உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 6

விக்கிமூலம் இலிருந்து
6
ரு மாத காலம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது.

மத்தியான வேளை!

மணிமேகலை, புருஷனின் துணிகளை அயன் செய்து முடித்துவிட்டு, அந்த வீட்டுக் குழந்தைகளின் உடுப்புகளுக்கு கஞ்சி போட்டுக் கொண்டிருந்தபோது, ஜெயராஜூம் அவன் அண்ணன் சங்கரனும், காரிலிருந்து இறங்கி, ஒருவர் தோள் இன்னொருவர் தோளில் படும்படி சிரித்துக்கொண்டே வந்தார்கள்.

மணிமேகலை புரிந்துகொண்டாள். சகோதரர்கள் சிரித்துக்கொண்டு வருகிறார்கள் என்றால், ஏதாவது நல்லதோ கெட்டதோ லாபகரமான செய்தியாக இருக்கும். அவள் கேட்கு முன்னாலேயே சங்கரன் சொன்னான்:

“நாம் பெட்ரோல் பங்க் வைக்கிறதுக்கு, ஆயில் கார்ப்பரேஷன் பெர்மிஷன் கொடுத்திட்டு. இப்போதான் லட்டர் வந்துது.”

“ஆனால் பணத்ததான் எப்படி புரட்டுறதுன்னு தெரியல? ஏற்கனவே இன்னொரு லேத் மிஷின் வாங்க பாங்க்ல பணம் கட்டியிருக்கோம்” என்றான் ஜெயராஜ்.

மணிமேகலை சளைக்கவில்லை.

“அதுக்கென்ன ! என்னோட எழுபது பவுன் நகையில எவ்வளவு வேணுமுன்னாலும் எடுத்துக்குங்க. நாட்ல எப்போ தங்கத்தைவிட மிஷினுக்கு முக்கியம் கொடுக்காங் களோ அப்போதான் நாடு உருப்படும்!”

“நீ உண்மையிலயே தங்கமான பொண்ணுதான்” என்று சொல்லிச் சிரித்தான் சங்கரன். மணிமேகலை தொடர்ந்தாள்:

“இந்த நல்ல நாள்ல, இன்னொரு நல்ல சமாச்சாரத்தயும் அப்பாவுக்கு எழுதிடலாம். பாமா—சந்திரன் கல்யாணத்த ஆவணில வைக்கிறதா எழுதலாமா?”

“ஆவணில பெட்ரோல் பங்க் வேலையில பிஸியா இருப்போம். ஐப்பசில வச்சுக்கலாம்.”

“எங்கே வைக்கலாம்?”

“ஓங்க ஊர்ல வைக்கலாம். ஒங்க ஊர இந்த மாதிரி சமயத்துலதான் பார்க்க முடியும். மேளதாள சமயத்துல மட்டும்தான் அது ஊராய் தெரியும். லட்டர் எழுதிடு.”

“அத்தான்! நீங்கதான் இந்த வீட்டுக்கு மூத்த பிள்ள உங்க கைப்பட எழுதிப் போடுங்க.”

“நோ நோ! இந்த வீட்டுக்கு நீதான் பிரைம் மினிஸ்டர்! நீதான் எழுதணும். நாங்க வெறும் டெப்டிங்கதான்.”

“நோ... நோ... நான் பிரைம் மினிஸ்டராய் இருந்தாலும் பெண்வீட்டுக் கட்சியின் தலைவி. நான் மாட்டேன்.”

"அப்படின்னா, நம்ம ‘ஸ்பீக்கர்’ லட்சுமிய எழுதச் சொல்லு. மணிமேகலை சிறிது யோசித்தாள்.

“பேசாம நம்ம பிரஸிடெண்ட எழுதச் சொல்லலாமே? அதுதான் முறை!”

மணிமேகலை வீட்டுக்குப் பின்னால் போட்டிருந்த தோட்டத்துச் செடிகளோடு ‘பேசிக்’ கொண்டிருந்த மாமனாரிடம் ஐந்து நிமிடம் பேசிவிட்டு, முன்னறைக்கு வந்து “மாமா நிஜமாவே பிரஸிடெண்ட்தான். ‘நீ எழுது. நான் கை எழுத்துப் போடுறேன்’ என்கிறாரு” என்றாள்.

எல்லோரும் சிரித்தார்கள்—பாமாவைத் தவிர. அவள் நாணிக் கோணி நளினப்பட்டு நின்றாள். இந்தச் சமயத்தில் சமையலறைக்குள் நல்லெண்ணெயை ஊற்றிக்கொண்டே, நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த லட்சுமி அங்கே திடீர் பிரவேசம் செய்து “இந்த நல்ல நாள் கொண்டாட வேண்டாமா? பேசாம மெட்ராஸ் போய், எக்ஸிபிஷன் பார்த்துட்டு வரலாம்” என்றாள்.

ஜெயராஜ் உதட்டைக் கடித்தபோது சங்கரன் முகத்தைச் சுழித்தான்—லட்சுமி ஏதோ பேசக்கூடாததைப் பேசுவதுபோல. மணிமேகலை இப்போதும் பேசினாள்.

“அக்கா சொல்றதுல என்ன தப்பு? ஓடாய் உழைத்து அவங்களோ, நானோ என்னத்த கண்டோம்? எங்களுக்கும் ஒரு ‘சேஞ்ச்’ வேண்டாமா? நாம நாளைக்குக் காலையில, நம்ம கார்ல போகப் போறோம்.”

உடனே குழந்தைகள் “ஓ எக்ஸிபிஷன் எக்ஸிபிஷன்” என்றார்கள். பாமாவும், சீதாவும் கண்களை உருட்டினார்கள். சின்ன மைத்துனன் பாஸ்கரும், குட்டி மைத்துணி இந்திராவும், "ஜாலிதான்... நாளைக்கு ஸ்கூலுக்கு போகாண்டாம்” என்றார்கள்—எக்ஸிபிஷனுக்குப் போவதைவிட, பள்ளிக்கூடம் போகாமல் இருப்பதில் அதிக இன்பம் கண்டவர்கள்போல.

பொழுது இருட்டிக்கொண்டிருந்த போது, லட்சுமியின் தங்கையும், ராமபத்திரனின் இரண்டாவது புத்திரியுமான வசந்தி வந்தாள். எஸ்.எஸ்.எல்.சி.யை நாலைந்து தடவை பார்த்தவள். நல்ல சிவப்பு. நல்ல உடல்வாகு. இப்போது இருபத்திரண்டு வயது இருக்கும். எவரையும் கவிழ்ந்து கொண்டே பார்க்கிறவள். பேசும்போது, பெருவிரலால் தரையில் வட்டம் போடுபவள்.

மணிமேகலை கடிதத்தை எழுதி, மாமனாரிடம் கையெழுத்து வாங்கி தபால் பெட்டியில் சேர்ப்பித்துவிட்ட திருப்திச் சிரிப்போடு, அடிக்கடி வரும் வசந்தியை அப்போதுதான் வருபவள்போல் வரவேற்றாள்.

“வாம்மா! நாளைக்கு கார்ல மெட்ராஸ் போய், எக்ஸிபிஷன் பார்க்கப் போறோம். வாரியா?”

““எத்தன பேரு போறிங்க?”

“மாமா தவிர, எல்லாரும்.”

“கார்ல இடம் இருக்காதே.”

“அதுக்கு நானாச்சு. அப்படியே இடம் இல்லாட்டா என்னோட இடத்த ஒனக்குத் தாரேன்.”

அப்போது அங்கே வந்த பாமா, லேசாக முகத்தைச் சுழித்தாள். பிறகு சந்திரனை மீண்டும் நினைத்துக்கொண்டு எங்கேயோ போய்விட்டாள்.

அன்றைய இரவு, மறுநாள் காலைப் பொழுதாக மலர்ந்தது.

எல்லோரும் காரில் ஏறிக்கொண்டார்கள். பின்னால் சங்கரன், அவன் சம்சாரம், அவர்களது இரண்டு குழந்தைகள், சீதா, இந்திரா, வசந்தி, டிரைவர் இருக்கையில் ஜெயராஜ்? அதற்கு அடுத்தாற்போல் மாமியார் கிழவி. அப்புறம் மணிமேகலை. அப்புறம் சின்ன மைத்துனன் பாஸ்கரன். வண்டி புறப்படப் போகும்போது, கிழவியம்மாள் “எனக்கு காத்து வேணும். நீ இந்தப் பக்கமா உட்காரு மணி” என்றாள் மருமகளைப் பார்த்து. “நீங்களே ஒங்க மகன் பக்கத்துல இருங்க” என்று மணிமேகலை நாணிக் கொண்டே சொன்னபோது, “இவளுக்கு இன்னும் சின்னப் பொண்ணுன்னு நினைப்பு” என்றான் ஜெயராஜ். வசந்தி அவனைத் தலையை கவிழ்த்துக்கொண்டே பார்த்தாள்.

அந்தப் பார்வை தாங்கமாட்டாது கார் புறப்பட்டது. கிழவர் பெருமிதமாகக் காரைப் பார்த்துவிட்டு, அந்தக் காலத்து ரயில் சிக்னல் மாதிரி கையைத் தூக்கிக் கீழே போட்டார்.

எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, இம்பாலாவில் சாப்பிட்டுவிட்டு ஸ்நேக் பார்க்கைப் பார்த்துவிட்டு, அவர்கள் பீச் ரோடு வழியாக பொருட்காட்சிக்கு வந்தார்கள். பல அரசு நிறுவனங்கள், இலாக்காக்கள், தனியார் கம்பெனிகள் முதலியவை வைத்தருந்த ‘ஸ்டால்களை’ பார்த்துக்கொண்டே வந்தவர்கள் ‘வாலன்டரி ஹெல்த் அஸோஸியேஷன்’ என்ற சமூக ஸ்தாபனம் போட்டிருந்த ஸ்டாலுக்கு முன்னால் வந்தபோது, ஒரு போர்டில் ‘இங்கே வைத்திய பரிசோதனை செய்து கொள்ளலாம். கட்டணம் மூன்று ரூபாய்’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தை, பியூஸிக்காரியான சீதா படித்து முடித்துவிட்டு “அண்ணி! எனக்கு அடிக்கடி தலை சுத்துது! செக்கப் பண்ணிக் கட்டுமா?” என்றாள். உடனே ஜெயராஜ் “ஒனக்கு வீட்டு வேலைய செய்யச் சொல்லும்போதுதான் தலை சுத்தும்?” என்றான். சங்கரன் ஒருபடி அதிகமாய் போய் “இதுக்குத் தான் இதுங்கள இங்க கூட்டிக்கிட்டு வரப்படாது” என்றான்.

மணிமேகலை பர்ஸில் இருந்து மூன்று ரூபாயை எடுத்து சீதாவிடம் நீட்டினாள். “நீங்களும் வாங்க அண்ணி. எனக்குப் பயமா இருக்கு” என்று சொல்லி, மணிமேகலை யின் கையைப் பிடித்து இழுத்தாள் சீதா, “சரியான செல்லக் கிறுக்கு” என்று லட்சுமி மோவாயைத் தூக்கிய போது மணிமேகலை மைத்துனியுடன் ஸ்டாலுக்குள் போனாள். மற்றவர்கள் அந்த ஸ்டாலுக்கு சற்றுத் தொலை வில் உட்கார்ந்தார்கள். பத்து நிமிடம் ஆகியிருக்கும். பதினைந்து ஆகியிருக்கும். போனவர்களைக் காண வில்லை. எல்லோரும் எதிர்பார்ப்புடன் பார்த்தபோது சீதா அங்கிருந்து ஓடிவந்து “அண்ணா, ஒன்ன டாக்டர் கூப்புடுறாங்க” என்றாள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டே. ஜெயராஜ் “என்னடா இது வம்பு” என்று சொல்லிக் கொண்டே ஸ்டாலுக்குள் போனான். ‘பெண்களுக்கு’ என்றிருந்த அறைக்குள் போகலாமா வேண்டாமா என்று சிறிது யோசித்துவிட்டு, பிறகு மெள்ள மெள்ள நடந்து உள்ளே போனான். அங்கே—

லேடி டாக்டர், மணிமேகலையின் காதுக்கருகே மங்கலாக இருந்த ஒரு வட்டமான புள்ளியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, பிறகு அவளின் இதர மேனிப் பகுதிகளை உற்றுப் பார்த்துவிட்டு தலை நிமிர்ந்தவள், “நீங்க மிஸ்டர் ஜெயராஜா? வாங்கோ...” என்று சொல்லி அவனை இன்னொரு நாற்காலியில் உட்காரச் சொன்னாள். மணிமேகலை பித்துப் பிடித்தவள் மாதிரி, தான் இருப்பதே தனக்குத் தெரியாதது போல் இருந்தாள். டாக்டரம்மா பீடிகையுடன் பேசினார்:

“இந்த பேட்ச் இருக்கே இது ஒரு வகையான ஸ்கின்டிஸ்ஸிஸ். நான் பார்த்ததுல குஷ்டரோகத்துக்கான லேசான அறிகுறி மாதிரி தெரியுது! ரொம்ப மைனர்தான். எதுக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரில செக்கப் பண்றது நல்லது. அப்படியே இருந்தாலும் எர்லி ஸ்டேஜ்தான். நத்திங் டு ஒர்ரி!”

ஜெயராஜ் பதறினான். மணிமேகலையின் தோளை ஆதரவாகப் பிடித்துக்கொண்டே, “டாக்டர், நல்லாத்தான் பார்த்துச் சொல்றிங்களா?” என்றான்.

"ஒரு டாக்டர், பேஷியண்ட்கிட்ட கொஞ்சம் மறைத் தாலும் மறைக்கலாமே தவிர, எக்ஸாஜிரேட் பண்ண மாட்டார்.”

“டாக்டர் ! டாக்டர் ! அப்படின்னா. இவளுக்கு அதுவேதானா? அதுவேதானா?”

“நிச்சயமாய் சொல்ல முடியாது. நாளைக்கு ஜிஹெச்ல செக்கப் பண்ணுங்க.. டோண்ட் ஒர்ரி எங்மேன்” என்றாள்.

மணிமேகலை வெறித்த பார்வையோடு எழுந்தாள். பிறகு கணவனைப் பார்த்தாள். அவனோ, அவளிடம் ஆறுதல் கேட்பவன் போல் மருட்சியுடன் பார்த்தான். சிறிதுநேர மெளனத்திற்குப் பிறகு, அவன் “இப்போ அவங்ககிட்ட ஒண்ணும் சொல்லாண்டாம். நாளைக்கு செக்கப் செய்த பிறகு பார்க்கலாம்” என்றான்.

இருவரும், அவர்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக, சங்கரனால் ஸ்டாலுக்கு அனுப்பப்பட்டிருந்த வசந்தி, அவர்களிடம் ‘குஷ்ட ரோகம்... குஷ்ட ரோகம்’ என்று சொல்வது இருவருக்கும் கேட்டது. கேட்கக்கூடாத அளவிற்குக் கேட்டது.

இருவரும் அவர்களை நெருங்கினார்கள். உட்கார்ந்திருந்த அவர்கள் ஒன்றாக ஒரே சமயத்தில் எழுந்தார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை “என் ராசாத்தி.... ஒனக்கா... ஒனக்கா?” என்று மாமியார் லேசாக முனங்கிவிட்டு, மணிமேகலையின் கையைப் பிடித்தாள். பிள்ளைகள் எதுவும் புரியாமல், அதே சமயம் எதுவோ நடந்துவிட்ட திகிலில், லட்சுமியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டார்கள். தலையைக் குனிந்து புருவத்தை நெறித்துக் கொண்டிருந்த சங்கரன், சற்று சுதாரித்துக் கொண்டு “இப்போ அது வந்திருக்கு என்கிறது வெறும் யூகந்தான். அப்படியே இருந்தாலும், ‘பேஸ்’ பண்ணித்தான் ஆகணும். ஆல்ரைட் டேய் ஜெயராஜ் நாங்க டிரெயின்ல போறோம். நீ காலையில இவள ஜி. ஹெச்ல பார்த்துட்டு வா? நான் வேணுமுன்னால்கூட இருக்கட்டுமா?” என்றான்.

எங்கும், எதிலும் உல்லாச ஓசைகளும், இனிய நாதங்களும், எக்காளச் சிரிப்புக்களும், இன்பமயமான சூழலும் நிலவிய அந்த பொருட்காட்சியில் இருந்து, அவர்கள் காட்சிப் பொருட்கள் போல் வெளியே வந்தார்கள். ‘இன்னும் பார்க்கணும்... இன்னும் பார்க்கணும்’ என்று அடம்பிடித்த சேகரை, லட்சுமி பட்டுப் பட்டென்று அடித்தாள். யாரும் அவளைத் தடுக்கவில்லை. ஏனென்று கேட்கவில்லை. மெளனமாக நடந்தார்கள். நடக்கமுடியாமல் தங்களைத் தாங்களே துக்கிக்கொண்டு போவது போல் நடந்தார்கள்.

அரக்கோணம் வழியாகப் போகும் எக்ஸ்பிரஸ்ஸில் அவர்களை ஏற்றிவிட்டுவிட்டு, மணிமேகலை மாமியாரிடம் இருந்த கைக் குழந்தையை வாங்கி, மார்போடு அணைத்துவிட்டு, அந்தச் சாக்கில் அவன் தலையில் தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, மகனை மீண்டும் மாமியாரிடம் ஒப்படைத்தாள்.

ஜெயராஜூம், மணிமேகலையும் ரயில் நிலையத்திற்கு வெளியே வந்து காரில் ஏறினார்கள். இருட்டத் துவங்கி விட்டது. ஜெயராஜ் எதையோ பேசப் போனான். அவளோ, எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘சவேரா’ ஹோட்டலில் அறை எடுத்தார்கள். ஜெயராஜ் ஆறதல் சொன்னான்.

“கவலப்படாத! இது வெறும் ஸ்கின் டிஸ்ஸிஸாத்தான் இருக்கும். இது நமக்கேன் வரப்போவுது? ஓ மை காட்!”

மணிமேகலை எதுவுமே பேசவில்லை. “எனக்கு இருக்காது... எனக்கு இருக்காது...” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே, அருகே படுத்திருந்த கணவனின் கையை எடுத்து, தன் தலைக்குக் கீழே வைத்துக் கொண்டாள்.

அவன் தூங்குவதுபோல் அசந்தபோது, அவள் எழுந்து உட்காருவது, அவள் அசந்ததுபோல் தூங்கும்போது, அவன் எழுந்து உட்காருவதுமாக இரவுப் பொழுது இருவரும் தூங்காமலே கழிந்தது.

காலையில் ஏழு மணிக்கெல்லாம் இருவரும் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார்கள். ஜெயராஜுக்கு பல டாக்டர் நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு டெலிபோன் செய்யலாமா என்று முதலில் நினைத்தான். மணிமேகலை அதைத் தடுத்துவிட்டாள்.

‘லெப்ரஸி’ வார்டில், அந்த நோயாளிகளைப் போல் ஒரு சில உறுப்புகளை இழந்து கிடந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்கள். அங்கே இருந்த நோயாளிகளைப் பார்க்கப் பார்க்க—எந்தப் பாவமும் அறியாதவர்கள் போலவும், எந்த இன்பத்தையும் நுகராதவர்கள் போலவும் இருந்த அந்த ஏழை—எளியவர்கள்மீது மணிமேகலைக்கு அனுதாபம் ஏற்பட ஏற்பட, அவள் தன் சுய அனுதாபத்தைக் குறைத்துக்கொண்டாள். தான் தனிமைப்படவில்லை என்று உணர்ந்து கொண்டாள். அதே சமயம் ‘கடவுளே! செந்தூர் முருகனே... எனக்கு... எனக்கு இருக்கப் படாது’ என்று மனதுக்குள்ளே முட்டிக் கொண்டாள். ஜெயராஜ், தெரிந்தவர்கள் பார்த்துவிடக் கூடாதே என்று வலதுகையை மடித்து, முன் நெற்றியையும் பின் தலையையும் மறைத்துக் கொண்டான்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மணிமேகலையின் முறை வந்தது. ‘கடவுளே... கந்தனே... இது தோல் வியாதி யாகத்தான் இருக்கணும். இருக்கணும்’ என்று சொல்லிக் கொண்டே போனாள். அவளை, போகக்கூடாத ஊருக்கு வழியனுப்பி வைப்பவன்போல் ஜெயராஜ் கலங்கினான்.

அரைமணி நேரமாயிற்று. அவளைக் காணவில்லை. ஜெயராஜ் முரட்டுத்தனமாக உள்ளே போனான். மனைவிக்கருகே போய் உட்கார்ந்தான். டாக்டர் மைக்ராஸ்கோப்பில் தேடிக் கொண்டிருந்தார்.

பிறகு, அதை லேசாகத் தள்ளிவிட்டு, தன் சுழல் நாற்காலியில் உட்கார்ந்த டாக்டர், அவர்களது தோற்றத்தையும், தோரணையையும் பார்த்து ‘சூள்’ கொட்டிவிட்டு அவரே கொஞ்சம் எக்ஸைட் ஆனவர் போல பேசினார்.

“ஐ அம் ஸாரி ஸார்! இது அதுதான்! ஆனால் பயப்படும்படியாய் ஒண்ணுமில்ல. இப்போதான் துவக்கம். ‘பேச்ல’ கூர்மை இருக்கு. நிறமும் ஒயிட்டாய் மாறல. அதோட ஒரே ஒரு ‘பேச்’தான் இருக்கு. முகத்துல தடிப்பு இல்ல, மூக்குச் சளியிலயோ, ஸ்கின்னுலயோ கிருமி இல்ல. மைக்ராஸ்கோப்புல நல்லா பார்த்துட்டேன். டெய்லி ஐம்பது மில்லிகிராம் டேப்ஸோன் மாத்திரை, ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டால் போதும். மூணு மாதத்துல சரியாப் போயிடும். பட், மூணு வருவும் வரைக்கும் மருந்து சாப்பிடனும், டெய்லி ஒரே ஒரு மாத்திரதான்!”

“நாங்க யாருக்கும் எதுவும் பண்ணலியே டாக்டர்?”

“டோண்ட் வீப் எங்மேன்! ஆரம்ப கட்டத்துலயே கண்டுபிடிச்சாச்சு. இதுக்காக நீ கடவுளுக்கு நன்றி சொல்லணும். எந்த ஊரு?”

“அரக்கோணம் ஸார்!”

“அங்க டாக்டர்கிட்ட அடிக்கடி செக்கப் பண்ணுங்க. ஓகே! போயிட்டு வாரீங்களா? இந்தாங்க பிரிஸ்கிரிப்ஷன். பேஷியண்ட்ஸ் நிறைய வந்திருக்காங்க.”

இருவரும் எழுந்து அவரையே பார்த்தார்கள்.

“அப்புறம் ஒண்ணு. இந்த நோய் நல்லவங்களுக்கும் வரலாம். கெட்டவங்களுக்கும் வரலாம். பணக்காரனுக்கும் வரலாம், ஏழைக்கும் வரலாம். ஆணுக்கும் வரலாம், பெண்ணுக்கும் வரலாம். இது தொத்துவியாதியில்ல. குறிப்பா. ஒங்க ஒய்புக்கு இருக்கது ஜஸ்ட் எ பிகினிங்... நாட் இன்பெக்ஸுவஸ். அவங்களோட தாராளமா செக்ஸ் வச்சிக்கலாம். அவங்க தாராளமாய் கைக்குழந்தை இருந்தால் பால் கொடுக்கலாம். ஆனால் மாத்திரை சாப்பிடுறதை விடப்படாது. காட் இஸ். கிரேட் இந்த மகாலட்சுமிய மட்டும் கைவிட்டுடாதே. ஒகே!”

அப்போதுதான் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அப்போதுதான் திருமணம் ஆனவர்கள் போல், இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு—ஆதரவோடும், ஆதரவுக்காகவும் பிடித்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.

டிரைவர் இருக்கையில் அமரப்போன ஜெயராஜ், திடீரென்று “என்னால இப்போ வண்டிய ஓட்டமுடியாது” என்றான். மணிமேகலை மெளனமாக அவனைத் தொட்டு கார் சாவியை வாங்கினாள். ஒரு மாதம் விளையாட்டுத்தனமாகக் கார் ஒட்டக் கற்றுக் கொண்டவள். ஒருசமயம், சென்னை நகர சாலைகளிலும் சிரமத்துடன் இதே காரை ஓட்டியிருக்கிறாள். ஆனால் அப்போதைய சூழ்நிலையோ வேறு...

இருவரும், சவேரா ஹோட்டலுக்கு வந்தார்கள். விடிந்ததில் இருந்து பச்சைத் தண்ணிகட குடிக்கவில்லை. ‘எனக்கா? எனக்கா?’ என்று தன்னுள் எண்ணத்தை மோத விட்டு, ‘எனக்குத்தான்... எனக்குத்தான்’ என்று அந்த எண்ணம் கொடுத்த எதிரொலியை இதயத்தில் வாங்கி அதை வாய்மொழிப் பெருமூச்சாக ஆவியாக்கி, தன்னையே அடக்கிக்கொண்டு மணிமேகலை அறைக்குள் வந்தாள்.

அதற்குமேல், அவளால் தாளமுடியவில்லை. தாங்க இயலவில்லை. கண்ணிர் தானாகப் பெருகியது. உள்ளத்தின் ஓலம் விம்மலாக வெடித்தது. தன்னையே அனுதாபமாகப் பார்த்த கணவனின் தோளில் முகம் சாய்த்து, “அத்தான்... அத்தான். என்னைக் கைவிட மாட்டீங்களே, கைவிட மாட்டீங்களே” என்று பல தடவை சொல்லியவாறு அவன் முதுகை அழுந்தப் பற்றினாள். குழந்தை மாதிரி அவன் கைகளை, தன் ஆடும் கைகளால் பிடித்துக் கொண்டாள்.

ஜெயராஜ், அவளை ஆதரவோடு அனைத்துக் கொண்டான். பிறகு அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, தன் கண்களையும் துடைத்துக் கொண்டான்.

‘கண பட்டு போச்சு’ என்பது போல், இருவர் கண்களும் நீரிழந்த நிலம் போல, வெறுமையாக இமைகளை அடித்துக் கொண்டன.