லாம் வேர்க்க அவள் நடந்தாள். எதாவது ஒரு வழி கிடைக்கும் என்று நம்பியவள் போல வானொலி நிலையத்தைக் கடந்து ஆழ்வார் பேட்டையை விட்டு அகன்று, வன்னிய தேனாம் பேட்டைக்கருகே வந்துகொண்டிருந்தாள். எதிரே ‘கிராமத்து ஹறிப்பிபோல’ ஒரு உருவம் வந்தது. சந்தனப் பொட்டு நெற்றி, துளசி மாலைக் கழுத்து. சந்தேகமில்லை. ‘கூத்து’ கோவிந்தன்தான்.

மணிமேகலை அப்படியே நின்றாள். பின்னால் வந்த சைக்கிள்காரன் ‘மணி அடிக்கேனே காதில் விழலியா’ என்று கேட்கும்படி நின்றாள். பாதாதி கேசம் வரை பரவச மானாள். சற்றுநேரம் வரை நொந்த நெஞ்சம், இப்போது வட்டியும் முதலுமாக ஆனந்தத்தை அனுபவித்தது.

எதிரில் வருவோரை முட்டாக் குறையாக மோதிக் கொண்டே, பவளக்கொடியின் அரண்மனையில் அர்ச்சுனன் நடந்ததுபோல், கோவிந்தன் நடந்து, அவளைப் பாராமலே கடந்தபோது அவள் ‘அண்ணே’ என்றாள். அவன் இப்போது அப்படியே நின்றான்.

“நீங்க எப்பண்னே வந்திங்க?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னால.”

“ரயில் இன்னும் வந்திருக்காதே.”

“லாரி வந்துடும்.”

“அப்பா எப்படி இருக்கார்?”

“அப்படியே படுத்துக் கிடக்காராம்.”

இருவரும் குடிசை மாற்று வாரிய வீட்டடுக்கு வரை நடந்து போனார்கள். மணிமேகலை தான் பட்ட நிலையையும், ஏற்படவிருந்த விபத்தையும் எடுத்துக் கூறக் கூற எத்தனையோ சந்திரமதிகளாய், திரெளபதிகளாய், கண்ணகிகளாய் நடித்த அந்த நடிகன் இப்போது தன் இயல்பான உணர்வுகளை அவற்றின் போக்கிலேயே விட்டவன்போல் கண்களைத் துடைத்துக் கொண்டான். பிறகு அவனும் அவள் வந்தபிறகு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, ஒரு கூத்து போலவே விளக்கினான். ஊருக்குத் திரும்பிய அவனை, அவள் அண்ணன் உதைக்கப் போனானாம். தம்பிக்காரன் பிடித்துக் கொண்டானாம்; அண்ணனையல்ல, இவனை! ஊர்ப்பிரமுகர்கள் எல்லோரும் இவன்தான் மணிமேகலையைக் கடத்தி ரயிலேற்றிவிட்டு மிராசுதாரின் நிலையை இப்படிக் கொண்டுவந்து விட்டுவிட்டான் என்று திட்டினார்களாம். அப்பாவிப் பெண்ணான மணிமேகலையின் மனதை மாற்றி அவள் மனதையும் கெடுத்துவிட்டானாம். இதே போல் இன்னும் எத்தனையோ பெண்களையும் கெடுத்தாலும் கெடுப்பானாம். ஊர் கெட்டுப் போகக்கூடாதாம். இவன் இருந்தால் ஒழுங்குமுறை போய்விடுமாம். உதைப்போம் என்றார்களாம். ஒடி வந்துட்டானாம். ரத்தினத்தை அடிக்க முடியாது என்பதால் அதற்கும் சேர்த்து இவனை அடிக்கப் போனார்களாம். அந்தச் சமயம் பார்த்து ரத்தினமும் ஊரில் இல்லையாம்.

மணிமேகலை அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

"என்னால ஒங்களுக்கு..."

"ஒனக்குன்னு சொல்லும்மா.. அண்ணன நீன்னுதான் சொல்லணும். நான் அதுக்காவ ஒடி வரல. ஏற்கெனவே எப்படா மெட்ராஸ் ஒடலாமுன்னு நினைச்சிருந்தேன். கெட்டும் பட்டணம் சேருன்னு சொன்னாவல்லா. ஊரு கெட்டுக்கிட்டே வந்ததுனால நான் வந்துட்டேன். கவலப் படாதம்மா. இந்த பேட்டையில நாடகக் கலைஞர்கள் நிறையா இருக்காவ. நான் வந்தால் இங்க ஒரே சண்டதான்; என் வீட்ல சாப்புடு, உன் வீட்ல சாப்புடுன்னு. வந்த நேரத்த பாருங்க. சேலத்துல ஒரு எக்ஸிபிஷன் நாடகம் பத்து நாளைக்கி, அடியேனுக்கு வில்லன் வேடம். ஒரு சினிமா ஸ்டார புக் பண்ணியிருக்கு. அவரு வராட்டா ஒரு கழுதய ஏத்தப் போறோம். அதுக்கு பின்னணி அடியேன். ‘கண்மணி படப் புகழ்’ காந்தாவ போட்டிருக்கு. அவள் வராட்டா கதாநாயகிய ஒரு கூனியா மாற்றி, அடியேனை அதுக்கும் போடுறதா நடிகர் நம்பீசன் உத்தேசிச்சிருக்காரு. என்னமோ நம்மள மாதுரி நல்லவங்களுக்கு வாழ்க்கை நாடகமாகவும், நாடகம் வாழ்க்கையாவும் போயிட்டு. அப்புறம் ஒங்க நிலைமையை யோசிக்க கஷ்டமாய் இருக்கு. சரி! ரெண்டு நாளைக்கு, எதாவது ஒரு கலைஞர் வீட்ல இருங்க. அப்புறமா யோசிக்கலாம்.”

“இல்லண்ணே. என்னை ஏதாவது ஒரு வீட்ல வேலக்காரியா சேத்துடுங்க.”

“தங்கச்சி எனக்கு என்ன வேணுமுன்னாலும் தெரியாம இருக்கலாம். ஆனா. அழத் தெரியாதுன்னு மட்டும் நினைக்காத.”

"நீங்க சொல்றது தப்புண்ணே. எந்தத் தொழிலும் கேவலமில்ல. ஒரு தடவ மிஸ்டர் ஜெயராஜோட சோளிங்கர் போயிருந்தேன். பெருமாள் கோயிலுக்குப் போயிட்டு அவர்-அதுதான் மிஸ்டர் ஜெயராஜ் படிச்ச ஒரு ஹைஸ்கூலுக்கு போனோம். பழைய ஹெட்மாஸ்டரே இருந்தாரு, அவருகிட்ட படிச்ச பையன் கனடாவுல ஒரு காலேஜ்ல புரபசர் வேலைக்கு போனாராம். ஹோட்டலுல அவருக்கு ‘காபி’ கொண்டுவந்த சர்வர் இன்டர்வ்யூ போர்ட்ல இருந்தாராம். அவருதான் அந்த காலேஜுக்கே பிரின்ஸ்பாலாம். ஆனால் நாம் கஷ்டமான தொழில கேவலப்படுத்தி அதைச் செய்யுறவங்களயும் கேவலமாக் கிட்டோம்.”

"ஒனக்கா இந்த கதி?"

"ஒன் கதி என்னன்னு நினைச்சிப் பார்த்தியா? மேல இருந்து கீழ வாரவங்களுக்காக இரக்கப்படுற நேரத்தை நமக்கும் கீழே இருக்க வங்களுக்காக உதவுறதுல செலவிடணும். சொல்லப் போனால் நான் ஒன் லெவலுக்கு வந்து சகஜமா பழகுறதுல நீ சந்தோஷப் படனும்."

"ஆஹாஹா! இப்போ வார சந்தோஷத்த மாதிரி, எப்போதுமே எனக்கு சந்தோஷம் வரல. ஒன் அண்ணன் என்னை உதைக்க வந்தான் பாரு, அப்போ வந்த சந்தோஷத்தவிட இது அதிகம். கூத்துக்கு கூட்டிக்கிட்டு போன ஒரு பயல் நான் துங்கும்போது என் வெள்ளி அரணைக் கயிற்றை அறுத்துக்கிட்டு ஒடுனபோது ஏற்பட்ட சந்தோஷம், இந்த சந்தோஷத்துக்கு ஒரு தூசு"

"நீ இப்படியே பேசினால், நான் இதுக்கு மேல நடக்க மாட்டேன். ஆனானப்பட்ட சந்திரமதியே அடிமையாகலியா? திரெளபதி அஞ்ஞான வாசத்துல சேடியாகலியா?"

"அவங்க கணவங்க வந்து காப்பாத்துவாங்க என்கிற நம்பிக்கையில இருந்தவங்க. ஆனால் நீ.?"

"என் அண்ணன் கோவிந்தன், எனக்கு சுயமரியாதையோடு வாழறதுக்கு வழிகாட்டுவார் என்கிற நம்பிக்கையில இருக்கிறவள் நான்!”

"சரி நீ சின்ன வயசில சொன்னத கேட்டால்லா இப்போ கேட்பே. என்னோட முன்னாள் பாய்ஸ் கம்பெனி பவளக்கொடி, இப்போ சினிமாவுல கறுப்புப் பண்ம் வாங்குற அளவுக்கு முன்னேறியிருக்கிற நட்சத்திரம். அந்த நட்சத்திரம் பங்களாவுல வீட்டு வேலயப் பார்க்கதுக்கு. பார்க்கதுக்கு."

'கூத்து கோவிந்தன் விம்மினான். வாயில் துண்டை வைத்தான். "எதுக்குண்ணே அழுவுற? என்ன நடந்துட் டுன்னு அழுவுற? இதோ பாரு! கண்ண துடைச்சுக்க வாரபோற ஆட்கள் வேடிக்கை பார்க்கது மாதிரி பார்க்காங்க. அட ஒன்னத்தான்! பரமசிவமே பிட்டுக்கு மண் சுமக்கலியா? மகாத்மா காந்தி எதிரிக்கும் செருப்பு தைக்கலியா? அரிச்சந்திரன் மயானம் காக்கலியா? உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் கார்க்கி தெரியுமா? அவரு ஒரு தோட்ட வேலைக்காரர். ஊர் புகழும் கூத்து கோவிந்தன் தெரியுமா? அவரும் ஒரு சாதாரண ஏழை. அதுவும் உதை வாங்கப் போன எளியவன்!”

'கூத்து' கோவிந்தன் லேசாகச் சிரித்தான். பிறகு அவன் மெளனமாக முன்னால் நடக்க அவள் பின்னால் நடந்தாள். இருவரும் அந்த சினிமா நடிகர் வீட்டுக்குப் போனார்கள், கோவிந்தன் செருப்பை வீட்டுக்கு வெளியேயே போட்டுவிட்டு சுருட்டிய 'ஆப் கையை' புல் கையாக்கி பாய்ஸ் கம்பெனியில் 'தடிமாடே! எருமை மாடே! இடியட் மாடே!' என்று தான் கூப்பிட்ட தன் முன்னாள் பவளக்கொடியான நடிகர் வெண்சாமரத்தின் வீட்டுக்கு முன்னால் "அண்ணே ! அண்ணே !” என்று சொல்லிக்கொண்டே போனான். 'அண்ணனின்' காரிய தரிசி அவனுடன் பேசினான். வேலைக்காரி அண்ணனுக்கில்லியாம், காரியதரிசிக்கித்தானாம். இந்த அவுட் ஹவுஸ்லயேதானாம்.

வெளியே ஒதுங்கி நின்ற மணிமேகலைஉள்ளே 'ஆஜர்' செய்யப்பட்டாள். காரியதரிசி கண்ணை மூடிக்கொண்டே பேசினார்.

"மாசம் இருபது ரூபாய் சம்பளம். மூணு வேள சாப்பாடு. குழந்தைகளை ஸ்கூல்ல விடணும். சமைக்கணும். பாத்திரம் தேய்க்கணும். அவள் ஹிஸ்டிரியா பேஷண்ட். அனுசரித்துப் போகணும். ஒருவார 'காய'மில்லாத வேலை அப்புறந்தான் 'காயம்'. சரியான்னு கேட்டுச் சொல்லுப்பா...?”

மணிமேகலை சரியென்று சொல்லாமலே "இப்போ தேய்க்கிறதுக்கு பாத்திரம் இருக்கா?" என்றாள் அவனைப் பார்த்து. மணிமேகலை சூட்கேஸை வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு அவுட்ஹவுஸிற்குள் போனாள். அது நல்லாத்தான் இருந்தது. இரண்டு அறைகள். நல்ல கட்டில். ஸோபா ஸெட்டும் இருந்தது. காரியதரிசியின் மனைவி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

"ஒரு வேலைக்காரிகூட இங்க ஒழுங்கா இருக்கல. கோபத்துல செம்பைத் துக்கி எறியுறதுதான். இதுக்காவ கோபப்பட்டு போயிடுறதா? அந்த சமயத்துல வடை பாயசம் கொடுத்ததை நினைத்துப் பார்க்காண்டாமா? பார்க்காண்டாமா? நீங்க சொல்லுங்கோ ?”

மணிமேகலை சிரித்துக்கொண்டே பதிலளித்தாள்.

"என் மேல எதை வேணுமுன்னாலும் எறியுங்க..! ஆனால் என்னை மட்டும் எறிஞ்சிடாதிங்க!”

காரியதரிசியின் மனைவி முதலில் அவளைக் கண்டிப்புடன் பார்த்துவிட்டு, பிறகு அவள் சொன்னதன் பொருள் விளங்கியவளாய் லேட்டாகச் சிரித்தாள்.

"அப்ப நான். சே.சே இப்பவே சேலத்துக்குப் போகணும்." என்றான் கோவிந்தன்.

மணிமேகலை அவனுடன் வீட்டுக்கு வெளியே வந்தாள். கோவிந்தன் புலம்பினான். கைகள் கண்கள் பக்கம் போய் பிறகு கைக்குட்டையைத் தேட தாளாது பேசினான்.

"சந்திரமதி மாதுரி ஆயிட்டியேம்மா. இந்த சந்திர மதிக்கா இப்படி வரணும்?" மணிமேகலையின் கண்களும் இப்போது கலங்கின.

"நான் சந்திரமதி இல்லண்ணே. ஏன்னு கேக்குறியா?

சந்திரமதியோட கழுத்தில் இருந்த தாலி அவள் புருஷனுக்கு மட்டும் தெரியுமாம், மற்றவங்களுக்குத் தெரியாதாம். ஆனால் என்னோட தாலி எல்லோருக்கும் தெரியுது. என் புருஷனுக்குத்தான் தெரியாமல் போயிட்டு. நான். நான். சந்திரமதியில்ல அண்ணே.”

'கூத்து' கோவிந்தன் ஓடினான். சேலத்து ரயிலுக்கு நேரமாகிவிட்டதால் அல்ல. அவனால் அங்கே நிற்க முடியவில்லை. நின்றால் நெடுநேரமாய் விழுந்து இந்நேரம் செத்திருப்பான்.